நூல் அறிமுகம் : ஷான் ’வெட்டாட்டம்’ – ரா.ரமணன்

நூல் அறிமுகம் : ஷான் ’வெட்டாட்டம்’ – ரா.ரமணன்




266 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகத்தை இரண்டு மூன்று நாட்களில் முடித்து விட்டேன்.அவ்வளவு சுவாரசியாமான புத்தகம். சின்ன வயதில் தமிழ்வாணன் துப்பறியும் கதைகளை இப்படி படித்திருக்கிறேன்.ஆனால் இது தமிழ்நாட்டளவில், இந்திய அளவில் ஏன் உலகளவில் நடைபெற்ற நடைபெற்றுக் கொண்டிருக்கும் அரசியல் சம்பவங்களை கற்பனை கலந்து நல்ல படைப்பாக எழுதப்பட்டிருப்பது.

எம்ஜியார்,கருணாநிதி,ஜெயலலிதா ஆகிய ஆளுமைகளை விமர்சனத்துடனும் இந்திய அரசியலுக்குள் அவர்கள் இயங்க வேண்டியிருப்பதையும் கலந்து எழுதியிருக்கிறார். சுஜாதாவுடைய விறுவிறுப்பையும் விஞ்சுகிறது இவரது கதை சொல்லும் பாங்கு.பின் குறிப்பாக பனாமா ஆவணங்கள் குறித்து விவரங்களையும் அது தொடர்பாக மேலும் தெரிந்து கொள்ள இணைப்புகளையும் கொடுத்திருப்பது இவரை உலக தரத்திற்கு உயர்த்துகிறது. ப.சிங்காரத்தின் ‘புயலிலே ஒரு தோணி’யையும் இதையும் ஒப்பிடலாம்.

கணினி, ஹேக்கிங் ஆகியவை புத்தகம் முழுவதும் வருவது இன்றைய இளைஞர்களுக்கு நல்ல தீனி.அரசியல்வாதிகளுக்கு பந்தமோ பாசமோ கிடையாது;அவர்களுக்கு பதவியும் பணமுமே முக்கியம் என்பதை விநோதனின் பாத்திரம் காட்டுகிறது.ஆனால் வருணும் கயல்விழியும் சற்று வித்தியாசமான பாத்திரங்கள். பெரிய மனித வீட்டுப் பிள்ளைகள் வழக்கமாக செய்யும் அட்டகாசங்களுடன் அறிமுகமாகும் வருண் கொஞ்சம் கொஞ்சமாக சூழ்நிலைகளினால் எப்படி ஒரு கை தேர்ந்த அரசியல்வாதியாகவும் அதே சமயம் பொறுப்பான நிர்வாகியாகவும் மாறுகிறான் என்பது சிறப்பாக சொல்லப்பட்டிருக்கிறது.நாலா பக்கங்களிலிருந்தும் வீசப்படும் சதி வலைகளிலிருந்து எப்படியாவது வருண் தப்பிக்க வேண்டும் என்று நாமும் கதையோடு ஒன்றி விடுகிறோம்.

ஒரு இக்கட்டான கட்டத்தில் வருணை அவனது அரசியல் எதிரியே காப்பாற்றுகிறாள் என்பது மட்டும் சற்று நெருடுகிறது. அதுவும் ஒரு அரசியல் செயல்தான் என்றும் அதே சமயம் கயல்விழி அவன் மேல் வைத்திருப்பது வியப்பா காதலா என்று நாமும் சேர்ந்து குழம்ப வைத்திருக்கிறார் கதாசிரியர். உயிருக்கும் பதவிக்கும் ஆசைப்பட்டு காதலியை கை விடும் அனந்தராமன் பாத்திரம் ஒரு தனித்தன்மையானது.

தலைவர்கள் மேல் மக்கள் வைத்திருக்கும் கண் மூடித்தனமான பக்தி குறித்து வருண் மட்டுமல்ல ஒரு ஆரோக்கியமான அரசியலை விரும்பும் எண்ணற்றவர்களுக்கும் புரிந்து கொள்ள முடியாததே. சென்னை வெள்ளத்தை அடிப்படையாகக் கொண்டு இளைஞர்கள் குறித்து நல்ல கருத்துகள் வைக்கப்பட்டிருக்கிறது. சென்னை வெள்ளம்,ஜல்லிக்கட்டு ஆகியவை அடுத்து அப்படிப்பட்ட இளைஞர்கள் மக்களுக்கு ஆதரவாக திரட்டப்படுகிறார்களா?

