Prannoy Roy Conversation with Gopalakrishna Gandhi about the early life of Mahatma Gandhi in tamil translated by T.Chandraguru மகாத்மா காந்தியின் ஆரம்பகால வாழ்க்கை - கோபாலகிருஷ்ண காந்தியுடன் உரையாடல் - பிரணாய் ராய் தமிழில் தா.சந்திரகுரு

மகாத்மா காந்தியின் ஆரம்பகால வாழ்க்கை – கோபாலகிருஷ்ண காந்தியுடன் உரையாடல் | பிரணாய் ராய்



கோபாலகிருஷ்ண காந்தி தொகுத்துள்ள ‘ரெஸ்ட்லெஸ் ஆஸ் மெர்குரி’ என்ற புத்தகம் குறித்து அவருடன் என்டிடிவியின் பிரணாய் ராய் கலந்துரையாடினார். அந்தப் புத்தகத்தில் தன்னுடைய தாத்தா மகாத்மா காந்தியின் குணநலன்கள் குறித்து குறிப்பாக காந்தியின் நேர்மை குறித்த நுண்ணிய பார்வையை கோபாலகிருஷ்ண காந்தி வழங்கியிருக்கிறார். பிராணாய் ராய் நடத்திய நேர்காணலின் எழுத்தாக்கம் இங்கே தரப்படுகிறது.

Prannoy Roy Conversation with Gopalakrishna Gandhi about the early life of Mahatma Gandhi in tamil translated by  T.Chandraguru மகாத்மா காந்தியின் ஆரம்பகால வாழ்க்கை - கோபாலகிருஷ்ண காந்தியுடன் உரையாடல் - பிரணாய் ராய் தமிழில் தா.சந்திரகுரு

கோபால் காந்தி, எங்களுடன் இணைந்தமைக்கு மிக்க நன்றி. சமீபத்தில் நீங்கள் எழுதியுள்ள ‘பாதரசம் போன்று ஓய்வறியாது’ (ரெஸ்ட்லெஸ் ஆஸ் மெர்குரி) என்ற புத்தகத்தை இப்போதுதான் படித்து முடித்திருக்கிறேன். அதை நான் மிகவும் ரசித்தேன். உண்மையில் அதிலிருந்து ஏராளமாகக் கற்றுக் கொண்டிருக்கிறேன். அந்தப் புத்தகம் புதிய தகவல்களுடன் வந்திருக்கிறது. வாசிக்கின்ற ஒருவருக்கு புதிய கருத்துகளைத் தருகின்ற அந்தப் புத்தகம் காந்தியின் குணநலன்கள் குறித்து குறிப்பாக அவரது நேர்மை குறித்த பார்வையைத் தன்னிடத்தே கொண்டுள்ளது. இதுவரையிலும் வாழ்ந்துள்ள மிகப் பெரிய ஆளுமை என்பதாகவோ, தான் ஒருபோதும் தவறுகளே செய்ததில்லை என்றோ தன்னுடைய வார்த்தைகளில் காந்தி தன்னைப் பற்றி ஒருபோதும் கூறிக் கொண்டதே இல்லை. அவர் மிகவும் நேர்மையுடன் தனது தவறுகளை ஏற்றுக் கொண்டே எழுதி வந்திருக்கிறார். உண்மையில் அது மிகவும் குறிப்பிடத்தக்க பண்பாகும்.

Prannoy Roy Conversation with Gopalakrishna Gandhi about the early life of Mahatma Gandhi in tamil translated by  T.Chandraguru மகாத்மா காந்தியின் ஆரம்பகால வாழ்க்கை - கோபாலகிருஷ்ண காந்தியுடன் உரையாடல் - பிரணாய் ராய் தமிழில் தா.சந்திரகுரு

மிகவும் சரிதான். அவரிடமிருந்த நேர்மை, மிகவும் வெளிப்படையாக தன்னைக் குறித்த அவர் எழுதியுள்ள எழுத்துகள் போன்றவையே அவருடைய வாழ்க்கை, வார்த்தைகள், சுயசரிதை மற்றும் பிற சுயசரிதைகளுக்குள் இருக்கிறது என்று கருதுகிறேன். அவர் மிகுந்த நேர்மையுடன் இருந்தார். நேர்மைக்கான மேற்கோள்களைக் கொண்டிருக்கும் புத்தகத்தில் தான் இடம் பெற வேண்டும் என்ற காரணத்திற்காக அவர் அவ்வாறு இருக்கவில்லை. ஆனாலும் அவர் அவ்வாறாகவே இருந்தார்.

ஆமாம். அவர் கிடைக்கப் போகும் பலன்களுக்காக எதையும் செய்யாதவராக முற்றிலும் நேர்மையுடனே இருந்தார். அதிலிருந்து நாம் அனைவரும் கற்றுக் கொள்வதற்கு ஏராளம் உள்ளது. ‘ரெஸ்ட்லெஸ் ஆஸ் மெர்குரி’ என்ற இந்தப் புத்தகம் அவருடைய ஆரம்பகால வாழ்க்கை, முதல் நாற்பது ஆண்டுகால வாழ்க்கை பற்றி இருக்கிறது. இதுவரையிலும் அந்தக் குறிப்பிட்ட காலகட்டத்தைப் பற்றி அதிகம் அறியப்பட்டிருக்கவில்லை என்றாலும் அதுதான் அவர் உருவாக்கப்பட்ட காலம் – உண்மையில் காந்தி உருவான காலம். சரிதானே?

இந்தப் புத்தகம் தன்னுடைய நாற்பத்தைந்து வயது வரையிலும் தன்னை அவர் கண்டறிந்து கொண்ட காலம் குறித்ததாக – தன்னுடைய பாத்திரம், திறமைகள், திறன்கள், குறைபாடுகள், தோல்விகள் ஆகியவற்றைத் தனது வாழ்வில் கண்டறிந்து கொண்ட அவரது ஆரம்பகாலத்தைப் பற்றியதாக – அமைந்திருக்கிறது. தன்னுடைய தொண்ணூறு வயதுகளின் பிற்பகுதி வரை வாழ்ந்து வந்த காந்தியின் ஒரே சகோதரி தனது தம்பி மோகன்தாஸின் ஆரம்பகாலம் குறித்து குஜராத்தி மொழியில் ‘பாதரசத்தைப் போன்று ஓய்வறியாது உருண்டோடிக் கொண்டிருந்தவர்’ என்று குறிப்பிட்டிருந்த வார்த்தைகளிலிருந்தே இந்தப் புத்தகத்திற்கான ‘ரெஸ்ட்லெஸ் ஆஸ் மெர்குரி’ என்ற தலைப்பு பெறப்பட்டுள்ளது. அது மிகவும் சரியானதுதான். அவர் அப்படித்தான் இருந்தார். எப்போதும் துருதுருப்புடன் தன்னுடைய காலத்தில் ஏதாவது செய்ய வேண்டும் என்ற விருப்பத்துடனே அவர் இருந்து வந்தார். தான் இருந்த சூழ்நிலைகளில் எப்போதும் ஏதாவது செய்து கொண்டே இருக்க விரும்புவராகவே இருந்து வந்ததால் ‘ரெஸ்ட்லெஸ் ஆஸ் மெர்குரி’ என்று காந்தியின் சகோதரி அளித்திருந்த அந்த விளக்கம் மிகவும் பொருத்தமுடையதாகவே இருக்கிறது.

அந்தப் புத்தகத்திற்குள் செல்வதற்கு முன்பாக உங்களிடமிருந்து ஒரு கருத்தை அறிந்து கொள்ள விரும்புகிறேன். இந்தப் புத்தகத்தை எழுதுவதற்கான உத்வேகம் உங்களிடம் எந்த அளவிற்கு இருந்தது? இதை ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக எழுத ஆரம்பித்த நீங்கள் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக மிகவும் கடினமாக உழைத்து வந்திருக்கிறீர்கள் என்பதை நான் அறிவேன். இந்தப் புத்தகத்தை எழுதுவதற்காக உங்களிடம் இருந்த உந்துதல் எது?

தற்செயலான உரையாடல் ஒன்றிலிருந்தே எனக்கு இந்த புத்தகத்தை எழுதுவதற்கான உந்துதல் கிடைத்தது. அவர் ஒரு முழுமையான மனிதர், இந்தியாவை மாற்றுவதற்குத் தயாராக கிட்டத்தட்ட முழுமையானவராகப் பிறந்த புனிதர் என்பது போன்ற புராண பாத்திர சித்தரிப்புகளில் காந்தி தொலைந்து போயிருக்கிறார் என்பதாக என்னிடம் இருந்து வந்த உணர்வுடன் ஒத்திசைந்து போவதாகவே அந்த உந்துதல் இருந்தது.

