பாங்கைத் தமிழனின் கவிதைகள்

பாங்கைத் தமிழனின் கவிதைகள்




புவியின் வித்து
*******************
புல்லும் பேசும்
பூவும் பேசும்
கல்லும் பேசும்
கனியும் பேசும்!

புலியும் பேசும்
பூனையும் பேசும்
தத்துவ வித்திவன்
தரணியின் முதல்வன்!

அன்பால் உலகை
ஆண்டிடும் அரசன்
அவனிக்கு இவனோர்
அவதார புருஷன்!

அரண்மனை சுகத்தை
அனுபவித்திருந்தால்
அகிலம் ஆசையில்
அழிந்தே இருக்கும்!

இல்லற சுகத்தை
இனிதெனக் கருதா
உன்னதக் கோமான்
உலகின் முதல்வன்!

நானிலம் உய்ய
நல்வழி காட்ட
தன்னிலை துறந்த
தரணியின் தாயிவன்!

தேடிய ஞானம்
திரைகடல் பெரிது
அமுதத்தை விடவும்
அகிலத்தில் உயர்வு!

காற்றின் நிகரிவன்
கருத்துகள் எல்லாம்
சுவாசித்தால் தெரியும்
சுகமிது என்று!

புத்தன் புனிதன்
புலமிதைக் காப்போன்
புறப்படுத் தோழா
அவன்வழி செல்வோம்!

பூமியின் சொத்து
*********************
இன்று மட்டுமல்ல
என்றும்
புதிது புதிதாய்
பிறப்பவன் நீ!

அக்கினிக் குஞ்சுகளை
அடைகாக்கும்
தீக் கங்கு நீ!

அன்று
அக்ரஹாரத்தில்
தவறிப் பிறந்தவன் நீ!

இன்று
ஆணிலும் பிறக்கின்றாய்
பெண்ணிலும் பிறக்கின்றாய்!

சமயங்கள், சாதிகள்
மொழிகள், நாடுகளென்று
எங்கும்…..
பிறந்து கொண்டேயிருக்கின்றாய்!

ஒரு பெண்ணால்
உணர முடியாத
உள் வலிகளை
உன்னால் மட்டுமே
உணர முடிந்தது!

உன்னை
ஆண் சாதிக்குள்
எப்படி அடக்கி வைக்க முடியும்?

அடங்காத
ஆண்மையை, பெண்மைக்குக் கொடுத்து
அழகு பார்த்தவன் நீ!

பாரதி….
நீ
உருவத்தால் ஆண்;
உணர்வுகளால் பெண்!
சரஸ்வதி பெண்!

அறிவைக்கொடு
ஆஸ்தியைக்கொடு
என
இறைவனிடம்
பிச்சையெடுப்பவரின்
முகத்தில்…
துப்பியவன் நீ!

சுடர்மிகும் அறிவுடன்
படைத்ததற்காக
ஆதி பராசக்தியை
அர்ச்சனை செய்தவன் நீ!

எமனை
அருகில் அழைத்து
எட்டி உதைப்பேனென
கர்ஜித்த
இறுமாப்பு உன்னுடைய
ஆண்மை!

சோற்றுக்கு மட்டும்
சோதனையில்லாமல்
இருந்திருந்தால்….
பரங்கியரையும்….
பார்ப்பனீயத்தையும்
நீ ஒருவனே
பந்தாடியிருப்பாய்!

உன்னை…
பாட்டுக்கொருப் புலவனென
பட்டிக்குள் அடைத்து விட்டார்கள்!

நிலத்தில்
யார்க்கும் அஞ்சாத…
அடங்காத….
அடலேறே…
நீ…
நிலத்தில் உதிக்கும்
சூரியன்!

அதனால்தான்
அந்த
ஆதவனைப்போல
தினம் தினம்
பிறந்து கொண்டேயிருக்கின்றாய்!
இன்றும்…

– பாங்கைத் தமிழனின்

பிரசவத்தில் மரணித்த ஒட்டியாணம்! (சிறுகதை) – மரு. உடலியங்கியல் பாலா

பிரசவத்தில் மரணித்த ஒட்டியாணம்! (சிறுகதை) – மரு. உடலியங்கியல் பாலா




நீதி தவறாத மதுரை மன்னனிடம், “முத்தழகி” எனும் அந்த
அழகிய பெண், தொடுத்த
விசித்திர வழக்கால் .. அன்று பார்வையாளர் கூட்டம் அலை மோதியது!
அரசன் கொலுமண்டபத்தில், நுழைந்ததும் ,மக்களின் சலசலப்பு அடங்கி பரிபூரண நிசப்தம் நிலவியது.
வழக்கமான அரசவை நடைமுறைகளுக்கு பின்…
அரசன் வழக்கு தொடுத்த
“முத்தழகி” மற்றும்,
குற்றம் சாட்டப்பட்ட அவள் தோழி “மலர்விழி” ஆகிய இருவரையும் அழைத்து..
“அம்மா முத்தழகி! உங்களது வழக்கு என்ன ?” என வாஞ்சையுடன் வினவ,.

அவளோ “மன்னர் மன்னா!
உயிருக்கு உயிராக பழகிய என் பக்கத்துவீட்டு தோழி மலர்விழி, அவள் உறவினர் திருமணத்துக்கு செல்லும் பொருட்டு,
என் வைர ஒட்டியாணத்தை , இரவல் வாங்கி சென்றாள்.
அடுத்தநாள் கல்யாண பலகார மூட்டையுடன், அதை திருப்பி கொடுப்பாள்.. என நான் ஆவலுடன் காத்திருந்தேன்!
ஆனால் இரண்டு மூன்று நாட்கள் ஆகியும் திருப்பி கொடுக்கவில்லை. நான் பயந்துபோய்..
அவளிடம் சென்று அதை திருப்பி கேட்டபோது அவள் என்ன சொன்னாள் தெரியுமா? மன்னா!” என்று கூறி விசும்பி விசும்பி அழ தொடங்கினாள். மன்னன் அவளை ஆசுவாசப்படுத்தும் பொருட்டு “அழாதே பெண்ணே! நீ சற்று அமைதியடை! “ஜிகர்தண்டா” வேண்டுமா? “பருத்திப்பால்” வேண்டுமா?”என்று அன்புடன் , (தன் முன்னோர் கண்ணகியின் வழக்கில் தவறு செய்து மாட்டிக்கொண்டது நெஞ்சில் பயமுறுத்தி, நினைவுறுத்த) அவளை சமாதானம் செய்ய முற்பட்டான்.

