எழுத்தாளர் நாஞ்சில் நாடன் விஜயா வாசகர் வட்டத்தின் கி.ரா.விருதுக்கு தேர்வு
தமுஎகச சிவகாசி: கி.ரா நினைவு சிறுகதைப் போட்டியில் சிறப்பு பரிசு பெற்ற கதை *மனிதத்துளி* – தமிழ் முத்துமணி
பதினோரு மணி இருக்கும். நல்ல வெயில் கொளுத்தியது. ” எக்கா, எப்டி இருக்கிதிய? சோமா இருக்கியளா என்ன?. சோமா இருக்கியளான்னு யாரயும் கேக்க முடியமாட்டிக்கு .செத்த வூட்டுக்குள்ளார வரட்டாக்கா?. நாந்தேன்க்கா சரசோதி. யாராச்சும் வூட்டுக்குள்ள உடுதாவளா, அதெப்படி வுடுவாவ.? ஆரும் வுடமாட்டாவ. பெறவு நீங்க எப்டி உடுவிய? எங்கிட்டும் போமுடியாம.. வெளில போவதுக்கும், பயந்து எல்லா சனமும் வூட்டுக்குள்ள அடஞ்சிக் கிடக்கு. அந்தமானிக்கு ஆறு மாசமா..ரெண்டு வருஷமில்லா ஆவுது “.
கசங்கிய பச்சக் கலர் பழைய சேலையை உடம்பில் சுற்றிக் கொண்டிருந்தாள்.. வறுமையில் மெலிந்த தேகம் சப்பிய கன்னங்கள். ஆளைப் பார்க்கும் முன்னே, ரெண்டு தெருவுக்கும் முந்தியே, இப்படிப் புலம்பிக் கொண்டே வந்தவள் ரிக்சாக்காரன் மாரிசாமியின் மனைவி சரஸ்வதி.
வில்லிசைத் திலகம், கலைமாமணி, இன்னும் என்ன கழுதைகளோ எல்லா விருதுகளையயும் பெற்ற ராஜலட்சுமியின் வீட்டு வாசலில் வந்து நின்றாள் சரஸ்வதி. வாசல் சுவரில் வில்லிசைத் திலகம் ராஜலட்சுமி என்று எப்போதோ வைக்கப்பட்ட போர்டு பெயிண்ட் உரிந்து அழுது கொண்டிருந்தது. வாசலில் வறண்டு போய் நிற்கும் சிறிய கொய்யா மரத்தில் இரண்டு இலைகளைப் பறித்து வாயில் போட்டு கொறித்துக் கொண்டாள். காம்பௌண்ட் சுவருக்கு உள்ளே இருந்த வீட்டு வாசலைத் திறந்து கொண்டு வெளியில் வந்த ராஜலட்சுமி அங்கேயே நின்றுகொண்டு “யாரு சரஸ்வதியா?வா வா. நீ புலம்பிக்கொண்டே வந்ததை ஜன்னல் வழியாப் பார்த்தேன். என்ன சரசு என்ன விசேஷம்? எல்லாரும் நல்லா இருக்காங்களா? என்று கேட்டாள்?”கலைமாமணி ராஜலட்சுமி.
“ஆமாக்கா. நாந்தாக்கா. ஆக்கங்கெட்ட சரசு,” மூக்கைப் பலமாகச் சிந்தி, கையைச் சுவரில் பாதியும் சேலையில் மீதியுமாகத் துடைத்தபடி “இம்மாங்காலமும், இப்பிடி ஒரு மோசமான சீக்க, இந்த ஊரு பாத்துருக்குமாக்கா? இல்ல, இந்த உலகம்தான் பாத்துருக்குமாக்கா?என்ன சொல்லுதிய? என்ன எழவோ? முன்னையெல்லாம் சீக்குன்னா வாயால வவுத்தால போவும். என்னத்தையாவது கரச்சிக் கிரைச்சிக் குடிச்சாச் சரியாப் போவும். கேக்கலன்னா, நம்ம ஊரு ஒண்ட்ற கண்ணு டாக்டரு ஒத்த ஊசியப் போட்டாருன்னா, அந்தமானிக்கு அஞ்சி நாளக்கி அடச்சிக்கிடுமே. அம்பது ரூவா ஆவும். மண்டையடி காச்சலு.
அம்புடுத்தான்.என்ன, வெயிலு காலத்துல கொஞ்சம் அம்ம வெளையாடும்.ஆத்தாவ வேண்டிகிட்டு கொஞ்ச நாளைக்கு செத்த, சுத்த பத்தமா கிடந்தா, தானா இறங்கிரும்.ஆனா இது ரெம்ப புதுசாவில்லருக்கு! சனம் எல்லாம் செத்துல்ல போவுதாம் பாவம். இது என்ன கொடுமக்கா? செத்த வூட்டுக்குள்ளார வரட்டாக்கா…”இழுத்த சரஸ்வதி எச்சியைத் துப்பினாள்.
“வேண்டாம் வேண்டாம். அங்கேயே நின்னுகிட்டுப் பேசு சரஸ்வதி. எதுக்கு வம்பு?. நாம் எல்லாருமே கொஞ்சம் கவனமாத்தான் இருக்கணும். இந்த நோய் யாருக்கு இருக்கு? யாருக்கு இல்லன்னு யாருக்கும் தெரியாது. ரொம்ப மோசமானது. ஆமா..உன் வீட்டுக்காரர், பிள்ளைகள் எல்லாம் நல்லா இருக்காங்கல்ல?”. என்று கேட்டாள் தன் இனிமையான குரலில் வில்லிசைத்திலகம்,கலைமாமணி ராஜலட்சுமி.
“ம்..ஆமாக்கா..ஆறு மாசம் ஆவுதுக்கா. சனங்க வேல சோலிக்குப் போவல. குடிக்க பாதி வீட்டில கஞ்சி தண்ணில்ல .அம்புட்டுப் பேரும் ஒழக்கு மாதி,.. ஒண்ணா மண்ணா, கெழக்கு மேக்கு பாக்க முடியாம குச்சி வூட்டுக்குள்ளதான்… அந்தாக்கில, சனியன் இப்பிடி மொத்தமா முடக்கிருச்சே, எழவுக்குப் பொறந்த இந்த கொனனா, அது என்னமோ?.யாம் வாய்க்குள்ள முளையலக்கா. இந்த மாசுக்கு எழவ வேற மூஞ்சிலக் கட்டி அழுதுகிட்டு? மூச்சிப் போமாட்டக்குதுக்கா. என்னைக்கு இந்த எளவுக்கு முடிவு கட்டுவாவளோ?”தலையில் லேசாக அடித்துக் கொண்டாள்.
“வூட்டுக்கு யாராச்சும் வந்தாவன்னா வாய் நிறஞ்சி வான்னு , கூப்புட்டு வூட்டுக்குள்ளார உட்காத்திவச்சி, ஒருவா காப்பித் தண்ணி கொடுப்பாவளே, நம்ம ஊரு சாதி சனம். அம்புட்டையும் நம்ம ஊரு மருவாதியக் கூடக் கண்ணுல காணாம ஆக்கிப்புடுச்ச இந்த பேதில போற கிரானா. அது என்ன எழவோ யாம் வாயில் முழையல?. “யாருமே வாதுறந்து கூட பேசக்கூட மாட்டுக்காவன்னா பாத்துக்கங்களேன். எங்கினயாவது பாத்துப்புட்டாலும் பாக்காத மாதியே போறாவக்கா தெரிஞ்ச மனுஷியளும்”
“யாருனாச்சும் தும்முன்னா இருமுனா, நாம அங்கின நிக்கப்பிடாதாம்க்கா. கொலனா.. அது என்ன எழவோ? என் வாயில முளையல. அப்பிடியே வந்து சப்புன்னு நம்ம மேல ஒட்டிக்கிடுமாம்க்கா. ஊரு சனமெல்லாம் பயந்து சாவுதுக்கா”. வவுத்துப் பாட்டுக்கே வழியக் காணும்.இந்த கருமத்தில, ஒண்ணு கிடக்க ஒண்ணு வந்து தொலைச்சா ஆசுபத்திரிக்கும் டாக்குடருக்கும் அழ யாருகிட்ட இருக்கு ,துட்டு?. என்று சொன்னபடி கண்களைத் துடைத்தாள் சரஸ்வதி.
அந்த நேரம்”பணியாரம், வடை பணியாரம், வடை என்று சத்தம் போட்டு வித்துக்கிட்டே வந்தான் முனியாண்டி. இந்த மனுசனுக்கு மட்டும்… .. எதையோ சொல்ல வந்த சரஸ்வதியை”சும்மா இரு என்று அடக்கிவிட்டு “தம்பி எனக்கு ரெண்டு பணியாரம் கொடு. சரஸ்வதிக்கு நாலு பார்சல் கட்டிக் கொடு”. சரஸ்வதி பிள்ளைகளுக்குக் கொண்டு கொடு” என்று ராஜலட்சுமி சொன்னாள். பார்சலைக் கட்டிக்கொண்டே ,”நம்ம ஊரு ஒண்டறக் கண்ணு டாக்டர் செத்துப் போயிட்டார். உங்களுக்கு தெரியுமா?”. என்று கேட்டான்.
“அடியாத்தி அவருமா போயிட்டாரு? டாக்டருமா செத்துட்டாரு?எங்கயோ ஊருக்குப் போய்ட்டாருன்னுலா நெனச்சேன்.ஆசுபத்திரி நாலு நாளா தொறக்கல. இனும யாரு ஊசி போடுவா?”கண் கலங்கினாள் சரஸ்வதி.”சரசு,சும்மா வந்துட்டுப் போற காய்ச்சல் இல்லடி இது. இந்த நோய் வந்தா ஆளை சோலிய முடிஞ்சிடும். மோசமான வைரஸ். பேரு கொரோனா. நம்ம டாக்டரை மட்டுமல்ல.பெரிய பெரிய ஆள்களை எல்லாம் இந்த நோய் பெரிய பாதிப்புக்கு ஆளாக்கிருக்கு. நிறைய பேர் செத்தும் போயிருக்காங்க. “ஆமாக்கா சினிமாவுல வந்த விவேக்குமுல்ல பூட்டான். அன்னைக்கு பூரா பக்கத்து வூட்டுல டிவி பார்த்து அழுதுபுட்டேன்க்கா.நல்ல மனுசன்”.
“நம்ம நாட்டை விடு சரசு. அமெரிக்கா மாதிரி, பெரிய பெரிய நாட்டுலகூட, இந்த நோயைக் கட்டுப்படுத்த முடியல்ல.நாளுக்கு நாள் நோயாளி எண்ணிக்கை கூடிகிட்டே போகுது. குறஞ்சபாடில்ல.இன்னும் இதுக்கு மருந்தும் கண்டுபிடிக்கல. இவ்வளவு காலம் கழிச்சி இப்பதான் தடுப்பூசி வந்திருக்கு. நாட்டு மக்களுக்கெல்லாம் அதைப் போடுறதுக்கே ஆயிரம் பிரச்சனை… நான் ஒரு ஊசி போட்டுட்டேன். அடுத்த ஊசி போடப் போனா இன்னும் ஸ்டாக் வரலன்னு சொல்றாங்க..”
“அப்பிடியாக்கா, எம் மண்டையில எங்க ஏறுது. உங்கள மாதி நாலு கிளாஸ் படிச்சிருக்கணும், இல்லன்னா நாலு எடத்துக்கு போவ, வர இருக்கணும்.நீங்க கச்சேரிக்குப் போவாத ஊரா? நாடா?. நான் கெட்ட கேட்டுக்குச் செத்த நேரம் டி.வீ பாக்ககூட வக்கில்ல.டிவி ஒயர உருவிட்டுப் பூட்டான் கொள்ளி முடிவான் கேபிளுக்காரன்.பின்ன என்ன,ஓசிக்கா படம் காட்டுவான்.ம்..ம் எல்லாருக்கும் எட்டு எழுத்து எனக்குப் பத்து எழுத்து”. மீண்டும் மூக்கைச் சிந்தினாள்.
“ம்ம்ம், எங்க ஊருல , சேராம்பட்டில ஒருத்தன் ஒரவுக்கார மனுஷன்க்கா, படுபாவிப்பய, நாப்பது வயசுல, ரெண்டு பொஞ்சாதியளயும் நாலு புள்ளைகளையும் வுட்டுட்டுச் செத்துட்டான். துட்டிக்குப் போ முடியல. செத்தவரு,எம் முற மாமன். முவத்தக்கூட கட்டக் கடீசியா பாக்கலன்னா, சவத்து பக்கத்துல உக்காந்து ஒரு பாட்டம் அழுவாட்டி அது என்ன எழவு வூடு?..ஒரு மாரியா இருக்குக்கா.துட்டிக்கும் செத்தியமமாத்தாம் ஆளுவள வுடுவாவளாம். எல்லாத்தையும் வுட மாட்டாவளாம்”
“ஆமாமா, அதுக்குக்கூட ஈ பாஸ் இன்னு ஒண்ணு வாங்கணும். அதெல்லாம் கஷ்டம்.லேசுக்குள்ள கிடைக்காது சரஸ்வதி. இங்கருந்து வெளிநாட்டுக்குப் போனவங்க சிலபேரு, அங்கேயே செத்துட்டாங்க. உடம்பகூட இங்க கொண்டு வர முடியாம அங்கேயே அடக்கம் பண்ணிட்டாங்க. பெரிய கொடுமை தெரிஞ்சுக்கோ. இதெல்லாம் பெரிய கொடுமை.”
“ம்…எல்லாம் மகமாயி ஆத்தாவோட வயிதெரிச்சலுக்கா.ஞாபம் இருக்கா?நம்ம ஊரு நடுக்காட்டுத் தாயிக்குப் பொங்க வச்சது, நான் வாக்கப்பட்டு வந்த வருஷம். அதுக்ககுப் பெறவு பொங்க உண்டா கொட உண்டா?அவ சாவத்த அள்ளி கொடுத்துப்புட்டாளோ என்னமோ? மனுசன் செய்யித தப்பு தண்டாவால உலவமே அழியப் போவுதோ?”. மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது சரஸ்வதிக்கு.
“ரேஷன் கடைல ரெண்டு வாட்டி ரூவா தந்தாவ. அத குடிச்சித் தீத்துப்புட்டான் இந்தக் கடங்கார மனுசன். என் புருஷன்தேன். அரிசி, பருப்புன்னு ஓசியா, ரேஷன் கடையில கொடுத்தாவ. அந்தாக்குல கவருமெண்டும் என்னத்த இதுக்குமேல செய்ய எங்க்கிட்டுப் போவும்?.கோடி சனமில்லாக்கா கொஞ்சமா?.
அது, ..அதான் எம் புருஷன்க்கா முந்தி ரிச்சா ஓட்டிச்சி. நல்ல சாப்பாடு ஏதுக்கா?. தண்ணி வேற..இருமி இருமி நோயி இப்ப கொஞ்ச காலமா கூப்பிட்ட கூலி வேலைக்கி அதும், நெனச்சாதான் போவும். இப்போ வேலையுமில்ல கழுதையும் இல்ல. இருமிக்கிட்டு வூட்ட்டலகிடந்து..பீடியக் குடிச்சிக்கிட்டு உசிர வாங்குவது..எப்பதான் இந்தச் சீக்குக்கு ஒரு அழிவு காலம் பொறக்குமோ?வடக்காம இருக்காளே ஆத்தா அவதான் நம்மள காப்பாத்தனும்.”கையை எடுத்து கோவில் இருந்த திசை நோக்கி கும்பிட்டாள் சரசுவதி.
“இந்த நோய் இப்ப குறையாதாம்.இனிமேல்தான் இன்னும் அதிகமாகும் சரசு.ரெண்டாவது அலை.. இன்னும் மூன்றாவது அறை வரப்போகுது சின்னப் பிள்ளைகள தாக்கிவிடுமாண்டி.உலகமே பழைய வாழக்கைக்குப் போக இன்னும் ரொம்ப நாளாகும் அதுவரைக்கும் நாம பிழச்சிக் கிடக்கணுமே”என்றாள் ராஜலட்சுமி
“என்னக்கா சொல்லுதிய? பச்சை புள்ளையளயா?நம்ம ஊருக்குள்ள நிறைய சனம் சுகமில்லாம கிடக்காங்களாம். அவுகள்ளாம் புழைப்பாகளா? மாட்டாவளா? தவப்பன் இல்லாத புள்ளைகளா தாயில்லாத புள்ளைகளா நிக்காவளே மக்கா
அம்மன் கோயிலு தெரு, பொட்டிக்கடை பரமசிவம், அவர் பொஞ்சாதி, ரெண்டு பிள்ளிய,குடும்பத்தோ டவுனு ஆஸ்பத்திரில கிடக்காவ. அந்த பஞ்சாயத்துப் போடு ஆபீசு, தெருவ கம்ப கிம்ப வச்சி அடைச்சு வச்சி போலீசு காவலுக்கு நிக்கி.சமாச்சாரம் என்னான்னு தெரியமாட்டக்கு . தென்காசி ஆசுபத்திரிகளில் எடமே இல்லியாம். மேப் சங்கு ஊதுற வண்டி வந்து பால்கார மாடசாமியத் தூக்கிட்டுப் போயிருச்ச்சாம். அங்கே என்னமோ காத்து இல்லன்னு பொணமாதான் தூக்கியாந்தாவளாம்.”
“ம்..சேத்து வச்ச துட்டு செலவாயிப் போச்சு.சீட்டு போட்டத ரெம்ப தள்ளி எடுத்தாச்சு. இப்ப வயித்து பாட்டுக்குல்ல., நாம் போற நாலு வூட்டிலயும் , கொஞ்சனாளைக்கி வீட்டு வேலைக்கி வராத சரசுன்னு சொல்லிப்புட்டாக., மவராசி, அந்த டீச்சரு அக்காஎம்மேல எரக்கப்பட்டு, ரெண்டாயிரத்த தந்துச்சி. மேல் கொண்டு கேட்டா தர மாட்டாவ.அக்கா நாந்தான் கேக்குகிறேன்.பசி வந்துடுச்சனன்னா வெக்கம், மானம் ஏதுக்கா? பத்தும் பறந்து போவுமுன்னு சொல்லுவாவள.”
“நிஜந்தான்.ரொம்ப கஷ்டம் பார்வதி. யாருக்கும் வேலை கிடையாது. வருமானம் கிடையாது. வெளியே போனால் நோய் தொற்றிக்கிடும் என்று பயம். ஆஸ்பத்திரில கூட இடமில்லை. வைத்தியம் பாக்குற டாக்டருக்குக்கூட இந்த நோய் இருக்குன்னு சொல்றாங்க. அதனால நிறைய ஆஸ்பத்திரியை மூடிட்டாங்க.”
“இந்தப் பாவி மனுஷன், இன்னும் குடிய நிப்பாட்டல.. கடை இருக்கு. காசுதான் இல்ல.இப்ப புள்ளயளுக்குப் பள்ளிக்கூடம் இல்ல. படம் பாக்குற செல்லு வேணுமாம். அதுலதான் டீச்சரு பாடம் நடத்துறாவளாம்.திங்கிறதுக்கு எனனத்தயாவது கேக்குதுக.. எது இல்லன்னாலும் வயிறு மட்டும் இருக்குல்லா? ஆனா வூட்டு அடுப்பு அணஞ்சி ரொம்ப நாளாச்சு. வெக்கமில்லாம ஒரவு க்காரங்கட்ட கை ஏந்தியாச்சி”. சரஸ்வதிக்கு சொல்லும்போது அழுகை வந்தது. அரளி விதையை அரச்சிக் குடிச்சிட்டு பிள்ளியளுக்கும் கொடுத்துட்டு போயிரலாமின்னும்னு ரோசன வருதுக்கா. பெரவும் மனசு கேக்க மாட்டக்கு”. கண்ணீர் வடித்தாள் மூக்கைச் சிந்தினாள் சரஸ்வதி.
“பசி, நமக்குப் பழகிப் போனதா இருந்தாலும் அதுக்கும் ஒரு லிமிட் இருக்கு சரசு. ஆறு மாசமா சோறு சாப்பிடாம இருக்க முடியுமா?” “எங்களுக்கெல்லாம், வருஷத்துல நாலு மாசம் தான் சீசன். வருமானம் வரும். வருஷம் பூராவும் வில்லுப்பாட்டு நடக்கும் இல்லை..தை, மாசி, பங்குனி, சித்திரை இந்த நாலு மாசத்துல நடக்கிற கோயில் திருவிழாக்காள்தான். அந்த நாலு மாசம்கச்சேரியில் சம்பாத்தியம் பண்ணுறதுதான் மீதி வருஷம் முழுசும் காப்பாற்றும்.
