கொடுங் கனவு சிறுகதை தமிழில்: கதிரேசன்
குஜராத்தி எழுத்தாளர்
மினாள் தேவ் (Minal Daev)
ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்
ரீட்டா கோத்தாரி
தமிழில்: கதிரேசன்
எனது விரல்கள் கணினியின் விசைப் பலகையின் மீது பறந்து பறந்து இயங்கின. ஆனாலும் எனது கண்கள் என்னவோ கடிகாரத்தின் மீதே இருந்தது. என்னால் இன்று முதல் மெமோ மின்சார ரயிலை பிடிக்க முடியாது. திருமதி. தேவ் நம்மை பைத்தியம் பிடிக்கச் செய்து விடுவார். அலுவலகத்தை விட்டு வெளியே கிளம்பும் கடைசி நிமிடத்தில் தான் ஒரு வேலையைக் கொடுப்பார். பத்து பதினைந்து நாட்களுக்குப் பின் இப்போதுதான் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது என்று அவர் சொல்வதிலும் நியாயம் இல்லாமல் இல்லை. அவர் செய்வது சரிதான். ஆனால், எனது அருமை பெண்மணியே, நீங்கள் பைக்கில் உங்கள் கணவரின் பின்னால் சொகுசாக உட்கார்ந்து கொண்டு போனால் போதுமானது. வீடு போய்ச் சேர்ந்து விடலாம். வீட்டில் சூடான இட்டிலி, சாம்பார் டிபன், காபி தயாராக இருக்கும். ஆனால் நான்? நான் ரயிலை தவற விட்டால் அடுத்த ரயிலுக்கு மணி கணக்கில் காத்திருக்க வேண்டும். வேறு ஒரு நகரத்திற்கு, அதுவும் ஆளில்லாத பெட்டியில் பயந்து கொண்டும், நடுங்கிக் கொண்டும் இரண்டு மணி நேரம் பயணம்
செய்ய வேண்டும். அதை எப்படி உங்களால் புரிந்து கொள்ள முடியும்?
அப்பாடா! கடவுளே! வேலை முடிந்தது. ஆகா! இங்கேயே ஒரு ஆட்டோ நிற்பது மிகவும் நல்லதாகிவிட்டது.
ஓ தம்பி, வேகம், வேகம் தயவு செய்து வேகமா போ தம்பி! பல நாட்களுக்குப் பின்னர் ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு கூண்டில் அடைத்து வைக்கப்பட்டு திறந்து விடப்பட்டவர்களைப் போல மனிதர்கள் படு வேகமாக வீட்டை விட்டு வெளியேறுவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை! அவர்கள் கார்களையும், இரு சக்கர வாகனங்களையும் எடுத்துக் கொண்டு பறக்கின்றனர்.
ஆனால் ஒரே ஒரு வெடிச்சத்தம் கேட்டால் போதும்! உடனே வீட்டுக்குள் ஓடிப்போய் தங்களை அடைத்துக் கொள்வார்கள். ஐயோ கடவுளே! இந்த சிவப்பு சிக்னல் கடைசி நிமிடத்தில் தான் விழ வேண்டுமா?
ஓ ரயில் நிலையத்தை அடைந்தாகிவிட்டது. பயணச்சீட்டு வாங்குவதற்கு என்னிடம் மிகச் சரியாகச் சில்லறை இருந்தது. எனவே சில்லரை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை.
ஐயோ! எல்லோரும் ஒரே நேரத்தில் ரயில் நிலையத்தை விட்டு மொத்தமாக வெளியே வருகிறார்களே! தயவுசெய்து கொஞ்சம் வழி விட மாட்டீர்களா? இந்த ரயில்வே ஊழியர்கள் இருக்கிறார்களே, இவர்களை திருத்தவே முடியாது! ச்சே! இந்த நீண்ட பிளாட்பாரத்தில் கடைசி முனையில் தான் படிக்கட்டு வைக்க வேண்டுமா என்ன? நான் போக வேண்டிய ரயில் நான்காவது நடைமேடையில் இருக்கிறது. ஓ! ரயில் புறப்பட போகிறதே! ஓடு! ஓடு! இன்னும் இரண்டே படிக்கட்டுகள் தான்! ஆ! பாழாய்போச்சு! ரயிலை விட்டு விட்டேன்!
