நூல் : கைரதி 377 மாறிய பாலினரின் மாறாத வலிகள்
ஆசிரியர் : மு.ஆனந்தன்
விலை : ரூ.₹ 120/-
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
[email protected]
எழுத்தாளர் மு. ஆனந்தன் ‘ யுகங்களின் புளிப்பு நாவுகள்’ என்னும் கவிதைத் தொகுப்பு மூலம் இலக்கிய உலகில் பிரவேசித்தவர். எனக்கும் அறிமுகமானவர். இரண்டாவதானது முக்கிய தொகுப்பு ‘ சமூக நீதிக்கான அறப்போர்- நலிந்தோர் நலனுக்காக ஓர் வாழ்வின் அர்ப்பணம்’. இந்திய அரசின் முன்னாள் செயலாளர் ஓய்வு பெற்ற ஐ. ஏ. எஸ். அதிகாரி பி. எஸ். கிருஷ்ணன் அவர்களுக்கும் முனைவர் வே. வசந்தி தேவிக்குமான உரையாடல். ஆங்கிலத்தில் இருந்த இத்தொகுப்பை தமிழுக்கு மொழிபெயர்ப்பு தந்தார். இதுவோர் அவசியமான தொகுப்பு. அற்புதமான பணி. மூன்றாவதானது’ பூஜ்ய நேரம்’ என்னும் கட்டுரைத் தொகுப்பு. இத்தொகுப்பிலும் திருநங்கைகள் மீது படிந்திருக்கும் குற்றப்பரம்பரை பொது புத்தி, கடவுளின் குழந்தைகளுக்கு என்ன பெயர் சூட்டுவது என்னும் கட்டுரைகள் திருநங்கையர் தொடர்பானது. தற்போது திருநங்கையர் உள்பட மாறிய பாலினர் குறித்து பதினொரு சிறுகதைகள் அடங்கிய ‘கைரதி 377 ‘ என்னும் சிறுகதைத் தொகுப்பைத் தந்துள்ளார்.
தமிழில் திருநங்கையர் குறித்த முதல் சிறுகதை’ கோமதி’. எழுத்தாளர் கி. ராஜநாராயணன் எழுதியது. தற்போது அறுபதுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் வந்துள்ளன. ஒரு திருநங்கையான லிவிங் ஸ்மைல் வித்யா ஏழு சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்து ‘ மெல்ல விலகும் பனித்திரை’ என ஒரு சிறுகதைத் தொகுப்பைத் தந்துள்ளார். இதுவே திருநங்கையர் குறித்த முதல் தொகுப்பு. ஆயினும் தொகுப்பு. பொன். குமார் – மு. அருணாசலம் ஆகியோர் இணைந்து ஐம்பது சிறுகதைகளைத் தொகுத்து ‘ திருவனம்’ என்னும் தலைப்பில் புது எழுத்து பதிப்பகம் மூலம் வெளியாகும் நிலையில் உள்ளது. இத்தொகுப்பிற்காக ஒரு சிறுகதைக் கேட்ட போது தானே திருநங்கையர்கள் குறித்த ஒரு சிறுகதைத் தொகுப்பு கொண்டு வருவதாக தெரிவித்தார் மு. ஆனந்தன். தற்போது ‘ கைரதி 377’ என்னும் தலைப்பில் தந்துள்ளார். ஒரு தனிநபராக திருநங்கையர் குறித்த முதல் சிறுகதைத் தொகுப்பாக உள்ளது.
