நூல் அறிமுகம்: நிக்கோலாய் ஒஸ்திரோவ்ஸ்கியின் வீரம் விளைந்தது | தமிழில்: எஸ்.ராமகிருஷ்ணன் – கி.ரமேஷ்
புத்தகம்: வீரம் விளைந்தது.
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
ஆசிரியர்: நிக்கோலாய் ஒஸ்திரோவ்ஸ்கி
தமிழில்: எஸ்.ராமகிருஷ்ணன்
விலை:300
பக்கங்கள்: 505
சில நாட்களுக்கு முன்னால் அல்லது சென்ற வாரம் இந்த வருடத்தின் முதல் புத்தகம் முடிந்தது. அதாவது பாதி சென்ற வருடம் படித்தது, மீதியை இந்த வருடம் முடித்தேன். அதன் தொடர்ச்சியாக இரண்டாவது புத்தகத்தை வாசித்து முடித்தேன். சரியாகச் சொல்வதென்றால் மறுவாசிப்பு. ‘வீரம் விளைந்தது என்ற இந்த சோவியத் நாவலை நான் மாணவனாக இருந்த போது படித்திருக்கிறேன். இப்போது பாவல் கர்ச்சாகின் என்ற அந்த நாவலின் நாயகனின் பெயரைத் தவிர எதுவும் நினைவில் இல்லாமல் இருந்தது. பாரதி புத்தகாலயத்தில் அதை மறுவெளியீடு செய்யவும், அந்த சந்தர்ப்பத்தைப் பற்றிக் கொண்டு வாங்கிப் படித்து முடித்திருக்கிறேன்.
பலரும் மொழிபெயர்ப்பு என்றாலே பயந்து வாங்காமல் ஆங்கிலப் புத்தகத்தைத் தேடுவார்கள். நான் இங்கு ஒரு உறுதிமொழி கொடுக்கிறேன். சற்றும் சலிக்காத ஒரு மொழிபெயர்ப்பை நமக்குக் கொடுத்திருக்கிறார் தோழர் எஸ்.ராமகிருஷ்ணன்.
பிரமிப்பாகத்தான் இருக்கிறது. ஏனென்றால் அந்த நாவலின் ஆசிரியர் நிக்கோலாய்தான் அதன் நாயகனும் கூட. தனது 32 வயதில் இத்தனை விஷயங்களைச் செய்து முடித்து மரணத்தைத் தழுவியிருக்கிறார் என்றால் பிரமித்து செவ்வணக்கம் செய்யாமல் வேறென்ன செய்ய முடியும்?
தன் இளவயதில் ஒரு ரயில் நிலையத்தில் காண்டீனில் வெறும் தொழிலாளியாகத் தனது வாழ்க்கையைத் தொடங்கும் பாவல் கர்ச்சாகின் படிப்படியாக ஒரு போல்ஷெவிக் போராளியாகி பின்னர் கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு மத்தியக்குழு வரை உயரும் ஒரு வீர காவியம் இது.
ஒவ்வொரு புரட்சிக்கும் அதனால் தமது வாழ்வை, அதாவது அடுத்தவரை உறிஞ்சிப் பிழைக்கும் வாழ்க்கையை இழந்த எதிர்ப்புரட்சி சக்திகளின் எதிர்ப்பும் கடும் போராட்டமும் இருக்கும். சோவியத்திலும் செம்படைக்கு எதிராக வெண்படை திரட்டப்பட்டுக் கடும் போராட்டம் நடந்தது. தமது இன்னுயிரையும், வேறு எதையும் பொருட்படுத்தாமல் போரில் ஈடுபட்டுத் தமது தந்தையர் நாட்டைப் பாதுகாத்தவர்கள் செம்படை வீரர்கள். மக்களையும் அவர்களின் நல்வாழ்வையும் நினைத்துக் கூடப் பார்க்காமல் அழிக்கும் வெண்படையினரின் சீரழிவுக்கு எதிராகவும் கடும் போராட்டம் நடத்தியிருக்கின்றனர். அங்கு நிலவும் கடும் குளிர்காலத்தில் மக்களுக்கு விறகு கிடைக்காமல் இருக்கவும் தடை ஏற்படுத்துகின்றனர். அந்தக் கடும் குளிரில் செம்படை வீரர்கள் உயிரைப் பணயம் வைத்து ரயில் பாதை அமைக்கின்றனர், மக்களைப் பாதுகாக்கின்றனர்.