அரசியலில் ஈடுபடும் பெண்கள்,செய்தித்துறையில் பெண்கள் என பல நல்ல எடுத்துக் காட்டுகள் இதில் இருந்தாலும் அவர்கள் ஆண்களை விட பலவீனமாவர்களாகவே காட்டப்படுகிறார்கள். அரசியலும் பொருளாதாரமும் இலக்கியமும் ஷானிடம் வெள்ளமாக ஓடுகிறது. மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் முன்னுரையிலிருந்து பின் அட்டையில் மேற்கோள் காட்டியிருப்பது இந்த நவீன இளைஞர் மரபில் காலூன்றியிருக்கிறார் என்று தெரிகிறது.

நூல் : வெட்டாட்டம்
ஆசிரியர் : ஷான் 
பதிப்பகம் : யாவரும் பதிப்பகம்
விலை :₹250

நூல் அறிமுகம் : சுகுணா திவாகரின் திராவிட அரசியலின் எதிர்காலம் – அன்புச்செல்வன்

நூல் அறிமுகம் : சுகுணா திவாகரின் திராவிட அரசியலின் எதிர்காலம் – அன்புச்செல்வன்




இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகள் சுகுணா திவாகர் வார்த்தைகளில் சொல்வதானால், “ஈழப்போராட்டம் முடிவுக்கு வந்து இறுதி யுத்தத்தின் ரத்தச்சுவடுகள் தமிழகத்திலும் தாக்கம் ஏற்படுத்திய” 2009-ல் தொடங்கி 2019 வரையிலான தமிழக அரசியல் குறிப்பாக திராவிட இயக்க நகர்வுகள் குறித்த பதிவுகளே ஆகும்.

அடிப்படைகளின் மரணம் என்ற முதல் கட்டுரை எழுதப்பட்டு இப்போது 13 ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்த 13 ஆண்டுகளில் முழுதாகப் பத்தாண்டுகள் திமுக அதிகாரத்தில்/ஆட்சியில் இல்லாத காலம். இந்தக் காலகட்டத்தில் திமுக தனது தவறுகளை சுயபரிசோதனை செய்து திருத்திக் கொண்டு தனது முக்கிய கருத்தியல் ரீதியிலான கொள்கை கோட்பாடுகளை சூழலுக்கேற்ப மீளுருவாக்கம் செய்து புதிய செயல்திட்டம் வகுத்துள்ளதா என்பது மிக முக்கியமான கேள்வியும் திராவிட அரசியலின் எதிர்காலத்திற்கான பாட்டையுமாகும். ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு 2021ல் பதவியேற்ற போது, பிற சனநாயகவாதிகளைப் போலவே நானும், சுயமரியாதை, சமதர்மம், சமூகநீதி குறித்த ஒரு குறைந்தபட்ச புரிதலாலான செயல்திட்டத்துடன் தனது ஆட்சியை தொடங்கியுள்ளதாகவே கருதுகிறேன். வரப்போகும் 5 ஆண்டு கால ‘திராவிட மாடல்’ ஆட்சியே திராவிட அரசியலின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் முக்கிய காலகட்டமாக இருக்கும் என்று தோன்றுகிறது.