அவளும் இதுதான் நல்ல வாய்ப்பு என்று, “ஜிகர்தண்டாவே கொடுங்கள் மன்னா! சிறிது பனிக்கூழும் அதில் சேர்த்து கொடுக்க சொல்லுங்கள் அரசே!”என கூறி தன்னை அமைதி படுத்திகொண்டு…
அரண்மனை “ஸ்பெஷல்
ஜிகர்கர்தண்டாவை”
வாங்கி குடித்து, அதன் அலாதி சுவையால் ஈர்க்கப்பட்டு, இன்னும் ஒரு ரவுண்டு ஜிகர்தண்டா கேட்டு வாங்கி குடித்து… மெல்ல
பேசத்துவங்கினாள்!

“மன்னா! நான் இரவல் கொடுத்த ஒட்டியாணம்,
“பிரசவத்தின்போது இறந்து போச்சு!” என இவள் அபாண்டமாக பொய் கூறுகிறாள்! அது என் அப்பா எனக்கு ஆசையாக அணிவித்து அழகு பார்த்து, சீதனமாய் எனக்கு அளித்தது!”என கூறி, மேலும் ஜிகர்தண்டா அருந்தும் ஆசையுடன் ஒப்பாரி வைக்க, மேலும் இரண்டு ரவுண்டு ஜிகர்தண்டா கிடைக்க பெற்றாள்!

மன்னன் மெல்ல குற்றம்சாட்டப்பட்ட “மலர்விழி” பக்கம் திரும்பி, சற்றே கம்பீரமான குரலில் அவளை பார்த்து “முத்தழகி கூறுவது உண்மையா?? பொய் சொல்லாமல்,
நடந்த உண்மையை மட்டும் சொல்” என்று அதட்ட..
அவள் “ஆம்! மன்னா! அவள் கூறுவது உண்மைதான்! அவள் ஒட்டியாணம் பிரசவத்தில் இறந்துபோனது முற்றிலும் உண்மைதான்!
நாங்கள் அதை காப்பாற்ற எவ்வளவு முயற்சி எடுத்தும், பலனளிக்காது போனதால், தாயும் சேயும் இறந்து விட்டனர் மன்னா!!” என கூறி… இவளும் தன் பங்குக்கு,
ஜிகர்தண்டா கிடைக்கும் நப்பாசையில் ஒப்பாரி வைக்க தொடங்க…
மன்னன் கோபம் கொப்பளிக்க “என்ன சொல்கிறாய்! ஒட்டியாணம் கர்ப்பம் அடையுமா? பிள்ளை பேற்றில் இறந்து விடுமா? என்ன உளருகிராய்! உண்மையை சொல்!” என கடுமையாக கோபத்தில் கர்ஜித்தான்!.

மெல்ல அவள் நடந்த முழுக்கதையையும் விவரிக்கிறாள்,”மன்னா! நடந்தது அனைத்தையும் கூறி விடுகிறேன்.,. தாங்கள் பொறுமையாக கேட்டு நல்ல தீர்ப்பை வழங்குங்கள்!…
மூன்று மாதங்களுக்கு முன்..
எங்கள் வீட்டின், பெரிய வெள்ளி தாம்பூல தட்டு ஒன்று
திருடு போய்விட்டது!
எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை. அதை முத்துதான் திருடினாள் என்று,
அதை அவள் விற்று காசு பெற்ற பொற்கொல்லன் மூலம் அறிந்துகொண்டேன்! நேரடியாக இதைப்பற்றி கேட்டு, என் சிநேகிதியை அவமானப்படுத்த எனக்கு விருப்பமில்லை! என்னைவிட வசதி படைத்த அவளுக்கு பாடம் புகட்ட ஒரு உபாயம் செய்தேன்!

அவளிடம் ஒருநாள் “என் செப்புக்குடம் ஓட்டை விழுந்து விட்டது, உன்னிடம் உபரியாக ஒரு குடம் இருந்தால் இரவல் கொடேன் “என்று நான் கேட்க, அவளும் உதவினாள். ஒரிரு நாட்கள் கழத்து, அவளிடம் சென்று “முத்து! ஒரு ஆச்சர்யம் பாரேன், நேற்றிரவு உன் குடம் அழகிய குட்டிக்குடம் ஒன்றை குட்டி போட்டது! இந்தா உன் குடமும் அதன் பளபளக்கும் குட்டியும் ” என்று நான் கொடுக்க, பேராசைக்காரியான அவள் ….”குடம்கூட குட்டி போடுமா? என்பதை பற்றி யோசிக்காமல், தனக்கு ஒரு பொருள் இலவசமாக கிடைக்கும் நப்பாசையில்,
அப்படியே இரண்டு பொருளையும் சந்தோஷமாக வாங்கிக்கொண்டாள்.

இப்படியே,
நானும் ,
பித்தளை அண்டா,
வெள்ளி குடம்,
வெள்ளி கிண்ணி, சந்தன பேலா,
என,சிலபல பொருட்களை இரவல் வாங்கி, அவை
குட்டிபோட்டதாக கூறி,
ஒவ்வோரு, பாத்திரத்துடனும் அது குட்டிபோட்டதாக, அதனுடன் ஒரு சிறு பாத்திரத்தையும் சேர்த்து திருப்பி கொடுக்க…
அவள் என் செய்கையால்
சந்தோஷித்தாள்!!

