கவிதைச் சந்நதம் தொடர் 29: நா.வே.அருள் கவிதை – ஐ.தர்மசிங்

கவிதைச் சந்நதம் தொடர் 29: நா.வே.அருள் கவிதை – ஐ.தர்மசிங்



தீக்குச்சி மனிதர்கள்

எந்தவித சொல் ஜோடனையுமின்றி ஒரு கவிதை மனதில் தீக்குச்சி கிழித்துப் போடக் கூடுமா? படித்து முடித்ததும் மனம் பற்றிக் கொள்ளுமா? கடைசி வரியில் ஏற்பட்ட அதிர்ச்சி கவிதையை முடித்த பின்பு கவிதையின் அத்தனை வரிகளிலும் மெல்லப் பரவுமா?

கவிஞன் தனது கொரோனா காலத்து நினைவுகளை அசை போடுகிறான். தனது அன்றாட புழங்கு வெளியில் யார் யாரையெல்லாம் சந்தித்தானோ அவர்களையெல்லாம் நினைத்துப் பார்க்கிறான். கவிஞன் ஒரு மண்மணம் மாறாத கிராமத்துக் காரன். இன்னும் கிராமத்தில் ஆண்கள் ஒரு குழுவாய், பெண்கள் மற்றொரு குழுவாய்ச் சேர்ந்து கிணறுகளுக்குப் போய் குளிக்கிற வழக்கம் இருக்கிறது. நகரத்திலோ பக்கட் குளியல். அவசர அவசரமாகத் தண்ணீரைத் தலையில் கொட்டிக் கொள்ளும் காலை நேரக் காரியக் குளியல். நகரத்துக் குளியலைக் ‘கழுவல்’ என்று சொல்வார் பிரபஞ்சன்.
“காலை வேளையில்
இணைந்து நீராடும்
நண்பர்களோடும்”
ஒவ்வொரு கிராமத்துக்காரனுக்கும் தன்னுடன் கிணற்றுக் குளியலில் நீச்சலடித்த நண்பர்கள் ஞாபகத்திற்கு வருவார்கள்.

பணிக்குப் போவது இப்போதெல்லாம் போருக்குப் போவது போல. குறைந்தபட்சம் மூன்று ஆட்களின் வேலைகளை ஒரு ஆள் செய்ய வேண்டிய கட்டாயம் உருவாகியிருக்கிறது. மனிதர்கள் கார்ப்பரேட் உலகத்தின் கண்ணிகளில் சிக்கிய காக்கைகளாவிட்டனர். அதிகாலை சென்றால் பின்னிரவுக்குப் பின் வருவதுதான் ஒரு தொழிலாளியின் தொழில் தர்மம் ஆகிவிட்டது. எட்டு மணி நேரம் வேலை, எட்டு மணி நேரம் ஓய்வு, எட்டு மணிநேரம் உறக்கம் என்பதெல்லாம் வெறும் கம்யூனிசக் கனவாகிவிட்டது.

இத் துயரங்களுக்கு வலி நிவாரணியாக இருக்கின்றன ஊர்க்காரர்களின் ஓரிரு வார்த்தைகளின் குசலங்கள். ஒரு நாள் பணிக்குப் போகையில் வழியில் “என்ன மச்சான் வேலைக்கா?” என்பது மூன்று வார்த்தைகளாகத்தான் இருக்கும். ஆனால் அந்த வார்த்தைகள் பணியிலிருக்கிற சிரமங்களையெல்லாம் ஒரு முள்வாங்கியைப் போல மனதில் இறங்கிய துயர முட்களை லாவகமாக அப்புறப்படுத்தி விடுகிறது.
“பணிக்குத் திரும்புகையில்
புன்னகைக்கும்
உள்ளூர் உறவுகளோடும்

பேருந்து நிறுத்தத்தில்
பத்துநிமிட
தோழர்களோடும்

அருகாமை இருக்கைகளில்
பயணிக்கும்
நாற்பது நிமிட நேர
சக பயணிகளோடும்

பணியிடத்தில்
பத்துமணி நேர
உடன் ஊழியர்களோடும்”