டீ விற்பவர் சொல்கிறார்.”என்னம்மா ரயிலே தவற விட்டு விட்டீர்களே! இன்னும் ஒரு மணி நேரம் அல்லவா காத்திருக்க வேண்டும்!”
என்னை விசித்திரமாக பார்க்கிறார். நடைமேடையில் ஒருவரும் இல்லை. ஒரு பயணி கூட கிடையாது. இரண்டு நிமிடங்களுக்கு முன்பாக ஈக்கள் மொய்த்துக் கொண்டிருந்ததைப் போல பயணிகள் இருந்தார்கள். ஒரு கல்லை விட்டு எறிந்ததும் கூட்டமாக பறந்து விடும் பறவைகளைப் போல அவர்களை எல்லாரும் பறந்து விட்டார்கள்.
ஒருவேளை நான் ஸ்மிதா வீட்டிற்கு போய் இருக்கலாமோ! இன்னும் ஒரு மணி நேரம் காத்திருந்து ரயிலைப் பிடித்தாலும் அதில் என் கூட சேர்ந்து பயணம் செய்வதற்கு ஒரு ஆள் இருக்காது. எங்கும் அச்சம் வியாபித்திருக்கிறது. டீ விற்பவர் என்னைப் பார்த்ததும் பயப்படுகிறேன். ஏதாவது ஒன்றை என்மீது எறியலாம், யார் கண்டது?
அவர் என்ன சாதி என்று யாருக்குத் தெரியும். எங்களைப் போன்றவர்கள் சாதி மத நம்பிக்கை போன்ற நம்பிக்கைகள் இல்லாவிட்டாலும் அவனுக்கு என்னைப் பற்றி தெரியாதல்லவா? அவர் எனது உடைகளை பார்த்துக் கொண்டிருக்கிறார்.
இல்லை, இல்லை, எல்லோரும் அப்படி இருக்க மாட்டார்கள்! ஓ நரகமாக இருக்கிறது!
கைப்பையில் தான் தண்ணீர் பாட்டிலை வைத்திருந்தேன்! எங்கே போய்விட்டது! இதோ இங்குதான் வைத்திருந்தேன்! ஓ! தண்ணீர் காலியாகிவிட்டது!
சரி! போன் பூத்தில் இருந்து வீட்டுக்கு ஒரு போன் செய்யலாம். ஒரு தண்ணீர் பாட்டில் ஒரு வார இதழையும் வாங்கலாம். கணவர் விக்ரம் பேசுகிறார். நான் ரயிலைப் பிடிக்க முடியவில்லை என்று சொன்னதும் மிகவும் மன சோர்வு அடைந்து விட்டார்.
ஆனால் அவர் பேசிக் கொண்டிருக்கும் போதே போனை கட் செய்து விட்டேன்.
அவரது எரிச்சலை நான் அனுமதிக்க விரும்பவில்லை. போன் பூத்துக்காரர் இலவசமாக அறிவுரைகள் வழங்குகிறார்.
“இவ்வளவு நேரம் கழித்து ரயில் மூலமாக வீட்டுக்கு போக வேண்டாம். முன்பு இருந்த நிலைமை ஒரு மாதிரி! இப்போது அப்படி இல்லை. துணிகரம் வேண்டாம்” என்றெல்லாம் சொல்கிறார். இந்த பத்து நாளில் அப்படி என்ன மாறிவிட்டது என்று எனக்கு நானே கேட்டுக்கொள்கிறேன்.
மக்கள் யாரையும் நேசிப்பதில்லையா? கண்ணீர் சிந்துவதில்லையா? மலரும் முன்னே பூக்கள் எல்லாம் வாடி விடுகின்றனவா? எங்கே பார்த்தாலும் சந்தேகம்! இந்த அச்சத்திற்கான காரணம் தான் என்ன?