இன்று வரை ஊழல் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டு சிறை சென்று வந்த ஜெயலலிதாவை, “இரும்புப் பெண்மணி, பன்மொழி வித்தகர், அறிவாளி, பெண்களுக்கான முன்மாதிரி(?)” என்றெல்லாம் பார்ப்பனீய ஊடகங்களும் பார்ப்பனீயத்தை உயரிய கலாச்சார பண்பாட்டு நிலையாகக் கருதிக் கொண்டிருக்கும் தமிழக இடைநிலை ஆதிக்க சாதிகளும் ஊதிப் பெருக்கியபடியே இருக்கின்றன. எம்.ஜி.ஆரில் தொடங்கிய மதிப்பீடுகளின் வீழ்ச்சி ஜெயலலிதா காலத்தில் அதலபாதாளத்தில் விழுந்து இபிஎஸ்_ஓபிஎஸ் காலத்தில் மீளமுடியாத நிலைக்குச் சென்றதை மறுக்க முடியாது. மாநில நலனுக்கானதாகவும், ஒன்றிய அரசுக்கு எதிரானதாகவும் ‘ஜெ’ முன்னெடுத்த சில ‘நற்காரியங்கள்’ தனக்கான முக்கியத்துவத்தை நிலைநாட்டிக் கொள்ளும் தன்முனைப்பே என்பதை புரியச் செய்கிறது ‘தந்தை’ பெரியாரும் ‘அம்மா’ ஜெயலலிதாவும் என்ற கட்டுரை.

இரண்டு கழகங்கள் என்ற கட்டுரை திமுக, அதிமுக செயல்பாடுகளை நுட்பமாக ஒப்பிடுகிறது. ‘குடும்ப/வாரிசு அரசியல்’ – தமிழகத்தில் கருணாநிதி தொடங்கி வைத்த பெருங்கேடு- இப்போது கட்சி பாகுபாடின்றி பல கட்சிகளில் தொடர்வது கழகங்கள் ஏற்படுத்திய அவல விளைவுகளில் ஒன்று. எவ்வித அரசியல் பார்வையுமற்ற குடும்ப வாரிசுகள் (உதயநிதி, துரை வைகோ போன்றோர் – ஏன் குடும்ப அரசியலை விமர்சனம் செய்து வரும் நாதக சீமான் கூட வேட்பாளர்களில் தனது குடும்ப உறவினர்களை நிறுத்தியது உள்ளிட்ட பல காட்டுகள் உண்டு) தேர்தல் அரசியல் களத்தில் முன்னிருத்தப்படுகின்றனர்.

அரசியல் பிடிவாதங்கள் அபாயமானவை என்ற கட்டுரை, ரவிக்குமாரின் பார்ப்பனல்லாதோரின் அரசியலை எதிர்க்க வேண்டும் என்ற எதார்த்தத்தை கணக்கில் கொள்ளாத வறட்டு பிடிவாதத்தையும், கி.வீரமணியின் ஆரிய திராவிடப் போராட்டம் என்ற பெயரில் சசிகலாவை ஆதரித்த ‘வரலாற்றில் இருந்து எதையுமே கற்றுக்கொள்ளாத’ வறட்டு வாதத்தையும் உடைத்துப் போடுகிறது. பெரியாரை மதத்தலைவராக்கும் வேலையை திகவினரே மேற்கொள்ளத் தொடங்கி நாட்கள் பலவாகிவிட்டன. வரலாற்றுப் பார்வையின் அவசியத்தை சுட்டிச் செல்கிறது இக்கட்டுரை.

அணிகளாய் சிதறிய அதிமுக என்ற கட்டுரை, கொள்கையாலன்றி தனிமனித முரண்பாட்டால் உருவான அதிமுக, தனிநபர் எதிர்ப்பு அரசியலில் ஈடுபட்டு இப்போது சுயநலத்தால் அணிகளாகப் பிரிந்து கிடக்கும் அவலத்தை எடுத்துரைக்கிறது. ஆனாலும் பலம் வாய்ந்த எதிர்க்கட்சியாக இப்போதும் நீடிப்பதும் நிலைத்திருப்பதும் எம்ஜிஆர் என்ற தனிநபர் முன்னெடுத்த பாமர அரசியலின் எச்சமாகக் கூட இருக்கலாம்.

எம்ஜிஆர் நூற்றாண்டு தொடர்பான கட்டுரை அவரின் ஆளுமையை விமர்சன நோக்கில் அணுகுகிறது. தமிழக அரசியலிலும் வெகுசன சினிமாவிலும் எம்ஜிஆர் என்ற விந்தை நிகழ்வை அவ்வளவு எளிதாகத் தவிர்த்துவிட முடியாது.