இந்த வருஷம் அதுல்லாம் கேன்சல் ஆயிடுச்சு. கோவிலில் சாமிக்குக் கூட கொடை நடத்த முடியாம போயிருச்சு.வில்லுப்பாட்டுக்குக் கைநீட்டி வாங்கின, அட்வான்ஸ் எல்லாம் திரும்பக் கொடுக்க வேண்டிய நிலமை வந்துருச்சு.
ஏற்கனவே வில்லுப்பாட்டுக்க்கு முந்தி இருந்த மவுசு இப்ப இல்ல.ஆறு ஏழு பேர் போனாலும் ஆளுக்கு 500 ரூபாய் கூட கிடைக்கிறதில்ல. நாங்களும் பழைய பாட்டை எல்லாம் மாத்தி புதுப்புது சினிமாப்பாட்டுகளையும் சேர்த்துப் பார்த்தோம் ஆனாலும் யாருக்கும் பிடிக்கல.ஆடலும் பாடலும், சினிமாப் பாட்டுக் கச்சேரி, காணக் குறைக்குப் பட்டிமன்றம் எல்லாம் வந்து எங்க பொழப்புல மண்ணள்ளிப் போட்டுடுச்சி.
இருந்தாலும் பாரம்பரிய கலைகள் அழிஞ்சி போக் கூடாது, அதை நம்பியே பிழைக்கும் எங்களைப் போன்ற கலைஞர்கள் சோறு திங்கணும்ன்னு அக்கறை உள்ள சில நல்லவங்க ஆசீர்வாதத்தால், கிராமங்களில் மட்டும் திருவிழாவுக்குக் கூப்பிடறாங்க.
இந்த லாக் டவுன் காலத்துல,நம்ம ஊரச் சுத்தி மட்டும் நானூறு ஐநூறு பேர், கிராமியக் கலைஞர்கள் குடும்பத்தோடு பட்டினியாக் கிடக்கராங்க. செத்தும் போயிருக்காங்க.
திண்டுக்கல், மதுரை மாதிரி ஊர்களில் அப்படி இப்படின்னு ஆயிரக்கணக்கில நாடக நடிகர்கள், தெம்மாங்குப்பாட்டு படிக்கிறவங்க, யார் யாரெல்லாம் கோயில் திருவிழாவை நம்பிப் பிழைப்பு நடத்துனாங்களோ, அவங்க வயித்துல எல்லாம் மண்ணு விழுந்துட்டுது.”
“உங்கபாடு தேவலக்கா. போனவருசம் டிவில கூட உங்களப் படம் பிடிக்க வந்தாவாளே. அவிய துட்டு தரலியா?. பேங்க்ல கீங்கிலப் போட்டு வைச்சிருப்பிய! எம்போல அன்னாடம் காச்சிய நாண்டுகிட்டுதான் நிக்கணும்”. கண் கலங்கியது.
“சரசு, இங்க பாரு .உண்மையச் சொன்னா, நீ சொன்னது மாதிரி,உனக்குப் பத்தும் பறந்து போச்சி. எனக்கு அதில ஒண்ணு ரெண்டு பாக்கி இருக்கு அவ்வளவுதான். இதப் புரிஞ்சிக்க
நீ சொன்னது மாதிரி, டிவியில் பாடி இருக்கிறேன்…அழிந்து கொண்டு வரும் கலை, அப்படின்னு, டிவியில எங்களக் காமிச்சி அவன் சம்பாத்தியம் பண்ணிக்கிட்டான். டிவி மட்டுமா ஏன்?ஒரு சினிமாவுல கூட நடிச்சிருக்கேன். வில்லுப்பாட்டுக்காரியா நடித்த ஒரு நடிகைக்கு டூப்பு நான்தான்.ஆனா என்ன பிரயோஜனம்.10 ரூபா காசு பணம்கூட தரல.
அரசாங்கம் கொடுத்த கலை மாமணி பட்டம் இருக்கு. எதுக்கு?. நாக்கு.. வழிக்கவா. எந்த ஊர்லயாவது பட்டம் பசியப் போக்குமா? ம்ம்ம் ..என்னோட…, இந்தக் கலையும் அழிஞ்சிப் போகும். அதுக்குப் பிறகு யாரும் இதைக் கையில் எடுக்க மாட்டாங்க.”
“அடியாத்தி,அப்பிடியாக்கா?நான்கூட பெருசாத்தான் நினச்சிபுட்டேன் ஒன்ன. இது என்னமோ சொன்னான் கதையாவில்ல்ல இருக்கு ஒங்க கத. இதக் கேட்டா எனக்குக் கெழவி சொன்ன சொலவடதான் ஞாவத்துக்கு வருது. அது எதுக்கு?”பெருமூச்சு விட்டாள் சரஸ்வதி..
“சரி சரி. அதை விடு சரசு. இப்ப என்ன விஷயமா வந்தே? சும்மாதான் வந்தியா?. இல்லை ஏதேனும் காரியமாக வந்தியா?. கண்களைக் கசக்கிக் கொண்டு. லேசா கம்மிய குரலில் கலைமாமணி ராஜலட்சுமி கேட்டா.
“எக்கா வூட்ல கெடந்த தட்டுமுட்டு சாமான் எல்லாத்தையும் வித்தாச்சி.அடவு வய்க்க யாங்கிட்ட வேற ஒண்ணுமில்ல. கழுத்துல கிடக்க மஞ்ச கவுத்த யாராவது அடவு வாங்குவாவளா? அந்த துன்பத்திலும் ஜோக் அடித்தாள் சரஸ்வதி. “நீங்க… என்ன நெனைச்சாலும் சரிக்கா எப்புடி எடுத்துக்கிட்டாலும் சரிக்கா. தப்பா நெனக்காதிய. ஒங்க காலப் புடிச்சு கேக்குறன்.நீங்கதான் கச்சேரிக்குப் போம்போது கழுத்து நிறைய செயினு நெக்லசு மால போட்டுட்டுப் போறீக. மாரியாத்தா நக போட்ட மாதி சும்மா தளதளன்னு. எங்கண்ணே பட்டுரும்.
யக்கா..அதுல… ஒரு சங்கிலியைத் தந்தியன்னா… அடவு வச்சு, பெறவு மாடு கணக்கா பாடுபட்டு,சங்கிலியத் திருப்பியாந்து தந்துருவேங்க்கா…. நாம் பெத்து வச்சிருக்க ரெண்டு புள்ளைக மேல சத்தியமா…சாச்சிக்கு. யாரு இரேக்காவ?? …உம்.. அந்த வட கார மனுசனக் கூப்புடுறமக்கா..அந்தாப் போறான்”
ராஜலட்சுமி ஒண்ணுமே பேசாம அவனை அழைக்க வேண்டாம் என்று சொல்வதுபோல் கை ஜாடை காட்டி விட்டு வீட்டுக்குள்ளே போனாள். பத்து நிமிஷத்தில் திரும்ப வந்து நகைப்பெட்டி ஒன்றைச் சரஸ்வதியிடம் கொடுத்தாள். திறந்து பார்த்த சரஸ்வதிக்கு ஆச்சரியம். ஒரு சின்ன செயின்தான் கேட்டாள். ஆனால் எப்படியும் அஞ்சு பவுனு இருக்கும். அப்படி ஒரு கல் வச்ச நெக்லசு கொடுப்பாங்கன்னு நினைக்கல.
“கதவத் திறந்தன்னா ஒன் கால்ல.. ஆமா, மாரியாத்தா காலுல விழுற மாறி வுழனும்”. கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள். “பக்கத்து ஊர்ல, காது கம்மல் மூக்குத்தியை அடவு வச்ச கடக்கி, கருக்கலுலதாம் போவணும், போய் இதையும் வச்சிட்டு, அரிசி வாங்கிக் கஞ்சி காச்சனும்.. என் தோல செருப்பா தச்சி போட்டாலும்” ..
அழுதுகிட்டே போனா. அவள் போனதும் கலங்கிய கண்களோடு வீட்டிற்கு உள்ளே சென்ற ராஜலட்சுமி, சாமி படத்தைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக் கொண்டாள். அப்போது லேசாக மழை தூறத் தொடங்கி, படிப்படியாக பெரிய மழையாகிவிட்டது.
இரவு ஆகப்போகிறது. மழை வேறு பிடித்துக்கொண்டது. அதனால் நாளை காலையில் கடைக்குச் செல்லலாம் என்று நினைத்த சரஸ்வதி அதுவரைக்கும் புருஷனுக்குத் தெரியாம எப்படியோ பொத்திப் பொத்தி வைத்தாலும் நகை இருப்பதைக் கண்டுபிடித்து, அவளிடமிருந்து அதைப்பிடுங்க முயன்று இரண்டு பேரும், அடிதடி சண்டை போட்டு கடைசியில், ஓங்கி ஒரு அடி சரஸ்வதியின் கன்னத்தில் அடித்து அவளைச் சாய்த்துவிட்டு நகையோடு வெளியே ஓடிவிட்டான் அவள் புருஷன் மாரிச்சாமி..
மறுநாள் .. .சாயங்காலம் “எக்க்கா.”. சத்தம் கேட்டு..”உள்ள வா” என்றாள் ராஜலட்சுமி. “ஊட்டுக்குள்ள வரவாக்கா?” என்று கேட்டுக்கொண்டே உள்ளே வந்தால் சரஸ்வதி.கட்டிலில் படுத்திருந்தார் ராஜலட்சுமியின் கணவர் கனகசுப்பு. அவர்தான் வில்லிசைக் குழுவில் குடம் அடித்து நகைச்சுவையாகப் பேசி எல்லோரையும் மகிழ்ச்சிப் படுத்துபவர்.”இந்தாக்கா.வூட்டுல சுட்ட அதிரசம்” சும்மா சாப்பபுடுக்கா ஒண்ணும் செய்யாது”.. ராஜலட்சுமிக்குப் பதட்டமாக இருந்தது.
“இதப்பாருக்கா”.. பார்த்தாள். பணம்!!. வாங்கி எண்ணிப்பார்த்தாள் ராஜலட்சுமி, 5000 ரூபா சுளையா. என்னடி சரசு இது? ஏது இவ்வளவு பணம்?.”உம் அட்டியல அடவு வச்சாச்சிக்கா.அது ரெண்டு பவுனாம்.நான்தாம் ரொம்ப துட்டு வாங்கிட்டா பிறவு நாந்தான அடைக்கணும்.பத்தாயிரத்துக்குத்தான் வெச்சேன். அம்புட்டு ருவாய வச்சு நான் என்ன கோட்டையா கட்டப்போவுதேன்? அக்காவும்,கஷ்டத்துலதான இருக்கிய .
பாதி ரூவாய நீங்க வச்சிக்கிடுக. அண்ணாச்சி கூட அரவாயித்துக் கஞ்சி குடிச்சமானிக்குத் தெரிது.ருவாயா பூராம் நான் திருப்பி மொத்தமாஅடச்சிட்டு, உம் அட்டியல கொண்டாந்து குடுத்துருவேன்.
ஒரே மூச்சாக சொல்லி முடித்த சரஸ்வதியின் கைகளைப் பிடித்துக்கொண்டு வில்லிசைத்த் திலகம் கலைமாமணி ராஜலட்சுமி மெதுவாக விசும்பினாள். “செட்டியார் முறுக்கா? சரக்கு முறுக்கா?ன்னு சொல்லுவாங்க சரசு. நானும் 15 வயசுல வில்லுக்கச்சேரி பாட ஆரம்பிச்சேன். இப்ப எனக்கு வயசு 65. இத விட்டா வேற தொழில் தெரியாது. என் வீட்டுக்காரர், எங்க செட்டுல வாசிக்கிற இன்னும் அஞ்சு பேரு குடும்பம் எல்லாத்துக்குமே இந்தத் தொழில் மட்டும்தான். என்னமோ கல்யாணம் ஆயி பத்து வருஷம் எங்களுக்குப் பிள்ளை பாக்கியம் இல்லை. அதுக்குப்பிறகு பிறந்தவள் தான் பிறக்கும்போதே நோயோடு பிறந்து அவளுக்கு வைத்தியம் பார்க்கவே சம்பாத்தியம் முழுசும் போய் சேர்ந்து, கடைசியில் அந்தப் பிள்ளையும் போய் சேர்ந்துவிட்டது…
சின்ன வயசுல நான் சிவப்பா அழகா இருந்தேன்.அப்போ வில்லுப்பாட்டுக்கு, நல்ல மவுசும் இருந்தது கூட்டம் கூட்டமா வில்லுப்பாட்டு கேட்க வருவார்கள். வயசாக வயசாக ,நல்ல மேக்கப் போட்டுக்கிட்டு எடுப்பா போனா மட்டும்தான் கொஞ்சமாவது ரசிப்பாங்க. அதை எப்படி சொல்ல…ஒரு வருஷம் போன இடத்தைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள, யார் யாரிடமோ வணக்கம் போட்டு, கும்பிட்டு, ஒண்ணுக்குமத்தவனை” ஐயா” என்று சொல்லி கூழைக் கும்பிடு போட்டாதான், காக்கா புடிச்சாதான் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கும். நமது திறமையை யாரும் இன்னிக்கு மதிப்பதில்லை சரசு.
அதோட அந்தக் காலத்துல சொன்னது மாதிரி, விரல்கள் ஐந்தினில் மோதிரம் வேண்டும் விரகர் இருவர் புகழ்ந்திட வேண்டும் ..என்பதுபோல ,நல்ல பட்டுச்சேலை கட்டி, கழுத்து நிறைய கைநிறைய நகையைப் போட்டுருந்தால்தான், ஓகோ..பெரிய பார்ட்டி, நல்லா பாடுவாங்கன்னு மதிக்கிறங்க. அதற்காகத்தாண்டி இந்த நகை எல்லாம்.
அடியே சரசு.., என்ன நடந்ததுன்னு உண்மையைச் சொல்லு. என் நெக்லஸை க்கொடுத்தேன். அது போக இன்னும் இருக்கக்கூடிய எல்லா நகைகளையும் கொடுத்தாலும்’ அத வச்சுக்கிட்டு யாரும் உனக்குப் பணம் கொடுக்க மாட்டாங்க. ஏன்னா, அது எதுவுமே ஒரிஜினல் தங்கம் கிடையாது. எல்லாமே ரோல்டு கோல்டு. மேடைக்குப் போட்டுகிட்டு.. மினுக்கும் அது கருத்த உடன் அதே மாதிரி வேற வாங்குவேன்.அத வச்சிக்கிட்டா இம்புட்டுப் பணம் கொடுத்தான்?!. ஏமாற்று வேலை சொல்லு. சொல்லிட்டு, மேடையில் பாட்டு பாடி அனைவரையும் மகிழ்ச்சிப் படுத்தும் கலைமாமணி அடக்கமுடியாமல் ஓவென்று அழுதாள்.
“அக்கா அழாதிய”. கலைமாமணியைப் பிடித்துக்கொண்டு,” கண்ணத் தொடைங்கக்கா. களவாணிப்பய யாம் புருஷன்அட்டியலத் தூக்கிட்டு ஓடிட்டான். போயி ராவோட ராவா அதை எங்கேயோ விக்கிற இடத்தில தெரிஞ்சிடுச்சி அது டூப்புன்னு. கொண்டாந்து கெட்டவாய் அஞ்சாறு வசவு வஞ்சி , அட்டியல யாம் மூஞ்சிலத் தூக்கி வீசிட்டு பூட்டான் அந்தப பேதில போவான். அப்பதான்க்கா, உம் நிலம பூறாம் எம் மண்டைல ஏறிச்சி. யாம் கஷ்டத்தச் சொல்லி நான் பிச்ச எடுக்கேன் பாதவத்தி. நீ ஊரு பூராம் தெரிஞ்ச,என்னமோ ஒரு மணி… என்ன மணி ?. உனக்கு கஷ்டமுன்னா யாரு நம்புவாவ? நீ யாருகிட்டக்கா கை நீட்டவ?அதான் உமஙகஸ்டத்த உன்னால சொல்ல முடியல.தம்மானம் தடுக்க்கி நிக்கி. எல்லா நகயும் டூப்ளிகட்டு, கவரிங்குன்னு தெரிஞ்சி போச்சு.
போன மாசம் சிவகாசிலருந்து வந்து, அது என்ன குடிநீரு! ஆமாக்கா, கப்புசுர குடிநீரு ஊரு பூராம் கொடுத்துச்சே ஒரு தம்பி, அந்தத்த்தம்பி,அவங்க அப்பா பேர்ல..என்ன? என்னமோ டெஸ்ட்டா? ஆமா ,சொல்லிச்சு. அந்த டெரஸ்ட் புதுசா ஆரம்பிச்சிருக்காம். சோத்துக்கு இல்லாத பஞ்சைகளுக்கு 5000 ரூவா கொடுக்க இன்னைக்குக் காத்தால நாலஞ்சி வேரோடுவந்தாவ. நம்ம ஊருல நாலு வேருக்கு மட்டும் ரூவா கொடுத்தாவ. அதுல நா ஒருத்தி.
அந்தப்பையங்கிட்ட உங்களப் பத்தி நாலு வார்த்த சொல்லி, “அக்கா வூட்ட வுட்டு வெளிய வராது. நல்லாருந்து கெட்டுப்போனது. அது பேரையும் சேத்துக்க தம்பின்னு நல்லாத்த்த சொல்லி, அக்கா யாரையும் பாக்காதுன்னு சொல்லி, கால்ல கைல வுழுந்து ஒம் பேரையும் சேத்து ஒம் பங்குக்கு இந்த ரூவாய வாங்கிபுட்டேன்க்கா.தப்பா நெனைக்காதியக்கா.”என்று சரஸ்வதி சொல்லி முடித்ததும்..
முகமூடி போடல. கையுறை அணியல. ஆனால் கலைமாமணி, வில்லிசைத் திலகம் ராஜலட்சுமி ஒரு படிக்காத, பாமர , ஒரு கூலிக்காரன் பொண்டாட்டி சரஸ்வதியை ப்பாசத்தோடு இறுக்கமாகக் கட்டிப்பிடித்துக் கொண்டாள். இருவர் கண்களிலும் வந்த கண்ணீர் மற்றவர் தோள்களில் விழுந்தது… சாமானிய சரஸ்வதிக்கு.. நன்றி சொல்ல கலைமாமணி ராஜலட்சுமியின் கண்களில் கண்ணீர்த் துளிகள் நிற்காமல் வடிந்து கொண்டேயிருந்தன.
மேற்கண்ட கதையானது தமுஎகச சிவகாசி கிளை சார்பில் நடத்தப்பட்ட கி.ரா நினைவு சிறுகதைப் போட்டியில் சிறப்பு பரிசு பெற்ற கதையாகும்.
தமுஎகச: கி.ரா நினைவு சிறுகதைப் போட்டியில் சிறப்பு பரிசு பெற்றது *பாசிட்டிவ் பயம்* – விஜயராணி மீனாட்சி
என்னால் இன்னும் நம்பமுடியவில்லை. நேற்று மதியம் கூட அவர் என்னிடம் பேசினார். இந்த செய்தி பொய்யாக இருக்கக் கூடாதா என்று மனம் ஏங்கிக் கொண்டிருக்கிறது. என் மனதின் வதையைத் தணிக்க தண்ணீர் குடித்தேன். தொண்டைவழியாக இறங்குகிற தண்ணீரின் க்ளக் க்ளக் … சத்தம் என் மௌனத்தை உடைத்துக் கொண்டிருந்தது.
தினம் தினம் இப்படி வரும் மரணச் செய்திகளைக் கேட்டுக்கேட்டு பயத்தின் உச்சிக்குச் சென்று நடுங்கும் மனதை எப்படி மீட்டுக் கொண்டுவருவது? நிம்மதியாக இறந்தவர்களின் செய்தியும் நம்மை மட்டும் கலங்கடித்துவிடுகிறது. பயத்தின் இறுக்கமே மூச்சுமுட்டுகிறது இதில் இந்த மாஸ்கு வேற…. அதிலும் ரெண்டு மாஸ்க போடணும், அப்படி போடணும் இப்படி போடணும் எதத் தான் ஃபாலோ பண்ண? எல்லாம் ஒரே குழப்பமாவே இருக்கு. யார் பக்கத்துல வந்தாலும் அல்லது தற்செயலா தும்மினாலும் ஒரே பதட்டமா பயமாகிடுது. இயல்பான இருமலு தும்மலு இதெல்லாம் இவ்வளவு பயமுறுத்தும்னு நெனெச்சிப் பார்த்திருப்போமா? சாதாரண ஜலதோஷத்துக்கே கொரொனாவா இருக்குமோன்ற பயம் வந்திருது.
