பாரதி கிருஷ்ணகுமாரின் ‘கவிச்சக்கரவர்த்தியின் பணிவு’ – பெரணமல்லூர் சேகரன்
கவிச்சக்கரவர்த்தியின் பணிவு
பாரதி கிருஷ்ணகுமார்
பக்கங்கள் 144
விலை ரூ.200
இந்திய நாட்டின் இணையற்ற இரு இதிகாசங்களாகக் கருதப்படுபவை இராமாயணமும் மகாபாரதமும். இவ்விரு இதிகாசங்கள் குறித்து ஏராளமான நூல்கள் வெளிவந்துள்ளன. ஆயினும் தமிழ்நாட்டைப் பொருத்தவரை இராமாயணம் என்றால் கம்ப ராமாயணம், மகாபாரதம் என்றால் வில்லிப்புத்தூராழ்வாரின் மகாபாரதம் என்பவையே பிரபலமானவை.
இராமாயணத்தை வான்மீகியின் மூல நூலிலிருந்து கம்பர் ராமாயணத்தை எழுதியிருந்தாலும் உள்ளது உள்ளபடி என மொழி பெயர்க்கவில்லை. மாறாக தன் மனதில் தோன்றிய எண்ணப்படி இராமனைப் புனித மனிதனாகப் படைத்து அழகியலுடன் காவியத்தலைவனாகப் படைத்தார். இக்காவியத்தின் பெருமைகளைக் ‘கம்பன் கழகங்கள்’ மூலம் தமிழ்நாடு மட்டுமல்லாது உலகெங்கும் உள்ள தமிழர்கள் நிறைந்த அரங்குகளில் பட்டிமன்றம், வழக்காடு மன்றம், கருத்தரங்கம், நாடகங்கள் என காலங்காலமாக கம்பன் இயற்றிய பாடல்கள் வழி பரப்பப்பட்டே வருகின்றன.
மேலும் கம்ப ராமாயணம் குறித்த மேன்மைகளைப் பல கோணங்களில் ஆராய்ந்து பல வடிவங்களில் பல நூல்கள் வந்துவிட்டன. இவற்றுக்கு மத்தியில் மகாகவி பாரதியை ஞான குருவாக வரித்துக் கொண்ட பாரதி கிருஷ்ணகுமார் ‘கவிச்சக்கரவர்த்தியின் பணிவு’ என்னும் ஆய்வு நூலை வெளியிட்டுள்ளது வித்தியாசமானது.
இந்நூல் கம்ப ராமாயணத்தில் காணப்படும் கவிதை மாண்புகளை, அழகியல் தன்மைகளை, சந்த நயங்களை, தமிழமுதின் இனிய சுவையை எடுத்துரைக்கவில்லை. மாறாக கம்ப ராமாயணம் குறித்த அறிமுகம் முதல் அத்தியாயமாகவும், இலக்கிய ஆளுமைகள் புகழ்ந்துரைத்த மேற்கோள்கள் இரண்டாம் அத்தியாயமாகவும், தனது காவியத்தை அரங்கேற்ற கம்பர் எதிர்கொண்ட சவால்களை மூன்றாவது அத்தியாயமாகவும், கம்பரின் ‘அவையடக்கம்’ குறித்து நான்காவது அத்தியாயமாகவும், அவையடக்கப் பாடல்களின் விளக்கங்களை ஐந்தாவது அத்தியாயத்திலிருந்து பதினோராவது அத்தியாயம் வரையிலும், கம்பரின் சிறப்புப் பாயிரம் குறித்து பதின்மூன்றாவது அத்தியாயமும், காவியத்தின் சிறப்பு குறித்து பதினான்கு மற்றும் பதினைந்தாவது அத்தியாயமும் விவரிக்கின்றன.
“யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல் வள்ளுவனைப் போல் இளங்கோவைப் போல் பூமிதனில் யாங்கணுமே கண்டதில்லை. உண்மை வெறும் புகழ்ச்சியில்லை.” என மகாகவி பாரதியார் பாடிய பாடலில் முதலாவதாகக் குறிப்பிடுவது கம்பனைத்தான். பாரதியை ஞான குருவாக ஏற்றுக் கொண்டு, அவரது பெயரைத் தன் பெயருடன் இணைத்துக் கொண்டு பட்டி தொட்டியெல்லாம் உரை வீச்சு நிகழ்த்தும் பாரதி கிருஷ்ணகுமார் கம்பனைப் பற்றிப் பேசாமல், எழுதாமல் இருந்தால்தான் அது ஆச்சரியமானது. எனவே பாரதி கிருஷ்ணகுமாரைக் கம்பனுக்குக் கொண்டு சேர்த்த பெருமை மகாகவி பாரதிக்கே உண்டு என முன்னுரையில் அவர் குறிப்பிடப்பட்டுள்ளது பொருத்தமானதே.