அங்கிருந்து திரும்பும் பாவெல் தொடர்ந்து பல பொறுப்புக்களை ஏற்றுப் பணி செய்கிறான். நேரம் காலம் பார்க்காமல் பணி செய்கிறான். இறுதியில் போரில் ஏற்பட்ட காயம் காரணமாகத் தனது உடலே செயலிழந்தாலும், பின்னர் தமது வாழ்க்கையை ஒரு நாவலாக எழுதி நமக்கு வழங்கியிருக்கிறார் நிக்கோலாய் என்ற நம் பாவெல் கர்ச்சாகின். ஒரு மனிதன் தம்மைப் புரட்சியாளனாக்கிக் கொள்ளும் போது எத்தகையதொரு தியாகத்துக்குத் தயாராக இருக்க வேண்டும் என்பதை இந்த நாவலின் மூலம் அறிந்து கொள்ள முடியும்.
இந்தப் புத்தகத்தில் இந்த முறை நான் ரசித்த ஒரே ஒரு பகுதியை உங்களுக்கு வழங்குகிறேன்:
”இந்தக் கம்சமோல் இளைஞர்களெல்லோரும் எங்கிருந்து வந்தார்களென்பதுதான் எனக்கு விளங்கவில்லை. இந்த மாதிரி ஆட்களை நான் முன்னால் பார்த்தது இல்லை. அந்தப் பள்ளிக்கூட ஆசிரியைதான் இவர்களையெல்லாம் கிளப்பி விட்டிருக்கிறாள்; எனக்குத் தெரியும். அவளது பெயர் ரக்கீத்தினா. உங்களுக்குத் தெரியுமா? இளம் வயதுதான்; ஆனால் மிகவும் தீயவள். கிராமத்திலுள்ள பெண்களையெல்லாம் தூண்டி விடுகிறாள்; அவர்களுக்கு ஏதேதோ அபத்தமான விஷயங்களையெல்லாம் சொல்லிக் கொடுக்கிறாள். இதனாலே கலகமே உண்டாகிறது.
முன்போல ஒருவன் தனது சொந்த மனைவியை அடிக்க முடியாத அளவுக்கு நிலைமை கெட்டு விட்டது! அந்தக் காலத்தில், ஒருவனுக்கு மனநிலை சரியில்லாவிட்டால், மனைவியை அடிப்பான். அவளும் பதில் பேசாமல் மூலையில் உட்கார்ந்து இருப்பாள். இப்பொழுதோ, அடித்தால், ஆர்ப்பாட்டம் செய்கிறாள்! ஏண்டா வழியிலே போகிற தொல்லையை வாங்கிக் கட்டிக் கொண்டோமென்று வருந்த வேண்டியிருக்கிறது. பொதுஜன நீதிமன்றத்தில் வழக்குப் போடுவேன் என்று வீரம் பேசுகிறாள், அவள்! வயதுப் பெண்களோ, தத்தம் கணவன்மாரிடம் சட்டம் பேசுகின்றனர்! அடித்தால், விவாகரத்துச் செய்து விடுவேனென்று அச்சுறுத்துகின்றனர். என் மனைவி கன்கா, மகாசாது! இப்பொழுது அவள் மாதர் சங்கத்தில் சேர்ந்து பிரதிநிதியாக வேறு ஆகிவிட்டாள்.”
புரட்சி எதைச் சாதித்திருக்கிறது என்பதை நாவலின் ஒரு பகுதியிலேயே ஒரே பத்தியில் விளக்கி விட்டார் பாருங்கள். அனைத்து இளைஞர்களுக்கும் ஒரு ஆலோசனை. எப்படியாவது இந்த நாவலை ஒருமுறை படித்து விடுங்கள். எப்படி செயல்பட வேண்டுமென்று அது உங்களுக்கு வழிகாட்டும்.