இன்னைக்கு செத்துப்போன சுதாகர் சாரும் நானும் போன வாரம் வரைக்கும் ஒண்ணாத்தான் சுத்திக்கிட்டு இருந்தோம். திடீர்னு போன் பண்ணி எனக்கு கோவிட் பாசிடிவ் நீ எதுக்கும் செக் பண்ணிடுனு சொன்னதில் இருந்து திக்திக்குனு இருக்கு. அவர ஆஸ்பத்திரீல சேர்த்ததுல இருந்து கேட்ட செய்தி எதுவும் சொல்ற மாதிரியில்ல. அத்தனை லட்சம் செலவு பண்ணியும் கொஞ்சங்கூட ஈவு எரக்கமில்லாம அந்த டாக்ட.ருங்க நடந்துகிட்டத மத்தவங்க சொல்லிக் கேட்டபோது தூக்கிவாரிப்போட்டுச்சு. அதநான் ஏம்வாயால சொன்னா நீங்களும் பயப்படுவீக. இதோ இன்னைக்கு அவரு செத்தும் போய்ட்டாரு. அதேநேரம் நல்லாக்கவனிச்சு பொழைக்க வைக்கிற டாக்டருகளும் இருக்காக. காசு காசுன்னு அலையறவங்களும் இருக்காக.
ஒரு மனுஷனோட வாழ்க்கை அவ்ளோதானா?. இதுக்கா இத்தன ஆட்டம். இங்கு எல்லோரும் மனதளவில் சரிந்துதான் போய்ட்டாங்க. ஏன்னா அவ்வளவு வெறுமை இப்படி ஒரு வெறுமை யாரும் அனுபவிக்கக்கூடாது.
ஆனா எனக்குத் தெரிஞ்சு எல்லோரும் அவர் அவரின் அளவில் வெறுமையை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த கொரோனா காலத்தில் இத்தனை புழுக்கத்திற்கு இடையிலும் நான் வாழ்ந்தாக வேண்டும் மற்ற மனிதர்களிடம் இருந்து என்னை நான் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். பாதுகாப்பாக இருக்க வேண்டும். இப்ப தான் புரியுது சிறைச்சாலையில் தனி அறையில் பூட்டி வைக்கப் பட்டிருக்கும் கைதிக்கான தண்டனையை அனுபவிப்பதன் ரணம். ஆனா காந்தி மண்டேலால்லாம் புஸ்தகம் படிச்சு தனிமையப் போக்கிக்கிட்டாங்களாம். ஆமா அவங்களுக்கு நோய் பயமோ உசுரு பயமோ இல்ல. நாட்டுக்காக விடுதலைக்காக சிறைல இருந்தவங்க.
மனசு கண்ட கண்டத நினைச்சி குழம்பி, பயந்து பதட்டத்தோட தவிக்குது. போன மார்ச்ல இருந்து கிட்டத்தட்ட ஒண்ணேகால் வருஷம் ஆகிபோச்சு வேலையில்லை, கையில் காசு இல்ல, ஆனா எப்படியோ இந்த வாழ்க்கை ஓடிட்டு இருக்கு. பயம் மட்டும் குறையவேயில்லை. என்னை நான் என்னிடமிருந்தே சகித்துக் கொண்டு, தப்பித்து பிழைக்க அருவருப்பா இருக்கு. ஆனாலும் இப்ப எனக்கு ஜுரம் வரமாதிரி இருக்கு. வந்துடுமோனு ரொம்ப பயமாவுமிருக்கு. வந்துட்டா எப்படி சமாளிக்கறது. உடல் முழுக்க வலி பின்னுது உடம்போட ஒவ்வொரு செல்லையும் ஊசி வச்சி குத்தற மாதிரி வலிக்குது. மூச்சுக்காத்து எனக்குள்ள வந்து போறது நல்லாத் தெரியுது. சட்டையில் வெள்ளை வெள்ளையாக வேர்வையின் உப்பு பூத்திருக்கிறது. மிதமாக தொண்டை கரகரக்கிறது. ஆனால் மல்லிப்பூவின் வாசனை நல்லா மணக்குது. கொரோனா வந்தா வாசனை தெரியாது. ஆனா எனக்கு நல்லா வாசனை தெரியுதே. “So, Be positive”
சுதாகர் சாரு செத்துடாருனு இப்பவரைக்கும் என்னால நம்பவே முடியல. அது வேற எதாவது சுதாகர் சாரா இருப்பாங்க. சீ…. வேற யாரா இருந்தாலும் ஒரு மரணத்த எப்படி உன்னால சாதாரணமா கடக்க முடியுது? அந்த அளவுக்கு இந்த சூழல் நம்மை மாத்திடுச்சா? ஃபேஸ்புக்கில் அவரோட profile போய் பாக்கும் போது அவரோட போட்டோவ போட்டு ” ஆழ்ந்த இரங்கல்”னு வர பதிவ பாத்துட்டு எளிதில் கடக்க முடியல. என் கண்கள் என்னை அறியாம அழுதிடிச்சி. என்னால என்ன பண்ண முடியும் இன்னும் நல்லா அழ முடியும் இல்ல sad சிம்பலை அழுத்திவிட்டு ஆழ்ந்த இரங்கல்னு comment பண்ணத்தான் முடியும்.
கொரோனா காலத்தில் எத்தனை பேருக்கு பசியப் போக்கியிருப்பாரு. எல்லாத்தையும் கடந்து வந்துடுவோம்னு சோர்ந்து போனபோதெல்லம் நம்பிக்கைய கொடுத்த அந்த வார்த்தை இனி கிடைக்காது. கடைசியா முகத்தக்கூட பாக்க முடியல. எனக்கு இன்னும் பயமாக இருக்கிறது. பசியுமெடுக்கிறது.
ஒருவரின் இறப்புச் செய்தியால் அதிர்ந்திருக்கிறேன். எனக்கும் கொரோனா வந்துவிடுமோ என்ற பயத்துடனுமிருக்கிறேன். பசியுமெடுக்கிறது. இந்த மூன்றின் உணர்வும் என்னை சிதைத்துக் கொண்டிருக்கிறது. பயம் பசியைவிட பலம் வாய்ந்தது. பயம் பசியைமட்டும் அல்ல என்னையும் சேர்த்துத் தின்று கொண்டிருக்கிறது.
ஒட்டுமொத்த வெறுமையின் மௌனத்தில் என் மூச்சுக் காற்று மட்டும் என்னுள் வந்து வெளிவருவதை அறியமுடிந்தது. அதையும் மீறி வெளியே எங்கோ இருமும் சத்தம் என் காதில் கேட்டவுடன் கைகள் அனிச்சையாக சானிடைசரை எடுத்து கைகளுக்கு தெளித்து தேய்த்துக் கொண்டதில் கைகள் சில்லிட்டது, சானிடைசரின் வாசனையை என்னால் உணர முடிந்ததில் அப்பாடா என்ற பெருமூச்சின் வேகம் மாஸ்கை வெளித்தள்ளி அழுத்தியது.
காலராவுக்கு பிறகு எல்லோரும் தண்ணீரை காசு கொடுத்து வாங்கினோம், இப்ப கொரோனாவிற்கு பிறகு காற்றையும் காசு கொடுத்து வாங்கும் நிலைக்கு வந்துட்டோம்னு சுதாகர் சார் சொன்னது சம்பந்தம் இல்லாம இப்ப ஞாபகத்துக்கு வருகிறது.
வாழ்க்கை நாம நினைக்கிற மாதிரி நேர்கோட்டில் பயணிக்கறது இல்ல. அது இழுத்த இழுப்புக்கு நாம ஓடிட்டு இருக்கோம். எல்லாரும் ஏதோ ஒரு வகையில் சகிச்சிக்கிட்டு வாழ்ந்துட்டு இருக்காங்க எல்லாருக்குள்ளயும் எதோ ஒரு நாள் நாம செத்துடுவோம்ங்கற எண்ணம் நிச்சயம் வந்திருக்கும் அத எல்லாத்தையும் தாண்டி நாம வாழ்ந்தே ஆகணும். இதுக்குப் பேரு தப்பிப்பிழைக்கறதில்ல வாழ்க்கைய வென்று ஜெயிக்கறதுனு
சொல்லிட்டு இப்படி பொட்டுனு போய்ட்டாரு..
அமைதியான சூழ்நிலையில் அவரின் நினைவுகள் எனக்குள்ள மயக்க ஊசி போல படிப்படியா இறங்குது. மனசு மறத்துப்போகாம கனத்துப் போகுது விம்மி அழுததில் தான் மூச்சு திணறுகிறது மத்தபடி நான் பயப்பட வேண்டாம்.
மூச்சு முட்டுகிறது உடல் முழுக்க வெப்பம் மிகுந்து கண்களின் வழியேவும் மூக்கின் வழியேவும் வெப்பம் கொப்பளிக்கிறது. தொண்டை வறண்டு வாய் கசக்கிறது. உடலின் எல்லா பக்கமும் வியர்வை சுரந்து உடையை நனைத்து பிசுபிசுக்கிறது.
எலும்புகளின் இணைவில் ஊசியை வைத்து சுருக்கென்று குத்துவதைப் போல வலிக்கிறது. உடல் அனிச்சையாகப் போராடிக் கொண்டிருக்கிறது மனம்மட்டும் பயந்து எங்கோ அலைந்து கொண்டிருக்கிறது. கொரோனா என்னுள்ளும் இருக்கிறது. எனக்கும் நாளை யாராவது முகநூலில் என் புகைப்படத்துடன் பதிவு போடுவார்கள் என்று எண்ணிக் கொண்டிருக்கிறது. பாழாப்போன டெஸ்ட் ரிசல்ட் வரும்வரைக்கும் இந்த மனசு பயந்தே செத்துப்போய்டும் போல. நீ தைரியமா இரு என்று எனக்கு நானே தைரியமூட்டிக் கொண்டேன்.
எதிர்காலத்த நினைச்சா பயமா இருக்கு. ஆயிரக்கணக்கான தூரம் குழந்தை குட்டியோட நடந்துபோற அளவுக்கு வறுமையில் இல்லனாலும். எல்லாத்தையும் சந்தேகத்துடன் அணுகவே பதைபதைப்பா இருக்கு. எல்லாத்தையும் தலைகீழா மாத்திடிச்சி கண்ணுக்கு தெரியாத ஒன்னு. பிழைச்சா வாழ்ந்திடலாம்னு வந்து நிக்கறோம்.
யாரும் இல்லாத என்னுடைய அறையே எனக்கான ஆறுதல். அறை நண்பர்கள் எல்லாருமே லாக்டவுன் போட்டவுடனே ஊருக்கு கிளம்பிடாங்க. ஒருவகையில் அவங்க எல்லாரும் தப்பிச்சிட்டாங்க.
நான் மட்டும் தான் மாட்டிகிட்டேனா.? இப்படி எனக்கு நானே பேசிட்டு இருக்கேன்
என்னோட தனிமை என்னுடைய சுயரூபத்தை எனக்கு காட்டிக் கொடுக்குது. மரணத்தவிடக் கொடும இந்த பயம் ..சீ.. செத்துப் போய்டலாம்.
இன்னைக்குள்ள மேசேஜ் வந்தா கொரோனா பாசிடிவ் வரலனா நெகடிவ் கருமம் புடிச்சவனுங்க சீக்கிரம் சொல்லித் தொலைக்க மாட்டாங்களா.
நேரம் நகர நகர பதட்டமும் பயமும் அதிகமாகுது. என்னோட நெஞ்சு துடிக்கிறது எனக்கே கேக்குது. சம்மந்தமே இல்லாம இடது தொடையின் சதை துடிக்குது. பல்லிவிழும் பலன் போல தொடையின் சதை துடிப்பதற்கு எதும் காரணம் இருக்குமா என காலண்டரின் பின் அட்டையை தேடியது கண்கள். தண்ணிய வேற அதிகமா குடிச்சதால மூத்திரம் முட்டிக் கொண்டு வந்தது வழக்கமா இருப்பதைவிட அடர் மஞ்சள் வண்ணத்தில் எரிச்சலுடன் சிறுநீர் வந்தது. உன்மையிலே உடலுக்கு பிரச்சனை தான் போல அதான் இப்படி வருது என்று பயத்துக்கு பல காரணங்கள் கிடைத்துக் கொண்டே இருந்தது. எச்சிலை கூட்டி முழுங்கினாலும் கசக்குது, கசாயத்த குடிக்கறதால வாய் கசக்குதா இல்ல எதனால? ஆனா இப்ப எல்லாம் முன்ன போல கசாயம் கசக்கறதில்ல, ஒருவேளை தினமும் குடிக்கறதால பழகிப்போச்சா.?
பொறுத்தது போதும் நாமே கால் பண்ணி கேட்டுடுவோம்னு கால் பண்ணா அவரும் கால் அட்டன் பண்ணவேயில்ல.. எப்படியும் பாத்துட்டு அவரே கூப்பிடுவாரு.. அதுகுள்ள நம்ம ஆவி பிடிச்சிடுவோம்னு
கொதித்த தண்ணிரில் “Eucalyptus” மாத்திரையை கிள்ளிப் போட்டவுடன் நீராவியும் யூகலிப்டஸ் வாசனையும் இணைந்து நெடியைக் கிளப்பி இருமச் செய்தது சூடான காற்று என் மூக்கின் வழியாக என் உடலுக்குள் செல்கிறது. மழை நின்ற பிறகு இலையில் துளி துளியாக சொட்டிக் கொண்டிருப்பதைப் போல வேர்வை துளிகள் என் முகத்திலிருந்து சொட்டிக் கொண்டிருந்தது. வேர்வை துளி சுடுநீரில் விழும் சத்தமும் கடிகாரத்தில் சிறிய முள் நகரும் சத்தமும் இணைந்தே கேட்டுக்கொண்டிருந்தது. போனில் மெசேஜ் வந்ததற்கான சத்தம் கேட்டவுடன் போர்வையை விலக்கிப் பார்த்தால் “விநாயகர் ஒரு?A)கடவுள்B)பாடகர்.A/B WINRs.500RC” என்று வந்திருந்தது.
நொந்து பற்களை கடித்துக் கொண்டு, அவருக்கு மீண்டும் கால் செய்தேன்.
செல்போனின் மணியுடன் என் இதய துடிப்பும் சேர்த்தே ஒலித்தது இவ்வளவு நேரம் காத்திருப்பதைவிடவும் அவர் போன் எடுக்கும் வரையில் காத்திருப்பது மிகுந்த பதட்டத்தை ஏற்படுத்தியது.
ஹலோ..
சார் வணக்கம்.
என்னோட கோவிட் ரிசல்ட்…
நேத்தே அனுப்பிட்டனே
நீங்க பாக்கலையா…
இல்ல சார் எதும் வரலையே..
அப்படியா ..
உங்களுக்கு நெகடிவ் சார் ..
கொரோனா இல்ல..
இருந்தாலும் கவனமா இருங்க…
மேற்கண்ட கதையானது தமுஎகச சிவகாசி கிளை சார்பில் நடத்தப்பட்ட கி.ரா நினைவு சிறுகதைப் போட்டியில் சிறப்பு பரிசு பெற்ற கதையாகும்.
தமுஎகச: கி.ரா நினைவு சிறுகதைப் போட்டியில் சிறப்பு பரிசு பெற்றது *தடம் மாறிய வாழ்வு* – சுதா
அரசு உயர்நிலைப்பள்ளி ’11ஆம்’வகுப்பு ‘ஆ’ பிரிவு வகுப்பறை முழுவதும் பாடப்புத்தகத்தில் மூழ்கிய நேரம்.வகுப்பாசிரியர் கண்ணனின் குரல் கேட்டு மாணவர்களின் தலைகள் நிமிர்ந்தன. ராகவி மட்டும் ஏதோ எழுதியவாறு சற்று தாமதமாகவே நிமிர்ந்தாள்.
“ஒருமுறை எல்லோரும் கவனிங்க பா… கொரோனா தொற்று பெருகி வருவதால் அரசாங்கம் பள்ளிகளுக்கு விடுமுறை விடச்சொல்லி அரசாணை வெளியிட்டுள்ளது. அடுத்த அறிவிப்பு வரும் வரை நீங்கள் வீட்டில் தான் படிக்கணும். தேர்வு பற்றி பின்னர் அறிவிப்பதாக சொல்லி இருக்காங்க. அதனால் படிப்பதை நிறுத்தாமல் படிச்சிட்டே இருங்க” எனச்சொல்லி கண்ணன் தன் அறைக்குச் சென்றுவிட்டார்.
மாணவர்கள் அனைவருக்கும் கொண்டாட்டம்தான்… பள்ளியே கொண்டாட்டத்தில் திளைத்தது. தனது வாழ்வை மாற்றப்போகும் ஊரடங்கு என்பதை பல மாணவர்கள் அறிந்திருக்கவில்லை. அதேபோல் ராகவியும் அறிந்திருக்கவில்லை. தனது சகாக்களோடு பேசி சிரித்து விளையாடி வீடு வந்த பின்தான் பள்ளிக் கால நினைவுகளை அசை போட்டாள். கண்ணீர்த்துளிகள் கண் திரையை மறைத்திட ராகவியின் அம்மா கமலம் “என்ன ராகவி சீக்கிரம் வந்துட்ட” என்ற குரல் கேட்டு தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள். இனிமேல் விடுமுறைதான் அம்மா மறு அறிவிப்பு வரும் வரை பள்ளி கிடையாதாம். ராகவியின் அம்மா கமலத்திற்கு உள்ளூர கொஞ்சம் ஆனந்தம் தான்.
ராகவிக்கு அப்பா இல்லை. அம்மா கமலம் மட்டுமே கமலத்துக்கு ராகவி ஒரே மகள். கமலம் கடின உழைப்பாளி தனது உழைப்பு மொத்தத்தையும் ராகவியின் படிப்பிற்கு என சேர்த்து வைத்தாள். கமலத்திற்கு ஆஸ்துமா வந்த பிறகு தான் முன்பு போல் உழைக்கவும் முடியவில்லை. சேர்க்கவும் முடியவில்லை. இருப்பதைக் கொண்டு காலம் கடத்துகிறாள்.
ஆட்சியர் ஆக வேண்டும் என்ற கனவில் மிதந்த ராகவிக்கு இந்த விடுமுறை சாபம்தான். தேர்வு வைப்பார்களா மாட்டார்களா. நினைத்த மதிப்பெண் கிடைக்குமா கிடைக்காதா. என்ற குழப்பங்கள் எப்போதும் ராகவியின் மனதை துளைத்துக் கொண்டே இருக்கும்.
கொரோனா ஊரடங்கு நீண்டுகொண்டே செல்ல. காலமும் கடந்து கொண்டே சென்றது. ராகவியின் கனவு மட்டும் அதே இடத்தில் தேங்கி நின்றது. எப்போதும் திண்ணையில் அமர்ந்து கதை பேசும் பக்கத்துவீட்டு பாட்டியின் சப்தம் இன்று கிசுகிசுப்பாகக் கேட்டது ராகவியின் செவிகளுக்கு. அப்படி என்ன ரகசியமாக இருக்கும் என்று நினைத்தவாறே தனது வேலையில் மூழ்கி விட்டாள் ராகவி.
மறுநாள் காலையில் அரசு உத்தரவு தேர்வு ரத்து எனும் செய்தி சிறப்பு செய்தியாக தொலைக்காட்சியில் வெளிவந்தது. ஒருபுறம் மகிழ்ச்சியும், மறுபுறம் வருத்தமும் தொற்றிக்கொண்டது. எழுதி இருந்தால் மதிப்பெண் நிறைய கிடைத்திருக்கும் என்ற வருத்தமும் இருந்தது அவளுக்கு.
