நூல் அறிமுகம் : காதலாராவின் ”கெணத்து வெயிலு’ கவிதைத் தொகுப்பு – பாரதிசந்திரன்

நூல் அறிமுகம் : காதலாராவின் ”கெணத்து வெயிலு’ கவிதைத் தொகுப்பு – பாரதிசந்திரன்




நூல் : கெணத்து வெயிலு
பிரிவு:  கவிதைத் தொகுப்பு
ஆசிரியர் : காதலாரா
வெளியீடு : படைப்பு பதிப்பகம்
விலை: ₹ 100

மீட்கத் தவறிய மீதங்கள்
மீதங்கள் போதுமானதிற்குப் பின்னானது .அது அதனாலேயே தவிர்க்கப்பட வேண்டியதுமில்லை. கணக்கில் சரியானவைகளின் மற்றவைகள். மற்றவை யானதால் சரிக்கு எதிரானவையும், பூரணத்துவமற்றவையுமல்ல. எவையெல்லாம் மீதமற்றவர்களாக இருந்தனவோ, அதே போன்றது தான் மீதங்களும்

உடைந்து போனது அதிலிருந்தே உருவானது. அதற்கு முன் ஒன்று. இப்பொழுது ஒன்றுக்கு மேல். தீவிரமடையத் தொடங்கும் நாளில் பொழுதுகள் மீதமுண்டா? சிந்தனைகளின் வெளிப்பாட்டில் சொல்லாமல் விட்டவைகளை என்ன பெயர் சொல்லி அழைப்பார் ?

மீட்பதற்கென்று வெளியில் என்னவுண்டு என எண்ணிப் பார்க்கையில், எது பிரபஞ்சத்திலிருந்து வெளியாகவோ, உள்ளிருந்து மீட்டு வெளிக்கொண்டு போவதற்கோ உள்ளதென அறிவாய்.
எல்லாம் இதற்குள் தான். எல்லாவும் நிறைந்தே வழிகிறது ஜீவிதம். பிறகெங்கே மீட்பு நடக்கிறது. மீட்பனும், மீட்பும் என்று எதை அடையாளமிடுகிறது நா ருசி.

அசிங்கமும் நாற்றமும் நம் வயிற்றுக்குள் இருக்கும்போதே பிளிருகிறாயே. துவாரங்களைக் கண்டுபிடித்து. புல் பூண்டு பூச்சிகளையும் உருவாக்கித் துவாரங்கள் தான் பெற்றுவிடுகின்றன எல்லாவற்றையும்.

இருளின் துலாவுதல் உயிர்ப்பை மறந்து விடச் செய்கிறது. நுழைந்த பொழுதில் மறந்தவைகள் தூரதேசமடைய, இழுபடும் சிராய்ப்புகளில் கட்டப்பட்ட செல்களனைத்தும் பஸ்பமாகி, உஷ்ணவெளியில் சுகம் காண்பது உலக நியதி. சாலவும் சிறந்த சுகம் . நித்திரை கலைந்த சுகானுபவம் துளை விடுவது. பரவெளியின் கூட்டுச் செல்கள் வேகமாக நம்மில் மோதுவதைக் காற்றென்கிறாய். அவ்வளவுதானே? பரவெளியாக நாமாகி நம்மோடு நமக்குள் மோதுவது எல்லாம் பரசுகமாகிப் பசிக்காது என்கின்றாய். பசியார்தல் என்றும் கொள்கிறாய்.

“தயங்கி தழுவும் தேகத்தில்
மயங்கி அவிழும் தாகத்தை
இதழின் வரிகள் நிறைந்திடுமோ?

பரந்து படரும் போர்வைக்குள்
ஒளிந்து உரசும் புருவத்தை
நுனி விரல் தாவல் வருடிடுமோ?

நுரையென உடையும் வெக்கத்தில்
சிறையாய்ச் சூழ்ந்த அச்சத்தை
கழுத்தின் அழுத்தம் கவிழ்த்துடுமோ?

பறையென முழங்கும் சத்தத்தில்
கலையாய் பரவும் முத்தத்தை
மார்பின் மோதல் வென்றிடுமோ?

உறைந்து உருளும் என்னுடலில்
இறந்து உதிரும் இதயத்தை
எந்தத் தீண்டல் மீட்டுத்தருமோ?”

(கிணத்து வெயிலு- காதலரா)
உடல் சார்ந்த, மனம் சார்ந்த இயங்கியலை உள்ளார்ந்த உணர்வு வெளி தேடும் தேடலை, இந்நூலிலுள்ள கவிதைகள் அனாவசியமாய் சீண்டி விட்டு இருக்கிறது.
தீண்டல்களைத் தேடாத உலக உயிர்களின் தாகக் குரலாய் பெருங்குரலெடுத்து கத்தித் தொலைத்திருக்கிறது, கவிதையின் குரலை.
நமச்சலாய் நமைக்கும் ஏதோவொன்று முடிவாகையில், பிராண்டிய சுகம், இப்பொழுது தெ(எ)ரியத் தொடங்குகிறது. தீராத வலியுடன் தொடுவதற்கே பயமாகி விரல்கள் ஒத்தடமிடத் தொடங்குகின்றன. கவிதை படித்து முடிக்கும் போது ஏற்பட்ட லயம் இது.

”கெணத்து வெயிலு” சுட்ட ஒரு சூடு இது.
வயலுக்குள் பூத்துக் கிடக்கின்றன.
அடைமழை மற்றும் மூங்கில் காடு இசையாய் இசைத்து தள்ளியிருக்கின்றன.
ரணத்தைச் சொல்லிக் காட்டுபவை அல்ல இவைகள். தோலைச் சுட்டு ரணமாகி அனுபவி என்பவை இவைகள்.
மலை என்றால், வாசிக்கும் போதே, தூக்கி வைத்திருக்கும் சுமை, கழுத்தை நெரிக்க வேண்டும். அப்படி நெரிக்கிறது குரல்வளையை.
இப்படித்தானய்யா ஒரு சொல் வாசிப்பாளனை வாட்டி வதைக்க வேண்டும். சூடு என்று வாசித்தால் சுடாமல் இருந்தால் வாசிப்பதேன்?
பண்டமாற்றியிருக்கிறாய் காதலாரா. கொடுப்பதற்கு எவரிடம் எதுவும் இல்லை. என்ன விலை உன் கவிதை?
ஒரு புகைப்படமேனும் ஏறாத காலமிருந்து என்ன பயன்? செத்துவிட்ட காலமதை மத்து வைத்துக் கடைந்தாலும் வெண்ணையதும் வந்துவிடுமா?
மாறுபட்ட காலத்தின் மாறுபட்ட வளர்ச்சி – இக்கவிதைகள்.

பாரதிசந்திரன்
(முனைவர் செ சு நா சந்திரசேகரன்)
[email protected]