விடுதலை வேள்வியில் நாகம்மையார் & கண்ணம்மாள் கட்டுரை – பேரா.மோகனா

விடுதலை வேள்வியில் நாகம்மையார் & கண்ணம்மாள் கட்டுரை – பேரா.மோகனா




சுதந்திர தாகம்

விடுதலைப் போராட்டம் என்றாலே ஏதோ உயர்குடிப் பெண்கள் அல்லது பரம்பரையாக செல்வந்தர் மற்றும் விடுதலைப் போராட்ட குடும்பத்தில் பிறந்தவர்களாக இருப்பார்கள் என்பது நமது பொதுப் புத்தியில் ஊறிப்போன விஷயம். மிகவும் சாதாரண குடும்பத்தில் வாழ்ந்தவர்களும் கூட சுதந்திர தாகத்தால் ஈர்க்கப்பட்டு, விடுதலை வேள்வியில் அவர்களும் வெந்து தணிந்திருக்கின்றனர் என்ற உண்மை நம்மை பெரிதும் வியப்பில் ஆழ்த்துகின்றது. அப்படிப்பட்ட இருவர்தான் நாகம்மையார் மற்றும் கண்ணம்மா. இவர்கள் யார் தெரியுமா? நாகம்மையார் பகுத்தறிவுப் பகலவன் ஈ. வெ. ரா. பெரியாரின் முதல் மனைவி. கண்ணம்மா ஈ.வெ.ரா வின் தங்கை. ஈ.வெ.ரா. பெரியாருக்கு  கிருஷ்ணசாமி என்ற ஒரு மூத்த சகோதரரும், கண்ணம்மா மற்றும் பொன்னுதாய் என்ற இரண்டு சகோதரிகளும் இருந்தனர்.

நாகம்மை பிறப்பும் மணமும்..

அன்றைய சென்னை மாகாணத்துக்கு உட்பட்ட சேலம் மாவட்டம், தாதம்பட்டியில் ரெங்கசாமி, பொன்னுத்தாயி என்ற தம்பதியருக்கு, 1885ம் ஆண்டு மகளாகப் பிறந்தவர் நாகரத்தினம். இவரை நாகம்மையார் என்றும் அழைத்தனர். நாகம்மை முறையான பள்ளிக் கல்வி பயின்றதில்லை. தனது 13-வது வயதில், பகுத்தறிவுப் பகலவன் தந்தை ஈ. வெ. ரா. பெரியாரை மணந்துகொண்டவர்.  Nagammaiyar & Kannamma Essay on Liberation Velvi - Pera.Mohana விடுதலை வேள்வியில் நாகம்மையார் & கண்ணம்மா கட்டுரை - பேரா.மோகனா

இவர் பெரியாருடைய தாயாரின் ஒன்று விட்ட தம்பி மகள் ஆவார். நாகம்மை பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தில் பிறந்தவர். அதனால் பெரியாரின் அன்னை,  இவரை தன் மகனுக்குத் திருமணம் செய்துவைக்க முதலில் விரும்பவில்லை; எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் மகன் ராமசாமி பிடிவாதமாக,  நாகரத்தினத்தைத் தான் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்றார். மேலும் நாகரத்தினமும் ஒரேடியாக,   “மணந்தால் ராமசாமியைத்தான் மணப்பேன், இல்லையென்றால் இறந்துவிடுவேன்” என அடம்பிடித்து மிரட்டினார் பெரியாரின் அன்னையை. எனவே வேறு வழியின்றி இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஈ.வெ.ராமசாமிக்கும், நாகரத்தினம் என்கிற நாகம்மைக்கும் திருமணம் 1898-ம் ஆண்டு சிறப்பாகவே நடந்து முடிந்தது. திருமணத்தின்போது ஈ.வெ.ராவுக்கு வயது 19.

திருமணத்துக்குப் பின் முற்போக்கு வழியில் மாறிய நாகம்மை..

திருமணமாகி, இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் 1900ம் ஆண்டு, ஈ.வெ.ராமசாமிக்கும், நாகரத்தினத்திற்கும், ஒரு பெண் குழந்தை பிறந்தது. ஆனால், குழந்தை பிறந்து ஐந்து மாதங்களிலேயே நோயுற்று காப்பாற்ற முடியாமல் இறந்துவிட்டது. பின்னர் அவர்களுக்கு குழந்தை பிறக்கவே இல்லை. இதுவே நாகம்மையாரின் பிந்தைய தீவிரமான சமூகப்பணிக்கு காரணமாக அமைந்தது என்றும் கூறலாம். ஆனால் திருமணத்திற்கு பிறகு நாகம்மையார் தன்னுடைய கணவரின் புரட்சிக்கு முழுவதுமாக தன்னை அர்ப்பணித்துக்கொண்டார். ஈ.வெ.ராமாசாமி தந்தை பெரியாராக பரிணாமம் அடைந்திருந்தவருக்கு  முதல் மனைவியான நாகம்மை தன்னை தகுதியுள்ளவராக நிகழ்த்திக் காட்டுவதற்குரிய சந்தர்ப்பமாகவே அனைத்துப் போராட்டங்களையும் அவர் பயன்படுத்திக் கொண்டார்.

மனைவியை விளையாட்டாய் ஏமாற்றி, மாற்றிய ஈ.வெ.ரா..

திருமணம் ஆனவுடன், நாகம்மை மாமியாரின் சொல்படி, விரதம் இருந்தார். ஆனால் பெரியார், நாகம்மை சாப்பிடுமுன்னர், அவர் சாப்பிட உள்ள சோற்றில் எலும்புத்துண்டை வைத்துவிடுவார். இது தொடர்ந்து நடைபெற்றதால், ஈ.வெ.ராமசாமியின் அன்னை, இனி நீ விரதம் இருக்க வேண்டாம் என்று மருமகள் நாகம்மையிடம் கூறிவிட்டார். ஈ.வெ.ராவுக்கு மனைவி தாலி அணிவதில் விருப்பம் இல்லை. இரவில் மனைவி நாகம்மையை தாலியைக் கழட்டி கீழே வைக்கும்படி கூறுவார். நாகம்மை அதற்கு மறுத்துவிடுவார். இதனைப் பார்த்த ஈ.வெ. ராமசாமி, நாகம்மையிடம், பெண்கள், தன் கணவர் அருகில் இருக்கும்போது தாலி அணியக்கூடாது. வெளியில் தூரத்தில் சென்றிருந்தால்தான் தாலி அணிய வேண்டும் என்பார். அப்பாவியான நாகம்மை இதனை நம்பிவிடுவார். பின்னர் ஈ.வெ.ரா மனைவியின் தாலியைக் கழட்டச் சொல்லி, தனது சட்டைப் பாக்கெட்டில் போட்டுக்கொண்டு புறப்பட்டு விடுவார். காலையில் நாகம்மைக்கு, மாமியார் மற்றும் மற்ற பெண்களுடன் ஏன் தாலி இல்லை என்ற கேள்விக்குப் பதில் சொல்லி மாளாது. இதுவே தொடர்ந்ததால், ஈ.வெ. ரா வின் அன்னை, மகனையும், மருமகளையும் எதுவும் சொல்வதில்லை என்ற முடிவு எடுத்தார். இப்படியே ஈ.வெ.ரா தனது முற்போக்குக் கருத்துக்களை வீட்டுக்குள்ளும், மனைவியிடமும் விதைத்தார்.