கூட படிச்ச பிள்ளைங்க எல்லாம் என நினைக்கிறாங்க அப்படிங்கறது தெரிஞ்சுக்க ராகவிக்கு ரொம்ப ஆசையா இருந்துச்சு. எப்பவும் பிள்ளைங்க கூடுற இடமான குளக்கரைக்கு தண்ணி எடுக்கிறமாதிரி இவளும் போயிட்டா. ஒவ்வொருதியா எல்லாரும் வந்துட்டாங்க. எல்லோரும் அடுத்து எப்படி படிக்க போறோம் எப்படி வாழ்க்கை அமைய போது இதை பத்தி பேசிக்கிட்டு கொஞ்சம் சிரிச்சு கொஞ்சம் விளையாடி பின் வீடு திரும்பிய ராகவிக்கு தன் வீட்டு வாசல் முன் நிறைந்து கிடைக்கும் செருப்புகளைப் பார்த்ததும் அதிர்ந்து தான் போனாள். என்னவாக இருக்கும் என்ற எண்ணத்தில் தயங்கித் தயங்கி வீட்டினுள் நுழைந்தாள் ராகவி. பட்டுச்சேலை சகிதமாய் கூட்டம் கூடி இருக்க. ஆவலாய் ஒரு பெண்மணி அருகில் வந்து “இதுதான் பொண்ணா கலையாயிருக்கு”எனச் சொல்லி விரல்களால் திருஷ்டி போட்டுக்கொண்டாள். என்ன நடக்கிறது என தெரியாமல் சுற்றும் முற்றும் பார்த்த ராகவியை வெட்கப் புன்னகையோடு ஏறிட்டான் ஒரு வழுக்கைத் தலையன். எதையும் யூகிக்கும் முன்னரே பூ வைத்து பச்சி சொச்சி சாப்பிட்டு கிளம்பிவிட்டனர் வந்த கூட்டம்.
தனது கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் “இவன் தான் உன்ன கட்டிக்க போறவன்” எனச் சொல்லி தன் வேலைகளில் மூழ்கிய கமலத்தை பார்க்க வெறுப்பாய் இருந்தது அவளுக்கு. அன்று பக்கத்து வீட்டு பாட்டியும் கமலமும் கிசுகிசுத்தது இதற்கு தானோ என்று எண்ணிக் கொண்டால் ராகவி அழுது புரண்டாலும் திருமணத்தை நடத்தியே தீருவேன் என சாதித்து விட்டாள் கமலம்.
கொரோனா ஊரடங்கில் சுற்றமும் சூழ திருமணம் நடந்தேறியது. மறுவீடு முடித்து மகள் கிளம்பும் போதுதான் கமலம் வாய் திறந்தாள். நானும் ஆஸ்துமாவில் கிடக்கிறேன். ஒருவேளை எனக்கு கொரானா வந்து நான் இறந்துவிட்டால் உன் நிலையை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. அதனால் தான் அவசர அவசரமாக கல்யாணம் பண்ணி வைத்தேன் கோபத்தை மறந்து விடு என்று கட்டியழுதாள் கமலம். கண்ணீர்க் கடல் எனபெருக மகள் தன் புகுந்த வீட்டை அடைந்தாள்.
அது புகுந்தவீடு அல்ல புதைகுழி என்று போன இரண்டாம் நாளே தெரிந்து கொண்டாள் இவள் விருப்பங்கள் மதிக்கப்படுவதில்லை. மற்றவர்களின் விருப்பங்கள் திணிக்கப்படுவதை அவள் உணர்ந்தாள். கணவனோ குடிமகன் குடித்துக்குடித்து குடல் வெந்து போனவன். கணவனிடம் கேட்டு மேற்படிப்புக்கு வழிவகை செய்யலாம் என நினைத்த ராகவிக்கு பெரும் ஏமாற்றமே. கல்யாணம் ஆன இரண்டு நாளிலேயே இவன் பெரிய குடிகாரன்னு தெரிஞ்சிக்கிட்டா. யாரைச் சொல்லி என்ன ஆகப் போகுது வாழ்ந்துதான ஆகனும்.
ஊரடங்கா இருந்தபோதும் வழக்கம்போல மதுப் பிரியர்களுக்கு மது கிடச்சுட்டு தான் இருந்துச்சு எப்போதும்போல குடல் நிரம்ப குடித்துவிட்டு வந்த கணவன் சிறிது நேரத்திலேயே ரத்த ரத்தமாய் வாந்தி எடுத்து இறந்து போனான். ராகவியின் வாழ்வு பெரிய கேள்விக்குறியாய் கமலத்தின் முன்நின்றது. அழுவதைத் தவிர கமலத்தால் என்ன செய்த முடியும். இளம் விதவையான ராகவி உடைந்து போகவில்லை. மாறாக விடுதலை கிடைத்தது போல் உணர்ந்தாள். தனது தன்னம்பிக்கை மூலதனமாக வைத்து ஆட்சியர் ஆகும் அவள் கனவை நிறைவேற்ற ஆயத்தமானாள். ஊரே தூற்றியது தூற்றும் ஊரைத் தூசி தட்டிக் கொண்டிருந்தால். கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல மட்டுமே கால நேரம் இருக்கும்.
தன் வாழ்வைத் தடம் மாற்றியது கொரோனா காலம். தான் கற்றுக்கொண்ட பாடங்களே வாழ்வின் படிக்கட்டுகள் என நம்பினாள்.
கொரோனா பல பெண் குழந்தைகளை பெண்மணி ஆகியது…
பல ஆண் குழந்தைகளின் கனவுகளை மங்கியும் மறைந்தும் போகச் செய்தது…
மேற்கண்ட கதையானது தமுஎகச சிவகாசி கிளை சார்பில் நடத்தப்பட்ட கி.ரா நினைவு சிறுகதைப் போட்டியில் சிறப்பு பரிசு பெற்ற கதையாகும்.
தமுஎகச சிவகாசி: கி.ரா நினைவு சிறுகதைப் போட்டியில் சிறப்பு பரிசு பெற்ற கதை *கிருமிலோகம்* – பா. சரவண காந்த்
ரைட்டரே…. கொஞ்சம் போன கொடுங்க…
அடி வெளுக்க போறேன் பாரு இப்ப.
பசிக்குதுல…
இரு. ஐயா வரும் போது ஏதாச்சும் எடுத்துட்டு வருவாரு…
அட போங்கய்ய… ஒரு மணி நேரமா இத தான் சொல்ரிங்க. நேத்து நம்ம மருது ஐயா இருந்தாரு. போன் போட்டு கொண்டு வர சொல்லி சாப்பிட்டோம்.
ஆமா… அவனவன் வீடல முடங்கி இருக்கான். இவருக்கு வருது.
நிசமாத்தான்யா.. இருக்கிறவனுக்கும் இல்லாதவனுக்கும் எதுவும் எங்கயும் கிடைக்கும். கிடைக்காட்டி கிடைக்க வைப்பான்யா… நீங்க போன கொடுங்க… பத்து நிமிசத்தில வந்திடும்.
தத்துவ மசுரு… சினிமா பார்த்து பூரா பேரும் வசனம் பேசுறிங்கடா.. இரு….. பார்ப்போம் என சொல்லிமுடிக்கும் போது அந்த காவல் நிலையத்தின் வாசலில் வாகனம் வந்து நின்றது,.
டேய் அய்யா வந்துட்டாரு…. மூடிட்டு இரு என சொல்லிகொண்டு தன் தொப்பியை எடுத்து அணிந்துகொண்டு வாசல் நோக்கி நகர தொடங்கினார். சென்னை மேடவாக்கம் அருகே இருக்கும் காவல்நிலையம் அது. நேரம் இரவு எட்டு தாண்டி சென்றுகொண்டிருக்கிறது. வாசலில் வந்து நின்ற ரைட்டர் யாரும் அந்த ஜீப்பில் இருந்து இறங்காததை கவனித்து படியில் இறங்கி நடக்க தொடங்கினார். அப்போது முன் கதவு திறந்து மெதுவாக ஒரு கால் மட்டும் பூட்ஸ் முழுக்க மண் தூசியாக இருக்கும்படியா தெரிந்தது. மெதுவாக இறங்க முடியாமல் அந்த உருவம் இறங்கியது.
ஏய்… என்னாச்சு… இவ்ளோ அடி என உரக்க சொல்லியபடியே நெருங்கினார். சட்டை பட்டன் இருக்கும் இடம் கிழிந்திருந்தது. உதட்டில் முகத்தில் காயங்கள். கைகளில் சிராய்ப்புகள் என இருந்தன. அப்போது தான் கவனித்தார் ஜீப்பின் சைடு பக்க கண்ணாடிகள் உடைந்திருந்தன. மெதுவா வா…. இடுப்பில் கை வைத்து மெதுவாக படியேற்றினார்.
எனக்கு ஒன்னுமில்லையா.. கொஞ்சம் அடி … நா போய் வாஷ்பன்னிட்டு வரேன்.. பின்னாடி ஆள் இருக்குது.. விலங்கு போட்டு இருக்கு… பத்திரமா உள்ள உட்கார வைங்க என சொல்லவும் ரைட்டர் அவனை பிடித்திருந்த பிடியை விட்டார். அவன் மெதுவாக படியேறி உள்ளே சென்றான்.
ஜீப்பை நெருங்கிய அவர் மெதுவாக எட்டிப்பார்த்தார். உள்ளே ஐம்பத்தி ஐந்து வயதான ஒருவரும் அவரோடு ஒரு நாற்பத்தி ஐந்து வயதான பெண்ணும் அமர்ந்திருந்தார்கள். அந்த வயதானவர் கைகளில் விலங்கு பூட்டப்பட்டிருந்தது. கதவை திறந்த ரைட்டர் ஏய் இறங்கு.. குடிச்சிருக்கியா… நீயும் இறங்குமா.. அந்த பைய எடு… உள்ளே போ என உத்தரவுகள் போட்டப்படியே இருந்தார். அந்த பெரியவர் வேட்டியும் மண்ணில் புரண்டது போல இருந்தது. சட்டை பை கிழிந்திருந்தது. அந்த பெண்ணின் ஜாக்கெட்டும் கொஞ்சம் பின்பக்கம் கிழிந்திருந்தது. ஒரு கூடையில் ஒரு வாட்டர் கேன், சில துணிகள் இருந்தன. ரைட்டர் ஜீப்பை உற்றுப்பார்த்தபடியே படியேறி உள்ளே சென்றார்.
அடிப்பட்ட அந்த போலீஸ் மப்டிக்கு மாறியிருந்தார். முழுமையாக அல்ல. அதே காக்கி பேண்ட் மேலே மட்டும் புளூகலர் சட்டை மாற்றியிருந்தார். காலில் ஷூ இல்லை. அடிபட்ட இடங்களில் டிஞ்சர் போட்டிருந்ந்தார். சில இடங்களில் எண்ணெய் போட்டிருந்தார். மெதுவாக ஒரு காலை கெந்தியபடியே நடந்து வந்து அங்கே இருந்த சேரில் அமர்ந்தார்.
என்ன ஆச்சு.. யாரு இதுக ? ரைட்டர் கேட்டார்
தெரியல சார். நம்ம ஐயா கூட சண்ட போட்டுகிட்டு இருந்தாரு. நா ரோட்டுக்கு அந்த பக்கமா இருந்தேன். ஓடிவந்து ஐயா கிட்ட இருந்து இவர இழுத்தா.. இவரு என்னை அடிக்க ஆரம்பிச்சுட்டாரு.. வண்டியில வேற கல்லெறிஞ்சு இருக்காரு போல.
குடிச்சிருக்கானா
இல்லையில்லை. வேறு ஏதோ சண்டை. ஐயா நீ கூப்டு ஸ்டேஷன் போ. நா வீட்டுக்கு போய் டிரெஸ் மாத்திட்டு வரேனு சொல்லியிருக்காரு. ஜெயாவுக்கு சொல்லியிருக்கு. வந்துட்டு இருக்காங்க.
சார்… என அந்த ஸ்டேஷன் அறையில் இருக்கும் கைதி அழைத்தான்.
என்னடா ?
பெருசு டோப்பு அடிச்சிருக்கும்னு நினைக்கிறேன். முகத்தை பாருங்க…
ரைட்டர் மெதுவாக எழுந்து சென்று…. அவரின் முகத்தை நிமிர்த்தி பார்த்தார். எந்த உணர்ச்சியும் இல்லை. அடிவாங்கிய வீக்கம் இருந்தது. அருகே அந்த பெண் இனி அழுது ஏதுமில்லை என அவரும் உணர்ச்சியற்று இருந்தார்.
டோப்பெல்லாம் இல்லை போலடா.. ஏம்மா அந்த பேக்க கொடு கையில் இருந்து புடுங்கினார். உள்ளே இருந்த துணிகள எடுத்து வெளியே போட்டார். உள்ளே சில கார்டுகள் இருந்தன. ஒரு பர்ஸ் இருந்தது. அந்த கார்டை எடுத்து பார்த்தார். கண்ணாடியை தூக்கிவிட்டு உற்றுப்பார்த்தார்.
வாத்தியாரா நீ…. உனக்கெதுக்குய்யா இந்த வேலை. ஐயா மேலயே கைய வச்சிருக்கே… இது யாரு.. வீட்லையா.. இல்லை தொடுப்பா…
அந்த பெண் தலையில் அடித்துக்கொண்டு அழுதாள். அவர் நிமிர்ந்து அந்த ரைட்டரை கோபமாய் பார்த்தார்.
அடி செருப்பாலா… கண்ண கீழே இறக்குடா … கோவ மசுரு வருதோ… இரு ஐயா வரட்டும்… இருக்கு உனக்கு என்றபடியே கார்ட் பர்ஸ் எல்லாம் எடுத்து சென்றார். டேபிளில் வைத்தார். அங்கே ஒரு அமைதி நிலவியது. போலீசை அடித்திருகிறார்கள் ஒர் தம்பதிகள். ஐயா வந்தால் மட்டுமே மேற்கொண்டு எதுவும் தெரியும். ஒரு அவஸ்தையான காத்திருப்பு அங்கே நிலவியது.
வெளியே புல்லட் சத்தம் கேட்டதும் வேகமாய் தொப்பியை மாட்டிக்கொண்டு எழுந்து நின்றார்கள். வந்தவர் நேராக ஸ்டேஷன் உள்ளே இருக்கும் அந்த சிறிய அறையை நோக்கினார். அங்கே யாருமில்லாததை உணர்ந்தவர் தன் தலையை இடதுபக்கமாய் திருப்பினார். அங்கே அந்த தம்பதிகள் அமர்ந்திருந்தார்கள்.
ஏன் இன்னும் இந்த நாய்களா உள்ளே தள்ளலையா ? ஏன் குமாரு.. என்னா என சத்தம் கொடுத்தார்.
குமாரு இப்பதான் அடிபட்ட இடத்துக்கு மருந்து போட்டு உள்ளே போனாருய்யா… லேடிஸ் இருக்காங்க.. அதான் எப்படினு தெரியல…
சேர்ந்து தள்ளு… நாய்கள.. பார்த்துக்கலாம்…காலைல… என சொல்லிவிட்டு உள்ளே சென்றார். ரைட்டர் என்ன செய்ய யோசித்துக்கொண்டிருக்கும் போதே இன்ஸ்பெக்டர் தன் அறைக்குள் சென்று அமர்ந்தார். மீண்டும் அங்கே அமைதி நிலவியது. குமார் என்ற இளம் அதிகாரி மீண்டும் உள்ளே வந்தார். நேராக அறைக்குள் சென்றார்.
சார் என்ன சார்.. திரும்ப வந்திட்டிங்க… நா பார்த்துக்கிறேன் சார்..
நடுரோட்ல போலிச அடிக்கிறான். ஜீப் கண்ணாடிய வேற உடைச்சிருக்கான். ஏதும் பேசினானா ?
இல்ல சார்… நா வந்து கொஞ்சம் ப்ரெஷ் ஆகிட்டு இப்ப தான் சார் வந்தேன். அதுக்குள்ள நீங்க வந்திட்டிங்க. நீங்க போங்க சார்.. ரைட்டர் இருக்காரு. நான் இருக்கேன். இன்னும் கொஞ்ச நேரத்தில ஜெயந்தி அக்கா வந்திடுவாங்க. நாளைக்கு காலைலே ரிப்போர்டிங் இருக்கு சார். போன தடவையே கொஞ்சம் சொதப்பிட்டோம்…
ம்ம்ம். சரி பார்த்து ஸ்டேட் மெண்ட் எழுதி வாங்கி வை. இங்க நீ எப்படினு பார்க்க தான் வந்தேன். எனக்கு முடியல… தேவடியா பய.. குறுக்குல எத்திட்டான்… அதுவும் எதிர்பார்க்காத நேரத்தில.. முச்சுக்குத்து மாதிரி இருக்கு. விட்றாத அதுகள..
சரி சார்.
என்ன ரைட்டர் பார்செல்லாம் பயங்கரமா இருக்கு.
எல்லாம் இதோ நம்மா பிரோ புல்லிங் தான்.
என்னடா இருக்கு இதுல.
புரோட்டா, இட்லி தோசை.
சரி எடுங்க ரைட்டரே சாப்பிடுவோம் என சொல்லியபடியே பார்சலை பிரித்தபடி அந்த தம்பதிகளை பார்த்தார். அவர்கள் இன்னும் தலைகுனிந்தபடியே அமர்ந்திருந்தார்கள். பிரித்த பார்சலில் இட்லி இருக்க அதனை எடுத்து அவர்களிடம் நீட்டினார்.
அந்த பெண் கையெடுத்து கும்பிட்டு இதெல்லாம் வேண்டாம்யா.. எங்கள விட்றுங்கய்யா…
என்னது விடுறதா… ஏம்மா டூட்டில இருக்கிற போலிச அடிச்சு, ஜீப்பை அடிச்சு… எவ்ளோ கிரைம் தெரியுமா? காலையில் நீதிபதி வீட்ல நிப்பாட்டுவோம் .அவர் சொல்லுவாரு.. என்னென்ன கிரைம்னு.. எத்தனை வருசம்னு…. ஒழுங்க சாப்பிடு. இதே வேற யாராச்சும் இருந்தா இந்நேரம் அடி பிரிச்சி எடுத்திருப்போம். பார்க்க பாவமா இருக்கேனு விட்டு வச்சிருக்க்கோம்.
இவரு வாத்தியாராம் என ரைட்ட கூடுதலாய் சொன்னார்.
வாத்தியா… தேவையா இதெல்லாம்… என்ன பிரச்சினை.. போலிச அடிக்கிற அளவுக்கு… நாங்களே வீட்டுக்கு போய் 4 மாசம் ஆகுது. உங்கள வீட்டுக்குள்ளையே உட்கார வைக்க நாங்க நாயா ரோட்ல நிக்கோம். படாத பாடு படுறோம். இதுல எங்கள அடிக்கிறே நீ…எங்கள எதுக்குய்யா அடிக்கிறே…. நீ…
அய்யா உங்கள் அடிக்கனும்னு எண்ணமில்லையா.. ஆனா போக போக்கிடமில்லையா ? உங்கள அடிச்சா புடிச்சு ஜெயில்ல போடுவிங்கனு தான்யா அடிச்சேன்… இவள கூப்டுகிட்டு பஸ்ஸூ ஓடாத காலத்தில எங்கய்யா போவேன்…. என இதுவரை வாயே திறக்காத அந்த மனிதர் அழுதார். ஒரு நிமிடம் யாருக்கும் எதுவும் புரியல…
ஏன் என்ன ஆச்சு ? நேத்து வரைக்கும் எங்க இருந்தீங்க ? என ரைட்டர் அவருக்கே உரிய தொனியில் கேட்டார். பெரியவர் பேசவில்லை. கண்ணீர் பெருகி அது மூக்கு வழியாகவும் வடிந்துகொண்டிருந்தது. அவர் வாழ்வில் பெரிதாக அழுதது இல்லை என்பது அவரின் முகம் தொடைக்கும் விதமே சொல்லியது. அந்த பெண்மணி பேச தொடங்கினாள்.
