மலரும் காதல் கவிதை – கவிதா ராம்குமார்

மலரும் காதல் கவிதை – கவிதா ராம்குமார்




நீ என் மீது காட்டும் அன்பில்
நான் திகைத்துப் போகிறேன்.
ஏனோ எனது அன்பை உன்னிடத்தில்
எனக்கு வெளிக்காட்ட தெரியவில்லை.

உனது ஆசை என்னவென்று கேட்டபோதெல்லாம்.
நீயோ நமக்குள் இருக்கும் காதலில்
நான் மட்டுமே ஜெயிக்க வேண்டுமென்றாய்.

என்னை சுற்றி இருப்பவர்களின் வஞ்சகத்தால்
நான் நிலைதடுமாறிய போதெல்லாம்.
நீ என்றும் எனது முதுகெலும்பாய்
எனது அருகில் நின்று என்னை
நிலைநிறுத்தியவனாய் இருக்கிறாய்.

இன்று நாற்பதைத் தாண்டினாலும்
அவ்வப்போது நமக்குள் நிகழும் ஊடலில்.
என்றோ அரும்பாக மலர்ந்த நமது காதலின் சாயலை
இன்றும் அதன் நறுமணம் குறையாமல் நினைவூட்டுகிறாய்.

என்றும் அன்புடன்…..நான்.

கவிதா ராம்குமார்
திருவண்ணாமலை

தங்க மீன் சிறுகதை – கவிதா ராம்குமார்

தங்க மீன் சிறுகதை – கவிதா ராம்குமார்




மாலை நேரம் ஆகாயத்தின் விளிம்பில் சிவப்பு சாயத்தை பதமாக வண்ணம் தீட்டிக் கொண்டிருந்த சூரியன் அஸ்தமித்து கொண்டிருந்தான்.

“மிஸ் மாலதி, யூ ஆர் அப்பாயின்டெட்”.

வேலை கிடைத்த செய்தி அவள் கண்களில் ஆனந்த மழை, மனதில் ஒரு நம்பிக்கை, ஏதோ சாதித்தது போல ஒரு உணர்வு.

“தி ஃப்யூச்சர்” என்ற அந்த அலுவலகம் கடற்கரையை பார்த்தபடியே அமைந்திருந்தது.

மிக பிரம்மாண்டமான அடுக்குமாடி கட்டிடம் அது. நீல நிறக் கண்ணாடிகளால் அந்த ஆகாயத்தின் சாயலாகவே தன்னை அடையாளம் காட்டிக் கொண்டது.

அலுவலகத்தின் நுழைவாயில் கதவுகளில் மயில் தோகை விரித்தபடி வரையப்பட்டிருந்த அந்த ஓவியம் அவளை வரவேற்கும் வண்ணமாய் வண்ணம் தீட்டப்பட்டிருந்தது … அவள் பாதங்களை சுமக்கும் அந்த தரைகள் பளிங்குபோல் பளபளப்பாக மின்னியது ,நவ நாகரீகத்தில் ஆன உடைகளை அணிந்திருந்தனர் அங்கிருந்த ஊழியர்கள், உள்புறம் ஆகவே மேலே செல்வதற்கான படிக்கட்டுகள் வளைவாக அமைக்கப்பட்டிருந்தது…..

பணியில் சேர்ந்தவர்களுக்கு முதலாளி அவர்களின் கரங்களால் அப்பாயின்மென்ட் லெட்டரை வழங்குவது அந்த அலுவலகத்தின் வழக்கமாக இருந்தது.

ஊழியர் ஒருவர் மாலதியை மேல் மாடியில் உள்ள அந்த சொகுசு அறையில் சிறிது நேரம் காத்திருக்கும்படி சொன்னார்.

நேரம் இரவு எட்டு மணி ஆனது, அவளும் காத்திருந்தாள்.

மின் விளக்கின் வெளிச்சம் அந்த அறை முழுக்க பரவி இருந்தது .