ஈ.வெ.ராமசாமியின் சமுதாயப்பணி,

1905-1908ம் ஆண்டுகளில் ஈ.வெ.ராமாசமிக்கு  வயது 26-29: பொது வாழ்வில் ஈ.வெ.ராமசாமி விருப்பங்கொண்டு மக்கள் நலப்பணி ஆற்றினார். ஈரோட்டில் பிளேக் நோய் பரவிய போது மீட்புப்பணி ஆற்றியதுடன், இறந்த சடலங்களை உறவினர்களே கைவிட்டுச் சென்ற போதும், தன் தோள்மீது சுமந்து சென்று  அப்புறப்படுத்தி அரும்பணி ஆற்றினார்.காங்கிரஸ் இயக்கத்தில் நாட்டம் கொண்டார். ராமசாமியின் அனைத்து செயல்பாடுகளிலும் தன்னை இணைத்துக்கொண்டார் மனைவி நாகம்மை. 1909ம் ஆண்டு ராமசாமி, 30 வயதில்,  இளம் விதவையான தனது தங்கையின் மகளுக்கு  எதிர்ப்புக்கிடையில் மனைவி நாகம்மை உதவியுடன் விதவைத் திருமணம் செய்தார். 1911ம் ஆண்டு 32 வயதில் ஈ.வெ.ராமசாமி தந்தையை இழந்தார்.

மனமாற்றம்.. கடவுள் மறுப்பாளர் 

நாகம்மையாரை மணந்துகொண்டு தமது தந்தையின் வணிகத்தை கவனித்து வந்த நேரம், குடும்பத்தில் ஏற்பட்ட பிணக்கு காரணமாக அவர் வீட்டை விட்டு வெளியேறி துறவு பூணும் நோக்கத்தோடு காசிக்குச் சென்றார். அங்கிருந்த அன்ன சத்திரங்கள் பிராமணர் அல்லாதோரை உள்ளே அனுமதிக்க மறுத்தன. அவர் பசியில் வாடி, சத்திரத்தில் இருந்து வீசி எறிந்த இலைகளில் இருந்து உணவை எடுத்து உண்டார். இது அவரது மனதில் நீங்கா வடுவை ஏற்படுத்தியது.  அப்போது நடந்த நிகழ்வுகள்தான் அவரை கடவுள் மறுப்பாளராக மாற்றின.

1919-ம் ஆண்டு ஈ.வெ.ராமசாமி, காங்கிரஸ் பேரியக்கத்தில் இணைந்து, காந்தியின் ‘ஒத்துழையாமை இயக்கத்தில்’ தீவிரமாக ஈடுபட்டார். அப்போது அவர் ஈரோடு நகர்மன்றத் தலைவராக சிறப்பாகப் பணியாற்றியதுடன், குடிநீர்த்திட்டம், சுகாதார வசதி போன்ற பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றினார்.ஏறத்தாழ 28 மதிப்புறு பதவிகளை ஏற்றுப் பணியாற்றினார். ஈரோட்டில்  பெருவணிகர். தான் வகித்துவந்த மதிப்புறு பதவிகள் அனைத்தினின்றும் தானே விலகியே,காந்தியின் காங்கிரசில் சேர்ந்தார்.

நாகம்மை கதராடை ஏற்பு 

ஈ.வெ.ராமசாமி ,காந்தியாரின் நிர்மாணத் திட்டத்தை ஏற்று எளிய வாழ்வை  மேற்கொண்டதுடன், ஆடம்பர ஆடையைத் துறந்து கதர் ஆடையை உடுத்தினார். அப்போது  தன் அன்னை உட்பட குடும்பத்தினர் அனைவரையும் கதராடை அணியச் செய்தார். கதர் மூட்டையைத் தோளில் சுமந்து, ஊர் ஊராகச் சென்று விற்பனை செய்தார். அந்த கால கட்டத்தில்,  ஆடம்பரமிக்க ஆடை, அணிகலன்களைத் துறந்தார் நாகம்மையார். பின் காந்தியின் , கதராடையை அணிந்து  எளிமையை ஏற்றுக்கொண்டார் நாகம்மையார்.

 நாகம்மை –காங்கிரஸ் இயக்கம் மற்றும் காந்தி சந்திப்பில் 

1919ம் ஆண்டு ஈ.வெ.ராமசாமி இந்திய தேசிய காங்கிரஸில் இணைத்துக் கொண்ட போது நாகம்மை தன்னையும் அப்போது காங்கிரஸ் உறுப்பினராக்கிக் கொண்டார். அந்தக் காலக்கட்டத்தில்  மகாத்மா காந்தி தொடங்கிய கள்ளுக்கடைப் போராட்டம் நாடு முழுவதும் தீவிரமடைந்திருந்தது. அப்போது பிரசாரத்திற்காக ஈரோடு வந்திருந்த மகாத்மா காந்தி தந்தை பெரியார் வீட்டில்தான் தங்கியிருந்தார். அச்சமயம்  மகாத்மா காந்தி கள்ளுக்கடையினால் பெண்கள் அதிகளவில் பாதிக்கப்படுவதாக அவரிடம் கூறினார்.  எனவேதான் கள்ளுக்கடை போராட்டம் என்றார். காந்தி பெண்கள் மீது அதீத அக்கறையுடன் இருந்ததை, பெண்ணாக இருந்து நாகம்மை உணர்ந்தார். உண்மையை அறிந்தார்.

