Manipura short story by Kavitha pazhanivel கவிதா பழனிவேலின் மணிப்புறா சிறுகதை

மணிப்புறா சிறுகதை – கவிதா பழனிவேல்



“இன்னும் ரெண்டு மைல் தான் இருக்கு ஆத்தா ஆஸ்பத்திரி, கொஞ்சம் பொறுத்துக்கோ” என்றாள் பெரியாத்தா.

“டேய், முருகா, மாட்டை இழுத்துப் பிடிச்சு வேகமா ஓட்டுடா, புள்ள இடுப்பு வலியில துடிக்கிறா ”

மாட்டு வண்டி ஓட்டும் முருகன் பெரியாத்தாவின் பேரன். தன் தோளில் போட்டிருந்த துண்டை எடுத்து முகத்தைத் துடைத்தான்.

“ஹாய் ஹாய் ” என்று தன் கையில் இருந்த குச்சியை வைத்து மாட்டை அடித்து வேகமா ஓட்டினான். சற்று வேகத்தில் வண்டி போக, பெரியாத்தா பவுனின் தலையை அவள் மடி மீது வைத்துக்கொண்டு, முந்தானையில் தன் முகத்தை துடைத்து இடுப்பில் சொருகினாள்.

“அம்மா பவுனு நம்ம குலதெய்வம் பெரியாண்டவ உன்னை கைவிடமாட்டா” என்றாள் பெரியாத்தா.

பவுனு, “ஐயோ பெரியாத்தா” என்றவள் அழ ஆரம்பித்தாள். தலையை பிடித்துக்கொண்டு, இடுப்பு வலியைப் பொறுத்துக் கொண்டு பெரியாத்தாவின் கைகளை பிடித்து படுத்திருந்தவள் அண்ணாந்து வானத்தைப் பார்த்தாள். மின்னிய நட்சத்திரங்கள் அவளுக்குள் ஆயிரம் கேள்விகளைக் கேட்டது

கடலூர் மாவட்டம், டி.புதுப்பாளையம் என்ற கிராமத்தில் பிறந்தவர் ராஜபாண்டியன். சிறுவயதிலிருந்தே கஷ்டப்பட்டு முன்னேறியவர், ஊர்த் தலைவர், சாதி வெறி பிடித்தவர், வாழ்ந்தாலும் கௌரவத்தோடு வாழணும் என்று நினைப்பவர் .

ஊருக்கு வெளியே உள்ள தனது பத்து ஏக்கர் தோப்பில் வீடு கட்டி விவசாயம் செய்து வருபவரின் மொத்த சொத்துக்கும் சொந்தக்காரி அவரின் ஒரே மகளான பவுனம்மாள். டிவிஎஸ் – எக்ஸ்எல் – ல் பவுன் வலம் வருவதை பார்த்து பெருமிதம் கொள்வார் ராஜபாண்டியன்.

அன்று ஊர் திருவிழா களைகட்டியது சாலையின் இருபுறமும் கொம்புகளில் டியூப்லைட் கட்டி வைத்திருந்தனர். ஆங்காங்கே மின் விளக்கினால் அம்மனின் உருவம் ஜொலித்தது. வாணவேடிக்கையும் குழந்தைகள் பலூன்களை வைத்துக்கொண்டு விளையாடுவதிலும் நிறைந்திருந்தது. மூன்று நாள் கூத்து, அன்று கடைசி நாள், சிவன் பார்வதியின் கதை. மக்கள் மிதமான கூட்டத்துடன் இருந்தனர் .

“தில்லுபருஜானே தில்லு தீவானே தித்திக்கிற தேனே “கலைஞன் படத்தில் வரும் இந்த பாடல் தெருவெங்கும் ஒலித்துக்கொண்டிருந்தது.

தன் தோழிகளுடன் அன்றிரவு தன் அம்மாவிடம் சொல்லிவிட்டு கூத்து பார்க்கிறதுக்கு வந்தாள் பவுனு. டாலர் போட்ட செயின், காதில் ஜிமிக்கி கம்மல், இரட்டை ஜடை மல்லிப்பூவோடு, வெள்ளை தாவணியில் மணிப்புறா போல் இருந்தால், வெள்ளி கொலுசு கால்களில் சங்கீதம் பாடியது.

“என்னடா முருகா” என்றாள் பவுனு.

ராஜபாண்டியனின் பக்கத்துத் தோப்புக்காரரும், சொந்தக்காரரும் ஆன ஆறுமுகத்தின் மகன்தான் இந்த முருகன். ராஜபாண்டியனின் அந்தஸ்துக்கு ஈடானவர்கள்.

சிவப்பு நிற கட்டம் போட்ட சட்டை வெள்ளை வேட்டியும் கட்டியிருந்தான். முருகன் பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக வாட்டசாட்டமாக இருப்பான்.

சட்டென்று திரும்பிய முருகன், “என்னடி கொழுப்பா? சும்மா இருக்க மாட்ட பொம்பள புள்ளைங்க அமைதியா இருந்தா தாண்டி நல்லது உன்ன மாதிரி திமிர் புடிச்சு சுத்த கூடாது “என்று தன் குரலை உயர்த்திச் சொன்னான்.