வெகு நேரமானதால் சற்று அவள் எழுந்து அந்த அறையின் ஜன்னல் அருகே சென்றாள்.

அவளது விரல் ஜன்னலில் இருந்த திரைச்சீலையை நகர்த்தியது…

இருள் நிறைந்த அந்த திசையில் கடல் அலைகளின் ஓசை அவள் காதுகளில் ஓயாமல் ஒளித்துக் கொண்டே இருந்தது.

சிறுவயதிலிருந்தே அவள் தந்தையின் முகத்தை பார்த்ததில்லை . அம்மாவின் வார்த்தைகளில் அப்பா என்றும் ஒரு ராஜாவாகக் காட்சியளிப்பார்.

அப்பா அரசாங்க ஊழியர் ,அவரின் ஓய்வூதியம் மூவாயிரத்தை தொட்டது இல்லை,இன்று இருக்கும் விலைவாசியால் பல குடும்பங்கள் கண்ணீரில் மிதக்கின்றன.

இருபத்தி ஐந்து வருடங்களாக அப்பாவின் பிரிவை தாங்க முடியாத சரஸ்வதி பாட்டி இந்த உலகத்தை பிரிந்து தற்போது மூன்று மாதங்கள் ஆகிறது .

மாலதிக்கு அவள் அம்மா மட்டும் தான் துணை உலகமும் கூட.

அவளைக் கடந்து சென்ற ஒவ்வொரு இரவுகளிலும் அவளுக்கு நினைவுக்கு வருவது சரஸ்வதி பாட்டியின் வார்த்தைகள் “உங்க அம்மா மகாலட்சுமி குடும்பத்தை கட்டுக்கோப்பா நடத்தி வந்தா , அவள ராணி மாதிரி பார்த்துகிட்டான் எம் பய. சந்தோஷமா இருந்தாங்க. நீ பிறந்த நேரம் எம் பய ராஜேந்திரன் என்ன விட்டுட்டு போயிட்டான் . துரதிர்ஷ்டசாலி உன்னோட அம்மா “என மாலதியின் பாட்டி அவளை திட்டாத நாட்களே கிடையாது.

வேலை கிடைத்த செய்தி அவளது உள்ளத்தில் ரணமாக இருந்த அந்த வார்த்தைகளுக்கு தற்காலிக மருந்தாக அமைந்தது.

அப்பா இருந்திருந்தால் அம்மாவை எப்படி பார்த்துக் கொள்வாரோ அதுபோல் நானும் அவர்களைப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் நிறைந்திருந்தால்.

“கிரிக் “என்ற சத்தம் அறையின் கதவு திறக்கப்பட்டது, அவளும் திரும்பினாள் .

மகேஷ் சின்ன முதலாளி அனைவரையும் வசீகரிக்கும் அவனின் முகம். நல்ல உயரம், அவன் அணிந்திருந்த கோட் சூட்டுக்கு ஏத்த உடலமைப்பு.

அவளைக் கண்ணிமைக்காமல் பார்த்தபடி, “ஆர் யூ மாலதி” என கேட்டுக்கொண்டே அவனது இருக்கையில் அமர்ந்து கொண்டான்.

ஜன்னலின் கதவை மூடியவள், ” எஸ் ஐ அம் மாலதி “என கூறியபடி அவள் அமர்ந்திருந்த நாற்காலியின் பக்கத்தில் வந்து நின்றாள்.

“ப்ளீஸ் டேக் யுவர் சீட்” என அவன் கூற சிறு புன்னகையோடு தலையசைத்தவளின் நினைவுக்கு அந்த ஊழியர், ‘வயதானவர் ஒருவர் வருவார்’ என சொன்னது நினைவுக்கு வந்தது ஒன்றும் புரியாமல், மௌனமாக சிறிது தயக்கத்தோடு இருக்கையில் அவள் அமர்ந்து கொண்டாள்.

