ஹிஜாப் வழக்கு தமிழில் ம.கதிரேசன்
ஸ்ரீராம் பஞ்சு
———————————————————–
கட்டுரையாளர் ஸ்ரீராம் பஞ்சு சென்னை உயர்நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர்.
சாமுவேல் பட்லர் என்பவர்19 ஆம் நூற்றாண்டின் இங்கிலாந்து இலக்கிய ஆளுமையாவார். எரவான் (EREWHON) என்பது அவரது புதுமையான நாவல். எரவான் என்பது உண்மையில் இல்லாத ஒரு கற்பனை தேசம். அந்த நாவலில் அவரது காலமான விக்டோரியா காலச் சமூகத்தை சாமுவேல் பட்லர் எள்ளி நகையாடி இருப்பார். எரவான் ஒரு பகடி இலக்கியம்.
இந்த இலக்கிய முறையை பின்பற்றி கட்டுரையாளர் ஸ்ரீ ராம் பஞ்சு ஒரு கற்பனையான நீதிமன்றத்தில், கற்பனையான நீதிபதிகளால், ஒரு உண்மையான பிரச்சனையின் மீது வழங்கப்பட்ட தீர்ப்பைக் கூறுகிறார். அதுவே சமூகத்தின் மனசாட்சியாக இருப்பதை காண்கிறோம்.
நீதிமன்றங்களின் சமூகப் பொறுப்பின்மையை சாடுகிறார்.
———————————————————-
ஹிஜாப் மனுதாரர்களின் வாதம்
———————————————————–
கர்நாடக மாநிலப் பள்ளி வாரியத்தின் பள்ளிகளுக்கான சீருடை விதிகளை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. இந்த சீருடைநெறிமுறைகளை அமல்படுத்துவதால் முஸ்லிம் மாணவிகள் தலையை துணியால் மறைக்கும் ஹிஜாப் அணிய முடியவில்லை; ஹிஜாப் அணிவது தடுக்கப்படுகிறது. அவ்வாறு அவர்கள் ஹிஜாப் அணிய விரும்பினால் பள்ளிக்குள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. இதன் மூலமாக அவர்களின் கல்வி உரிமை மறுக்கப்படுகிறது என்பது மனுதாரர்களின் வாதமாகும்.
இந்த மனு மீது பத்து நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டுமென்று பள்ளி நிர்வாகத்திற்கு குறுகிய கால அவகாச நோட்டீஸ் நீதிபதிகளாகிய நாங்கள் பிறப்பித்தோம்..
சீருடை குறித்த அடிப்படை ஒழுங்கு நெறிமுறைகள் பற்றி ஆய்வு செய்தோம். அது மாணவர்கள் கட்டாயம் அணிந்து வர வேண்டிய உடைகளை பற்றிக் கூறுகிறது. அதில் தலையில் அணியும் துணி பற்றிக் குறிப்பிடப்படவில்லை.
ஹிஜாப் என்பது தலையின் பின் பகுதியையும், கழுத்தையும் மறைக்கும் ஒரு சிறிய துணி. அது முஸ்லிம் பெண்கள் அனைவரும் அறிந்த உடை; அணியும் உடை. அது மத நடைமுறையாக கடைபிடிக்கப்படுகிறது.
ஹிஜாப்பிற்கு தடை விதிக்க கல்வி நிறுவனத்திற்கு உரிமை உள்ளதா?
———————————————————–
கல்வி நிறுவனங்கள் ஹிஜாப் அணிய விரும்பும் பெண்களை அதை அணிவதில் இருந்து தடுப்பதற்கு பள்ளி நிர்வாகத்திற்கு அதிகாரம் உள்ளதா என்பதே எங்கள் அன்பு எழும் முக்கிய கேள்வியாகும்.
சீருடை
—————-
சீருடை என்பது சமச்சீரான தன்மையைக் குறிக்கிறது என்பவர்களின் கருத்தை நாங்களும் ஏற்கிறோம். சீருடை என்பது அனைத்து மாணவ மாணவியரும் அணியும் உடை என்றே பொருள்படும்.
இதன் மூலம் பல்வேறு சமூக அடுக்கைச் சேர்ந்தவர்களின் வித்தியாசங்கள் சரிப்படுத்தப்படும் என்பது இதில் உள்ள சாதக அம்சம். அனைத்து மாணவர்களுக்குமான ஒற்றுமையான சூழலை சீருடை வழங்குகிறது. இதன் மூலம் அனைவரும் சமம் என்று உணர வைக்க முடியும். இவை யாவும் குழந்தைகள் கல்வி கற்க உதவுகிறது.
