மடி
குருக்களின் உதவியாளர்
உரத்த குரலில்
கத்தியபடி வந்தார்
‘மடியாயிருக்கிறார்
ஒதுங்கி
வழிவிடுங்கோ’
உள்ளே
மூலவரும்
ஒதுங்கினார்
ஒருகணம்
வறுமையை ஒழிப்பது எப்படி?
மெய்நிகர் சந்திப்பில்
தொடுதிரை போனில்
ஆறாம் வகுப்புக்
குழந்தைகள்
ஆங்கிலத்தில்
உரையாடினார்கள்
அனைத்து ஏழைகளுக்கும்
இலவச உணவு
அனைவருக்கும் வேலை
ஏழைக் குழந்தைகளுக்கு
இலவசக் கல்வி
கோதமலை அடியில்
பண்ணையத்திலிருக்கும்
ஆறுமுகம்
குழந்தைகளுக்குத்
தெரியுமா
இக்கேள்விக்கான விடை?
கையறு நிலை
சொந்தத்தில் திருமணம்
கால்கள் தொட்டு வாழ்த்துக்கள்
வாங்கினான்
காலை உணவு முடித்து
மொய் வைத்து
வெளிவந்தோம்
வழியில்
‘பைபாஸ் காளியம்மன்’
மிகவும் சக்தி
கும்பலோடு கும்பிட்டோம்
அர்ச்சகருடன் தனியே
பேசியபின்
தர்மதரிசனம் போய்
தனிதரிசனம்
விபூதிப் பொட்டலம்
கையில் திணித்தான்
ஸ்பெஷலாக எலுமிச்சை
கல்லாவுல வைய்யி
எல்லாம் மாறுமென்றான்
தேர்ந்தெடுத்த நடிகனின்
உடல்மொழி அவனிடம்
பஸ் நிறுத்தம் வந்த பின்
‘கண்ணா, காசிருந்தாக் கொடேன்’
சட்டைப் பையில்
எடுத்த மொத்தமும்
அப்படியே நீட்டினேன்
பதட்டத்துடன்
‘இவ்வளவு எதுக்கு, ஒரு தாள் போதும்’
எடுத்த மொத்தமும்
கொடுக்க இயலாத
எனை நினைத்து வெட்கி
கண்ணில் நீர் வழிய
கைகாட்டி விடைபெற்றேன்
கொலு
படிகள் மாடிக்கு
பொம்மைகள் பரணுக்கு
படையலுக்கும்
பாடலுக்கும்
அடுத்த நவராத்திரி வரை
காத்திருக்க
ஆரம்பித்தாள்
அட்டைப் பெட்டியில்
அம்மன்
பதவி
மலையுச்சியில் ஒரு
மாமரம்
புசித்தவர்கள் சொன்னார்கள்
‘அமிர்தம்’
மலையுச்சியடைய
பலவருடங்களாகலாம்
என்றனர் சிலர்
உச்சியடையுமுன்
பணிமுடிவும் சாத்தியம்
என்றனர் பலர்
விண்ணப்பங்கள்
அதிகமானதால்
எழுத்துத் தேர்வு
இரண்டடுக்கானது
நேர் முகத்தேர்வு
கட்டாயமானது
நமக்குத்தான்
கால்வழுவில்லையோவென
கழிவிரக்கம் வந்தது
பட்டியலில் பெயர்
வருமாவென
பதற்றமாயிருந்தது
அய்யா மனதுவைத்தால்
அடுத்த வருடம்
நிச்சயம்
சுமக்கும் பொதி
போதாது
கூடுதலாக சுமந்தால்தான்
அய்யாவுக்குத் தெரியவரும்
பத்து வருடங்கள்
போனதில்
மறந்தே போனது
திடீரென ஒரு நாள்
தட்டில் வைத்து
கனி நீட்ட
இடக்கையால்
புறந்தள்ளி
சமவெளியில்
எதிர்த்திசையில்
நடைபோடும்
காத்திருந்து
சலித்துப்போய்
தளர்ந்து போன
மனசு