Murder short story by Udhaya shankar கொலை குறுங்கதை

கொலை குறுங்கதை – உதயசங்கர்



சித்திரபுத்திரனுக்கு அந்த எண்ணம் மறுபடியும் தோன்றியது. அருகில் அவனுடைய மனைவி சுமி நடந்து வந்து கொண்டிருந்தாள். எதிரே ஒரு பெரிய கண்டெயினர் லாரி வாந்து கொண்டிருந்தது. இன்னும் சில நொடிகளில் அவர்களைக் கடந்து விடும். அப்போது தான் அந்த எண்ணம் வந்தது. அந்தச் சிந்தனை வரும்போதே மூர்க்கமாகத் தான் வந்தது.

அப்படியே சுமியைப் பிடித்துத் தள்ளி விட்டால்…..

அவனுடைய கைகள் பரபரத்தன. எல்லாம் ஒரு நொடியில் முடிந்து விடும். அவன் தள்ளினானா,இல்லை அவள் கால் தடுக்கி விழுந்தாளா என்று கூட யாராலும் சொல்லமுடியாது. விழுந்த அடுத்தகணம் அவளுடைய தலைமீது முன்சக்கரம் ஏறி இறங்கும்போது மண்டையோட்டு எலும்பு நொறுங்குகிற சத்தம் கேட்கும். முகம் சப்பளிந்து மூக்கின் நுனியில் இருக்கும் பெரிய கருப்பு மரு மட்டும் தனியாகப் பிதுங்கும். அவனுக்கு அந்த மருவைப் பிடிக்காது. முத்தமிடும் போதெல்லாம் சொரசொரப்பாக உப்புத்தாளை வைத்து உரசுகிற மாதிரி கன்னத்தில் ஒரு வலியை உருவாக்கும். உடனே அவன் கண்முன்னால் கண்டெயினர் லாரியின் முன்சக்கரத்தின் கீழ் சுமி விழுந்து ரத்தவெள்ளத்தில் கிடக்கும் காட்சி தோன்றியது. அந்தக் காட்சியில் அவளுடைய சேலை தொடை வரை விலகியிருந்தது. உடனே சித்திரபுத்திரன் அதைக் கீழே இறக்கி கணுக்கால்வரை இருக்குமாறு காட்சியை ஒழுங்குபடுத்தினான்.

எல்லாம் ஒரு நொடியில் முடிந்து விட்டது. கண்டெயினர் லாரி அவனைக் கடந்து சென்று விட்டது. அருகில் நடந்து வந்து கொண்டிருந்த சுமி,
“ ஏங்க.. வேர்க்கடலையும் பேரீச்சம்பழமும் வாங்கணும்.. உருண்டை பிடிச்சு வைக்கிறேன்.. தினமும் சாப்பிடுங்க.. மெலிஞ்சுகிட்டே போறீங்க…” என்று சொன்னாள். இப்போது அவனுக்கு நிம்மதியாக இருந்தது. நல்லவேளை!

கொஞ்சநாட்களாக இந்தக் கொலையெண்ணம் அவனுக்குள் வளர்ந்து கொண்டேயிருக்கிறது. அவன் தனியாக இருக்கும் போது எந்தப் பிரச்னையுமில்லை. யாராவது கூட இருந்தால் நொடியின் பின்னத்தில் அவர்களைக் கொலை செய்யும் எண்ணம் வருகிறது. சாதாரணமாகக் கற்பனையே செய்யமுடியாத காரியங்கள் அவனுடைய மனதில் தோன்றுகிறது.

போனவாரம் குருமலைக்கு அவனுடைய நண்பனுடன் சென்றிருந்த போது அவனை மலையிலிருந்து தள்ளிவிட்டாலென்ன? என்று தோன்றியது.
மூன்று நாட்களுக்கு முன் சித்திரபுத்திரனுடன் வேலை பார்க்கும் சக ஊழியரின் வீட்டுக்கு அவருடைய குழந்தையைப் பார்க்கப் போயிருந்த போது அந்தக் குழந்தையின் மூக்கைப் பிடித்து மூச்சை நிறுத்தி விட்டால் என்ன? என்று தோன்றியது.

