நூல் அறிமுகம்: மலர்விழியின் ’ஜூடாஸ் மரம்’ (கவிதை தொகுப்பு) – கருப்பு அன்பரசன்

நூல் அறிமுகம்: மலர்விழியின் ’ஜூடாஸ் மரம்’ (கவிதை தொகுப்பு) – கருப்பு அன்பரசன்




சிலரின் கவிதைகள்..
கவிதைத் தொகுப்புகள் வாசிப்பவரின் மனதை இளம் காலைப் பொழுதொன்றில்
பிச்சி பூவின் வாசத்தை
தடவி வரும் சிலுசிலு காற்றாய் தித்திக்கச் செய்யும்..
மனசை மத்தளம் கொட்டச் செய்யும்.

ஒன்றைப்போல் ஒன்றல்லாது பிளந்து
தெருவெங்கும் வீசப்பட்டு கூர்த்தீட்டப்பட்டிருக்கும் சரளைக் கற்களின் மனதினை சமன்படுத்தி வழுவழுப்பாக்கும் வரிகளாக சிலரின் கவிதை தொகுப்பு

விழி ஈரத்தின் கடைசித் துளியின்
அடையாளத்தை
கன்னம் ஒற்றை வரியாய் சுமந்து நிற்க
அழுகை ஒலியென
காற்றும் கூட வரமறுக்க
பசியின் வலியோடு துடித்திருக்கும்
குழந்தையை கவனித்தும் கூட
அதிர மறுக்கும் மனிதர்களின் மண்டைக்குள் மனசுக்குள்
ஆணியாய் இறங்கிவிடும்
சிலரின் கவிதைகள்..

அணுசக்தி அத்தனையும்
தன் வார்த்தைகளுக்குள் இறுக்கி கட்டி
வாசிப்பவர்களின் இருதயத்தை வெடிக்க செய்து ரௌத்திரம் பழக செய்யும் வார்த்தைகளாக சிலரின் கவிதைகள்..

இப்படி கவிஞர்களையும் கவிதைகளையும் சொல்லிக் கொண்டே போகலாம் ஆனால் அன்புக் கவிஞர் மலர்விழியின் #ஜூடோஸ்_மரம் கவிதைத் தொகுப்பு
வார்த்தைகளுக்குள் மகர்ந்த துகள்களை நிரப்பி வைத்திருக்கிறது.
வாசிக்க தொடங்கி விட்டால்
மனம் என்னும் வண்ணத்துப்பூச்சியின்
பாதங்கள் முழுதும் உயிர் ஜீவன்களே.
பறக்கும் இடமெல்லாம்
பேரன்பின் ஜனனமே.!

வார்த்தைகள்
பேரழகின் ரம்யத்தை சொல்லிக்கொண்டே மனசுக்குள் ஆங்காங்கே நிஜங்களின் அதிர்வுகளையும் நிகழ்த்திப் போகின்றன.

கண் தெரியாத இசைக் கலைஞர்களை நாம் ஒவ்வொரு நாளும் புகை வண்டிப் பயணத்தில் பார்க்க நேரிடும்..
அவர்களுக்கு எல்லாக் காலத்திலும் இருட்டு என்கிற ஒற்றைக் கருப்பு வண்ணம் மட்டுமே சொந்தம்.
ஆனால் நம்முடைய கவிஞருக்கு..?

“நிறம் அறியாதவர்களின் கைகளில் எப்போதும் வண்ணங்களுக்கு குறைவில்லை”

நெஞ்சமெல்லாம் அன்பு குறைவில்லாதவர்களுக்கு மட்டும்தான் இப்படியான எண்ணங்களும் வார்த்தைகளும் வரிகளாய் வந்து விழும்.
முரண்பாடுகள் இருக்கக்கூடிய வரிகள் என்றாலும் அந்தக் கலைஞர்கள் மீது கொண்ட அன்பினை கவிஞர்
இந்த இரண்டு வரிகளுக்குள் சொல்லி இருப்பார்.
இதுதான் கவிஞரின் பேரன்பு உலகம்.

“இவர்கள் காணும் ரயில் பெட்டி எப்போதும் ஒரு குகைக்குள்ளேயே பயணித்துக் கொண்டிருக்கும்”

வாசித்துவிட்டு சாதாரணமாக கடக்க முடியவில்லை இந்த வரிகளை..
மற்ற மனிதர்கள் கொண்டாடும் வண்ணங்களின் அழகை உணர்ந்தவர்களால் மட்டுமே
இந்த வரிகளுக்குள் இருக்கும் வலியினை
துயரத்தை உணர முடியும்..
அப்படி உணர்ந்த பேரன்பாக கவிஞர் மலர்விழி.