அவளுக்கு பாடம் புகட்ட இதுதான் சரியான நேரம் என எண்ணி,
விலை உயர்ந்த அவள் ஒட்டியாணத்தை இரவல் கேட்டேன்! அவளும், ஒரு விலை உயர்ந்த குட்டி ஒட்டியாணம் கிடைக்கும் என ஆசைப்பட்டு அதை கொடுத்தாள்! நான் ஒரிரு நாட்கள் கழித்து,
“அது பிரசவததின்போது இறந்து, மறைந்து விட்டது!” என்று கூறி அவளுக்கு சரியான பாடம் புகட்டினேன் மன்னா!
அவள் ஒட்டியாணம், என்னிடம்தான் உள்ளது! அதை உங்களிடம் திருப்பி கொடுத்து விடுகிறேன் அரசே!” என முழு சம்பவத்தையும் கூறி முடித்தாள்!

மன்னன் “முத்தழகி!
நீ பணக்காரியாய் இருந்தும், உன் அன்பு தோழியை ஏமாற்றி, அவள் வெள்ளித்தட்டை திருடியது…
முதலாவது பெரிய குற்றம்!
அடுத்து, உன் பேராசையால், “குட்டிபோட்டது” என அவள் கொடுத்த சாமான்களை, பேராசையால்
பிறர் பொருளுக்கு ஆசைப்பட்டு வாங்கி கொண்டது, இரண்டாவது பெரிய குற்றம்!
நியாயமாக பார்த்தால ,உன்னை சிறையில் அடைக்க வேண்டும்!
நீ பெண் என்பதாலும், இது உன் முதல் குற்றம் என்பதாலும்.. உன்னை மன்னிக்கிறேன்!

மலர்மிழி!
உன் வெள்ளித்தட்டை
திருடியதற்கு, அபராதமாக அந்த ஒட்டியாணத்தை நீயே வைத்துக்கொள்ளலாம்!”
என்று தீர்ப்பு கூற,
இப்போது மலருக்கு
“டபுள் ஸ்பெஷல் ஜிகர்தண்டா”
வழங்கப்பட்டது!!

Dr.K.Balasubramanian.MD
11,ARUNAGIRI ST,
VALASARAVAKKAM
CHENNAI..600087
MOBILE..9382876968.

கவிதைச் சந்நதம் தொடர் 26 – நா.வே. அருள்

கவிதைச் சந்நதம் தொடர் 26 – நா.வே. அருள்




கவிதை – வில்லியம்ஸ்
காதல் ஒரு குப்பை வண்டி
******************************

காதலின் எதிரிடையே கவிதையாகியிருக்கிறது.  ஒரு வகையில் இது காதலின் எதிர் கவிதை. உருகி உருகி எழுதும் காதல் கவிதை நரம்பை முறுக்கி முறுக்கி மீட்டும் வீணை இசை போன்றதுதான். ஒரு கட்டத்தில் அதிக முறுக்கத்தில் வீணையின் நரம்பு அறுந்துவிடுவதுபோல அதீத உணர்ச்சியில் காதல் பகடியாகிவிடுகிறது. வயசையே பகடியாக்கிவிடுகிறது வாழ்க்கை. வயதானபின் காதல் நினைவுகளே சிரித்துக் கடந்துவிடுகிற சில்லறைத்தனமாகத் தெரிகின்றன. காதலன் சொல்லுகிறான்; காதலி எள்ளுகிறாள். மும்தாஜுக்காகக் கட்டிய காதல் தாஜ்மகால் முதுமையில் ஷாஜகானுக்கு மூட்டுவலியாகிறது.  காதல் நிறைவேறவில்லை. காதலிக்காகக் கட்டிய பழைய தாஜ்மகாலை கவிஞன் பகடியின் மூலம் காதலியிடம் காட்டுகிறான்.  வேறொரு ஷாஜகானுடன் வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட மும்தாஜுக்குத் தாஜ்மகால் ஒரு மேட்டரே இல்லை. பழைய காதலி காதலனையும் தாஜ்மகாலையும் தட்டி விடுகிறாள். பொல பொலவெனச் சரிந்து விழுகிறது பொற்கோட்டை.

இந்தக் கவிதை வில்லியம்ஸின் வித்தகம். பக்கம் பக்கமாய்க் கிழியும் காதல் புத்தகத்தின் ஒவ்வொரு தாளும் நம் கண்முன்னே பகடியின் காற்றில் படபடத்துப் பறக்கின்றது!

தண்ணீரைக் கொடுத்து அமுதம் என்று சொன்னது ஞாபகத்தில் தள்ளாடுகிறது. என்ன செய்வது?  இந்த வயதில் எச்சில் ஊற மறுக்கிறது.

காதலும் மழையைப் போலத்தான். மழைத் துளிகள் என்பதென்னவாம்? காற்றும் தண்ணீரும் ஆடும் கண்ணாமூச்சிதானே? கவிதை தன் கேமராவில் படப்பிடிப்பு நடத்திவிடுகிறது. ஆனால் இது பழைய படப்பிடிப்பு; பகடிப் படப்பிடிப்பு!

“வீட்டெதிரே
புதிய தேநீர் கடைக்கு உன் பெயர்
அப்படியா
கல்யாணம் ஆனதிலிருந்து
நான் காபி பிரியையாகி விட்டேன்”
காதலி நெற்றியடியைத் தொடங்கிவைக்கிறாள்.  திருமணம் நடக்கவில்லை. தேநீர் கடை தன் பெயரில் இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன?  “நான் காபி பிரியையாகி விட்டேன்” என்கிற ஒற்றை வரியில் வாழ்க்கையின் திசை மாற்றத்தை வரைபடமாய்த் தீட்டிவிடுகிறான் கவிஞன். வாழ்க்கை தடம் மாறிப் போனதை உணர்த்தும் சூசகச் சொற்கள் இவை. காபி பிரியையாகிவிட்டேன் என்பது ஒரு துயரம் எவ்வளவு இயல்பாகக் கடக்கப்படுகிறது என்பதை உணர்த்தும் காதல் வரி… காதலின் கானல் வரி.