“ரொம்ப கத்தாத டா முருகா, இன்னைக்கு என்ன வேலை வெட்டி இல்லையா, கூத்து பாக்க வந்துட்ட, பெரியாத்தா எங்க போச்சு? உன்ன சும்மா விட்டு இருக்காதே, பொய் சொல்லிட்டுத் தானே வந்திருக்க” என்றாள் பவுனு.

“ஆமாண்டி, பொய் சொல்லிட்டுத் தாண்டி வந்தேன், இப்ப என்னடி உனக்கு அதுல வந்தியா கூத்து பார்த்தியா போயிட்டே இரு, சும்மா வம்பு இழுக்காத ” இளம் காளை போல் சீறினான் முருகன்.

“இருடா, வீட்டுக்கு போய் பெரியாத்தாகிட்ட ம்ம…செம்ம கச்சேரி இருக்கு” கோபத்துடன் பவுனு சொல்லி முடிப்பதற்குள், “அம்மா தாயே ஆள விடு, உனக்கு ஒரு கும்பிடு, உன் திமிருக்கு ஒரு கும்பிடு” என்றான் முருகன்.

பருவ வயதில் இருக்கும் முருகனும், பவுனும் ஒருவருக்கொருவர் மனதளவில் விரும்பினர் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.

பெரியாத்தா “வயசு என்ன ஆச்சு பொறுப்பில்லாமல் எப்ப பார்த்தாலும் சண்டை போட்டுக்கிட்டே இருக்கிறீங்க “என்று ஏசுவாள். இவர்களுக்கு பஞ்சாயத்து பண்ணுவதிலேயே பெரியாத்தாவுக்கு பொழுது போய்விடும்.

உறவுமுறையில் பெரியாத்தாவுக்கு பவுனும் பேத்தி முறை வருவாள். ஒருவகையில் முருகன் பவுனுக்கு மாமன் முறை வேண்டும். திமிர் பிடித்தவள் ஆச்சே எப்பவுமே முருகனை மாமா என்று அழைத்ததில்லை பவுனு.

ஒருவழியாக திருவிழா முடிந்தது நல்லபடியாக.

காலையில் டவுன் வரைக்கும் போயிருந்த ராஜபாண்டியன் இரவு வீடு வந்து சேர்ந்தார்.. பம்புசெட்டில் குளித்து முடித்து வந்தவர் ‘”ஆத்தா பவுனு சோறு போடுமா, ரொம்ப பசிக்குது” என்றார். .

அன்று அவருக்குப்பிடித்த பலாபழத்தை பூண்டு, உப்பு, காரம் சேர்த்து சமைத்து வைத்திருந்தாள் .

சாப்பிட்டு முடித்த ராஜபாண்டியன் ” நாளைக்கு மலையிலுள்ள முந்திரித் தோப்புக்கு வேலையாட்களை வரச் சொல்லி இருக்கேன். தோப்புல வேலை இருக்கதனால நானும் உன் அம்மாவும் தோப்புக்கு போய்விடுவோம். நாளைக்கு கொஞ்சம் வீட்டு வேலைகளை எல்லாம் பார்த்துக்கோ ஆத்தா ” என்றார்

“சரிப்பா “என்ற பவுனு தூங்கச் சென்றாள்.

ராஜபாண்டியனின் மனைவி வள்ளியம்மாள் பேச்சை ஆரம்பித்தாள் .

“சுந்தரேசனுக்கு பவுன பரிசம் போட நாளான்னிக்கு வரதா அண்ணன் ஆள் விட்டு தகவல் சொல்லி அனுப்பி இருக்கு, நீங்க என்ன சொல்றீங்க” என்றாள்

“அவங்களும் கேட்டுகிட்டே தான் இருக்காங்க தள்ளிப்போட வேண்டாம். ம்ம்ம்….கட்டி வெச்சுடுவோம்” என்றான் ராஜபாண்டியன்.

இரவின் போர்வை அடர்த்தியாக இருந்தது. பக்கத்து ஊரான திருமாணிக்குழி வாமனபுரீஸ்வர் கோயில் வாசலில் வண்டி நின்றது.

பவுனின் நிலைமையைப் பார்த்த பெரியாத்தா “இனிமேல் வண்டியில் போவது முடியாத காரியம் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களை உதவி கேட்போம் “என்றாள்.

பக்கத்து ஊர்க்காரர் என்ற வித்தியாசம் பார்க்காமல் தங்கள் வீட்டுப் பெண் போல் அவளுக்கு உதவி செய்வதற்கு வந்தார்கள். கோயில் பக்கத்தில் உள்ள வீட்டின் திண்ணையில் அவளைப் படுக்க வைத்தான் முருகன். பிரசவத்திற்கான ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தார்கள்.

திண்ணையில் படுத்திருந்த பவுனு, மீண்டும் நட்சத்திரங்கள் கேட்ட கேள்விக்கு விடை தேடச் சென்றாள்.