“அணிகலன்கள்” என்கிற கவிதையில்
வண்ணங்களைப் பார்வையால் பார்த்துத்தான் உணர முடியும், கவிஞருக்கோ அதைத் தொட்டுப் பார்க்க ஆசை வருகிறது
உடனடியாக அவர் என்ன செய்கிறார் தெரியுமா..?!
“அவளின் கன்னம் கிள்ளி கொஞ்சம் சிவப்பு எடுத்துக் கொள்கிறார்”
தனது அணிகலனாக.
உங்களுக்கு கருப்பு பிடிக்காத கவிஞரே.?
கருப்பும் வண்ணமே.!
அடுத்த முறையாவது கருப்பையும்
கொஞ்சம் தொட்டு பார்த்துக் கொள்ளுங்கள்.
உங்கள் விரல் தீண்டாத ஏக்கத்தால்
நலிந்த கருப்பு, இருட்டுக்குள் மறைந்து கொள்ள போகிறது .!

தலையணையை பயன்படுத்திய காலம் தொட்டே தலையணையை யாருக்காகவும் எதற்காகவும் மாற்றிக் கொடுக்க மாட்டோம்.
அதில் மட்டும்தான் நாம் வாழும் காலங்களில்.. வாழ்ந்த காலங்களின்
கொண்டாட்டங்களை வலிகளை எண்ணங்களின் கனவுகளை
எவருக்கும் தெரியாமல் அழுத்தி அழுத்தி நிரப்பி வைத்திருப்போம்.
உறங்கும் பொழுது அதை இறுக்கமாக அணைத்துக் கொண்டு,
எவரும் எடுத்து விடாமல்
ஒருக்களித்து மார்பில் புதைத்துக் கொண்டு
கவிழ்ந்து படுத்து
முகத்தை தலையணையில் புதைத்துக் கொண்டு..
இப்படி எல்லா காலங்களிலும் தலையணையோடு மட்டுமே
நாம் பலவற்றை பேசி பகிர்ந்து இருப்போம். அந்த தலையணையில்
கிழிசல் ஏற்பட்டால் கிழிசல் வழியாக வெளியேறிய கனவு பேசத் தொடங்கினால் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்..
நிஜம் ரொம்ப கஷ்டம் தான்.

“உடைந்த கிழிந்த பொருள்களை கொடுத்து வாழ்க்கையை வாங்கும்”
அந்த ஏழை அவளின் நம்பிக்கை இழந்த குரல் இன்னொரு முறை உடையாதிருக்க.
கிழிந்த தலையணை வழியாக வெளியேறும் கனவு அமைதி காக்கட்டும்.
அந்த எளிய மகளுக்கு வாழ்வு முக்கியம்.

நிழல் என்கிற கவிதையில
“ஒரு கிரகண நாளில்
மல்லிகையை நீட்டிய
கை நிழலில்
பாம்பு நெளிந்தது”

கருப்பை பூசிக்கொண்ட ராப்பொழுதில்
மல்லிகையை வாசத்தின் வழியாக அறியலாம்.
மல்லிகை நீட்டியே கையை, அதன் நிழலை அறிவது என்பது எவராலும் முடியாது அந்த நிழலும் பாம்பாய் தெரிவது சாத்தியப்படாது.
இவை இரண்டுமே சாத்தியமாகிறது என்றால்
தூக்கத்தை முழுவதுமாய் தொலைத்தவர்களுக்கு
தொலைய காரணமானவர்களின்
எண்ணத்தின் நிஜத்தின் பிம்பமே
துயரத்தின் வலியே.
இருட்டு நிழலில் தெரியும் பாம்பு.

நிழலுக்குள் நிறைய வலிகள்
மலர்விழி .

“புதைந்து ஞாபகங்கள்”..
கவிதையோ..
எனக்குள்ளே

நானும் என் ராசாத்தியும்
மழைக்காலம் ஒன்றில்
தேநீர் அருந்திய படியும்
நான் புகைத்து
நடந்தபடியே இருக்க
எதிர்பாராத கணம் ஒன்றில்
இளம் சூட்டின் ஸ்பரிசங்களை
கிளறி விட்டுப் போனது கவிஞரே.