அனைத்தையும் மாற்றியமைக்கப் போகின்றவர், மிகப் பெரிய காரியங்களைச் செய்யப் போகின்றவர் என்ற பிம்பத்திற்கு நேர்மாறாக இப்போது அவரை மற்றொரு முனையில் இருப்பவர்கள் செய்கின்ற சித்தரிப்பு மிகவும் வெளிப்படையாக, சரியான விமர்சனமாக இருக்கிறது என்றாலும் காந்தியை துருவ எதிர் போட்டிகளுக்குள் இருந்தவராக அவர்கள் சித்தரிப்பதை நான் விரும்பவில்லை.

மிகவும் எளிமையான, சாதாரண சூழ்நிலை என்றாலும் சில அசாதாரண வாய்ப்புகளுடனே காந்தி பிறந்தார். தன்னுடைய மனசாட்சியுடன், தன்னிடமிருந்த லட்சியங்களால் தன்னைக் குறித்து அவருக்குள் இருந்த மோதல், தன்னிடம் உள்ளதைக் கொண்டு திருப்தியடைந்து வாழ்க்கையில் ஏதாவது ஒன்றைச் செய்ய வேண்டும் என்று அவரிடமிருந்த விருப்பம் ஆகியவற்றின் வழியாக அந்த மகாத்மாவிற்குள் இருந்த மோகன்தாஸ் என்ற மனிதரைப் பார்க்கவே நான் விரும்பினேன். மேலும் அவர் பிறப்பதற்கு பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக நடந்த 1857ஆம் ஆண்டு சிப்பாய் கலகத்திற்குப் பிறகான காலத்தில் அவரை வைத்துக் காண விரும்பினேன். அந்தக் கலகம் இந்தியாவின் குறிப்பாக சுதேச இந்தியாவின் பெருமைக்கு உண்மையான காரணியாக இருந்தது. அவரது தந்தையைப் பொறுத்தவரை பிரிட்டிஷ் அரசாங்கம் தங்களுடைய சுதேச அரசை அடிபணிய வைத்ததை மனதார ஏற்றுக் கொள்வது மிகவும் கடினமான காரியமாகவே இருந்தது. அந்தப் பதற்ற நிலையில் பிறந்த காந்தி அவ்வாறான பதட்டங்களுக்கிடையிலேயே வளர்ந்தார். தேசத்தின் தந்தை என்று அழைக்கப்படவிருக்கும் ஒருவரின் தந்தையாக மாறியிருக்காவிட்டாலும் ஏதோ ஒருவராக ஆகியிருக்க கூடிய அந்த அசாதாரணமான மனிதனின் மகன் மோகன்தாஸ் கரம்சந்த் என்று அவரைக் காட்டவே நான் விரும்பினேன்.

காந்தி குறித்து இரண்டு மாறுபட்ட கருத்துகள் இருப்பதை நான் ஒருபோதும் பார்த்ததே இல்லை. என்னைப் பொறுத்தவரை அவர் கடந்த இருநூறு ஆண்டுகளில் இந்த உலகம் கண்டிருக்கும் மிகப் பெரிய தலைவர் ஆவார். அவருடைய ஆரம்பகால வாழ்க்கையில் சிலர் என்னவிதமான பாதிப்புகளை அவரிடம் ஏற்படுத்தினார்கள், காந்தியை அவர்கள் எவ்வாறு மாற்றினார்கள் என்பதை உங்களிடமிருந்து கேட்க விரும்புகிறேன். முதலில் அவரது தந்தையிடமிருந்து ஆரம்பிக்கலாம் என்று நினைக்கிறேன்.

ஆமாம் பிரணாய், அதுதான் இந்த உரையாடலைத் தொடங்குவதற்கான நல்ல இடம். ஏனென்றால் காந்தி மீது அவருடைய தந்தை அசாதாரணமான தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தார். இந்தப் புத்தகத்தில் உள்ள தன்னுடைய வெவ்வேறு எழுத்துகளில் தனது தந்தையைப் பற்றி காந்தி குறிப்பிட்டிருக்கிறார். ஆளுநரின் வருகைக்குத் தயாராவதற்காக கடினமான, வலுவான பூட்ஸ்களை அணிந்து கொள்வது தனது தந்தைக்கு மிகவும் கடினமான காரியமாக இருந்தது என்று தனது தந்தையைப் பற்றி காந்தி சித்தரிக்கிறார். இந்திய வகை மென்மையான செருப்புகளுக்கு மட்டுமே பழகியிருந்த தன்னுடைய தந்தைக்கு ஆளுநருக்கு மரியாதை செலுத்துவதற்காக அதுபோன்று கடினமான பூட்ஸ்களை அணிந்து கொள்வது சித்திரவதை தருவதாகவே இருந்தது என்கிறார். தன்னுடைய தந்தையை மிகவும் மனஉறுதி கொண்ட மனிதர் என்றும் அவர் குறிப்பிடுகிறார். ராஜ்காட்டின் ஆட்சியாளருடன் மிகவும் துடுக்குத்தனத்துடன் நடந்து கொண்ட ஆங்கிலேய அதிகாரி ஒருவருக்கு காந்தியின் தந்தை எதிர்ப்பு தெரிவித்தார். தனக்கு அதுகுறித்து எந்தக் கவலையுமில்லை என்று அந்த ஆட்சியாளரே கூறிய போதிலும், காந்தியின் தந்தை – கரம்சந்த் காந்தி அது தவறு என்பதை மீண்டும் வலியுறுத்தினார். ஆட்சியாளரிடம் அதிகாரி ஒருவர் இழிவாக நடந்து கொள்வது தன்னால் பொறுத்துக் கொள்ளவே முடியாத காரியம் என்றார் கரம்சந்த்.

Prannoy Roy Conversation with Gopalakrishna Gandhi about the early life of Mahatma Gandhi in tamil translated by  T.Chandraguru மகாத்மா காந்தியின் ஆரம்பகால வாழ்க்கை - கோபாலகிருஷ்ண காந்தியுடன் உரையாடல் - பிரணாய் ராய் தமிழில் தா.சந்திரகுரு
கரம்சந்த் காந்தி

 

ராஜ்காட்டின் ஆட்சியாளர் அந்த ஆங்கிலேயருக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றாலும், காந்தியின் தந்தை தவறாக நடந்து கொண்ட அந்த ஆங்கிலேயருக்கு எதிராகவே பேசினார். அது மிகவும் கடினமான காரியம். அவ்வாறு அந்தக் காலகட்டத்தில் செய்வதற்கு உண்மையில் மிகவும் தைரியம் வேண்டும். அந்த ஆங்கிலேயரிடம் அவ்வாறு வெளிப்படையாக நடந்து கொண்டதால் ஏதேனும் விளைவுகள் ஏற்பட்டதா? காந்திக்கு அவரது தந்தையிடமிருந்து கிடைத்த அந்த தைரியம் அவ்வாறு கிடைத்த பல பாடங்களில் ஒன்றாக இருந்தது – இல்லையா?

காந்தியின் தந்தை தண்டிக்கப்பட்டு தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டார். திவான் தடுத்து நிறுத்தி வைத்த போதிலும் அவருடைய தந்தை அதைப் பொருட்படுத்தவே இல்லை. இவ்வாறாக ஒத்துழையாமை குறித்த பாடத்தை காந்தி தன்னுடைய தந்தையிடமிருந்தே பெற்றுக் கொண்டிருந்தார். தனது தந்தையிடமிருந்து காந்தி பெற்றுக் கொண்ட மற்றொரு பாடமும் இருந்தது – அது நேர்மை குறித்ததாக இருந்தது. காந்தியின் தந்தை தன்னுடைய குடும்பத்திற்கென்று மிகக் குறைவான பணத்தையே விட்டுச் சென்றிருந்தார். எந்த செல்வத்தையும் அவர் குவித்துச் செல்லவில்லை. குவிப்பு என்பது இங்கே தவறான சொல் – காந்தியின் குடும்பத்திற்கென்று மிகக் குறைவான சொத்து மட்டுமே இருந்தது. கடவுளை உணர்வதன் மூலம் வாழ்க்கையின் உயர்ந்த நோக்கத்தை அடைவது குறித்து காந்தியிடம் இருந்து வந்த உணர்வு அவரது தந்தையிடமிருந்து அவர் மீது ஏற்பட்ட மற்றொரு தாக்கமாகவே இருந்தது.

‘என்னுடைய தந்தையைச் சந்திக்க வந்தவர்கள் முஸ்லீம்கள், பார்சிகள், ஜைனர்கள் என வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தனர்’ என்று தனது தந்தையைப் பற்றி காந்தி எழுதியிருக்கிறார். இந்தியா பல நம்பிக்கை மரபுகளுக்கான வீடாக இருக்கிறது என்ற உணர்வை காந்தி தன்னுடைய தந்தையிடமிருந்தே பெற்றுக் கொண்டிருந்தார். சிக்கனமாக இருப்பது குறித்த உணர்வை அவர் தனது தாயிடமிருந்து பெற்றிருந்தார். இவையெல்லாம் அவர் மீது தாக்கத்தை ஏற்படுத்தியவர்கள் குறித்த தொடக்கப் புள்ளிகளாகும். இந்தக் கேள்வியை நீங்கள் கேட்டதில் நான் உண்மையில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ஏனென்றால் பெரும்பாலும் காந்தியை மற்றவர்களைப் பாதித்த ஒருவராக, இரும்பைத் தங்கமாக மாற்றுகின்ற மாயக் கல்லாக அவர் தொட்டது அனைத்தும் தங்கமாக மாறியது என்றே நாம் பார்த்து வருகிறோம். ஆனால் மக்களைப் பாதித்தவராக இல்லாமல், உண்மையில் மக்களால் பாதிக்கப்பட்டவராகவே காந்தி இருந்திருக்கிறார்.

