கண்களைத் திறந்த காட்சி கவிதை – ஆதித் சக்திவேல்
நெருப்பும் நீரும் – தம்
இருப்பை ஆக்ரோஷமாக
நினைவு படுத்தியபடி உள்ளன
எரிமலைகளில் பெருமழைகளில்
உலகின் எல்லா மூலைகளிலும்
மழையின் பல முகங்களோடு
இன்று புதிதாய் இணைந்துள்ளது
இந்த மேகவெடிப்பு
முதல் துளி முதல் கடைசி துளி வரை கொண்டாடப்படுகிறது மழை
அதன் பழைய வடிவங்களில்
பூமியின் தாகம் தீர்க்க அது பெய்வதால்
இன்று
இப்புதிய வடிவில் …………?
தண்ணீரின் தாகம் தீர
இம்மழை பெய்கிறதோ?
மாறி மாறி அறிவிக்கப்படும்
மழைப் பொழிவின் கணக்குகளில்
இயற்கையின் கணக்கு
என்னவெனத் தெரியவில்லை
தீரா தண்ணீரின் தாகம்
தீரும் நாள் எதுவென
யாராலும் சொல்லமுடியவில்லை
மாதுளையின் செம்முத்துக்களைச்
சரியாது அடுக்கத் தெரிந்த இயற்கைக்கு
சரியான கணக்கு ஒன்று இருக்கும்
இம்மழையிலும்
இன்று ஐந்தாம் நாள்
தாகம் தீர்ந்த மகிழ்ச்சி
மேகங்களின் முகத்தில் தெரிகிறது
கிழிந்த வானைத்
தைக்கத் தொடங்குகிறது இயற்கை
தனித் தீவாய் மாறிய
தன் அடுக்கு மாடிக் குடியிருப்பின் ஜன்னல் வழியே பார்க்கிறான் அவன்
நிலங்கள்
நீரைப் பயிர் செய்துகொண்டிருந்தன தூரத்து வயல் வெளிகளில்
மொத்த நகரமும்
நிசப்தம் நிரம்பிய
பாத்திரமாய் மாறியிருந்தது
மூழ்கிக் கொண்டிருந்தன பல வீடுகள் மூழ்கிய குடிசைகளில்
வாழ்வும்
கண்ணெதிரே
கரைந்து கொண்டிருந்தது வாழ்க்கை
மழை வெள்ளத்தில்
தன் இருப்பிடங்களைத்
தம் குடியிருப்பாய் மாற்றியோரைக்
கோபித்துக் கொள்கிறது வெள்ளம்
வெள்ளம்
தம்மை நதிகளாய் மாற்றிட
மகிழ்ச்சியில் தறி கெட்டு ஓடியது
நகரின் சாக்கடைகள்
நகரின் சாலைகளில்
மூட்டை முடிச்சுக்களுடன்
இடுப்பளவு நீரில் ஊர்ந்தவர்களின்
நடையில் தெரிந்தது – தம் வீட்டில்
வாழ்வைத் தொலைத்துச் செல்லும் சோகம்
யார் வீட்டு நாய்க்குட்டியோ
வெள்ளத்தில் உயிருக்குப் போராடியதை
தன் தோளின் மேல் தூக்கி வைத்து நடந்தான்
அந்தக் கூட்டத்தில் ஒருவன்
பொங்கிய சோகத்திலும்
எதுவும் நடவாதது போல்
சில நேரங்களில்
மழை போல் பொழியும்
மனித நேயத்தின் நீட்சியாய்
இன்னும் கான்கிரீட் முலாம்
பூசிக் கொள்ளா நிலத்தில்
மரம் ஒன்றில் பறவையின் கூடு
தாய்ப் பறவையின் அணைப்பில்
மூன்று நான்கு குஞ்சுகள்
மேகம் வெடித்த நாளிலிருந்து
இரை தேடச் செல்லா தாய்ப் பறவை
தொடர் மழையின் ஈரத்தால்
வறண்டிருந்தது அதன் குரல்
கடந்த ஐந்து நாட்களாய்
அவன் காணும் காட்சி இது
ஜன்னலுக்கு மிக அருகில்
குஞ்சுகள் தம் பசியை
தாயிடம் எப்படிச் சொல்லும்?
குழந்தையின் பசி உணர்ந்த
தாய்க்குப் பால் சுரப்பதைப் போல்
தாய்ப் பறவைக்கும் சுரக்குமா?
சிறு தட்டு ஒன்றில்
கைப்பிடி அரிசி இட்டு
ஜன்னலின் விளிம்பில் வைத்து
பறவை பார்க்கட்டும் என கனைத்து
அவ்விடத்தை விட்டு அகன்றான்
அன்பு தானாய்ப் பாயட்டும்
ஏங்கும் உள்ளம் நோக்கி
எனச் சொல்லித் தருகிறது
பள்ளம் நோக்கிப் பாயும் வெள்ளம்
அகப்பட்டதை எல்லாம் –
கடலுக்கு அடித்துச் செல்லும் வெள்ளம்
மனித நேயத்தின் மேல் –
கனமாய்ப் பரவிக் கிடக்கும் தூசிப் படலத்தைக்
கழுவித்தான் செல்கிறது
அடித்துச் செல்வதில்லை ஒரு போதும்
பெய்யும் ஒவ்வொரு பெருமழையிலும்
நிலத்தின் வறண்ட பள்ளங்களை நிரப்பும் வெள்ளம்
மனதின் வறண்ட பள்ளங்களையும் நிரப்பி வடிகிறது சில நேரங்களில்
சத்தமின்றி ஜன்னல் அருகில் வந்து
கொத்திக் கொண்டிருந்தது அரிசியை
தாய்ப் பறவை
பார்த்த காட்சிகளில்
தன் கண்களைத் திறந்ததை
மீண்டும் ஒரு முறை பார்த்தான்
நாய்க்குட்டி அமர்ந்திருந்தது
தோளில் நன்றியைக் காட்ட வாலை ஆட்டியபடி!