எப்போதெல்லாம் இப்படியான வன்முறைச்சிந்தனை தோன்றுகிறது என்று யோசித்தான். கூட்டமாக இருக்கும் போது தோன்றுவதில்லை. அவனும் அவனுக்குள் கொலை எண்ணத்தைத் தூண்டுகிறவரும் மட்டும் இருக்கும் போது ஆவேசமாக அந்தக் கற்பனை வருகிறது. கொலைக்கான அத்தனை வழிகளைகளையும், அது முடிந்தபிறகு கொலைசெய்யப்பட்டவரின் முகம் உட்படத் தெளிவாகத் தெரிகிறது. உடனே உடலிலும் மனதிலும் ஒரு வித்தையாசமான உணர்ச்சி தோன்று ஓடுகிறது. அது ஓடும் போது ஏதோ ஒரு திருப்தி நிறைந்து விடுகிறது. மூளையின் ஒரு பக்கம் கொன்றுவிடு கொன்று விடு என்று தூண்டிக்கொண்டேயிருக்கிறது. அதைக் கட்டுப்படுத்த சித்திரபுத்திரன் மிகுந்த சிரமப்பட வேண்டியதிருக்கிறது.

இத்தனைக்கும் யாரும் அவனுக்கு எந்தக் கெடுதலும் செய்யவில்லை. முன்பின் தெரியாதாவர்களைப் பார்க்கும் போதும் இந்த எண்ணம் தோன்றியது. அரிவாளால் கழுத்தைச் சீவித் தள்ளுவது, அடித்துக் கொலை செய்வது, மூச்சுத்திணறச்செய்வது, தண்ணீரில் மூழ்கடிப்பது, தூக்கில் மாட்டுவது, எதிர்பாராத்தருணத்தில் பின் மண்டையில் அடிப்பது, தூக்கமாத்திரைகளைக் கொடுப்பது, என்று விதவிதமான கொலைமுறைகள் அவனுக்குத் தோன்றிக் கொண்டேயிருந்தன. அவனுக்கு பைத்தியம் பிடித்து விட்டதென்றோ அல்லது பிடிக்கப்போகிறதென்றோ அவன் நினைத்தான்.

மனநல மருத்துவரிடம் சென்று பார்த்தான். அவர் கேட்ட கேள்விகள் அவனைச் சோர்வடைய வைத்தன. முக்கால் வாசிக் கேள்விகளுக்கு அவன் இல்லை என்றே பதில் சொன்னான். அவர் கடைசியில் இனி தொலைக்காட்சி பார்க்காதீர்கள் என்று ஆலோசனையும் மருந்து மாத்திரைகளையும் கொடுத்து அனுப்பினார்.
மனநல மருத்துவரை சித்திரபுத்திரனுக்கு அறிமுகப்படுத்தி அவனுடன் கூட வந்திருந்த நண்பர் சின்னச்சாமி அவனுக்கு ஆறுதல் கூறினார். வன்முறையினால் பாதிக்கப்பட்ட மனதின் எதிர்வினைகள் இவை. இப்படியான எண்ணங்களும், காட்சிகளும் ஒரு வடிகால் என்று நினைத்துக் கொள்ளுங்கள், என்று ஆற்றுப்படுத்திக்கொண்டே வந்தார். சித்திரபுத்திரன் தலை குனிந்து கேட்டுக் கொண்டே வந்தான்.

அவன் நிமிர்ந்தபோது தூரத்தில் ஒரு கார் வந்து கொண்டிருந்தது. கருப்பு நிறக்கார் சற்று வேகமாக வருவதைப் போலத் தெரிந்தது. சித்திரபுத்திரனின் மூளையில் மறுபடியும் அந்த எண்ணம் புயலைப்போல வீசியது. கார் அருகில் வர சில நொடிகளே இருக்கின்றன. சின்னச்சாமியின் காலை இடறி விட்டால் போதும்….
சித்திரபுத்திரன் மனதை அடக்கி வைக்க முயற்சி செய்தான். ஏனோ அவர் பேச்சு அவனுக்குக் கொலைச்சிந்தனைக்கு நெய்யூற்றியது மாதிரி இருந்தது.
இதோ..நெருங்கி விட்டது…

சித்திரபுத்திரன் காலைத் தூக்கி விட்டான். சின்னச்சாமியின் கால்களுக்குக் குறுக்கே நீட்டிவிட நினைத்தான். நீட்டியே விட்டான்.

ஆ… ஐய்யோ…!

சில நாட்களுக்கு முன் போட்டிருந்த தார்ச்சாலையின் கருப்பு நிறத்தோடு ரத்தத்தின் சிவப்பு நிறமும் கலந்து குளம் மாதிரிக் கட்டியது.
சித்திரபுத்திரன் கூழாகக் கிடந்தான்.