“என் பெயரைத் தானே
வைத்திருக்கிறாய் குழந்தைக்கு
யார் சொன்னது
பிறந்தது இரண்டும் பெண்ணாச்சே”

காதலி அடுத்துப் பிரயோகிக்கும் பிரம்படி.  இவ்வரிகள் நமக்கு உணர்த்துவது யதார்த்த வாழ்வுக்குள் பொதிந்திருக்கும் எதேச்சாதிகாரத்தை…. ஆனால் இயல்பாக…. வெகு இயல்பாக… இருவரையும் வாழ்க்கை இடம் மாற்றிப் போட்டுவிட்டது. காரணம் யாராகவும் இருக்கலாம். எதுவாகவும் இருக்கலாம். எதையுமே சுட்டவில்லை கவிஞன். கவிஞன் சுட்ட நினைத்தாலும் கவிதை இடங் கொடுக்கவில்லை. தன் காதலிக்கு இரண்டுமே பெண் பிள்ளைகள் என்பதைக் கூட அறிந்து வைத்தில்லாத வாழ்க்கையைத்தான் வாழ்கிறான் காதலனும்.  இந்த வாழ்க்கையின், காதலின் அபத்தத்தைத்தான் நினைத்துக் கொள்ள வைக்கிறது கவிதை.

“அடிக்கடி பாடச் சொல்லிக் கேட்பாயே
அந்தப் பாட்டை பாடட்டுமா
வேண்டாம்.. உனக்குக் குரல்
இன்னும் சரியாக வரவில்லை”

பொய் சொல்லித் திரிந்த காலமெல்லாம் போயே போய் விட்டது. நீயே போய் விட்டாய். காதல் செடியே கருகிவிட்டது. பஞ்சப் பாட்டுப் பாடும் காலத்தில் என்ன பருவப்பாட்டு  இது யதார்த்தத்தின் நெருப்பு…காதல் குளிர் காயவே முடியாது. வாழ்வின் சூட்டிலேயே வெப்பம் தகிக்கிறது. எங்கே குளிர் காய? இளஞ் சோலையாய்த் தெரிந்தது இன்று எரிமலையாய்க் கங்குகளைக் கக்குகிறது. வயதான பின் வாழ்க்கை என்பது வெறும் நினைவுச் சுரப்பிகளின் நீரோட்டம்தானே?

“மறதி அதிகமாகி விட்டது
பிறந்த நாள் பதினெட்டா பத்தொன்பதா
வாழ்த்தனுப்ப வேண்டுமே
அவசியமில்லை
ஐந்தாறு வருடங்களாக
கொண்டாடுவதில்லை”

கறை நல்லது என்பது போல, காலம் கடந்தபின்பு காதலுக்கு மறதி நல்லது. வயது கடந்தாலும் வாழ்த்தட்டை அனுப்ப உணர்ச்சி உந்துகிறது. மூளை முடங்கிவிட்டது.  முடியவில்லை. மறதியின் சகதியில் கால்கள் சிக்கிக் கொள்கின்றன. வாலிபத்தில் வசந்தங்களாக இருந்த பிறந்தநாள் கொண்டாட்டங்கள் வயதானபின்பு அர்த்தங்களை இழந்துவிடுகின்றன. மரத்தில் இருப்பதை விட இலைகள் கீழே கிடந்தால்தான் அழகு… இலையுதிர் காலமல்லவா?

“உன் உள்ளங்கையில் ஊர்ந்த
பட்டுப்புழு
மோட்சம் பெறும்
இன்னும் நீ திருந்தவேயில்லையா”

பட்டுப் பூச்சிகள் மோட்சம் பெறும் பழைய ரொமாண்டிக் வார்த்தைகள் காதலிக்குக் குமட்டுகின்றன.  எட்டிக்காயாய் வரும் எரிச்சல் வார்த்தைகள். இது வேறொரு வீடு; வேறொரு தாழ்வாரம!  பழைய தாவணி பஞ்சு பஞ்சாய் நைந்துவிட்டது. மோட்சம் பெறாததனால்தான் பட்டுப் புழு பட்டாம் பூச்சியான பிறகும் பழைய பூவின் நினைப்பில் பறக்க முடியாமல் பறந்து கொண்டிருக்கிறது. இப்போது பட்டாம் பூச்சிக்கு இருப்பவை சிறகுகள் அல்ல… மூப்பின் முறங்கள்.

“நினைத்தவுடன் வந்து நிற்பாய்
உனக்கு நூறு வயது என்பேன்
பழைய பென்ஷன் இல்லையே
சோறு யார் போடுவது”

ஒரு சிற்பி சிலையை எல்லாம் செதுக்கிவிட்டுக் கடைசியில்தான் கண் திறப்பான்.  அப்படியான ஒரு கண்திறப்புத்தான் “பழைய பென்ஷன் இல்லையே சோறு யார் போடுவது?” என்ற வரி. இங்குதான் வாழ்க்கை என்னும் சிற்பி வடித்தெடுத்த காதல் சிலை கண் சிமிட்டுகிறது.  சமையல் மட்டுமே நோக்கமாக இருக்கிற முதலாளிய சமூகத்தின் சமையலறையில் காதல் கூட கத்தரிக்காய்தான்.  கூட்டோ பொரியலோ… வயிற்றோடு சரி வாழ்க்கை!  இலக்கியத்தில் வேண்டுமானால் வாழ்ந்து கொண்டிருப்பதாய் கற்பிதம் செய்துகொள்ளலாம்.  ஆனால் யதார்த்தத்தில் செத்துப் போயாச்சு. தடம் இன்றி அழிந்தே போயாச்சு. வாலிபம் காதலை வாசனை திரவியங்களின் குவியல் என்று பேசலாம்… ஆனால் இந்தச் சமூகத்தைப் பொறுத்தவரை காதல் ஒரு குப்பை வண்டிதான்.  கவலைப்படுவதற்குக் கண்கள் இல்லை.  பொத்திக் கொண்டு போவதற்கு மூக்குகள்தான் இருக்கின்றன!