சிறுகதை, நாவல், கவிதை போன்ற நூல்களைப் படைப்பதில் எழுத்தாளனுக்கு முழு சுதந்திரம் உண்டு. ஆனால் கட்டுரைகளை அவ்வாறு படைத்துவிட முடியாது. எடுத்துக் கொண்ட பொருள் குறித்த தரவுகளைச் சேகரிக்காமல், அப்பொருள் குறித்த நூல்களைப் படிக்காமல் எழுதிவிட முடியாது. ‘கவிச்சக்கரவர்த்தியின் பணிவு’ எனும் நூலை உருவாக்க பாரதி கிருஷ்ணகுமார் முப்பத்தேழு நூல்களைப் படித்துள்ளார் என்பது இந்நூலின் பின்னிணைப்பிலிருந்தே அறிந்து கொள்ளலாம். அவ்வாறு அவர் படித்ததால் தான் தலைப்புக்கேற்ற நூலைத் தெறிப்பாக எழுத முடிந்துள்ளது.
உலகெங்கிலும் சற்றேறக்குறைய முந்நூறு ராமாயணக் கதைகள் இருப்பதாகவும், பாலி மொழியில் எழுதப்பட்ட பௌத்த ராமாயணங்கள் மூன்று, தெலுங்கு மொழியில் எழுதப்பட்ட ராமாயணக் கதைகள் மூன்று என்பதையும் ஜப்பான், இந்தோனேசியா, கம்போடியா, மியான்மர், பிலிப்பைன்ஸ், நேபாளம் ஆகிய நாடுகளிலும் தனித்தனி இராமாயணக் கதைகள் வழக்கில் உள்ள தகவல்களையும் நூலாசிரியர் மூலம் தெரிந்து கொள்ள முடிந்தது.
‘இராமாயணத்தில் இராவணனின் மகளாக சீதை சித்தரிக்கப்படுகிறாள். இன்னொரு இராமாயணத்தில் இராமனுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவிகள் இருப்பதாகச் சொல்கிறது. மான் இறைச்சி மீது சீதைக்கு இருந்த பெரு விருப்பம் காரணமாகத்தான் மானைப் பிடித்துத் தருமாறு கேட்கிறாள் எனக் கூறுகிறது ஒரு பிரதி. ஒரு இராமாயணத்தில் சீதை என்னும் கதாபாத்திரமே இல்லை. பௌத்த இராமாயணப் பிரதிகள் இராமனைப் புத்த பகவானின் அவதாரங்களில் ஒன்றாகவே படைத்துக் காட்டுகின்றன.’ போன்ற பலருக்குத் தெரியாத புதிய தகவல்களைத் தருகிறார் நூலாசிரியர்.
கம்பரின் காவியத்தில் தான் உணர்ந்த பாத்திரங்களின் குணக்கேடுகளைக் கம்பர் நீக்குகிறார். பொருத்தமற்ற வெளிப்பாடுகளை நீக்குகிறார். காவியத் தலைவனின் தெய்வீகச் சிறப்புக்கு வழி வகுக்கிறார் என்பதிலிருந்தே இராமாயணம் தெய்வீகக் கற்பிதம் என்பதை உணரலாம். ஆனால் காவியத்தை உண்மையாகக் கருதி ராமன் ஏக பத்தினி விரதனாகவும், கடவுள் அவதாரமாகவும் மக்கள் வாழையடி வாழையாய் வணங்கி வருதல் கண்கூடு. இதை வாய்ப்பாக்கி அரசியலில் மதம் கலந்து நஞ்சாகி நாடு நாசமாகிக் கொண்டிருக்கும் இன்றைய யதார்த்த நிலையையும் புறந்தள்ளி விட முடியாது.