மேஜை மீது இருந்த புத்தகத்தைப் புரட்டிக் கொண்டிருந்தான் மகேஷ்.

அவளும் அவளது கையில் கட்டியிருந்த வாட்ச்யில் நேரத்தை அடிக்கடி பார்த்தபடி இருந்தாள் .

அந்த அறை முழுக்க நிசப்தமாக இருந்தது.

வெகு நேரமானதால் மகேஷ் பேச்சை ஆரம்பித்தான் “மிஸ் மாலதி சரியா தானே கூப்பிட்டேன் மிஸ் தான நீங்க”.

“ஆம் நான் மிஸ் தான், மிஸஸ் இல்லை ஏன் கேக்கறீங்க மிஸ்ஸா தான் இருக்கணுமா”.. என அவளின் பதில் கொஞ்சம் கோபம் கலந்த இசையாக வந்தது..

“சும்மாதான் கேட்டேன் தப்பா எடுத்துக் கொள்ள வேண்டாம்” என கூறினான் மகேஷ்

பாவம் அவனுக்கு பெண்களிடம் என்ன பேசுவதென்றே தெரியவில்லை… அதனால் என்னவோ அவனுக்குப் பெண் நண்பர்களே கிடையாது…

அவன் தந்தையின் விருப்பப்படி லண்டனிலுள்ள அலுவலகத்தின் மிக முக்கியமான பணிகளை மகேஷ் கவனித்து வருகின்றான். இன்று ஒரு சின்ன கருத்தாய்வுக்காக சென்னைக்கு வரச் சொல்லி இருந்தார் தந்தை .

அவன் மீண்டும் புத்தகத்தின் பக்கங்களைப் புரட்டினான். முடியவில்லை….பெருமூச்சுவிட்டான்.

ஒரு அளவுக்கு மேல் அவனால் இருக்கையில் அமர முடியவில்லை. எழுந்து நடந்தான்,ஏதோ ஒன்றில் அகப்பட்டுக் கொண்டவன் போல் உணர்ந்தான். சொகுசு அறையாக இருந்தாலும் அவனுக்கு வேர்த்துக் கொட்டியது. ஜன்னலைத் திறந்தான். சில்லுனு ஒரு காற்று அவனைத் தொட்டு கடந்து சென்று அவள்மீது பட்டது. அவள் காதோரம் அணிந்திருந்த ஜிமிக்கி கம்மல் அவனைப் பார்த்து சிரித்தது….

கடற்கரையின் காற்று பட்டு அவள் சிலிர்த்து போனாள்.

என்ன அழகு, என்ன குரல்,

அவள் கட்டியிருக்கும் கருப்பு நிற புடவையில் அவள் மேகம் போல் காட்சியளித்தாள்.

அவளது கூந்தலை முன்புறமாக போட்டிருந்தாள் நல்ல அடர்த்தியான நீளமான கூந்தல் அது .அவள் தலையில் வைத்திருந்த மல்லிகை பூ வாசம் அவன் அடித்திருந்த சென்ட் வாசத்தை விட நல்ல நறுமணத்தோடு ஒருவித தடுமாற்றத்தை அவனுள் ஏற்படுத்தியது …அவ்வப்போது, அவள் சிரிக்கையில் அவள் கன்னத்தில் விழும் குழிக்குள் விழுந்தான் மகேஷ்.

அவனுக்கு அவளைப் பிடித்திருந்தது.

இருவருக்கிடையே இருக்கும் மவுனத்தை உடைக்க காற்று தன் கைகளால் ஜன்னல் கதவை சடாரென்று மூட அறையின் கதவு திறந்தார் அந்த வயதானவர்.

ராமா,ராமா …என்று உச்சரித்துக் கொண்டே தனது கையில் இருந்த கார் சாவியையும்,கைபேசியையும் மேஜை மேல் உதறி விட்டு இருக்கையில் அமர்ந்தார் அந்த வயதான ராமா என்கிற ராமச்சந்திரன்.

