Karkaviyin Kavithaigal 14 கார்கவியின் கவிதைகள் 14

கார்கவியின் கவிதைகள்

பெண் சுதந்திரம் அறிவோம்
**********************************
பெண்ணிற்கு சுதந்திரம் என்பது எல்லா இடங்களிலும் பேசலாம், ஆனால் எப்படி பேசவேண்டும்,என்ன பேசவேண்டும் எந்த விதத்தில் பேச வேண்டும் என்பது அறியாமல் பேசும் பெண்கள் பெண் சுதந்திரத்தை பற்றி பேசும் தகுதியை இழக்கின்றனர்…
ஆடை சுதந்திரம் பெண்ணை போற்றும் படி இருக்க வேண்டும்….!
பேச்சில் சுதந்திரம் பிறர் மனம் கவலைக் கொள்ளாத நிலையில் இருத்தல் வேண்டும்…..!
அனைத்திலும் சுதந்திரம் தேடும் பெண்… அனைத்தையும் நல்வினையில் சாதிக்கும் எண்ணம் கொண்டிருத்தல் வேண்டும்…

சுதந்திரமும் வேண்டும்…
சுற்றமும் தவறாக எண்ணும் அளவிற்கு இருத்தல் வேண்டும் என்றால் எவையும் சரியாகாது….!
வாழ்க்கையை வட்டத்திற்குள் வைக்க வேண்டாம்…
வழிமுறைகளை சரியாக கையாண்டால் போதும்…

பெண்மை..
பல இடங்களில் போற்றப்படுகிறது…!
பல இடங்களில் தூற்றப்படுகிறது…!

ஒவ்வொரு புள்ளியும் முற்றுப்புள்ளியே..!
***********************************************
அதீத தேடலில் நமது மனம் ஒருவரை வெறுக்கும்..
பலரை ஏற்கும்…!
மனித மனம் குரங்கின் பரிமாணம் எப்படியும் பழம் தீர்ந்தபின்பு அடுத்த மரம் பாய்ந்தே தீரும்….!

இருக்கும் வரை இனிக்கும் உறவுகள்..
சில நேரங்களில் இல்லாமை வருத்தம் சார்ந்த இன்ப கவலைகளே….!

நல்லவரை தீயவராக மிகை புரிந்தால் அவர் எவ்வகை நன்மை செய்தினும் தீயவனாகவே அனைவருக்கும் தோற்றமளிக்கிறார்…
தீயவரே ஆனாலும் நன்மை செய்வதை கண்டுவிட்டால் அவர் எத்தீமை செய்யினும் நன்பெயரை பெற்றுக்கொண்டே இருப்பார்….

ஒவ்வொரு சூழலிலும் நமக்குள் உண்டாகும் தயக்கம்…!
ஏதோ ஒரு நல்லதை நாம் தள்ளிபோடும் நிலைக்கு கொண்டு செல்லும்…
மனம் அறியாத பக்கங்கள்….

நேரம் வரும்
****************
நீண்ட நேரமாக வண்டியை உயவினைத் தூண்டும் மனிதனின் வியர்வை சோர்வில் அழுகிறது,
விழி பிதுங்கும் கண்ணீரில் அழுகிறது…!

அதைப் பார்த்துகொண்டே செல்லும் சாலைப்பயணி அருகில் சென்றதும. சற்று குணிந்து சில அடிதூரம் கடந்து தலையை நிமிர்த்துகிறார்…!
யாரும் காணாதது போல் திரும்பிக்கொண்டும், அலைபேசியை காதினில் அடைத்து திணித்துக்கொண்டும் நகர்கிறார்கள்..!
அனைத்தையும் பார்த்து சலித்த அந்த நபர் கோவத்தில் உதைக்கிறார் உயவுபொருள் இயந்திரத்தில் வழிக்கு வந்தது…

என்னவென்றெ அறியாத குழந்தை அருகில் வந்து தாத்தா நான் தள்ளிவிடவா என்றது…
அன்பில் நிறைந்த மனிதம் நம்மைத் தேடி வரும்..
அதற்கான நேரம் வரும்…

Karkaviyin Kavithaigal 13 கார்கவியின் கவிதைகள் 13

கார்கவியின் கவிதைகள்

யாரோடு பயணிக்க
*************************
நடைபாதையில் மனிதன் கைப்பிடித்து நடக்கவா, அல்லது நாய்களின் வால் பிடித்து நடக்கவா..!
யாரேனும் வலப்புறம் வழி கூறிவிட்டு செல்லுங்கள்..!
சாதாரண பாதைகளுக்கு யாருடைய பயணக்கதை தெரியும்..!
இடது சார்ந்த மரங்களுக்கு யாருடைய வழிகள் தெரியும்,
வலிகள் புரியும்..!
இவைகளை வெளிச்சமாய் கொண்டு தனிமனிதனாய் பயணிக்கிறேன்…!
இப்பொது யாருடன் பயணிக்க…!

தூரத்தில்
எறியப்பட்ட கல்
சட்டென
ஒரு பூனையை
ஆக்ரோச நிலைக்கு
கொண்டு சென்றது
ஓட்டம் பிடித்தது பூனை…!

யாரோ கடந்து வந்த பாதையின்
சுவடுகளை
மடித்து
சட்டைப்பைக்குள்
மடித்து வைத்து கொண்டு
பேனை உருட்டு
நடந்து செல்கிறான்
ஓர் குருட்டு கவிஞன்…!

இதற்கு இடையில்
தடியால்
அடித்து விரட்டப்படுகிறது
திடுக்கென
பயந்த
அந்த
எதிர்வழிப் பூனை…!
காலத்தைச் சொன்னேன்….!

இணையவழி இளைய தலைமுறை
*****************************************
அழைத்தால் மட்டும் எட்டிப்பாரத்த குழந்தை…!
முகம் நிரம்பிய ஆறங்குல வெளிச்சம்…!
ஆசையாகி வெறியானது…!
காலம் படிப்பெனும் காரணமானது…!

எத்தனை முறை அழைப்பினும்…! காதில் திணிக்கப்பட்டது இணைய பஞ்சுகள்…!
கண்கள் சிவந்த நிலையாயினும்..!
தொடர்ந்தது முடிந்தே தீரும்…!

கல்வியா கண்களில் மின்னுவது…!
கவர்ச்சியா அங்கு ஒளிருவது…!
செயலிகளில் திணித்த மூளைகளாய்..!
தினம் தினம் விரல்களில் பரிணாம வளர்ச்சி..!

