படித்தீர்களா_அவற்றை
****************************
உலகின் அனைத்துப் பகுதிகளிலும்
ஏதோ ஒரு தகவல்
நம்மைச் சுற்றிப் பரவிக்கொண்டே இருக்கும்….
படித்தீர்களா அவற்றை…!
யாருடையை கருத்தும்
எவரையும் ஒத்திருக்கவில்லை,
மாற்றமும் ஏமாற்றமும் நிறைந்துள்ளன
படித்தீர்களா அவற்றை…!
மனிதனின் உடல் நிலைப்பொருத்து
அவன் தலை முதல் கால் வரை…
மனம் முதல் நோய் வரை…
நிலம் முதல் வானம் வரை…
பத்தினி முதல் பத்மினி வரை…
அனைத்தும் இக்காலகட்டத்தில்
தகவல்களுடன் பரிமாற்றத்தில்
அடங்கிவிடுகின்றன..
படித்தீர்களா அவற்றை…!
அக்கால தகவல்கள் ஓலையில் எழுதப்பட்டு
ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு
ஒற்றன் மூலம் கொண்டு செல்லப்பட்டது….
தற்பொழது சொடுக்கிடும் வேளையில்
தனிநபருக்கோ, தலைமையை கொண்ட குழுவினருக்கோ
அடுத்த நொடியே சென்றடையும் அளவிற்குத்
தற்காலத்தில் தகவல் தொழில்நுட்பம் முன்னேறி உள்ளது…
படித்தீர்களா அவற்றை…!
காலையில் எழுந்ததும் கண் விழிப்பது புலனம் என்றானது…
கண்ட செய்திகளும் அதனுள்ளே…
கருத்துகள் நிறைந்த செய்திகளும் அதனுள்ளே…
படித்தீர்களா அவற்றை…!
கைக்குட்டை அளவிற்கு
தகவல் தாள்கள் வண்ணவண்ணமாகப் பரவிக் கிடக்கின்றன..
யாரும் எடுக்காத காரணத்தினால்
கால்நடை தீவனமாய் மாறிவிட்டன… படித்தீர்களா அவற்றை…!
எத்தனையோ தேவை செய்திகள்
யார் யாரோ கால் பட சாலைகளில் பறக்கின்றன…
காற்று படித்த மீத செய்திகள் அனைத்தையும்…
படித்தீர்களா அவற்றை…!
ஏதோ சில அவசரத் தேவைகள் நிறைந்த எழுத்துக்களை
யார் யாரோ உள்ளங்கைகள் மறைத்த பேருந்து நிறுத்தங்கள்
ஏராளம்…என்னதான் கூறியுள்ளனர்…
படித்தீர்களா அவற்றை…!
உண்மையான செய்திகளும்..
உலகாளும் விருதுகளும்
எவரெல்லாம் வாங்கி சென்றனர்…
எவரெல்லாம் இழந்து சென்றனர்…
படித்தீர்களா அவற்றை…!
உனக்கான இடம் யாருக்குக் கிடைத்ததென்றும்…
உன்னுடைய உறவு யாரிடம் இணைந்த்தென்றும்
எதார்த்த வார்த்தைகளில்
படித்தீர்களா அவற்றை…!
சர்ச்சைக்குரிய சாமியாரும்,
சமயோசித சீஷயையும்
சிந்தனைக்கடலில் சிலுமிசத்துடன் இணைந்த தகவல்…
படித்தீர்களா அவற்றை…!
மனைவியை சேர்க்க இடமில்லை…
இறந்தபின் கொண்டு செல்ல வண்டி இல்லை…
கண்கலங்கிக் கொண்டே தூக்கிச் சென்றான் கணவன்..
படித்தீர்களா அவற்றை…!
அலைகள் நிறைய விழுந்தாலும்
மூன்றாம் அலையை நோக்கி ஓடும் நாடு…
யாரெல்லாம் இருப்பர்..யாரெல்லாம் இறப்பர்…..
படித்தீர்களா அவற்றை…!
நோய் வந்து சாகாமல்
பசிவந்து இறந்தார்கள்..
பற்ற வைக்க இடமின்றி
கண்ட இடமெல்லாம் எரித்தார்கள்…
படித்தீர்களா அவற்றை…!
தொடரும் தகவல்களைத்
தினம் தினம் சூடாய் எடுக்கும் நாளிதலும்,
படிக்கும் நாளிதழ்களிலும்
படித்து வைக்கும் வரை கையைச் சுடுகிறதே….
மனதையும் சேர்த்து சுடுகிறதே…
படித்தீர்களா அவற்றை…!
மீண்டும் மீண்டும் கேட்டுக்கொள்கிறேன்…
என்றென்றும்
படித்தீர்களா அவற்றை…!
அந்த ஆணின் பிம்பத்தில் யார் அவர்கள்
***********************************************
உலகில் எத்தனையோ வகை ஆண்கள் உண்டு…
யாரும் பார்த்திடாத ஆண்கள் உண்டு…
நம்பிக்கையின் வழியில் கரம் பிடித்து நடக்கும் ஆண்கள் ஆயிரம்…
உழைப்பில் உயர்வுண்டு என்று அதில் வெற்றி பெரும் ஆண்கள் ஆயிரம்….
கட்டாந்தரை படுக்கையில் காலம் களிக்கும் ஆண்களுண்டு..