கோவமான சூழ்நிலைகளிலும் சரி, சந்தோஷமான சூழ்நிலைகளிலும் சரி மனுஷன் தன்னை நிதானத்துடன் வைத்துக் கொள்வதற்குத்
தனது பெயரையே அடி‌க்கடி உச்சரித்துக்கொள்வார்…..அது அவரது பழக்கத்தில் ஒன்றாகவே அமைந்துவிட்டது.

“வாடா மகேஷ், பிரயாணம் எல்லாம் எப்படி இருந்தது, இப்படி வந்து உட்காரு ” என்று தன் அருகில் அவனை அழைத்தார் ராமச்சந்திரன்.

மகேஷ்,அவர் அருகில் இருந்த வெள்ளை நிற சோபாவில் அமர்ந்தவாறு “பிரயாணம் நல்லபடியா இருந்தது பா, உங்களை பார்க்கறதுக்கு தா ரொம்ப நேரம் ஆயிடுச்சு” என்றான்.

மாலதியை பார்த்து “உங்கள பற்றி கொஞ்சம் சொல்லுங்க ” என்று அவளிடம் இருந்த சர்டிஃபிகேட்ஸ்யை வாங்கிய படி கேட்டார் ராமச்சந்தின்.

“என் பெயர் மாலதி “என்று ஆரம்பித்தவள் தான் எம் எஸ் சி கம்ப்யூட்டர் சயன்ஸ் படித்திருப்பதாகவும், தனக்கு தந்தை இல்லை…. தாயாருடன் வாழ்ந்து வருவதாகவும் கூறினார்.

“மிஸ் மாலதி அலுவலகத்தின் விதிப்படி உங்களுடைய ஒரிஜினல் சர்டிஃபிகேட்ஸை இங்கு ஒப்படைக்க வேண்டும் “என்று கூறிக்கொண்டே மகேஷை மேனேஜர் சம்பத்திடம் ஒரு சின்ன வேலை காரணமாக பார்த்து வருமபடி அனுப்பினார் ராமச்சந்திரன்.

சில மணி நேரங்கள் பார்த்த முகமாக இருந்தாலும், பிரிவின் துயரம் மௌனம் மட்டுமே மிஞ்சும் என்று அவளை கடந்து சென்றான் மகேஷ்.

ராமச்சந்திரன் தனது நாற்காலியில் சாய்ந்து சகஜமாக கேட்பது போல் மாலதியை நிமிர்ந்து பார்த்து “எங்களுக்கு ஹார்டு வொர்கிங் பெண்மணிகளை விட ஸ்மார்ட் வொர்கிங் பெண்மணியாக நீங்கள் இருந்தீர்கள் என்றால் இந்த வேலை உங்களுக்கு உறுதி… என்ன சொல்றீங்க ? “என்று அவளைப் பார்த்து கேட்க, அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.

மறுபடியும் அவரைப் பார்த்து “என்ன சொல்றீங்க சார்” என்று கேட்க, அவர் மீண்டும் “நீங்கள் என்னுடன் ஸ்மார்ட்டா வொர்க் பண்ண வேண்டும் “என்று அவளை ஒருவிதமாக பார்த்துக்கொண்டு அதன் அர்த்தத்தை விளக்கினார்…. அதன் அர்த்தம் அவர் மனதில் இருக்கும் வக்கிரத்தை பிரதிபலித்தது.

அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது. பார்ப்பதற்கு நாகரிகமாக தோன்றினாலும் என்ன ஒரு வக்கிரபுத்தி கொண்ட மனிதராக இருக்கிறார்கள் என மனதில் எழுந்த கேள்விகள் கோபமாக வெளிப்பட்டது. ஆம் மேஜைமேல் இருந்த காகிதங்களை பல பாகங்களாக கிழித்து வேலைக்காக வரும் பெண்களிடம் அவர்களின் உணர்ச்சிகளோடு விளையாடும் உங்கள மாதிரி ஆளுங்களோட முகத்திரைகளை கட்டாயம் கிழிக்க வேண்டும் என்று அவர் முகத்தில் விட்டெறிந்தாள். காகிதங்களின் வேகம் அம்புகள் போல் மிகக் கூர்மையாக அவரின் முகத்தை கிழித்து சிகப்பு நிறமாக மாறியிருந்தது.