தேடலில் விரல்களும் உடன் மூளையும்…!
விழுந்த குணிவு முதுகிலும் செயலிலும்…!
முத்திப்போன கண்பிரச்சனையும்..!
காலனின் நேரடி பரிசீலனையும்…!

இப்படியே தொடர்கிறது
இந்த இருபதாம் நூற்றாண்டின் இணையவழி இடர்கள்…!

இளைய தலைமுறையில் ஆறாவது விரலானது இந்த அலைபேசி
ஏழாவது அறிவானது இந்த இணையவழி சையலிகள்….!

மீண்டும்
மாற்றம் பெறட்டும்
புத்தகங்கள் புரட்டும்
நாட்கள் வரட்டும்…

தொடர்வோம் இனிதாய் இணையம் தவிர்த்து
இதயங்களுடன் உறவாடி….!

மதம் கடந்து மனிதம்
*************************
கேளடா மானிடவா என்றான் பாரதி
பாரடா எனது மானிடபரப்பு என்றான் தாசன்
பரந்த குளத்தில் பச்சை மட்டும் நிரம்பவில்லை
பறவையின் பார்வையில் பசி மட்டும் தேடலில்லை

பசியென்று வந்தவனுக்கு பாடம் எடுக்க நேரமில்லை
வயிறு சுருங்கி நின்றவனின் பெயர் அறிந்தால் உணவில்லை
மேல் நின்று எறிபவன் கீழ் நிற்பவன் நிலையறியாதவன்
நீந்தி கரையேறும் மனிதன் நீச்சல் மறந்தவனுக்கு கைகொடுப்பது மனிதமே

நெற்றியில் பட்டை …!
கழுத்தில் பச்சை நூல்…!
கையில் கிராஸ்..!
கடைசிவரை கூறப்படவில்லை மனிதம் காணும் முறையை…

நாடென்ன சொல்லும் என நடுவீதியில் நிமிர்ந்து கேளாய்…
செய்திகளும் சாதிகளும் படித்து மடித்து தூரம் வை
சமுதாயம் என்பது மேம்பாட்டிற்கு மட்டுமே…
மறந்த்தை நினைவுகூர்ந்து மனிதம் கொள்வோம்…

மற்றவை தேவையறிந்து இனம் மத மொழி களைவோம்…!
மனிதம் காப்போம்…
மனிதம் போற்றுவோம்..
மனிதம் கொடியாய் ஏற்றுவோம்…!
மனித்த்திற்கு சேவை ஆற்றுவோம்..!மனித்த்தால் சிறப்படைவோம்…
மனிதம் சிறக்க முற்படுவோம்….
மனிதம் உணருவோம்…!
மனிதம் இனியாவது புகட்டுவோம்…!
அனைத்தையும் கடந்தது மனிதம்…

Karkaviyin Kavithaigal 12 கார்கவியின் கவிதைகள் 12

கார்கவியின் கவிதைகள்

வயது தடையில்லை
*************************
முகம் மறைத்த
வெண்நறையை
இதழ் பிதுக்கி
ஊதிய நொடிகளில்
விட்டுப்போன
நம்பிக்கையும்
கடந்து போன நேற்றும்
காற்றோடு பறந்து விடுகிறது…..!

நடைபாதை வழியெல்லாம்
உன் இழப்புகளை
எல்லைக்கல்லாய்
செருகி வைக்க
ஏதாவது ஒன்றின்
மேல் அமர்ந்து பூர்த்தி செய்கிறது
வயதின் விடாமுயற்சி பயணம் தனை……!

நீர் நிறைந்த குளத்தில்
நீந்தியாட துடிக்கும்
வயதிற்கு
கைத்தாங்கலாக கொடுக்கப்பட்டது தடி
எடுத்தெறிந்து வா
இயல்பாக வாழ
வயது தடையில்லை…….!

இளமையோடு
போட்டியிடும்
நாளையது வயதினில்
புது கதவினை திறந்திடலாம் உலகை -என்றும்
வயது தடையில்லை…

எத்தனை நாம்
******************
துண்டு துண்டாக
வெட்டப்பட்ட
நீர்க்குழாயில்
துண்டுபடாமல்
கோர்த்து செல்கிறது
நீரோட்டம்………………………
நிரந்தரமில்லாத
நீ எம்மாத்ரம்…………………
எத்துணை
திருப்பங்கள் இருப்பினும்
கைக்கோர்த்து
நடைபோடுகிறது
நீர்சுழிகள்…………………
நீ
நான்
எத்தனை நாம்……………….

மண்ணும் மங்கையரும்
****************************
நீ நமிர்ந்த பார்த்த தருணத்தில்
நிச்சயம் கொட்டும் வான்மழை
நீ வளர்த்த சிறு பூச்செடிக்கு
சாரலை கொடுக்கும் அந்த மர சன்னல்

உழவாடும் வயல் வெளிகள் தாகம் சுரந்தது
நீ ஊற்றிய நீர் இனிப்பாய்
வரப்புகளுக்கு எடையேற்றிய உன் நடை
நீ குனிந்து பறித்த அந்த இயற்கை

பாதங்களை விட்டுச்செல்லும் உன் பாலை
நண்டுகளின் வரிசையில் உன் நெய்தல்
வரப்போரம் சாகுபடியில்
உன் மருதம்
ஓங்கிய அழகாய்
உன் முல்லை
சூடிக்கொள்ள நீ ஏற்கும் குறிஞ்சி

ஆறடியில் அழகை ஏற்க காத்திருக்கும் மண்
அடையாத ஏக்கத்தில் காலம் முடிக்கும் பெண்
வழியில்லை வழியுண்டு மண்ணில் பிறந்த மங்கையற்கு

சிந்தனை 1000
******************
நீ
சரியென்றாலும்
தலையாட்டும்
தவறென்றாலும்
தலையாட்டும்
நீ நம்பகமானவனாக இருந்தால்
இன்று தோளில்
உயர்த்தப்பட்ட
நீ
நாளை காலின்கீழ்
வைக்கப்பட வெகு நாள்
இல்லை

உன்குறைகளை பேசும்
அவர்
அவர் குறைகளை மட்டும்
கண்ணைக்கட்டிக் கொண்டு
வரையறுப்பதுதான் சிரிப்பு

உன் புரிதலில்லாத
மனதிற்கு நான்
சரி என்று
ஏற்றுக்கொள்ளும்
தவறைவிட
உன்னை நான் எப்படி
திருப்தி செய்துவிட முடியும்

Karkaviyin Kavithaigal 10 கார்கவியின் கவிதைகள் 10

கார்கவியின் கவிதைகள்

1)
மிடறு மிடறாய் மனம்
****************************
நான் கூற
நினைத்ததை
தவிக்கும் நாணலுக்கு
இடையில் மிடறுகின்றது
யாரும் பேசிடாத
வரைமுறை உண்மை…………………

நீ இங்ஙனம் கொட்டித்தீர்க்கும்
சொற்களுக்கெல்லாம்
தாகம் தீர்த்துவிடுகிறது
மிடறுகளில் ஏற்கனவே
நீ கொட்டிவிடாத சொற்களின்
சிறு ஈரம்………………..