பவுனு விடிந்து எழுந்து பார்க்கையில் வெறிச்சோடி இருந்தது வீடு.

எழுந்தவள் குளித்து முடித்து வீட்டை சுத்தம் செய்து சோறு பொங்கி எல்லா வேலையும் சீக்கிரமாகவே முடித்தாள்.

முருகனின் தோப்பில் இருக்கும் பன்னீர்ரோஜாக்களை அப்பப்போ யாருக்கும் தெரியாமல் பறிப்பது அவளின் வழக்கமாகவே இருந்தது. அது அவளுக்கு மட்டும் தெரிந்த ரகசியம். அப்படி ஒரு நாளில். அவன் தோப்புக்கு அவள் செல்லும் பொழுது அங்கு உள்ள பம்புசெட்டு தண்ணீர்த் தொட்டி அருகில் உட்கார்ந்து குளித்துக்கொண்டிருந்தான் முருகன்.

பவுனு திருவிழா அன்று நடந்த சம்பவத்தை மனதில் நினைத்துக்கொண்டு முருகனின் முதுகில் விளையாட்டாகத் தன் கால் விரல்களால் எட்டி உதைத்துவிட்டு மறைந்தாள்.

சற்றும் எதிர்ப்பாக்காத முருகன் தட்டுத்தடுமாறி தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து விட்டான். வாயிலும் மூக்கிலும் தண்ணீர் புகுந்து கொண்டது “லொக்கு லொக்கு” என்று இரும்பினான்.

எழுந்தவன் கோவத்தின் உச்சியில் இருந்தான் அவளை விடுவதாக இல்லை

“ஐயோ முருகா “என்ற குரல் அலறியது

அவளின் குரலைப் போன்றே தோன்றியது அவனுக்கு.

தண்ணீர்த் தொட்டியின் மேல்புறத்துக்கு வந்தவன் இடுப்பில் இருந்த துண்டை இன்னும் இறுக்கமாகக் கட்டியவன் எட்டிப்பார்த்தான். மறைந்தவள் அடுப்பெரிக்க நேற்று வேலையாட்கள் வெட்டி வந்த கருவேலம் முள்ளின் மீது விழுந்திருந்தாள். அவளின் தாவணி அவளைவிட்டுவிட்டு தூரத்தில் சென்று இருந்தது.

சிறிது தயக்கத்தோடு அருகில் போனான் முருகன் “பவுனு கையைக் கொடு நான் தூக்குறேன்” என்றான்.

பவுனு, “யாராச்சும் பார்த்தா தப்பா ஆயிடும் முருகா, நீ போ நான் எப்படி ஆச்சும் எழுந்துக்கிறேன் ” என்றாள்.

“அதெல்லாம் ஒண்ணும் இல்ல பவுனு, நீ கையைக் குடு, முதல்ல முள்ளு குத்தி ரத்தம் போகுது பாரு ” என்றான் முருகன்.

அவனின் ஆணைப்படி எதைப்பற்றியும் யோசிக்காமல் தன் கையை அவனிடம் நீட்டினாள்.

அவன் அவளின் கையைப் பிடித்துத் தூக்க பக்கத்தில் போனான். அவனின் மூச்சு காற்று அவள் மீது படுவதை அவள் உணர்ந்தாள். அவளின் கண்கள் அவனின் மார்பகத்தை நோட்டமிட்டது. நாணத்தால் தலை குனிந்தாள். அவனும் அதைப் பார்த்தும் பார்க்காதது போல் இருந்தான். அவனின் ஈர தலையில் இருந்து சொட்டிய நீர் அவள் நெஞ்சை நனைத்தது, தூக்கியவன் கல் தடுக்கி, கீழே இருவரும் விழுந்தனர். அவளின் நெற்றிக் குங்குமம் அவனின் மார்பைத் திலகமிட்டது. இருவரும் வியர்வையின் மழையில் நனைந்தனர்.

“என்னடா முருகா இவ்வளவு நேரமா எங்க போயிருந்த? மதியம் சாப்பிடக் கூட வரல, கொஞ்சம் சோறு சாப்பிடு ” என்று கூப்பிட்ட பெரியாத்தாவுக்கு பதில் சொல்லாமல் பாய் விரித்து குப்புறப் படுத்துக் கொண்டான் முருகன் .

பெரியாத்தா தொடர்ந்தாள்.

“தாய் இல்லாத பிள்ளைனு செல்லம் குடுத்து வளர்த்தது தப்பாப் போச்சு” என்றவள் மிச்ச மீதி இருந்த சோற்றில் தண்ணீரை ஊற்றி மூடி வைத்தாள். அவளும் தூங்கினாள்.

அன்று இரவு தோப்பில் வேலை முடித்து வந்த தன் தகப்பனும் தாயும் வந்தது கூட தெரியாமல் பவுனு ஆழ்ந்து தூங்கியிருந்தாள்.

“என்ன இவ்வளவு சீக்கிரமா தூங்கிட்டா? சாப்பிடாம சோறு, குழம்பு எல்லாம் அப்படியே இருக்கு” என்றாள் வள்ளியம்மாள். போர்வையை எடுத்துத் தன் மகளுக்குப் போர்த்தினார் ராஜபாண்டியன். .