மிகச் சரியாகச் சொன்னீர்கள். இந்த புத்தகத்தில் அது மிகவும் தெளிவாக வந்திருக்கிறது. காந்தியின் சிறந்த அல்லது மோசமான பள்ளி நண்பர்கள் உட்பட அவரது குழந்தைப் பருவ அனுபவங்களைப் பற்றி அறிந்து கொள்ள விரும்புகிறேன். காந்தி மிகவும் கொந்தளிப்பான பள்ளி வாழ்க்கையை கடந்து வந்திருப்பதை இந்தப் புத்தகம் தெளிவுபடுத்தியிருக்கிறது.

ஆம், நீங்கள் சொல்வது சரிதான். மோகன்தாஸுக்கு பள்ளி நண்பர்கள் என்று அதிகம் பேர் இருக்கவில்லை. அந்த சில நண்பர்களில் ஒருவராக இருந்த ஷேக் மெஹ்தாப் ‘நீ மிகவும் பலவீனமாக இருக்கிறாய். என்னைப் பார். நான் எந்த அளவிற்கு நன்றாக ஓடுகிறேன், குதிக்கிறேன், போல் வால்ட் செய்கிறேன். மிகவும் வலிமையுடன் இருக்கிறேன். ஏனென்றால் நான் இறைச்சி உண்கிறேன். ஆனால் நீயோ அவ்வாறு இல்லை. மெலிந்த தேகத்துடன் இருக்கிறாய்’ என்று காந்தியிடம் – இளம் மோகன்தாஸிடம் கூறினார். சைவ குடும்பத்திலிருந்து வந்த மோகன்தாஸிடம் அது ஏதோவொரு தாக்கத்தை அப்போது ஏற்படுத்தியது. விளையாட்டுத்தனமாக அவர் இறைச்சி உண்ண முயன்றார். ஆனாலும் அது மிக நீண்ட காலத்திற்கு நீடிக்கவில்லை. ஓர் இளைஞனின் சிறந்த வாழ்க்கை என்று தான் கருதியவற்றை காந்திக்கு ஷேக் மெஹ்தாப் அறிமுகப்படுத்தி வைத்தார். ஆனால் அவை எவையுமே காந்தியுடன் முழுமையாக இறுதிவரை தங்கவில்லை.

ஷேக் மெஹ்தாப் தனக்கு செய்த முக்கியமான, மிகவும் தவறான, கண்டிப்பாக ஆட்சேபிக்கத்தக்கது என்று காந்தி உணர்ந்த விஷயம் – காந்திக்கும் அவரது இளம் மனைவி கஸ்தூரிபாவுக்கும் இடையிலே வந்தது. கஸ்தூரிபாவும் மோகன்தாஸும் பதின்மூன்றாவது வயதில் திருமணம் செய்து கொண்டனர். ‘நான் இருட்டு குறித்து மிகவும் பயந்தவன். ஊர்ந்து நெளிந்து செல்லும் விலங்குகள் குறித்து எனக்குள் மிகுந்த அச்சம் இருந்தது. ஆனால் கஸ்தூரிபா அவ்வாறாக இருக்கவில்லை. அவர் எதற்குமே பயப்பட மாட்டார். இருட்டுக்குள் பயப்படாமல் செல்வார், பாம்புகள் அல்லது எதிர்கொள்ளக் கூடிய எவை குறித்தும் ஒருபோதும் அவர் பயந்ததே இல்லை’ என்று மோகன்தாஸ் நீங்கள் குறிப்பிட்ட அந்த நேர்மையுடன், அப்பட்டமான சுயவிமர்சனத்துடன் கூறுகிறார்.

Prannoy Roy Conversation with Gopalakrishna Gandhi about the early life of Mahatma Gandhi in tamil translated by  T.Chandraguru மகாத்மா காந்தியின் ஆரம்பகால வாழ்க்கை - கோபாலகிருஷ்ண காந்தியுடன் உரையாடல் - பிரணாய் ராய் தமிழில் தா.சந்திரகுரு
காந்தி – ஷேக் மெஹ்தாப்

 

ஆக தனது மனைவி கஸ்தூரிபா தன்னை விட வலிமையானவர், தைரியமானவர் என்று காந்தி வெளிப்படையாகக் கூறுகிறார். ஷேக் மெஹ்தாப் அவர்களுக்கு இடையே எப்படி வந்தார்? தனது மனைவியைப் பற்றி காந்தி என்ன சொன்னார்?

‘நான் அவரைப் போல இல்லை. அவர் என்னை விட மேலானவராக இருந்தார். ஆனாலும் ஷேக் மெஹ்தாப் என்னுள் சந்தேகத்தின் விதைகளை விதைத்தார்’ என்று கூறிய காந்தி ‘அப்போது நான் செய்த எல்லா விஷயங்களுக்குள்ளும் செல்லப் போவதில்லை. பத்து ஆண்டுகளாக நான் ஷேக் மெஹ்தாப்பின் கட்டைவிரல் அசைவிலேயே இருந்து வந்தேன்’ என்கிறார். ஷேக் மெஹ்தாப்பைப் பற்றி இரண்டு நிலைகளில் – ஒன்று காந்தியின் பள்ளி நண்பராக இருந்தபோது. இன்னொன்று தென்னாப்பிரிக்காவிற்கு வந்த பிறகு என்று நாம் இப்போது பேசுவது முக்கியம். தென்னாப்பிரிக்காவிற்கு வந்து மோகன்தாஸின் சக ஊழியரான ஷேக் மெஹ்தாப்பை தனது வாழ்க்கையிலிருந்து வெளியேறி விடுமாறு மோகன்தாஸ் கேட்டுக் கொண்டதற்கு சரியான காரணம் இருக்கிறது. கிட்டத்தட்ட ஷேக் மெஹ்தாப்பிற்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில் காந்தி ‘பொதுத்தளத்தில் இருந்து மிகப் பெரிய நோக்கத்திற்காக உழைக்கின்ற, சமூகத்துடன் நட்புறவு கொள்வதற்கான ஆர்வமுள்ள ஒருவருக்கு தனிப்பட்ட நட்பு என்பது சரியானதாக இருக்காது என்பதை ஷேக் மெஹ்தாப் எனக்குக் கற்றுக் கொடுத்தார்…’ என்று கூறியுள்ளார். காந்தி மீது ஒருவிதத்தில் எதிர்மறையான வழியிலும் ஷேக் மெஹ்தாப் தன்னுடைய பாதிப்பை ஏற்படுத்தியிருந்தார். தன்னுடைய பாதிப்பை மிக வலுவாக அவர் காந்தி மீது ஏற்படுத்தியிருந்தார். தன்னைக் காட்டிலும் அதிகமாக எண்ணிக்கையில் மிகப் பெரிய நண்பர்கள் கொண்ட வட்டத்தை காந்தி சென்றடையும் வழியை மெஹ்தாப் ஏற்படுத்திக் கொடுத்திருந்தார்.

அது உண்மையில் காந்தியின் வலிமையைக் காட்டுவதாகவே இருந்தது. ‘இங்கே பார், எனக்கென்று வாழ்க்கையில் மிகப் பரந்த நோக்கம் இருக்கிறது. உன்னை நான் விரும்பினாலும் அல்லது விரும்பாவிட்டாலும் சரி… அதை நான் அடைய வேண்டுமென்றால் நீ என்னுடைய வாழ்க்கையிலிருந்து வெளியேறிட வேண்டும். எனக்கென்று பிரத்தியேகமாக, என்னுடைய பிரத்தியேக நண்பராகக் கூட உன்னால் இருக்க முடியாது’ என்று காந்தி கூறியவை மிகவும் வலிமையான வார்த்தைகள்.

ஆம், நீங்கள் சொல்வது முற்றிலும் சரி. கஸ்தூரிபா மிகமெதுவாக காந்தியின் நண்பராக, சக ஊழியராக மாறினார். திருமணத்தின் மூலம் தன்னுடைய மனைவியாக, தனது குழந்தைகளின் தாயாக இருப்பதைக் காட்டிலும் வாழ்க்கைத்துணையாக இருப்பவர் ஒரு தோழனாக, சகாவாக, நண்பனாக இருப்பது எவ்வளவு முக்கியம் என்பதை அவர்களுடைய திருமணத்தின் பரிணாமம் காட்டுகிறது. அவரது மூத்த மகன் ஹரிலால் காந்தி தென்னாப்பிரிக்காவில் அவருக்கு மிகவும் நெருங்கிய நண்பராக மாறிய மற்றொரு நபராக இருந்தார்.