நேசத்தை கைவிட முடியாத
ஆவிக்காகவேணும்
இந்த முறை அலர்ந்த மலராய்
சிரித்து விட்டு போ..
இன்னும்
என் ராசாத்தியின்
அந்த சிரிப்புகாய்தான்
காத்துக் கொண்டிருக்கிறேன்
நானும்.

இங்கிருக்கும் பேரன்புகளுக்காய்
தூரதேசத்தில்..

“கையையே துடுப்பாக்கி
உழைப்பைச் சுமந்து நீந்தும் ஆமை என்றாவது
அன்பின் வாசல் அடையும்
அதுவரை இந்தக் கண்ணீர்
கடல் இல்லாத ஊரில் உப்பாகட்டும்”
என்ற வரிகளுக்குள்

நிஜமாக போகும் கனவுகளுக்காய்
ஏங்கி நிற்கும் உழைப்பின் வலியை காத்திருக்கும் அன்பை
ஏக்கம் நிறைந்த வரிகளுடன் வார்த்தைகள்.

கவிதை தொகுப்பின் வரிகள் முழுக்க
இலக்கியமும் அழகியலும்
தளும்பும் எளிய வார்த்தைகளை
அர்த்தமும் ஆழமும் கொண்டவைகளாக எடுத்து தன் ஆளுமையை செலுத்தி இருக்கிறார் கவிஞர்.

பால் பிடித்த
பச்சைநெல் கழனிக் காட்டின் தலைக்கோதி வந்த மெல்லியக்காற்று
இதமாக
மனசுக்குள் வடிவாக வீசி செல்லும்
உணர்வினை ஏற்படுத்தியது கவிஞரின் சொல் ஆளுமை.

பல கவிதைகளை
உள்வாங்கிக் கொள்ள முடிந்த என்னால் ஒரு சில கவிதைக்குள் செல்ல முடியாத
நிலையை உணர்ந்தேன்
கோவிலுக்குள் செல்ல முயற்சித்து
வரைந்திருக்கும் கோட்டுக்கு வெளியேயே கால் தூக்கி அஞ்சி அலைபாயும் பேயைப் போல்..!
புரிந்து கொள்ள என் மூளை இன்னும் மெனக் கெட வேண்டும் போல இருக்கிறது.
உங்களின்
“விரல்கள்” கவிதைக்குள் நுழைய முடியவில்லை என்னால்.

எதையோ தர கை நீட்ட
சுட்டுவிரல் ஸ்பரிசத்தோடு பறக்கிறது பட்டாம்பூச்சி என்கிற வரியில் நீங்கள் சொல்லியது போல் ஒரு சில கவிதைகள் பறந்து போய்விடுகிறது
வந்த மாதிரி வந்து.

மலர்விழியின் கவிதைகள்
இருப்பை நேசிக்கின்றது
காதலை கொண்டாடுகிறது
வலியால் அழுகிறது.

இன்னும் நிறைய எழுதுங்கள் மலர்விழி.
உங்களின் கண்களில்
அன்று நிறைய செய்திகளை
நான் கவனித்தேன்
நிறைய தேடல்களை நான் புரிந்து கொண்டேன்
செய்திகளையும் தேடல்களையும் வார்த்தைகளாக்கி
எல்லாவற்றையும் வெளிச்சத்திற்கு கொண்டு வாருங்கள்.

அன்பும் வாழ்த்துக்களும்

கவிதைத் தொகுப்பை வாசித்திட வேண்டும் என்கிற ஆசையைத் தூண்டி விடுவதே
தொகுப்பின் அட்டைப்பட வடிவமைப்பும் உள்பக்க வடிவமைப்பும்தான்.
மிக அழகியலோடு நேர்த்தியாக செய்து முடித்திருக்கிறார் Lark Bhaskaran

தொடர்ந்து மிகச்சிறப்பான பணிகளை செய்து வருகிறது படைப்பாளிகளை தமிழ் உலகிற்கு அறிமுகப்படுத்தி வைக்கிறது.. கொண்டாடுகிறது.
வேரல் புக்ஸ்
அம்பிகா குமரன்
தோழமைகளுக்கு நிறைய அன்புகள்.

நூல் : ஜூடாஸ் மரம்
ஆசிரியர் : மலர்விழி
விலை : ரூ.₹ 100
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924

– கருப்பு அன்பரசன்