Katril Payanikkum Uthir ilai Poem By Vasanthadheepan வசந்ததீபனின் காற்றில் பயணிக்கும் உதிர்இலை கவிதை

காற்றில் பயணிக்கும் உதிர்இலை கவிதை – வசந்ததீபன்




காற்றில் பயணிக்கும் உதிர்இலை
****************************************
(1)
என் பாதையில் போகிறேன்
உன் இதயத்தைச் சுமந்து
மலைச் சரிவுகளில்
நெல்லிக்காய் மூடைகளை
ஏற்றிய கழுதையாய்…
சறுக்கிச் சறுக்கி நகருகிறேன்
கிணற்றில் தவறி விழுந்த
தங்க நாணயமாய் கிடக்கிறது
உன் வாலிபம்
என் தேடலுக்கு சிக்காமல்…
கூழாங்கற்கள் பாடும் பாடல்களில்
நதியின் மரணம் குறித்த
அவலச்சுவை நிரம்பிய ஏக்கங்கள்..
நத்தை ஓடுகளை உருட்டி உருட்டி
பசியைப் போக்க
முயல்கிறது சிறகு கிழிந்த காக்கை..
வளையல் சத்தம் போல
தென்னஞ் சோகைகள்
காற்றில் மோதி ஒலிக்கின்றன..
உலர்ந்த உயிரை
எந் நொடி வரை
பொடியாமல் பாதுகாத்து வைப்பேன்
நானும் காலத்திடமிருந்து ?

(2)
உன் விழிக் கணைகளால்
தாக்குண்டு
வீழ்ந்து கிடக்கிறேன்
என் திரேகம்
தீயூட்டப்பட்ட சுள்ளியாய்
சடசடக்கிறது
என் மனம்
புதைசேறில் சிக்குண்டதாய்
பரிதவிக்கிறது
துளிக் காதலை
என் இதழ்க் காட்டில்
தெளித்து விடு
வாழ்வின் குளிர்மையின் நாவுகள்
என்னைத் தீண்டட்டும்
மெளனமாய் ராகத்தை மீட்டாதே
என் ஆன்மாவின் தந்திகள்
படபடவென்று அதிர்கின்றன
நிழல் தா
நிகழ் கரைகின்றது.

(3)
குறுவாளின் நுனியில்
துளிர்க்கும் உதிரம் சொட்ட
ஊராரின் பரிகசிப்பின் சொற்கள்
எள்ளலோடு அலைகின்றன
நிர்வாணியைப் போல
என்னை நிராதரவாய்ப் பார்க்க..
கண்ணீரின் ஊற்றண்டையில்
தாகமாய் அமரும்
அந்தப் பறவையின் பெயர்
ஒருவரும் அறியமாட்டார்கள்
அதற்கு மனித முகமிருக்கிறது
அம் முகம் என் முகமென
நீ அறிவாயா ?
இறக்கைகள் வெட்டப்பட்டிருக்கின்றன
பலியாட்டின் கண்களைப்போல
மெளனமாய் உறைந்திருக்கும்
என் கணம்
அறுந்து நொடியிழையில்
தொடுக்கிக் கொண்டிருக்கிற
குடை ராட்டினமாய் நானும்!
நீயோ பாராது போகிறாயே ?