Prannoy Roy Conversation with Gopalakrishna Gandhi about the early life of Mahatma Gandhi in tamil translated by  T.Chandraguru மகாத்மா காந்தியின் ஆரம்பகால வாழ்க்கை - கோபாலகிருஷ்ண காந்தியுடன் உரையாடல் - பிரணாய் ராய் தமிழில் தா.சந்திரகுரு

தந்தையைக் காட்டிலும் பத்தொன்பது வயதே குறைவாக இருந்த அந்த மகனுக்கு தன்னுடைய தந்தையைப் பிரமிப்புடன் பார்ப்பது என்பது முற்றிலும் வித்தியாசமாகத்தான் இருந்திருக்கும் என்பதால் ஹரிலாலைப் பொறுத்தவரை அவர் காந்தியை விமர்சனம் செய்யும் மகனாகவே இருந்து வந்தார். காந்தியைக் காட்டிலும் பத்தொன்பது வயது இளையவராக இருந்த ஹரிலால் தென்னாப்பிரிக்காவில் போராட்டம் தொடங்கியதும், அந்தப் போராட்டத்திற்கான காரணத்தின் மீது கொண்ட ஈர்ப்பு மற்றும் இந்திய சமூகம் அனுபவித்து வந்த அநீதிகளைப் புரிந்து கொண்டவராக இருந்தார். எனவேஎ அவர் காந்தி தலைமையேற்று வழிநடத்திய போராட்டத்தில் தன்னை முழுமையாக இணைத்துக் கொண்டார். அங்கிருந்த இந்திய சமூகத்தினரால் ஒரு தலைவராக ‘சோட்டா காந்தி’ என்றே அவர் அழைக்கப்பட்டு வந்தார்.

ஒரு வகையில் தனது மகன் ஹரிலாலை வியந்து பாராட்டினார் என்றாலும் போராட்டத்தில் ஈடுபட்ட காரணத்திற்காக தனது மகன் மீண்டும் மீண்டும் சிறைக்கு அனுப்பப்படுவதைக் கண்டு காந்தியின் மனம் உண்மையில் கஷ்டப்பட்டிருக்க வேண்டும்.

தனது மகனை ஒரு முன்மாதிரியாகவே பார்க்கத் தொடங்கிய காந்தி ‘தென்னாப்பிரிக்காவில் உள்ள ஒவ்வொரு இந்தியரும் ஹரிலாலைப் போல இருக்க வேண்டும் என்றே நான் விரும்புகிறேன்’ என்றார். சத்தியாகிரக இயக்கத்தின் போது ஹரிலால் மிகவும் கடுமையான கடுங்காவல் தண்டனையில் பலமுறை சிறைகளில் இருந்தார். தென்னாப்பிரிக்கச் சிறைகளில் கடுங்காவல் தண்டனை என்பது மிகவும் கடினமான உழைப்பைக் கோருவதாக இருந்தது. அதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அவரது தந்தை ஹரிலாலை வியந்து பாராட்டினார் என்று சொல்வது ஹரிலால் செய்த செயல்களைக் குறைத்து மதிப்பிடுகின்ற மிகச் சிறிய வார்த்தையாகவே இருக்கும். ஹரிலால் சிறைக்குள் சிரித்துக் கொண்டிருப்பதாகவும், தான் செய்த காரியங்கள் குறித்து மனக்கசப்பு எதுவுமில்லாமல் அவர் அங்கே மகிழ்ச்சியுடன் இருப்பதாகவும் சிறையில் அவரைப் பார்த்த சிலர் தன்னிடம் தெரிவித்ததாக காந்தி கூறியுள்ளார். காந்தியைப் பொறுத்தவரை ஹரிலால் மிகவும் நெருங்கிய நண்பராகவே இருந்தார். ஹரிலால் குறித்து கலகக்காரர் – துயரம் மிகுந்த கலகக்காரர் என்பதாக பிற்காலத்தில் நாம் கண்ட பிம்பத்திலிருந்து மிகவும் வித்தியாசமாகவே அவர் தென்னாப்பிரிக்காவில் இருந்தார்.

ஹரிலால் பல முறை சிறைக்குச் சென்றிருப்பது ஆச்சரியமளிப்பதாக இருக்கிறது. அவரது தந்தை காந்தி நீதிமன்றத்தில் அவருக்கு ஆதரவாக வழக்காடினார். காந்தியின் மனைவி கஸ்தூரிபாவும் சிறைக்குச் சென்றார். போராட்டத்தில் குறிப்பாக பெண்கள் இயக்கத்தில் முக்கிய பங்கைக் கொண்டிருந்த கஸ்தூரிபா பல தியாகங்களைச் செய்து சிறைக்குச் சென்று கடுங்காவல் தண்டனையைப் பெற்றார்.

உண்மையிலேயே அவர் தியாகம் செய்திருந்தார். தென்னாப்பிரிக்காவில் இந்தியத் திருமணங்கள் அங்கீகரிக்கப்பட மாட்டாது, கிறிஸ்தவ மரபுகளின்படி நடத்தப்படாத அல்லது தென்னாப்பிரிக்காவில் பதிவு செய்யப்படாத திருமணங்கள் அங்கீகரிக்கப்படாது என்று கேப் டவுன் நீதிமன்றத்தில் இருந்து தீர்ப்பு வெளியான போது தென்னாப்பிரிக்காவில் இருந்த இந்திய சமூகத்திடம் சலசலப்பு ஏற்பட்டது.

Prannoy Roy Conversation with Gopalakrishna Gandhi about the early life of Mahatma Gandhi in tamil translated by  T.Chandraguru மகாத்மா காந்தியின் ஆரம்பகால வாழ்க்கை - கோபாலகிருஷ்ண காந்தியுடன் உரையாடல் - பிரணாய் ராய் தமிழில் தா.சந்திரகுரு

கஸ்தூரிபா ‘இனிமேல் நான் உங்கள் சட்டப்பூர்வமான மனைவி அல்ல. நம்முடைய குழந்தைகள் சட்டப்பூர்வமான குழந்தைகளல்ல’ என்று தனது கணவரிடம் கூறினார். காந்தி ‘ஆம், அது சரி என்றால் நாம் மீண்டும் இந்தியாவிற்கே செல்லலாம்’ என்றார். ‘மீண்டும் இந்தியாவிற்குச் செல்வதற்காக நாம் இங்கே வரவில்லை. அவ்வாறு செல்வது கோழைத்தனமான காரியமாகவே இருக்கும்’ என்று சொன்ன கஸ்தூரிபா ‘இந்த விஷயத்தில் அந்த தீர்ப்பை எதிர்க்கப் போகிறேன். மற்றவர்கள் அதற்காகச் சிறைக்குச் செல்வார்கள் என்றால், நானும் சிறைக்குச் செல்வேன்’ என்றார். பதினாறு வயதான தனது இளைய மகன் ராம்தாஸ் உட்பட பிற பெண்களுடன் கஸ்தூரிபா சிறைக்குச் சென்றார். அங்கே அவருக்கு கடுங்காவல் தண்டனை தரப்பட்டு சக கைதிகளின் துணிகளைத் துவைக்கின்ற சலவை வேலை ஒதுக்கப்பட்டது. அவர் சிறைக்குள் அந்த வேலையைச் செய்து வந்தார்.

கஸ்தூரிபா காந்தியும் தனது நண்பர்கள், போராளிகளின் வட்டத்தை கொண்டவராக இருந்தார். அவருடைய பெண் தோழர்கள், போராளிகளில் சிலர் காந்தி குடும்பத்தின் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினர் – குறிப்பாக கஸ்தூரிபா காந்தி சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு…

கஸ்தூரிபா சிறையிலிருந்து வெளியே வந்த போது, ​​அவருடைய உடல்நிலை மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தது. ஆனால் சிறைக்குள் சகாக்களாக இருந்தவர்கள் நண்பர்களாகவும், உறவினர்கள் சகாக்களாகவும், நண்பர்களாகவும் மாறியிருந்தனர். தென்னாப்பிரிக்காவில் கஸ்தூரிபா மிகச் சிறந்த தமிழ் சுதந்திரப் போராளியான வள்ளியம்மையுடன் சிறையில் இருந்தார். சத்தியாக்கிரகியைக் காட்டிலும் மேலானவராக வள்ளியம்மை இருந்ததால் நான் அவரை சுதந்திரப் போராளி என்றே கூறுவேன்.

