பெயர் சொல்லும் பறவை 22 – நிக்கோபார் பருந்து | முனைவர். வெ. கிருபாநந்தினி
தீவுகள் என்பது நான்கு பக்கமும் நீரால் சூழப்பட்டு கடலுக்குள் ஆங்காங்கு சிறு நிலப்பகுதிகளாக இருக்கும். இவ்விடங்கள் இயற்கையின் வளம் மிகுந்து காணப்படும். சுற்றியும் கடல், கடற்கரை இருப்பதால் தினசரி பிரச்சனைகளிலிருந்து சிறிது நாட்கள் விலகி தனிமையாகவோ, குடும்ப உறுப்பினர்களுடனோ அல்லது நண்பர்களுடன் அந்த இயற்கையை ரசிக்க செல்கிறோம்.
அதில் இந்தியாவுடன் தொடர்புடைய அந்தமான் நிக்கோபார் தீவுகளும் அடங்கும். பறவைகள் மற்றும் குரங்குகள் பற்றிய ஆய்வுகளுக்காக நண்பர்கள் சென்று வந்து அங்கு நடந்த அனுபவங்களை என்னிடம் சொல்லுவது வழக்கம். அவர்கள் எடுத்த புகைப்படங்களை பார்த்து ரசித்ததுண்டு.
தீவுகளில் மட்டுமே வாழும் உயிரினங்கள் பலவற்றில் நிக்கோபார் பருந்தும் ஒன்று. இது நிக்கோபர் தீவில் மட்டுமே உள்ளதால் Nicobor Sparrow Hawk என்று ஆங்கிலத்தில் பெயர் வைத்துள்ளனர். Accipiter butleri இன் அறிவியல் பெயர் பட்லரை நினைவுபடுத்துகிறது.
ஆர்தர் லெனாக்ஸ் பட்லர் (Arthur Lennox Butler – 22 பிப்ரவரி 1873 – 29 டிசம்பர் 1939) ஒரு பிரிட்டிஷ் இயற்கை ஆர்வலர். பாகிஸ்தானின் கராச்சியில் பிறந்தவர், அந்த நேரத்தில் அது பிரிட்டிஷ் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்தது. அவரது தந்தை பிரிட்டிஷ் பறவையியல் நிபுணர் எட்வர்ட் ஆர்தர் பட்லர் மற்றும் அவரது தாயார் கிளாரா பிரான்சிஸ் பட்லர். பதினெட்டாவது வயதில், 1891 ஆம் ஆண்டில், பட்லர் தேயிலை தோட்டக்காரராக சிலோனுக்கு (இப்போது இலங்கை) பயணம் செய்தார், அவர் அறிவியல் தரவுகள் சேகரிப்பாளராக மாற நினைத்து அதனை கைவிட்டார்.
மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் 1898 இல், கண்காணிப்பாளராக ஆனார். அவர் பிரிட்டிஷ் பறவையியல் வல்லுநர்கள் சங்கத்தின் உறுப்பினராக 1899 இல், தேர்ந்தெடுக்கப்பட்டார். 1901 ஆம் ஆண்டு தொடங்கி, ஆங்கிலோ-எகிப்திய சூடானில் விளையாட்டுப் பாதுகாப்பின் கண்காணிப்பாளராக இருந்தார், 1915 ஆம் ஆண்டு வரை அவர் பதவி வகித்தார். 1921 ஆம் ஆண்டில், அவர் பிரிட்டிஷ் பறவையியலாளர்கள் கிளப்பில் உறுப்பினரானார்.
இப்பறவைக்கு மட்டுமல்லாது நான்கு வகையான ஊர்வன (கெஹைரா பட்லெரி, லைகோடான் பட்லெரி, சிலோரினோஃபிஸ் பட்லெரி, மற்றும் டைத்தோஸ்சின்கஸ் பட்லெரி) மற்றும் ஒரு தவளை இனத்துக்கும் இவருடைய பெயர் வைக்கப்பட்டுள்ளது. இவருடைய புகைப்படம் கிடைக்கவில்லை.
கார் நிக்கோபார், கிரேட் நிக்கோபார், லிட்டில் நிக்கோபார், டில்லாங்சோங், கமோர்டா, கட்சல், நான்கோவ்ரி மற்றும் டிரிங்காட் ஆகிய பகுதிகளில் வாழ்கின்றன. பெண்ணின் பறவையின் மேல்புறம் பழுப்பு நிறமாகவும், அடிப்பகுதி சிவப்பு-பழுப்பு நிறத்திலும் இருக்கும். தலை முதல் வால் வரை 28–34 சென்டி மீட்டர் நீளமுடையது. மஞ்சள் நிற கால்களை கொண்டுள்ளது. இது பல்லி மற்றும் பூச்சிகளை உணவாக உட்கொள்கிறது
இப்பறவை ஆண்டுக்கு இரண்டு முறை பிப்ரவரி மற்றும் செப்டம்பரில் இனப்பெருக்கம் செய்கின்றது என்று சான்றுகள் கூறுகின்றன. நிக்கோபார்களின் கடலோர வாழ்விடங்களில் 2006 ஆண்டு களப்பணியின் போது மூன்று வருடங்களில் 20-25 பறவைகளை மட்டுமே பார்த்துள்ளனர் எனபது வியப்பாக உள்ளது. அதன் பின்னர் 2009 முதல் 2011 வரை இரண்டு முறை மட்டுமே பார்த்துள்ளனர்.