கை நிரம்பும் சீட்டுகட்டுகளில் குடும்பத்தை சோக்கர் ஆக்கும் ஆண்களுண்டு…
அத்தனை ஆண்களில் இவர்களும் உண்டு..
யார் அவர்கள்….
அரை டவுசர் காலம் முதல்
சைக்கிள் உந்தி அரிசி மூட்டை சுமந்து
அந்த அண்ணாச்சிக் கடையில் கொடுத்துவிட்டு
கிரிஸ் நிறைந்த சைக்கிள் செயினை
விரல் விட்டு நேர் செய்து மை துடைத்த டவுசர் கொண்ட
இளமை கால என் அப்பா அவர்…..!
ஆடு்மாடு மேய்த்து பட்டியிலிட்டு…
தலைமேல் கரும்பைச் சுமந்து
மாட்டுக் கொட்டகையில் தஞ்சம் அடைந்து
சொந்த இடத்தில் வாடகை இல்லாத எரவாணத்தில்
காற்றுக்கும் மழைக்கும் சவால்விட்டு
கோவணத்தின் மறைப்பில்
குளிர் மறைந்த என் அப்பா அவர்….!
திருமணத்தின் விவரம் அறியா துணையாக
என் அம்மையைக் கொண்டு …!
அறியாத பருவமாக அந்த தருணத்தைக் கையில் கொண்டு
உழைப்பை மட்டும் உயர்வாகவும்,
கௌரவத்தைக் குடும்பமாகவும் கொண்டு
உழைத்துக்கொட்டிய என் அப்பா அவர்….!
அப்பனின் அச்சைப்பெற்று
வீட்டின் மூத்தவனாய் முந்திக்கொண்டு பிறந்து
முற்றுப் பெறாத படிப்பினைப் பெற்று
முடித்த மேல்நிலையில் வேலை சென்று
வீட்டிற்கு உழைக்க சென்றவர் என் அண்ணன் அவர்….!
காலகாலத்தில் கல்வி பெற்று..இல்லை இல்லை கல்வி இழந்து…!
வயது இழந்த திருமணம் கொண்டு
வாழ்க்கையில் போராட்டத்தைக் கையில் கொண்டு
குடும்பம் ஒன்றே உலகாய் கொண்டவர்…என் அண்ணன் அவர்….!
எத்தனையோ ஆண்களை நாம் அன்றாட வாழ்வில் பார்த்திருப்போம்….!
ஒரு அரைமணி நேரம் நாம் சாலையில் பயணிப்பதாகக் கொள்வோம்……!
அதோ..
அவசரவசரமாகக் கிளம்பும்
ஐந்தாயிரம் ஊதியம் பெறும் அடகுக் கடை ஊழியராய்…!
உண்பதைக் கட்டிக்கொண்டு
மதிய உணவைக் குறைத்துக் கொண்டு
ஓயாமல் பாடுபடும் ஏதோ ஒரு கார்பரேட்டின் கடைமட்ட ஊழியனாய்….!
கட்டிய கைலி கழண்டு விழாத கட்டுயிட்டு
முண்டாபனியலில் முழுதாகக் குளித்து..
முண்டாசு அவிழ்த்து கழுத்து துடைக்கும் மூட்டை மடை ராமசாமியாய்….!
மூக்கைப்பிடித்துக் கொண்டு மூலையில் நிற்கும் ஆணாய்……!
அவன் முன் ட்ரௌசரில் கழிவுநீர்க்குழி இறங்கும் துப்புரவாளனாய்….!
நிமிர்ந்து பார்த்தால் மின்கம்பியில் தைரியவானாய்…!
தடுக்கிவிழுந்தால் உயிர்போகும் டவர்களின் மேல் ஏறும் தைரிய இளசாய்….!
இப்படி சொல்லிக்கொண்டே போகும் வண்ணம்..!
தூய மனிதனாய்…!
துள்ளித்திரியும் காளையாய்…!
துவண்ட மனமாய்…!
தைரிய விளக்கமாய்…!
தத்ரூப மாந்தனாய்…!
மானசீகக் காதலனாய்…!
குடும்பப் பொறுப்பாளனாய்…!
குடியில் மன்னனாய்…!
குட்டிக்குழந்தையின் தகப்பனாய்…!
வளர்ந்த குழந்தையின் கணவனாய்….!
பேரன் பேத்தியின் தாத்தனாய்…!
தகப்பனில்லா மகளுக்கு அப்பனாய்…!
தாயில்லாக் குழந்தைக்கு அன்னையாய்…!
வீரம் கொண்ட தங்கைக்கு அண்ணணாய்…!
பயம்கொண்ட அக்காளுக்குத் தம்பியாய்…!
நோய் வாய் பட்ட குடும்பத்திற்கு மருந்தாய்…!
நொடிந்த அப்பனுக்கு நம்பிக்கையில் தடியாய்…!
நாள்காட்டியை கிழிக்கும் மகனாய்…!
நல்லது கெட்டது அறியா மகனாய்…!
குழந்தையில் நெஞ்சில் உதைக்கும் பேரனாய்…!
வளர்ந்தும் நெஞ்சில் உதைக்கும் மகனாய்..!
எத்தனை ஆண்களடா…!
அந்த இத்தனை ஆண்களின் பிம்பத்தில் யார் அவர்கள்…!
– சே கார்கவி