நீதிமன்றம் எடுத்துக்கொள்ளும்
முக்கிய அம்சம்
———————————————————–
இவையெல்லாம் இருப்பினும் கூட,
சும்மா ஒரு வகுப்பறையும், எளிய சீருடை செட்டும் மட்டுமல்ல எங்கள் முன்புள்ள பிரச்சனை.
இந்துக்கள்,முஸ்லிம்கள் கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள் மற்றும் பல்வேறு மதங்களை உள்ளடக்கியது தான் எனது நாடு என்பது பற்றி தான் எங்களது அக்கறை மிகுந்துள்ளது. இதுதான் முக்கியமான பிரச்சினை. இந்திய அரசியல் சட்டத்தால் நாம் அனைவரும் ஒன்றாக பிணைக்கப்பட்டுள்ளோம். அது சமத்துவம் ,சுதந்திரம் மற்றும் சகோதரத்துவம் ஆகியவற்றை நமக்கு வழங்கியுள்ளது. அது சிறுபான்மையினரின் பாதுகாப்பையும் உள்ளடக்கியுள்ளது.மதச்சார்பற்ற பார்வை மற்றும் நடைமுறைகளை கட்டாயமாக்குகிறது. நமது சமூகக் கட்டமைப்பில் சகிப்புத் தன்மையை வலியுறுத்துகிறது. சமத்துவம் மற்றும் பரஸ்பர மரியாதையிலிருந்து வரும் சகிப்புத்தன்மை பற்றியே பேசுகிறேன். இவ்வாறு தான், நமது அரசியல்சட்ட அமைப்பு விழுமியங்களை நாங்கள் விளக்குகிறோம்.
கர்நாடக அரசு வழக்கறிஞரிடம் முன்வைத்த கேள்விகள்
—————————————————
ஒரு பிரச்சினையில் உண்மையை கண்டறிவதற்கான கேள்விகளை முன் வைப்பது நீதிபதியின் சிறப்புரிமையாகும். அதன்படி, கர்நாடக மாநில அரசு வழக்கறிஞரிடம் எங்களின் சில வாதங்களை முன் வைத்தோம்.
(1) பல வருடங்களாக குழந்தைகள் பள்ளிகளுக்கு போய்க் கொண்டு தான் இருக்கிறார்கள். சீருடை அணிந்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஹிஜாபை திடீரென தடை செய்வதற்கான அவசியம் என்ன வந்தது?
(2)நீங்கள் பரிந்துரைத்த சீருடையில் தலையில் அணியும் முக்காடு ஒன்றுதான் பிரச்சனையா? அது எந்த வகையில் குழந்தைகளின் கல்வியில் குறுக்கிடும்?
அது கற்றலின் போது, மாணவிகள் கேட்பதையோ, பார்ப்பதையோ அல்லது கவனிப்பதையோ தடுக்குமா?
(3) உடல் சுமக்கும் அனைத்து வகையான மத அடையாளங்களையும் பட்டியலெடுத்து விட்டீர்களா? மார்பில் அணியும் பூணூல், கையில் கட்டும் கயிறுகள், நெற்றியிலிடும் திலகம், நெற்றியில் பூசும் திருநீறு, மணிக்கட்டில் அணியும் உலோக வளையங்கள், தலையில் அணியும் டர்பன் இவைகள் யாவும் உடலில் தரிக்கப்படும் மத அடையாளங்கள் தானே! இதுபோன்று விரிவான பட்டியல் எடுக்கப்பட்டிருந்தால் அதை எங்களிடம் காட்டுங்களேன் பார்ப்போம்!
பதில் அளிக்காத கர்நாடக
அரசு வழக்கறிஞர்
————————————————————
ஒரு வழக்கு இவ்வளவு மோசமாக தகர்ந்து போவதை நாங்கள் இதுவரையில் பார்த்தது கிடையாது. நாங்கள் கேட்ட முதல் இரண்டாம் கேள்விகளுக்கு கர்நாடகா அரசு வழக்கறிஞரிடம் இருந்து பதில் இல்லை. அரசு வழக்கறிஞர் ஓடி ஒளிந்து கொண்டார். தான் பள்ளி வாரியத்தில் இருந்து சீருடைக்கான இது போன்ற அறிவுறுத்தல்கள், நெறிமுறைகளை பெற முடியவில்லை. பள்ளி வாரியத்திற்கு இதற்கான பதில்களை வழங்க விருப்பமும் இல்லை என்பதே அரசு வழக்கறிஞரின் பதிலாக இருந்தது.