“சந்திக்காமலிருப்பதே நலம்
நேரில் பார்த்தால் அழுதுவிடுவேன்
அப்படியா
நான் சிரித்து விடுவேன்”

ஆண் சதா கற்பனையில் மிதக்கும் இம்சை அரசன் இருபத்து மூன்றாம் புலிகேசி. பெண் யதார்த்தம் புரிந்த பிரபஞ்சப் பிரத்தியட்ச வாசி.  அவள் காதலனைப் பார்த்து உள்ளுக்குள் சிரித்தபடியே கழிவிரக்கம் கொள்ளுகிறாள்.  நான் சிரித்துவிடுவேன் என்று வடிவேல் வசனம் பேசுகிறாள்.  கவிஞன் எதையுமே வெளிப்படையாக எழுதவில்லை. ஆனால் வாழ்க்கை எப்படி ஒரு காதலைக் குப்பைக் கூடையில் போட்டுவிட்டுத் தேமே என்று போய்விடுகிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம். ஆனால் இந்த உணர்ச்சிகள் எதுவுமே தோன்றாத வண்ணம் பகடியின் மூலம் மூடி வைத்துவிடுகிறான் கவிஞன். கண்டுபிடிக்க வேண்டியது வாசகன்தானே?

காதலும் ஓய்வதில்லை
*************************
(ரிலாக்ஸ்… ரிலாக்ஸ்)
வீட்டெதிரே
புதிய தேநீர் கடைக்கு உன் பெயர்
அப்படியா
கல்யாணம் ஆனதிலிருந்து
நான் காபி பிரியையாகி விட்டேன்

என் பெயரைத் தானே
வைத்திருக்கிறாய் குழந்தைக்கு
யார் சொன்னது
பிறந்தது இரண்டும் பெண்ணாச்சே

அடிக்கடி பாடச் சொல்லிக் கேட்பாயே
அந்தப் பாட்டை பாடட்டுமா
வேண்டாம்.. உனக்குக் குரல்
இன்னும் சரியாக வரவில்லை

மறதி அதிகமாகி விட்டது
பிறந்த நாள் பதினெட்டா பத்தொன்பதா
வாழ்த்தனுப்ப வேண்டுமே
அவசியமில்லை
ஐந்தாறு வருடங்களாக
கொண்டாடுவதில்லை

உன் உள்ளங்கையில் ஊர்ந்த
பட்டுப்புழு
மோட்சம் பெறும்
இன்னும் நீ திருந்தவேயில்லையா

நினைத்தவுடன் வந்து நிற்பாய்
உனக்கு நூறு வயது என்பேன்
பழைய பென்ஷன் இல்லையே
சோறு யார் போடுவது

சந்திக்காமலிருப்பதே நலம்
நேரில் பார்த்தால் அழுதுவிடுவேன்
அப்படியா
நான் சிரித்து விடுவேன்

வில்லியம்ஸ் 

புத்தனின் வீடு …..!!!! கவிதை – ச.சக்தி

புத்தனின் வீடு …..!!!! கவிதை – ச.சக்தி




பெரிய மரத்து நிழலில்
அமர்ந்திருக்கிறார் அரசன்
மரம் அரசமரமானது,

மனங்களின் ஆசைகளையெல்லாம்
ஆய்வு செய்த அரசன் ஆலமரத்தடியில்
அமர்ந்திருக்கிறார் அகிலமெங்கும்
கிளைகளை நீட்டியவாறு ,

குழந்தையின்
கையில் இருக்கும்
புத்தரின்  பொம்மை
பேசாமல் இருக்கிறது
உலகத்திலுள்ள அனைத்து
உயிர்களை நேசித்ததால்,

குடிசை வீடெங்கும்
சிரிப்பு மழையாகவும்
ஆனந்த மழையாகவும் தினந்தோறும் பொழிகிறது
குடும்பத்தை அமைதியாக ஆசைகளில்லாமல்
வழி நடத்தி கொண்டிருக்கிறார்
அலமாரியில் தூங்குகின்ற  புத்தனொருவன் “……..!!!!!!!

கவிஞர் ; ச.சக்தி, 
அழகு பெருமாள் குப்பம், 
பண்ருட்டி,
9791642986,

Uzhaippe Uyarvu Shortstory By Viji Ravi உழைப்பே உயர்வு சிறுகதை - விஜி ரவி

உழைப்பே உயர்வு சிறுகதை – விஜி ரவி

இந்திரபுரி நாட்டின் மன்னர் பீமசேனனுக்கு சித்தார்த்தன் என்ற மகன் இருந்தான் . அவன் ஒரு முழுச் சோம்பேறி. ஒரு இளவரசனுக்குரிய கடமைகள் எதுவும் செய்யாமல் எப்போதும் உண்பது , உறங்குவது என வீணே காலம் கழித்தான். தன் நண்பர்களுடன் வெட்டி அரட்டை அடிப்பது, வனங்களுக்கு சென்று விலங்குகளை வேட்டையாடுவது என பொறுப்பில்லாமல் சுற்றித் திரிந்தான். குதிரையேற்றம், போர்ப்பயிற்சி முதலியவற்றை தன் தந்தையின் வற்புறுத்தலின் பேரில் கற்றிருந்தாலும் அதை பயிற்சி செய்யாமல் அசட்டையாக இருந்தான்.

மன்னர் பீமசேனன் தன் மகனிடம் “சித்தார்த்தா … ஒரு நாட்டின் தலைவன் எப்பொழுதும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் . தன் மக்களை பாதுகாக்கவும் நாட்டை எதிரிகளிடமிருந்து காத்துக் கொள்ளவும் தொடர்ந்து போர் பயிற்சியில் ஈடுபட வேண்டும். நீ இப்படி வீணே காலம் கழிப்பது எனக்கு மிகவும் கவலையையும் வருத்தத்தையும் அளிக்கிறது. எனக்கும் வயதாகிக் கொண்டே போகிறது . நீ பொறுப்புள்ள ஆண்மகனாக இருந்தால் தானே நான் உனக்கு முடிசூட்ட முடியும்…?” என்றார்.

“தந்தையே நம் நாட்டைப் பாதுகாக்க ஏராளமான படைவீரர்களும், தளபதியும், சேனைகளும் இருக்கும்போது நான் ஏன் இவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்பட வேண்டும் ….?” என்றான்.

