ஒரு கிளியின் ஒப்பாரி கவிதை – செ.கார்த்திகைசெல்வன்
காலம்போட்ட
கோலத்தால்
கருப்பாய் நானும்
ஆனேன்
மனிதன் எண்ணம்
மாறியதால்
நானும் வண்ணம்
மாறினேன்
நல்மாற்றமிங்கே
நிகழ்ந்திட்டால்
சுயவண்ணம் நானும்
சூடுவேன்
மகிழ்ச்சியோடே
சிறகடித்தேன்
நல் பசுமையோடே
உலா வந்தேன்
கொஞ்சிப்பேசிடும்
குரல்கொண்டேன்
குழலாய்ப் பாடிடும்
வரம்கண்டேன்
காண்பர்க்கோ நான்
பரவசம்
நித்தம் புத்துணர்ச்சியோ
என்வசம்
மங்கையும் மயக்கம்
கொண்டிடுவாள்
தங்கையாய் நினைத்துக்
கொஞ்சிடுவாள்
கவிஞனோ எனைப்
பாட்டில்வைப்பான்
கலைஞனும் கரகமாய்த்
தலையில் வைப்பான்
தினம் பழந்தின்னும்
ஜீவன் நான்
மரப்பொந்தினுள் வாழும்
மகாராணியும் நான்
கூட்டுவாழ்க்கையே
என்குடும்பம்
அங்கு நிறைந்திருக்குமே
நீங்கா இன்பம்
பசுமைவெளிகள்தானே
என் ஆதாரம்
அது பரவசங் கொள்ளுங்
கூடாரம்
யாருக்கும் இடையூறாய்
இல்லையே
நாங்களும் இயற்கை
அன்னையின்
பிள்ளையே
இப்படியிருந்தது எம்
பயணம்
சற்றே நெருங்குது
ஒரு மரணம்
பரவலாய்
வாழ்ந்த இனம் எனது
இன்று நேர்ந்த
கொடுமைசொல்ல
கண்ணீர் வருது
குற்றமேதும்
இழைத்தோமா?
எம் சுற்றம்
குறைந்து போயிற்றே
கணினியுக
மானிடரே!
எம்மின
வலியைக் கொஞ்சம்
உணர்வீரோ!
மரம்தானே எங்கள்வீடு
மனசாட்சியின்றி
அழிக்காதீர்!
மரம்தானே
எங்கள் உலகம்
மறந்தும்கூட
வெட்டாதீர்!
சுதந்திரம்தானே
எங்கள்வாழ்க்கை
கூண்டுக்குள்ளே
அடைக்காதீர்!
பசுமைதானே எம்
வாழ்வாதாரம்
இழைக்காதீர்
இனியும் சேதாரம்!
மானிடா மானிடா
திருந்திடுவாய்!
என் கண்ணீரின்
வலியை
உணர்ந்திடுவாய்!
எனக்காய் மட்டும்
அழவில்லை
உனக்கும்
சேர்த்தே
அழுகின்றேன்!
மானிடா மானிடா
திருந்திடுவாய்!
மரங்களை மீண்டும்
வளர்த்திடுவாய்
மரங்களை நீயும்
அழித்திட்டால்
மனித இனமே
அழிந்துவிடும்!