நாகம்மையும், கண்ணம்மாவும் கள்ளுக்கடை மறியல் 

1921-ம் ஆண்டில் ஈரோட்டில் நடந்த கள்ளுக்கடை மறியலின் போது ஆங்கிலேய அரசால் ஈ.வெ.ராமாசாமி கைது செய்யப்பட்டார். அப்போது பெரியார் கள் உற்பத்திக்குக் காரணம் தென்னை மரங்கள் என்பதால், தனது தோப்பில் இருந்த 500-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை வெட்டி வீழ்த்தி போராட்டத்தைத் தீவிரமாக்கினார். ஆங்கிலேயே அரசு அப்போது 144 தடை உத்தரவு போட்டது. அதனையும்  ஈ.வெ.ரா.பெரியார் மீறியதால் கைது செய்யப்பட்டார். அப்போது நாகம்மையாரும் பெரியாரின் தங்கை கண்ணம்மாளும் பல பெண்களுடன் சேர்ந்து மறியலைத் தொடர்ந்தனர். தமது மனைவி நாகம்மையையும், சகோதரி கண்ணம்மாவையும் அரசியலில் ஈடுபட ஊக்குவித்தவரே ஈ.வெ. ராமசாமி பெரியார்தான்.

சிறை சென்ற நாகம்மாள் & கண்ணம்மாள் 

ஈ.வெ.ராமசாமியின் மனைவி நாகம்மையாரும் பெரியாரின் தங்கை கண்ணம்மாளும்  இருவரும் , 1921ம் ஆண்டு  கள்ளுக்கடைகளை மூட வலியுறுத்தி தலைமையேற்று காங்கிரஸ் கட்சியின், ஈரோடு கள்ளுக்கடை மறியல் போராட்டத்தை முன்னின்று நடத்தினர். கள்ளுக்கடை மறியலில் , ஈடுபட்டதால், ஈ.வெ. ராமசாமியின்  தங்கை கண்ணம்மாள், மனைவி நாகம்மாள் இருவரும் சிறை செல்ல நேரிட்டது. அவர்களுடன் ஈ.வெ. ராமசாமியும் கள்ளுக்கடை மறியலில் பங்கேற்றுச் சிறை சென்றார்.. இதன் பலனாக அன்றைய ஆங்கில அரசு நிர்வாகத்தினர் உடனடியாக பணிந்தனர். மீண்டும் ஒத்துழையாமை மற்றும் மிதமாக மது குடித்தல் சட்டங்களை எதிர்த்து மறியல் செய்தது ஆகியவற்றால் கைது செய்யப்பட்டார்.

போராட்டம் நிறுத்துவது ஈரோடு பெண்கள் கையில்..என காந்தி

அதன் பின்னர் அந்தப் போராட்டத்தினை நாகம்மையாரும், பெரியாரின் தங்கை கண்ணம்மாவும் முன்னின்று நடத்தினர். பெண்கள் விடுதலைப் போரில் கலந்துகொண்டு கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டது இந்திய வரலாற்றிலேயே  அதுதான் முதல்முறை. அரசு விதித்திருந்த 144 தடை உத்தரவை மீறியதால் ஈரோடு நகரம் முழுவதுமே கலவரம் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. மக்களின் எழுச்சியைக் கண்ட அரசு கைது நடவடிக்கையைத் தொடர அஞ்சி, சமரசத்துக்கு முன்வந்தது. மறியல் போராட்டத்தைக் கைவிடுமாறு காந்தியைச் சிலர் வேண்டினார்கள். அதற்கு காந்தி “போராட்டத்தை நிறுத்துவது என் கையில் இல்லை. அது ஈரோட்டிலுள்ள இரண்டு பெண்களிடம் இருக்கிறது. அவர்களைத்தான் கேட்க வேண்டும்” என்றார்.

சாதி, மத வேறுபாடுகளைக் களைய குரல் கொடுத்த நாகம்மை 

சாதி மத வேறுபாடுகளை நீக்கவும், மூடப்பழக்க வழக்கங்களை ஒழிக்கவும் மேடைகளில் முழக்கமிட்டார் நாகம்மை. பெண் கல்வி மற்றும் பெண்ணுரிமைக்கு உலகளவில் முதல் குரல் கொடுத்த இந்திய சுயமரியாதை இயக்கத்தின் தலைவர் ஈ.வெ. ராமசாமியின் வீட்டுப் பெண்களும் அவருக்கு நிகரான சேவைகளை தமிழகத்திற்கு புரிந்தனர். ‘கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும்’ என்பதற்கு நிகராக பெரியாருக்கு நிகராக அவரது வீட்டுப் பெண்கள் களத்தில் இறங்கி தங்களை நிருபித்தனர்.

காங்கிரஸ் அகில இந்திய செயற்குழு உறுப்பினராக நாகம்மை 

பெண் கல்வியின் இன்றியமையாமை, கலப்பு மணம், விதவைகள் மறுமணம், சுயமரியாதைத் திருமணம் போன்ற கருத்துகளைத் தமது பிரசாரங்களில் வலியுறுத்தினார்.1923 ம் ஆண்டு, டிசம்பர் 4ம் நாள்,  திருச்சியில், மதராஸ் (தமிழ்நாடு) மாகாண காங்கிரஸ் முதலாவது கமிட்டியில், அனைத்திந்திய காங்கிரஸ் செயற்குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் நாகம்மை. தமிழ்நாட்டில் அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் நாகம்மை ஆவார்

தாழ்த்தப்பட்ட மக்களுக்காக நாகம்மை வைக்கத்தில் கைது 

கேரளத்தின் திருவிதாங்கூர் மாகாணத்தில் தீண்டாமை ரொம்பவும்  ஆதிக்கம் செலுத்தியது.  1924-ம் ஆண்டு ஏப்ரலில் இன்றைய கேரள மாநிலம் வைக்கத்தில் (  அன்றைய மதராஸ் மாகாணத்தின் ஒரு பகுதி) ஈழவர் எனப்படும் தீயர், புலையர் ஆகியோருக்கு இழைக்கப்பட்ட தீண்டாமைக் கொடுமையை ஒழிக்க நடைபெற்றதே வைக்கம் போராட்டம்.  இங்கு தாழ்த்தப்பட்ட மக்கள் கோயிலுக்குள் நுழைவதையும், கோயிலைச் சுற்றியுள்ள வீதிகளில் நடப்பதற்கும் அப்போது தடை இருந்தது. எனவே காங்கிரஸ் இயக்கம், தாழ்த்தப்பட்ட மக்கள் கோயில் மற்றும் தெருக்களுக்குள் நுழைவதைத் தடை செய்வதை எதிர்த்து வைக்கம் சத்தியாக்கிரகத்தைத்  தொடங்கியது. இந்தப் போராட்டத்தினால் இரண்டு முறை சிறைப்பட்டார் பெரியார். அப்போது நாகம்மையார், தமிழகத்துப் பெண்களைச் அழைத்துக்கொண்டு ஈரோட்டிலிருந்து வைக்கம் வந்து சேர்ந்தார். நாகம்மையும்  மற்றும் இராமசாமியும்  1924 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் நாள் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். போராட்டத்தினை முன்னெடுப்பதால் சிறைத்தண்டனை கிடைக்கும் என்று அறிந்தும் அதற்கு அஞ்சாமல் துணிவுடன் போராட்டக் களத்தில் நாகம்மையார் உறுதியுடன் நின்றார். நாகம்மை போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்களை முன்னின்று நடத்தி,1924 ம் ஆண்டு,  மே மாதம் அங்கேயே கைது செய்யப்பட்டார்.