Prannoy Roy Conversation with Gopalakrishna Gandhi about the early life of Mahatma Gandhi in tamil translated by  T.Chandraguru மகாத்மா காந்தியின் ஆரம்பகால வாழ்க்கை - கோபாலகிருஷ்ண காந்தியுடன் உரையாடல் - பிரணாய் ராய் தமிழில் தா.சந்திரகுரு
கஸ்தூரிபா – வள்ளியம்மை

 

அவர்கள் இருவரும் இந்திய திருமணங்களைப் பற்றிய அந்த தீர்ப்பு குறித்த ஒரே காரணத்திற்காகவே தென்னாப்பிரிக்கச் சிறைக்குள் இருந்தனர். வள்ளியம்மை திருமணமாகாத தமிழ்ப் பெண். சிறையில் இருந்து வெளியே வந்த இரண்டு நாட்களில் அவர் இறந்து விட்டார். அவர் இறந்த நாள் 1914 பிப்ரவரி 22. முப்பதாண்டுகளுக்குப் பிறகு 1944 பிப்ரவரி 22 அன்று இந்தியாவில் இருந்த சிறையில் கஸ்தூரிபா இறந்து போன நாள் அது. ஆக இந்திய சமூகங்களின் மிகவும் புனிதமான திருமணம் என்ற அமைப்பின் கவுரவத்திற்காக வள்ளியம்மை என்ற தமிழ்ப் பெண்ணும், கஸ்தூரிபா என்ற குஜராத்தி இளம் பெண்ணும் தென்னாப்பிரிக்காவில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அவர்களுக்கென்று மோகன்தாஸால் கண்டறியப்பட்டிருந்த காரணத்திற்காகவே மற்றவர்களுடன் அவர்கள் சிறைக்குச் சென்றனர். வள்ளியம்மையின் இறுதிச் சடங்கில் மோகன்தாஸ் கலந்து கொண்டார். வள்ளியம்மை மிகவும் அசாதாரணமான பெண். அவர் ஒருவேளை இந்தியாவில் இருந்திருந்தால் இன்னும் பரவலாக அறியப்பட்டிருப்பார். ஆனால் அவர் தென்னாப்பிரிக்காவில் இருந்தார். நமது சுதந்திரம் எங்கிருந்து – மிக எளிய மனிதர்களின் தியாகங்களிலிருந்து – வந்தது என்பது பற்றி அறிவதற்குத் தேவைப்படுகின்ற மோகன்தாஸின் வாழ்க்கையின் அந்தப் பகுதியில் படிப்பறிவே இல்லாத வள்ளியம்மையும், உயர்படிப்பு படித்த பாரிஸ்டரான மோகன்தாஸும் ஒரே போராட்டத்தில் ஒன்றாக இணைந்திருந்தனர்.

அவருடன் தொடர்பு கொண்டவர்களாக, அவரிடமிருந்து கற்றுக் கொண்டவர்களாக, அவரால் ஈர்க்கப்பட்டவர்களாக ஏராளமான தென்னாப்பிரிக்கர்கள் – ஜூலு தலைவர்கள் இருந்ததை இந்தப் புத்தகம் தெளிவுபடுத்திக் காட்டுகிறது. சரிதானே?

முற்றிலும் சரி. மோகன்தாஸைப் பற்றி நாம் ஏற்றுக் கொள்ள வேண்டிய ஒன்று இருக்கிறது. காந்தி தன்னைப் பற்றி ஒரு சிறுவனாக நற்குணத்துடன் இருந்தாலும் அறிவார்ந்த பையனாக தான் இருக்கவில்லை என்று விவரிக்கிறார். நற்குணம் என்ற அந்த வார்த்தை தற்போது இருந்த இடம் தெரியாமல் போய் விட்டது. இப்போது யாரும் அந்த வார்த்தையை அடிக்கடி பயன்படுத்துவதில்லை. மோகன்தாஸிடம் இருந்த அந்த நற்குணம் தடைகள் எதுவுமின்றி மக்கள் அனைவரையும் கவர்ந்தது. அந்த நற்குணம் என்பது எது? உண்மையில் வெளிப்படையாக இருப்பது, தந்திரத்துடன் இல்லாமலிருப்பது, பேராசை கொண்ட செயல் தந்திரங்களைக் கையாளாமல் இருப்பது, விஷயங்களைச் சீர்செய்வது குறித்த விருப்பத்தின் நேர்மையான வெளிப்பாடு என்பதாகவே அது இருக்கிறது. அந்த தன்மை மற்றவர்களிடையே இருக்கின்ற நற்குணத்தையும் வெளிக் கொணர்ந்தது. அவை மோகன்தாஸ் மீது தாக்கத்தை ஏற்படுத்தின.

இந்த புத்தகத்தைப் படிக்கும் போது உலகளவில் பிரபலமடைவதற்கு முன்பாகவே அவரைப் பற்றி ஏதோவொன்று அனைவர் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது என்பது என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. காந்தியை மிகத் தெளிவாகவே பலரும் நேசித்தார்கள். அவர்கள் காந்தி செய்வதை நேசித்தார்கள். அவருடைய போராடும் முறையை நேசித்தார்கள்.

அது சரிதான். நேசம் என்ற சொற்றொடரை நீங்கள் பயன்படுத்தியது குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அவர்கள் அவரை நேசித்தார்கள். அவருக்குள் இருந்த நற்குணத்தை அவர்கள் நேசித்தார்கள். எந்தவொரு தனிப்பட்ட உந்துதலும் அவரிடம் இல்லாததை அவர்கள் கண்டு கொண்டதாகவே நான் நினைக்கிறேன். அது மிகவும் மோசமான ஒன்றைச் சரி செய்வதற்கான விருப்பமாகவே இருந்தது. அவர்கள் மோகன்தாஸிடம் நீங்கள் எங்களுடைய சகோதரர் என்றார்கள். தென்னாப்பிரிக்காவில் தன்னை ‘பாய்’ என்றே அனைவரும் அழைத்ததாக மோகன்தாஸ் கூறுகிறார். பாய் என்று அவர் அழைக்கப்பட்டது உண்மையில் அவருக்கு வழங்கப்பட்ட மிகப் பெரிய பாராட்டாகும். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவரை அழைத்ததைப் போன்று மகாத்மா அல்லது தேசத்தின் தந்தை என்று அழைக்கப்படுவதற்கு முன்பாகவே தென்னாப்பிரிக்காவில் பாய் என்று அவரை அழைத்துள்ளனர். அவர் ‘பாய்’ தான். அவரது காலத்தில் தென்னாப்பிரிக்காவில் தோழமை, சண்டையிலும் சமமானவர்களாக இருப்பது என்பது போன்ற நிலைமை இருந்தது. அங்கிருந்த மக்கள் அனைவரும் அவருக்குச் சமமானவர்களாக, சகாக்களாகவே இருந்து வந்தனர். மோகன்தாஸின் விளக்கங்களில் வெளிப்படுவதைப் போல, அவர்களுடைய வாழ்க்கை டைட்டான்களின் வாழ்க்கையாகவே இருந்தது. அதுமட்டுமே என்னால் பயன்படுத்தக்கூடிய ஒரே சொல்லாக உள்ளது.

அருமை. இந்தியர்கள் மட்டுமல்லாது, ஜூலு தலைவரின் செல்வாக்கும் இருந்தது, இல்லையா? தலைவர் பம்பதா – காந்தியின் வாழ்க்கையில் அவரின் தாக்கம் எவ்வாறு இருந்தது?

அதுதான் மிகச் சரியாக நான் ஆக விரும்பிய ஆளுமை. அவரது மனதின் ஒரு மூலையில் ஆப்பிரிக்கர்களுக்கான அடையாளம் குறித்த கேள்வி இருந்து வந்தது என்றாலும் அவருடைய அரசியல் திட்டத்தில் அது முதலிடத்தில் இருக்கவில்லை என்றே நான் கூறுவேன். இந்தியர்களின் மிகவும் நியாயமான, அரசியல் உரிமைகளுக்காகப் போராடுகின்ற மனிதர் என்று அவரைக் கூறிய வரலாற்றாசிரியர்கள் பலருக்கு அது மிகப் பெரிய பிரச்சனையாகவே இருந்தது. ஆப்பிரிக்கர்கள் மீதும் அநீதி இழைக்கப்பட்டு வந்த போதும் காந்தி ஆப்பிரிக்கர்களுக்காக வாதாடுபவராக மாறவில்லை என்பது உண்மையே. சற்று கற்பனை செய்து பாருங்கள் – அவர் அவ்வாறாக இருக்கவில்லை, ஆயினும் அவர் ஒருபோதும் சந்தித்திராத தலைவர் பம்பதா சில அவதானிப்புகளை மேற்கொள்வதற்கும், இன்றைக்கு மிகவும் முக்கியமாக இருக்கின்ற செயல்பாட்டில் அவர் மூழ்குவதற்கும் வாய்ப்பளிப்பவராகவே இருந்திருக்கிறார்.