பையன ஆர்கிடெக் படிக்க வச்சோம். . இவரு வாலண்டிரி ரிடயர்ட்மெண்ட் ஆகி பையனுக்கு பெரிய வீடு கட்டி கொடுத்தாரு. அவனும் சம்பாதிச்சான். வசதிக்கு மீறி பணக்கார இடத்தில பெண் எடுத்தோம். நல்லாதான் இருந்தா.அவளுக்கு புள்ள பொறக்கவும்… புத்தி மாறிடுச்சு. டெய்லி சண்டை. நாங்க வீட்ட சுத்தமா வச்சிகல, டாய்லெட்ட சுத்தமா வச்சிகல, நாங்க ஹைஜினிக்கா இல்லைனு டெய்லி பிரச்சினை. ஆனா குழந்தைய எங்கட்ட விட்டுட்டு அவ வேலைக்கு போகணும்னு எங்கள விட்டு வச்சிருந்தா… இப்ப குழந்தை கொஞ்சம் வளர்ந்துடுச்சு, வொர்க் அட் ஹோம்னு வீட்லயே இருக்கிறதால எங்க தேவை இல்லாம போச்சு. நேத்து இவர… வெட்டியா உக்காந்து சாப்பிட உங்களுக்கு வலிக்கலையானு கேட்டுட்டா ? இவரும்… பதில் பேசிட்டாரு.
யாரும் என்ன பதில்னு கேட்கவே இல்லை. எது பேசினாலும் அது சரியாகவே இருந்திருக்கும் என அமைதியாக இருந்தார்கள்.
அவரே தொடர்ந்தார்… நீ உக்காந்து திங்கற வீடு என்னோட சம்பாத்தியம்… உன் புருசன கேளுனு சொல்லிட்டார். அது அவளுக்கு கோவம். வீட்டு டாகுமெண்ட எங்கட்ட விட்டெறிஞ்சு இது என் புருசன் பேர்ல தான் இருக்கு. உன் பேர்ல இல்ல… உன் பேர்ல இருக்குனு காட்டு நா வெளியே போறேன்.. உன் பேர்ல இல்லைனா நீ வெளியே போனு சொல்லிட்டா…
உம் பையன் ஒன்னும் சொல்லலையா ?
இந்த கேள்விக்கு அந்த பெரியவர் குலுங்கி குலுங்கி அழுதார். அவன நா சொல்றதுக்கு எல்லாம் தலையாட்டுற மாதிரி வளர்த்தா… . இப்பவும் தலையாட்டுறான். ஆனா அது இவளுக்கு இல்லை. கேட்டா என் புள்ளையோட எதிர்காலம் முக்கியம்னு சொல்லுறான். அதான் பொண்டாட்டி என்ன சொன்னாலும் தலையாட்டுறேனு சொல்றான்…
ஸ்டேஷன் கொஞ்சம் அமைதியாக இருந்தது. ரைட்டர் சொன்னார்.. நீ ஒரு கம்பெளய்ண்ட் கொடு… சட்டம் இப்ப இருக்கு. தூக்கி உள்ள வச்சு உனக்கு கெளரவமா வாழ மாச மாசம் கொடுக்க வைப்போம். ஆனால் அவர் தன் மனைவியை கை காட்டி பேச தொடங்கினார்.
இவ விடமாட்டா… இவளுக்கு இப்பவும் நாங்க இங்க இருக்கிறது வருத்தமா இருக்காது. அவன் அவள்ட்ட மாட்டிகிட்டானே.. சரியா சாப்பிடுவானானு தான் இருக்கும். இவளுக்கு தலையாட்டுற மாதிரியே வளர்த்தா… தொட்டில் பாசம். அவனும் தலையாட்டினான். இப்ப அவனுக்குனு ஒரு தொட்டில் வந்துடுச்சு, கூடவே கட்டில் பாசம். இப்ப அவளுக்கு தலையாட்டுறான். அப்பவே அடிச்சிகிட்டேன்.. இப்படி பொத்தி பொத்தி வளர்க்காதே… வெளியே விடு நாலு பேர் வீட்டுக்கு போகட்டும்னு… கேட்டாளா ? போனா கெட்டுப்போய்டுவானு சொன்னா… இப்பே கேடு கெட்டு நிக்கிறான். விடுங்கய்யா.. இப்படித்தான் சாகனும்னு இருக்கு. என் அப்பா ஒரு கழைகூத்தாடி. ரோட்ல தான் படுத்தேன். நா பியூசி படிக்கிற வரை. அப்புறம் காமராசாரால படிச்சு மேலுக்கு வந்தேன். எனக்கு இது புதுசு இல்லை .. இப்ப மறுபடியும் ரோட்டுக்கே வந்துட்டேன். ஆனா இவ.. என் வாத்தியார் மக..என் உழைப்ப பார்த்து அவரு கட்டிக்கொடுத்தாரு. . சொகுசா வாழ்ந்தவ.. அதான் என்ன செய்யனு தெரியல… எங்கயாச்சும் ரோட்ல படுத்து பிச்சைகாரனா ஆகிட கூடாதுன்னு தான் யோசிக்கிறேன்யா.. இப்ப கூட ஜெயில்ல போடுங்க… அங்க உழைக்க தெம்பிருக்கு… ஆனா ரோட்ல விட்றாதீங்கய்யா… எனக்கு வீடு டீச்சிங் தவிர வேற ஒன்னும் தெரியாது என கையெடுத்து கும்பிட்டு கேட்டார். அப்படியே அமர்ந்தபடியே தரையில் குனிந்தார். அவர் மனைவி… வாய் மூடி அமர்ந்திருந்தார் அழுதபடி.
முகத்தில் சில சிராய்ப்புகள். கையில் பிளாஸ்திரி என இன்ஸ்பெக்டர் நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். சரி குமாரு, உன் வீட்ல இருக்கட்டும். முன்னாடி ஒரு தடவை சிவானந்த குருகுலத்தில கேட்ருந்தாங்க.. . படிச்ச ஸ்டோர் கீப்பர் வேலைக்கு ஆள் வேணும்னு சொல்லியிருந்தாங்க. ஒரு வாரத்தில ரெடி செய்வோம். அதுவரைக்கும் உன் வீட்ல இருக்கட்டும். அதுவும் நீ கேட்டதாலே. பத்திரமா வச்சிகோ. எதுக்கும் போகும் போது ஒரு கோவிட் டெஸ்ட் ஏடுத்திரு ரெண்டு பேருக்கும். வண்டிய என்ன செய்றது ?
அய்யா நா கொடுத்திறேன்யா… எதும் கேஸ் வேண்டாம். கொஞ்சம் பார்த்து செய்ங்க.
செய்வோம். நாமளும் மனுசங்க தானே…. நோய் கிருமிய விட.. இந்த மனுசபய கிருமிகளால் தான் நமக்கு வாழ்க்கை போகுது. விடு… சரி செய்வோம். நீ கூப்டு போ.
அவர்கள் இருவரும் நடக்க முடியாமல் நடந்து வந்து அவருக்கு வணக்கம் வைத்தார்கள். பெரியவரே… விடுங்க. ஒரு வாத்தியாரு…. இப்படியெல்லாம் முடிவு எடுக்கலாமா… சரி விடுங்க.. யாரா இருந்தாலும் அந்த குழப்பத்தில இப்படி தான் ஆகும். இனி நிதானம இருங்க.. கிருமி இருக்கிற இதே காலத்தில தான் அதில இருந்து காப்பாத்த டாக்டரும் நாங்களும் இருக்கோம். எப்பவும் பிரச்சினையும் இருக்கும். தப்பிக்க வழியும் இருக்கும்.
மன்னிச்சிடுங்க…
விடுங்க பெரியவே… ரெண்டு நாள்ள சரியாகிடும். நீங்கள் போற வழியில டாக்டர்ட போய்ட்டு போங்க. குமார் பார்த்துப்பான். ஒரு வாரத்தில நீங்க கெளரவமா வாழ வழி செய்றோம். பெரியவர் கையெடுத்து கும்பிட படியே இருந்தார். அந்த பெண்மணி முகத்தில் இப்போது பெரிதாக சோகம் இல்லை.
டேய் மாப்பு.. நம்ம ஏரிகரையோரம், பாரதி தெரு இருக்கும்ல… அதுல அந்த வயலட் கலர் மாடி வீடு இருக்குல்ல… அதுல சின்ன சின்னதா சம்பவம் செய்டா…நா வந்த பிறகு கிடா வெட்டுவோம்… ஆமா அந்த கவுன்சிலர் வீட்டுக்கு அடுத்த தெரு.. டெய்லி சம்பவம் செய்யணும்..
டேய் போன கொடுடா… என்ன சொல்லிட்டு வாங்கிட்டு என்ன செய்றே… என்னா ஸ்டேசன்லையே அடுத்த திட்டமா… இதுக்கே ஒரு மாசம் உள்ளே இருக்கணும்டா..
விடுங்க சாரே… நா திருடி மாட்டுனா உனக்கு கேசு. மாட்டலனா… பெத்தவங்கள் ரோட்ல உட்டவனுக்கு ஒரு பாடம். ரெண்டும் உனக்கு ஹேப்பி தானே சாரே… அவனையெல்லாம் நாம தான் சார் வச்சு செய்யணும். கடவுளா வரும்… இந்த காலத்திலயும் அடிச்சு விரட்டி இருக்கானே…. நாதாரி..
வாய குறைடா என்றாரே தவிர.. அவருக்கும் ஏதாச்சும் செய்யனும்னு தோன்றியது. தலையாட்டியபடியே தன் வேலையை தொடங்கினார்.
மேற்கண்ட கதையானது தமுஎகச சிவகாசி கிளை சார்பில் நடத்தப்பட்ட கி.ரா நினைவு சிறுகதைப் போட்டியில் சிறப்பு பரிசு பெற்ற கதையாகும்.
தமுஎகச சிவகாசி: கி.ரா நினைவு சிறுகதைப் போட்டியில் சிறப்பு பரிசு பெற்ற கதை *மயான ஆவிகள்* – டாக்டர். இடங்கர் பாவலன்
கரும்பசை தீட்டிய பின்னிரவில் வானம் சில்வண்டுகளின் துக்கமயமான இசையை வாரி இறைத்தபடி தயங்கித் தயங்கி இருளைப் போர்த்திக் கொள்ளத் துவங்கியிருந்தது. மின்னி மின்னி மறைகின்ற நட்சத்திரங்களுக்குள் ஊடுபாவிக் கொண்டு மின்மினிப் பூச்சிகள் தங்களது இருப்பை ஓவியமாய் கவிகின்ற இரவில் வரைந்து கொண்டிருந்தன. ஒளிரும் சன்னமான அந்த அகால இரவில் இரண்டு பூனைக் கண்களின் ஒளியை சாலையெங்கும் உமிழ்ந்தபடி வாகனம் அங்கே விரைந்து கொண்டிருந்தது.
இரவு பதினொரு மணியொத்த இருளடைந்த பொழுதில் அந்தப் பாதையில் மனித நடமாட்டம் எப்போதும் இருப்பதில்லை. ஆங்காங்கே ஒளிரும் கண்ணளவு மினுமினுப்பும், மெல்ல அமுங்கி எழுகிற வெளிச்சமும், பிரசவித்துக் கொண்டிருக்கிற ஓநாயின் தேம்பி அழுகிற சத்தமும், காற்றசைப்புக்கும் மீறி கிளைகளுக்குள் அசைந்து ஒதுங்கி நோட்டமிடுகிற பெயர் தெரியா விலங்கோ, பறவையோ அந்த பாதையின் இருபக்க வனப்பின் அச்சத்தை மிகுதிபடுத்திக் காட்டும். கரும்புகையைத் தும்மியபடி ஊருகிற வண்டியின் முகப்புக் கண்ணாடியிலிருந்து அசட்டு மனிதனின் விரலிடையே புகைந்து கொண்டிருக்கிற சிகரெட் துண்டுகள் இன்னும் ஆழமாய் சிவந்து தணிந்து கொண்டிருந்தன.
சில கிலோமீட்டர்கள் வரையிலும் மணல் மேடாக, குண்டும் குழியுமாக, தனல் மேடையாக படர்ந்திருக்கும் அந்த மயான பூமியைத் தாண்டுகிற வரையிலும் வாகனத்தின் புகையும் ஓட்டுனரின் புகைப்பும் பீதியில் அதிகரித்த வண்ணமாகவே இருக்கும். மயான பூமியில் எரிந்து அடங்குகிற பிணக்குவியல்களிலிருந்து எழும் புகை அடர்த்தியாக மேலெழும்பி தோகை விரித்து மனித ஜீவன் காற்றில் கரைந்து கொள்வதைப் போல உயர்ந்து படரும். சட்.. சட்.. என தசைகள் வெடித்து பிண்டங்கள் எழுப்புகிற ஒலி இப்பிறப்பின் கடைசிப் பேச்சை பேசி முடித்துவிடுகிற ஆவேசத்துடன் வெடித்துக் கிளம்பும். அவ்வழியில் போவோர் வருவோர் இதையெல்லாம் கண்டும் காணாதவாறு வாகனக் கண்ணாடிகளை ஏற்றி அதன் மறைப்புக்குள்ளாக ஒளிந்து கொள்வர். வாகன முகப்பில் நெளிந்த கோடாய் நீளுகிற ஊதுபத்தியின் மணம் காற்றில் கரைந்து பிணத்தின் வாசனையை அங்கே துரத்திக் கொண்டிருக்கும்.
பக்தி பாடல்களைத் தாண்டியும் அடர்ந்து எழுகிற மயான பூமியின் ஒநாய்களின் அலறல் மனதை அசைத்துப் பார்ப்பவையாக இருக்கும். எரிகின்ற சதை பிண்டங்களைத் தனலினூடே பிடித்திழுத்து தின்று சுவைத்திட நாக்கொழுக சுற்றியலையும் காட்சிகளை கண்டவருக்கு காய்ச்சல் வந்து பலநாட்கள் கிடப்பதுண்டு. இம்மயான பாதையில் பிணம் எரிகின்ற சமயம் கடக்கிற ஏதாவதொரு பொருளுக்கு உயிர் வந்து பேச ஆரம்பித்துவிடும் என்கிற பேச்சே இப்பகுதியில் அதிகம். அப்படி மரம், பட்சி, வாகனங்கள் கூட உயிர் வந்துப் பேசுகிற அணத்தல் அரவம் கேட்டும், அழுகையொழு கேட்டும் பயத்தில் உறைந்து போய் இறந்தவர்களும் உண்டு. பகலோ, இரவோ இவ்வழியில் பயணிக்காமல் கண்டிப்போடு தவிர்ப்பவர்களும் இருக்கிறார்கள். ஆனாலும் ஓட்டுநர் மணிக்கு இந்த நடுநிசியில் வேறு வழியே இல்லை. இன்று இரவோடு இரவாக அத்தனை பரிசோதனைக் குப்பிகளையும் அதிகாலைக்குள் சென்னைக்கு எடுத்துச் சென்று சேர்த்தாக வேண்டும்.
வாகனத்தில் விரைகின்ற புகை, ஊதுபத்தி, சிகரெட் கூடவே அப்போது தூரத்தில் பிணமும் எரிந்து புகைந்து கொண்டிருந்தது. தூரத்திலிருந்தே மேலெழும்பிக் கொண்டிருந்த புகை, கவனித்துவிட்ட வாகன திசையை நோக்கி மெல்ல சாய்ந்து நிதானித்து பின் சட்டென்று கீழே அடங்கி சரிந்து கீழ்மட்டத்தில் கலைய ஆரம்பித்தது. அது மெல்ல மெல்ல தரையை ஒட்டியபடியே தவழ்ந்து அதன் கால்கள் தரையில் படாதவாறு நேராக வண்டியை நோக்கி மிதந்தபடி வந்து கொண்டிருந்தது. திடீரென புதர் செடிகளுக்குள் பம்மியபடி உறைந்து ஒளிந்து கொள்வதும், தரைக்கு மேலாக புல்லின்மீது பனித்துளிபோல படிந்து போவதும், சில சமயம் வேகமாக உருவெடுத்து வேட்டை நாயைப்போல பாய்ந்து துரத்தி வருவதைப் போலவும், வண்டியை அசாத்திய வேகத்தில் அது நெருங்கிக் கொண்டிருந்தது.
குறுகிய சாலை வாக்கில் சுருக்கென்று உள்நுழைந்த முயல்குட்டியைப் பார்த்து நிதானிக்கும் முன்பே மணியின் கைகள் நடுக்கமுற்று தடுமாற ஆரம்பித்தன. சாலையைக் கடந்து புதருக்குள் மனித ஜாடையில் குத்த வைத்தாற் உட்கார்ந்திருக்கிற முயலின் சிவந்த கண்களைக் காணுகிற தைரியமின்றி சற்று நிதானித்து கண்களை இறுக மூடி பிரார்த்தியபடி சாலையில் மீண்டும் வாகனத்தை அவன் முடுக்கிக் கொண்டிருந்தான். வாகனம் துணுக்குற்ற நொடிப் பொழுதில் வண்டி இடுக்கினுள் மயானப் புகை கசிந்து இருளுக்குள் புதைந்து கொண்டது. சற்று நேரத்தில் இரும்புக் கதவுகளால் தாழிடப்பட்ட பின்பகுதிக்குள் இலேசான பூனைகள் பிராண்டும் சலசலப்பு எழுந்து அடங்கியது. சாலைகள் பெயர்ந்து கற்களோடு மோதி எழும்பி பள்ளத்தில் விழுந்து பயணிக்கிற வாகனத் தடுமாற்றத்தில் ஓட்டுநர் மணியால் இவையெதையும் அனுமானிக்க முடியவில்லை.
கரிய இருள் சூழ்ந்த அறையினுள் அடுக்கப்பட்டிருந்த கண்ணாடி குப்பிகளுக்குள் புகை ஊடறுத்துச் சென்று மறைந்தது. அத்தனை புகையையும் உள்ளிழுத்துக் கொள்வதைப் போல நொடிக்குள் எல்லா பரிசோதனைக் குச்சிகளின் நீள்வாக்கிலும் அவை ஊடுறுவி ஒருமுறை பளிச்சென்று மின்னிட்டு ஒளிர்ந்து மறைந்தது. அவைகளுக்குப் பட்டென்று முழுமூச்சாய் உயிர் வெடித்து வந்துவிட்டது. சற்று நிமிடத்தில் அவை காற்றை விழுங்குகிற ஆழப் பெருமூச்சை விட்டபடி ஒவ்வொரு குச்சிகளுமே முதல் முறையாக கண்களை அகல அகல விழித்தபடி சிமிட்டிப் பார்த்தன. இருளின் அடர்த்திக்குள் என்ன நடப்பதென்று அறியாதவாறு எச்சிலை தொண்டைக் குழிக்குள் விழுங்கும் சத்தம் எழுமளவிற்கு சிறிது நேரம் மூச்சிரைத்தபடி சுற்றுமுற்றும் அவையெல்லாம் வியந்து வியந்து பார்த்துக் கொண்டன.
ஒவ்வொன்றும் அதனதன் கண்களை உருட்டி உருட்டி தலையை அண்ணாந்து பார்த்துக் கொண்டன. பஞ்சுபஞ்சாக வெடித்த பருத்திக்காய்களைப் போலிருந்த அவற்றின் தலைகளை ஒவ்வொன்றும் விசித்திரமாக தொட்டுப் பார்த்தன. ஒடிசலான தன் உடலை முன்னும் பின்னும், இப்படியும் அப்படியுமாக அசைத்துப் பார்த்துக் கொண்டன. உடனே குச்சிகளுக்குத் தன்னைப் பார்த்தே சிரிப்பு வந்தது. அடைக்கப்பட்ட குப்பிகளுக்குள் இருந்து கொண்டே ஒவ்வொன்றும் மற்றொன்றைப் பார்த்து விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டன. மீண்டும் அவை சட்டென்று மௌனமாகி எதையோ யோசித்தபடியே தங்களைப் பற்றிய தீவிரமான சிந்தனைக்குள் உடனே மூழ்கிவிட்டன. அதற்குள் ஒரு காத்திரமான நெடியொன்று அங்கே பரவிக் கொண்டிருக்க ஒவ்வோர் தலைமயிர் இடுக்கினுள்ளும் சளியின் துளி ஒட்டிக் கொண்டிருந்தது.
“அய்யே, சீ.. சளி தலையில ஒட்டிருக்கு!”
ஒவ்வொன்றும் மாறி மாறி கண்ணாடிக் குப்பியில் முகத்தைப் பார்த்துக் கொண்டு தங்கள் கைகளால் தலைகளைத் தடவித் தடவிப் பார்த்துக் கொண்டன.