பாசாங்குகளில் சிறு விழுங்கல் இருந்தாலும்
ஏறி இறங்கும் ஒரு நொடியில்
சிறு மென்மையில்
துள்ளியாடுகின்றன
இந்த சரீரமிடறுகள்……………..

சிரத்தைத் தாங்கிய உனக்கு
மனதோடு தோன்றிய சொற்களைச் சற்று
தண்ணீர் தெளித்து வெளியேற்றிவிட
வழியில்லாமல் போன மிடறுகள்தான் கவலைக்கிடம்……………

சிறு நேராக
சற்று வளைந்தாடி
எலும்பில் சதைப்பற்றுக் குறைந்த உன் மிடறுகளில்
எத்தனை உறவுகள்
வறண்டு போயிருக்கும்
வளர்ந்து போயிருக்கும்………………

ஒரு சொட்டுத் தண்ணீரோ
பலர் ஏற்ற உண்மைகளோ
இலகுவாக
ஆழச்செல்கிறது
யார் வருவதையும்
செல்வதையும் கண்டுகளிக்காத
சிறிய மென்மை கொண்டதோர்
மிடறு மிடறாக மனம்……………..

2)
மாறா நிலைபாடு

*********************
உனது அனைத்துச் செயலிலும்………….
நீ கொண்ட
சிறு மௌனம் எப்படியும்
அதனைச் சரியாகச் செய்யும் அளவிற்கு
ஒரு நிலைபாடினை வழங்கும்……………………..
நீர் நிரம்பும் குவளை
முழுதும் நனைவதை எண்ணி
நனைவதில்லை…………….
அரை தம்ளர் நீரில்
ஆகாயம் சிறியதாக சுருங்கிவிடாது…………….
பார்வை என்பது
செயலின் ஒட்டுமொத்த
ஆழ்மௌனமே……………..

3)
நிரந்திரக் கடப்பு
********************
துண்டு துண்டாக
வெட்டப்பட்ட
நீர்க்குழாயில்
துண்டுபடாமல்
கோர்த்துச் செல்கிறது
நீரோட்டம்………………………
நிரந்தரமில்லாத
நீ எம்மாத்திரம்?…………………
எத்தனைத்
திருப்பங்கள் இருப்பினும்
கை கோர்த்து
நடைபோடுகின்றன

நீர்சுழிகள்…………………
நீ
நான்
எத்தனை நாம்……………….

Karkaviyin Kavithaigal 9 கார்கவியின் கவிதைகள் 9

கார்கவியின் கவிதைகள்

இரட்டை நீல டிக்குகள்
**************************
முன்பெல்லாம்
மாதம் ஒருமுறை
டேடா செலுத்துபவன்
இப்பொது மூன்றுமாத சந்தாவிற்கு பழகி விட்டேன்….

ஏதோ ஒரு குழுவில்
நீ உரையாடி சென்ற
பொழுதும்
சேகரிக்கப்படாத
உனது எண்ணை
கிளிக் செய்து
டிபியை மட்டும்
பலகாலம் பார்த்து
வெளியேறுகிறேன்…

இப்பொது கிடைத்த
தைரியத்தில்
ஹாய் என கூறிவிட்டேன்
உன் முகம் காணாமல்
சிறு அங்குல பெட்டிக்குள்

ஒற்றை சாம்பல்
டிக்குகள்
நெஞ்சை சற்று அமைதிக்குள்ளாக்கியது
நீ ஆன்லைன் இல்லாத
வெறுமையை தந்தது..

இரட்டை சாம்பல் டிக்குகள்
நீ வந்து சென்ற
சுவடுகளை டிக் செய்து சென்றது

இரட்டை நீல டிக்குகள்
வியர்வை வழிந்தோட
என்ன ரிப்ளை என
நடுக்கலில் உறைந்தேன்
என் பெட்டியில்

நீண்ட நேர
பச்சை நிற
டைப்பிங் சொற்களுடன்
தொடர்புள்ளிகளின்
முடுவில்
கிடைத்தது…

“ஊ இஸ் திஸ்”

அகலப்பரந்த ஆழியில்
இரு சொட்டு
நீர்த்திவலையாய்
என்னுள் தடம்பதித்தது
இரட்டை நீல டிக்குகள்…..

தொலைப்பேசி நினைவுகள்
**********************************
ஊரெல்லாம் அழைக்காத பெயரை
என் வீட்டின் பின்னால் ஒலிக்க பழகியது

யாசகம்
கேட்பவனாய்
வாசலில்
நின்று கொண்டிருந்தோம்
சில நேரம்
நானும் அம்மையும்
சில நேரம்
நானும் அக்கையும்

ஆசையோடு
பேசிய
அண்ணனின்
எதிர்பார்ப்பை
யாசகத்திற்கு
கேட்கும் நிலையில்
சொல்லப்பட்டது
‘யார் அங்கே பேசுவது’

வாயடைத்தை
நிலையில்
ஆணைகளெல்லாம்
மறந்து போனது
அண்ணனுக்கு

பொறுமையில்
வைத்து
சில்லரை போட்டது
போல்
தொட்டுப்பார்த்து
பரிமாறிக் கொள்கிறாள்
அன்பை
என் அன்னை….

இன்று ஆறங்குல
பெட்டியில்
அண்ணனின் முகத்தையே
பார்க்கும் பொழுது
வடியும்
கண்ணீரில்
தொலைபேசி
நினைவுகள்….!