இருந்தாலும் ‘வான்மீகி காட்டாறு, கம்பன் பாசனத்திற்கான நீர்ப்பெருக்கு. வான்மீகி பூப்பொதி, கம்பன் வண்ண மலர் மாலை. வான்மீகி பலாப்பழம். கம்பன் தேனில் ஊறிய பலாச்சுளை. இருமொழிப் புலமை கொண்டு இரண்டு பிரதிகளையும் வாசித்து உணர்ந்து நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை எழுதியது தேர்ந்த ஒரு வாசகனின் தீர்மானம்’ எனும் பாரதி கிருஷ்ணகுமாரின் கூற்றை வழி மொழியலாம். ஏனெனில் நூலாசிரியர் கூறுவதைப் போல ‘கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும்’, ‘கல்வியில் பெரியோர் கம்பர்’, ‘என்ன பெரிய கம்ப சூத்திரமோ?’ என எளிய மக்கள் இன்றளவும் உரையாடுவதைப் புறந்தள்ளி விட முடியாது.
அக்காலத்திலேயே கம்பர் தமது காவியத்தைத் தான் விரும்பிய ஆலயத்திலேயே அரங்கேற்ற அவர் பட்ட பாடுகளை நூலாசிரியர்
காட்சிப்படுத்தியுள்ளது அபாரம். அரசவையில் கம்பரது காவியத்திற்குப் புலவர்களும் அறிஞர்களும் மதிப்புத் தராதது, அக்காலத்திலேயே சாதி மதங்களால் புலவர்களும் அறிஞர்களும் அணி சேர்ந்தது, மூல காவியத்திலிருந்து வேறுபட்டு கம்பர் படைத்த காவியத்திற்கு எதிர்ப்பு, அரங்கேற்றத்துக்கு வைக்கப்பட்ட முன் நிபந்தனைகள் கற்பனைக்கெட்டாத கொடுமைகளாகக் கம்பர் சந்தித்தது என இவ்வளவுக்கு மத்தியில் தமது ‘இராமாவதாரம்’ எனும் காவியத்தை அரங்கேற்றியது கம்பரின் விடா முயற்சியால் விளைந்த இதிகாசம் எனும்போது அவரது உழைப்பும் தொடர் முயற்சியும் பாராட்டத் தக்கது. பின்பற்றத் தக்கது.
இத்தகைய கவிச்சக்கரவர்த்தி தமது இறுதிக் காலத்தில் உறவை இழந்து, ஊரை இழந்து, தன் அடையாளத்தைத் தானே மறைத்துத் தன் இறுதி நாட்களில் வாழ்ந்திருக்கிறார் என்பதைக் குறிப்பிட்டு வாசகர்களைக் கம்பர் மீதான இரக்கத்தில் இறக்கி விடுகிறார் பாரதி கிருஷ்ணகுமார்.
‘அவையடக்கம்’ குறித்த தொல்காப்பிய இலக்கணக் குறிப்பை விளக்கும் நூலாசிரியர் கம்பரின் வித்தியாசமான அவையடக்கத்தைப் படம் பிடித்துக் காட்டுகிறார். அவையடக்கத்தில் இடம் பெற்றுள்ள ஆறு பாடல்களையும் விளக்கியுள்ளது சிறப்பு.
இறுதியாக, ‘வான்மீகி மெய்யுரைத்தான்; ‘கம்பன் பொய்யுரைத்தான்’ என்று இகழ்ந்து அவனது பிரதியை எரித்தவர்களே அவனுக்குச் சிலை வைத்தார்கள் என்பது அவர்களது சிறப்பும், கம்பனது தனிச் சிறப்புமாகும் என்பதும்,
இனப்பகைமை, மொழிப்பகைமை, சாதிப்பகைமை, கருத்துப்பகைமை, அதிகாரப்பகைமை என எதத்னையோ பகைமைகளை, எதிர்ப்புகளை எதிர்கொண்டு தனது காப்பியத்தைக் கம்பன் எழுதியதன் நோக்கம் ஒன்றுதான். அனைத்துப் பகைமைகளும் அழிந்துவிட வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்திற்காகவே அன்றி, வேறு எந்த நோக்கமும் இல்லை’ எனக் கூறியிருக்கும் பாரதி கிருஷ்ணகுமாரின் கூற்று சரியானதே. எனவேதான் இன்றளவும் கம்ப ராமாயணம் நிலைத்து வாழ்கிறது.
ஏராளமான புதிய செய்திகளை புதிய கோணத்தில் வழங்கிய ‘சக்கரவர்த்தியின் பணிவு’ எனும் பாரதி கிருஷ்ணகுமாரின் ஆய்வு நூலை அனைவரும் வாங்கிப் படிக்க வேண்டியது அவசியம்.
– பெரணமல்லூர் சேகரன்