கைவிரல்களோ சளியில் மாட்டிக் கொண்டு பிசுபிசுத்தன. அதன் அருவருப்பில் கண்ணாடிக் குப்பியில் தன் பஞ்சுத்தலையை இடுக்கிக் கொண்டு மேலும் கீழுமாக தேய்த்துக் கொண்டன. ஒட்டுமொத்தமாக ஆயிரக்கணக்கான பரிசோதனைக் குச்சிகளும் ஒன்றுகூடி கண்ணாடிக் குப்பியில் மோதி மோதி கரகரவென்ற எழுப்பிய சத்தம் அங்கேயொரு பட்டறையின் சத்தம் போல உரக்கக் கேட்டுக் கொண்டிருந்தது. வாகனத்தின் இருக்கைகள் பள்ளம் மேட்டிற்குத் தக்கவாறு ஏற இறங்கும்போது எழுகிற கிரீச்.. கிரீச்.. என்கிற ஸ்பிரிங் சத்தத்தோடு இந்த கரகரவென்ற சத்தமும் இணைந்து கொண்டது.
“எதுக்கு இப்படி நம்ம தலையில சளியத் துப்பி வச்சுருக்காங்க? இப்பவே எனக்குத் தெரிஞ்சாகனும். இல்லே, எனக்குக் கெட்ட கோவம் வந்திடும்.”
“அதானே யார் இப்படி செஞ்சது? நம்ம அழகான தலைமுடியில இப்படி வேணும்னேதான் யாரோ செஞ்சிருப்பாங்க”
“வேணுமன்னேனா யாரு, மனுசங்க தான் செஞ்சிருப்பாங்க!”
“அவங்களுக்கு இதே வேலையாப் போச்சு. எதுக்காக இப்படியெல்லாம் செய்யுறாங்க, நம்ம தலையில இப்படிச் சளியை துப்புற அளவுக்கு அவங்களுக்கு என்ன பித்துப் புடிச்சுப் போயிருக்கா?”
“பித்தில்லே, அவங்களுக்கு சளி பிடிச்சுருக்கு” என்று சொல்லவும் அதைப் பார்த்து எல்லா குச்சிகளும் ‘கொள்’ளென சிரித்துக் கொண்டன.
“அவங்களுக்கு சளி பிடிச்சா அதுக்காக நம்ம தலையிலே துப்புவாங்களா? கொஞ்சம்கூட மேனஸ் இல்லே”
“அதில்லே, ஏதோ காய்ச்சல் பரவுதாமே! அதுக்கு இப்படித்தான் நம்மளை மாதிரி குச்சிகளை மூக்குக்குள்ளயும் வாயுக்குள்ளயும் விட்டு சளியை எடுக்குறாங்களாம். அதை வச்சுத்தான் என்ன காய்ச்சல்னு கண்டுபிடிப்பாங்களாம்” என்று சொல்லவும் எல்லா குச்சிகளும் தங்களையும் மறந்து மூக்கையும் வாயையும் பொத்திக் கொண்டன.
“அதெல்லாம் சரி, இப்போ நம்மள வச்சு டெஸ்ட் பண்ணி என்னவாகப் போகுதாம்”
“இந்தக் காய்ச்சலை கண்டுபிடிச்சிட்டா அதுக்கான வைத்தியத்தை சீக்கிரமா ஆரம்பிச்சுடலாமாம். இலேட்டாக ஆகத்தான் இந்த காய்ச்சலோட பவுசு கூடிப்போய் ஆளையே கொன்னுப் போட்டுறுதாம். அதுக்குத்தான் நாம எல்லாம் இப்போ போய்க்கிட்டு இருக்கோம்.” என்று புத்திசாலியான குச்சி சொல்லவும் மற்ற எல்லா குச்சிகளுமே தீவிரமான யோசனையில் ஆழ்ந்துவிட்டன.
வாகனத்தின் பின்புறம் சலசலத்துக் கொண்டிருக்கிற சமயத்தில் திடீரென்று வாகன இருக்கையின் விளக்கு பளீரென்று ஒளிர்ந்து உள்ளுக்குள் எதிரொலித்து மறைந்தது. அவை எல்லாம் பயந்து சப்தநாடிகளும் அடங்கி மிரண்டபடி கண்ணாடிக் குமிழியின் ஓரமாகப் போய் ஒடுங்கிக் கொண்டன. அந்தச் சிறு சலனத்திற்குள் தாங்கள் யாருடைய பிரதிநிதிகள், தாங்கள் எங்கிருந்து வருகிறோம் என்பன உள்ளிட்ட நினைவுகளெல்லாம் பஞ்சுத்தலைக்குள் பூப்பூவாய் வெடித்து மறைந்தன. ஒவ்வொன்றும் புதுப்பார்வையுடன் அருகிலுள்ள குச்சிகளைக் கரிசனத்தோடு பார்த்து நலம் விசாரித்துக் கொண்டன.
“அச்சச்சோ, என்ன கொடுமை பாத்தீகளா!”
ஜன்னலோரமாக இருந்த குச்சி பேச ஆரம்பித்ததும் எல்லாமே, என்ன.. ? என்ன.. ? என்கிற கதை கேட்கிற தோரணையில் பஞ்சுத் தலையை குப்பியில் முட்டு வைத்துக் கொண்டு கேட்க ஆரம்பித்தன.
“ஆமா, என்னோட தலையில இருக்கிற சளியில கிருமியே இல்லே தெரியுமா? எனக்கு நல்லாவே தெரியும். ஆனா இதை கண்டுபிடிச்சு சொல்லுறதுக்குள்ள பாவம் அவளுக்கு என்ன ஆகுமோ?”
“அவளுக்கா? ஏன், அவளுக்கு என்ன ஆச்சு?” என்று ஒரே சுருதியில் சோடையாக கேட்டன.
“ஆமா, அவளுக்கு இப்போ நெற மாசம் தெரியுமா?
“அப்படியா?” என்று கோரஸ் பாடிவிட்டு ஏதாவது விபரீதம் நடந்திருக்குமோ என்கிற பதட்டத்தில் எல்லாமே அமைதியாகின.
“அவளுக்கு பிரசவ தேதி நெருங்கிடுச்சுன்னு சரியா தூங்காமக்கூட கெடந்து ரொம்பவுமே பயப்படுறா. இப்போ காய்ச்சல் பரவுறதுனால டெஸ்ட் பாத்துட்டுதான் பிரசவம் பாப்போம்னு ஆசுபத்திரில வேற ஸ்டிரிக்டா சொல்லிட்டாங்க. பாவம், திடீருன்னு வலி வந்து புள்ளையோட தலை வெளியே வர ஆரம்பிச்சுட்டா அதுக்காக டெஸ்ட் ரிப்போர்ட் வர்ற வரைக்கும் தலையப் புடிச்சு நிப்பாட்டவா முடியும்? அவளுக்கு வலி வர்றதுக்குள்ள காய்ச்சல் ஏதுமில்லேன்னு பாத்து சொல்லிரனும் கடவுளே! இல்லைன்னா, அவளோட கதி என்னாகுமோ, ஏதாகுமோ? அதை நெனைச்சாத்தான் எனக்குக் கொலையே நடுங்குது” என்று உடல் நடுங்கியபடி சொல்லி முடித்தது.
அந்தக் குச்சியின் கவலையும் பயமும் ஒருசேர எல்லா குச்சிகளுக்கும் தொற்றிக் கொள்ள அவற்றின் உடல் சிலிர்த்து அடங்கியது. பஞ்சு முடிகள் தோகையாக நீண்டு நீண்டு மீண்டும் சுருண்டு கொண்டது. விரல்களின் நடுக்கத்தோடு அவை கைகளைக் கூப்பியபடி விரைத்து நின்றன. தலையைக் குனிந்தபடி அந்த முகம் தெரியாத கர்ப்பவதிக்காக பிரார்த்தனை செய்யத் துவங்கின. கண்ணாடிக் குடுவைக்குள் பிரார்த்திக்கிற அவற்றின் முகபாவனைகள் ஒவ்வொன்றும் பாடம் செய்வித்த புத்தனைப் போல சாந்தமும் அன்புமாக அங்கே வெளிப்பட்டுக் கொண்டிருந்தது.
“ஆமா, அவுங்க சொல்லுறதும் சரிதான். அந்த தாத்தாவுக்குமே இதே நெலைமைதான் தெரியுமா?”
இன்னொரு குச்சியும் பேசத் துவங்கவே மீண்டும் எல்லா குச்சிகளும் ஆர்வத்துடன் எழுந்து நின்று தலையைச் சாய்த்து வைத்து காதுகளை குப்பியோடு சேர்த்து ஒட்டிக் கொண்டன. அதென்ன நெலைம? என்று மட்டும் ஒன்று போல கேட்டு வைத்தன.
“ஆமா, அவரு தெனந்தெனம் மூட்டை தூக்கிச் சொமப்பாறு. எளவட்டப் பசங்களுக்கு சமானமா மல்லுக்கு நின்னு மூட்டைய தூக்கிப் போட்டு அதுல தான சம்பாத்தியமே! அவருக்குப் போதாத காலம் அவரு மேலே பெரிய மூட்டை விழுந்து கையொடிஞ்சுப் போச்சு.”
“அச்சச்சோ, அவருக்குப் பெருசா ஒன்னும் அடிபடலையே?”
“அதான் கையொடிஞ்சுப் போச்சே! கையிலே பணமில்லே, கவர்மெண்டுக்குப் போனா காய்ச்சல் வார்டா மாத்திடாங்கன்னு சொல்லி வெளியே அனுப்பிட்டாங்க. அப்புறம் என்ன, ஒழைச்சா தானே சாப்பாடு! ஒழைக்கிறவனுக்கு கையி தானே மூலதனம்? சரின்னு தனியாருக்குப் போனா அங்கேயும் காய்ச்சல் டெஸ்ட் எடுத்தாத்தான் ஆபரேசன்னு சொல்லி நாலு நாளா சும்மாவே படுக்க வச்சுட்டாங்க.”
“அடப்பாவமே, எலும்பு ஒடைஞ்சு போச்சுன்னா தாத்தாவுக்கு ரொம்பவும் வலிக்குமே? இன்னும் எவ்ளோ நாலைக்கு இப்படி வலியோடயே கஷ்டப்படனும். அவங்களுக்கு கொஞ்சம்கூட ஈவு இரக்கமே இல்லையா?” ஆயிரக்கணக்கான குச்சிகளும் கண்ணீர் மல்க விம்மின.
“அதான் இல்லியே! நாலு நாளாவப் போவுது. ஆபரேசனும் நடக்காம, உயர் போற வலிய பொறுக்கவும் மாட்டாம நெத்தமும் அவரு பெட்டுல உருண்டு பெறண்டு அழுகுறத சுத்தமா பாக்கவே முடியல தெரியுமா? தெண்டத்துக்கு பெட்டு வாடகையா தெனந்நெனம் ரெண்டாயிரமா கட்டிகிட்டு கெடக்காரு. இப்போ நான் போயி முடிவு என்னானு தெரிஞ்சாதான் இந்த கொடுமையில இருந்தே அவருக்கு விமோசனம் கிடைக்கும். அதுவரைக்கும் அந்த வைராக்கிய மனுசன் ஒடிஞ்ச கையோடயும் வலியோடயும் ஆபரேசனுக்கு காத்துக்கிட்டுதான் கெடக்கனும்” என்று குழறிக் குழறி பேசி முடித்தது.
எல்லா குச்சிகளுக்கும் அந்த முகம் தெரியா கிழவரை நினைத்து பாவமாய் போய்விட்டது. அடுத்தவர்களை அண்டிப் பிழைக்கிற சில மனுச சாதிகளைவிட இவர் என்ன தவறிழைத்துவிட்டதாய் இப்படியொரு தண்டனையென எல்லாவற்றிற்கும் கடவுளிடம் மேல் கோபம் கோபமாய் வந்தது. “சாமியாம் சாமி, பொல்லாத சாமி!” என்று எல்லா குச்சிகளுமே முகத்தைச் சுளித்துக் கொண்டு ஒருபக்கமாய் முகத்தைத் திருப்பிக் கொண்டன. ஆத்திரம் தீர மட்டும் கடவுளை திட்டிக் கொண்டும் அவருக்கு எப்படியாவது நல்லவழி கிட்ட வேண்டிக் கொண்டும் அவை உள்ளுக்குள்ளேயே குமைந்து கொண்டிருந்தன.
அந்தத் திசையின் கடைக்கோடியில் குச்சி ஒன்று மூலையிலே உட்கார்ந்து கொண்டு விம்மி விம்மி அழுதபடி இருந்தது. அழுதழுது தனது தலைமுடிப் பஞ்சை எடுத்து கண்களில் ஒட்டிக் கொண்டது. உடனே எல்லா குச்சிகளுமே பரபரப்பாகி என்னாச்சு..! என்னாச்சு..! என்பதாக பதறிப் போய் ஒன்றாய் கூக்குரலிட்டன.
அழுது கொண்டே, “அவங்க அம்மா செத்துப் போயிட்டாங்க.. ஹூம்.. ம்ம்.. ஹூம்..” என்று இன்னும் அதிகமாக அழ ஆரம்பித்தது. முகம் தெரியா யாரோ ஒருவர் நாம் அழுவதைக் கவனிக்கிறாரென்றால் இன்னும் உணர்ச்சி பீறிட்டு அதிகமாகத் தானே செய்யும்! எல்லா குச்சிகளும் சத்தம் எங்கே வெளியே கேட்டுவிடுமோ என்பதாக உஷ்! உஷ்! என்று உதட்டில் விரல் வைத்து சமாதானப்படுத்தின. உடனே அந்தக் குச்சியும் நிதானித்துக் கொண்டு மெல்ல பேச ஆரம்பித்தது.
“அவரு வெளியூருல வேலை பாக்குறாரு. அவுங்க அம்மா காய்ச்சல் வந்து நேத்தே செத்துப் போச்சு, தெரியுமா? பாவம், அதனால வீட்டுக்குகூட அவங்களை கொண்டு போக விடாம பக்கத்து சுடுகாட்டுலயே வச்சுப் பொதச்சுட்டாங்க. இனி அந்த மகனால கடைசியா பெத்த அம்மா முகத்தைக்கூட பாக்க முடியாமப் போச்சு பாத்தீங்களா”
குழறிக் குழறி பேசிய அதன் பேச்சைக் கேட்டு எல்லா குச்சிகளும் பஞ்சை வாயில் திணித்துக் கொண்டு தாங்கள் அழுவது தெரியாமல் மறைத்துக் கொண்டன. மெல்ல மெல்ல அந்தப் பஞ்சும் உப்புக்கரிக்க ஆரம்பித்தது.
“முகாமுல இருக்கிற அவருக்கு காய்ச்சல் இருக்கான்னு பாக்குறதுக்குத்தான் இப்போ நானும் போயிகிட்டு இருக்கேன். பாவம், டெஸ்ட் ரிசல்ட் வந்தா மட்டும் அவரோட அம்மா மொகத்தைப் போயி திரும்பவும் பாக்கவா முடியும்? இப்போ வரைக்கும் சாப்பிடாம, சரியா தூங்காம, விடிய விடிய முகாமுல அழுதுகிட்டுக் கெடக்காரு. பாருங்க, அவருக்கு டெஸ்ட் எடுக்கும்போது அழுத கண்ணீரும் சேர்ந்து சளியோட ஒட்டிக்கிட்டு கெடக்கு” என்று சொல்லவும் ஒவ்வொன்றும் தன் தலையிலும் இப்படி கண்ணீர் ஏதும் தெரிகிறதா என்று மூக்கை மேல் நோக்கி விடைத்துக் கொண்டு உச்சி முகர்ந்து பார்த்துக் கொண்டன.
வண்டி மயான பூமியைக் கடக்கிற மின்னல் வேகத்தில் பறந்து கொண்டிருந்தன. காலை விடிவதற்குள் பரிசோதனைக் குப்பிகளை சேர்த்துவிட்டுத் திரும்பிவிட வேண்டும் என்கிற எண்ணம் மட்டுமே மணியின் மனதில் ஆழப் பதிந்திருந்தது. துருத்திய வயிறு தெரிய சாப்பிட்டு நாளாகிப் போன ஞாபகம் அவனது கண்களுக்குள் தூசியாக உறுத்திக் கொண்டிருந்தது. வயிற்றுப் பிழைப்பிற்காக உயிரைப் பணயம் வைத்து காய்ச்சல், சளி மாதிரிகளைக் கொண்டு சென்றாலும் வழியில் செக்கிங் என்று கல்லாகட்டும் அதிகாரிகளைக் கண்டு அவனுக்கு எரிச்சல் எரிச்சலாக வந்தது. சோடாபுட்டிக் கண்ணாடிவரை நீண்டிருந்த மாஸ்கிற்குள் அவனது மூச்சுக்காற்று வெளியே செல்ல முடியாமல் திக்குமுக்காடிக் கொண்டிருந்தது.
ஒவ்வொரு குச்சிகளும் தத்தம் கதைகளைச் சொல்லி அழுவதும் ஆறுதல் தேடிக் கொள்வதுமாக சளசளவென பேசிக் கொண்டே இருந்தன. அருகருகே இருக்கும் குச்சிகள் மாறிமாறி தங்களுக்குள் சமாதானம் சொல்லிக் கொண்டன. ஒரே கண்ணீரும், விசாரிப்பும், ஆறுதல் மொழியும், ஒப்பாரியுமாக கொஞ்ச நேரத்தில் அந்த இடமே மரண வீட்டின் இருப்பைப் போல மாறிக் கொண்டது.
இவ்வளவு ஆர்பாட்டங்களுக்கு நடுவிலும் ஒரு குச்சிமட்டும் மௌனமாக கண்ணாடிக் குப்பியின் வழியே வெளியே வெறித்தபடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. ஏன், அதற்கென்று எந்தக் கவலையோ, அதற்கான ஆறுதலோ தேவைப்படவில்லையா? என எல்லா குச்சிகளும் மலங்க மலங்க ஒருமுறை திரும்பிப் பார்த்துவிட்டு மீண்டும் தங்களுக்குள் குசுகுசுத்துக் கொண்டன.
“எதாச்சும் மனசுவிட்டு பேசிக் கிட்டா பாரம் கொறையுமே! எல்லாருமே அவங்கவங்க கதையைச் சொல்லி ஆறுதல் தேடிக்குறாங்க, பாரு. மனசுக்குள்ளயே எதையும் வச்சு பாரமாக்கிடக் கூடாது. அதைக் கரைச்சு கண்ணீரா வெளிய கொட்டிடனுமப்பா. அதான் நாங்களெல்லாம் இருக்கோம்ல. ஏதாச்சும் வாயத் தெறந்து பேசப்பா” என்று அருகிலிருந்த வயதான தோற்றமுடயை குச்சி ஒன்று கெஞ்சியபடி கேட்டுக் கொண்டது. அவ்வளவு நேரம் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த அந்தக் குச்சி திரும்பியதும் கண்களிலிருந்து ஒருதுளிக் கண்ணீர் வழிந்து விழுவதற்கு இமையின் நுனியில் தொடுக்கிக் கொண்டிருந்தது.
அதைப் பார்த்துவிட்டு “அட, என்னப்பா இவன் இவ்வளவு பாரத்தையும் மனசுக்குள்ளே போட்டு ஒத்தப் பொட்டு கண்ணீர்கூட வராம அடைச்சு வச்சுருக்கானே! அப்படி என்னப்பா பொல்லாத வைராக்கியமா அழுகைய அடக்கி வச்சுகிட்டு. மனுசனுக்கு மட்டும் அழத் தெரியலைனா கொழந்தையா பொறக்குறப்பவே செத்துப் போயிருப்பானப்பா! என்னான்னு சொல்லப்பா நாங்க இருக்கோம்” என்று ஒவ்வொன்றும் பதறிப் போய் மாறி மாறி ஆறுதல் சொல்லிக் கொண்டன. அப்படியும்கூட அசராமல் விழ இருந்த ஒருதுளிக் கண்ணீரையும் பஞ்சைக் கொண்டு துடைத்துவிட்டு சற்று நிமிர்ந்து பார்த்தது. அவற்றின் கண்கள் சிவந்து சிவந்து தலையிலிருக்கும் பஞ்சு பற்றிக் கொள்ளப் போகிற நெருப்பு மாதிரியாக கொதித்துக் கொண்டிருந்தது.