ஒரு நீண்ட சலசலப்புடன் அறையைவிட்டு வெளியேறிய மாலதி தனது கைப்பையை தோளில் மாட்டிக்கொண்டு விறுவிறுவென்று அலுவலகத்தை விட்டு வெளியேறினாள்.

“என்னாச்சு அறை முழுக்க காகிதங்களாக கிடைக்கிறது” என்று கேட்டுக்கொண்டே வந்த மகேஷிடம் “அறையை சுத்தம் செய்வதற்கு ஆட்களை வரச்சொல், பிழைக்கத் தெரியாத பெண்மணிகளை என்ன சொல்வது ராமா ராமா”என்று உச்சரித்துக்கொண்டே நகர்ந்தார் ராமச்சந்திரன்.

முன் வாசல் படிக்கட்டில் அமர்ந்தவாறு வெகுநேரமாக அம்மா மகாலட்சுமி அவளுக்காக காத்துக் கொண்டிருந்தார் . ஒரு வழியாக வீட்டுக்கு வந்து சேர்ந்தாள் மாலதி.

மாலதி அம்மாவை “ஏன் இவ்ளோ நேரமா கண்ணு முழிச்சுக்கிட்டு உடம்பை கெடுத்துக்கிறீங்க, சாப்பிட்டு தூங்க வேண்டியது தானே தொடர்ந்து போன் பண்ணிகிட்டே இருக்கீங்க”என கடிந்து கொண்டவளின் மனதில் அலையாக மீண்டும் மீண்டும் அலுவலகத்தில் நடந்த சம்பவம் அலைமோதிக் கொண்டிருந்ததன் வெளிப்பாடு.

“சாரி மா”என அவரின் கைகளை பிடித்த படி கேட்டால்.

அம்மா மகாலட்சுமி , “பரவாயில்லை மா! வா உள்ள போகலாம் , காலைல வீட்டை விட்டு போன பொண்ணு பத்திரமா வீட்டுக்கு வரும் வரைக்கும் என்னை போல் எல்லா பெத்தவங்களுக்கும் மனதில் அன்றாடம் நடக்கும் போர் மா இது அத வார்த்தைகளால சொல்லி மாளாது” என சொல்லிக்கொண்டே முந்தானையில் தனது முகத்தைத் துடைத்துக் கொண்டு மாலதியை உள்ளே அழைத்துச் சென்றார்.

அதிகாலை குளிர்ந்த காற்று…. அவளுக்குள் இருந்த வெப்பம் தணிந்து புதிய வேலைக்காக புன்னகையோடு தன்னை தயார் செய்து கொண்டிருந்தால்.

‘சரி மா!., நா கிளம்புறேன்’ என்று கதவை திறந்தவளுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது,யூகிக்க கூட முடியவில்லை வீட்டு வாசலில் மகேஷ் நின்றுகொண்டிருந்தான்…

“உள்ளே வரலாமா மாலதி.,”

“வாங்க மகேஷ்..”

” இந்தாங்க உங்களுடைய சர்டிஃபிகேட்ஸ். நேத்து மறந்து விட்டுட்டு போயிட்டீங்க.,அதான் கொடுத்துட்டு போகலாம்னு வந்தேன்..”

அலுவலகத்தின் அறையை சுத்தம் செய்த ஊழியர் மகேஷிடம் ஒப்படைத்திருந்தார்.

