Book Review: Kantharvan Padaippukalil Vazhviyal Sinthanaigal Written by Ka Ramajeyam book review by Saguvarathan கந்தர்வன் படைப்புகளில் வாழ்வியல் சிந்தனைகள்

நூல் விமர்சனம்: முனைவர் க. இராமஜெயனின் கந்தர்வன் படைப்புகளில் வாழ்வியல் சிந்தனைகள் – சகுவரதன்




கவிஞர். கந்தர்வன்
=================
இயற்பெயர் நாகலிங்கம். புதுக்கோட்டையில் அரசு வருவாய்த்துறையில் உயர்பதவியில் இருந்ததோடு, தீவிர இடதுசாரியாக, தொழிற்சங்கம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் என்றெல்லாம் இயங்கியவர். இவற்றையெல்லாம் தாண்டி, தன் சித்தாந்தம், அதையொட்டிய செயல்பாடுகள் போன்றவை, தன் படைப்புத்திறனை சிதைத்துவிடாமல் பார்த்துக்கொண்டவர் கந்தர்வன்.

அழகான கலைப்படைப்புகள் மூலம் தன்னைத் தமிழின் சிறந்த இலக்கியகர்த்தாக்களில் ஒருவர் என நிலைநாட்டிக்கொண்டவர். கண்ணதாசனால் நடத்தப்பட்ட இலக்கிய இதழான ‘கண்ணதாச’னில் இலக்கிய விமரிசனம் எழுதியதன்மூலம் தமிழ் இலக்கிய உலகில் மெல்லப் பிரவேசித்தவர். பின்னர், சிறுகதைகள், கவிதைகள் எனத் தன் படைப்பாற்றலைப் பரவலாக்கி வெளிப்படுத்திய ஆளுமை. சுபமங்களா, தாமரை போன்ற சிற்றிதழ்களிலும் எழுதியிருக்கிறார். இவருடைய சிறுகதைகள் கலைநுட்பமானவை. மனித உணர்வுகளை ஆழத்தில் சென்று உலுக்கிவிடக்கூடியவை. கந்தர்வன் ஒரு கவிஞரும் கூட.

திறமையான மேடைப்பேச்சாளருமாகவும் செயல்பட்டிருக்கிறார். மக்களோடு தன் நேரடி உரையாடலுக்குக் கவிதையைப் பயன்படுத்தியவர். புழங்குமொழியில், நேரடி சொல்லாடலில் கவிதை சொன்ன கந்தர்வன், கேட்கும் சராசரி மனிதர்களைச் சிந்திக்கவைத்தார்; சீண்டியிருக்கிறார்; சிரிக்கவும் வைத்திருக்கிறார். கிழிசல்கள், மீசைகள், சிறைகள் ,போன்ற கவிதைத் தொகுதிகளும் பூவுக்குக் கீழே, ஒவ்வொரு கல்லாய், சாசனம், கொம்பன், அப்பாவும் அம்மாவும் போன்ற சிறுகதைத் தொகுதிகளும் வெளிவந்துள்ளன.

முனைவர் க. இராமஜெயம்
=======================
உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர். அறிவொளி இயக்க காலங்களில் நாடக நடிகர் பாடகர் ஒருங்கிணைப்பாளர் என பல அவதாரமெடுத்தவர். சிறந்த கவிஞர். ஹைக்கூ, சென்ரியூ, குறுங்கவிதைகள் என பல வடிவங்களில் மின்னுபவர். இவரது ஹைக்கூ கவிதைகள் ஆங்கிலம் தெலுங்கு கன்னடம் இந்தி உருது போன்ற இந்திய மொழிகளிலிலும் ஜப்பானிய, ஆப்ரிக்க, சீன அரேபிய போன்ற அயல்நாட்டு மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டு எல்லா மொழி இதழ்களிலும் வெளிவந்துள்ளன. ஆப்பிரிக்க மற்றும் ஜப்பானிய ஹைக்கூ அமைப்புகள் இவருக்கு விருதுகள் வழங்கி கௌரவித்துள்ளன. வேலூர் இளையவன் என்ற புனைப்பெயரில் முக நூலில் தொடர்ந்து இயங்கி வருபவர். பத்துக்கும் மேற்பட்ட கவிதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளார்.

