கீழ்வெண்மணி நினைவுகள் – கவிதா ராம்குமார்

கீழ்வெண்மணி நினைவுகள் – கவிதா ராம்குமார்




இயற்கை எப்பொழுதும் தங்களுக்கு ஆரோக்கியத்தை தரட்டும் . இங்கு சில விஷயங்களை பதிவு செய்ய விரும்புகிறேன். இரண்டு நாட்களாக நான் தனித்து காணப்பட்டேன். எப்பொழுதும் என்னுடன் உரையாடி கொண்டிருக்கும் எனது நிழலானது காணவில்லை தேடிக் கொண்டிருக்கிறேன். எங்கு தொலைத்தேன் விடைகள் இன்றி விழித்திருந்த எனது சிந்தனைக்குள் கானல் நீராக வந்து சென்றது கீழ்வெண்மணியின் நினைவுகள்.

தொலைக்காட்சிகளிலும்
சமூக வலைத்தளங்களிலும், செய்தித்தாள்களிலும் எங்கு பார்த்தாலும்
கீழ்வெண்மணியின் செய்திகள் காற்றின் வேகத்தை விட அதிகரித்துக் கொண்டே பரவியது……

மீண்டும் மீண்டும் இடைவிடா முயற்சிகளுடன் உயிர்பித்து எழுந்து வரும் கடல் அலைகள் கரையை விட்டு வெளியேற முடியாமல் மீண்டும் கடலுக்குள் கரைவது போல் எனது நினைவுகளும் நிழல் காலத்தில் நிலை கொள்ளாமல் கீழ்வெண்மணியின் கடந்த காலத்திற்கு என்னை அழைத்து செல்கிறது. எனது நிழலையும் தேட ஒரு வாய்ப்பாக இருக்கும் என நானும் செல்கிறேன்….

தென்னிந்தியாவின் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படுகின்ற ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில், நாகப்பட்டினத்திலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கீழ்வெண்மணி என்ற கிராமத்தைப் பற்றி தான் இன்று உங்களுடன் நான் பகிர்ந்து கொள்ள போகிறேன்.

தஞ்சை மண்ணில் “பண்ணையாள் முறை” ஆழமாக வேரூன்றியிருந்த காலம். சாணிப்பால், சாட்டையடி என்பதெல்லாம் சர்வ சாதாரணமான தண்டனைகளாக இருந்தன.

ஆயுள் முழுக்க ஆதிக்க நிலக்கீழார்களின் நிலத்தில் குனிந்து உழைத்து, கும்பிட்டு, கைகளை ஏந்தி கஞ்சி குடிப்பதுமே வரம் என நினைக்கச் செய்தது அன்றைய நிலை.

சுய சிந்தனை சூல்கொள்ளாதபடி தீண்டதகாதவர்கள் எனும் இருளில் தள்ளப்பட்டவர்கள் அவர்கள்.
அரை வயிற்று கூழுக்காய் மூச்சுத் திணற உழைத்தும், கைப்பிடி நெல்லும் மிச்சம் இல்லாமல் மூன்று வேளை உணவென்பது ஆயிலுக்கும் வாய்த்ததில்லை.பிள்ளைபெற்றாலும்ஓய்வின்றி உழைப்பதும். கருவேலம் மரத்தில் தொட்டில் கட்டி நிலத்தில் இறங்கினால் மட்டுமே அடுத்த வேலை கஞ்சி என அதிகாரத்தின் மனம் மரணித்து கிடந்தது. தாயின் மார்பில் வடியும் பாலின் ஈரம் உணர்த்துமே பச்சிளம் பிள்ளையின் வயிற்று பசி. வேலை முடித்தால் மட்டுமே அனுமதி இல்லையேல் ஆதிக்க நிலக்கீழார்களின் வார்த்தைகளால் சுட்டெரிக்கப்பட்டு கனத்த இதயத்துடன் ஓட வேண்டும் பிள்ளையின் பசி தீர்க்க.

ஆதிக்க நிலக்கீழார்களின்
சாதியானவத்தால் ஆண்களை அடிக்கவும், அடிமைப் பெண்களை புணரவும், குழந்தைகளை பலி கொடுக்கவும் உரிமை உண்டு என்பதை அவர்களின் எழுதப்படாத விதிகளில் ஒன்று.

விடுதலை! விடுதலை! விடுதலை!

பறைய ருக்கும் இங்கு தீயர்
புலைய ருக்கும் விடுதலை
பரவ ரோடு குறவருக்கும்
மறவ ருக்கும் விடுதலை!
திறமை கொண்டதீமை யற்ற
தொழில் புரிந்து யாவரும்
தேர்ந்த கல்வி ஞானம் எய்தி
வாழ்வம் இந்த நாட்டிலே!(விடுதலை)

ஏழை யென்றும் அடிமையென்றும்
எவனும் இல்லை ஜாதியில்,
இழிவு கொண்ட மனித ரென்பது
இந்தி யாவில் இல்லையே
வாழி கல்வி செல்வம் எய்தி
மனம கிழ்ந்து கூடியே
மனிதர் யாரும் ஒருநிகர்
சமானமாக வாழ்வமே! (விடுதலை)

என்ற வரிகளின் ஊடே செந்தமிழ் நாவலன் பாரதி இருளடைந்த இந்திய திருநாட்டிற்கு ஒளியாகவும், உயர்வு தாழ்வற்ற சமதர்ம விடுதலை நாட்டை எண்ணிக் கனவு கண்டார்.

ஆனால் சுதந்திர வாசனையோ இவர்கள் சுவாசிக்கும் காற்றில் கூட நுழையவில்லை.

