Music Life Series Of Cinema Music (isaiyum Azhutha Oru Mazhai Iravu) Webseries by Writer S.V. Venugopalan. இசை வாழ்க்கை 61: இசையும் அழுத ஒரு மழை இரவு - எஸ் வி வேணுகோபாலன் 

இசை வாழ்க்கை 61: இசையும் அழுத ஒரு மழை இரவு – எஸ். வி. வேணுகோபாலன்




டிசம்பர் 7 அன்று வெளியான அறுபதாம் அத்தியாயத்திற்குப் பிறகு மாதமே முடிந்த நிலையில், அடுத்த கட்டுரை, மிகவும் மன்னிக்க வேண்டுகிறேன். டிசம்பர், சொல்லப்போனால் இசை மாதம். இசைக்கு இசைவான காலம். என் பாட்டனாரையும், பாட்டியையும், தகப்பனாரையும் மேலதிகம் நினைவூட்டிக் கொண்டே இருக்கும் மாதமும் கூட.

மார்கழி என்பது என் பாட்டனாரின் மார்பில் கழிந்த இளமைக்காலத்தை நினைவூட்டுவது. அவரது கதகதப்பான சால்வைக்குள் இருந்தவாறு அவரது கரகரப்பான திருப்பாவை ஒலிக்கக் கேட்டுக்கொண்டே இருந்த காலம் அது.

கிறிஸ்துமஸ் நாளுக்குமுன் நான் பிறந்ததால், எப்போதும் அந்த விடுமுறை நாளில் கோயிலில் சிறப்பு வழிபாடு, சர்க்கரை பொங்கல் தளிகைக்கு என் தந்தையார் கடந்த ஆண்டுவரை ஏற்பாடு செய்து வந்தவர்.

கூடாரை வெல்லும் (ஆனால், கூடார வல்லி என்று சொல்வார்கள்) என்ற 27ம் பாசுரத்தன்று வீட்டிலேயே சர்க்கரை பொங்கல் கிடைக்கும், என் சிற்றன்னை அத்தனை அற்புதமாகச் செய்வார். ‘பாற்சோறு மூட நெய் பெய்து முழங்கை வழி வார’ என்ற பாசுர வரியைச் சொல்லி, எங்கள் தந்தை கேட்பார், ‘கையில் எடுத்தால் முழங்கை வரை வழியுமளவு நெய் இருக்கணும், இருக்கா, அப்படி சாப்பிட்டால் என்னத்துக்கு ஆகிறது’ என்று!

கடைசி பாசுரத்திற்கு வரும்போது, ‘பட்டர்பிரான் கோதை சொன்ன சங்கத்தமிழ் மாலை’ என்று இழுத்து, ‘முப்பதும் தப்பாமே’ என்று நிறுத்துவார்கள் திருப்பாவை சொல்பவர்கள். அதற்குப் பொருள், திருப்பாவை முப்பதும் தப்பு என்றல்ல, தப்பாமல் சொல்லவேண்டும் என்று அடுத்த வரியில் வருகிறது, இங்கே இப்படி நிறுத்தினால் இலக்கிய பரிச்சயம் அற்றவர்கள் தவறாகத் தானே புரிந்து கொள்வார்கள் என்று சொல்லிக் காட்டி எங்கள் தகப்பனார் விளக்கம் கூறி நகைப்பது உண்டு.

காஞ்சிபுர வாசத்தில், வரதராஜ பெருமாள் கோயில் வாசலில் இளவயதில் ஒலிக்கக் கேட்ட திருப்பாவை பாசுரங்கள், எம் எல் வசந்தகுமாரி அவர்கள் பாடியது என்று நினைவு.

எதிர்பாராத விஷயம், ஏ எம் ஜெயின் கல்லூரியில் படிக்கையில் நடந்தது. தமிழாசிரியர் வேணுகோபாலன் அவர்கள், ஒரு நாள் கரும்பலகையில் திருப்பாவையை எழுதிப் போட்டு, கடைசி வரியில் வரும் ஏலோர் எம்பாவாய் என்பதை எடுத்துவிட்டுப் பார்த்தால், எட்டு அடிகளில் இயற்சீர் வெண்சீர் செப்பலோசை அமையப்பெற்ற வெண்பா தான் திருப்பாவை என்று அலகிட்டு வாய்பாடு எழுதி நிறுவிக் காட்டினார்.

கோதை ஆண்டாள் தமிழை ஆண்டாள் என்று திரைப்பாடல் வரியில் கொணர்ந்தார் கண்ணதாசன். வழிபாடுகளைக் கடந்தும் பாசுரங்களில் லயிக்க முடிவதற்கு அதன் தமிழ் தான் காரணம். இசையில் விடிகிறது மார்கழிப் பொழுது.