ஆங்கிலேயர் காலத்தில் குற்றப் பரம்பரைச் சட்டபடி அலிகள் பெண் உடைகளை அணியக் கூடாது. 200 ஆண்டுகளுக்கு முன் மைசூர் சாம்ராஜ்யத்தில் அரசனின் படைவீரர்களிடம் சிக்கிக்கொண்ட இளம் பெண்கள் தங்கள் கற்பைக் காப்பாற்றிக்கொள்ள சுள்ளிகளில் தீ வைத்து அதில் இறங்கி உயிரை நீத்ததன் நினைவாக கொண்டாடப்படும் ஓலையக்கா நோன்பில் பெண்கள் பாட்டுப்பாடி கும்மியடிக்கும் கூட்டத்தில் பெண்களுடன் பெண்ணுணர்வுமிக்க ஆணான காளிச்சாமி என்னும் கைரதியும் கலந்து கொள்கிறான். ஊரார் எதிர்த்த போது அரவான் கதையைச் சொல்லி அலிகளோட பெருமையைக் கூறி சம்மதிக்க வைக்கிறார் காக்காமுள்ளு வேலிக்காரர். ஆனால் கும்மியாட்டம் நடந்து கொண்டிருக்கும் போது கைரதியை அடையாளம் கண்டு சட்டப் படி அலிகள் பெண் உடைகளை அணியக்கூடாது என்று காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்கின்றனர். சுதந்திரத்திற்குப் பின் நடக்கும் இச்சம்பவத்திற்கு ஆங்கிலேயரின் சட்டம் செல்லாது என்று எடுத்துக்கூறியும் கேட்கவில்லை. லாக்கப்பில் நிர்வாணப்படுத்தி மானப்பங்ம் செய்ய காவலர்கள் முயல்கின்றனர். ” மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள ஓலையக்காளாக மாறினாள் கைரதி. தன் மீது தீ பற்ற வைத்துக் கொள்ள சுள்ளிகளைத் தேடினாள். சுற்றிலும் சு……. களாக இருந்தது” என்று கதையை முடித்து இதயத்தைக் கனக்கச் செய்கிறார். அந்த காலத்திலேயே அலிகளின் நிலை எவ்வாறு உள்ளது என விளக்கியுள்ளார். சட்டம், நோன்பு, காவல் துறை, காளிச்சாமி என்கிற அலி என அழகாக, அழுத்தமாக கதையை பின்னியுள்ளார். இது தொகுப்பின் முதல் சிறுகதை. தலைப்பு ‘ ஓலையக்கா லாக்கப்’.
‘ இதரர்கள்’ இரண்டாம் கதை. உச்சநீதி மன்றம் மூன்றாம் பாலினத்தை அங்கீகரித்தும் ஜவஹர்லால் பல்கலைக் கழகம் ஆண், பெண் இரண்டு பாலினத்தை மட்டுமே குறிப்பிடுகிறது. கைரதி கிருஷ்ணன் மாணவர்களைத் திரட்டி நிர்வாகத்திற்கு எதிராக போராடி வெற்றி பெறுகிறான். ஆனால் கைரதி கிருஷ்ணன் படிப்பை முடித்து வெளியில் சென்றவுடன் பல்கலைக் கழகம் படிவத்தில் ‘ இதரர்கள்’ ( Others) என மாற்றி விடுகிறது. மூன்றாம் பாலினத்தவரை இதரர்கள் என்பது அதாவது மற்றவர்கள் என்பது அவமானப்படுத்தும் செயலாகும். மேலும் கைரதி கிருஷ்ணனை ” நீங்கள் அலியா, ஹிஜராவா, இல்லை யூனக்கா?” என்னும் கேள்விக்கு ” நான் ஒரு இன்டெர்செக்ஸ். தமிழில் இடைப்பாலினம்” என்கிறார். அதாவது இரண்டு உறுப்புகளுடன் இருப்பவர். இதே போல் இருனர், திரினர், பாலிலி எனவும் பாலினங்கள் உள்ளன என்கிறார். இச்சொற்கள் எல்லாம் ஆசிரியர் மு. ஆனந்தன் உருவாக்கியிருக்கலாம். அருமையான, அழகான, அர்த்தமுள்ளவை.