 சுயமரியாதை இயக்கத்தில் நாகம்மை 

ஈ.வெ.ராமசாமி, 1925 ஆம் ஆண்டு சுயமரியாதை  இயக்கம் என்ற ஒன்றைத் தொடங்கினார். அப்போது இதில் பெண்கள் அவ்வளவாக இல்லை. ஆனால் அந்த இயக்கம் தொடங்கிய போது. சுயமரியாதை இயக்கத்தில் பெண்களும் பங்கேற்று தங்களது உரிமைகளை நிலை நாட்டிட வேண்டும் என்று பெண்களை அதிகளவில் சுயமரியாதை இயக்கத்தில் இணைப்பதற்கு காரணமாக இருந்தார் நாகம்மையார். இயக்கத்தில் பெண்கள் பங்குபெறுவதை ஊக்கப்படுத்தியவர், உறுதிப்படுத்தியவர் இவர். அதேபோல் சுயமரியாதை இயக்கத்திற்கு பெருமை சேர்த்திடும் வகையில், விதவை மறுமணங்கள் மற்றும் சுயமரியாதைத் திருமணங்களை முன்னின்று நடத்தியுள்ளார்.

 குடியரசு இதழின் ஆசிரியராக 

ஈ.வெ.ராமசாமி பெரியார் சிறை சென்ற காலத்தில் நாகம்மை “குடிஅரசு, ரிவோல்ட்” ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியராகவும் விளங்கினார். ஈ.வெ. ராமசாமி ஐரோப்பாவிற்கு சுற்றுப் பயணம் சென்றார். அப்போதும் நாகம்மையார்   குடியரசு இதழின் ஆசிரியராக பொறுப்பு ஏற்று அதனை திறம்பட நடத்தினார்.

நாகம்மை மறைவு 

மனைவி நாகம்மைக்கு உடல்நிலை சரியில்லை. அருகிலிருந்து கவனித்து அவளுக்குத் தைரியமூட்டி, ஆறுதல் சொல்ல ஈ.வெ.ரா, அதைப் பற்றி எண்ணவில்லை. தனது தொண்டுதான்,  பெரிதென்றெண்ணி, பொதுக் கூட்டங்களில் உரையாற்றப் பயணம் சென்று விட்டார். நாளுக்கு நாள் நாகம்மையார் உடல்நிலை மோசமடைந்து வந்தது.வைத்தியம் செய்த மருத்துவர்கள் இனிப் பிழைப்பது அரிது என்று கூறினார்கள். அருகிருந்து  கவனித்துக் கொள்ள பலர் இருந்தும், நாகம்மையாரின் தளர்ந்த விழிகள், நாற்புறமும் கணவரைத் தேடித் துழாவின. இத்தருணத்திலும் தன் கணவர் அருகில் இல்லாமல் போனது நாகம்மையாரின் மெல்லிய மனத்தை மிகவும் வருத்தியது. வந்துவிடுவார், வந்து விடுவார் என்கிற நம்பிக்கை வரவர அவரது உள்ளத்தில் தளர்ந்து கொண்டே வந்தது.

அப்போது ஈ.வெ.ரா திருப்பத்தூர் மநாட்டில்  பலத்த கைதட்டல்களுக்கிடையே பேசிக் கொண்டிருந்தார். ஈரோட்டிலிருந்து சென்ற ஆள், ஈ.வெ.ராவிடம் நாகம்மையாரின் மோசமான நிலைமையையும், அவர் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதையும் எடுத்துக் கூறினார். ஆனால், இதைக் கேட்டும், ஈ.வெ.ரா. உடனே புறப்பட்டு விடவில்லை.மாநாட்டில் தன் முழு உரையையும் முடித்த பின்னரே புறப்பட்டார். ஈரோடு மிஷன் மாருத்துவமனையில் நாகம்மையார், கணவரைக் காணும் கடைசி ஆசையும் நிறைவேறாமலே, 1933 -ம் ஆண்டு மே மாதம் 11ம் நாள், உயிர்துறந்தார். ஈ.வெ.ரா. ஊர்வந்து, நாகம்மையாரைக் காண மருத்துவமனை சென்றபோது,நாகம்மையின் உயிரற்ற உடல்தான் அவரை வரவேற்றது. எதற்கும் கலங்காத ஈ.வெ.ராவை,நாகம்மையாரின் மரணமும் கலக்கவில்லை.அன்பே உருவானவர் நாகம்மையார்.

நாகம்மையை பெரியார் பாராட்டு 

“நாகம்மாள் உயிர் வாழ்ந்ததும், வாழ ஆசைப்பட்டதும் எனக்காகவே ஒழிய, தனக்காக அல்ல என்பதை நன்றாக உணர்ந்தேன்”  என தன் மனைவி நாகம்மையார் மறைந்த போது தந்தை பெரியார் சொன்ன வார்த்தைகள் இவை. அவர் அப்படி சொன்னதற்குக் காரணம் தான் வாழ்க்கைத் துணையாக மட்டுமல்லாமல் தன் கொள்கை வழித்துணையாகவும் நாகம்மையார் விளங்கினார் என்பதனாலேயே

நாகம்மை பெருமை 

@ தந்தை பெரியாருடன் வாழ்ந்த காலத்தில், அவருடன் அவரது கொள்கைப் போராட்டத்தில் தன்னையும் முழுமையாக ஈடுபடுத்தி கொண்டார் நாகம்மை..

@ தந்தை பெரியாரின் மனைவியாக வாழ்ந்ததுடன், அவரது கொள்கையால் ஈர்க்கப்பட்டவராக தந்தை பெரியார் வலியுறுத்திய புதுமைப் பெண்ணாகவும் வாழ்ந்து காட்டியவர் நாகம்மை.