இரண்டு எளிய சோதனைகள்
————————————————————
இரண்டே இரண்டு விசயங்களை எடுத்துக் கொள்வோம். ஒன்று பாகுபாடு. ஒரே ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை மட்டுமே குறி வைப்பதில் இருந்தே மாநில அரசின் பாகுபாடு அப்பட்டமாக தெரிகிறது. அன்வர் அலி சர்க்கார் தொடர்ந்த வழக்கில் நீதிபதி விவியன் போஸ் (1950 களில் இந்திய உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றிய புகழ்பெற்ற நீதிபதி) வழங்கிய புனிதமான தீர்ப்பைத்தான் அடிக்கடி மேற்கோளாக சுட்டிக்காட்டப்படுகிறது.
அரசின் பொது நிர்வாகம் கெட்ட நோக்கத்துடனும் , சமத்துவமற்ற கைகளுடனும் நிர்வாகம் செய்யக்கூடாது என்ற அவரின் சொல்லாடல் தான் நினைவுக்கு வருகிறது.
இரண்டாவது விசயம் நியாயத்தன்மை மற்றும் பகுத்தறிவான செயல்பாடு.
ஏன் எடுத்த எடுப்பிலேயே கல்வி வாரியம் ஹிஜாபை தடை செய்ய வேண்டி வந்தது? கல்வி வாரியத்தின் நெறிமுறைகளில் ஹிஜாப் தடை செய்யப்பட்டுள்ளதா?
எங்களைப் பொறுத்தவரையில் வரையில் ஹிஜாப் முஸ்லிம் மத நம்பிக்கைகளில் அடிப்படையானதா என்பதெல்லாம் பொருத்தமற்ற கேள்விகள். அது முஸ்லிம் மத நம்பிக்கையில் ஒரு பகுதி என்பதே எங்களுக்கு போதுமானது.
நீதிமன்றச் சுவர்களில் மத அடையாளங்களுடன் நீதித்துறை ஆளுமைகளின் படங்கள்
————————————————————–
மரியாதைக்குரிய நீதிமன்ற அறைகளை சுற்றி எங்களின் கண்கள் வட்டமிட்டன. புகழ் பெற்ற நீதிபதிகள் ,வழக்கறிஞர்கள் அவரவர் மதங்களுக்குரிய
மத அடையாளங்கள் ஆன தலையில் அணியும் உடைகளை அணிந்திருக்கும் படங்கள் நீதிமன்றச் சுவர்களை அலங்கரிக்கின்றன. அவர்களும் தங்களின் தொழிலுக்குரிய சட்டங்களால் ஆளப்படுகிறவர்கள்தானே!
ஆனாலும் நீதிமன்ற வாசலில் நுழையும் முன்பு தலைகளில் அணியப்படும் மத அடையாளங்களை களைந்து விட்டு வாருங்கள் என்று கேட்பதற்கு ஒருவருக்கும் தோன்றவில்லையே!
ஏன்? அப்படி கேட்பது அவர்களின் நம்பிக்கையை அவமதிப்பதாகிவிடும் அல்லவா!
பரந்த பார்வை
—————————-
ஹிஜாப் போன்ற பிரச்சனைகளில் முடிவெடுக்கும் போது-நாம் எவ்வாறு அரசியல் சட்டத்தை புரிந்து கொள்கிறோம்; எவ்வாறு அதை அமல் படுத்துகிறோம் என்பது மிகவும் முக்கியமானதாகும். நீதிபதிகளாக நாங்களெல்லாம் எங்கள் முன்பு குவிக்கப்பட்டுள்ள வழக்குக் கட்டுகளில் எங்களது குறுகிய பார்வை குறுக்கிட்டு விடக்கூடாது.
விரிந்து பரந்த பார்வையை
கிட்டப்பார்வை தடுப்பதற்கு அனுமதித்து விடக்கூடாது.