திருநங்கைக்கு பெண்களைப் போல் இருக்க வேண்டும், பெண்களைப் போல் வாழ வேண்டும் என்று விரும்புவர். உள்ளாடை முதல் மேலாடை வரை அப்படியே பின்பற்றுவர். பூ, பொட்டு வைப்பதிலும் மாற்றம் இராது. நாப்கினைப் பயன் படுத்திப் பார்ப்பதிலும் அப்படியோர் ஆனந்தம். அதற்காக கைரதி தான் சமையல்காரியாக வீட்டு வேலைச் செய்யும் எஜமானியின் மகள் பூர்வீகா வாங்கி வைத்திருந்த நாப்கினை தெரியாமல் எடுத்து பயன்படுத்துகிறாள். நாப்கினை பயன்படுத்தும் போது கைரதி அடைந்த மகிழ்வைக் கண்டு தனக்கு வாங்கும் போது ‘ கூடுதலாய் ஒரு நாப்கின்’ வாங்கி வைத்து விடுகிறாள். கைரதியும் தெரியாமல் எடுத்து பயன் படுத்தி வருவதைக் கண்டும் காணாமல் இருந்து விடுகிறாள். ஆனால் கைரதி நல்ல சமையல் செய்பவளாக இருந்தும் அவள் மீது கோபமாகவே இருப்பாள் பூர்வீகா. சமையல் கலையைத் தன் வீட்டிலேயே அம்மாவிடம் கற்று அம்மாவிடம் இறப்பிற்குப் பின் தொடர்ந்ததாகவும் தான் திருநங்கையானதால் வீட்டாரால் விரட்டிவிடப்பட்ட சோகக் கதையும் ‘ கூடுதலாய் ஒரு நாப்கின்’ கதையில் கூடுதலான ஒரு கதையாக உள்ளது. இதில் இன்னொரு கதையும் உள்ளது. மாதவிடாயின் போது வெளியில் பெண்கள் படும் அவஸ்தையையும் கூறுகிறது.
இந்த அவஸ்தை
தேதி மாறாமல்
திட்டமிட்டதைப் போல்
மாதா மாதம்
நிகழ்கிறது
எனக்கான சுழற்சி என்றாலும்
நிகழும் முதல் கணம்
விபத்தொன்றை
சந்தித்தாற் போல்
அதிர்கிறது மனசு…
என்னும் அ.வெண்ணிலா கவிதையையும் எழுத்தாளர் பெண்ணியம் செல்வக்குமாரியின’ ஒழுகல் ‘ என்னும் சிறுகதையையும் நினைவுப்படுத்தியது. ஆசிரியர் பெண்ணின் பிரச்சனையையும் ஊடாக பேசியுள்ளார்.
‘ஜாட்ளா’ என்னும் ஒரு சிறுகதை ஒரு திருநங்கை அரசு உதவி பெறுவதற்காக திருநங்கை என்னும் சான்றிதழ் பெற படும் அவமானங்களைக் காட்டுகிறது. கைரதி என்னும் திருநங்கையை அவர்கள் சமூகம் ஏற்றுக்கொள்கிறது. முறைப்படி அங்கீகரிக்கிறது. திருநங்கைதான் என மனம் சொல்வதால் ஆண் உறுப்பை நீக்க வேண்டும் என்கிறாள். ஆனால் நாயக் ஆணுறுப்பை நீக்குவதால் ஏற்பட்ட பிரச்சினைகளை எடுத்துக்கூறி நீக்காவிட்டாலும் திருநங்கைதான் என்கிறாள். அரசு உதவி பெற திருநங்கை சான்றுக்காக மாவட்ட ஆட்சியர் முதல் மருத்துவமனை வரை அலைக்கழிக்கப்படுகிறாள். இறுதியில் பரிசோதனை செய்ய வேண்டும் என்று ஆணுறுப்பைத் தட்டி பார்க்கும் போது கைரதிக்கு கோபம் வந்துவிடுகிறது. ” என் மனசுக்குத் தெரியாதா நா ஆம்பளையா, இல்ல பொம்பளயான்னு. நா பொம்பளைன்னு யாருக்கு நிரூபிக்கோணும்?” என கத்திக்கொண்டே வெளியேறிவிடுகிறாள். திருநங்கை என்பதற்கு அவள் மனமே சான்று என்கிறார் ஆசிரியர்.