நாளை தன் மகளுக்கு முக்கியமான நாள் என்று விடிய விடிய ராஜபாண்டியனும், வள்ளியம்மாளும் நினைத்தது போல வேலையாட்களை வைத்து வீட்டை அலங்கரித்தனர்.

“பவுனு பவுனு” என்றாள் வள்ளியம்மாள்.

கண்விழித்துப் பார்த்தவளுக்குக் காத்திருந்தது பேரதிர்ச்சி. கண் சிமிட்டி முடிப்பதற்குள் அரங்கேறியது அவளின் திருமணம் சுந்தரேசனுடன்.

அவளில்லாமல் ஏது வாழ்க்கை என்று உயிர் அற்றவனாய்க் கால்கள் போன பாதையில் போனான் முருகன்.

அதற்கப்புறம் யாரும் அவனைப் பார்க்கவில்லை.

சுந்தரேசனுக்கு குடிப் பழக்கம் இருப்பதை மறைத்திருந்தனர். குடித்துவிட்டுப் பலநாள் வீட்டுக்கே வருவதில்லை.

நடைப்பிணமாக இருந்த பவுனுக்குள் ஓர் உயிர் எட்டிப் பார்த்தது… அதிர்ந்து போனாள், நம்ப முடியவில்லை அவளால்.

அய்யனார் கோவில் திருவிழா நெருங்கியது

வள்ளியம்மாள் அய்யனாருக்காக நேர்ந்துவிட்ட கிடாய் மாமரத்தின் நிழலில் கட்டி வைத்தார்.

தன் மகள் மருமகனின் வருகைக்காக காத்திருந்தார். மாபெரும் துயரம் நடக்கப்போகிறது என்று கூட தெரியாமல் ராஜபாண்டியன் தன் குடும்பத்தோடு திருவிழாவுக்கு கிடாவுடன் சென்றிருந்தார்.

மிகுந்த ஆரவாரத்துடன் திருவிழா நடந்து கொண்டிருந்தது. ஊர் ஜனங்கள் அங்கு கூடியிருந்தார்கள். ராஜபாண்டியன் அய்யனாருக்கு நேர்ந்துவிட்ட கிடாயை காவு கொடுத்தார். ஊர் மக்களுக்கு சமைத்துப் பந்தி பரிமாறப்பட்டது .

அன்று கோவில் பக்கத்தில் ஒரு பெண்ணின் அலறல் சத்தம் கேட்டது. ராஜபாண்டியனும் உடனிருந்த ஊர்மக்கள் சில பேர் என்ன என்று பார்க்கையில் அனைவரும் உறைந்து போயினர். சாராயம் குடித்துவிட்டு சாராயகாரனிடம் ஏற்பட்ட கைகலப்பில் சுந்தரேசன் ரத்தவெள்ளத்தில் கிடந்தான். ஒருத்தன் பவுனின் தலைமுடியைப் பிடித்துப் பனைஓலையால் அடித்துக் கொண்டிருந்தான். ரத்தம் பீறிட்டு ஓடியது.

“குடிகாரப் பய குடிச்சதுக்குக் காசு தராம போதாக்குறைக்கு இவ என் சாராயப் பானையை உடைச்சா இதா நடக்கும்”என்றபடி அவளின் சேலயைப்பிடித்து இழுத்தான். இதைப் பார்த்த ராஜபாண்டியன் அவனைப் போட்டுப் புரட்டி எடுத்தார் .

சண்டை முற்றியது. சாதி பிரச்சனையாக மாறியது. ஆயிரம் பேருக்கு மத்தியில் சாராயம் காய்ச்சுபவனும் அவனின் கூட்டமும் சேர்ந்து வாழைமரத்தை சாய்ப்பது போல் ராஜபாண்டியனை வெட்டி சாய்த்தனர். ஊர் முழுக்க போலீஸ் பந்தோபஸ்து முன்று நாள் தொடர்ந்து நீடித்தது…..குற்றம் புரிந்தவர்கள் சிறைக்குச் சென்றார்கள்.

பவுனு கர்ப்பமாக இருப்பதால் ஈமச் சடங்குகளை உறவினர்கள் பார்த்துக்கொண்டனர்.

“இவ கருத்தரிச்ச நேரம் பெத்தவனையும் முழுங்கிட்டா, நம்ம சுந்தரேசனையும் காவு வாங்கிட்டா, இதற்குமேல் அவ இங்கு இருந்தால் என் தாலிக்கு ஆபத்து வந்திடும் ….அவளை அவ பொறந்த வீட்டுகே அனுப்பிவிடுங்க” என்றாள் சுந்தரேசனின் தாயார்.

கனத்த மனதோடு பவுனைப் பிறந்த வீட்டுக்கு அனுப்பிவிட்டார் வள்ளியம்மாளின் அண்ணன்.

தன் தாய்க்குத் துணையாக பிறந்த வீட்டிலேயே இருந்துவிட்டாள் பவுனு.