எழுதாத தேர்வு
******************
தேடும் இருளுக்கு  நிலவின் ஒளி
எட்டித் தொடும் அலைக்கு நிலா
மிஞ்சிய பசியை போக்கும் பூனை
கெஞ்சிய யாசகனின் தட்டில் நூறு

வெற்றிக்கு தேர்வுகள் அவசியம் இல்லை
கேள்விகளில் வாழ்க்கையும் இருப்பதே இல்லை
ஆம் எழுதிவிட்டேன் தேர்வை
யாரும் காணாத புது விடையை

கடல் முழுதும் வெளிச்சம் இல்லை
அலை தொலைவில் நிலவின் எல்லை
அறிதலும் புரிதலும் வாழ்வியல் தந்திரம்
கிடைக்காதது கிடைத்தால் இயல்கையின் மந்திரம்

இருக்கும் இடத்தில் இயற்கை வராது
எல்லாம் உனக்கென உறுதியாய் தராது
உழைத்திடு அனு தினம் விழிப்போடு
வெற்றிகள் கிடைத்திடும் உன் கையோடு

Karkaviyin Kavithaigal 8 கார்கவியின் கவிதைகள் 8

கார்கவியின் கவிதைகள்

குருதிப் பூக்கள்
*******************
இரத்தமும் சதையும் குழகுழப்பில் வழிந்த பூக்கள்..!
குறைகளைச் சொல்லிக் கும்பிட்டுப் பிழைக்கும் குலப் பூக்கள்…!

உடல் மொழியில் வலிகள் மறைத்த பூக்கள்..!
உறுதியான வாழ்க்கைக் காம்புடைய பூக்கள்…!

ஓயாது கடிகாரம் உணர்வாய்க் கொண்ட பூக்கள்..!
வாசனை இல்லாத உறுதிச் சுவாசப் பூக்கள்..!

உளைச்சல் தனை உரமாய்க் கொண்ட ஆலமரப் பூக்கள்..!
மௌனத்தில் பல் இழித்து ரணத்தில் செழித்தப் பூக்கள்….!

காசைக் கரியாக்கும் மகன்கள் முன் உழைத்த பூக்கள்..!
கடுகு டப்பாவில் சேமிக்கும் மனை வங்கிக் கொண்ட பூக்கள்…!
மயங்கும் மாணாக்களை மகனாய்க் கொண்ட பூக்கள்..!

ஆம்…
ஆசைகளின் சவப்பெட்டி குருதிப்பூக்கள்…!
குலம் அறிந்து கும்பிட்ட சோற்றுப் பூக்கள்..!
குட்டக் குட்ட நில்லாது ஓடும் ஆற்றுப் பூக்கள்…!

நீட்டிய கைகளில் ஒரு ரூபாய் – இரு ரூபாய்க் கரிசனப் பூக்கள்..!
உலகை மாற்ற
ஆரம்பித்து
உறவை இழந்த பூக்கள்…!
எதிர்த்த பின்பும் பூக்கும் அதிசய அத்திப்பூக்கள்..!
உருண்டும் புரண்டும் மண் ஒட்டா உழைப்பை இழந்த பூக்கள்…!

உலகெலாம் சுற்றி ஓய்ந்து சுனங்கிய பூக்கள்…!
உயிர் தரித்து,
உலகம் பார்த்து,
உண்மையறிந்து,
உழைத்துச் சேர்த்த
ஆண் பூக்கள்…!

ஓய்வை மறைத்து,
உறக்கம் மரித்து,
உலகம் இழந்து
உருட்டும் பூனையாய்ப்
பெண் பூக்கள்….!

கலம் பெற்று
உறவு கொண்டு
கைப்பிடித்து,
கோல் கொடுத்து,
ஈசல் வழி முதல்
கால் கட்டிலின்
தொட்டில் வரை
தாய்ப் பூக்கள்…!

காலை எழுந்தவுடன்
கண்ணீர்
கண்ணில் கொண்டு,
கையில் பேனைக் கொண்டுத் தர அட்டை ஏந்தும் கல்விப் பூக்கள்…!
அப்பனில்லா விலாசத்தில் அனாதைப் பூக்கள்,
அடிவாங்கி உணவருந்தும் மழலைப்பூக்கள்…!

தரைப் பிறந்து,
தாலாட்டுப் பெற்று
கால் முளைத்து,
கட்டுக் கோப்பான பூக்கள்.
சலனங்கள் நிறைந்த பூக்கள்,
நல்லது கெட்டது நிறைந்த பூக்கள்….!

சாஸ்டாங்கக் காலடிப் பூக்கள்,
மன அழுத்த வெறுப்புப் பூக்கள்…!
ஊருக்கே உழைத்து உறவு வளர்த்த பூக்கள்..!
உள்ளத்தில் வலி கொண்ட – மறைத்த பூக்கள்…!
உளி கொண்ட சிற்பியின் வலிப் பூக்கள்…!
புன்னகையில் புவியை ஆள ஆண்- பெண்ணாய்ப் பூக்கள்….!

கருத்துகள்,
கவலைகள்,
ஏக்கங்கள்,
இயல்புகள்,
ஆசைகள்,
ஐக்கியங்கள்,
யதார்த்தங்கள்,
வாழ்த்துகள்,
கண்கள் வலித்து,
கண்கள் துடித்து,
ஆசை நேரத்தில்
அனைத்தையும் கடந்து செல்லும்,
கவலைகளில் பீதாம்பரி அழைத்த ஆண் பூக்கள்…!
தந்தைப் பூக்கள்…!

அந்த பெண் மனம்
***********************
யாருக்காக பிறந்தது இந்த பெண் பிண்டம்….
அழகான எண்ணங்களுடன், மேனி வண்ணங்களுடன்,
மிளிரும் ஆசைகளுடன் துள்ளிப்பிறந்த பிண்டம்….
பிறந்த இடம் பொறுத்து ஆசைகள் கருகளாயிற்று…..

சென்ற இடமெல்லாம் சிறப்பாக செயல்படுபவள் பெண்..
யாரையும் புண்படுத்தாத மனம் கொண்டவள் பெண்….
எதிர்த்து பேச எண்ணாதவள் பெண்…
எவரையும் எதிர்த்துப்பேச விடாத தைரியம் மிக்கவள் பெண்…

ஏக்கம் நிறைந்தவள் பெண்..
யதார்த்த உலகை ஒருபடி அளவில் அளந்தவள்…

கடுகுமணியை கூட கரம் விட்டு கொட்ட ஆயிரம் யோசனை கொண்டவள்….
கண்டவரின் வார்த்தைகளில் கசங்குபவளும், வாழ்த்துகளில் மின்னுபவளும் பெண்….

கடைசி பருக்கை உண்பவளும் பெண்,
இல்லாத பருக்கைக்கு நீர் நிரம்ப உறங்குபவள் பெண்….
கட்டும் துணியிலிருந்து கைக்குட்டைவரை கசக்கி மடித்துவைத்தவள் பெண்..
மார்துணி விழகாது மானம் காத்தவள் பெண்…

மானஸ்தன்களின் அன்னையும் அவளே,
மங்குனிகளின் தங்கையும்,அக்காளும் அவளே….
செம்பருத்தி செடிகளின் வாசம் பெண்….