” என்னதான் சிறந்த படையும், திறமையான வீரர்களும் இருந்தாலும் அவர்களை வழி நடத்திச் செல்ல வலிமையான , வீரமான மன்னன் வேண்டும் …’ என தந்தை கூறிய அறிவுரைகள் சித்தார்த்தனின் காதுகளில் ஏறவே இல்லை. மிகுந்த மன வருத்தத்துடன் மன்னர் அரண்மனைத் தோட்டத்தில் உலாவிக் கொண்டிருந்தார். அவர் முகம் வாடி இருப்பதை கண்ட தோட்டக்காரர் சிந்தாமணி மன்னரை வணங்கி அவரது முகவாட்டத்திற்கான காரணம் கேட்டார் . மன்னரும் தன் கவலையை எடுத்துரைக்க, ” கவலைப்படாதீர்கள் மன்னவா….! நாளை இளவரசரை தோட்டத்திற்கு அழைத்து வாருங்கள். அவர் மனம் மாற ஒரு வாய்ப்பு அமையும் ..’’ என்றார்.

சிந்தாமணி ஏறக்குறைய ஐம்பது வருடங்களுக்கும் மேலாக அரண்மனைத் தோட்டத்தில் பணிபுரிந்து வருகிறார் . அதனால் அவர் மேல் மன்னருக்கு எப்போதுமே மரியாதையும் அன்பும் உண்டு. அடுத்த நாள் காலை தன் மகனை தோட்டத்திற்கு அழைத்து வந்தார் மன்னர். அவர்களை வணங்கி வரவேற்ற பெரியவர் சிந்தாமணி ஒரு தட்டில் மாம்பழங்கள் , மாதுளம் பழங்கள் , பப்பாளி ,கொய்யா போன்றவற்றை வைத்து அவர்களை சாப்பிடச் சொன்னார் . சாப்பிடுவதில் விருப்பம் உள்ள இளவரசன் “”ஆஹா…! என்ன அருமையான சுவையான மாம்பழங்கள்….கொய்யாப்பழம் கூட இனிக்கிறதே….பப்பாளியும் அருமை ….”என கூறிக்கொண்டே பழங்களை சாப்பிட்டு முடித்தான்.

அதன்பின் இளநீர் களை வெட்டி அவர்களுக்கு குடிக்கக் கொடுத்தார். “ஆஹா… இளநீர் கற்கண்டு போல் இனிக்கிறதே.. ” என்று பாராட்டினான் இளவரசன் . “இளவரசே.. இந்த இளநீரைத் தந்த மரத்தின் வயது நாற்பது….. அதோடு நீங்கள் சாப்பிட்ட அந்த மாம்பழங்களைத் தந்த மரத்தின் வயது 50. உங்கள் தந்தை சிறு குழந்தையாக இருக்கும்போது நான் நட்ட மரம் அது. முறையாக பராமரித்ததால் இன்று வரை கனிகளைத் தந்து மகிழ்கிறது அந்த மரம்..”என்றார் . “என்ன..? ஐம்பது வருடங்களாக காய்க்கிறதா…?” என வியந்தான் இளவரசன்.

“ஆமாம் இப்போது கூட சில புதிய செடிகளை நட்டுப் பராமரித்து வருகிறீர்களே… ஏன்..?ஏற்கனவே நம் தோட்டத்தில் ஏகப்பட்ட செடிகள் , மரங்கள் இருக்கின்றனவே …. இன்னும் எதற்கு புதிது புதிதாக செடிகள் மரங்களை நடுகிறீர்கள் தாத்தா…? “என்றான் இளவரசன்.

“என்னுடைய தொழில் செடி கொடிகளை நடுவது, பராமரிப்பது, நீர் விடுவது. இந்த மரங்கள் எல்லாம் என் குழந்தைகள் போல. அவற்றின்மீது உயிரையே வைத்துள்ளேன். என் மகன்கள், பேரப்பிள்ளைகள் அனைவரும் இந்த அரண்மனையிலேயே மன்னர் தயவால் நல்ல பணிகளில் உள்ளனர். என்னை வீட்டில் ஓய்வெடுக்குமாறு கூறினர். ஆனாலும் என்னுடைய கடைசி மூச்சு வரை நான் உழைக்க விரும்புகிறேன். நான் இறந்து போன பின்னாலும் நான் நட்டு வைத்த மரங்கள், செடிகள் பிறருக்கு பயன் தர வேண்டும். அதனால் தான் இந்த எண்பது வயதிலும் நான் வேலை செய்கிறேன் ..” என்றார் சிந்தாமணி .

இதைக் கேட்ட இளவரசன் ஆழமாக சிந்திக்கத் தொடங்கினான். “ஒரு 80 வயதுப் பெரியவர் நாள் முழுக்க ஓயாமல் உழைக்கிறார் . 25 வயதான நான் உழைப்பு பற்றி சிறிதும் சிந்திக்காமல் முழு சோம்பேறியாக இருக்கிறேனே.. “என்று தன்னைப்பற்றி முதல் முறையாக வருந்தினான். “தந்தையே தோட்டக்காரத் தாத்தாவினால் எனக்கு புத்தி வந்தது. உழைப்பின் அருமையை உணர்ந்து கொண்டேன். இனிமேல் நீங்கள் ஆசைப்படும்படி நான் நிறையப் போர்ப் பயிற்சிகளை பயிற்சி செய்வேன். பொறுப்புள்ள இளவரசனாக இருப்பேன் “என்றான் . மாறிய அவன் மனதைக் கண்டு மன்னரும் சிந்தாமணித் தாத்தாவும் மனம் மகிழ்ந்தனர் .

https://bookday.in/pidunga-mudiyathavargal-poem-by-pangai-thamizhan/

பிடுங்க முடியாதவர்கள் கவிதை – பாங்கைத் தமிழன்

இன்னும்
பிடுங்க முடியவில்லை…

எத்தனை ஆண்டுகள்?
எத்தனை ராஜாக்கள்?
எத்தனை பிரபுக்கள்?
எத்தனை ஆட்சிகள்?