@தமிழ் நாட்டில் பல பள்ளிகள் நாகம்மையின் பெயரைத் தாங்கியுள்ளன. தமிழ்நாட்டில் பெண்களுக்கு உயர்கல்வி வழங்குவதற்கு தமிழக அரசு பெரியார் ஈ. வெ. ரா. நாகம்மை இலவசக் கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

@தஞசாவூரில் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் உள்ளது

@வேலூரில் நாகம்மை பெயரில், அரசு ஈ.வெ.ரா நாகம்மை மேல்நிலைப் பள்ளி உள்ளது.

@மதுரையிலும் பெரியார் நாகம்மை பள்ளிகள் உள்ளன.

@ காந்தியின் பிரச்சாரத்தில் வெகுவாக ஈர்க்கப்பட்ட நாகம்மை ஈரோட்டில் தங்களது வீட்டின் அருகே தெருவொன்றில் பெண்களைத் திரட்டி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டார். நாகம்மை கள்ளுக்கடைக்காக நடத்திய போராட்டத்தின் காரணமாக மறியல் போராட்டம் நடைபெற்ற இடம் தற்போதும் கள்ளுக்கடை மேடு என்றழைக்கப்பட்டு வருகிறது.

@ நாகம்மை, கணவரைப் பலசமயம் தன் வீட்டாரிடம் விட்டுக் கொடுக்காமலும். வெளியுலகில் தன் கணவரது பொதுத் தொண்டுகள் அனைத்திற்கும் ஒத்துழைப்புக் கொடுத்தவர்.கணவர் சிறைபுக நேர்ந்ததால், அவர் விட்ட இடத்திலிருந்து தொண்டைத் தொடர்ந்து போராடி, சிறைக்கும் அஞ்சாமல் வீரசாகசம் புரிந்த ஒப்பற்ற வீராங்கனையாக வாழ்ந்து காட்டி சரித்திரத்தில் இடம் பெற்றவர் நாகம்மையார்.

@ காந்திஜிக்கு மனைவியாக அமைந்த கஸ்தூரிபாய் அவருக்கு தொண்டும், உதவியும் செய்தது போலவே, ஈ.வெ.ரா. வுக்கு நாகம்மை கிடைத்தார்.அவருக்கு ஏகமாகப் பணிபுரிந்தார், சமூகப் போராளியாகவும் இருந்தார்.

விருந்தோம்பலில் சிறந்த பண்பாளர் நாகம்மை 

விருந்தோம்பலில் நாகம்மையாருக்கு இணையானவர் எவருமில்லை . தம் இல்லத்திற்கு வரும் யாவர்க்கும் இன்முகத்துடனும் இன்சொல்லுடனும் விருந்து படைப்பதைக் கண்டு அனைவரும் நெகிழ்வார்கள். ஆனால் பெரியார் சிக்கனவாதி; இதனை விரும்பாதவர். ஆனால் எந்த நேரத்தில், யார் தன் வீடு தேடி வந்தாலும், அவர்களை வாயார உபசரித்து; வயிராற உணவளித்து அனுப்புவார் நாகம்மை. தனது.மாமனார், மாமியாரையும்  தன் இரு கண்கள் போல் போற்றிக் கடைசிக் காலம்வரைத் தொண்டு செய்தவர்.

”ஒரு சமயம் நானும், பெரியாரும் திருநெல்வேலிக்குப் பிரசார நிமித்தம் சென்றுவிட்டு ஈரோட்டுக்கு இரவு 12.30 மணிக்கு வந்தோம். அன்னம் கிடைக்குமோ, கிடைக்காதோ என்ற ஐயப்பாட்டுடனே வந்தோம். அப்பொழுது நாகம்மை அம்மையார் அன்புடன் வரவேற்று, உடனே அறுசுவையுடன் அமுது படைத்ததை யான் என்றும் மறவேன்” என்று திரு.வி.க எழுதியிருக்கிறார்.

ராஜாஜியும் கூடப் பெரியார் வீட்டு விருந்தோம்பல் குறித்து 1953-ம் ஆண்டுடில், நான் ஈ.வெ.ராமசாமியின் வீட்டுத் தோசையை விரும்பிச் சாப்பிடுவேன். அதன் பக்குவம் என்ன என்று நான் கேட்பதுண்டு” என்று பொதுக்கூட்ட மேடையிலேயே பேசியிருக்கிறார். பெரியாருடன் மலேசியா, சிங்கப்பூர் சென்றுவிட்டு, இந்தியாவிற்குத் திரும்பும்போது, தங்களுக்கு விருப்பமான, தேவையான மலாய் நாட்டுப் பொருள்கள் எவை என்று கேட்ட தமிழர்களிடம், “நீங்களெல்லாம் இங்கே சுயமரியாதை இயக்கத்தைப் பாடுபட்டுப் பரப்பியிருக்கிறீர்களே, அதுவே எனக்கு அருமையான பொருள்” என்று உள்ளம் நிறைந்து பாராட்டினாராம் நாகம்மையார்.

நாகம்மை இல்லம்.

நாகம்மையாரின் பெயர் என்றும் நிலைத்திடும் வகையிலும், நாகம்மையின் சமூகப் பணியின் நினைவாகவும், ‘நாகம்மையார் இல்லம்’ என்ற பெயரில், ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கான இல்லம்  தந்தை பெரியாரால் 1959-ம் ஆண்டு திருச்சியில் உருவாக்கப்பட்டது. 2009-ம் ஆண்டு தனது பொன்விழாவினை இந்த இல்லம் கொண்டாடியுள்ளது. இந்த இல்லம் இன்னும் எத்தனையோ பெண் குழந்தைகளின் வாழ்வில் ஒளியேற்றி வருகிறது.

Ref:

  1. https://ta.wikipedia.org/wiki
  2. https://www.dinamani.com/editorial-articles/special-stories/2020/mar/08/womens-day-2020-remembering-nagammai-maniammai-3376051.html
  3. https://ta.wikisource.org/wiki/
  4. https://www.vikatan.com/social-affairs/women/remembering-nagammai-on-her-death-anniversary
  5. amilvu.org/library/nationalized/pdf/49-na.ra.nachiyappan/ilaignarkalukkuthantha
  6. iperiyarvaralaru.pdfhttp://
  7. modernrationalist.com/category/feminism/
  8. https://feminisminindia.com/2019/09/16/nagammai-fearless-forgotten-dalit-feminist-activist/

Nagammaiyar & Kannamma Essay on Liberation Velvi - Pera.Mohana விடுதலை வேள்வியில் நாகம்மையார் & கண்ணம்மா கட்டுரை - பேரா.மோகனாNagammaiyar & Kannamma Essay on Liberation Velvi - Pera.Mohana விடுதலை வேள்வியில் நாகம்மையார் & கண்ணம்மா கட்டுரை - பேரா.மோகனா