மருதாணிகளின் செக்க சிவப்பு பெண்…
அடுப்படி சாம்பலில் கைரேகை பெண்…
அழகிய கோழிகுஞ்சிகளில் இரைப்பருக்கைகளில் பெண்…..

யாதார்த்த உலகமிது..
பெண்களின் யதார்த்தம் அறியா உலகமும் இதுவே….
பெண்மையை போற்றி வணங்குவோம்…

நட்பிற்கும் இதயமுண்டு
****************************
நட்புக்கு ஈடு இணை இங்கே ஏது….
கண்டவரை எல்லாம் கை கோர்த்து கொள்வது நட்புதான்…
காணாமல் பல கோடி வலைதளத்திலும் நட்புதான்..
கண்டிப்பாக நடந்து கொண்டு பிறது மன்னிப்பில் தரை இறங்குவது நட்புதான்…..

நாலு பேர் தவறா சொன்னாலும்,நான் இருக்கிறேன் என்று தோலுக்கு தோல் கொடுப்பது நட்புதான்….
நாற்றம் நிறைந்த சேற்றின் நடுவே இலைகளின் பாதுகாப்பில் அல்லியும் நட்புதான்…
பத்திலிருந்து ஒன்பது ஆன போதும் ஒருபோதும் நிற்காது சுற்றும் கோள்களின் சுழற்சி நட்புதான்….
நான்கு நாட்கள் பார்க்கவில்லை என்றாலும்..நமக்கென்ன என்று இருப்பதும் நட்புதான்..

நமக்கென்ன என இருந்த போதும் நன்றாக இருக்க செய்யும் மறைமுக செயலும் நட்புதான்…..
உலகத்தை ரசிக்க வைப்பது நட்புதான்…
உன்னை முழுவதுமாக உணர வைப்பதும் நட்புதான்….
வயது கடந்தது நட்புதான்-யார் வயது யாரென அறியாது தொடர்வது நட்புதான்…..
கருத்து வேறுபாடு நிறைந்த பொழுதும் வெறுத்து ஒதுக்காத தோழமை நட்புதான்..

இரும்பு கதவு கொண்டதல்ல நட்பு…
இளகிய இதயமும் கொண்டதுதான் நட்பு….
நட்பே துணை….

இறைவி
***********
எல்லாம் அவளாகி போனப் பிறகு வேறு என்ன நான் சொல்லி விடக்கூடும்….
ஆசையாக வாழ்ந்து அனைத்தையும் அனுபவித்து பட்டாம்பூச்சி போல் வாழ்வை அனுபவித்தவள்…
இங்கு நேரம் பார்த்து ஆட்கள் பார்த்து எனக்காக எல்லாம் சேர்த்து வைக்கிறாள்..

அவள் அன்னை தந்தை பிரிந்து என் அன்னை தந்தையை அவள் உடையவராய் ஏற்று அன்பும்,
ஆர்ப்பரிக்கும் பணிவிடைகளையும் சற்றும் மனம் கோணாது,முகம் சுழிக்காது செயல்படுத்துகிறாள்….
என் உடன்பிறப்புகளுக்கு உடன்பிறப்பானால்,என் சொந்தங்களின் புது சொந்தமானால்,..
என் வீட்டு செல்லங்களுக்கு அன்பானால்…அப்பாவின் அன்பும் அவளும் ஓர் மகளானால்….

மாமியார் மருமகளாய் இவர்கள் இல்லை,அம்மை-பெண்ணாய் பயணிக்கின்றனர்…
உடல் வழிகள் ஏராளம் இருந்தாலும் இன்முகத்துடன் என்னருகில்….
அதற்காகவே மணமுடித்தேன்..கைப்பிடித்து கால் பிடித்து அவள் துயரங்கள் நான் துடைப்பேன்….
அறிவில்லா சமுதாயம் பொண்டாட்டி தாசன் என்ற பெயர் சூடும்….

இருக்கட்டும் அது ஓரம்…
சமுதாயம் என் குடும்பத்தை பார்த்ததில்லை…
சமுதாயம் என் உறவுகளை பேணிக்காப்பதில்லை…
சமுதாயம் இல்லறவியலில் துணையில்லை…
சமுதாயம் என்னவளின் தலைவலிக்கு மருந்து இல்லை..

அம்மாவுக்கு அடுத்த இடம் அவளானாள்…அவளே என்றென்றும் அன்னையானாள்….
அன்னை கூட வாழ்நாளில் கடந்து போவார்…
அவள் காலம் முடியும் வரை என் நிழலென அவாள்…
பிள்ளைகளை பற்றிட பாதுகாத்து,பணிகளை அவள் தலைமேல் தான் சேர்த்து…

அடுப்பூதும் பெண்ணுக்கு படிப்பெதற்கு என்பதை உடைத்தவள்….
என்னவள்…
என் எல்லாம் அவள்…

என் இதயம் நிறைந்த இறைவி
என் மனைவி….

நொடிக்குள் அடைபட்டோம் நாம்
**************************************
அந்தப் புலனம் செயலியினை
முன்பார்வைக்கு
வைத்துக் கொண்டு
முழுநாளும்
கடந்துவிடுகிறது

அவ்வப்போது ரீஃப்ரஸ்
செய்து கொண்டு
நேற்று அனுப்பிய
‘சாப்பிட்டாயா’
எனும் சொல்லை மட்டும்
இன்றைய செய்திவரை
ஸ்குரோல் செய்து
சாப்பிட்டுக் கொண்டே இருக்கிறேன்….
ஏக்க ஏப்பங்களுக்கிடையே………..

மாதமொரு அப்டேட்களில்
பின்னிப் பிணைந்த
செயலிகளின்
ஆர்ச்சிவ்களில்
புதைந்து கிடக்கும்
எனது
எண்ணை எப்படி நான்
தட்டி எழுப்புவது……..

நான் என்னவோ
உன்னைப் பின்செய்து
உனது

தனிமையாக நீ
நடப்பது போல்
பின்பக்க வருத்தத்தை
நடையில் காண்பிக்கும்

கலர் சேடிங் கொட்டியுள்ள
கடைசி டீபி புகைப்படத்தைப்
பார்த்துக்கொண்டே
நகர்கிறேன்
எனது எண்ணின்
அலையும் நுண்ணலையும்
உன் நுகர்தலுக்கு அருகில் இல்லை என்பதறியாது…

ஒவ்வொரு இரவும்
மறுநாள் விடியலை
மறுபதிவு செய்யாமல்
தொடங்குவதில்லை
என் மறுநாளிடம்
கடன் வாங்கும்
நீ
எடுக்க மறந்த ஆர்ச்சீவ்களிலும்
மற்றும் பலனில்லாமல்
கிடப்பதனால்

மூன்று பின் செட்டப்களின்
மாற்று வழியின்றி
நொடியில் அடைபட்டோம்
நாம்…..

