கிழிந்த முகத்திரை கவிதை – ச.லிங்கராசு
முகத்திரையை ஒதுக்கும்
உங்கள் எண்ணத்தில்
உங்கள் முகத்திரை கிழிந்ததே
உலகளவில்
அறிவீர்களா?
அறிந்தும் அறியாததைப் போல்
பாவனை செய்வதே
உங்கள் அரசியல்
மக்களையே நினைக்காது
மதங்களை மோத விட்டு
வாக்கு அறுவடை செய்ய முனையும்
உங்கள் மதிகெட்ட போக்கு
இன்னும் எத்தனை நாட்களுக்கு?
அறிவியல் மாநாடுகளில்
அளந்து விடும் புராணப் புரட்டுகளால்
அதிரும் சிரிப்பலைகளை அறிவீர்களா நீங்கள்?
மாட்டுக் கறிக்குப் பூட்டு
ஆனால் ஏற்றுமதிக்கு விலக்கு
என்ன உங்கள் அரசியல் என்றே
எவருக்கும் இங்கு புரியவில்லை
யாதும் ஊரே யாவரும் கேளிர்
என்ற தமிழகத்தில்
எல்லோருக்கும் ஒரு மதம்
ஒரு மொழி என்றால் காக்கையும்
குருவியும் கைக் கொட்டி
சிரியாதோ?
கடவுளும் மதமும் கடைச்சரக்கு
உங்களுக்கு
நினைத்த போதெல்லாம்
ஆட்சிக்காக காட்சிப் பொருளாக
இன்னும் எத்தனை நாட்களுக்கு
இந்த இறுமாப்பு?
மக்கள் தீர்ப்பை உங்கள்
மகேஷ்வரனாலும் மாற்ற முடியாது