வலி…ஒரு…வழி சிறுகதை – சக்தி ராணி 

வலி…ஒரு…வழி சிறுகதை – சக்தி ராணி 




“என்னங்க…கொஞ்சம் சீக்கிரம் வீட்டிற்கு வர முடியுமா…இப்போ…”

“என்னம்மா…ஆபீஸ் இப்போ தான் வந்தேன்…வேலை இருக்கு…போன்ல சொல்லு…”

“போன் ல சொல்ல முடியுற விஷயமா இருந்தா சொல்லியிருப்பேனே…எதுக்கு வீட்டுக்கு வாங்கனு கூப்பிடுறேன்…வர முடியுமா…முடியாதா…”

“வாரேன் மா..வாரேன்”

(போன் கால் துண்டிக்கப்பட்டது)

தவமாத் …தவமிருந்து…ஏறாத கோவில் ஏறி போதாத ஹாஸ்பிட்டல் போயி…பார்த்து பார்த்து பெத்த புள்ள…கண்கலங்கி நிக்குதே…இத எங்க போயி சொல்லுவேன்…”வா…செல்லம்…அப்பா இப்போ வந்துருவாரு…” என அணைத்துக் கொள்கிறாள்…

“என்னம்மா…என்ன ஆச்சு…வீட்டு சத்தம் ரோட்ல கேட்குது…” என வீட்டிற்குள் நுழைகிறான்ராம்.

“என்னங்க…நம்ம பிள்ளைய பாருங்க…இது கண்ணுல கண்ணீர் வரக்கூடாதுனு நாம் எம்புட்டு பார்த்து பார்த்து வைச்சிருந்தோம்…இப்போ பாருங்க…முகம் வீங்குற அளவு அழுது எப்படி இருக்கு பாருங்களேன்…”

“என்னடா…கண்ணம்மா…என்ன ஆச்சு…என் செல்லம்…அப்பா இருக்கும் போது நீ அழலாமா…”

“அதெல்லாம் ஒண்ணுமில்ல பா…”

“நிலா…அப்பாக்கு தெரியாத உன் முகம் எப்படி இருக்கும்னு..சொல்லுஎன்னவிஷயம்…பள்ளிக்கூடத்துல எதும் பிரச்சனையா… நண்பர்கள் எதும் கேலி செஞ்சாங்களா…வீட்டுப்பாடம் எழுதாம போனீயா…”

“என்னடீ…அப்பா இவ்வளோ கேள்வி கேட்குறாறு…வாயைத் தொறந்து சொல்லேன்…”

“மேரி டீச்சர் என்ன அடிச்சாங்க ப்பா…”

“என்னது டீச்சர் அடிச்சாங்களா…”

“இந்த ஊர்லயே பெரிய பண்ணை வூட்டுக்காரங்க நாம தான்…நம்ம வூட்டுப்புள்ளைய எப்படி அவுங்க அடிப்பாங்க…இரு…தலைமைக்கு போன் போடுவோம்…எடுடி அந்த போன…என்ன நினைச்சிட்டு இருக்காங்க…எம் புள்ள… என் தங்கத்தை …”

டிரிங்…டிரிங்…

“ஹலோ…யார் பேசுறீங்க…”

“நான் தான் பெரிய வீட்டு பண்ணையார் மகன் பேசுறேன்…”

“சொல்லுங்க சார்…என்ன விஷயமா கால் பண்ணீங்க?”

“என்ன விஷயமா…எல்லாம் தெரிஞ்சு பேசுறீங்களா…இல்ல தெரியாதது போல பேச நினைக்கிறீங்களா?”

“இல்லங்க…சார்.நீங்க என்ன சொல்ல வாறீங்கனு எனக்கு புரியலை…”

“ஓ புரியலையா…உங்க பள்ளிக்கூடத்துல மேரி டீச்சர் வேலை பார்க்குறாங்களா…”

“ஆமா சார்…இருக்காங்க?”

“அவங்கள கொஞ்சம் கூப்பிடுங்க…லைன்லேயேவெயிட்பண்றேன்..”

“ஹலோ…சொல்லுங்க சார்…”

“மேரி டீச்சரா?”

“ஆமா சொல்லுங்க…”

“இன்னிக்கு என் பொண்ண அடிச்சீங்களாமே ..உங்களுக்கு எவ்ளோ தைரியம் இருந்தா இப்படி அடிச்சிருப்பீங்க…உங்கள் வேலையை விட்டுத் தூக்கல…என் பேரு ராஜா சங்கர் இல்ல…”

“சார் கொஞ்சம் பொறுமையா பேசுங்க.என்ன நடந்ததுனு தெரியாம நீங்க பேசுறீங்க…”

“என்ன வேணா நடக்கட்டும் மேடம்.நீங்க எப்படி கை வைக்கலாம்…பிரச்சனை இருந்தா முதல்ல தலைமையாசிரியரிடம் சொல்லிருக்கலாம்.இல்ல எங்ககிட்ட சொல்லிருக்கலாம்.இதெல்லாம் பண்ணாம நீங்க என் மவ மேல கை வச்சிருக்கீங்க…உங்களுக்கு எவ்வளவு தைரியம்.?”

“ஐயோ…சார் என்னையும் கொஞ்சம் பேச விடுங்க…நீங்களே பேசி எல்லாம் முடிவு பண்ணாதீங்க”

“நீங்க ஒண்ணும் சொல்ல வேண்டாம்..நான் முடிவு பண்ணிட்டேன்.நீங்க இனி வேலை எப்படி பார்க்குறீங்க பார்ப்போம்.”

(போன் கால் துண்டிக்கப்பட்டது)

“என்ன மேரி இது புது பிரச்சனையா இருக்கு….இதெல்லாம் உங்களுக்கு தேவையா?”

“இல்லங்க மேடம்.நிலா பண்ணது பெரிய தப்பு…நிலா…செல்வி…பிரியா எல்லாரும் சேர்ந்து கைப் பேசியில் குழு ஆரம்பிச்சு பல வீடியோ அனுப்புறாங்க. அதுல தவறானதும் இருக்கு.விஜிசொல்லிதான்எனக்குஇதுதெரியும். நானும்நல்லவிதமாகபேசிஅறிவுரை சொல்லிஅனுப்பிடலாம்னுதான்வரசொன்னேன். ஆனா,  நிலா ரொம்ப திமிரா பேசுனா.  அதான் கோபம் வந்து அடிச்சுட்டேன் மேடம்…

“என்னமோ போங்க…பெரிய இடம். அவங்களே இதெல்லாம் பாத்துக்க மாட்டாங்களா…நீங்க ஏன் உள்ள போறீங்க…டென்ஷன் தான் உங்களாலும்…”

‘எல்லாம் வல்ல இறைவனே உன்னை ஆசிர்வதிப்பார்’ என்ற‌குரலில் பாதிரியார்…ஆசீர்வதிக்க ராஜா சங்கர் எதிரே வந்து நின்றார்.