புத்தகக் கடையில் ஏதாவது புத்தகம் பார்ப்போம்! அங்கேயும் இதே மாதிரி தான் இருக்கும்! நாளிதழ்களில் மரண தேவர்களின் நடனம், நெருப்பு விளையாட்டு, சீறிப்பாயும் துப்பாக்கி குண்டுகள்…. இரண்டு இதழ்களைப் பொறுக்கி எடுத்தேன். ஒரு பெஞ்சில் அமர்ந்தேன்.
நடைமேடை வெறிச்சோடிக் கிடந்தது. தேநீர்க் கடைகளில் நெருப்பு அணைக்கப்பட்டு விட்டது. காரமான நொறுக்கு தீனிகளை பொரிப்பதற்கான எண்ணெய் சில்லிட்டுப் போயிருந்தது. கடையில் வேலை செய்யும் பையன்கள் அரைத் தூக்கத்தில் இருந்தனர்.
கார்பன் அடைக்கப்பட்ட குளிர்பானங்கள் மறுபடியும் தங்கள் கிரேட்டுகளுக்கு திரும்பி இருந்தன. ஷூ பாலிஷ் போடும் கால்
ஊனமான பையன் ஷூ ஸ்டான்டையே தலையணையாக மாற்றி தூங்கிக் கொண்டிருந்தான்.
ஆனால் நான் உட்கார்ந்து இருந்த பெஞ்ச் அருகில் படுத்திருந்த நாய் அமைதியற்று இருந்தது. அது சுற்றி சுற்றி பார்ப்பதும், எழுந்திருப்பதும், கழுத்தை நெரிப்பதும், காதுகளை விடைத்துக் கொண்டு எதையோ உன்னிப்பாக கவனிப்பதும் பின்னர் சுருண்டு படுப்பதுமாக இருந்தது. எங்கள் நடைமேடையைத் தாண்டி, அடுத்த நடைமேடையில் இரண்டு நாய்கள் சண்டை போட்டுக் கொண்டு இருந்தன. அவைகளைப் பார்த்து இந்த நாய் பயந்து விட்டதோ என்னவோ!
நான் உட்கார்ந்திருந்த பெஞ்சில் எனக்கு அடுத்து ஒரு பெண் உட்கார்ந்திருப்பதை அப்போதுதான் கவனித்தேன். அவள் கருப்பு நிற புர்க்கா அணிந்திருந்தாள். அவளது கைகள் மட்டுமே வெளியே தெரிந்தன. பெரிய துணிப் பையை வைத்திருந்தாள். புர்க்காவின் முகத்திரை அவளது கண்களை மறைத்திருந்தன. அவளது கண்கள் என்னையே ஊடுருவிப் பார்ப்பதை என்னால் உணர முடிந்தது.
நடைமேடையில் அத்தனை காலியான பெஞ்சுகள் எல்லாம் இருக்கும்போது அவள் ஏன் என் பெஞ்சில் வந்து , என்னருகே அமர வேண்டும்? அவள் மனதில் என்ன நினைக்கிறாள்? அவளது பையில் வெடிகுண்டு வைத்திருப்பாளோ! அவள் திடீரென அந்தப் பையை விட்டு விட்டு சென்றால் – வெடிகுண்டு வெடித்தால் எனக்கு என்ன ஆகும்?
பாவப்பட்ட எனது கணவனுக்கும், எனது குழந்தைக்கும் அது பேரழிவை ஏற்படுத்தும்! ச்சே! இப்படி எல்லாம் யோசிக்க வேண்டாமே! பாவம் அவள் பாட்டுக்கு அமைதியாகத்தானே உட்கார்ந்திருக்கிறாள்! ஆனாலும் …..அவள் உண்மையிலேயே ஆபத்தில்லாதவள் தானா! இந்த இடத்தை விட்டுக் காலி செய்து விடுவோமா? வேறு எங்காவது போய் உட்காருவோமா? ஐயோ, எனது நாக்கு மேல் எண்ணத்தில் ஒட்டிக்கொண்டதே!
