பரந்தூர் விமான நிலையம் மக்களுக்கு நல்லதா ? கெட்டதா ? கட்டுரை -கவிதா ராம்குமார்

பரந்தூர் விமான நிலையம் மக்களுக்கு நல்லதா ? கெட்டதா ? கட்டுரை -கவிதா ராம்குமார்




பரந்தூர் விமான நிலையம் மக்களுக்கு நல்லதா ? கெட்டதா ?
வாங்க பேசலாம்

காஞ்சிபுரம் மாவட்டம் என்றாலே நெசவும், விவசாயமும் இரு கண்கள் போன்றவை. காஞ்சிபுரம் மாவட்டத்தை ஏரிகளின் மாவட்டம் என்றும் கூறுவர். பரந்து விரிந்து இருக்கும் பசுமையான நெல் வயல்கள், குடியிருப்புகள், ஏரிகள், குளங்கள், கால்வாய், பள்ளிக்கூடங்கள், கோயில்கள் என இயற்கை அன்னையின் அன்பின் அரவணைப்பில் மக்கள் சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர்.

இப்படி இருக்க மக்கள் ஏன் ? இரண்டு மாதங்களுக்கும் மேலாக போராடிக் கொண்டிருக்கிறார்கள் ;

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் சென்னை நகருக்கான இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்காக பரந்தூர் மற்றும் அதை ஒட்டியுள்ள மொத்தம் 13 கிராமங்களில் இருந்து 4,500-க்கும் அதிகமான ஏக்கர் பரப்பிலான நிலத்தையும் கையகப்படுத்த அரசு முடிவு செய்திருக்கிறது.

இதில் சுமார் 3,200 ஏக்கர் அளவிலான நிலப்பரப்பு தனிநபர்களுக்குச் சொந்தமான பட்டா நிலங்களாகவும், சுமார் 1,300 ஏக்கர் அரசுப் புறம்போக்கு நிலமாகவும் இருக்கிறது.

இத்திட்டத்திற்காக ஏகனாபுரம், நெல்வாய், நாகப்பட்டு, மகாதேவி மங்கலம் ஆகிய நான்கு கிராமங்களும். அதை ஒட்டி உள்ள நீர்நிலைகள், வயல்வெளிகள், குடியிருப்புகள், பள்ளிக் கூடங்கள், கோயில்கள் போன்றவை முற்றிலுமாக அழியும் அபாயமும். சுமார் ஆயிரம் குடும்பங்கள் தங்களுக்கு சொந்தமான நிலத்தை விட்டு வெளியேறும் சூழ்நிலையும் ஏற்பட்டு இருப்பதால் மக்கள் அரசிடம் போராடிக் கொண்டிருக்கிறார்கள் .

இத்திட்டத்திற்காக அரசு என்ன சொல்கிறது ;

இத்திட்டத்திற்காக நிலத்தைக் கொடுப்போருக்கு இழப்பீட்டின்போது வழிகாட்டி மதிப்பை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் சந்தை மதிப்பை கணக்கில் எடுத்துக் கொள்வதாகவும், குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் வேலையும். விமான நிலையத்துக்கு அருகிலேயே நிலமும், வீடு கட்டுவதற்கு பணமும் தருவதாக அரசு கூறியிருக்கிறது.

மக்களின் கருத்து ;

எங்களது முதுகெலும்பான விவசாயத்தை மட்டுமே செய்து காலம் காலமாக நாங்கள் நிமிர்ந்து நின்று கொண்டிருக்கிறோம். விவசாயத்தைத் தவிர வேறு வேலை தெரியாது. பெரிய லாபம் இல்லாவிட்டாலும் ஆத்ம திருத்தி எங்களுக்கு விவசாயத்தில் தான் இருக்கிறது .இதில் வரும் வருமானத்தை வைத்துக்கொண்டு தான் எங்களது அன்றாட தேவைகளுக்கும், பிள்ளைகளின் படிப்பிற்கும் உதவுகிறது.

எங்களது பாட்டன் பூட்டன் காலத்தில் சொந்தமான மனையில் வீடு கட்டி வாழ்ந்து வருகிறோம். எங்களுக்கு அப்புறம் எங்களது பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் நலமோடு  வாழ்வார்கள் என்ற எண்ணம் இன்று சுக்குநூறாக உடைந்து போயிருக்கிறது. எங்களது விவசாயத்தை அழித்து விட்டு எதற்காக இந்த விமான நிலையம். இங்கு இருக்கும் ஏரிகள் எல்லாம் புறம்போக்கு கிடையாது. அவைதான் இங்குள்ள விவசாயத்துக்கு உதவுகின்றன. அவை விவசாயத்துக்கு தாய், தந்தை போல. அதுதான் விவசாயத்துக்கான ஆணி வேர். இழப்பீடு தருகிறோம், இடம் தருகிறோம் என்கிறார்கள். ஊரை இழந்துவிட்டு எப்படி வாழ்வது. அரசு தரும் வேலையும் வேண்டாம் இடமும் வேண்டாம். எங்கள் விவசாயத்தை விட்டுவிடுங்கள். விவசாயம்தான் எங்களுக்கு கடவுள். ஊரைவிட்டு நாங்கள் போகமாட்டோம் என்று உறுதியாக கூறுகிறார்கள்.