“ரொம்ப நன்றி மகேஷ், மன்னிச்சிடுங்க இப்படி வந்து உட்காருங்க..” என அவனை அமரச் செய்து விட்டு அம்மா மகாலட்சுமியை அழைத்து வந்து அவனுக்கு அறிமுகம் செய்து வைத்தாள்.

அம்மா மகாலட்சுமி மிகுந்த கோபத்துடன் அவனிடம் “வேலைக்காக வந்த பொண்ணுங்ககிட்ட இப்படித்தான் அநாகரிகமா பேசுவீங்களா, உங்க வீட்டிலேயும் பொண்ணுங்க இல்லை?” என்று ஆதங்கத்துடன் கத்தினாள்.

மகேஷ்க்கு ஒன்றும் புரியவில்லை,

மாலதி ,”அம்மா இவர் காரணம் இல்ல மா” என்று சொல்ல.

அங்கு அடர்ந்த மௌனம் நிலவியது.

கனத்த இதயத்துடன் நேற்று அலுவலகத்தில் நடந்ததை மகேஷிடம் கூறினாள் மாலதி.

“அவமானமா இருக்கு நடந்த தவறுக்காக நான் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் அம்மா” என்றான் மகேஷ்.

“நல்லவன் போல் தன்னை அடையாளம் காட்டிக் கொள்ளும் சில மனித மிருகங்களுக்காக நீ என்ன செய்வ தம்பி”.,

“இதெல்லாம் அவமானமா? பிழைக்கத் தெரியாதவன்னு நம்மளையே சொல்வாங்க” என்று சுவரில் மாலையுடன் தனது கணவரின் புகைப்படத்தை பார்த்தபடி “நீங்கள் சொன்ன வார்த்தை உண்மை தாங்க” என நெஞ்சில் அடித்துக் கொண்டு அழுதார் அம்மா மகாலட்சுமி.

மாலதி “இதுவும் கடந்து போகும் அம்மா, சூழ்நிலை எப்பொழுதும் ஒரே மாதிரி இருப்பதில்லை” என சமாதானம் செய்தாள்.

மகேஷின் அலைபேசி அடித்தது, “ஹலோ நான் நவீன் பேசுறேன் டா, நாளைக்கு என்னுடைய புதிய அலுவலகத்தின் திறப்பு விழா நீ கண்டிப்பா வரனும் நீதான் டா சிறப்பு விருந்தினர் சரியா “என்று அழைத்தவனுக்கு “கண்டிப்பாக நான் வருகிறேன்” என கூறினான்.

சடாரென அவனுக்கு ஒரு யோசனை வந்தது,

“மாலதி இந்தாங்க என்னுடைய கல்லூரி கால நண்பன் நவீனின் விசிடிங் கார்ட், நீங்க போய் அவர பாருங்க, அவர் ஒரு சாஃப்ட்வேர் இன்ஜினியர் ,அவரின் அலுவலகத்தில் உங்களுடைய குவாலிஃபிகேஷனுக்கு ஏத்தமாதிரி கண்டிப்பா ஒரு வேலை இருக்கும்” என்று தன்னை சார்ந்தவர்களால் ஏற்பட்ட தவறுகளைச் சரி செய்தான் மகேஷ்.

இம்முறை இவர்களின் சந்திப்பு மன்னிப்பும், நன்றியும் சமமாக கலந்த கலவையாக காலத்தால் இணைக்கச் செய்தது.

Muthal Rayil Payanam Short Story By Kavitha Ramkumar. முதல் ரயில் பயணம் சிறுகதை - கவிதா ராம்குமார்

முதல் ரயில் பயணம் சிறுகதை – கவிதா ராம்குமார்




ரிங் ரிங், ரிங் ரிங் என அலைபேசி அலறியது .