Karkaviyi kavithaigal 7 கார்கவியின் கவிதைகள் 7

கார்கவியின் கவிதைகள்

கதவிற்கு வெளியே பூட்டு
********************************
என்னை உறக்கத்தில்
போர்த்திவிட்டு
யாரோ ஒருவர் கனவோடு
நடைபோடுகிறார்…..!

உரக்கப் பேசியவர்
என் கதவுகளின் தாழ் சத்தத்தில் மேலும் பிதற்றுகின்றனர்…!

ஏற்காத இடத்தில்
முகத்தில் நீர் ஊற்றாமல்
கலைந்த கனவுகள் ஏராளம்…!

சாவி இடுக்கில் ஏதோ முணுமுணுப்பு
நான்தானா எனக் கேட்கிறது
உடலைப்பிரிந்து காது…!

காற்றாடியின் ஓசைக்கு
வழியிடும் காதுகளுக்கு
வயது முற்றிவிடுகிறது
சலிப்பின் காரணமாக….!

மொத்தம் எடையேறிய
விடயங்களுக்குப்
போர்வையைச் சேர்த்து

விடப்படுகிறது கதவிற்கு
வெளியே பூட்டு….!

அமாவாசையும் அந்த விட்டிலும்
**************************************
மொத்த இருட்டில்
பற்றிக்கொள்ளும் பயம்
ஊருக்கே வெளிச்சமூட்டும்
ஒரு நாள் விட்டில்

இருண்ட உலகில்
மௌன கீதங்கள்
அனாதையானது யாரும்
பயணிக்காத சாலை

இழுத்து அடைக்கப்பட்ட
கதவில்
சிறு வெளிச்சம்
படிந்த கை ரேகையில்
படரும் இருள்

வாசலில் அழைப்பு மணி
வயதாகி விடுகிறது அசதிக்கு
அறையும் வராந்தாவில்
இன்று வாசலிலும்

இருளும் விட்டிலும்
கொடுத்தது வெளிச்சம்
இன்னும் ஐந்து
நிமிடத்தில் ஆட்டம்

காலம் வெல்லும் காதல்
***************************
இரவுகளின் துணை கொண்டு மெழுகுவர்த்தி ஏற்றிவிட்டேன்…!
நீ
விளையாட வானத்தில்
நட்சத்திரங்கள் அழைத்து வந்தேன்….!

பிள்ளைகளின்
புத்தகத்தில் பருவப்பாடல் பாடி வந்தேன்….!
கனமான காற்றை
மடித்து கழுத்திற்கு
மணி ஆக்கிவிட்டேன்…!

வகைவகையாய்
இரவை சோடித்து
நட்சத்திரங்களை
ஆங்காங்கே புள்ளிகளிட்டேன்….!

புதிதாக பிறந்த குழுந்தைக்கு
புத்தாடை ஆகிவிட்டேன்…!
பளபளக்கும்
தண்ணீர் தடத்தில்
மீனின் தாகமாய்
மாறிவிட்டேன்…!

எல்லாம் மாறிய
என் குணத்தில்
காதலின் வடுக்களும்

நீ
நடந்து வந்த
தடங்களையும்
கண்ணீரில்
நிரப்பி
கால் நனைத்து
பருகிறேன்…

அன்பே
என்(நம்)
காலம் வென்ற காதலால்….!

கானல் நீர்
************
திடிரென எழும் கரடுமரடான
சத்தங்களுக்கு இடையில்
ரம்யமாக கேட்கிறது
“அ ஆ” பாடல் வரிகள்
ஆத்திச்சூடியை படித்தவாறு  முதுகுச்சுமை ஏற்றிய
குழந்தை நகர்கிறது..

இரும்பு சுத்தியல் கையில் ஏந்தி
அழுக்குத்துணியில்
காக்கை எச்சம் துடைத்து

கண்ணீரில் கரைந்துக் கொண்டே
இருக்கிறது
புத்தகம் ஏந்திய
கனவினை
மாலையடைந்தவுடன்
சம்பளத்தில் இறக்கி வைக்கும்
பள்ளி செல்லா குழந்தையின் கானல் நீர் மனம்….

இனிப்பு
**********
தினம் தினம் பள்ளி சொல்லும் பொழுதெல்லாம்
தானாக திருப்பப்படுகிறது
நாவோடு சேர்ந்த சிரம்…!

அரையனா எட்டனாக்களை சேகரித்து ஒரு ருபாய் மிட்டாய் கேட்கும் குழந்தை மனம்…!
கேட்பதெல்லாம் வாங்கி கொடுக்கும் பெற்றோர் மனம்….

இன்று கடையுண்டு
உள்ளே மனிதனுண்டு
பணமுண்டு அள்ளித்தர மணமுண்டு
பூப்பெய்த மறந்தவள் இல்லை
தினம் தோன்றிய ஆசை இல்லை
கடந்து போன ஆசை இல்லை
எறும்பு மொய்க்காது
புழுக்கள் குறையில்லாது
ஆறடி குழியில் உறங்கிக் கொண்டிருக்கும்…!

எங்கோ பிறந்து
காம எச்சங்களால்
மொய்க்கப்பட்ட
பாலியல் இனிப்புகளில்
சிக்கிய
குழந்தையின் கை இனிப்பு….!

சிறகை விரி சிகரம் தொடு
*******************************
விதைகள் வலிகள் காண்பதில்லை- வான்
மழையோ பெய்தலில் கரைவதில்லை…!

கதிரவன் சோர்வை ஏற்றதில்லை-இயற்கை எவையும் இயல்பற்று கடந்த்தில்லை…!
உயரங்கள் தலை நிமிர்வில் சுருங்குவதில்லை- உன்
அடியை உயர்த்தி வழி நடத்து வழிகள் பிறக்கும் உன் பாதம் தொட்டு…!

வரப்புகளில் இல்லாத ஈரம் பயிர்களுக்கு கண்டிப்பாக உயிர் கொடுக்காது
நம் கோள வடிவ கோளத்தில் குடைகள் எதற்கு
துணிந்தெழு…!

புறாக்கள் எப்போது கழுகாக இயலாது..
கழுகிற்கு பதில் புறாக்கள் வீடடங்காது..
இரவு ஆந்தையாய் மட்டும் வாழ்ந்து விடாதே….!