ஓர் ஆண் பெண்ணாக மாற விரும்புவது, துடிப்பது போல் ஒரு பெண் ஆணாக மாற விரும்புவதை, துடிப்பதைக் கூறும் கதை ‘ நஸ்ரியா ஒரு வேஷக்காரி’. அவள் பெண்ணாக பிறந்து இருந்தாலும் சிறுவயதிலிருந்தே ஆண் செய்யும் வேலைகளைச் செய்ய துடிக்கிறாள். ஓர் ஆணாகவே உடை அணிந்து கொள்ள விரும்புகிறாள். ஆணாக இருந்து பெண்ணாக விரும்புவருக்கு ஆண் குறி ஓர் இடைஞ்சல் போல் பெண்ணாக இருந்து ஆணாக விரும்புவருக்கு மார்பு ஒரு பெரும் இடைஞ்சல். நஸ்ரியா வீட்டில் பெண்ணாகவும் வெளியில் ஆணாகவும் இருக்கிறார். அவருக்கு உதவி புரிகிறார் ஒரு திருநங்கை. ஸ்கூட்டியில் நஸ்ரியாவாக சென்றவள் புல்லட்டில் மொஹமது நஸ்ருதீனாக பறக்கிறான். இவர்கள் ஆணாக இருந்து பெண்ணாக மாறுபவர்கள். பெண்ணாக இருந்து ஆணாக மாறும் நபருக்கு திருநம்பி என்று பெயர். முதன் முதலாக ஒரு தம்பியைக் குறித்து எழுதியுள்ளார். ஒரு முஸ்லிம் சமூகத்தில் இருந்து ஒரு திருநம்பி வருவதாக எழுதப்பட்டுள்ளது. திருநங்கையருக்கும் திருநம்பிக்கும் மதம் ஏது?
‘அழகன் என்கிற போர்க்குதிரை’ வரலாற்றை நினைவுப்படுத்தினாலும் சமகாலத்தில் திருநங்கைக்கு வாழ்க்கைக் கொடுத்த ஒருவனைப்பற்றி பேசுகிறது. எனினும் கணேசன் கைரதி அதாவது திருநங்கை ஆவதற்குள் எதிர்கொண்ட பிரச்சனைகளையும் கூறுகிறது. வீட்டிலும் பிரச்சனை. குதிரை சவாரி செய்யுமிடத்திலும் அனுமதியில்லை. மாரி என்கிற மாரிமுத்து என்னும் கடலை வியாபாரி கைரதிக்கு ஆதரவாக பேசுகிறான். அவனே காதலிக்கிறான். கைரதி ஆணுறுப்பை நீக்கி முழு பெண்ணாவதற்காக அறுவைச் சிகிச்சைக்கு வீட்டை விற்று பணம் தருகிறான். கல்யாணமும் செய்து கொள்ளலாம் என்கிறான். கைரதிகளுக்கு வாழ்வு தர மாரிமுத்து போல மனிதர்கள் முன்வர வேண்டும். ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டும். இக்கதையில அழகன் என்னும் குதிரையைப் பற்றி பேசியாக வேண்டும். காரணம் குதிரை பேசுகிறது. கைரதிக்கு குதிரையே துணை. இறுதியில் குதிரையே இருவரையும் ஏற்றிச் செல்கிறது. இந் நீண்ட கதையின் வரலாறைப் பற்றி எழுதினால் விமர்சனமும் நீண்டதாகி விடும்.
‘ ஓலையக்கா லாக்கப்’ பில் திருநங்கையைச் சுற்றி ‘ சு……’ களான இருந்தன என கதையை முடித்தவர் ‘ 377ஆம் பிரிவின் கீழ் கைரதி’ யில் அந்த ‘ சு…..’ கள் என்ன செய்தன புரியச் செய்துள்ளார். ஓர் ஓட்டலில் வேலை செய்து விட்டு இரவில் வெளியே படுத்திருந்த ஒரு கைரதியை காவல்துறையினர் பிடித்து வந்து லாக்கப்பில் வைத்து அவளின் பின்புறம் வழியாக பலாத்காரம் செய்து காயப்படுத்தி கிழித்து மருத்துவச் சான்றிதழ் பெற்று இயற்கைக்கு மாறாக உடலுறவு கொண்டார் என குற்றம் சாட்டி தண்டனையும் பெற்றுத் தருகின்றனர் காவல் துறையினர். காவல் துறைக்கு மருத்துவ துறையும் உதவி. காவல் துறை செய்த காரியத்தால் கைரதியால் கூண்டில் கூட நிற்கமுடியாத நிலை. ஓட்டலில் பாத்திரம் கழுவி வயிற்றைக் கழுவினாலும் திருநங்கைகளைக் காவல் துறையினர் வாழவிடுதில்லை என காவல் துறையைக் குற்றம் சாட்டுகிறார் வழக்குரைஞரான ஆசிரியர் மு. ஆனந்தன். ” மீண்டும் சப் இன்ஸ்பெக்டர் தீரத்துடன் செயல்படத் தொடங்கினார். இந்த முறை சிரமமிருக்கவில்லை. மற்ற போலீஸ் காரர்களும் நிர்வாண சீருடையை அணிந்தார்கள். கட்டுப்பாட்டுடன் ஒருவர் பின் ஒருவராக இயங்கினார்கள்” என காவல் துறையின் ‘ தீரச் செயலை’ அவருக்கேயுரிய நடையில் எழுதியுள்ளார். ‘ கட்டுப்பாட்டுடன்’ என்பது குறிப்பிடத்தக்கது.