மரணத்தின் கொட்டடிக்குள் அடைந்து வாழ்வை புதைத்தவர்களை மீட்க செங்கொடி சங்கம் தொட்டு தூக்க தோள் கொடுத்தது….. கொத்தடிமைகளாக இருந்தவர்கள் ஒருங்கிணைந்து சங்கத்தில் இணைந்தனர்……

முதல் முதலாய் கூலிகளின் உதட்டில் உரிமையின் முழக்கம் உட்கார தொடங்கியது, இருள் விலகிய நம்பிக்கையின் வெளிச்சம், முகங்களில் முகாமிட்டமர்ந்தது.

கோரிக்கை ஒன்றை ஆதிக்க நிலக்கிழார்களிடம் வைத்தனர். அதாவது அறுவடை கூலியில் அரைப்படி நெல்லை உயர்த்தி கேட்டனர் ….இழி சாதி நாய்களிடம் எதிர் கேள்வியா? கொடுத்ததை குனிந்து வாங்கிய கூட்டம், எதிரில் நிற்கவே அஞ்சிய கூட்டம், நிமிர்ந்து குரலுயர்த்தி கேட்டதை சாதி கௌரவம் பிடித்த கூட்டத்தால் ஜீரணிக்க முடியாமல் ஆயுதங்களுடன் கூட்டமாய் திரண்டனர்.

டிசம்பர் 25, 1968 அன்று இரவு கிராமத்துகள் நுழைந்த ஆதிக்க நிலக்கிழார்களும், பண்ணையார்களும் அவர்களது அடியாட்களும் வீடுகளை கொளுத்தினர், கண்ணுக்குத் தெரிந்தவர்களை துப்பாக்கியால் சுட தொடங்கினர் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடியவர்களில் சிலர் நிலத்தில் சாய்ந்தனர். மீதம் இருந்தவர்களில் பெண்களும், குழந்தைகளும், பெரியவர்களும் அருகாமையில் இருந்த குடிசைக்குள் ஒளிந்து கொண்டனர்……எட்டடி நீளம், ஐந்தடி அகலமுள்ள அந்தக் குடிசையில் 44 பேர் தங்களது உயிரின் சுவாசத்தை சுவாசித்துக் கொண்டிருந்தனர். தீயில் இருந்து தப்பித்த அந்த குடிசையை கண்ட ஆதிக்க நிலக்கீழார்கள் சாதி வெறி பிடித்த மிருகமாய் மாறினார்கள் . அவர்களின் ஜாதி வெறி எனும் தாகம் தீராததால் வெளிப்புறமாக வீட்டை தாழிட்டு கையில் இருந்த பெட்ரோலை குடிசையின் மேல் ஊற்றி தீ வைத்தனர்.பூட்டிய வீட்டுக்குள் பெரும் அலறல் சத்தம் எழுந்தது. ‘ஐயோ, அம்மா ஆ…ஆ….எரியுதே!’ என்ற சத்தம் மட்டும் திரும்ப திரும்ப கேட்கிறது. தான் பிழைக்காவிட்டாலும் தன் குழந்தையாவது பிழைக்கட்டும் என்று ஒரு பெண் தன் குழந்தையை தூக்கி எறிகிறாள். கொடூரர்கள் குழந்தை என்றும் பாராமல் வெட்டி வீழ்த்தி தீயில் எரித்தனர். வெளியே வர முயற்சித்தவர்களை மறுபடியும் உள்ளே தள்ளினர். தீப்பிழம்பாய் காட்சியளித்த அந்த குடிசை 44 பேரையும் உண்டு சுவைத்தது.

வெந்து தணிந்த எனது சிந்தனையை சரியான பாதையில் பயணிக்க செய்து என்னை எனக்கே யார் என்று உணர்த்தியது எனது நிழல்…. இதோ எனது அருகில் நிற்கின்றது…..

அப்பாவிகளை கொலை செய்த ஆதிக்க நிலக்கிழார்களுக்கு சரியான தண்டனை கிடைத்ததா….?
இல்லை….. அவர்கள் அனைவரும் பணக்காரர்கள். கவுரவமிக்க சமூக பொறுப்புள்ள அவர்கள் இந்த குற்றத்தை செய்திருக்க மாட்டார்கள் என நம்புகிறது என்று தீர்ப்பு வழங்கியது உயர் நீதிமன்றம் . ஒருவர் விடுதலையாவதற்கான தகுதி அவர் பணக்காரர். இந்த ஒரே காரணத்தை வைத்துக்கொண்டு அப்பாவி தொழிலாளர்களை, அவர்களின் குழந்தைகளை எரித்துக் கொண்றவர்களுக்கு தீர்ப்பு விடுதலை. இதுதான் அன்றைக்கு தொழிலாளர்களின் நிலை.

சமூகக் கொடுமைகளின் வரலாற்றில் உலகம் முழுவதும் பதிவாகி விட்ட கீழ்வெண்மணிப் படுகொலை வழக்கின் அநீதியை நீதிமன்றங்கள் இன்று வரை களையவில்லை.

அடித்தள மக்களுக்கு நீதிமன்றங்களின் மீது நம்பிக்கை ஏற்பட வேண்டுமென்றால் கீழ்வெண்மணி வழக்கில் அளித்த தீர்ப்பு தவறு என்பதை உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் அறிவிப்பதே அம்மக்களுக்குச் செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும். செய்வார்களா?……

நன்றி,
கவிதா ராம்குமார்,
திருவண்ணாமலை.