*கனவுப்பல்* குறுங்கதை – உதயசங்கர்
அனந்தனுக்கு ஒரு பல் கூட இல்லை. அவருக்கு நீரிழிவு வந்ததிலிருந்து ஒவ்வொரு பல்லாக விழுந்து விட்டது. எந்த வலியும் இல்லை. ஆடக்கூட இல்லை. அப்படியே அடுக்கிலிருந்து உருவி எடுத்தமாதிரி கழன்று விழுந்து விட்டன. ஒரு ரத்தச்சுவட்டைக்கூடப் பார்க்க முடியவில்லை. எப்படி இத்தனை நாள் ஈறில் ஒட்டிக்கொண்டிருந்தது என்று தெரியவில்லை. அனந்தன் யோசித்தார். முதல்பல் எப்போது விழுந்தது. ஐந்து வயதில் பால்பல் விழுந்தபிறகு முளைத்த பற்கள் எல்லாம் சோவியை அடுக்கியது போல வரிசையாக அழகாக முளைத்தன. அவருடைய அழகே அவருடைய சிரிப்பு தான். வரிசையான பற்கள் பளீரென்று ஒளிவிட அவர் சிரித்தால் அதில் ஒரு வசீகரம் இருந்ததாகப் பெண்கள் பேசித் திரிந்தனர். அவருடைய சிரிப்புக்காக அவரைக் காதலிக்கலாமென்றும் கலியாணம் முடிக்கலாமென்றும் பல பெண்கள் ஆசைப்பட்டதை அவரும் அறிவார். அதற்காகவே எப்போதும் சிரித்தமுகத்துடனே இருக்கப்பழகிக் கொண்டார்.
திருமணம் முடிந்ததும் அவருடைய மனைவி பரிமளாவுக்கு பற்கள் விறகுகளை அடுப்பங்கரையில் கன்னாபின்னாவென்று அடுக்கி வைத்தமாதிரி முன்னும் பின்னும் அங்கிட்டும் இங்கிட்டுமாக இருந்ததைப் பார்த்த அனந்தன் தன் முல்லைப்பற்களைக் காட்டிப் பரிகாசமாய்ச் சிரித்தார். அதனால் தானோ என்னவோ பரிமளா சிரிப்பதை நிறுத்தி விட்டாள். வாயைத் திறந்து பேசுவதுமில்லை. உதடுகளுக்குள் பேசினாள். அனந்தனுக்கு அந்தப் பேச்சு விளங்கவில்லை. திருமணமான புதிதில் கிடைத்த பெண்ணுடல் அவரை வேறெதைப் பற்றியும் சிந்திக்க விடவில்லை.
அவர் சிரிக்கும்போதெல்லாம் பரிமளா உதடுகளால் ஏதோ சொன்னாள். அதை யாராலும் புரிந்து கொள்ளமுடியவில்லை. அனந்தனுக்கு முதல் பல் கடைவாயிலிருந்து முப்பந்தைந்து வயதில் சொத்தை விழுந்து புண்ணாகி மருத்துவரிடம் போய் எடுத்து விட்ட வந்தபோது பரிமளா மகிழ்ச்சியோடிருந்தாள். அன்று அனந்தனுக்குப் பிடித்த பால் பாயாசம் செய்தாள்.
இப்போது அனந்தனுக்கு எல்லாப்பற்களும் விழுந்து விட்டன.
பரிமளா வாயைத் திறந்து தன் பற்களைக் காட்டிப் பேசினாள்.