கோபத்தின் கனிகள் புத்தகத்திற்கான ‘நவீன காப்பிய மொழிபெயர்ப்பு விருது 2021’ பெற்றார் தோழர். கி. ரமேஷ் – ரமணன்
தோழர் ரமேஷ் மொழிபெயர்த்த ‘கோபத்தின் கனிகள்’ (பாரதி புத்தாகாலயம் வெளியீடு) புத்தகத்திற்கு ‘நவீன காப்பிய மொழிபெயர்ப்பு விருது’ தஞ்சாவூர் லிட்ரரி ஸ்காலர்ஸ் சொசைட்டியினால் 12.02.2022 அன்று வழங்கப்பட்டது. விருதினை நாடகவியலாளர் தோழர் பிரளயன் வழங்கினார். தஞ்சாவூர் லிட்ரரி ஸ்காலர்ஸ் சொசைட்டியின் நிறுவனத் தலைவர் பேராசிரியர் ஜி.வெங்கட்ராமன் அவர்கள் தலைமை தாங்கினார். மாநிலக்கல்லூரிப் பேராசிரியர் வி.எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஜி.தாமோதரன் அவர்களும் வாழ்த்துரை வழங்கினார்கள். பாரதி புத்தாகாலயம் மேலாளர் தோழர் நாகராஜன் நன்றியுரை கூறினார்.
பேராசிரியர் ஜிவிஆர் தனது தலைமையுரையில் மொழிபெயர்ப்பின் சிரமங்களையும் அது நமது அகந்தையை எவ்வாறு உடைக்கிறது என்பதையும் கூறி ரமேஷ் அவர்களது மொழிபெயர்ப்பின் சிறப்பையும் எடுத்துரைத்தார். ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் பிரபலமானதற்கு அதன் மானுடம் தழுவிய பொதுத்தன்மையே காரணம் என்றும் எடுத்துரைத்தார்.
பிரளயன் தனது உரையில், நாடகங்களில் தனி மொழி எவ்வாறு தோன்றியது என்பதையும் வட்டார வாழ்வை சொல்லும் படைப்புகளே பொதுத்தன்மை கொண்டவையாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றன என்பதையும் சத்யஜித் ரேயின் பதேர் பாஞ்சாலியை மேற்கோள் காட்டி விளக்கினார். ‘கோபத்தின் கனிகள்’ புதினம்கூட, அமெரிக்காவில் குடியேற்றம் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி நகர்ந்ததையும் அதனால் விவசாயிகள் அடைந்த துன்பத்தை விளக்குகிறது. அது இன்றைய சூழலுக்கும் பொருந்துவதாக உள்ளதாலேயே ரமேஷ் அதை தேர்ந்தெடுத்தார் என்றார். ரமேஷைப் பாராட்டுவதன் நோக்கம் அவரைப் போல் இன்னும் பலர் இந்தப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்பதே என்றும் சுட்டிக்காட்டினார்.
பேராசிரியர் ராமகிருஷ்ணன் தனது உரையில், தங்களைப் போன்றவர்களெல்லாம் செய்யாத வேலையை அலுவலகப் பணியில் இருக்கும் ரமேஷ் செய்திருப்பதைப் பாராட்டினார். தவறாக செய்யப்படும் மொழிபெயர்ப்புகளுக்கு பாரதியாரின் ‘காக்கை சிறகினிலே’ பாடலில் பச்சை நிறம் என்பதற்கு ‘tinge of green’ என்றும் ஆண்டாளின் ‘வாரணம் ஆயிரம் சூழ’ பாடலில் ‘தேவர் குழாம்’ என்பதை ‘crowd of gods’ என்றும் ஒரு மொழிபெயர்ப்பாளர் தவறாக செய்திருப்பதை சுட்டிக் காட்டினார். மொழிபெயர்ப்பு சிறப்பாக செய்திருப்பதற்கு ‘water, water everywhere, but not a drop to drink’ என்பதை ‘கடற்கரை தாகம் உன் காதலடா’ என்றும் ‘Sleep dwell upon thine eyes, peace in thy breast! Would I were sleep and peace, so sweet to rest!’ எனும் ஷேக்ஸ்பியரின் வசனத்தை ‘தூக்கமும் உன் கண்களை தழுவட்டுமே’ என்றும் கண்ணதாசன் மொழியாக்கம் செய்திருப்பதை எடுத்துக் காட்டினார்.
வழக்குரைஞர் தாமோதரன் தமிழின் சிறப்புகளையும் அதை ரமேஷ் லாவகமாகக் கையாண்டிருப்பதையும் பாராட்டினார்.தோழர் நாகராஜன் தனது நன்றியுரையில் ரமேஷ் மொழிபெயர்ப்பை ஒரு இலக்கியப் பணியாக மட்டுமல்லாமல் சமூகப் பணியாகவும் செய்துகொண்டிருப்பதையும் 20க்கும் மேற்பட்ட புத்தகங்களை மொழிபெயர்த்ததற்கு எந்தவித ஊதியமும் பெற்றுக் கொள்ளாததை பாராட்டினார். அவரது குடும்பமே பாரதி புத்தகாலயதிற்கு உதவுவதையும் எடுத்துரைத்தார்.
தோழர் ரமேஷ் தனது ஏற்புரையில் தன்னை இந்தப் பணிக்கு திருப்பிவிட்ட தோழர் ஈ.எம்.ஜோசப், தீக்கதிர் குமரேசன் ஆகியோரை நினைவு கூர்ந்தார்.இந்தப் புத்தகத்தைப் படிக்க பரிந்துரைத்த தோழர் பி.கே.ராஜன், மொழிபெயர்ப்பை படித்துப் பாராட்டிய பேராசிரியர்கள் ஸ்ரீனிவாசன், சங்கரநாராயணன், வெங்கட்ராமன் ஆகியோருக்கும் நன்றி தெரிவித்தார்.
நூல்: ‘கோபத்தின் கனிகள்
ஆசிரியர்: ஜான் ஸ்டீன்பெக்
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
விலை: 595
புத்தகம் வாங்க இங்கே லிங்க்கை க்ளிக் செய்யவும்: thamizhbooks.com