Prannoy Roy Conversation with Gopalakrishna Gandhi about the early life of Mahatma Gandhi in tamil translated by  T.Chandraguru மகாத்மா காந்தியின் ஆரம்பகால வாழ்க்கை - கோபாலகிருஷ்ண காந்தியுடன் உரையாடல் - பிரணாய் ராய் தமிழில் தா.சந்திரகுரு
பம்பதா கிளர்ச்சி

 

பம்பதா கிளர்ச்சிக்குப் பின்னர் ஜூலுக்கள் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி மோகன்தாஸ் அளித்த மிகச் சிறிய விளக்கத்தை இங்கே கூற விரும்புகின்றேன். நியாயமற்ற முறையில் வாக்கெடுப்பு வரிக்கு உட்படுத்தப்பட்ட ஜூலுக்கள் தாக்குதலை நடத்தினார்கள். இரண்டு வெள்ளை அதிகாரிகள் அந்த தாக்குதலில் கொல்லப்பட்டனர். அதன் விளைவாக, பதிலடி கொடுக்கும் விதத்தில் அந்தக் கிளர்ச்சியை நசுக்க பிரிட்டிஷ் அதிகாரிகளால் மிகப் பெரிய இயக்கம் – ஆயுதமேந்திய இயக்கம் தொடங்கப்பட்டது. கொலையில் ஈடுபட்டதாகக் கருதப்பட்ட பன்னிரண்டு ஜூலுக்கள் பீரங்கி கொண்டு தாக்கப்பட்டனர். அவர்களில் ஒருவராக பம்பதாவும் இருந்தார்.

பிரிட்டிஷாரால் அவர்கள் ஒரு பீரங்கி முன்பாக நிறுத்தப்பட்டு துண்டு துண்டுகளாக வீசியெறியப்பட்டனர். அது எவ்வளவு மோசமான காட்டுமிராண்டித்தனம்? ஜூலு இயக்கத்தில் காந்திக்கு என்ன பங்கு இருந்தது?

ஜூலுக்களுக்கு எதிரான பயணத்தில் காந்தி பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் இந்தியப் பிரஜையாகவே இருந்தார். காயமடைந்தவர்களையும், இறந்து போனவர்களையும் ஸ்ட்ரெச்சர்களில் அகற்றுவதற்குத் துணை புரிந்த அவர் ‘தாக்குதல்களை எதிர்கொண்ட பூர்வீக மக்கள் பலரின் முதுகில் இருந்த காயங்களுக்கு நாங்கள் சிகிச்சை அளித்தோம். நாங்கள் அவர்களுக்கு சிகிச்சை அளித்திருக்காவிட்டால் காயமடைந்த ஜூலுக்கள் இறுதிவரையிலும் யாராலும் கவனிக்கப்படாமலேயே இருந்திருப்பார்கள்’ என்பதை அறிந்தவராகவே இருந்தார். ‘ஜூலுக்களால் எங்களுடன் பேச முடியவில்லை, ஆனால் அவர்களுடைய சைகைகள் மற்றும் கண்ணசைவுகளிலிருந்து, அவர்களுக்கு உதவி செய்வதற்காக கடவுள் எங்களை அனுப்பி வைத்திருப்பதாகவும், ஒருபோதும் அதை மறக்க மாட்டோம் என்றும் அவர்கள் உணர்ந்ததை நாங்கள் அறிந்து கொண்டோம்’ என்று அவர் கூறினார். மேலும் ‘காயமடைந்திருந்த முதுகில் இருந்த வரிகளுடன் ஜூலுக்கள் எங்களிடம் சிகிச்சைக்காகக் கொண்டு வரப்பட்டனர். எந்தவொரு வெள்ளை செவிலியரும் அவர்களைக் கவனித்துப் பார்த்துக் கொள்ளத் தயாராக இல்லை. என்னால் அப்போது கறுப்பு நிறத்தவர்களுக்கு எதிராக வெள்ளை இனத்தவரின் போரின் தன்மை குறித்து அறிந்து கொள்ள முடிந்தது. அந்தக் கொடுமைகளைச் செய்தவர்கள் தங்களை கிறிஸ்தவர்கள் என்றே இன்னும் அழைத்துக் கொண்டனர். அது போராக இருக்கவில்லை. மனித வேட்டையாகவே இருந்தது’ என்றார்.

Prannoy Roy Conversation with Gopalakrishna Gandhi about the early life of Mahatma Gandhi in tamil translated by  T.Chandraguru மகாத்மா காந்தியின் ஆரம்பகால வாழ்க்கை - கோபாலகிருஷ்ண காந்தியுடன் உரையாடல் - பிரணாய் ராய் தமிழில் தா.சந்திரகுரு

ஆக பம்பதா கிளர்ச்சி இன்றைக்கும் உலகத்துடன் உறவாடிக் கொண்டிருக்கின்ற வன்முறை இனவெறி உணர்வை காந்திக்கு காட்டித் தந்தது. அதனால்தான் மண்டேலா, மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் போன்றவர்கள் காந்தியிடம் ஈர்க்கப்பட்டனர். ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸை உருவாக்கிய தலைவர்களில் ஒருவரான ஜான் டியூப் போன்ற சமகால ஆப்பிரிக்கர்களும் தென்னாப்பிரிக்காவில் காந்தியின் கூட்டாளிகளாக மாறினர். ஆப்பிரிக்க சுயமரியாதை, ஆப்பிரிக்க விடுதலைக்கான போராட்டத்தின் ஒரு பகுதியாக காந்தி மாறவில்லை என்றாலும், வன்முறை இனவெறி என்றால் என்ன என்பதை காந்தி அறிந்து கொள்வதற்கு வழியேற்படுத்தி தந்தமைக்காக, எதிர்காலத்தில் இந்தியாவில் இனவெறி குறித்து காந்தி மேற்கொண்ட செயல்களுக்காக தலைவர் பம்பதா மற்றும் குறிப்பாக ஜூலுக்களின் கிளர்ச்சிக்கு நாம் நன்றி சொல்லியே ஆக வேண்டும்.

காந்தி தென்னாப்பிரிக்காவில் அனைத்து பிரிவினர் மீதும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்ததும், அவர் மோசமாகத் தாக்கப்பட்டிருந்ததும், தென்னாப்பிரிக்க சமூகத்தில் இருந்த பல பிரிவினரும் உடல் ரீதியாக காந்தியைத் தாக்கியிருந்ததும் இந்தப் புத்தகத்தில் தெளிவாக வெளியாகி இருக்கிறது. அவர் தன்னுடைய போராட்டத்தில் கடுமையான காயங்களுக்கு ஆளாகியிருந்தார் – சரிதானே?

ஆமாம். அது உண்மைதான். தென்னாப்பிரிக்காவில் ஒவ்வொரு சமூகத்திடமிருந்தும் அவர் அனுபவித்த காயங்கள் எந்தவிதப் பாரபட்சமும் இல்லாமல் சமச்சீராக இருந்தன. இந்தியாவுக்கு வந்திருந்த போது தென்னாப்பிரிக்காவில் இருந்த நிலைமைகளைப் பற்றி காந்தி கூறியதைக் கண்டு ஆளும் அமைப்பிலிருந்து தொடங்கி வெள்ளையர்கள் வரையிலும் மிகப் பெரிய அளவில் கோபமடைந்தனர். அவர் மீண்டும் தனது குடும்பத்தினருடன் தென்னாப்பிரிக்காவில் வந்திறங்கிய நாளில் வெள்ளை இளைஞர்கள் குழு ஒன்று டர்பனில் அவர் மீது தாக்குதலை மேற்கொண்டது. அவரைப் படுகொலை செய்தனர் என்பது மட்டுமே நான் பயன்படுத்தக்கூடிய சொல்லாக இருக்கும். ஏறக்குறைய மரணத்தின் பிடியிலிருந்து அவர் தப்பினார். காவல்துறை கமிஷனரின் மனைவி திருமதி.அலெக்சாண்டர் இடைமறித்துக் காப்பாற்றியிருக்கவில்லை என்றால் அன்றைய தினம் நிச்சயம் தான் கொல்லப்பட்டிருப்பேன் என்றே காந்தி கூறினார். நம்பவே முடியாத அளவிற்கு அவர் தாக்கப்பட்டிருந்தார்.

அதற்குப் பின்னர் கைரேகைகளைத் தாங்களாக முன்வந்து வழங்குவது தொடர்பாக உள்துறை அமைச்சராக இருந்த ஜெனரல் ஸ்மட்ஸ் மூலமாக அரசாங்கத்துடன் காந்தி சமரசத்திற்கு வந்த போது கைரேகைகளைக் கட்டாயப்படுத்துவதை நீக்க அவர்கள் முன் வந்தனர். ‘நாங்கள் அந்த சட்டத்தை ரத்து செய்கிறோம், நீங்கள் அனைவரும் தாங்களாக முன்வந்து கைரேகையை அளிப்பதற்கு ஒப்புக் கொண்டால் அதை நாங்கள் கட்டாயமில்லை என்றாக்கி விடுகிறோம்’ என்று ஜெனரல் ஸ்மட்ஸ் தெரிவித்தார்.