” புதனின் தாம்பத்ய வாழ்க்கை
வித்தியாசமானது. புதனின் மனைவி இலா பவானியும் காவேரியும்
சங்கமித்திருக்கும் கூடுதுறை போல் ஆணும் பெண்ணும்
சங்கமித்திருக்கும் இரு உயிரி. ஒரே உடலில் ஆண், பெண்
இரண்டு பாலினப் பண்புகள் தனித்தனியாக இருக்கும். சில
காலம் ஆணாகவும் சில காலம் பெண்ணாகவும் அதற்கேற்ப தங்களை உணர்வார்கள்.
வெளிப்படுத்திக்கொள்வார்கள். இலா
சிவன், பார்வதியால், ஒரு மாதம் ஆணாகவும் ஒரு மாதம்
பெண்ணாகவும் வாழ சபிக்கப்பட்ட பிறவி. பெண்ணாக வாழும்
போது புதனுக்கு மனைவியாக வாழ்கிறாள் என்கிறது புராணம் ” என்று கூறி இத்தொன்மத்தின் அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட கதை ‘ இலா’. கைரதன் என புஷ்பலதாவின் கணவனாகவும் கைரதி என வேலாயுதத்தின் மனைவியாகவும் வாழ்கிறான்/ள். வேலாயுதனுடன் வாழும் காலத்தில் வெளியூர் சென்றிருப்பதாக சொல்லிவிடுவான்/ள். ஆனால் வேலாயுதத்திற்கு உண்மைத் தெரியும். புஷ்பலதாவையோ காதலித்து குடும்பத்தாரையும் உறவினரையும் எதிர்த்து திருமணம் செய்து கொண்ட பிராமணப்பையன். புஷ்பலதா பிற்பட்ட வகுப்பினர். கதை நிகழுமிடம் நிஜமாக கண்முன் விரிகிறது. கதை நம்பகத்தன்மை கொண்டதாக இல்லை எனினும் ஆணாகவும் பெண்ணாகவும் ஒருவரே இருக்கிறார் என்பதைக் காட்டும் முயற்சியாக உள்ளது ‘ இலா’ என்னும் இக்கதை.
இயற்கை உபாதையைக் கழிக்க திருநங்கைகள் படும் அவஸ்தையைக் கூறிய கதை ‘ அடையாளங்களின் அவஸ்தை’. பொது இடங்களில் ஆண், பெண்ணுக்குக் கழிவறைகள் உள்ளன. திருநங்கையர்களுக்கு இல்லை. விழுப்புரம் வந்திறங்கியதிலிருந்தே உபாதையைக் கழிக்க அறையாவது எடுத்து போகலாம், கழிக்கலாம் என்றால் எவரும் தர மறுக்கின்றனர். இறுதியில் ஒரு விடுதியில் அறை கிடைக்க மலம் கழிக்கிறாள் கைரதி. ஆனால் ‘ நிராகரிப்பின் வலி மட்டும் அமைதியாக உள்ளே தங்கி விட்டது’ என நெஞ்சில் வலியை உணரச் செய்கிறார்.