ஊஹூம்…
அசைக்கிக்கூடப்
பார்க்க முடியவில்லை!
அரசனோ
ஆட்சியோ….

நீர் ஊற்றி
நிலை நிறுத்தினரே தவிர…
பிடுங்க நினைத்தாரில்லை!

அது
இப்போது…
ஜோராகவே நடக்கிறது!

ஏதோ…
ஒன்று இரண்டு பேர்
சிறு சிறு
கிளைகளை
ஒடித்தார்கள்!

பாவம்
ஒன்றும் செய்ய
இயலவில்லை!

பிடுங்குவதைப் போல்
நடித்தவர்களும்
நடிக்கின்றவரும்
இருக்கும் வரை
எப்படி பிடுங்க முடியும்!

விஷ விதைகளை
நட்டவன்
முள் வேலிகளாக
வேள்வி என்றும்
வேதம் என்றும்
பாதுகாப்பு அரணை
பலப்படுத்தி….

பக்கத்துணையாக
பயில்வான்களை
வைத்துக்கொண்டான்!

எவ்வளவு
தொலை நோக்குப் பார்வை!
அப்பாவிகளை
அடிமைப் படுத்தி….

வழி வழி
வாரிசுகளுக்கு
வழிவிடாமல்
வாழ விடாமல்…

அடர் இருள்
காட்டிற்குள்
அநாதைகளாக்கி….

மண்டிக் கிடக்கும்
மதமெனும்
சாதியெனும்
காட்டு மரங்களை….

எந்த ஆட்சியாலும்
பிடுங்க முடியவில்லை!
முடியாதோர்
மூலையில் படுங்கள்!

பிடுங்கிப் பார்க்க
முயல்வோரை
தடுக்காமல் இருங்கள்!
சாதி மத மரங்களை
பிடுங்குவார்கள்…

Avasarapadathe amaravathi Poem By Pangai thamizhan அவசரப் படாதே அமராவதி - பாங்கைத் தமிழன்

அவசரப் படாதே அமராவதி – பாங்கைத் தமிழன்




அடடா தமிழா கேள்
ஆதியினத் தமிழா கேள்
இயற்கை வாழ்வு கண்ட
ஈரமுள்ள தமிழா கேள்!

ஐயா தமிழ் மறவா
ஆனந்தம் உன்வாழ்வு
ஔவை மகள் பெயரன் உன்
அன்புள்ளம் நல் வாழ்வு!

வீரமிகுக் காதலிலே
விளைந்து வந்த தமிழ் மறவா
சேர சோழ பாண்டியரின்
சிறந்த புகழ்க் குடிமகனே!

கம்பனவன் புகழ்ப் பெயராம்
கனித் தமிழைத் தந்தவனாம்!
அம்பிகா பதி என்னும்
அன்புமகன் இவன் மகனே!

அரசன் மகள் மேலே
அடைந்தானே காதலின்பம்
அரசன் அவன் தந்ததுதான்
ஆணவத்தின் முதல் துன்பம்

அன்பு மகள் விருப்பம்
ஆனாலும் ஆண்டை எண்ணம்!
கம்பனிடம் சொல்லி வைத்தான்
கடுமையான போட்டி ஒன்றை!

சிற்றின்பம் கலவாத
சீர் நூறு பாடல்களை
கம்பன் மகன் பாடி விட்டால்
கன்னி அவன் உரிமை என்றான்!

போட்டிப் பாடலிலே
புகழ் மாலை இறைவனுக்கு!
முதல் பாடல் கணக்கில்லை;
அடுத்தடுத்தப் பாடலையே
அலையலையாய் பாடுகையில்;

தொண்ணூற் றொன்பதைத் தான்
தொட்டு அவன் பாடுகையில்;
கடவுள் வாழ்த்தோடு
கணக்குநூறு என நினைத்து;

காதல் முகம் காட்ட
காதலியாம் அமராவே;
கடவுள் தனை மறந்தான்
கம்பன் மகன் அம்பிகாவும்!

காமம் சொட்டியது கடைசிப் பாட்டினிலே;
அழகு வெளிச் சத்தில்
அறிவதுவும் மயங்கியதே;
அவன் காதல் பாட்டினிலே!

காதல் பிரித் திடவே
கடுகளவுக் காரணமாம்
ஆணவக் கொலை செய்தான்
அரசன் குலோத்துங்கன்!

அரசன் ஆரம்பித்த
ஆணவக் கொலை இன்றும்
ஒரு நாள் தவறாமல்
ஊரெல்லாம் வளர்கிறதே!

தமிழர் சாதி யிலே
தாழ்ந்த இனம் ஏதுமில்லை;
காதல் தூய்மை எனில்
காதலிப்போர் கள்வர் இல்லை!

உண்மைக் காதல் என்றால்
உயிர் வாழும் எந்நாளும்
அதற்குச் சாட்சி தானே
அம்பி அமரா காதல்!

அவசரம் வேண்டாமே
அமராவதி இனமே;
உள்ளத் தூய்மையினால்
உண்மையுடன் காதல் கொள்வீர்;
அரக்கர் ஆணவத்தை அன்பாலே வெல்வீரே!

Viyarvai Theettu Poem By V Kamaraj வ. காமராஜின் வியர்வைத் தீட்டு கவிதை

வியர்வைத் தீட்டு கவிதை – வ. காமராஜ்




பழைமை வாய்ந்த
புகழ் பெற்றக் கோயில்!
அரசன் கட்டினான்
அப்போதே….
ஆரம்பித்தது தீட்டு!

குப்பன் கோவாலு முருவன்
குள்ளம்மா காளிமா எல்லம்மா….
கூழுக்கோ…..
கணக்கனின் கோபத்துக்கோ
எலும்பு ஒடிய
எச்சில் வறள….
மிச்சமிருந்த உயிரில்
உருவான கோயில்!
கும்பாபிஷேகம்;
குப்பன் என்னக் கேட்டான் சாமி?