கிறிஸ்துமஸ் நாளும் நள்ளிரவின் இசையில் பிறக்கிறது. தபலா இசைக்கலைஞர் சியோன் அல்மைதா என்பவர், ‘ஜிங்கிள் பெல் ஜிங்கிள் பெல் ஜிங்கிள் ஆல் த வே’ கீதத்தைத் தமது தபலா கருவிகளை இசைத்தே வாசிக்கும் காட்சியை அண்மையில் காணொளிப் பதிவில் பார்க்க நேர்ந்தது.

வெவ்வேறு தபலா வாத்தியங்களை வரிசையாக அடுக்கிவைத்து, ஜலதரங்கம் இசைப்பது போல் அநாயாசமாக இங்கே ஒரு தட்டு, அங்கே ஒரு இழைப்பு, அருகே ஒரு தொடுகை, அடுத்ததில் வேக விசை என்று கணித வாய்ப்பாடு பிசகாது ஒப்புவிக்கும் குழந்தையைப் போல் பாடலைப் பொழிய முடிகிறது. அவர் இதயத்தைத் தொட்டுத் தான் வாசிக்கிறார், விரல்கள் தபாலாவை இதயமாக எடுத்துக் கொண்டு விடுகின்றன, அப்புறம் எப்படி பிசகும்?

மழையோ, குளிரோ பாதுகாப்பாக இருந்து அனுபவிக்க அருமையானது தான்…. நனைந்தும் நடுங்கியும் ஒடுங்கியும் வாழ நேர்பவர்கள் பாடு மிகவும் மோசமானது.

அப்படி சாலையோரத்தில் குளிரில் பதுங்கித் தூங்கும் சிறுவர்களைப் பார்த்த வேதனைக் காட்சியை ஓர் இசைப்பாடலாக எழுதி இருந்தார் கவிஞர் நவகவி. அதன் உணர்வில் கலந்து, உணர்ச்சியில் கரைந்து அசாத்திய பாவங்களோடு அந்தப் பாடலைக் கலை இரவு மேடைகளில் பாடுவார் கரிசல் குயில் கிருஷ்ணசாமி.

“….அம்மனிதர்களின் ஒரு மழை இரவைத் தன் கண்ணீர்த் துளிகளால் கவிஞர் நவகவி எழுத, நம் கரிசல்குயில் கிருஷ்ணசாமி அதைப் பாடியிருந்தார். பாடகனின் அடிவயிற்றிலிருந்து எழும்பும் அழைப்பை எளிதில் கடந்துவிட முடியாது. கேட்கும் போதெல்லாம் தொண்டை அடைத்து, விம்மி அழ வைக்கிறது”

என்று எழுத்தாளர் ஜா மாதவராஜ், தமது தீராத பக்கங்கள் வலைப்பூவில் எழுதி இருந்தார்.

இலைகள் அழுத ஒரு மழை இரவு
எலும்பும் உறைந்துவிடும் குளிர்ப்பொழுது

என்று தொடங்கும் பல்லவியே கேட்போரை பாதிக்கும். இலக்கிய வருணனைகள் வேறு உலகம். ஏழை பாழைகளின் அன்றாடப் பாடுகள் மற்றொரு தளம். நவகவியோ, இரண்டையும் தேர்ச்சியாகப் பின்னிப்பிணைந்தே எழுதிச்செல்கிறார் இந்தப் பாடலை.

‘நிலவை மூடக் கரு முகிலைப் போர்வை என வானம் வழங்குகிற நேரம்’ என்ற வரியின் கற்பனை எங்கே, அடுத்த வரியில், ‘ஒருவர் உடலை எடுத்தொருவர் போர்த்தி இரு சிறுவர் அதோ தெரு ஓரம்’ என்ற வரியில் கொதிக்கும் உள்ளம் எங்கே! இந்த வரிகளைப் பாடுகிறாரா, இதயத்தில் இழையெடுத்துத் தைத்துவிடுகிறாரா என்று பிடிபடாத வசத்தில் இசைப்பார் கிருஷ்ணசாமி.

இரண்டாவது சரணத்தில், கூட்டுக் குருவிகளின் கதகதப்பில் குஞ்சுப்பறவைகள் தூங்குவதைச் சொல்லி, ‘நாட்டுப் பாதைகளில் வாட்டும் வாடைகளில் அனாதைக் குழந்தைகள் ஏங்கும்’ என்ற வரியில் உணர்ச்சிகளின் ஓட்டத்திற்கேற்ப கரிசல் குயில் அபாரமான சங்கதிகளைப் போட்டுப் பாடி இருப்பார்.