சென்னையில் இருந்து வெளிநாட்டிற்குச் செல்லும் 80 சதவீத மக்களின் நெருக்கடியைச் சமாளிக்க பரந்தூரில் புதிதாக கட்டப்படும் விமான நிலையத்திற்கு பதிலாக கோவை, திருச்சி, மதுரை, தூத்துக்குடி போன்ற இடங்களில் உள்ள விமான நிலையங்களை தரம் உயர்த்தினாலே சென்னையில் நெருக்கடி குறையும் என்றும் கையகப்படுத்தப்படும் கிராமங்களில் மூன்றாம் நிலை ஓடை இருப்பதாகவும்.இந்த ஓடை செம்பரம்பாக்கம் வரை நீரைக் கொண்டு வருகிறது. சென்னைக்கு மேற்குப் பக்கம் உள்ள நீர்நிலைகளைப் பாதுகாக்க வேண்டும். இப்போது மேற்குப்பக்க நீர்நிலைகளை அழித்தால் சென்னை வெள்ளத்தில் மிதக்கும் என்கிறார்கள் சுற்றுச்சூழல் நிபுணர்கள். காவல்துறையினர் அங்கு வசிக்கும் மக்களை சமூக ஆர்வலர்களிடமும் , விவசாய சங்க தலைவர்களிடமும் பேச விடாமல் எப்பொழுதும் கண்காணிப்பிலே  வைத்துக் கொள்வது  தனி மனிதனின் சுதந்திரத்திற்கு எதிரானதாகும், மக்களின் சம்மதம் இல்லாமல் நிலங்களை கையாகப்படுத்த கூடாது என்று பல அமைப்புகள் தெரிவித்து வருகின்றனர்.

விவசாயத்தை அழித்துவிட்டு வளர்ச்சி என்ற பெயரில் இயற்கைக்கு எதிராக செயல்படாமல் நீர் நிலைகளை மீட்டெடுத்து, சொந்த மண்ணில் மக்களை அகதிகளாக ஆகிவிடாமல் அவர்களுக்கான வாழ்வாதாரத்தை
தர வேண்டும். அரசு முறையாக சிந்தித்து இத்திட்டத்தை கைவிட வேண்டும் என்று ஒவ்வொரு மக்களின் எண்ணங்களாக  இருக்கின்றது.

கவிதா ராம்குமார்
திருவண்ணாமலை.

“அக்னிபாத்” திட்டம் கட்டுரை – கவிதா ராம்குமார்

“அக்னிபாத்” திட்டம் கட்டுரை – கவிதா ராம்குமார்




வருங்கால இந்தியாவின் பலமா? பலவீனமா?

வாங்க பேசலாம்….

ஒரு தலைமுறை உயர் பொறுப்புகளுக்கு செல்வது தடைபட்டு சமூக படிநிலை உடையும் அபாயமும். இந்திய ராணுவத்தில் தேசத்திற்காக தனது உயிரையும் பொருட்படுத்தாமல் நாட்டின் பாதுகாப்பிற்காக தன்னை அர்ப்பணிக்கும் இளைய தலைமுறைகளின் கனவு இத்திட்டத்தின் மூலம் சிதைந்துவிடும் என்ற அச்சமும் ஏற்படுகின்றது.

அக்னிபாத் குறித்து மத்திய அரசு சொல்வது என்ன ?

“அக்னிபாத்” திட்டம் வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும் என்றும் இந்திய ராணுவத்தை உலகத்தரம் வாய்ந்த ராணுவம் ஆக மாற்றவும். “அக்னிபாத்” திட்டத்தின் கீழ் இந்திய ராணுவத்தை இந்திய மக்களைப் போலவே இளமையாக ஆக்கிடவும். சேவையின் போது பெற்ற திறன்கள் மற்றும் அனுபவங்கள் இளைய தலைமுறைகளுக்கு பல்வேறு துறைகளிலும் வேலைகளை வழங்கும் என்று கூறப்படுகிறது.

அக்னிபாத் திட்டத்தின் விவரங்கள்…..