நாக்கு அசைய மறுக்கிறது. எனது விரல்கள் பையை இறுக்கிப்பிடிக்கின்றன. குளிர்ந்த காற்று வீசும் மாலை நேரம்! இருந்த போதிலும் எனக்கு வியர்த்து கொட்டுகிறது. நெற்றியில் இருந்து வியர்வை கைகளில் வழிகிறது.
அந்த நேரத்தில் விண்ணில் இருந்து இறங்கவரும் மீட்பராக, ஆபத்பாந்தவனாக மசால் வடை விற்பவர் வந்தார். இப்போது எனது நரம்புகளில் மறுபடியும் ரத்த ஓட்டம் ஆரம்பமானது. மீண்டும் ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்டது போலத் தெரிந்தது.
“நீங்கள் மிகவும் தாமதம்! முதல் ரயில் தான் போய்விட்டதே” என்றார்.
நான் சிரித்துக் கொண்டே தலையாட்டினேன். ஏதாவது திக்கித் திணறி பேசி விடுவேனோ என்று பயந்துவாயை திறக்க பயந்து கொண்டு ஒன்றும் பேசவில்லை.
“ஏன் இங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்கள்? இந்த மாதிரி நேரங்களில் இங்கே எல்லாம் உட்கார்ந்து இருக்க கூடாது” என்று என்னை எழுந்திருக்க சொல்லி சமிக்ஞை செய்கிறார். ஆனால் எனது கால்கள் அசைய மறுக்கின்றன.
அவர் எனது முட்டாள்தனத்தை நினைத்து சிரித்துக் கொண்டே கடந்து சென்றார். நான் இங்கே இருந்து போயாக வேண்டும். ஆனாலும் இந்த பெண் என்ன செய்வார் என்று தெரியாது. அவள் பையில் இருந்து கத்தியை எடுத்து என்னை குத்தி விட முடியும். அதை யாரும் பார்க்க மாட்டார்கள். அவள் என்னை ஒரு உதை விட்டாலே போதும்! சுருண்டு விழுந்து விடுவேன்.
அவள் கைகளைப் பாருங்கள்! அவைகள் ஆண்களின் கைகளைப் போல இருக்கின்றன. அந்த புர்க்காவுக்கு பின்னால் ஒரு மோசமான குற்றவாளி ஒளிந்திருப்பானோ! எப்படி இந்த இடத்தை விட்டுக் காலி செய்வது? ஏன்தான் இந்த நேரத்தில் பயணம் செய்தேனோ!
ஐயோ ராமா! நான் பாதுகாப்பாக வீடு போய்ச் சேர அருள் புரிவாயாக! அவள் மட்டும் என்னை ஏதாவது செய்ய முயற்சித்தால், இதோ பார் பெண்ணே! என்னிடம் இருக்கும் எதையும் எடுத்துக் கொள். ஆனால் என்னை மட்டும் கொன்று விடாதே என்று சொல்லி
விடுவேன். எனது தொண்டை வறண்டு விட்டது. யாராவது ஒருவர் வருவதை பார்த்து விட்டால் உடனடியாக அப்போது எழுந்து விட வேண்டும் என்று முடிவு செய்தேன். இன்னொருவர் வருகிறாரா என்று கண்களை அந்த பக்கமும் இந்த பக்கமும் திருப்பினேன். ஒரு சுடுகுஞ்சு கூட இல்லை! அவர்கள் எல்லாம் எங்கே போனார்கள்?