மாதங்கள் கடந்தன, முருகனை அந்த கணம் பார்த்ததோடு சரி, அதற்கப்புறம் அவனைப் பார்க்கவில்லை பவுனு.

ஒரு கணம் முருகனைப் பார்த்து விட மாட்டோமா, மனதில் எழுந்த விஷயங்களை அவனிடம் சொல்ல மாட்டோமா என்று தவித்துக் கொண்டே இருந்தாள் பவுனு.

குமரேசனும், பெரியாத்தாவும் அப்பப்போ பவுனுக்குத் தேவையானவற்றை செய்து முடிப்பர்.

தன் மகளின் நிலையை கண்ட வள்ளியம்மாள் அவளின் வாழ்க்கைக்குத் தன்னால் ஏதும் செய்ய முடியவில்லையே என்ற ஏக்கத்துடன் நோயுற்று இறந்து போனார் .

பவுனு, “நா எத தொலைச்ச, ஆம எதையோ நா தொலைச்சிட்ட யார்கிட்ட நா அழுவ இப்ப எனக்கு யாருமே இல்லையே எங்க தேடுவே என் மன பாரத்தை யார்கிட்ட இறக்கி வைப்பேன்.. கடவுளே என்ன உங்கிட்ட கூப்பிட்டுக்கோ, என்னால தாங்க முடியல” என்று அழுதாள்.

என்றோ அவளை விட்டு தூர சென்ற தாவணி மீண்டும் அவளை நோக்கி வந்தது. முருகனும் வந்தான்.

பவனு ” என்ன விட்டு ஏன்டா போன முருகா, ஏன்டா போன ? ” என்று அவனின் சட்டையைப் பிடித்துக்கொண்டு அழுதாள்.

மணிப்புறா போலிருந்த தன் காதல் இன்று வெள்ளை காகிதமாய் இருப்பதைக் கண்டு நொந்து போனான்.

பவுனின் சத்தத்தை கேட்டு வந்த பெரியாத்தா முருகனை பார்த்து அதிர்ந்து மௌனமானாள்.

வந்த உறவையும், வரப்போகிற உறவையும் நினைத்து முதல்முறையாக மகிழ்ந்தாள் பவுனு.

இடுப்பு வலியால் துடித்த பவுனை அங்கு இருந்த மாட்டு வண்டியில் முருகன் படுக்கவைத்தான். பெரியாத்தா உடன் இருந்தார்.

வண்டி புறப்பட்டது.

திண்ணையில் படுத்திருந்த பவுனுக்கு வலி அதிகமானது. குழந்தையின் அழுகுரல் கேட்டு பெரியாத்தாவும், முருகனும் மகிழ்ந்தனர்.

“என் பக்கத்துல வா முருகா” என்றழைத்தாள். பவுனு அருகில் வந்தவனின் கையைப் பிடித்து “நா ஒரு நாள் கூட சுந்தரேசனுக்கு பொண்டாட்டியா இருந்ததுல்ல முருகா” என்றாள்.

தலையில் அடித்துக்கொண்ட முருகன் அவளின் கால்களைப்பிடித்து அழுதான்

“நம்ம புள்ள முருகா ” என்றாள் பவுனு.

குழந்தை முருகனின் கைவிரல்களைப் பிடித்துக்கொண்டிருந்தது,

கடைசியாக முருகனின் கையைப்பிடித்து முத்தமிட்டாள் ,”என் மனசு இப்போ லேசா இருக்கு”என்றவள் புன்னகைத்தாள்.

நட்சத்திரங்களோடு நட்சத்திரமாய் கலந்தாள் அவனின் மணிப்புறா.

*********************

Sangamam short story by kavitha pazhanivel கவிதா பழனிவேலின் சிறுகதை சங்கமம்

சங்கமம் சிறுகதை – கவிதா பழனிவேல்



சமையல் அறையின் ஜன்னல் வழியாக வெளியே கொடியில் காய வைக்கப்பட்டு இருந்த புடவை காற்றில் பறப்பதை பார்த்தாள் காவியா. அன்றைய தின நினைவுகள் மனதில் அலைமோதியதால் கண்கள் கலங்கின.

அன்று மாம்பலம் தொடர்வண்டி நிலையத்தின் பிளாட்பாரம் எண் ஒன்றில் கோடம்பாக்கம் செல்வதற்காக காத்துக் கொண்டிருந்தாள் காவியா. எதேச்சையாக லில்லி அக்காவும் அங்கிருந்ததை பார்த்துவிட்டாள் காவியா.

“நீங்க லில்லி அக்கா தானே? அக்கா என்னை ஞாபகம் இருக்கா? நாம ரெண்டு பேரும் ஒரே பள்ளியில் படிச்சோமே ?” லில்லியின் இரு கைகளையும் பிடித்தவாறு கேட்டாள் காவியா.

லில்லி காவியா, காட்டன் புடவையில் அழகுச் சிலைபோல் தோற்றம் கொண்டிருப்பதை பார்த்தாள் , பள்ளிப்பருவத்தில் பார்த்த முகமாய் இல்லை என்று அடையாளம் காண முடியாமல் விழித்தாள்.