“திராவிட” கலைஞர் ஏன் இந்தியாவுக்குத் தேவை என்ற கட்டுரை அவருக்கு செலுத்தப்பட்ட அஞ்சலிக் கட்டுரைகளில் முக்கியமான ஒன்று.

திராவிடக் கட்சிகளுக்கு சரியான மாற்று இன்னும் உருவாகவில்லை அல்லது அதற்கான வரலாற்றுத் தேவை இன்னும் எழவில்லை என்ற நிதர்சனத்தை நடப்பு அரசியல் நிகழ்வுகள் மூலம் கூறிச் செல்கிறது ‘திராவிடக் கட்சிகளுக்கு மாற்று தேவையில்லையா’ என்ற கட்டுரை.

இத்தொகுப்பின் கடைசி இரு கட்டுரைகள் – “திராவிட அரசியலின் எதிர்காலம்” மற்றும் “மீண்டெழும் திராவிட அரசியல்” ஆகியன திராவிட அரசியல் போக்கு குறித்த நுட்பமான பார்வைகளையும் முக்கியமான கேள்விகளையும் முன்வைக்கின்றன. பெரியார் சொன்ன இன அடிப்படையிலான “திராவிடர்” இயக்கத்துக்கும் அண்ணா, கலைஞர் முன்னெடுத்த நில எல்லை அடிப்படையிலான “திராவிட” முன்னேற்ற கழகத்துக்கும் இடையிலான நுட்பமான வேறுபாடு, திராவிட இயக்கங்கள்/ஆட்சிகள் மூலம் தமிழகத்திற்கும் இந்திய ஒன்றியத்துக்கும் ஏற்பட்ட அனுகூலங்கள், பாரிய மாற்றங்கள் பற்றிப் பேசும்போதே “தனி நபர் வழிபாடு”, “குடும்ப/வாரிசு அரசியல்”, “ஊழல்”, “ஆணாதிக்க மய்ய அரசியல்” போன்ற அவலங்களையும் சேர்த்தே நூலாசிரியர் பேசுகிறார். இந்துத்துவ அரசியலை அடிப்படையாகக் கொண்டு அடையாளங்களை அழித்து ஒற்றைத்துவ ‘ஒரே தேசம் ஒரே வரி ஒரே மதம் ஒரே கல்விமுறை, ஒரே கலாச்சாரம்/பண்பாடு” என்ற வகைமாதிரியை பாஜக – சங் பரிவார அடிப்படைவாத சக்திகள் கட்டி எழுப்பி வரும் தற்கால சூழலில் , இந்திய ஒன்றியத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்று ‘பன்மைத்துவத்தை’ முன்வைக்கும் ‘திராவிட அரசியலின்’ பங்கு முக்கியமாகிறது என்பதை பிரதி தெளிவுற எடுத்துரைக்கிறது. பிற்படுத்தப்பட்ட இடைநிலை ஆதிக்க சாதிகளின் அதிகார மய்ய அரசியலாக “திராவிட அரசியலின்” போக்கு மாறிவிட்டதையும் சுயபரிசோதனை செய்ய வேண்டியது வரலாற்றின் தேவை என்பதையும் ஆசிரியர் குறிப்பிடுவது கவனிக்கத்தக்கது. இந்நூல் வெளிவந்த பின்பு, 2021-ல் திமுக வெற்றி பெற்று ஸ்டாலின் தலைமையில் ஓராண்டு ஆட்சி நிறைவுற்ற நிலையில், தற்போதைய சூழலில் திராவிட அரசியலின் போக்கும் நோக்கும் குறித்த கட்டுரையை சுகுணா திவாகர் எழுதவேண்டும் என்ற விருப்பம் இந்நூலை வாசித்து முடித்ததும் தோன்றுகிறது.

“செய்வீர்களா…சுகுணா…நீங்கள் செய்வீர்களா…?”

– அன்புச்செல்வன்

நூல் : திராவிட அரசியலின் எதிர்காலம்
ஆசிரியர் : சுகுணா திவாகர்
பதிப்பகம் : எதிர் வெளியீடு
விலை : ₹90
96, நியூ ஸ்கீம் ரோடு,
பொள்ளாச்சி
642 002.
தொடர்பு எண் : 99425 11302