ரயில் எல்லா நேரங்களிலும் வருவதும் போவதுமாக இருக்கும். மக்கள் இங்கும் அங்கும் பரபரப்பாக இயங்குவார்கள். நடைமேடை உயிரோட்டத்துடன் இயங்கும். நிற்பதற்கு கூட இடம் இருக்காது. அவ்வளவு கூட்டமாக இருக்கும். நான் தினமும் பயணிக்கும் பெண்கள் பெட்டியில் கதிரடிக்கும் போது விழும் தானியங்கள் போல மக்கள் திமுதிமுவென குவிவார்கள். ரயில் நிலையங்களில் ரயில் நிற்கும்போது சிலர் மட்டுமே இறங்குவார்கள். காலியான இடத்தில் உட்கார இடம் கிடைத்ததுமே கைப்பைகளும், கூடைகளும் திறக்கப்படும். அவற்றிலிருந்து பீன்ஸ், பட்டாணி, பூண்டு போன்றவற்றை வெளியில் எடுப்பார்கள். பீன்ஸ், பட்டாணி பூண்டுகளை பிரிப்பார்கள். அவைகளின் தோல்களை உரிக்க ஆரம்பித்து விடுவார்கள். சில நேரங்களில் ஊசிகளும் வண்ண வண்ண நூல்களும் வெளித் தோன்றும். வண்ண நூல்கள் சேலைகள், குர்தா, கம்பளி ஸ்வெட்டர் ஆடைகளில் பூக்களாக உருமாறும். பப்படம், ஊறுகாய் சட்டினி, மசாலா விற்பனையாகும். மாமியார், கணவன்மார்களால் துன்புறுத்தப்படும் பெண்களின் கண்ணீர் ஆறுதலாக துடைக்கப்படும். எப்போதாவது அடியும் வசவும் கூட பரிமாறிக் கொள்ளப்படுவது உண்டு.
ராமரக்ஷகாவத் பாடல்களும், காயத்ரி மந்திரங்களும் ஒலிக்கும். நமாஸ் தொழுகை செய்ய ஒரு பகுதி ஒதுக்கி தரப்படும். ரயில் நிலையங்கள் வரவர காலியான இருக்கைகள் மீண்டும் நிரம்பும்? அந்த முகங்கள் எல்லாம் இப்போது எங்கே போய்விட்டன? பீன்ஸ் பட்டாணி, பூண்டு, பப்படம், மசாலா – இவைகள் எல்லாம் எங்கே? அவற்றை எல்லாம் பயங்கரமான முகங்களும், சந்தேகம் நிரம்பிய பைகளும் அப்புறப்படுத்தி விட்டன போலும்! இந்த இடத்தை விட்டு எப்படித்தான் எழுந்திருப்பது?
அப்பாடா! ரயில் வந்துவிட்டது! அது ரயில் நிலையத்திற்கு வந்ததைக் கூட நான் கவனிக்கவில்லை. சரி… சரி… நான் உடனடியாக பெண்கள் பெட்டியில் ஏற வேண்டும்.ஓ! எனதருமை புர்க்கா பெண்ணும் அல்லவா என் பின்னாலேயே ஏறுகிறாள்! என்னை தனியே விட மாட்டேன் என்கிறாளே!
பெட்டி கிட்டத்தட்ட காலியாக கிடந்தது. இரண்டு மூன்று பெண்களே இருந்தனர். காலிக் கூடையை தன் பக்கத்தில் வைத்துக் கொண்டு ஒரு மீன்காரப் பெண் உறங்கிக் கொண்டிருந்தாள். மீன்கூடை நாறுகிறது. பரவாயில்லை. பெட்டியில் மனித இருப்பு இருப்பதே எனக்கு போதுமானது. அந்தப் புர்க்கா பெண்ணும் எனக்கு எதிரிலேயே அமர்கிறாள்.
அவள் அணிந்திருக்கும் புர்க்கா போன்றே ரயிலுக்கு வெளியேயும் கும்மிருட்டாக இருக்கிறது. இருண்ட பெருங்கடலை நீந்திக் கடப்பதற்கு ஒரு வெளிச்ச ரேகையும் கிடைக்கவில்லை. ஐயோ! என்ன செய்வேன்! என் மீது நிலைகுத்தி இருக்கும் அந்தக் கண்களிடமிருந்து தப்பிக்கலாம் என்று நம்பி என் கண்களை இறுக்க மூடினேன். இருட்டு தொலைந்து விடும் என்ற நம்பினேன். இப்போது அவள் என்ன நினைத்துக் கொண்டிருப்பாளோ? அவர்களை நம்பக் கூடாது என்று மக்கள் சொல்கின்றனர். எப்போது அவர்கள் கத்தியை உருவி உங்களை கசாப்பு செய்வார்கள் என்று உங்களுக்கு தெரியாது. என் கூட படித்த ஹசீனாவின் தம்பி அவள் மனைவியை குத்திக் கொலை செய்து விட்டானாம்! இந்தப் பெண்ணும் அதே மாதிரி என்னைக் கொலை செய்து விடுவாளோ என்று என்னால் எண்ணாமல் இருக்க முடியவில்லை.