கோபுரக்கலசத்தை
மேலே கொண்டுவந்து
தருகிறேன் என்று
உரிமை கேட்டானா?

திர்னூரு…
துளியூண்டு…. திர்னூரு…
கையேந்தி நின்றவனைக்
காரித்துப்பி….
எச்சிலால் அடித்து விரட்டிய கோயில்!

கல்வெட்டில்….
நன்றாக முகந்து பார்த்தால்
இரத்த வாடை வரும்….
ஆராய்ச்சியாளர்கள்
அறிதல் வேண்டும்;
அறிவார்களா?

தலைமுறைகள் மாறியும்
கம்பீரமாக நின்ற
தீட்டுப்படாதக் கோயில்;
அவ்வளவு சக்தி!

சிதிலமடைந்து
திருப்பணிக்கு
திட்டம் தீட்டிய தீட்டே படாத கூட்டம்!

கண்டிப்பாக
காலம் ஓரிரண்டு ஆண்டுகள்…..
ஜமாதான்!

கடைக்கால் எடுக்க வேண்டும்
கட்டுமானத்துக்கு
கல் வேண்டும்
மணல் வேண்டும்
சிமெண்ட் கம்பி
தண்ணீர்….
முட்டுக்கட்டைகள்….
மேஸ்திரி… .
சித்தாள்….. பேராள்….
இப்படியான….
ஆளும் அம்பும் இல்லாமல்
ஆண்டவனாலேயே
ஆலயத்தைக் கட்டிக்கொள்ள முடியாதே!

சரி….
மணலில்…. கல்லில்…. கம்பியில்…. சிமெண்ட்டில் தண்ணீரில்….
சித்தாளில்…. பேராளில்…..
வியர்வைத் தீட்டு இருக்குமே?!
ஏர்வையாகுமா சாமிக்கு?
திருப்பணிக் குழுதான் தீர்மானிக்க வேண்டும்….
இப்போதே!

நாளை
கோயில் கட்டி முடிந்து
கும்பாபிஷேகம் நடக்கும்போது…..
திருனூரு கேட்டு
கையேந்தி வரும்
ஒரு கூட்டம்…..
வியர்வை சிந்திய கூட்டம்,
தீட்டு என்று
கோயிலைச் சாத்திவிடவேண்டாம்!

இப்போது….
திறப்பதற்கும்…..
தீட்டுக்களுக்கு
சக்தியைக் கொடுத்து விட்டான் கடவுள்!

Laws And Law Giving poem By Kahlil Gibran in tamil translated by Thanges. கலில் ஜிப்ரானின் ஆங்கில கவிதை சட்டங்களை இயற்றலும் அமல்படுத்தலும் - தமிழில்: தங்கேஸ்

கலில் ஜிப்ரானின் ஆங்கில கவிதை சட்டங்களை இயற்றலும் அமல்படுத்தலும் – தமிழில்: தங்கேஸ்




சட்டங்களை இயற்றலும் அமல்படுத்தலும் (LAWS AND LAW GIVING)
முன்னொரு காலத்தில்
ஒரு அரசன் இருந்தான்
அவன் அறிவுக் கூர்மை
கொண்டவன்

ஒரு நாள் அவன் தன் குடிமக்களுக்காகப்
புதிதாகச் சட்டங்கள் இயற்ற வேண்டுமென்று நினைத்தான்
ஓராயிரம் இனக்குழுக்களிலிருந்து
ஓராயிரம் அறிவாளிகளைத் தேர்ந்தெடுத்துத்
தன் தலை நகரத்துக்கு அழைத்தான்
அவர்களிடம் “நீங்கள் புதிதாகச் சட்டங்களை எழுதுங்கள் ” என்றான்

அதன் படி
ஆயிரம் சட்டங்களும் செம்மறி ஆட்டுத் தோலின் மீது எழுதப்பட்டு
அவன் முன்னே வைக்கப்பட்ட போது
அதை வாசித்து விட்டு அவன்
ஆத்மார்த்தமாய் அழுதான்

கண்ணீர் நிற்கவில்லை
காரணம் கேட்ட போது
” தன் நாட்டில் இப்படி ஓராயிரம் குற்றவாளிகள்
உலவிக் கொண்டிருக்கிறார்களே
அதை தான் முன்பே அறிய முடியவில்லையே” என்றான்

பிறகு தன் எழுத்தரை அழைத்து
உதட்டில் ஒரு புன்னகையுடன்
எழுதிக் கொள்
இனி இந்த நாட்டின் சட்டங்களை
என்று ஒவ்வொன்றாக உரைக்க
ஆரம்பித்தான்
அவன் இயற்றிய சட்டங்கள் மொத்தமே ஏழுதான்

அழைக்கப்பட்டிருந்த அத்தனை அறிவாளிகளும்
ஆறாத கோபத்துடன்
தங்கள் வசிப்பிடத்திற்கு வந்து சேர்ந்தார்கள்
தாங்கள் எழுதிய சட்டங்களை
தங்கள் இனக்குழுக்களின் மீது பிரயோகித்தனர்

அன்றிலிருந்து ஒவ்வொரு மனிதனும்
தனக்கு விதிக்கப்பட்ட சட்டத்தை
பின்பற்ற ஆரம்பித்தான்
அதனால் தான் இன்றும் உலவிக் கொண்டிருக்கின்றன
ஆயிரமாயிரம்
சட்டங்கள்

இது ஒரு பெரிய தேசம்
இங்கு ஓராயிரம் சிறைகள்
ஓராயிரம் சிறைகளிலும்
ஆண்கள் பெண்கள்
அத்தனை பேரும் சட்டத்தை மீறியவர்கள்

இது ஒரு பெரிய தேசம் தான்
மக்கள் அனைவரும்
ஓராயிரம் சட்டங்களை இயற்றியவர்களின்
வம்சா வழியில் தோன்றியவர்கள்
ஆனால் அரசன் மட்டும் ஒரே அரசன்

மூலம்: கலில் ஜிப்ரான்
மொழி பெயர்ப்பு: தங்கேஸ்