இது நுகர்வோர்களின் காலம். கார்ப்பரேட்டுக் கம்பெனிகள் முழுவதும் நுகர்வோர்களுக்காக என்னென்ன சௌகரியங்களைத் தர வேண்டுமோ அத்தனைச் சௌகரியங்களையும் ஏற்படுத்தித் தருவார்கள். கார்ப்பரேட்டுகள் சௌகரியங்களை உற்பத்தி செய்கிற தாதாக்கள் அல்ல. ஆனால் சௌகரியங்களின் இடைத் தரகர்கள். தங்களின் பணியாட்களைப் பம்பரமாகச் சுழலவிடுவார்கள். கட்டளைகளின் கயிறுகளால் பம்பரங்களின் தலை கிறுகிறுத்து விடுகின்றன. பணியாட்கள் நுகர்வோர்களின் பட்டியலில் இடம்பெறுவதில்லை. அடிமைகளின் கழுத்துகள் நுகத்தடிக்குப் பழகிவிடுகின்றன.
“புதிது புதிதாய்
நிதமும் சந்திக்கும்
வாடிக்கையாளர்களோடும்

இரவு வீடு திரும்புகையில்
மாமூலாகப் பயணிக்கும்
பேருந்தின்
நெருக்கமான நடத்துனர்களோடும்”
நடத்துநர்கள் வீடு திரும்பும் நேரம் என்ன நேரம் என்று கற்பனை செய்து பாருங்கள். அவர்கள் வீடு திரும்பும் நேரம் பெரும்பாலும் பின்னிரவு நேரம். அதற்குப் பின் வீட்டில் எந்தக் கண்கள் விழித்திருக்கப் போகின்றன. யாரும் விழித்துக் கொண்டு தூக்கம் கெட்டுவிடக் கூடாதே என்று திருடனைப் போல உள்நுழையும் அனுபவத்தை எத்தனை பேரால் உணர்ந்து கொள்ள முடியும்?

தையல்காரர் வீடு திரும்ப பத்து அல்லது பதினோரு மணி ஆவது சகஜமான விஷயம். அவர் எல்லாத் துணிகளையும் தைத்து முடித்திருப்பார். அவர் மனம் மட்டும் தைக்க ஆளின்றிக் கிழிந்துகிடக்கும்.
இறங்குமிடத்தில்
“வீடுதிரும்ப
தயாராகிக் கொண்டிருக்கும்
தையல்கடை நண்பரோடும்”

பெரும்பாலும் நம் நாட்டில் புரட்சி பரவாமல் மக்கள் எல்லோரும் நமத்துப் போன தீக்குச்சிகளாகக் கிடப்பதற்கு என்ன காரணம் என்று அடிக்கடி யோசிப்பேன். வாழ்க்கையின் சிரமங்கள் தீக்குச்சிகளின் தலையில் நீர் தெளித்துவிடுகின்றன.
மனிதர்கள் கரும்புகளைப் போன்றவர்கள். பிழியப் பிழிய ருசியின் சாறுகள். ஆனால் பிழிந்த பின்பு? அன்றாடங்களைத் தள்ளுவதற்கே அல்லல் படுகிறார்கள். மூச்சு முட்டுகிறது. முழி பிதுங்குகிறது. சாறெடுக்கப்பட்ட கருப்பஞ்சக்கைகள் குப்பைக்குத்தானே ஆகும்?

பிழைப்பு வாதம் ஒரு சீறும் சிங்கத்தையே தெருவில் அலையும் நாயாக்கிவிடுகிறது. இவ்வளவுக்குப் பிறகும் வருகிற வழியில் அண்டை நாட்டு நிகழ்வுகளையும் உள்நாட்டு அரசியலையும் பேசுகிற சில பிரகிருதிகள் இருக்கத்தான் செய்கிறார்கள்! இப்படிப் பேசுவதை ஓர் அரசியல் செயல்பாடாகவும் மானுடக் கடமையாகவும் செய்கிறான் இந்தக் கவிஞன். கவலைகளைக் கலந்துரையாடல்களின் மூலம் களைய நினைக்கிறான் கவிஞன். ஆனால் கொரோனா காலம் ஒவ்வொருவனையும் வீட்டில் முடக்கிப் போட்டு உணர்வுகளை அடக்கிப் போட்டுவிட்டதே என்று அங்கலாய்க்கிறான்.
“அண்டை நாட்டு
நிகழ்வுகளையும்
உள்நாட்டு அரசியலையும்
குடும்ப வலிகளையும்
சின்னச்சின்ன
மகிழ்வுகளையும்