முதுகெலும்பினை கிழித்தெறி-உன்
நம்பிக்கை சிறகு முளைக்கட்டும்,
உன் வேற்றி சிகரம் தொட பறக்கட்டும்…

முதற்சுழி மழையே
**********************
வீதியெல்லாம்
கோலமானப் பிறகு
மார்கழிக்கு
குறையேதும் இல்லை…!

நிரம்பிய நீரில்
நித்தம்
கோலமாடுகிறது
ஏழைகளின்
வறுமையை
வடம்பிடிக்க வந்த

வகையில்லாத
ஆற்றோட்டத்தில்
வைக்காத புள்ளிகளாய்
ரங்கோலிகளை
வண்ணங்களாய் எடுத்துக் கொண்டு
சிக்கு கோலங்களின்
ஊடு புள்ளிகளை
வகையில்லாமல்
வைத்து செல்கிறது
இந்த மழை எனும்
இயற்கை…..

தாமரையில் விரல் பிடித்த அல்லி
*************************************
ஒவ்வொரு
படிகளையும்
தொட்டுச் செல்கின்றன
தாய்மையும்
சேய்மையும்…!

நிலாக்கள்
நீருற்றிய பாதையில்
வலம் வருகின்றன…!

தாமரை
கரம்பிடித்த அல்லி
புத்தாடை போர்த்திக் கொண்டு
முன்னேறுகிறது
வானை நோக்கி….!

அனைத்து
பாதச்சுவடுகளிலும்
அன்பின் நீர்த்துளிகள்
பருகிச் செல்கின்றன
ஈரம் சுரக்காத
பாறைகள்….!

முன்பின் தெரியாத
பலருக்கு பின்பக்க விதிமுறைகளை மட்டும்
அழகியல் சொல்லி நடக்கிறது
கண்களுக்கு காதல் விருந்தாய்……!
தாயும் சேயுமாய்
அன்புகள் ஆங்கே நடைபயணம்…..!

Karkavi's Poems 6 கார்கவியின் கவிதைகள் 6

கார்கவியின் கவிதைகள்

உலகின் தலைசிறந்த சொல் ‘வறுமை’
**********************************************
“ஆயிரங்களைத் தாண்டிய பட்டாசுப் புகையில்
நமத்து போகிறது
சில அப்பாக்களின் தீபாவளி,
தூரத்து குடிசையில் வானத்தையும்
பலரின் வீட்டு வெடி ஜாலத்தையும்
காண்பித்துச் செல்கிறது பல அப்பாக்களின் தீபாவளி “

” நூறு சரத்தில் எஞ்சிய ஏழு வெடிகள்
ஏழைக்கு ஒரு சரமாகிப் போகிறதெ,
நெருப்பில் வலு இல்லாமல்
தரையின்கீழே தள்ளப்படுகிறது
பல புதுவானங்கள் “

நேற்று தீபாவளி நன்றாக இருந்தது
அம்மாவின் ஏழு வகையான பலகாரங்கள்,
இன்று மணி ஏழை கடந்தது
இதுவரை எழவில்லை
அம்மாவும்
அவர்களின் இடுப்பு வலியும் ”
ஒவ்வொரு உயிரும் கூறும்
உலகின் தலைச்சிறந்த சொல் ‘வறுமை’

நட்சத்திரக் கிழவி
*********************
அவளின்
யதார்த்த நடைப் பேச்சுவாக்கில்
கிள்ளியெறியக் காத்திருக்கின்றன
வெற்றிலைக் காம்புகள்…

ஓயாமல்
வெற்றிலைக்குப் பாக்கு இடிக்கும்
அவளிடம்
கேட்ட பிறகு
வளைந்து நிமிர்ந்து செல்கின்றன
ஊர்களின் சாலைகள்…

எத்தனை பேர் வந்தாலும்
‘ஏலே நீ அவன் மகன் தான’ என
கையடக்கி வைத்துள்ள டேடா சீட்டுகளின் சொந்தகாரியிடம்
சேகரிக்கப்படுகிறது….
மின்தடையில்லாத
டேடா தொகுப்புகளின் கணினியவள்…

அந்த மூன்று நாள்
********************
விடியல் பல இருப்பினும்
இந்தவிடியல் புதுமையே
ஆறு மணிக்கு எழுந்தவள்
ஐந்துக்கே எழுகை
ஆர அமர துவைத்தவள்
விடியுமுன்னே குளியல்
இரு நாள் யதார்த்த குளியல்
கடைசிநாள் எள் எண்ணெய் கொண்ட குளியல்…
மூன்று நாள் கழிந்து
மிச்சமிருக்கின்றன
வலியும்
ஒரு ரூபாய் சியக்காயும்….

Karkavi's Poems 5 கார்கவியின் கவிதைகள் 5

கார்கவியின் கவிதைகள்

தேநீர் இடைவேளை
***********************
கூடி அமர்ந்த குழுக்கள்
பரப்பரப்பாக சிலர்
பதட்டத்துடன் சிலர்…

நாளை என்ன நடக்கும் எனும் எண்ணத்தில் பலர்
இன்றைய நிலையில் எந்த மாற்றமும் வேண்டாமென
மற்றும் பலர்…!

ஆற்றங்கரை ஓரங்களில் அணிதிரண்டனர் பலர்..
ஆண்டு அனுபவித்தவர்கள் பலர்…!

அந்த சாலையோரத்தில் எல்லைக்கல்லில் குளிர்…
வந்த வண்டிகளும்
போன வண்டிகளும்
நின்று இளைப்பாறிச் செல்கின்றன..!

இன்றொடு முடியும்
இந்த மாலையில்
எத்தனையோ யோசனை
எத்தனையோ கவலைகள்..!

அத்தனையும்
நிரம்பி வழியும்
இந்த இனியதோர் தேநீர் இடைவேளையில்
கொஞ்சம் செய்திகளும்
கொஞ்சம் இனிப்பும்
நினைவுகளோடும்
வர்ணிப்புகளொடும்
அமைதியாகக் கடந்து செல்கின்றன….

கவிஞர் கார்கவி✍🏻
நாகப்பட்டினம்

இசையும் இதயமும்
***********************
நிலவாக நீ வர இயல் கொண்டு நா மலர்ந்தேன்…!
நினைவாக நீ மலர மலராக தினம் மலர்ந்தேன்…!
ஊடுபனி காதணைக்க கரம் நீட்டி உனையணைத்தேன்..!
வண்டாக ரீங்காரமிட்டு இதயம் நுழைய நான் விழைந்தேன்…!