மகளிர் சிறப்புத் தொடர் வண்டி வந்தது. இருவரும் அதில் ஏறிக் கொண்டார்கள். ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து கொண்டாள் காவியா. அருகில் லில்லி. மீண்டும் காவியாவே பேச்சை தொடர்ந்தாள்.

“ஐயோ அக்கா..” என்று விளித்து இன்ப அதிர்ச்சியில் தலைகால் புரியாமல் லில்லியிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டாள்.

அப்போது லில்லியின் அலைபேசி அலறியது. எடுத்தவள் இன்னும் சிறிது நேரத்தில் வந்து விடுவதாக மட்டும் சொல்லி அலைபேசியை பையில் வைத்தாள்.

லில்லிக்கு அப்போதுதான் பள்ளியில் குழந்தைகள் தினத்தன்று தான் பாடிய பாடலுக்கு காவியா கொடுத்த க்ரீட்டிங் கார்டு ஞாபகம் வந்தது.

“ஏ.. காவ்யா தான நீ”

“என்னைக் கண்டுபிடிக்க இவ்வளவு நேரமா?”

யார் அந்த லில்லி??

‘யமுனை ஆற்றிலே ஈரக் காற்றிலே கண்ணனோடுதான் ஆட’ தளபதி படத்தில் வரும் இந்த பாடலின் குரல் அனைவரின் காதுகளிலும் இனிதாக ஒலித்தது. அன்று குழந்தைகள் தினம். லில்லி மேடையில் அனைவரின் முன் மைக்கில் பாடிக்கொண்டிருந்தாள். எட்டாம் வகுப்பு மாணவர்கள் அமரும் வரிசையில் காவியா அமர்ந்திருந்தாள். பாட்டு பாடி முடிந்ததும் மேடையை விட்டு கீழே வந்த லில்லியின் கைகளை பிடித்துக்கொண்டு
“சூப்பர்க்கா. அருமையா பாடுனீங்க”

“தேங்க்ஸ்” சொல்லிவிட்டு நகர்ந்தாள் லில்லி.

பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் லில்லியை புகழாதவர்கள் யாருமே இல்லை. விரும்பாதவர்களும் யாருமே இல்லை. அனைவரும் பொறாமைப்படும் அளவுக்கு அழகாய் இருப்பாள். தன் பேச்சுத்திறனால் அனைவரையும் திக்குமுக்காடச் செய்வாள். தன்னை வெல்ல யாரும் இல்லாதது போல் அனைத்து தேர்வுகளிலும் மற்றும் விளையாட்டுப் போட்டிகளிலும் முதல் பரிசைத் தட்டிச் செல்பவளாக லில்லி வலம் வந்தாள்.

இதையெல்லாம் கண்ட காவியா லில்லியை தனது ரோல் மாடலாகவே நினைத்துவந்தாள்.

அருகில் அமர்ந்திருந்த காவியாவை நோக்கிய லில்லி ” ரொம்ப நாளைக்கப்புறம் பார்த்துக்கிறோம் இல்ல…. இப்ப எங்க இருக்க?” என்றாள்.

“நான் காஞ்சிபுரத்துல இருக்கேங்க்கா. சென்னைக்கு வந்து ரெண்டு நாளாச்சு . தி. நகர் பேருந்து நிலையம் பின்புறத்தில் தான் அம்மா வீடு அம்மாவுக்கு உடம்பு சரியில்லை. அவங்கள பாக்கரதுக்காகத் தான் நான் வந்திருக்கேன். இப்ப நல்லா இருக்காங்க. நானும் அவரும் தி. நகர் பேருந்து நிலையம் பக்கத்துல சிவா விஷ்ணு கோவிலுக்கு வந்தோம்.‌ ரெண்டு நாள் அம்மா கூட இருந்துட்டு சித்தியையும் பார்த்துட்டு வரேன்னு நான் சொன்னேன். சாமி கும்பிட்டுவிட்டு வரும்போது சித்தி அலைபேசியில் எங்கள் இருவரையும் கோடம்பாக்கத்தில் உள்ள அவர் வீட்டுக்கு அழைத்தார். சூழ்நிலை காரணமாக அவரால் வர முடியாதனால என்னைய் ட்ரெயினில் சித்தி வீட்டுக்கு பத்திரமாக போக சொல்லிட்டு அவர் காஞ்சிபுரம் கிளம்பிட்டாரு”

காவியாவே தொடர்ந்தாள் “நீங்க என்ன பண்றிங்க? உங்கள பத்தி சொல்லுங்க. எங்க ஒர்க் பண்றீங்க? பசங்க இருக்காங்களா? வீடு எங்க இருக்கு?” என்று அடுக்கடுக்காய் கேட்டாள் காவ்யா.

“சரி சரி இந்தா தண்ணிய குடி! கேள்வி கேட்டு ஆள ஒரு வழியா ஆக்கிடுவ போல.. கொஞ்சம் கூட நீ மாறவே இல்ல காவியா” என்று சொல்லிய லில்லிக்கு தன்னையே பார்ப்பது போல் எண்ணம் தோன்றியது.