Prannoy Roy Conversation with Gopalakrishna Gandhi about the early life of Mahatma Gandhi in tamil translated by  T.Chandraguru மகாத்மா காந்தியின் ஆரம்பகால வாழ்க்கை - கோபாலகிருஷ்ண காந்தியுடன் உரையாடல் - பிரணாய் ராய் தமிழில் தா.சந்திரகுரு
ஜெனரல் ஸ்மட்ஸ்

 

அந்த எளிய ஒப்பந்தம் கட்டாயப்படுத்தி கைரேகைகளைப் பெறுவதைவிட தாங்களாக முன்வந்து அவற்றை வழங்கலாம் என்றே இருந்ததாகச் சொல்கிறீர்கள். அந்த சர்ச்சையின் மூலம் தன்னுடைய வாழ்க்கையையே முழுவதுமாக இழக்கும் சூழல் காந்திக்கு ஏற்பட்டது. அப்போது என்ன நடந்தது?

ஒருபோதும் கைரேகைகளைத் தரக் கூடாது என்று காந்தி கூறியதை ஏற்று அந்தப் போராட்டத்தில் இணைந்த இந்தியர்கள் – பதான்கள் – திகைத்துப் போயினர். அந்த ஒப்பந்தத்தின் மூலம் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட சமரசத்தால் அவர்கள் சற்றே குழப்பமடைந்தனர். அவர்கள் ‘நேற்று போராட்டத்தில் சேர வேண்டுமென்று கேட்டுக் கொண்டீர்கள். அப்போது எங்களிடம் ஒருபோதும் கைரேகைகளைக் கொடுக்க வேண்டாம் என்று சொன்னீர்கள். ஆனால் இன்றைக்கு நாமாக முன்வந்து அதைக் கொடுக்க வேண்டும் என்று ஏன் சொல்கிறீர்கள்’ என்று காந்தியிடம் கேட்டார்கள். அவர்களைப் பொறுத்தவரை அது மிகவும் சங்கடமாக இருந்தது. கொள்கை அடிப்படையில் மிகவும் நுணுக்கமான சமரசத்திற்கு காந்தி வந்திருந்தார். கைரேகைக்கான அரசின் வற்புறுத்தல் நீக்கப்பட்டது. ஆனாலும் அந்த போராட்டத்திற்கான காரணத்தை காந்தி காட்டிக் கொடுத்து விட்டதாக உணர்ந்த மீர் ஆலம் காந்தியின் தலையில் தடி கொண்டு தாக்கியதோடு இறந்து போகும் வகையில் அவரை உதைத்தார்.

அடிகள் விழத் தொடங்கியவுடன் கீழே விழுந்த போது ‘ஹே ராம்’ என்ற வார்த்தைகளை தான் உச்சரித்தது தனக்கு லேசாக நினைவிலிருப்பதாக காந்தி கூறியிருக்கிறார். அது நடந்தது 1909ஆம் ஆண்டில். மீர் ஆலமால் தாக்கப்பட்டபோது அவரிடமிருந்து ‘ஹே ராம்’ என்ற அந்த வார்த்தை வெளி வந்தது. அந்த தாக்குதலுக்குப் பிறகு முகம்மதியர்களால் அந்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டதைக் கண்ட அவர் ‘முகம்மதியர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதைக் கண்டு ஹிந்துக்கள் வேதனைப்பட்டிருக்கலாம்’ என்று கூறியதை இன்றைய நிலைமையில் அது எவ்வளவு முக்கியமானதாக இருந்திருக்கும் என்பதை எண்ணிப் பார்க்கவே முடியவில்லை. அது நடந்தது 1909ஆம் ஆண்டில். அப்போது காந்தி ‘இன்று சிந்தப்பட்ட ரத்தம் இரு சமூகங்களையும் பிரித்து விடாமல் ஒன்றிணைத்து வைக்கட்டும். அதுவே என்னுடைய உளப்பூர்வமான பிரார்த்தனையாகும். கடவுள் அதை வழங்கட்டும்’ என்று கூறினார். அப்போது அவருக்கு ஏற்பட்டிருந்த காயம் அவரது தலையில் – மண்டையோட்டில் இன்னும் ஆறாமலே இருந்தது. மீர் ஆலம் என்ற தனிநபரை ஒரு சமூகத்துடன் தொடர்புபடுத்திக் காண வேண்டாம் என்று கூறிய அவர் இன்று சிந்தப்பட்ட என்னுடைய ரத்தம் இந்த இரண்டு சமூகங்களையும் பிரிக்க முடியாதவாறு ஒன்றிணைக்கட்டும் என்றார்.

நாம் கற்றுக் கொள்ளவும், நம்முடைய வரலாற்றைப் புரிந்து கொள்ளவும் அந்த அத்தியாயத்திலிருந்து நமக்கு ஏராளமான படிப்பினைகள் இருக்கின்றன.

மிகவும் அதிகமாக இருக்கின்றன. 1909க்கும் 1948க்கும் இடையிலான ஒற்றுமைகள் மிகவும் அசாதாரணமானவை. 1948இல் மீர் ஆலமாக வேறு யாரோ ஒருவர் தன்னை மாற்றிக் கொள்ள வேண்டியதாயிற்று. ‘ஹே ராம்’ மட்டும் இரண்டு சந்தர்ப்பங்களிலும் அப்படியே மாறாமல் இருந்தது. உண்மையில் அது அசாதாரணமானதாகவே இருந்தது. தன்னை மீறிய ஆளுமை என்று அழைக்கப்படக் கூடியவராக, தன்னுடைய வேதனையில் எதையோ சொல்பவராக காந்தியைத் தாக்கிய மீர் ஆலம் அவரை மாற்றியிருந்தார். அது இன்றைக்கும் மிகவும் முக்கியமானதாக இருக்கிறது.

வெள்ளையரான ஜெனரல் ஸ்மட்ஸுடனான காந்தியின் உறவு பற்றி புத்தகத்தில் மிகத் தெளிவாக வந்திருக்கிறது. அதைக் கொஞ்சம் விரிவாகக் கூற முடியுமா? அரசியல் எதிரிகளுடனான அற்புதமான உறவு பற்றி – ஒரு வகையில் காந்தியின் மீது ஜெனரல் ஸ்மட்ஸ் மிகுந்த மரியாதை கொண்டவராகவே இருந்துள்ளார்.

ஆழ்ந்த மதவாதியாக இருந்த ஸ்மட்ஸ் மோகன்தாஸிடம் மற்றொரு ஆழ்ந்த மதவாதி இருப்பதைக் கண்டு கொண்டிருந்தார். ஆனாலும் அவர்களுக்கு இடையே அரசியல் வந்து நின்ற போது காந்தி சிறைக்குச் சென்றார். உண்மையில் ஸ்மட்ஸ் அவரைக் காட்டிக் கொடுத்தார் என்ற போதிலும் அது அவர்களுக்கிடையே இருந்து வந்த தனிப்பட்ட உறவுகளை ஒருபோதும் பாதித்ததில்லை.

காந்தியை சிறையில் அடைத்த பின்னர் சிறைக்குள் அவருக்கு வாசிப்பதற்காக மதம் சார்ந்த புத்தகங்களை ஸ்மட்ஸ் அனுப்பி வைத்தார். காந்தி ‘அதை உண்மையில் ஸ்மட்ஸ் தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொள்ளவில்லை என்று எனக்குத் தெரியும். அவரால் எனக்கு உதவ முடியவில்லை’ என்றே கூறினார். இறுதி உடன்படிக்கை எட்டப்பட்ட பின்னர் ஸ்மட்ஸுக்கு பரிசாக, காந்தி ஒரு ஜோடி செருப்பைத் தானே தயாரித்து வழங்கினார். அப்போது ஸ்மட்ஸ் ‘உங்கள் காலணிகளுக்குள் காலடி எடுத்து வைக்கும் தகுதி எனக்கு இல்லை’ என்று சொன்னார். இதுபோன்றுதான் அவர்களுக்கிடையே தொடர்பு இருந்து வந்தது.

இந்தியாவில் மிகவும் குறிப்பிடத்தக்க வகையில் இர்வின் பிரபுவுடன் காந்தி ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தங்களும் அதுபோன்றே இருந்தன. புகழ்பெற்ற காந்தி-இர்வின் ஒப்பந்தத்தின் மூலம் ஏதோ கொஞ்சம் தரப்பட்டது. மற்றவை தரபப்டவில்லை என்றாலும் அந்த ஒப்பந்தம் நீதியை நோக்கி சில அடிகளை எடுத்து வைப்பதாகவே இருந்தது. போராட்டத்தின் இறுதி கட்டங்களில் தென்னாப்பிரிக்காவுக்கு கோகலே அனுப்பி வைத்த சிறந்த இந்திய மிஷனரியாக சி.எஃப் ஆண்ட்ரூஸ் இருந்தார்…

Prannoy Roy Conversation with Gopalakrishna Gandhi about the early life of Mahatma Gandhi in tamil translated by  T.Chandraguru மகாத்மா காந்தியின் ஆரம்பகால வாழ்க்கை - கோபாலகிருஷ்ண காந்தியுடன் உரையாடல் - பிரணாய் ராய் தமிழில் தா.சந்திரகுரு

ஆண்ட்ரூஸ் பற்றி பேசுவதற்கு முன்பாக காந்தியின் வழிகாட்டியான கோகலேவைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்கள். அவருடைய பெயரை நீங்கள் இப்போது குறிப்பிட்டீர்கள். தென்னாப்பிரிக்காவில் அவர் பல வழிகளில் காந்தியின் வழிகாட்டியாக இருந்திருக்கிறார் என்று தெரிகிறது.