“அவரு..! எப்பேர்ப்பட்ட போராளி தெரியுமா? ஆனா..! இன்னும் கொஞ்ச நாளுல செத்துப் போயிடுவாரு” என்ற உயிரற்ற வார்த்தைகளோடு மெதுவாக உச்சரித்தாலும்கூட அந்த மௌனமான தருணத்தில் எல்லா குச்சிகளின் காதுகளிலும் அவை கனீரென்று விழுந்தன.
எல்லாரும் அவரவர் கவலைகளைச் சொல்லி ஆறுதல் தேடிக் கொண்டிருந்த சமயத்தில் ஒருவரின் இறப்பைப் பற்றிய செய்தி அதிர்ச்சியூட்டவே எல்லாமும் ஒரே மூச்சாக அமைதியாகிவிட்டன. தங்களுக்குள் ஏதோ இனப்புரியா ஒரு நடுக்கம் படருவதை அவை உணர ஆரம்பித்தன. ஒருவருக்கும் பேச நாவ எழவில்லை. தட்டுத்தடுமாறி வார்த்தைகள் தவறிதான் குறிப்பாக அவற்றால் பேச முடிந்தது.
“ஏ…ன், ஏன்.. அவருக்கு என்ன ஆச்சு?”
“இவ்வளவு நேரமா எல்லாரும் சேர்ந்து பொலம்பிக்கிட்டு இருந்தீங்களே, அவங்களுக்காக போராடுனவருதான் அவரு. இப்படி மாசமா இருக்குறவங்க, அடிபட்டு வந்தவங்களுக்கு சரியான சமயத்துல சிகிச்சை கிடைக்காதவங்க, கேன்சர் சிகிச்சைக்கு வெளியூருக்கு போக முடியாம வீட்டிலே முடங்கிக் கிடக்குறவங்க, அவசரத்துக்கு ஆபரேசன் தேதி கெடைக்காம அலையுறவங்கன்னு இவங்க எல்லாத்துக்குமே நேரம் காலம் பாக்காம எல்லோரோட பிரச்சனையும் தன் சொந்த பிரச்சனையா தலையில தூக்கிச் சுமந்துகிட்டு ரோட்டுக்கு வந்து போராடுன மனுசன்தான் இவரு.”
“தெனந்தெனம் சரியான சாப்பாடு எதும் இல்லாம, தூக்கம் இல்லாம, தன்னைச் சுத்தி நடக்குற கொடுமை எதையும் சகிக்சுக்கவும் முடியாம, நொடிஞ்சு போன அந்த மனுசன் இப்போ நோய் வந்து மூச்சைப் புடிச்சிக்கிட்டு படுக்கையில கெடக்காரு. தன்னை மட்டும் காப்பாத்திக்கிட்டு வீட்டுக்குள்ளே முடங்கிக் கிடந்தா பிழைச்சுக்கிடலாம்னு பாழாப்போன அந்த மனுசனுக்குத் தெரியலயே. போராட்டம் போராட்டம்னு போய் நோயோட வந்து படுத்த மனுசன் இப்போவோ அப்பவோன்னு கெடக்காரு. சமூகத்துக்காக போராடுற ஒரு மனுசன் எல்லா பிரச்சனையையும் தன்னோட வலியா மாத்திக்கிட்டா அதை எந்த வைத்தியனாலயும் சரி பண்ணிட முடியாதுன்னு அந்த மனுசனுக்குத் தெரியாமப் போச்சே?”
“வசதியாக இருக்கிறவங்களுக்கு தனியார் ஆசுபத்திரில சிகிச்சை கெடைச்சிடுது. வக்கத்துப் போன ஏழை சனங்களுக்குன்னு இங்க என்ன இருக்கு? பணக்காரனுக்குச் சாவு வந்தாக்கூட மிசினை மாட்டி போற உசுர இழுத்துக் கொண்டாந்து காப்பாத்திக் கொடுத்துடறான். இங்கே ஒன்னுமில்லாதவன் செத்துப் போனா பந்தியில சாப்பிடுறவன் முதுகுப்புப் பின்னாடி வரிசையில நிக்கிறது மாதிரி இன்னொருத்தன் படுக்கைக்காக நோய் வந்து காத்துக் கெடக்கான். இதானய்யா இங்கே நெலைம?”
“நாம செத்தா பெத்த புள்ளைங்க கண்ணுலகூட கடைசியா மொகத்த பாக்கவிடாம பொதைச்சுடுறாங்க. அதே அரசியல்வாதிங்க செத்தா அரசு மரியாதையோட அடங்கம் பண்ணிடுறாங்க. பாவப்பட்ட சனங்களுக்கு ஒன்னு, வசதி வாய்ப்புள்ளவங்களுக்கு ஒன்னுன்னு இருக்குறது தானய்யா இங்க சனநாயகம். நமக்குத் தெரிஞ்சதெல்லாம் ஒப்பாரி வைக்குறதும், அழுது தீர்த்துட்டு அடுத்த வேலையை பாக்க கெளம்பிறதும் தானே. ஆனா அந்த மனுசன் உங்களை மாதிரி அழுதுகிட்டு, பொலம்பிக்கிட்டு சாகக் கெடக்கலை. கடைசி வரை நியாயத்துக்காக அலைஞ்சு திரிஞ்சு அதனாலயே சாகப் போறவரு. முகம் தெரியாத ஊரு சனங்களுக்காக சாவப் போரவருக்கு அப்படி சொந்தபந்தமா இருந்து முகம் தெரியா மனுசங்க கண்ணீர் வடிச்சாத்தான அந்த மனுசனோட ஆன்மா சாந்தியடையும். அதுக்காகத்தான், அவருக்காகத்தான் இன்னும் இந்தக் கண்ணீரை அடக்கி வச்சுருக்கேன். ஆனா அவரோட கதி இப்போ என்னான்னு தெரியுமா?”
எல்லா குச்சிகளுக்கும் தொண்டை அடைத்துக் கொண்டது. ஆறுதலுக்கு எச்சிலைக்கூட விழுங்க முடியவில்லை. தங்களை எதுவும் கேட்காதீர்கள் என்பதைப் போல எல்லா குச்சிகளும் தலையைக் குனிந்து கொண்டன. நிறைய குச்சிகள் வாய்விட்டு அழுதேவிட்டன. சில குச்சிகள் அழுதழுது பாவம் போல தூங்கிவிட்டன. அது சுற்றும் முற்றும் இறுகிய முகத்தோடு ஒருமுறை பார்த்துக் கொண்டது.
“அவரை இப்போ சுடுகாட்டுல பொதைக்கனும்னாகூட காய்ச்சல்ல அவரு சாகலைன்னு எழுதி சர்ட்டிபிகேட் வாங்கி வந்தாதான்யா முடியும். இன்னிக்கோ நாளைக்கோ அவரு உறுதியா செத்துப் போயிடுவாறு. ஆனா நான் போய் ரிசல்ட் வர்றதுக்குள்ள ஒருவேளை அவர் செத்துப் போயிட்டா அந்த சர்ட்டிபிகேட் இல்லாம அவரை சுடுகாட்டுல அடக்கம் பண்ணவிட மாட்டாங்க. வாழ்க்கை முழுசுமா போராடிப் போராடியே தெனம் தெனம் செத்தவரு, இப்போ செத்துப் போயும் எல்லாருக்காகவும் போராடப் போறாரு. அந்த மனுசனோட நெலைமையப் பாத்தீங்களா?” என்று சொல்லி முடித்ததுமே அடக்க முடியாமல் எல்லா குச்சிகளுமே ‘ஓ’ வென்று கதறியழுக ஆரம்பித்தன. மயான சங்கைப் போல அழறித் துடித்தபடி அதன் சத்தம் எல்லோரையும் நடுநடுங்க வைத்தது.
கண்ணீர்.. கண்ணீர்.. அங்கிருந்த ஒருவராலும் பேச முடிந்த ஒரே மொழியாக அழுதுத் தீர்த்தபடியிருந்தன. அவை அழுதழுது அதனது கண்ணாடிக் குப்பிகள் நிறைந்து கொண்டிருந்தன. கண்ணாடிக்குள் நிறைந்த அந்த சூடான கண்ணீரும் புகையாகி முழுவதுமே காற்றில் கரைந்து கொண்டிருந்தன. அந்த புகைக்குள் அழுதழுதே தன் ஆத்மாவின் கடைசி ஆசைகளை தீர்த்துக் கொண்ட ஆவிகள் தன்னையே கரைத்துக் கொண்டு அவ்வாறே முக்தியடைந்து மேலே சென்று கொண்டிருந்தன.
ஒவ்வொரு குப்பியிலும் அழுது மயக்கம் போட்ட குச்சிகளெல்லாம் தனக்குள்ளான ஆவியினை இழந்து பொத் பொத்தென்று குப்பிக்குள் சரிந்து விழத் துவங்கின. சற்று நேரத்தில் அங்கியிருந்த ஆயிரக்கணக்கான குப்பிகளிலிருந்த கண்ணீரெல்லாம் கரைந்து ஆவியாக அவற்றினது ஜீவன் காற்றிலே கரைந்துவிட்டிருந்தன. குச்சிகளெல்லாம் மயங்கி மயங்கி விழுந்து எப்போதும் போல குப்பியினுள் சரிந்தபடி கிடந்தன. அப்போது எதிரே தூரத்தில் சிவப்பு வெளிச்சத்தில் டீ கடையொன்றின் விளம்பரப் பலகை தெரியவே பசிக்காக வண்டி ஓரமாக ஒதுங்கி நின்றது.
வாகனத்தை நிறுத்திவிட்டு பரிசோதனைக் குப்பிகள் ஏதும் மோசமான சாலையின் குதிப்பினால் உடைந்து போயிருக்குமோ என்கிற பதபதப்பில் பின்னால் ஓடி வந்து பெட்டிகளை ஓட்டுநர் மணி திறந்து பார்த்தான். அடுக்கப்பட்ட பெட்டிகளில் சில குப்பிகள் மட்டும் ஒன்றின் மேல் ஒன்றாக சரிந்து கிடக்கவே அவற்றையெல்லாம் சரிசெய்துவிட்டு டீ குடிப்பதற்காக கடையை நோக்கி அவன் வேகவேகமாக நடையைப் போட்டான். அங்கே கண்ணாடிக் குமிழிக்குள் எல்லா குச்சிகளின் மீதிலிருந்தும் ஒரு பௌத்த முகம் மௌனமாக மெல்ல மறைந்து கொண்டிருந்தது.
மேற்கண்ட கதையானது தமுஎகச சிவகாசி கிளை சார்பில் நடத்தப்பட்ட கி.ரா நினைவு சிறுகதைப் போட்டியில் சிறப்பு பரிசு பெற்ற கதையாகும்.
தமுஎகச சிவகாசி: கி.ரா நினைவு சிறுகதைப் போட்டியில் 3வது பரிசு பெற்ற கதை *கடல் தாண்டிய பறவைகள்* – ஜனனி அன்பரசு
‘மிருதுவான அந்த பிஞ்சு விரல்கள் என்மீது படர்ந்தன. இப்போதுதான் விரிந்த ரோஜா மொட்டுக்கள் போல இருந்தன அந்த ஸ்பரிசம்’. அந்த நொடி பொழுதில் திடுக்கென விழித்தபோதுதான் அது கனவு என்று புரிந்துகொண்டான் அறிவு. பனி படர்ந்த மரங்களின் இடையே பாய்ந்து வந்த சூரிய ஒளி கீற்று கண்களை கூச செய்தது. மெதுவாக எழுந்தான். கழிவறைக்கு சென்றான்.
பல் துலக்கிக்கொண்டு இருக்கையில் தன்னுடைய செல்போன் சிணுங்கியது. தன் மனைவி அஞ்சலிதான் கூப்பிடுகிறாள் என்று தெரிந்ததும் அந்த அழைப்பை துண்டித்தான். மறுபடியும் செல்போன் சிணுங்க ஆரம்பித்தது. இந்த முறை அழைப்பை ஏற்றான்,
“என்ன அஞ்சலி அவசரம்? நான் இப்போதுதான் எந்திரிச்சேன். எதுக்கு கூப்பிட்ட?”
“ஆமாம் அவசரம்தான். எனக்கு பனிக்குடம் உடஞ்சுருச்சு. நான் ஹாஸ்பிடல்ல இருக்கேன். அத சொல்லத்தான் கூப்பிட்டேன்”
சில மணித்துளிகள் அமைதியாக இருந்துவிட்டு “என்ன சொல்ற? அதான் இன்னும் 15 நாட்கள் இருக்கே?” என்றான்.
“என்னனு தெரியலங்க. மதியம் தூங்கி எழுந்ததுமே பனிக்குடம் உடஞ்சுருச்சு. உடனே கிளம்பி ஹாஸ்பிடல் வந்துட்டோம். இன்னும் டாக்டர் வரவில்லை. இப்போது வரும் நேரம்தான்” என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போதே பின்னாடி சில சத்தங்கள் கேட்டன. “இதோ டாக்டர் செக் அப் பண்ண வந்துட்டாங்க. நான் பாத்துட்டு கூப்பிடுறேன்” என்று சொல்லிவிட்டு அஞ்சலி அழைப்பை துண்டித்தாள்.
அறிவுக்கு என்ன செய்ய என்று தெரியவில்லை. மனதில் ஒரு படபடப்பு வர ஆரம்பித்தது. கடைசியாக அஞ்சலியை நியூயார்க் ஏர்போர்டில் விட்டு வந்தது நினைவு வந்தது.
“நீ கண்டிப்பா போய்தான் ஆகணுமா?”
“இதென்னங்க கேள்வி? எல்லாம் ரெடி ஆகியாச்சு, இன்னும் அரை மணி நேரத்துல ஃப்லைட் ஏறனும். ஏன் இப்போ கேக்குறீங்க?”
“நீ இப்படி கர்ப்பமா இருக்கப்போ உனைய தனியா விட எனக்கு மனசு வரல”
“எனக்கு புரியுதுங்க. ஆனா என்ன பண்றது? இது நமக்கு முதல் குழந்தை. இங்க குழந்தை பெத்துக்குட்டா நம்மால எப்படி தனியா குழந்தை பாத்துக்க முடியும்? நம்ம அம்மா, அப்பாவும் வர முடியாதுன்னு சொல்லிட்டாங்க. எல்லாம் கொஞ்ச நாள்தான். குழந்தை பிறக்கிற நேரத்துல லீவ் போட்டுட்டு நீங்க இந்தியா வந்துடுங்க. அப்புறம் எனைய கூடிட்டு போய்டுங்க.”
இருவரும் சமாதானம் செய்து கொண்டாலும் மனம் கனமாகவே இருந்தது. பிரியும் முன்னர் வார்த்தைகள் அற்று போய், கட்டிக்கொண்டு நின்றபோது கண்களில் நீர் வழிந்தது. துக்கத்தை அடைக்க முடியாமல் தொண்டையில் சுளீர் என்று நெருப்பு பட்டது போல வலி. அறிவு கொஞ்சம் சுதாரித்து கொண்டு, “சரி அஞ்சலி நேரம் ஆகிடுச்சு, கிளம்பு. ஃப்லைட் மாறுறப்ப இடம் பத்திரமா பாத்து மாறு. சிரிச்சிட்டே போ” பொய்யான புன்னகையை உதட்டில் ஏந்திக்கொண்டு பிரிந்த அந்த நிமிடம் அறிவின் கண்களில் நிற்கிறது.
மொபைலை எடுத்து தேதியை பார்த்தான். மே 22. மே 20ஆம் தேதி அவன் இந்தியாவிற்கு செல்ல டிக்கெட் போட்டு வைத்திருந்தான். ஆனால் கொரோனா வந்த பின் பயணங்கள் அனைத்தும் ஸ்தம்பித்துவிட்டது. அடுத்த தெருவிர்க்கே போக முடியாத நேரத்தில் அவன் எவ்வாறு கடல் தாண்டி பயணம் செய்ய முடியும். அறிவு அமெரிக்காவில் நியூயோர்க் நகரிலுள்ள பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளராக வேலை செய்கிறான். நுண்ணுயிரிகளை பற்றி ஆராய்ச்சி செய்யும் அவனுக்கு இந்த கொரோன வைரஸ் பற்றியும் பெருந்தொற்றின் கொடுமையை நன்கு அறிந்திருந்தது. இந்த எதிர்பாராத சிக்கலை எண்ணி அவன் வருத்தப்படாத நாட்களே இல்லை.
அஞ்சலியிடமிருந்து மறுபடியும் அழைப்பு வந்தது.
“டாக்டர் என்ன சொன்னாங்க?”
“பனிக்குடம் உடைந்தாலும், கற்பவாயில் இன்னும் திறக்கலையாம். வலியை தூண்டி விட ட்ரிப்ஸ் மூலம் மருந்து ஏத்த போறாங்களாம். மெதுவா நடந்து கொடுக்க சொல்லிருக்காங்க”
“காலைலதானே கொரோன டெஸ்ட் கொடுத்திருக்க. இன்னும் ரிசல்ட் வந்துருக்காதே?”
“ஆமா ங்க. இன்னும் வரல. ஆனா என்ன பண்றது. இது அவசரம் ஆச்சே”
“ஓ அப்போ நயிட்குள்ள குழந்தை பிறந்துடுமா? ஜாலி ஜாலி”
“அடப்பாவி. உனக்கு ஜாலிதான். நான்தான வலி தாங்க போறேன்”
“இப்போ வலிக்க ஆரம்பிச்சுடுச்சா அஞ்சலி?”
“இல்லைங்க சுத்தமா வலி எதுவும் இல்லை. அதுக்குத்தான் நடக்க சொல்றாங்க. மருந்தும் போட போறாங்க. அப்படியும் வலி வரலைனா சிசேரியன் பண்ணிடுவங்களோன்னு பயமா இருக்குங்க.”
“பயப்படாத அஞ்சலி. அதெல்லாம் தேவைப்படாது. குழந்தை உன்னை கஷ்டப்படுத்தாம நல்லபடியா பொறந்துடும்”
“நர்ஸ் வந்துட்டாங்க. நான் அப்பறம் கூப்பிடுறேங்க”
என்னதான் மனைவியிடம் தைரியம் சொன்னாலும் அறிவு மனதில் பயம் கலந்த படபடப்பு இருந்தது. ஒரு கோப்பையில் காபியும் சூடான ரொட்டி துண்டுகளையும் செய்து, மேசைமீது அமர்ந்தான். ஆனால் அவனுக்கு சாப்பிட விருப்பம் இல்லை. மொபைலை எடுத்து அழைப்பு ஏதும் வந்திருக்கிறதா என்று பார்த்தான். எதுவும் வரவில்லை. அவன் பெற்றோர்களுக்கு பேசலாம் என்று அழைத்தான்.
“என்ன தம்பி அஞ்சலியை ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணிட்டாங்க போல”
“ஆமா அப்பா. உங்களுக்கு எப்படி தெரியும்?”
“அஞ்சலியோட அப்பா கூப்பிட்டாங்க”
“ஓ சரி சரி”
“இந்தா உங்க அம்மாகிட்ட பேசு. அவதான் தவியா தவிக்கிறா”
அறிவின் அம்மா பேச ஆரம்பித்தார்.
“தம்பி அஞ்சலிக்கு வலி வந்துடுச்சாம்ல. ஹாஸ்பிடல் கூட்டிட்டு போயிடங்களாம்”
“இல்ல மா. இன்னும் வலி வரல. பனிக்குடம் உடஞ்சுருக்கு. மருந்து போட்டு வலி வர வைக்கபோரங்களாம்.”
“அப்படியா? அப்போ நாங்க உடனே கெளம்புறோம். பேரகுழந்தைய பாக்கணும். ஈ-பாஸ் ஏதோ போடனுமாம். உடனே போட்டுவிடு”
“உடனே கிடைக்குமானு தெரியல. ஆஸ்பத்திரியிலயும் உள்ள விடுவங்களான்னு தெரியல. அதுவும் இல்லாம இந்த நேரத்துல நீங்க ஒரு ஊர்ல இருந்து இன்னொரு ஊருக்கு போய் குழந்தையை பாக்குறது அவளோ பாதுகாப்பானது இல்லை. இருங்க மா. பாக்கலாம்”
“என்னடா இப்படி சொல்ற? நான் அந்த கிருமியை தூக்கிட்டு போய் என் பேரகுழந்தைக்கு குடுத்துடுவேனா? நான் அப்படி செய்வானா?”