“இங்க பாருங்க ஃபாதர்….நான்‌ உங்க மேல உள்ள மரியாதைல தான் இப்படி நின்று பேசிட்டு இருக்கேன். இல்லைனா…உங்க பள்ளிக்கூடத்துல வேலை பார்க்குற மேரி டீச்சர் கதியே வேற” என கத்தினான்.

“பொறுமையா இரு ராஜா…என்ன‌பிரச்சனை?” என கேட்டுக்கொண்டிருக்கும் போதே பாதிரியாரின் கைப் பேசி ஒலிக்க…ஒரு நிமிஷம்..என சற்றே நகர்ந்து பேசத் துவங்கினார்.

“ஃபாதர், நான் தலைமையாசிரியை  பேசுறேன்”.என்று கனிவான குரலில் நடந்ததையெல்லாம் முன்வைத்தார்.

“சரி, நான் என்னனு பார்க்குறேன்…மேடம்”

(போன் கால் துண்டிக்கப்பட்டது)

“சொல்லு ராஜா சங்கர், நானும் இப்போ தான் எல்லாம் கேள்விப்பட்டேன்….மேரி டீச்சரை வேலையை விட்டு தூக்கிட்டா சரிக்கு சரியாய் போயிடும்னு  நினைக்குறீயா…”

“இல்ல ஃபாதர்…சரியாகாது! .இருந்தாலும் என் மனசு அவ்ளோ வலிக்குது…உங்களுக்கே தெரியும் எம்புள்ளைய எவ்ளோ ஆசையா வளக்குறேனு…அவ மேல கை வைக்க இவங்களுக்கு எப்படி மனசு வந்தது?”

“புரியுது ராஜா சூழ்நிலைனு ஒண்ணு இருக்குல.அதையும் நாம் விசாரிக்கணும்ல…”

“அதெல்லாம் எனக்கு வேண்டாம்..அவங்க இந்த பள்ளிக்கூடத்துல இருந்து போகனும் அவ்ளோ தான் என் முறையீடு உங்கட்ட”

“ம்ம்…சரி…மேரி சர்ச்ல வளர்ந்த பொண்ணு.நான் சொன்னா புரிஞ்சுப்பா…நீ கிளம்பு…நான் பார்த்துக்குறேன்”.

“பார்த்துக்குறேன்னு  சொல்லாதீங்க! நான் சொல்றதைப் பண்ணுங்க.அதுதான் எனக்கு சந்தோஷம்” எனக்கூறி விடைபெற்றார்.

“மே ஐ கமீன்… சார்?”

“வாங்க மேரி. உட்காருங்க…”

“நடந்த பிரச்சனை எல்லாம் கேள்விப்பட்டேன். எதுவுமே செய்யறதுக்கு முன்ன ஆயிரம் முறை யோசிக்கணும். அதும் ஆசிரியர் வேலை, இப்போ ரொம்ப யோசிக்கணும்”

“ம்ம்…புரியுது ஃபாதர். .நான் பண்ணது தப்பு இல்ல.இருந்தாலும் சூழ்நிலைக் கைதி தான் நான் இப்போ…”

“நீங்க கொஞ்ச நாள் ஸ்கூல் வராம…சர்ச்ல உள்ள கணக்கு வழக்குலாம் பாருங்க.  விஷயம் கொஞ்ச நாள்ல மறந்து போகும்.அப்புறம் என்ன பண்ணலாம்னு  பார்க்கலாம்”

“சரிங்க ஃபாதர்…ஆனாலும் என் மனசு இது ஒத்துக்கல…தப்பே பண்ணாம…தண்டனை…கர்த்தர்  பார்த்துட்டு தான் இருப்பார்” என்றே நகர்ந்தாள்.

ஆறு மாத குழந்தையாக…அம்மா அப்பா…யாரு தெரியாம அனாதையா சர்ச் வாசல் தொட்டில்ல கிடந்தாள். தூக்கி வளர்த்து… படிப்பு கொடுத்து எல்லாம் பண்ணாலும் இந்த சமூகத்தில் வாழ இவங்க இன்னும் போராட வேண்டிருக்கு…கெட்டிக்காரி இந்த மேரி பள்ளியில் படிக்கும் போது…படிப்பும் சரி…விளையாட்டும் சரி நம்பர் ஒன் தான்.  வாலிபால் சாம்பியன் பரிசு பெற்றவள்.விளையாட்டுத்துறை எவ்ளோ வசதி வாய்ப்போடு அழைச்ச போதும் போகாம…ஆசிரியரா வருவேன்.என்னைப்போல பல குழந்தைகளுக்கு கல்வி கற்றுக்கொடுப்பேன் என்ற வைராக்கியத்தில் வாழ்பவள் என்றே பழைய விஷயங்களை  அசைபோட்டுக்கொண்டிருந்தார் பாதிரியார்.

ஃபோன் ஒலித்தது…

“ஃபாதர்…நான் சங்கர் பேசுறேன்.நான் சொன்னது போல செஞ்சுடீங்க.சந்தோஷம்.இப்போ தான் என் மகளுக்கு நல்ல அப்பாவா என்ன உணர முடியுது” என்று நன்றி கூறினார். நாட்கள் நகர்ந்து செல்ல விஷயமும் மறைந்தது.

ஃபாதர் மேரியிடம், “நம்ம ஸ்கூல்ல பனிரெண்டாம் வகுப்பு எடுக்க ஆசிரியர் வேணும்.நீ வந்திரு” என அழைக்க…மேரி சற்று தயக்கத்துடன் “ம்ம்…ஃபாதர்” என்றாள்.

கெட்ட பெயரெடுத்து வெளியில் வந்தேன்.மீண்டும் அதே மாணவர்கள்.என்ன…பெரியவர்களாக வளர்ந்து நிற்கிறார்கள் என்ற பயமும் மேலோங்கியது.   பார்ப்போம்…என்னதான் நடக்குதுன்னு பள்ளி சென்றாள் மேரி.

“குட்மார்னிங்…டீச்சர்…”

“வெரி குட்மார்னிங்…எல்லாரும் எப்படி இருக்கீங்க?”

“நாங்க..நல்லா இருக்கோம்.நீங்க டீச்சர்?”