1988 – இல் சரியான எண்ணிக்கையில் இருந்துள்ளது (Least concern), பின்னர் 1994 முதல் 2000 வரை அருகி வரும் (Near threatened) பட்டியலுக்கு தள்ளப்பட்டது, அதன் பின்னரும் நாம் விட்டுவைக்கவில்லை 2002 முதல் இன்று வரை மிக அருகிவரும் (Vulnerable) பட்டியலுக்கு அதனை தள்ளியுள்ளோம்.
இக்குறிப்பிட இனம் வாழ்விட இழப்பு மற்றும் சீரழிவு போன்ற காரணங்களால் விரைந்து அழிந்து வருகின்றன. இதற்கு பல்வேறு காரணங்களை கருத்தில் கொள்ளமுடியும். குறிப்பாக 1960 லிருந்து 1970 வரை இந்திய நிலப்பரப்பில் இருந்து மனித புலம்பெயர்ந்தோர் வந்ததிலிருந்து காடழிப்பு துரிதப்படுத்தப்பட்டது.
சுனாமி அனைத்து தீவுகளிலும் வாழ்விடத்தின் குறிப்பிடத்தக்க பகுதிகளை 2004 ஆம் ஆண்டு அழித்தது. மேலும் விவசாய விரிவாக்கத்திற்காக காடுகளை அகற்றுவதும் பெருமளவில் அதிகரித்தது, இது இன்னும் பெரிய மண் அரிப்பு பிரச்சனைகளுக்கு வழிவகுத்தது அதன் பின்னரும் தொடர்ந்த மேம்பாடு செயல்பாடுகள் இப்பறவையின் அழிவிற்கு முக்கிய காரணமாக இருந்துள்ளது. இக்குறிப்பிட்ட இன பருந்தை காப்பாற்ற பாதுகாக்கப்பட்ட பகுதியாக கட்ச்சலில் உள்ள சமூகத்தினர் நிர்வகிக்கின்றனர். மேலும் இந்த இனம் இந்திய சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்படுகிறது.
வலைத்தளங்களில் ஒரு மீம் வைரலாகிக் கொண்டிருந்தது, விலங்குகள் கடந்து சென்ற வழித்தடம் அதன் கால்கள் பதிந்து இருந்தன, ஆனால் மனிதர்கள் கடந்து சென்ற பாதை குப்பைகளாக கிடப்பது போல காட்டியிருந்தார்கள். இதனைத் தான் நாம் நடைமுறையில் செய்கின்றோம், பார்க்கின்றோம், அதற்கு சான்று கடந்த வாரம் சென்னை வெள்ள பாதிப்புகளுக்கு பல காரணங்களில் ஒன்று ஏரிகள் ஆக்கிரமிப்பு மற்றொன்று நெகிழி பொருட்கள் கால்வாய்களில் அடைபட்டிருந்தது. தொடர்ந்து இதுபோன்ற செயல்களை செய்து வரும் மனிதஇனம் எப்பொழுது மாறும் என்று தெரியவில்லை.
ஏற்கனவே சொன்னது போல தீவுகள் மனிதர்கள் அதிகம் இல்லாத இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகளாவே உள்ளன. மனிதர்களின் காலடி பட்டவுடன் ஒவ்வொன்றாக அழிய ஆரம்பித்து விடுகின்றன. மனிதர்களின் செயல்பாடுகளால், பேராசையால் ஒவ்வொன்றாக சுரண்டி இயற்கை சீரழிக்கின்றோம். நாம் கண்டு ரசிக்கும் இயற்கை , நாம் நோயற்று வாழக் காரணமான இயற்கை சூழல் நமது குழந்தைகளுக்கு வேண்டாம் என நாம் நினைக்கிறோமா? சிந்திப்போம் காப்பாற்ற முன்வருவோம்.
பெயர் சொல்லும் பறவை 16 – ஆற்று ஆள்காட்டி (Vanellus duvaucelii) | முனைவர். வெ. கிருபாநந்தினி
பெயர் சொல்லும் பறவை 18 – கம்பிவால் தகைவிலான் Wire-tailed Swallow | முனைவர். வெ. கிருபாநந்தினி
பெயர் சொல்லும் பறவை 19 – உப்புக்கொத்தி Charadrius leschenaultia | முனைவர். வெ. கிருபாநந்தினி
பெயர் சொல்லும் பறவை 20 – நீலநிற ஈப்பிடிப்பான் (Cyornis tickelliae) | முனைவர். வெ. கிருபாநந்தினி
பெயர் சொல்லும் பறவை 21 – பூங்குருவி(Himalayan Forest Thrush) | முனைவர். வெ. கிருபாநந்தினி