மாரி போல நீ பொழிவாய்..!
ஒவ்வொரு சொட்டிலும் இசை பொழிவாய்…!
மின்னல் போல கண்ணில் படு..!
வெளிச்சம் இல்லை விருந்தாக செவிக்கு கொடு…!

இயற்கையே இசையாய்-என்
இதயமே இசையாய்…!
உலகமே நீயாய்- நின்
இதயத்தில் சிறு துளியாய்…!
தூண்டிலாடும் மனத்தே- நீ
சிறு வீணை கொண்டாயேயடி..!
இதயமே
என் இளம் வீணை ரகசியமே…!

இதோ
என் இதயராகங்களிலிருந்து வழங்குகிறேன்
இந்த
அடர்ந்த இருள்
கானகத்தில்
அள்ளிப்பருகிட
இசையாய் வழியும்
என் காதல்.

மகிழ்வின் பின் யாரோ
***************************
நான்
மகிழ்வாகத்தான்
இருக்கிறேன்
என் நானை
கூர்ந்து பார்க்கும்
உன்
கண்களுக்கு…!

யாராலும்
அறிய இயலாத
பூதக் கண்ணாடிகளை
கொண்டு பிறந்த
உமக்கு மட்டும்
எப்படி
தெரியவருகிறது…!

என்
கவலைகளின்
கானல் கடலில்
கவிழும்
காகிதக் கப்பலில்
மொத்த மன எடைகளை
நிரப்பிய
தருணங்கள் மட்டும்…!

சைட்_ஆஃப்_சனீஸ்வர்
***************************
புல்லி க்ரௌடு
நோ டவுட்
தட் இஸ் கோயில்
சைட் ஆஃப் சனீஸ்வரா….

ஆம்
இருக்குற ஏழரை இயர்ஸ்
தாண்டி கரணம் போடுற
எனக்கு. மறுபடியும்
இஸடார்ட்டிங் ஏழ்ரைஐஐ…..

வாரவாரம் அம்மா தேய்க்காத
ஜின்ஜெல்லி மிச்சத்துல
மொத்த ஏழரையும்
தீர்ந்துபோச்…….

கார்த்திகா சியாக்கா
இப்போ கனகா சியக்கா
ஆனதுதான் கொஞ்சம் வருத்தம்…

கருப்புத்துணி கலரா இருந்தா
துண்டு கட்டாம குளிக்கிற அப்பாக்கு கோவனமாவாது
இருந்திருக்கும்….

வாசலுல முப்பது
வாசல் தாண்டுனா அம்பது
சூடம் பத்தி அம்பது
சுட சுட இட்லி அம்பது
இட்டிலி போல மல்லிப்பூ அம்பது

மொத்த துணிய
உருவிப்போட்ட
அப்பாக்கு கோவனத்த
கலட்டி போன மணமல்ல
நேத்துதா வாங்குனாதால….

பொட்டிக்குள்ள போடச்சொன்ன
துணியெல்லாம்
படியோரம் பல்லிழிக்கு
வாய் திறந்து கெடக்குது பெட்டி….

ஒரு சொட்டு எண்ணெயில
ஆரம்பிச்ச பரிகாரம்
இப்ப சிந்தால்,மெடிமிக்ஸ் ல
நுரை நுரையா முடிஞ்சு போகுது…..

துணிமாத்த அறை அறிய இடங்கோடுத்த
பெரியகுளத்துக்கு
ஆம்பளைக்கும் மானம் இருக்குறத தண்ணில எழுதி விட்டுருச்சி போல…..

துணிமாத்தி புருசனும் புள்ளையும் நடுக்கல்ல
இப்பதான் ஐபுரோவும்,லிப்ஸ்டிக் தேடுது அந்தாண்ட ஒரு அக்கா….

வேண்டிறது சனி
தொப்பையனுக்கு எதுக்குயா
தேங்கா…சோடி வேற அம்பது……

அன்னதானம் அந்தபக்கம்
ராசிக்கொரு கேட்டலாக்குல
என்ராசிக்கு விரையமாம்
இருபது சாப்பாடு தரணுமாம்…..

எதுக்கினே தெரியும்
விளக்கும் எண்ணையும்
துணையோடு போறதால
வாங்கிக்கிட்டா எண்ணெயும்….

செருப்பு போட இலவசம்
பேக் வைக்க இலவசம்
சிரிச்சிக்கிட்டே
மொத்தத்தையும்
அர்ச்சனைல லாக் பன்னிட்டாப்டி…….

இந்தபக்கம் டோக்கன்
அந்த பக்கம் டோக்கன்
சாமிக்கே வியர்த்துடன்
இந்த வட்டத்த சொன்னா….

அறியாத சாமி
அரை நொடி பாக்க
அந்தப்பக்கம் அம்பது டோக்கனு
இந்தபக்கம் நூறு டோக்கனு…
அந்த அரைக்குள்ள
ஏழரைய சரிபன்ன
கட்டம்பாக்குற
அந்த மனுசனுக்கு தெரியாதது
வருத்தம்தா…..

எப்படியும் ஏழரை கன்ஃபார்ம்
என்னவோ
இன்னைக்கே முடியுறமாறி
முழுசா முழுவிட்டு வான்
வீட்லேந்து போனுவேர….

கும்பிடாத நின்னுனு
சொல்லியனுப்புன
அம்மாகு தெரியாது
கும்புடலனா இன்னும் ஒரு  ஏழ்ரைய சேத்துவிட்டா என்ன செய்யனு…..

வருசா வருசம்
ராசிவிட்டு ராசி மாற்ற
ஈஸ்வரா
காலம்புல்லா
கூட வரமாறி லேடீஸ்வரனா
மாடிஃபை ஆகிட்டியேயா……

சாதகத்த
மாத்திடுற
கொஞ்சம் பாத்து
பன்னி விடுமய்யா….

ஏற்கனவே ஏழரை பல சீரொக்கல பின்னடி தாங்கி நிக்கிது
இப்ப நீ வர கன்பார்ம் பன்னிபுட்ட

என்னத்த சொல்ல
ஏற்கனவே விரையத்த
அனுபவிச்சவனுக்கு
வேர என்ன விரையம்
கொடுப்ப நீ
நீ கொடுத்தாலும் விரையம்
ஆக ஒன்னுமில பிகாஸ்
இரிந்தாதானே விரையம் பன்ன..
சோ….
இத்தோட நீ முடிச்சிக்கிர
இந்த கும்பராசிக்கு…

இயர் ஆஃப்டர் வில் மீட்
அவர் சைட் ஆஃப் சனீஸ்வரா……..