Posted inPoetry
இரா. கலையரசி: கவிதை
”பெருங்காதல்”
வெள்ளை மாவை
தண்ணீர் தெளித்து
எழுப்பி விட்டேன்.
கசகசப்புடன் பிசுபிசுப்பாய்
கைகளுக்குள் சிக்கிக்
கொண்டு விளையாடுகிறது.
அழுத்தி, அமுக்கி
பிசைந்தெடுத்தேன்.
களைப்பில் சுருண்டு
வட்டமாய்ப் படுத்து கொண்டது.
குட்டி வட்டங்களை
பிரித்து, உள்ளங்கையில்
உருட்டி உயிர் கொடுக்கிறேன்.
வட்டமாய் வளைக்கிறேன்
வானவில்லாய்
கொதிக்கும் எண்ணெயில்
இரக்கமின்றி இடுகிறேன்.
முட்டை விட்டுக் கொண்டு
அழகாய்ச் சிரிக்கிறாய்.
தொப்பை மறைக்க
விரும்பாத உன் தைரியம்
பெருங்காதலை
பெருக்கெடுக்கச் செய்து,
என்னைக் கொல்கிறது.
தட்டில் சூடாய் கிடக்கிறாய்
உன் தொப்பையைக் கிழிக்க
மனமில்லாமல்
பெருங்காதலுடன் நான்.