லில்லி தொடர்ந்தாள். “நான் ஒரு தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்புகளுக்கு கணக்கு டீச்சராக இருக்கேன். கோடம்பாக்கம் மீனாட்சி மகளிர் கல்லூரி பக்கத்துல தான் என்னோட வீடு”

லில்லி பேச்சை முடிப்பதற்குள் “என்ன உங்க வீட்டுக்கு கூப்பிட மாட்டீங்களா?” உரிமையுடன் கேட்டாள் காவியா.

லில்லி அவளை வீட்டிற்கு அழைத்தாள். தான் மறுநாள் கண்டிப்பாக வருவதாக கூறினாள் காவியா. முகவரி அலைபேசி எண் வாங்கிக்கொண்டாள் காவ்யா. கோடம்பாக்கம் தொடர் வண்டி நிலையத்தில் வண்டி நின்றது. இருவரும் இறங்கினர்.

மறுநாள் காவியா தன் அம்மாவிடம் சொல்லிவிட்டு லில்லியின் வீட்டுக்கு ஆட்டோ பிடித்தாள்.

காவியாவிற்கு சென்னை வாழ்க்கையில் ஈடுபாடு இல்லை அவளது எண்ணத்திற்கு தகுந்த மாதிரியே காஞ்சிபுரம் அருகே ஒரு கிராமத்தில் திருமண வாழ்க்கை அமைந்துவிட்டது. லவ்-கம்-அரேஞ்டு மேரேஜ் தான்… அன்பான கணவன். இரண்டு அடுக்கு மெத்தை வீடு தோட்டம் என்று காவ்யாவிற்கு பிடித்தமான வாழ்க்கை அமைந்தது.

ஆட்டோ லில்லியின் வீட்டின் முன் நின்றது. இயேசு உங்களை ஆசீர்வதிப்பார் என்ற வாசகம் எழுதப்பட்டிருந்தது.லில்லிக்காக அவங்க அப்பா பார்த்து பார்த்து கட்டின வீடு.வீட்டின் காலிங் பெல்லை அழுத்தினாள் காவியா. லில்லியின் அம்மா எஸ்தர் வீட்டின் கதவைத் திறந்தார். காவியாவை பார்த்துவிட்ட லில்லி “ஏய் காவியா உள்ள வா” என்றவள் காவியாவைப் பற்றி எஸ்தரிடம் அறிமுகம் செய்து வைத்தாள். வரவேற்பறையில் இருந்த சோபாவில் காவியாவை உட்காரச் சொன்னாள்.

சிறிது நேரம் பேசியபின் எஸ்தர் லில்லியை நோக்கி “சரிம்மா கிச்சன்ல டீ இருக்கு. லாரன்ஸ் நீ டீ குடுத்தா தான் குடிப்பார். எடுத்துட்டு போம்மா. ஆல்பர்ட் கூட லாரன்ஸ் ரூம்ல தான் இருக்காரு ” என்றாள். எஸ்தர் தன் கணவர் ஆல்பர்ட்டை எப்போதும் பெயர் சொல்லி கூப்பிடுவது தான் வழக்கம். அவர்களுக்குள் அப்படி ஒரு அன்யோன்யம்.

சமையலறையிலிருந்து இரண்டு சிகப்பு நிற கோப்பையில் அப்பாவுக்கும் லாரன்ஸ்க்கும் டீ எடுத்துக்கொண்டு சென்றாள் லில்லி.

லாரன்ஸ்..அழகான தோற்றம் உடையவன். அனைவரையும் தன்வசம் இழுத்துக் கொள்ளும் அளவிற்கு வசீகரிக்கும் குரல் கொண்டவன் . பத்தாம் வகுப்பு வரை படித்தவன். போட்டோ கல்யாண வீடியோ எடுப்பதில் அவனை மிஞ்சும் அளவிற்கு யாரும் இல்லை. ஐந்து வயது இருக்கும் போது கார் விபத்தில் தன் பெற்றோரை இழந்த லாரன்ஸ், பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்தான். அந்த அன்பும் நீடிக்கவில்லை.

பாட்டியின் இழப்பு அவனை தன்னியல்பில் இல்லாதவனை போல் ஆக்கியது. சோகம் அவனை சூழ்ந்துக் கொண்டது. வீட்டின் எந்தப் பக்கம் திரும்பினாலும் பாட்டியின் நினைவுகள். மூன்றே அறைகள் கொண்ட அழகான வாடகைவீடு. அனைத்து வகையான ரோஜா செடிகள் பூக்களோடு நம்மை வரவேற்கும் அமைப்பில் வீட்டின் முன்புறம் அமைந்திருக்கும். பாட்டி இருக்கும் வரை வாசலில் இருக்கும் மாடத்து விளக்கு ஜொலித்துக் கொண்டிருக்கும். வரவேற்பறையின் இடதுபுறம் சமையலறை. வரவேற்பறையின் பின்புறம் முடிவில் சிறிய ஜன்னல் கொண்ட அறை. வீட்டின் பின்புறத்தில் குளியல் மற்றும் கழிவறைகள் இருக்கும். வாடகை வீடு என்றாலும் அக்கம் பக்கம் தொல்லை இல்லை. தனி வீடுதான்.