இவரின், கவிஞர் கந்தர்வன் படைப்புகள் மீதான ஆய்நூல்தான் “கந்தர்வன் படைப்புகளில் வாழ்வியல் சிந்தனைகள் “முற்போக்கு இலக்கியப் படைப்பாளியான கந்தர்வன் தனது படைப்புகள் மூலமாக மனித வாழ்க்கையை, வாழ்வியல் சிந்தனைகளை, மனித உறவுகளை, வாழ்க்கை போராட்டங்களை, எவ்வாறு சமூக கண்ணோட்டத்தோடு உற்று நோக்கி வெளிப்படுத்தியுள்ளார் என்பதைக் குறித்தான ஆய்வு நூல் இது.

பொதுவாக ஆய்வு நூல்களை வாசிக்கும்போது பள்ளி கட்டுரைகளை வாசிப்பது போன்ற உணர்வுகளை ஏற்படுத்திவிடும். அயர்ச்சியை உண்டாக்கிவிடும். சில படைப்புகளை மாத்திரமே முன்னிறுத்தி நூல் முழுவதும் அலசியிருப்பார்கள். ஆனால் முனைவர் க. இராமஜெயம் சுமார் 75 க்கும் மேற்பட்ட துணை நூல்களை
துணைகொண்டு 250 பக்கங்களில் முன்னுரை முடிவுரை நீங்கலாக ஐந்து தலைப்புகளில் தனது ஆய்வை முன்வைத்துள்ளார்.

இப்புத்தகத்தை வாசிக்க சுமார் 100 புத்தகங்களை வாசித்த திருப்தி ஏற்படுகிறது. தெவிட்டாத நடை. திரும்ப திரும்ப கூறல் இல்லை. சரியான இடங்களில் சரியான ஒப்புமை. இவர் கீழ்கண்ட தலைப்புகளில் கந்தர்வன் படைப்புகளை ஆராய்ந்துள்ளார்.

1.கந்தர்வன் காலத்திய இலக்கிய போக்குகள்.
2.கந்தர்வன் கவிதையில் வாழ்வியல் சிந்தனைகள்.
3. கந்தர்வன் கதைகளில் வாழ்வியல் சிந்தனைகள்
4. கந்தர்வன் படைப்புகளில் பாத்திரப் படைப்பு
5. கந்தர்வன் படைப்புகளில் பொதுமை நோக்கு.

முதல் தலைப்பு கந்தர்வன் காலத்து இலக்கியப் போக்குகள் பற்றியது. குறிப்பாக 70 களுக்குப் பிறகு தமிழிலக்கியம் பரப்பில் ஆதிக்கம் செலுத்திய இஸங்களைப் பற்றி எழுதுகிறார். இஸம் என்றால் என்ன ? இஸம் தோன்றிய வரலாறு, சர்ரியலிசம், அமைப்பதில் வாதம், நவீனத்துவம், இருத்தலிய வாதம் பின் நவீனத்துவம் போன்றவற்றை விளக்கி விட்டு, தலித்தியம், தலித் இலக்கியம், அது ஏற்படுத்திய தாக்கங்கள், பெண்ணியம் பெண்ணிய இலக்கியங்கள் அது ஏற்படுத்திய தாக்கங்கள், முற்போக்கு இலக்கியங்கள் அது ஏற்படுத்திய தாக்கங்கள் குறித்து பதிவு செய்துள்ளதை வாசிக்க இவ்வளவு தகவல்களை எப்படி சேகரித்தார் என்று பிரமிப்பை ஏற்படுத்துகிறது.

இரண்டாவது கந்தர்வனின் கவிதைகள் குறித்தானது.
பாண்டவர் ஆண்டபோதும்
பசிதான்
பாபர் ஆண்டபோதும்
பசிதான்
…………………
………………….
×××××
நாங்கள் நாற்றுநட்டு
பூமிக்கு சட்டைபோடுகிறோம்
ஆனால்
பூமி என்னவோ
வரப்பில் குடையோடு நின்று
விரட்டும் ஆளுக்கே
விசுவாசமாயிருக்கிறது.
×××××
கோபம் என்பது
யாருக்கு வந்தது
மீசை என்பது
பேருக்கு இருந்தது
×××××
ஒரு புதிய வீடு
கட்டிமுடிக்கையில்
ஒரு பெண்ணுக்கு
புதிய சிறை தயாராகிறது
×××××
நாளும் கிழமையும்
நலிந்தோர்க்கில்லை.
ஞாயிற்றுக்கிழமையும்
பெண்களுக்கில்லை.