அதன் நீட்சியில், ‘சாலையில் மைல்கல் சாயம் மங்கியதும் வர்ணம் தீட்டுவார் இங்கே, இந்த ஏழைப் பூக்களை மையிட்டுப் பொட்டிட்டுச் சிங்காரம் செய்பவர் தான் எங்கே’ என்று கொண்டு நிறுத்தும் இடத்தில் உள்ளத்தைக் கரைப்பார் கிருஷ்ணசாமி. ‘சாயம் மங்கியதும் வர்ணம் தீட்டுவார் இங்கே’ என்று ஓங்கி அந்த வரியை அசாத்திய மூச்சுப் பயிற்சியோடு குழைப்பார் அவர். ‘மையிட்டுப் பொட்டிட்டு’ என்ற சொற்களை அவர் இசைக்கும் விதம், ‘எங்கே’ என்ற சொல்லில் உருட்டும் சங்கதிகள் யாவும் கேட்போர்ப் பிணிக்கும் தகையவாய் அமைந்திருக்கும்.

மூன்றாம் சரணத்தில், ‘கொடியில் அரும்பு பனியில் வாடாமல் இலைகள் மூடும்’ என்ற இலக்கிய வருணிப்பில் இருந்து, ‘ஏழை அரும்புகளை வஞ்சித்து விட்டு ஆயிரம் கொடித்துணி ஆடும்’ என்று பம்மாத்து அரசியலையும் சாடி இருப்பார் நவகவி.

அதன் தொடர்ச்சியில், ‘உடலில் ஊறி வரும் உதிரம் முழுவதும் என் விழியினில் ஊறி வரும் தோழா’ என்ற வரியில், ‘தோழா’ என்ற இடத்தில் கரிசல் குயில் எட்டும் உணர்வுகளின் உயரம் சிலிர்க்க வைத்துவிடும். அந்த இரவினில் கண்ட காட்சியில் என் இதயம் நோகுது வெகு நாளா’ என்ற வரியில் பாடலாசிரியரும், பாடுபவரும் ஒன்றாகிக் கரைந்துவிடுவதை, கரிசல் குயில் குரலில் உணர முடியும். அந்த வெகு நாளா என்பது நாள்பட ஒலித்துக் கொண்டே இருக்கும் காதுகளில்.

இந்த சமூகப் பிடிமானம், காலை பூமியில் ஊன்றி நின்று பார்த்து எழுதுபவர்களுக்கு ஏற்படவே செய்யும். அதையும் பேசுகிறது இசை.

புத்தாண்டு விடிகிறது. பழைய ஆண்டு விடை பெற்றுச் செல்கிறது. எத்தனையோ சோகங்களையும், தவிப்புகளையும், சவால்களையும் எடுத்து வைத்த 365 நாட்கள் நிறைவு பெற்று, அடுத்த 365 தொடங்குகிறது. இருந்தாலும், மனிதர்கள் புத்தாண்டின் மலர்ச்சியில் நம்பிக்கை வருவித்துக் கொள்கின்றனர். பரஸ்பரம் வாழ்த்து பரிமாறிக் கொள்கின்றனர்.

சமூகவயப்பட்டுத் தான் இருக்கிறது வாழ்க்கை. ஆனாலும், ஏதோ ஒன்று நம்மை ஒற்றை ஒற்றையாக நிற்க வற்புறுத்திக் கொண்டே இருக்கிறது. அதன் குரலுக்கு செவி மடுக்காது ஒன்றுபட்டு எல்லோரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே நம் சிந்தனையாக இருக்கட்டும்.

இசை புத்தாண்டின் நாதத்தை எழுப்புகிறது. உள்ளத்தைத் தொடும் இசை. உணர்வுகளோடு பேசும் இசை. உண்மையின் பக்கம் நிற்க வைக்கட்டும் ! உண்மை, உள்ளத்தின் உன்னதமான இசை அல்லவா….

(இசைத்தட்டு சுழலும் ….)
கட்டுரையாளர் அலைபேசி எண் 9445259691
மின்னஞ்சல் முகவரி: [email protected]

முந்தைய தொடரை வாசிக்க:

இசை வாழ்க்கை 56: இசையே இசையின் ஒலியே  – எஸ் வி வேணுகோபாலன் 

இசை வாழ்க்கை 57: மெட்டுக்களோ கண்கள்  – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 58: தேகம் தழுவும் இசைக் காற்று – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 59: இது வசந்த காலமோ என் இசையின் கோலமோ – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 60: பாட்டு நம்மை அடிமை என்று விலகவில்லையே – எஸ். வி. வேணுகோபாலன்