Kannan Poems 2 கண்ணனின் கவிதைகள் 2

கண்ணனின் கவிதைகள்




தரை தட்டிய கப்பல்
*******************************
கத்திக்கப்பலை
குறிப்பேட்டில் விசிறி விசிறி
கல்பாவிய தரையில்
ஓட்டுகிறாள்
‘பாப்பா என்ன செய்யற’
‘கப்பல் ஓட்டறன்’
சிலந்தி வலைபின்னிய
எனது சிறு மூளைக்குத் தான்
தோணவேயில்லை
தரையிலும் ஓட்டலாமென

பெருமாள் தாத்தா
***************************
பாட்டிக்குத் தம்பி
எங்களுக்கு எப்போதும்
பெருமாள் தாத்தா
தோட்டத்திற்கு வந்தால்
சில மாதங்கள்
பெரும்பாலும் வருடங்கள்
கல்சட்டி தூக்கி தூக்கித்
தலையெல்லாம் சொட்டை
குடித்த பின் தாத்தா
குழந்தையாகி விடுவார்
‘பசங்க பெருசாயி
ஒக்காளி
எல்லா தோட்டத்தையும்
வாங்கிருவானுங்க
இருங்கடா’
தாத்தாவுக்குப் பெருமாளு
மச்சான் சலம்பினாலும்
மனசுக்குள் சந்தோஷம்
மனைவியைவிட
மச்சானிடம்தான்
பிரியம் அதிகம்
வெகு நாட்களுக்குப் பின்
தோட்டம் கைவிட்டுப் போனபின்
கைபிடித்துப் பேசியவர்
மூளை நரம்பு வெடித்த
இறந்து போனார் இரண்டாம் நாளில்