ஐயோ கடவுளே! யாரோ என்னை உலுக்குகிறார்கள்! கண்களைத் திறக்கிறேன். ஆ! அது புர்க்காவில் இருக்கும் பெண்தான்! ஓ! கூடாது! என்னை என்ன செய்யப் போகிறாள்? உதவி கேட்டு சத்தம் போடலாமா? மீன்காரப் பெண்ணோ அயர்ந்து தூங்குகிறாள். என்னைக் கொன்று போட்டாலும் அவளுக்கு ஒன்றும் தெரியாது. ஓடும் ரயிலிலிருந்து குதித்து விடலாமா? கடவுளே என்னை காப்பாற்று!
சத்தியமாக இனிமேல் ரயிலிலேயே வரமாட்டேன். என் வேலையைக் கூட விட்டு விடுகிறேன். கணினியில் தட்டச்சு செய்வதை விட்டொழிக்கிறேன். இந்த கொடுங்கனவில் துயர படுவதை விட பட்டினி கிடப்பது எவ்வளவோ மேல்!
“சகோதரி! சகோதரி!”
ஓ! அந்தப் பெண்பேசுகிறாள்.
“நான் வரும் ரயில் நிலையத்தில் இறங்குகிறேன். நீங்கள் என் பக்கத்தில் இருந்ததற்கு மிக்க நன்றி. உங்களுக்கு நன்றிக் கடன் பட்டிருக்கிறேன். கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்! இந்த மாதிரி சமயங்களில் தனியாகப் பயணம் செய்வது பற்றி உங்களுக்கு தெரியுமா? நான் மிகவும் பயந்து விட்டேன். அது ரொம்ப கஷ்டமானது. என்னால் நம்ப முடியவில்லை!”
ஓ! அவளும் என்னைப் போலவே பயந்து கொண்டே இருந்திருக்கிறாள். நான் வெடிச்சிரிப்பு சிரித்தேன்.
” இதில் பயப்படுவதற்கு என்ன இருக்கிறது? நானும் தான் தினமும் ரயிலில் போய் வருகிறேன்”.
திடீரென எனது குரல் ரயிலின் விசில் சத்தத்தை விட அதிக வலிமை கொண்டதாக மாறியது.
அவள் தனது கைகளை எனது கைகளுக்குள் வைத்து ” கடவுள் உங்களை காப்பாராக” என்றாள்.
அவளது கைகள் வியர்வையில் ஈரமாக இருக்கின்றன. அவள் என்னைத் தொட்டதுமே எனது வியர்வை அவளது வியர்வையுடன் ஒன்று கலக்கிறது. ரயில் நிற்கிறது. அவளது பைகளை இறக்கி உதவி செய்கிறேன். திடீரென அந்தப் பைகள் லேசாகவும், தீங்கற்றதாகவும் தெரிகின்றன. ரயில் நிலையத்தின் மங்கிய வெளிச்சத்தில் அவள் கொஞ்சம் கொஞ்சமாக மறைகிறாள்.
மீன்காரப் பெண் கொட்டாவி விடுகிறாள். கை கால்களை நீட்டி நெட்டி முறிக்கிறாள். கூடையில் இருந்து ஒரு பையை எடுக்கிறாள். உள்ளே பச்சைப் பசேல் என்ற பீன்ஸ். அந்தப் பசுமை சுற்றியுள்ள எல்லாவற்றிலும் வியாபிக்கிறது. இருட்டில் கண் சிமிட்டுகின்ற நட்சத்திரங்கள் எனது வீட்டுக்குச் செல்லும் வழியை வெளிச்சமாக்குகின்றன.
நன்றி: ஃப்ரண்ட் லைன், ஜூலை,29,2022
தமிழில் ம.கதிரேசன்