“நீங்க அப்படி செய்ய மாட்டீங்க. ஆனால் நிலைமை அப்படி இருக்கு”
“என்னவோ போ. நான் உன் குழந்தைய பாக்க போகல. விடு”
அறிவுக்கு கோவம் உச்சிக்கு போனது.
“அம்மா நான் என்ன வேணும்னு சொல்றேனா? அவ அங்க பாவம் தனியா வலில இருக்கா. அவக்கூட என்னால இருக்க முடியலயே, குழந்தையை நாம பாக்க முடியாதேனு நினச்சு நானே தவியா தவிச்சு போய் இருக்கேன். நீங்க என்னடான்னா இப்படி பேசறீங்க?”
இருவரும் சில நொடிகள் மௌனமாக இருந்தனர்.
“சரி விடு தம்பி. நீ மனச போட்டு கொளப்பிக்காத. நல்லபடியா குழந்தை பொறக்கும். நீயும் சீக்கிரம் வந்துடுவ.”
எதுவும் பதில் பேசாமல் அழைப்பை துண்டித்தான். பேசினால் அழுதுவிடுவோமா என்ற பயம். என்னதான் பெண் ஒரு குழந்தையை பெற்று எடுத்தாலும் ஆண் அந்த குழந்தையை மனதில் சுமந்து கொண்டே இருக்கிறான். அதிலும் அறிவு மிகுந்த அன்புள்ளம் கொண்டவன். தன் மனைவி கருவுற்ற நேரத்தில் அவளை ஒரு குழந்தை போல தாங்கி வந்தான். முதல் மூன்று மாதங்கள் அஞ்சலி மசக்கையாக இருந்தபோது, சமையல் வேலைகள் வீட்டு வேலைகள் என்று அனைத்தையும் அவனே செய்துவந்தான். கருவுற்ற நாட்களில் பெண்களுக்கு தன் தாய் நினைவு அடிக்கடி வரும் என்று கூறுவார்கள். ஆனால் அப்படி ஒரு நினைப்பு வராதவாறு அறிவு அவளை பார்த்துக்கொண்டான்.
மதிய நேரமாகிவிட்டது. அஞ்சலியிடமிருந்து அழைப்பு வந்தது.
“என்ன பண்ற அஞ்சலி? மருந்து போட்டங்களா?”
“ஆமாங்க. மருந்து போட்டு ஒரு மணி நேரம் ஆச்சு. வலி எதுவும் வரல”
“அப்படியா? எதுவும் சாப்பிட்டயா?”
“இல்லைங்க ஏதும் சாப்பிட கூடாதாம். ஜூஸ் மட்டும் குடிச்சேன். பசி எதுவும் இல்ல.”
“அடுத்து டாக்டர் வந்தாங்களா?”
“இல்லை. நர்ஸ் மட்டும் செக் பன்னாங்க. எந்த முன்னேற்றமும் இல்லைனு சொன்னாங்க”
“சரி எதுவும் நினைக்காத. கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு. ஏதாவது சந்தோசமா இருக்குர மாறி பாட்டு கேளு”
“அதுக்குத்தான் உங்களுக்கு கூப்பிட்டேன்”
“பாருடா.. என்ன லவ்ஸா?”
“ஆமா லவ் தான். இருக்க கூடாதா?”
“இருக்கலாம். இருக்கலாம். இந்த மாறி நேரத்துல லவ்ஸ் பண்ணுனா, ஹார்மோன்ஸ் ஒர்க் ஆகி, ஈஸியா குழந்தை பொறக்குமாம்.”
“டேய் நான் ஆஸ்பத்திரில இருக்கேன் டா” என்று வெக்கம் வந்து சிரித்தாள்.
“ஹாஹா. சரி சரி. உன்னோட அம்மா கூட இல்லையா? டா போட்டு பேசுரயே?”
“அவங்க பாவம். படுத்ததும் தூங்கிட்டாங்க.ம்ம்ம்”
“என்ன ஆச்சு அஞ்சலி? குரல் மாறுது?”
“லேசா வலிக்க ஆரம்பிச்சுடுச்சுங்க”
“வெரி குட் அஞ்சலி”
“என்னது வெரி குட் டா?”
“ஆமா வலி வந்துட்டா மருந்து உன் உடம்புல வேலை செய்யுது, அதை உன் உடம்பு ஏத்துக்குதுன்னு அர்த்தம். சந்தோஷம்தானே?”
“அட எல்லாத்தையும் நல்லதாவே பாக்க உங்களால மட்டும்தான் முடியும்ங்க. சரி டாக்டர் வர சத்தம் கேக்குது. நான் அப்பறமா கூப்பிடுறேன்”
“சரி என்னனாலும் கூப்பிடு. நான் உனக்காக காத்துட்டு இருப்பேன்”
அறிவு அமெரிக்காவில் இருந்தாலும் அவன் மனம் முழுவதும் இந்தியாவில் இருந்தது. ‘நான் என் மனைவியுடன் இருந்திருக்க வேண்டும். அவளின் கைகளை கோர்த்துக்கொண்டு உனக்காக நான் இருக்கிறேன் என்று கூறியிருக்க வேண்டும். அவள் வலியில் அவதிப்படும் நேரம் முதுகை தடவியிருக்க வேண்டும். அவள் தலையை வருடி அவளை ஆசுவாசப்படுத்தி இருக்க வேண்டும். குழந்தை பிறந்தவுடன் அந்த பிஞ்சு விரலை தொட வேண்டும். இரு கைகளிலும் அள்ளி எடுத்து கொஞ்ச வேண்டும். இந்த நொடி என் வாழ்நாளில் முக்கியமான ஒரு தருணம். ஆனால் நான் இந்த அறையில் தனியாக அமர்ந்திருக்கிறேன். இந்த கடும்பனி காலம்கூட என் மனதில் உள்ள அனலை குளிர்விக்க முடியவில்லை. இந்த உலகமே சூனியம் ஆனதாக உணர்கிறேன். இந்த கொரோன என் வாழ்க்கைவின் அற்புதமான தருணத்தை பரித்துவிட்டது. பணம், புகழ் என எது போயிருந்தாலும் திரும்பி பெற முடிந்திருக்கும். ஆனால் இந்த தருணத்தை தவற விட்டதை எண்ணி என் வாழ்நாள் முழுதும் உள்ளம் குமுறும். எனக்கு கொடுத்து வைத்தது அவ்வளவுதான் போல’ என்று தன் மனதிற்குள் ஆதங்கத்தை கொட்டி கொண்டு இருந்தான்.
சில மணி நேரங்கள் கடந்தன, அஞ்சலியிடம் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை. செல்போனை கண் சிமிட்டாமல் பார்த்துக்கொண்டு இருந்தான். யாருக்கும் அழைக்கலாம் என்று பார்த்தால், இந்தியாவில் அது இரவு நேரம். ஒருவேளை உறங்கிக்கொண்டு இருப்பவர்களை எழுப்பிவிட்டால் கஷ்டமாக இருக்கும் என்று காத்திருந்தான். என்ன செய்வது என்ன நினைப்பது என்றுகூட தெரியாமல் ஏதுமற்ற நிலையில் அமர்ந்திருந்தான். அவ்வப்போது காலை கண்ட கனவு மட்டும் கண்ணில் வந்து சென்றது.
மாலை பொழுது ஆகியது. சரி இந்தியாவில் விடிய தொடங்கி இருக்கும். இப்போது யாருக்காவது அழைத்து கேட்டு பார்க்கலாம் என்று அலைபேசியை எடுத்தான். அஞ்சலியுடைய அப்பாவிடமிருந்து அழைப்பு வந்தது. பயம் படபடப்பு என்னவாக இருக்கும் என்று நினைத்துக்கொண்டே அழைப்பை ஏற்றான்.
“மாப்பிள்ள, பேத்தி பொறந்துருக்கா. சுகப்பிரசவம். அம்மாவும் குழந்தையும் நல்லா இருக்காங்க. கரெக்டா வெள்ளிக்கிழமை காலைல பொறந்துருக்கா. மகாலட்சுமி வீட்டுக்கு வந்துருக்கு”
அறிவின் கண்களில் ஆனந்த கண்ணீர் வழிந்தன.
“ரொம்ப சந்தோசம் மாமா. குழந்தை போட்டோ அனுப்புறீங்களா?”
“இதோ அனுப்புறேன் மாப்பிள்ள” என்று அழைப்பை துண்டித்தார்.
வாட்சப்பில் வந்த அந்த புகைப்படத்தை பார்த்தான். பிஞ்சு விரல்கள், மிருதுவான தோள், நல்ல சிவப்பு நிறம், அழகான முகம் என்று கண்களில் ஒத்தி கொள்ளும் அழகிய குழந்தை. இப்போதும் கண்களில் கண்ணீர் வந்தது. அது ஆனந்த கண்ணீர் இல்லை. என் குழந்தையை என் கையால் ஏந்த முடியவில்லையே என்ற துக்கம்.
சில நேரத்திற்கு பின் அஞ்சலியிடமிருந்து அழைப்பு வந்தது.
“அஞ்சலி நீ ரொம்ப தைரியசாலி. உன்ன நினைச்சா ரொம்ப பெருமையா இருக்கு. வலியை தாங்கி குழந்தைய பெத்துக்குட்ட. அதுவும் நான் உன் அருகில் இல்லாதபோதும், மனம் தளராம இருந்துட்ட. நிஜமாவே எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு”
“எனக்கும்தான் சந்தோசமா இருக்குங்க. பாப்பா போட்டோ பாத்தீங்களா?”
“பாத்தேனே. அவ அப்படியே என்ன மாதிரி”
“அடப்பாவி. என்ன மாதிரி இல்லையா?”
“உன்ன மாதிரி கொஞ்சம். என்ன மாதிரி நிறைய இருக்கா”
“போங்க”
“சரி சரி நீ ரெஸ்ட் எடு. நல்லா சாப்பிடு. பாப்பா தூங்குறப்ப தூங்கு. உன் உடம்ப பாத்துக்கோ. பாப்பாவ பாத்துக்கோ. பாப்பா முழிக்குறப்ப வீடியோ கால் பண்ணு”
“ஏங்க”
“என்ன அஞ்சலி?”
“நீங்க எப்போ வருவீங்க?”
“தெரியல. ஃப்லைட் விட்டதும் வந்துடுவேன்”
“சீக்கிரம் வாங்க. உங்களுக்காக நானும் பாப்பாவும் காத்துட்டு இருக்கோம்” அஞ்சலிக்கு தெரியாமலே அஞ்சலியின் கண்களில் நீர் வழிந்தன.
“அழுகாத அஞ்சலி. இப்படியெல்லாம் நடக்கும்னு நாம நினைச்சுக்கூட பாக்கல. இந்த கொரோன வரும், ஊரடங்கு வரும்னு யாருக்கு தெரியும். நாம எதுவும் தப்பு பண்ணல. விடு. நான் சீக்கிரமே வந்துடுறேன். வந்து உன்னையும் பாப்பாவையும் கூட்டிட்டு போறேன்”
இந்த கடல்தாண்டிய பறவைகள் பிரிந்திருப்பது விதியா? அல்லது காலத்தின் கட்டாயமா? பதில் கூறுவார் யாரோ!
மேற்கண்ட கதையானது தமுஎகச சிவகாசி கிளை சார்பில் நடத்தப்பட்ட கி.ரா நினைவு சிறுகதைப் போட்டியில் மூன்றாம் பரிசு பெற்ற கதையாகும்.
தமுஎகச சிவகாசி: கி.ரா நினைவு சிறுகதைப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற கதை *குறிஞ்சி பூ* – ஸ்மைலி செய்யது
ஏனோ, அந்த குதிரைக்கு பசிக்கவில்லை, புல்லை கொடுத்தும், திங்காமல் எங்கோ வேடிக்கை பார்த்து கொண்டிருந்தது.
ஏன் ? சாப்ட மாட்ற, இந்தா என்று மேற்கொண்டு புல்லை கொடுத்தான் ராபர்ட். அது யாரையோ சொல்வது போல், எங்கோ பார்த்தது.
சரி உனக்கு பசிக்கும் போது சாப்டு என்று சொல்லிவிட்டு வீட்டுக்குள் போனான்.
அதிக ஒலியுடன் டிவி பார்த்துக் கொண்டிருந்த மகளிடம் எப்ப பார்த்தாலும் இதே தானா, என்று ரிமோட்டை வாங்கி செய்தி சேனல் வைத்தான்.
கொரோனா பரவல் எண்ணிக்கை இன்னும் குறையாததால் மேலும் இரண்டு வாரங்களுக்கு சுற்றுலா பயணிகள் கொடைக்கானல் வர தடை என்று காதில் விழுந்தது.
அமைதியாக எழுந்து போய் வாசலில் அமர்ந்தான். ஏற்கனவே மூன்று மாதமாக வீட்டில் சும்மா தான் இருக்கிறான். ஏப்ரல், மே சீசன் சமயம் இப்படி கொரோனா வந்து வருமானத்தை சிதைத்து விட்டது. ஒரு நாள் கூட சும்மா இருக்க மாட்டான் சுறுசுறுப்பாக ஓடிகொண்டிருப்பான். காலம் இப்படி உட்கார வைத்துவிட்டது.
குதிரையை கையில் பிடித்து கொண்டு, டவுனுக்குள் சென்று வருகிறேன் என்று சொல்லி வெளியே கிளம்பினான்.
லேக் ரோடு பேரமைதியாக இருந்தது. எப்போதும் பயணிகள் அதிகமாக இருக்கும் இடம், ஏரிக்குள் படகு சவாரி, வெளியே சைக்கிள் சவாரி, சூடாக சுண்டல், மாங்காய், காளி பிளவர், காஃபி, பிரட் ஆம்லெட், சாக்லேட், என கடைகள் கல கலவென இருக்கும் சாலை இன்று இப்படி.
கண்ணுக்கு எட்டிய தூரம் வரை ஒரு ஈ, காக்கா கூட இல்லை. பெய்யும் பனி கண்கொள்ளா காட்சியாக இருந்தது. அமைதியான ஏரியின் அழகு ரசிக்க ஆள் இன்றி தவிக்கிறது.
குதிரையின் பிடியை விட்டு விட்டான். பழக்கப்பட்ட இடம் என்பதால் அது மெல்ல நடக்க ஆரம்பித்தது. வழக்கமாக குதிரைகள் வரிசையாக நிற்கும் இடத்தில் அமர்ந்து கொண்டான். எதையோ வேடிக்கை பார்த்து கொண்டே இருந்தவன் வீசும் காற்றுக்கு அப்படியே கண்ணை மூடினான். பழைய நினைவுகள் எல்லாம் ஒவ்வொன்றாக நினைவில் வர ஆரம்பித்தது.
குதிரை சவாரி அப்பா பார்த்து கொண்டிருந்த வேலை, திடீரென அப்பா இறந்து போன பிறகு இவன் பார்த்து கொள்ள வேண்டிய நிர்பந்தம் வந்தது. குதிரையும் அவனோடு பிரியமாக ஒட்டி கொண்டது.
ஒரு நாள் சவாரிக்காக காத்திருக்கும் போது, ஒரு பெண் அருகில் வந்து சவாரி போனும் என்றாள்,
வாங்க போலாம், ஏறுங்க
குதிரை மேல் ஏறினாள், தரையிலிருந்து கொஞ்சம் உயரம் என்பதால் அவனுக்கு புது அனுபமாக இருந்தது. குதிரையின் முதுகை மெதுவாக தடவினாள். பிடறி முடியை விரலுக்குள் பிடித்து சுருட்டினாள், குதிரை ஒன்னும் செய்யவில்லை.
ஏனோ, அவளை பார்த்ததும் ராபர்ட்டுக்கு ஒரு புத்துணர்ச்சி, போலாமா என்றபடி அவளை பார்த்தான்.
அவள் தலை அசைத்ததும் குதிரை மெதுவாக ஓட ஆரம்பித்தது.
சாலையை ஒரு பக்கமும் அவளை ஒரு பக்கமும் பார்த்து கொண்டே வந்தான்.
இவன் பார்ப்பதை அவள் பார்த்து விட்டாள், என்ன அடிக்கடி என்னையே பாக்குறீங்க என்றாள், பனிக்கு வாயில் இருந்து புகை வந்தது.
இல்ல, சும்மா தான் பார்த்தேன், உங்க பேரு என்ன ?
லிடியா.
எந்த ஊரு நீங்க ?
இங்க தான் கீழ “பண்ணைக்காடு”
அப்படியா, இந்த ஊரு தானா.
ஆமா !!
பின்னால் வந்த ஒரு குதிரை இவர்களை முந்தி சென்றது.
என்ன உங்க குதிர இவ்ளோ மெதுவா போகுது.
தெரியலையே, ஒரு வேள அதுக்கு உங்கள பிரிய மனசு இல்ல போல, உங்க கூட ரொம்ப நேரம் இருக்கணும்னு நெனைக்குது.
நிஜமாவே குதிரைக்கு மனசு இல்லையா ? இல்ல உங்களுக்கு மனசு இல்லையா ?? சிரித்து கொண்டே கேட்டாள்.
சிரிப்பை பதிலாக தந்து விட்டு நடக்க ஆரம்பித்தான்.
எல்லை வந்து விட்டது. மெதுவாக இறங்கினாள், காசை கையில் கொடுத்தாள்,
வேண்டாம், இருக்கட்டும்
எதுக்கு வேணாம்னு சொல்றிங்க, பிடிங்க என்று கோவமாய் கொடுத்தாள், வாங்கி கொண்டான்.
அடிக்கடி மேல வாங்க,
எதுக்கு ??
இல்ல, குதிரைக்கு உங்கள ரொம்ப பிடிச்சு போச்சு, அதான்.
ஓ !! அப்படியா, குதிரைக்கு மட்டும் தான் பிடிச்சிருக்கா, சரி அதுக்காக வரேன், சொல்லிவிட்டு மறைந்து விட்டாள்.
அப்பறம் அடிக்கடி சவாரி வர, நட்பாகி, காதலாகி, கல்யாணமாகி காதலுக்கு அடையாளமாக குழந்தையும் வந்து விட்டது.
குதிரை அருகில் வந்து கணைக்க மெல்ல கண்ணை திறந்தான். மனசு கொஞ்சம் அமைதியாக இருந்தது. மனதில் இருந்த குழப்பம், வறுமை, பயம் எல்லாம் கொஞ்சம் தள்ளி போனது.
விறு விறுவென வீட்டிற்க்கு நடந்தான்.
லிடியாவிடம், வேகமா கிளம்பு நாம வெளிய போறோம்.
எங்க போக ? வெளிய என்ன இருக்கு ? எல்லாம் பூட்டி கிடக்கு..
ஏதும் கேள்வி கேக்காத, சொல்றத செய்.
மகளை கையில் பிடித்து கொண்டு, அவளையும் கூட்டிக்கொண்டு, குதிரை நின்ற இடத்திற்கு வந்தான்.
ம்ம், ஏறுங்க ரெண்டு பேரும், மகளை தூக்கி குதிரையில் உட்கார வைத்து விட்டு, அவளையும் ஏத்தி விட்டு மெதுவாக நடக்க ஆரம்பித்தான்.
மகளுக்கு அளவில்லா ஆனந்தம், சிரித்து கொண்டே வேடிக்கை பார்த்தாள்.
அவன் லிடியாவை பார்த்து சிரித்தான், முதல் தடவை இதே குதிரையில் பார்த்த பரவசம் அவளுக்கும், மெல்ல சிரித்தாள். குளிர் நடுங்க வைத்தது.
ஆளில்லாத அமைதியான சொர்க்கம் போன்ற இடத்தில் மனைவி மகளுடன் ஒரு உலா, அவனுக்கு அதிக இன்பத்தை கொடுத்தது. வயதை குறைத்தது. கவலை எல்லாம் காணாமல் போனது, அவளை பார்த்து கொண்டே வந்தான்.
கல்யாணத்தப்போ இப்படி குதிரைல வந்தது. அப்பறம் இப்ப தான் 12 வருஷம் கழிச்சு குறிஞ்சி பூ பூத்த மாதிரி, இந்த கொரோனா வந்து இப்படி போக வச்சிருக்கு என்றாள், குதிரை வெட்கத்தில் நெளிந்தது.
மேற்கண்ட கதையானது தமுஎகச சிவகாசி கிளை சார்பில் நடத்தப்பட்ட கி.ரா நினைவு சிறுகதைப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற கதையாகும்.