நீதிபதிகளின் வார்த்தைகள் ஆண்கள், பெண்களின் நடத்தையை ஒழுங்குபடுத்துகிறது. நீதிபதிகளின் வார்த்தைகள் அரசியலமைப்புச் சட்டத்தின் வலிமையை கொண்டுள்ளது.
சிறுபான்மையினர் மீதான அடக்கு முறையை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்
—————————————————————–
சமீப காலங்களில் சிறுபான்மையினர்,அதிலும் குறிப்பாக முஸ்லிம் சமூகம் தங்களின் மதத்திற்காகவே
சமூகவிலக்கம், வன்முறை போன்றவற்றை எதிர்கொண்டுள்ளன. இந்த குற்றங்களை செய்யும் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய ஆட்சி நிர்வாகம் குற்றவாளிகளை கடுமையாக தண்டிப்பதில்லை என்பது யாரும் அறியாத ரகசியம் ஒன்றும் அல்ல.
ஒரு சமூகம் பாதுகாப்பின்மையை உணர்ந்தால் அது எதிர்வினையாற்றும். அந்த எதிர்வினையானது எளிதில் புலப்படும் ஒரு வடிவத்தின் வழியாக வெளிப்படும். அதை ஆர்ப்பாட்டம் போன்ற எதிர்ப்பு இயக்கத்தின் வழியாக வெளிப்படும். ஹிஜாப் போன்ற எளியில் புலப்படும் ஒரு வடிவத்தின் வழியாகவும் வெளிப்படும்.
கல்வி நிர்வாகம் ஹிஜாப் போன்ற மத அடையாளங்கள் மீது கவனம் செலுத்தக் கூடாது. முஸ்லிம் சமூகத்தினருக்கு பாதுகாப்புணர்வை வழங்க வேண்டியது முக்கியமாகும். அது அனைவரின் பிறப்புரிமையாகும்.
கர்நாடகம் தமிழகத்திடம் கற்றுக்கொள்ள வேண்டும்
———————————————–
கர்நாடகம் தனது பக்கத்து மாநிலமான தமிழகத்திடம் கற்றுக் கொள்ள வேண்டும். குறிப்பிட்ட மதத்திற்கு எதிரான எந்த விதமான வன்முறைகளும் இன்றி இயங்க அந்த மாநிலம் போராடுகிறது. அங்கே சில இடங்களில் கல்வி நிர்வாகம் ஹிஜாபை தடை செய்வதாக அறிந்தவுடன், அரசின் கரங்கள் விரைவாக செயல்பட்டு கல்வி நிர்வாக முயற்சிகளுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைத்தன. அங்கு ஹிஜாப் என்பது ஒரு பிரச்சனையே அல்ல. ஹிஜாப் அணிவதும் அணியாததும் அவரவர் தேர்வு. ஹிஜாப் பிரச்சனைக்கு பின்னர் தமிழ்நாட்டில் ஹிஜாப் அணியும் மாணவிகளின் எண்ணிக்கை அதிகரிக்கவும் இல்லை.ஒரு விசயத்தில் தேவையற்ற பரபரப்பை ஏற்படுத்தி பிரச்சினையாக்க கூடாது என்பதே தமிழ்நாட்டிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்.
கவனம் செலுத்த வேண்டியது தலைக்குள் தான்- தலைக்கு வெளியில் அல்ல
—————————————————–
ஒரு தேசத்தில் ஒரு சிறிய துண்டு துக்காணி துணிதான் முக்கியமான பிரச்சனையா? அதுதான் எல்லாவற்றையும் தீர்மானிக்குமா?
நமது சுதந்திரமும் ,வாழ்க்கையும் ஒரு துண்டு துக்காணி துணி தீர்மானித்து விடுவதை நிச்சயமாக நமது தலைவர்கள் விரும்ப மாட்டார்கள் என்று நம்புகிறோம்.
எங்கள் நம்பிக்கைக்கு எதிராக மெல்லிய எதிர்ப்புக்குரல் எழுவதை நாஙங மறுக்கவில்லை
. அந்த எதிர்ப்புக் குரலும் மட்டுப்படுத்தப்படும் என்றும் நம்புகிறோம்.
கல்வி வாரியம் மாணவர்களின் தலையின் மீது என்ன அணியப்பட்டிருக்கிறது என்பதில் கவனம் செலுத்துவதை விடுத்து, மாணவர்களின் தலைக்குள் என்ன செல்கிறது என்பதன்மீது தான் கவனம் செலுத்த வேண்டும். அதுதான் அவர்களின் வேலை.