ஆரோக்கியமான ஒரு கதை ‘ மாத்தாராணி கிளினிக்’. கடை கேட்கும் போது காவல் துறையினர் மாமூல் கேட்பார்கள் என்று பயந்து ஓடிய திருநங்கையர்களை பிடித்து வருகின்றனர். அதிலொருவர் சமீபமாக திருநங்கையான கைரதி. ஆய்வாளர் விசாரித்து வேலை வாங்கி தருவதாக கல்வித் தகுதியைக் கோருகிறார். அப்போது கைரதி ஒரு டாக்டர் என தெரிகிறது. கைரதியை குறித்து விசாரித்து டாக்டர் என உறுதி செய்து உதவி செய்யும் எண்ணத்துடன் காவல் ஆய்வாளர் வீட்டினரைக் கேட்ட போது அவர்கள் ஏற்க மறுக்கின்றனர். பணிபுரிந்த மருத்துவமனையும் நிராகரிக்கிறது. ஆய்வாளர் ஓர் ஆரோக்கியமான முடிவெடுத்து டாக்டர் கைரதிக்காக ஒரு மருத்துவமனையைத் திறந்து தந்து புது வாழ்விற்காக வழிவகுக்கிறார் காவல் ஆய்வாளர். இதில் காவல் ஆய்வாளர் ஒரு பெண் என்பது கவனிப்பிற்குரியது. மற்ற ஆண் காவல்துறையினரை வழக்கம் போலவே சாடியுள்ளார். இக்கதையைக் காட்சிகளாக அமைத்துள்ளார்.
1884ஆம் ஆண்டில் ஒரு திருமண வீட்டில் கைரதி என்ற திருநங்கையை இயற்கைக்கு மாறான உடலுறவு கொண்டார் என சிறையிலடைத்தது பிரிட்டிஷ் இந்திய காவல் துறை. அலகாபாத் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து உயர்நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்து விடுதலையும் பெற்றுள்ளார். திருநங்கைகளுக்காக முதன் முதலாக சங்கம் அமைத்து அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியிடம் மனு அளித்த தலைவியின் பெயரும் கைரதி. வரலாற்றில் இடம் பெற்ற இந்த கைரதி என்னும் திருநங்கைகள் நினைவாகவே கைரதி என்று பெயர் வைத்ததற்கான காரணத்தைக் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் திருநங்கையர் குறித்த அவரின் தேடல் புலப்படுகிறது. 377 என்பது சட்டப்பிரிவு. இயற்கைக்கு மாறான உடலுறவுக் கொண்டால் அந்த சட்டப்பிரிவின் கீழ் கைது செய்யப்படுவர். எனவே இச்சிறுகதைத் தொகுப்பிற்கான தலைப்பாக ‘ கைரதி 377’ என வைத்துள்ளார். ” கதிரவனுக்கு ரவி என்றும் பெயர் உண்டு. அதற்கு எதிர்ப்பதமாக சந்திரனை கைரவி என்கிறது தமிழ் அகராதி. இதற்கு அருகில் வரும் சொற்பிரயோகமான கைரதி திருநங்கைகளைக் குறிக்கும் பிறிதொரு சொல்லாக இனி விளங்கலாம்” என அணிந்துரையில் எழுத்தாளர் அழகிய பெரியவன் எழுதியிருப்பது கவனிப்பிற்குரியது. எழுத்தாளர் மு. ஆனந்தனும் அனைத்து சிறுகதைகளிலும் திருநங்கைகளுக்கு, திருநம்பிகளுக்கு, மாறிய பாலினருக்கு கைரதி என்னும் பெயரையே சூட்டி ஒரு பொதுப்பெயரை உருவாக்கியுள்ளார்.
‘யுகங்களின் புளிப்பு நாவுகள்’ என்னும் கவிதைத் தொகுப்பு, ‘ சமூக நீதிக்கான அறப்போர்- நலிந்தோர் நலனுக்காக ஓர் வாழ்வின் அர்ப்பணம்’ என்னும் ஒரு மொழிபெயர்ப்பு தொகுப்பு, ‘ பூஜ்ய நேரம்’ என்னும் கட்டுரைத் தொகுப்பு,’ கைரதி 377 ‘ என்னும் சிறுகதைத தொகுப்பு என வகைக்கு ஒன்றாக தந்தவர் அடுத்து ஒரு புதிய தளத்தில் ஒரு நாவலைத் தருவார் என எதிர்பார்க்கச் செய்கிறது.