அக்னிபாத் திட்டம் இந்திய ராணுவத்தின் முப்படைகளிலும் 4 ஆண்டு காலத்திற்கு குறுகிய கால வீரராக இளைஞர்கள், இளம்பெண்களை சேர்க்கும் திட்டம் ஆகும். பணியில் சேர்வதற்கு முன்பு 6 மாத காலத்திற்கு பயிற்சி வழங்கப்படும். 17.5 வயது முதல் 21 வயதிலான ஆண், பெண் இருபாலரும் இத்திட்டத்தில் இணையலாம். இந்த வருடத்தில் இணைபவர்களுக்கு மட்டும் வயது வரம்பு 23 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் அவர்கள் தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம் ஆகும். உடற்தகுதியை பொறுத்தவரை ராணுவத்தில் சேருவதற்கு இப்போது நிர்ணயிக்கப்பட்டிருக்கும் உடற்தகுதிகளே அக்னிபாத் திட்டத்தில் சேருபவர்களுக்கும் பொருந்தும். அக்னிபாத் திட்டத்தின் கீழ் தேர்வாகும் வீரர்களுக்கு முதலாம் ஆண்டில் மாதம் ரூ.30 ஆயிரம் சம்பளமும், கடைசி, அதாவது 4-வது ஆண்டில் மாதம் ரூ.40 ஆயிரம் சம்பளமும் வழங்கப்படும்.இந்த சம்பளத்தில் 30% பிடித்தம் செய்யப்பட்டு, சேவா நிதியாக மத்திய அரசின் பங்களிப்புடன் (அதே 30% அளவிலான தொகை) பணி நிறைவின் போது ஒவ்வொரு வீரர்களுக்கும் தலா ரூ. 11.7 லட்சம் வரிப்பிடித்தமின்றி வழங்கப்படும்.

இராணுவ ஆர்வலர்கள் ஏன் இந்த திட்டத்திற்கு பலத்த எதிர்ப்பினை தெரிவித்து வருகிறார்கள்…..

பாதுகாப்புப் படையில் 4 ஆண்டுகள் பணியாற்றும் இளைஞர்களில் 25 சதவீதம் பேருக்கு பணி நீட்டிப்பு வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால், பணி நீட்டிப்பு செய்யப்படாமல், 21 அல்லது 23 வயதில் ராணுவப் பணியிலிருந்து வெளியேறும் தங்களது எதிர்காலம் என்னவாகும் என்று கேட்டு இளைஞர்கள் கொதித்தெழுகிறார்கள்.17.5 வயதில் ராணுவத்தில் வேலை என்று மத்திய அரசு அறிவித்திருப்பதால், 10 அல்லது பனிரெண்டாம் வகுப்பு முடித்ததுமே, இந்தப் பணியில் சேரும் இளைஞர்களின் மேற்படிப்பு என்ற வாய்ப்பு / கனவு பறிக்கப்படும். ஏற்கெனவே, உயர்கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை நாட்டில் குறைவு. இந்த திட்டத்தால் உயர் கல்வி பயிலாத இளைஞர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் கணிசமாக கண்ணெதிரே அதிகரிப்பதைப் பார்க்க முடியும். காரணம் மத்திய அரசின் ‘அக்னிபத்’ திட்டமாக இருக்கும்.

மறுபக்கம், ராணுவ வேலை என்பதால், பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையிலிருக்கும் பெற்றோர் உயர்கல்வி படிக்க வைக்காமல் பிள்ளைகளை அக்னிவீரர்களாக மாற்றும் அபாயமும் உருவாகலாம்.

ஒவ்வொரு ஆண்டும் 46 ஆயிரம் பேர் அக்னிவீரர்களாகத் தேர்வு செய்யப்படுவார்கள். இவர்களில் 25 சதவீதம் பேருக்கு மட்டுமே நிரந்தரப் பணி வழங்கப்படும். எஞ்சிய 75 சதவீதம் பேரும் கையில் சேவா நிதியுடன் மீண்டும் வேலையில்லா இளைஞர்களின் கூடாரத்துக்கே அனுப்பி வைக்கப்படுவார்கள். உயர் கல்வியும் கிடைக்காமல், நாட்டு நடப்புக்கு எந்த தொடர்பும் இல்லாத ராணுவப் பயிற்சி முடித்த இவர்கள் எந்த வேலைகளுக்கு அமர்த்தப்படுவார்கள்? இதனால் வேலையில்லாத் திண்டாட்டம் குறையுமா? கூடுமா? என்ற கேள்விகளுக்கு பதில் கிடைக்குமா பொறுத்திருந்து பார்க்கலாம்.

– கவிதா ராம்குமார்