“நானும் ஃபைன்.  சரி பாடத்துக்கு போகலாம்…” என ஒவ்வொரு முகமாய் கண்கள் விரிய பார்த்துக்கொண்டே கடக்கையில் நிலாவும் அங்கே அமர்ந்திருந்தாள் புன்னகையுடன். குழந்தைகள் எல்லாத்தையும் மறந்துடுவாங்க.பெரியவங்க தான் பெரிய பிரச்சனை பண்ணி…என்று தனக்குள்ளே முணுமுணுத்துக்கொண்டாள். பாடம் நடத்த நடத்த மாணவர்களும் தலையாட்டிகொண்டே கவனித்து எழுதிக்கொண்டிருந்தனர்.

மறுநாள்…’டீச்சர் வாராங்க…வாராங்க…’என்ற ஒலி அதிகமா எழும்ப…

“என்னாச்சி பிள்ளைங்களா…இவ்வளோ பரபரப்பு.அதும் காலையிலே?”

“ஒண்ணுமில்ல டீச்சர்…சும்மா பேசிக்கிட்டு இருந்தோம்”

“அப்படியா…அப்போ சரி…வீட்டுப்பாடம் லாம் பண்ணீட்டீஙகளா…பண்ணிட்டோம் டீச்சர்…

“நிலா பண்ணல டீச்சர்” என்றது ஒரு குரல்.

“ஏன் பண்ணல…புரியலையா நிலா?”

“இல்ல டீச்சர் புரிஞ்சது…ஆனா…ஆனா…”

“சரி உட்காரு.நாளைக்கு சேர்த்து பண்ணிடு”.

“சரிங்க டீச்சர்…”

பாடம் சுவாரசியமான நிலையில் இன்றும் செல்ல…நிலா மட்டும் பாடம் மீது கவனமில்லாமல் இருப்பதைப் பார்த்தாள்
நிலாவை அழைத்துப்  பேசினாள்.

“என்ன ஆச்சு நிலா…இவ்வளோ சோகம்?”

“ஒண்ணுமில்ல டீச்சர்.நல்லாத் தான் இருக்கேன்”

“உன் குரலே சரியில்லே.. நான் உன் சகோதரி போல.சும்மா சொல்லு டா”

என தோள் மீது கை வைக்க பொழ பொழவென கண்ணீர் சிந்தினாள்.

“என்னம்மா…இப்படி அழுகுற…ஒண்ணுமில்லை.நான் இருக்கிறேன்” என்று அறையைத் தாழிட்டுப் பேசத் துவங்கினாள்.

“நம்ம ஸ்கூல்ல முன்ன வேலை பார்க்கும் போது சில விஷயங்கள் ல என்னை கண்டீச்சீங்க…நான் கேட்கலை. இது எங்க  அப்பா பண்ண பிரச்சனைல வெளில எல்லாருக்கும் தெரிஞ்சது. இத பயன்படுத்தி குமார் வாத்தியார் எங்கிட்ட பல முறை தப்பா நடக்க முயற்சித்தார்.  உனக்கு தான் எல்லாம் தெரியுமே அப்புறம் ஏன் தயங்குறனு அசிங்கமா பேசுறாரு…இத யார்கிட்ட சொல்ல தெரியலை…வீட்ல சொன்னா எங்க அப்பா முன்ன செஞ்சது போல எல்லாருக்கும் விஷயம் தெரிஞ்சி மோசமாயிரும் டீச்சர்…”

“சரி…அழாதே.. நான்பாத்துக்கறேன்…உனக்குஎதுவும்பிரச்சனைவராது”.

“ம்ம்…எனக்கு பயமா இருக்கு மிஸ்..”

” ஒண்ணும் கவலைப்படாதே…நீ வீட்டுக்குப் போ…நாளைக்கு எல்லாம் சரியாயிடும்” என்றே அனுப்பி வைத்தார்.

“குமார் சார்…கொஞ்சம் நில்லுங்க”

“என்ன மேரி மேடம்…சொல்லுங்க…நீங்க எங்கிட்ட பேசுறீங்க…என்ன ஒரு நல்ல நேரம் எனக்கு…சரி சரி சொல்லுங்க”

“நிலா…எங்கிட்ட பேசுனா…நீங்க ஏதோ தவறா பேசுறீங்கன்னு”

“ஓ….சொல்லிடாளா….அதனால நீ என்ன பண்ணப் போற?”

“இங்க பாரு குமார் நாம அவுங்களுக்கு குரு.   இதெல்லாம்நினைச்சுப்பாக்கறதேபெரியதப்பு…எச்சரிக்கையாஇருந்துக்குங்க…”.

“சரீங்க…அட்வைஸ் போதும்…கிளம்புங்க.”

” அட்வைஸ் இல்ல… பிரச்சனை ஆயிரும்…பாத்துக்குங்க..சொல்லிட்டேன். புரியும்னு நினைக்கிறேன்”.

கைப் பேசி அழைப்பு மேரியை அழைத்தது.

“ஹலோ மேரி டீச்சர் நான் ராஜா சங்கர் பேசுறேன்”

“சொல்லுங்க சார்.என்ன விஷயம்…உங்க வீட்டு வாசல்ல தான் நிக்குறேன்…உங்களை பார்க்கலாமா?”

“என்ன சார்…இப்படி கேட்குறீங்க…இதோ” என கதவைத் திறந்தாள்..

நிலா…ராஜா சங்கர்…மல்லி…என குடும்பத்தோடு நின்றனர்.

“வாங்க…உள்ள வாங்க” என அழைத்தாள்.

“என்னை மன்னிச்சிடுங்க மேரி மேடம்”

“என்ன சார்.நீங்க போயி ..பெரிய பெரிய வார்த்தையெல்லாம் சொல்றீங்க…”

“நிலா எங்கிட்ட எல்லாமே சொன்னாள்.எம்புள்ள சொல்றதை முழுசா கேட்காம எடுத்தோம்….கவுத்தோம்னு பல விஷயங்கள் செஞ்சிடறேன்… ஏன்உங்கவிஷயம்கூடஅப்படிதான்பண்ணேன்”

“அதெல்லாம் பழசு சார்.விடுங்க. சாப்பிட ஏதாவது எடுத்து வாரேன்” என்று  உள்ளே சென்றாள்.

“நான் உங்களுக்கு வலி தந்த போதும் ….நீங்க என் பொண்ணு வாழ்க்கைக்கு வழி தந்துட்டீங்க” என்றே கரம் கூப்பி நன்றி தெரிவித்தான்

மூவரும்பேசிவிட்டுமகிழ்ச்சியுடன்வீட்டைவிட்டுவெளியேறினர்.