பரிமாறிக் கொள்ளும்
வாய்ப்பினை இழந்து

அலை பேசியோடும்
தொலைக் காட்சியோடும்
போராடுகிற நிலையில்
வீட்டுக்குள் முடக்கிய
இந்த;f கொரோனா கால
” லாக் டவுன் ”
மனநலத்தைச் சோதிக்க

உள்ளுணர்வில்
மனதை மௌனமாக
உறுத்திக் கொண்டேயிருக்கிறது”

அவனை ஒரு விஷயம் உறுத்திக் கொண்டேயிருக்கிறதாம். அது என்ன விஷயம்? அதுதான் கவிதையின் உயிர் முடிச்சு. தனக்குக் கொரோனா கொடுத்த தண்டனையைக் காலமெல்லாம் ஒருத்தி வீட்டுச் சுவர்களுக்குள்ளேயே அடைந்து கிடந்து அனுபவிக்கிறாளே என்று குற்றவுணர்ச்சியில் குறுகுறுக்கிறான் கவிஞன்.
“வீட்டுச் சுவர்களை
தனது எல்லைகளாக்கி
நாட்களை நகர்த்தும்
வாழ்க்கைத் துணையின்
வலி…’”

மண்தரையில் நீர் பரவுவதைப் போல வலி கவிதை முழுவதும் பின்னோக்கிப் பரவுகிறது. இப்படிப் பரவும் “மன உறுத்தல்” தான் இந்தக் கவிதையின் ஆகப் பெரும் வெற்றி.

” வலி ”
*********

காலை வேளையில்
இணைந்து நீராடும்
நண்பர்களோடும்

பணிக்குத் திரும்புகையில்
புன்னகைக்கும்
உள்ளூர் உறவுகளோடும்

பேருந்து நிறுத்தத்தில்
பத்துநிமிட
தோழர்களோடும்

அருகாமை இருக்கைகளில்
பயணிக்கும்
நாற்பது நிமிட நேர
சக பயணிகளோடும்

பணியிடத்தில்
பத்துமணி நேர
உடன் ஊழியர்களோடும்

புதிது புதிதாய்
நிதமும் சந்திக்கும்
வாடிக்கையாளர்களோடும்

இரவு வீடு திரும்புகையில்
மாமூலாகப் பயணிக்கும்
பேருந்தின்
நெருக்கமான நடத்துனர்களோடும்

இறங்குமிடத்தில்
வீடுதிரும்ப
தயாராகிக் கொண்டிருக்கும்
தையல்கடை நண்பரோடும்

அண்டை நாட்டு
நிகழ்வுகளையும்
உள்நாட்டு அரசியலையும்
குடும்ப வலிகளையும்
சின்னச்சின்ன
மகிழ்வுகளையும்

பரிமாறிக் கொள்ளும்
வாய்ப்பினை இழந்து

அலை பேசியோடும்
தொலைக் காட்சியோடும்
போராடுகிற நிலையில்
வீட்டுக்குள் முடக்கிய
இந்த கொரோனா கால
” லாக் டவுன் ”
மனநலத்தைச் சோதிக்க

உள்ளுணர்வில்
மனதை மௌனமாக
உறுத்திக் கொண்டேயிருக்கிறது

வீட்டுச் சுவர்களை
தனது எல்லைகளாக்கி
நாட்களை நகர்த்தும்
வாழ்க்கைத் துணையின்
வலி…

ஐ.தர்மசிங்
நாகர்கோவில்…