சாப்பிட்டுக்கொண்டிருந்த லாவண்யாவிற்கு தொடர்ந்து மூன்று முறை அலைபேசி அலறியதால் பொறை ஏறிவிட்டது. உணவைப் பரிமாறிக் கொண்டிருந்த லக்ஷ்மணன் தன் உள்ளங்கையை அவளின் தலையில் வைத்து இதமாக தட்டிக் கொடுத்தபடி 

“இரு இரு பொறுமையா உக்காந்து சாப்பிடு வருஷத்துல இன்னிக்கு ஒரு நாள்தான் நான் சமைச்சு உனக்கு  பரிமாறது. அதனால பதற்றப்படாம சாப்பிடு நான் போயி யாருன்னு பார்க்கிறேன்”என்றபடி அலைபேசியை எடுத்த லக்ஷ்மணன். 

“ஹலோ யார்” என்று கேட்டார்.

எதிர்முனையில் இருந்து “நான் ஜெயஸ்ரீ பேசுகிறேன் லாவண்யா இருக்காளா?”என்ற குரல் ஒலித்தது….

“அவள் சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறாள் சற்று பொறுங்கள் இதோ வந்து விடுவாள்” என்று சொல்லி ரிசீவரை கீழே வைத்தார்.

உணவருந்திக் கொண்டிருந்த லாவண்யாவுக்கும் தகவலைச் சொல்லிவிட்டு இனிப்புடன் உணவை முடித்து வைத்தார் லட்சுமணன்…. ரிசீவரை எடுத்த லாவண்யா,”ஹலோ ஜெயஸ்ரீ எப்படி இருக்க?”

மறுமுனையில் இருந்த ஜெயஸ்ரீ, “நான் நலமுடன் இருக்கிறேன் திருமண நாள் வாழ்த்துக்கள்!”என்ற வாழ்த்துக்களுடன் இவர்களது கலகலவென பேச்சு தொடங்கியது …

இருவரும் அலைபேசியில் மறக்க முடியாத நினைவுகளைப் பரிமாறிக் கொண்டிருந்தனர்.

“லாவண்யா உனக்கு அந்த நாள் ஞாபகம் இருக்கா, நம் கல்லூரிக்கால நண்பன்”என்றாள். கல கல வென சிரித்தவள் ,”மறக்ககூடிய  நிகழ்வா அது. இக்கணம்  நினைத்தால் கூட எனக்கு சிலீர்த்துவிடுகிறது ஸ்ரீ”என்றாள். அன்று நல்ல வெயில், பகுதி நேரக் கல்லூரி என்பதால் மதியம் இரண்டு மணிக்கு முன்னதாகவே முடிந்துவிடும்.

லாவண்யா தனது வீட்டின் அருகாமையில் பேருந்து நிலையம் இருப்பதாலும்,சிறிது நேரம் தாமதம் ஆனாலும் அடுத்தடுத்து தனது கல்லூரிக்கு செல்லும்  பேருந்துகள்  கிடைப்பதால் எப்பொழுதும் அவள் பேருந்தில் பயணிப்பது வழக்கம்.

ஒரு சமயம்  ஜெயஸ்ரீ வகுப்பு நேர இடைவேளையின்போது தான் எப்பொழுதும் ரயில்பயணத்தையே அதிகம் விரும்புவதும்,அதன் அனுபவங்கள் மிக சுவாரசியமாக இருப்பதைப் பற்றியும்  லாவண்யாவிடம் சொல்லிக்கொண்டுயிருந்தாள் .

இடைவேளை முடிந்து வகுப்புகள் ஆரம்பித்தது. லாவண்யாவால் பாடங்களை கவனிக்கமுடியவில்லை,அவளின் சிந்தனை முழுவதும் ரயில் பயணங்கள் மீதே இருந்தது …. 

“வீட்டில் இருந்து ரயில் நிலையத்துக்கு சொல்வதென்றால் குறைந்த பட்சம் இருபது நிமிடங்கள் ஆகிவிடுமே”என்ன செய்வது என குழம்பிக் கொண்டே இருந்தவள், இன்று ஜெய ஸ்ரீ வுடன் ரயிலில் பயணிக்கலாம் என்ற முடிவுக்கு வந்தாள். 