“மாறிய பாலினரின் உணர்வியலை, உடலியலை, வாழ்வியலை
கதைகளில் முழுமையாகவோ துல்லியமாகவோ சரியாகவோ
வெளிப்படுத்தியுள்ளேன் என்று சொல்ல முடியாது. ஆனால் அதற்கு
நெருக்கமாகவும் நியாயமாகவும் இருக்க முயற்சித்துள்ளேன்
” என்று தன்னுரையில் மு. ஆனந்தன் எழுதியுள்ளார். கதைகள் முழுமையாகவும் துல்லியாகவும் சரியாகவும் உள்ளன என்பதுடன் நெருக்கமாகவும் நியாயமாகவும் இருக்கின்றன. திருநங்கையர்களுடனும் ஒரு நெருக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளன.
” இத்தொகுப்பு திருநர் இலக்கியத்தின்
புதிய முகம், புதிய தொடக்கம், புதிய பாய்ச்சல் எனலாம். இது
தமிழ் இலக்கிய வெளியில் மிக முக்கியத் தாக்கத்தை ஏற்படுத்தும்
எனக் கருதுகிறேன்” என ஒரு திருநங்கையும் எழுத்தாளருமான ப்ரியாபாவுவே எழுதியது ஒரு விருதுக்கு இணை. மேலும் மாறிய பாலினரில் வாழ்விலும் ஒரு வெளிச்சத்தை உண்டாக்கும்.
வழக்குரைஞராக இருப்பவர்களின் படைப்புகள் மக்கள் பிரச்சனையைப் பேசுவதாக இருக்கும். மக்களிடையே பேசப்படும். வழக்குரைஞர் ச. பாலமுருகன் காவல் துறையினரால் கடும் துன்பத்திற்குள்ளான மலைவாழ் மக்களைப் பற்றி ‘சோளகர் தொட்டி’ என்னும் நாவலை எழுதியுள்ளார். வழக்குரைஞர் சுமதி ‘ கல்மண்டபம்’ நாவலில் நசுங்கியும் நலிந்தும் யாராலும் மதிக்கப்படாத அல்லது அவமதிக்கப்படுகிற ஒரு வாழ்வினரை, முதன் முதலாக அடையாளம் காட்டியுள்ளார். வழக்குரைஞர் சவிதா முனுசாமி தன் சுயசரிதையை ‘ சேரிப் பெண் பேசுகிறேன் ‘ என சுயவலியை எழுதியுள்ளார். அவ்வகையில் வழக்குரைஞர் மு. ஆனந்தன் மாறிய பாலினரின் மாறாத வலிகளை ‘கைரதி 377’ என்னும் சிறுகதைத் தொகுப்பாக்கியுள்ளார்.
எழுத்தாளர் மு. ஆனந்தன் இந்து, முஸ்லிம், கிருத்துவர் என எல்லா மதங்களிலுமே மாறிய, மாறக்கூடிய பாலினர் உள்ளனர் என்கிறார். சமூகம் மாறிய பாலினத்தவர்கள் சமூகத்தால் புறக்கணிக்கப்படும் போது அவமானப்படுத்தும் போது நிராகரிக்கப்படும் போது வீட்டை விட்டு வெளியேற்றும் போது பாதிக்கப்படும் போது உண்டாகும் வலிகளை எழுத்தில் கொண்டு வந்துள்ளார். எழுத்தாளர் மு. ஆனந்தனே ‘ மாறிய பாலினத்தவரின் மாறாத வலிகள்’ இக்கதைகள் என அடையாளப்படுத்தியுள்ளார். மு. ஆனந்தன் ஒரு வழக்குரைஞர் என்பதால் மாறிய பாலினத்தவர்களுக்காக வக்காலத்து வாங்கியுள்ளார். வழக்கில் வெற்றிப் பெறுவார். அவரின் இலக்கியப் பணியிலும் திருநங்கையர் குறித்த தொகுப்பிலும் ‘ கைரதி 377 ‘ ஒரு கி. மீ. கல். இச் சிறுகதைத் தொகுப்பிற்கான ஆசிரியர் மு. ஆனந்தனை இப்போது பாராட்டினாலும் இத்தொகுப்பிற்காக பெறும் விருதுகளுக்காக வாழ்த்த வேண்டிய காலம் வரும்.
– பொன். குமார், சேலம்
நன்றி: புதிய கோடாங்கி