வரலாற்றை திருத்தி எழுதுதல், மதிப்புக்குரிய தேசத் தலைவர்களை இருட்டடிப்பு செய்தல் போன்ற செயல்பாடுகளில் கல்வி வாரியம் ஆர்வம் காட்டக்கூடாது. அரசியல் சட்டப்படி ஆட்சி செய்ய தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் கலாச்சாரம், வரலாற்றை தங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு திருத்தி எழுதுவதில் ஆர்வம் காட்டக்கூடாது.
பாதுகாப்பற்ற உலகத்தில் கூடுதல் பாதுகாப்பின்மையை உருவாக்கக் கூடாது
———————————————————–
மாணவர்களுக்கு நல்ல கல்வி அளிப்பதும், தங்களின் வாழ்க்கைப் பாதையை அவர்களே அமைத்துக் கொள்ளும் வண்ணம் அவர்களை தயார் செய்வதும் தான் கல்வி நிர்வாகங்களுக்குரிய கட்டாய கடமையாகும்.
நாம் உருவாக்கிய இன்றைய உலகமானது இளைஞர்களுக்கு போதும் போதும் என்ற அளவுக்கு பாதுகாப்பற்றதாக உள்ளது. கல்வி கற்பிப்பவர்கள் மாணவர்களுக்கு மேலும் கூடுதல் பாதுகாப்பின்மையை உருவாக்கி விடக்கூடாது.
மதப் பிரச்சனையை கொதி நிலைக்கு கொண்டுவர உதவக்கூடாது நீதிமன்றம்
————————————————————-
ஏன் இந்த வழக்கை சில வாரங்களுக்குள்ளாகவே விரைவாக முடித்துவிட்டோம் தெரியுமா? அதற்கான
காரணங்களை விளக்குகிறோம்.
மதங்களுக்கு இடையில் சர்ச்சைகளை உருவாக்க வேண்டும் என்று எண்ணும் ஒரு சிலரின் ரகசிய விருப்பத்தை மோப்பம் பிடித்து விட்டோம். நீதிமன்றமானது இந்த வழக்கை கொதிநிலையிலேயே நீண்ட காலம் வைத்திருந்தால் சமூகத்தை பிளக்கும் தினசரி தலைப்புச் செய்திகள், பொறுப்பற்ற வாக்குமூலங்கள் குவிந்துவிடும்.
அது நமது சமூகக் கட்டமைப்பைத் தாக்கி சுக்குநூறாக்கிவிடும். அது தொலைக்காட்சிகளுக்கு பெருந்தீனியாகிவிடும். தொலைக்காட்சி தொகுப்பாளர்களின், செய்தியாளர்களின் டிஆர்பி ரேட்டை அதிகரிக்கும். அதை நாங்கள் ஊக்குவிக்க மாட்டோம். அதற்கு நாங்கள் பங்குதாரராக இருக்க மாட்டோம்.
நீதிபதிகள் கவனம் செலுத்த வேண்டிய பிரச்சனைகள்
———————————————————
இது போன்ற பிரச்சனைகள் எந்த அளவுக்கு கடுமையாக கையாளப்படுகிறதோ அந்த அளவுக்கு நாட்டுக்கு நல்லது.
எங்கள் கருத்துக்களை சுருக்கி இறுதியாகச் சொல்வதென்றால்-
அரசியலமைப்புச் சட்டமும் சட்டங்களும் மக்களின் மேம்பட்ட வாழ்க்கைக்காகத்தான் இருக்கின்றன. அதை உறுதிப்படுத்துவதே எங்களின் பணி. ஆடை அணிதல் போன்ற பிரச்சனைகளில் திசை திருப்பப்படுவதை விட நாங்கள் கவனம் செலுத்த வேண்டிய முக்கியமான பணிகள் ஏராளம் உள்ளன.
தண்டனை சட்டத்தின் படி, விசாரணை இல்லாமலேயே ஏராளமானோர் கைதாகி தொடர்ந்து சிறைவாசம் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது பிரச்சனை பற்றி கவனம் செலுத்த வேண்டி உள்ளது.
—————————————————————–
நன்றி- பிரண்ட் லைன்
நவம்பர்,18,2022
—————————————————————–
தமிழில் ம.கதிரேசன்