கல்லூரி நேரம் முடிந்ததும்,அவளின் நடை ஸ்ரீ உடன் ரயில் நிலையத்தை நோக்கி சென்றது…..புத்தாண்டு முந்தைய நாள் என்பதாலும்,பகுதி நேரக்கல்லூரி என்பதாலும்  பயணிகள் மற்றும் மாணவர்களின் கூட்டம் வருவதும்,செல்வதுமாக  அலைமோதியிருந்தனர்.

மாணவர்கள் அனைத்து பிளாட்பாரத்திலும் நிறைந்திருந்தனர்…. அதீத உற்சாகத்தோடு கைகளை அசைத்துக்கொண்டு ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டு இருந்தனர்…. 

லாவண்யாவின் சந்தோஷத்துக்கு அளவே இல்லை… முதல்முதலாக ரயில் நிலையத்திற்கு வந்தவளுக்கு இவளையே அனைவரும் வரவேற்பது போல் இவளது கண்களில் காட்சிகள் நிரம்பி வழிந்திருந்தது…. 

பிளாட்பாரம் எண் மூன்றில் இருந்த தொடர்வண்டியானது ரயில் நிலையத்தை விட்டு செல்லுகையில்  அப்போது பிளாட்பாரம் எண் இரண்டில் இருந்த லாவன்யா மிகுந்த சத்தத்துடன் தனது வலது கைகளை உயர்த்தி “பாய் டாட்டா” என அசைக்க  ஸ்ரீ “ஏய் லாவண்யா என்ன பன்ற அமைதியா இரு” என அவளை பிடித்து அத்தட்ட சிறு குழத்தைப்போல் “அய்யய்யோ”என அமைதியானாள். இருவரும் எதிர்பார்க்காத ஒரு நிகழ்வு அன்று நடந்தது.

“லாவண்யா அங்க பாரு”என ஸ்ரீ அவளின் தோளைப் பிடித்து அசைக்க இருவராலும் அதை நம்ப முடியவில்லை தொடர்வண்டி கிளம்புகையில் தான் பாய்,டாட்டா என கையசைத்த அதே மாணவர்கள், இவர்களை நோக்கி வருவதை உணர்ந்தனர் ….

இருவரும் தாங்கள் இருந்த இடத்தை விட்டு ஓடுகையில் இருவரையும் சுற்றிவளைத்தனர் அந்த மாணவர்கள். ஒன்றும் புரியாமல் இருவரும் திகைத்து போனார்கள்.

கும்பலில் இருந்த ஒருவன் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு நாங்களும் மாணவர்கள்தான்  பதட்டப்படாதீர்கள் எனக் கூறினான்.  ஜெயஸ்ரீயும், லாவண்யாவும்  பெருமூச்சு விட்டனர்…. 

“உங்கள பாத்து நாங்க ஏன் பயப்படணும்” என்று  தனக்குத் தானே ஆறுதல் படுத்திக் கொண்டு பதில் கூறினாள் லாவண்யா…

அந்தக் கூட்டத்தில் இருந்த ஒருவன் தைரியமாக  “என் பெயர் லட்சுமணன் ,நாம் அனைவரும் நண்பர்கள் ஆகலாமா” என கேட்டான்….

“ஏற்கனவே இருந்த அதிர்ச்சியில் இன்னுமொரு அதிர்ச்சியா” என நினைத்துக் கொண்ட ஜெயஸ்ரீ லாவண்யாவை பார்க்க இருவரும் நண்பர்கள் ஆகலாம் என ஒப்புக் கொண்டனர்…. அனைவரும் சேர்ந்து தொடர்வண்டியில் பயணித்தனர்…. 

முதல் ரயில் பயணம் மறக்கக் கூடியதல்ல…… இன்றுவரை லாவண்யா உடன் லக்ஷ்மணன் பயணித்துக் கொண்டிருக்கிறார்….