பாட்டியின் அலமாரியில் இருந்த பணம் வாடகைக்கும் தன் வயிற்றுக்கும் சிறிது நாட்கள் தான் உதவியது. படிப்பைத் தொடர முடியாமல் தன் பள்ளிக்கு அருகாமையில் இருந்த போட்டோ ஸ்டுடியோவில் வேலைக்கு செல்லத் தொடங்கினான். லாரன்ஸ் ஸ்டுடியோ எங்கே என்று அழைக்கும் அளவிற்கு தொழிலில் முன்னேறி விட்டான். உதவி என்று யார் கேட்டாலும் அவர்களுக்கு தேவையானதை செய்து கொடுப்பான்.

ஒரு நாள் லாரன்ஸ் ஸ்டுடியோவுக்கு போட்டோ எடுக்கச் சென்றாள் லில்லி. தன் வீட்டுமாடத்தில் விளக்காய் லில்லி ஜொலித்தால்.இருவரும் விரும்பத் தொடங்கினர். லில்லியின் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடந்தது. லில்லியின் குடும்பத்தினர் விருப்பத்தின்படி வீட்டோட மாப்பிள்ளையானான் லாரன்ஸ்.

அறைக்குள் இருந்து வெளியே வந்த லில்லி காவியாவை தன் அருகில் அழைத்து லாரன்ஸுக்கும் தன் அப்பாவுக்கும் அறிமுகம் செய்து வைத்தாள். சிறிது நேரம் கழித்து காவியாவை மாடிக்கு அழைத்துச் சென்றாள் லில்லி. இருவரும் டீ குடித்துக் கொண்டே பழைய நினைவுகளை பேசிக்கொண்டிருந்தனர். காவியாவிற்கு மனம் கனத்தது. இவ்வளவு நேரம் அடக்கிக் கொண்டிருந்ததை கேட்டே விட்டாள் காவியா

“எப்படிக்கா உங்களால மட்டும் இப்படி சிரிச்ச முகத்தோடு எப்பவுமே இருக்க முடியுது”

லில்லியின் கண்களிலிருந்து கண்ணீர் வரத் தொடங்கியது. மெல்லிய குரலில் பேசலானாள் லில்லி.

“எங்கள் சந்தோஷத்துக்கு அளவே இல்ல காவியா. யார் கண் பட்டதோ? புயலாக வந்து எங்கள் வாழ்க்கையை தலைகீழாப் புரட்டிப் போட்டது அந்த விபத்து. சர்ச்சுக்கு போற வழியில எதிரே வந்த கார் லாரன்ஸ்சின் பைக் மேல மோதிவிட்டது. நிலை தடுமாறின லாரன்ஸ் கீழ விழுந்துட்டான். தன்னிலை மறந்த லாரன்ஸோட ரெண்டு காலும் செயலற்றுப் போச்சு. இதுவரைக்கும் முன்னேற்றமே இல்லை. விபத்து நடந்துது ஒரு வருசம் ஆகுது காவியா..

ஸ்கூல் நேரம் போக அப்பா கூட ஜஸ்டின் தான் ஸ்டுடியோவை பார்த்துக்கிறான். அவன் அப்பாவை போல் பொறுப்பான பையன். யார்கிட்டயும் கோபிச்சிக்க மாட்டான். பெரியவங்க சொல்றத கேட்டு நடந்துக்கறான். என்ன… லாரன்ஸ் தான் ரொம்ப கஷ்டப்படறான். அவனால இன்னும் அந்த சம்பவத்தை மறக்க முடியல. தனிமையில இருக்கும் போது பிரமை புடிச்ச மாதிரி ஆகிற்றான். நான் இல்லாமல் தனிமை அவனுக்கு போர்க்களம் போல இருக்குது. நான் வேலையிலிருந்து வர கொஞ்ச நேரம் தாமதம் ஆகிட்டாலும் என்னை கடிஞ்சிக்குவான். டீ கூட நான் குடுத்தா தான் குடிப்பேன்னு அடம் புடிப்பான்” சொல்லிக்கொண்டே தன் சுடிதார் துப்பட்டாவில் கண்களை துடைத்தாள் லில்லி.

இவர்களின் அன்பு தெளிந்த நீரோடை போன்று பல மடங்கு புரிதலுடன் இருப்பதை உணர்ந்தாள் காவியா.

குக்கரின் விசில் “ச்சேர்” என்று வர தன் இயல்புக்கு திரும்பிய காவியா. கொடியில் காய வைத்த புடவையை எடுத்துக்கொண்டு வந்து மடித்து அலமாரியில் வைத்தாள். அறையின் ஜன்னல் ஓரமாய் வானத்தைப் பார்த்தாள். சூரியன் மறைய தொடங்கிய அந்த மாலைப் பொழுதில் பௌர்ணமி நிலவு தலை காட்டத் தொடங்கியது.