சமூக அவலங்களை, துயரங்களை, அவர்களுக்கான விடியல்களை கந்தர்வன் தனது கவிதைகளில் பயன்படுத்திய விதம் குறித்து முனைவர் க. இராமஜெயம் மிகுந்த பொறுப்புடன் பல்வேறு இலக்கிய சான்றுகளுடன் வெளிப்படுத்தியிருப்பதை வாசிக்கும் போது மெய்சிலிர்க்கிறது. நூற்றுக்கும் மேற்பட்ட கவிதைகளை எடுத்தாண்டுள்ளார். முன்றாவது கதைகளைப் பற்றியது. சனிப்பினம், காடு, தராசு, கொம்பன், வேண்டுதல், கிரகச்சாரம் உள்ளிட்ட 60 க்கும் மேற்பட்ட சிறுகதைகளை அக்காலத்திய போக்குகளுடன் ஒப்புமைப் படுத்தி கந்தர்வனின் ஆளுமையை பறைசாற்றுகிறார். குடும்பம், உறவு முறை,  திருமணம், சடங்குகள், சாதியப் போராட்டங்கள், மதவாத சிக்கல்கள், வன்முறைகள் போன்ற வாழ்வின் சகல பகுதிகளை தொட்டுப்பேசுவதை மேற்கோளாக காட்டியிருப்பது கந்தர்வன் மீதான பிம்பத்தை மேலும் கெட்டியாக்குகிறது.

நான்காவது பாத்திரப் படைப்பு. கந்தர்வன் கவிதையிலும் கதையிலும் கையாண்ட மொழி நடை, உத்தி, உருவம், உவமை, தொன்மம், போன்றவற்றை அலசுவதோடு குடும்ப பாத்திரங்கள், மனித நேயப் பாத்திரங்கள், நட்புப் பாத்திரங்கள், இலக்கியப் பாத்திரங்கள், பண்பாட்டுப் பாத்திரங்கள், அதிகாரப் பாத்திரங்கள் என பல்வேறு பாத்திரப் படைப்பு முறைகளை கந்தர்வன் தனது கதைகளில் எவ்வாறு பயன்படுத்தியிருக்கிறார் என்பதை முனைவர் க. இராமஜெயம் துல்லியமாக ஆய்வுசெய்து வெளிப்படுத்தியுள்ளார்.

ஐந்தாவது கந்தர்வனின் பொதுமை நோக்கு பற்றியது. இலக்கிய வடிவம் எதுவாயினும் உயரிய மாண்பான மனித நேயத்தைத்தான் கந்தர்வன் வலியுறுத்துவதாக முனைவர் கூறுகிறார். “கந்தர்வன் தனது படைப்புகளில் மனித வாழ்வின் கூறுகளை வெளிப்படுத்தும் மொழி நடையாக எளிய பாசாங்கற்ற நடையையே கையாண்டுள்ளார்.

கந்தர்வனின் படைப்புகளில் அடிநாதமாய் பொதுமை சிந்தனையோட்டத்தையே கொண்டுள்ளது. தான் நம்பிக்கை கொண்டிருந்த பொதுவுடமை சித்தாந்தமே மனித வாழ்வை மேம்படுத்தும் என்கிற கருத்துக்கு வலு சேர்க்கும் விதமாகவே அவரது படைப்புகள் அமைந்திருக்கின்றன. ” முனைவர் க. இராமஜெயம் அவர்கள் ஆய்வின் முடிவாக மேற்கண்டவற்றை கூறுகிறார்.

விமர்சகர்ளுக்கும், ஆய்வாளர்களுக்கும், திறனாய்வாளர்களுக்கும் பெரிதும் பயன்படக்கூடிய நூல். பட்ட ஆய்வு மேற்கொள்பவர்களுக்கு சிறந்த வழிகாட்டியாய் இந்நூல் திகழும். கண்ணை உறுத்தாத எழுத்துக்களில் சிறந்த தாள்களில் நல்லமுறையில் அச்சிட்டு வெளியிட்டிருக்கும் அன்பு நிலையம் பதிப்பகத்தாருக்கு வாழ்த்துக்கள்.

நூலின் பெயர் : கந்தர்வன் படைப்புகளில் வாழ்வியல் சிந்தனைகள்.
ஆசிரியர் : முனைவர் க. இராமஜெயம்
பதிப்பகம் ; அன்பு நிலையம்.வேலூர்
விலை : ரூ   250/