பல வழிகளில் அவரது காலத்தின் மிகப் பெரிய தாராளவாத அரசியல்வாதியாக கோபால கிருஷ்ண கோகலே இருந்து வந்தார். அவர் பிரிட்டிஷ் பேரரசின் அற்பத்தனம், பேராசைக்கு எதிராக அரசியலமைப்பு ரீதியாக அரசியல் சீர்திருத்தத்திற்காக சவால் விடுத்தவர். அப்போது இந்திய விடுதலைக்கான அராஜக வன்முறை வழிக்கு எதிராக அரசியலமைப்பு ரீதியான வன்முறையற்ற சீர்திருத்தவாத அணுகுமுறை மிகவும் வலுவுடன் இருந்தது. கோகலேவை தனது அரசியல் குருவாக மிக விரைவில் ஏற்றுக் கொண்ட காந்தி அவரை தென்னாப்பிரிக்காவிற்கு வரவழைத்தார். தென்னாப்பிரிக்காவிற்கு வந்த கோகலே ஸ்மட்ஸ் உள்ளிட்டு அரசாங்கத்திடம் உரையாடினார். காந்தி அந்த ஒப்பந்தத்தைப் பெற உதவிடும் வகையில் ரவீந்திரநாத் தாகூருடன் மிக நெருக்கமாக இருந்த மாபெரும் மிஷனரியான சி.எஃப். ஆண்ட்ரூஸை அங்கே அனுப்பி வைத்தார். ஆண்ட்ரூஸ் அங்கே வந்து ஒப்பந்தத்தை முடித்து வைத்து அந்த ஒப்பந்தத்தின் ஒட்டுமொத்த தொகுப்பை – காந்தியின் ஒவ்வொரு கோரிக்கையையும் நிறைவேற்றிய ஸ்மட்ஸ்-காந்தி உடன்படிக்கைக்கு வழிவகுத்த ஒப்பந்தங்களின் தொகுப்பை – ஸ்மட்ஸ் மற்றும் அப்போது தலைவராக இருந்த போதாவிடமிருந்து பெற்றுக் கொண்டார்.

ஆக காந்தி, அவரது எதிர்காலம், மீண்டும் அவர் இந்தியாவுக்குத் திரும்பியது உட்பட ஸ்மட்ஸ்-காந்தி ஒப்பந்தம் பல வழிகளில் திருப்புமுனையாகவே இருந்திருக்கிறது.

தென்னாப்பிரிக்காவை விட்டு வெளியேறிய போது கடிதம் ஒன்றை காந்தி எழுதினார். தென்னாப்பிரிக்காவிலிருந்து கடைசியாக தனது மனைவி கஸ்தூரிபாவுடன் பயணித்த பிரன்னோய் என்ற கப்பலில் இருந்து தென்னாப்பிரிக்காவில் இருந்த தனது மருமகனுக்கு எழுதிய அந்தக் கடிதத்தில் பின்னர் சுப்புலட்சுமியால் பாடப்பட்டு மிகவும் பிரபலமான ஹிந்தி பழைய பாடலான ‘நான் விதைத்த அன்பு இப்போது அறுவடை செய்யப்படுகிறது’ (அசோவானா ஜலா சீஞ்சா சீஞ்சா பிரேமா பேலா பாய்) என்பதைக் குறிப்பிடும் வகையில் ‘நான் விதைத்த அன்பு’ என்று அவர் குறிப்பிட்டிருந்தார். வெறுமனே அன்பு தான் என்றாலும் அது உண்மையுடன், நற்குணம் கொண்டதாக, மிக உயர்ந்த தைரியமாக இருந்தது. நீங்கள் மிகச்சரியாகச் சுட்டிக்காட்டியபடி, தைரியமாக சிந்தப்பட்ட அந்த ரத்தத்தின் மீதே அது எழுப்பப்பட்டிருந்தது – வெறுப்பின் மீது அல்ல. அன்பால் மட்டுமல்லாது, வேதனையாலும், தனது தாய் தந்தையிடமிருந்து பெற்ற கடவுள்மீது கொண்ட நம்பிக்கையினாலும் அது வளர்த்தெடுக்கப்பட்டிருந்தது – எந்தவொரு வெறுப்பும் இல்லாமல்.

ஆமாம். அபரிமிதமான தைரியம், மிகுந்த வேதனை – அதுதான் போராட்டத்தின் அடிப்படை என்று தோன்றுகிறது. ஆனால் இன்றைய உலகத்தில் இருப்பதைப் போல அப்போது வெறுப்பு இல்லை. மேலும் இந்தியாவில் பிறந்த காந்தி ​​தென்னாப்பிரிக்காவில் கழித்த தன்னுடைய இளமை நாட்களிலேயே அவராக உருவானார் என்றும் அந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Prannoy Roy Conversation with Gopalakrishna Gandhi about the early life of Mahatma Gandhi in tamil translated by  T.Chandraguru மகாத்மா காந்தியின் ஆரம்பகால வாழ்க்கை - கோபாலகிருஷ்ண காந்தியுடன் உரையாடல் - பிரணாய் ராய் தமிழில் தா.சந்திரகுரு

ஆமாம், அது சரிதான். உண்மையில் 1948இல் இந்தியாவில் அவரின் முடிவு வருவதற்கு சில நாட்களுக்கு முன்பாக தில்லியில் நடந்த பிரார்த்தனைக் கூட்டத்தில் உரையாற்றிய காந்தி ‘இந்தியாவில் பிறந்திருந்தாலும் தென்னாப்பிரிக்காவிலேயே நான் உருவானேன்’ என்று கூறியிருந்தார். எது அவரை உருவாக்கியது? தென்னாப்பிரிக்காவில் இருந்த சூழல்கள், கூட்டாளிகள் மற்றும் விரோதிகள் என்று அங்கே அவருடன் தொடர்பிலிருந்த நபர்களாலேயே அவர் உருவாக்கப்பட்டிருந்தார். கூட்டாளிகளைப் பொறுத்தவரை கிட்டத்தட்ட அவர்கள் அனைவரும் தென்னாப்பிரிக்காவின் வரலாற்றில் மறைந்து விட்டனர் என்பதால் இப்போது இந்தியாவில் அவர்களில் யாரையும் நமக்குத் தெரியவில்லை. நண்பர்களாக அவர் மாற்றிக் கொண்ட அவருடைய விரோதிகள் – கிட்டத்தட்ட நல்ல நண்பர்களாகவே இருந்த அவர்களாலேயே காந்தி உருவாக்கப்பட்டார்.

அதிபராக இருந்த நெல்சன் மண்டேலா ஒரு முறை மிகவும் உள்ளார்ந்து ‘நீங்கள் பாரிஸ்டர் ஒருவரை எங்களிடம் அனுப்பி வைத்தீர்கள். உங்களுக்கு ஒரு மகாத்மாவை நாங்கள் திருப்பித் தந்திருக்கிறோம்’ என்று கூறியதை நான் இங்கே சொல்லலாம் என்று நினைக்கிறேன். மண்டேலா பின்னர் ‘ஆனால் நீங்கள் அவரைச் சரிவரக் கவனித்துக் கொள்ளவில்லை’ என்று குறிப்பிட்டிருந்தார்.

Prannoy Roy Conversation with Gopalakrishna Gandhi about the early life of Mahatma Gandhi in tamil translated by  T.Chandraguru மகாத்மா காந்தியின் ஆரம்பகால வாழ்க்கை - கோபாலகிருஷ்ண காந்தியுடன் உரையாடல் - பிரணாய் ராய் தமிழில் தா.சந்திரகுரு

நன்று, இந்த புத்தகத்திற்காக உங்களுக்கு மிக்க நன்றி. அற்புதமான வாசிப்பை அது கொடுத்தது. நான் ஏராளமாக கற்றுக் கொண்டிருக்கிறேன். உங்கள் எழுத்தை மிகவும் ரசித்தேன். மிகவும் தெளிவாகவும், உண்மையில் மிகவும் வித்தியாசமானதாகவும் அது இருந்தது. நன்றி. உங்களுடைய அனைத்து வேலைகளுக்கும் மிக்க நன்றி.

<https://www.ndtv.com/india-news/prannoy-roy-speaks-to-gopal-gandhi-on-the-book-restless-as-mercury-full-transcript-2399697>

நன்றி: என்டிடிவி
தமிழில்: தா.சந்திரகுரு