Posted inPoetry Series
கவியோவியத் தொடர் யுத்த கீதங்கள்: கொம்பு முளைத்த நாற்காலி 35 – நா.வே.அருள்
அதிகாரத்திற்குக் கொம்பு முளைத்த விஷயம்
உலகத்திற்கே தெரிந்துவிட்டது.
விவசாயி தலையில்
மிளகாய்த் தோட்டங்கள்!
அதிகாரத்திற்கு
முதலில் செயலிழக்கும் உறுப்புகள்
அதன் கண்கள்.
அதிகாரம் தற்போது
மிகவும் பழுத்துவிட்டது
ஊன்றுகோல் இல்லாமல் விழுந்துவிடும் ஆபத்து
சுருள் முள்வேலிகள்
ஆணிக் கம்பங்கள்
தெருக்களில் கல்வாரி மலைகள்
அதிகாரத்திற்கு
ஒரு குதிரையின் லாடம் மற்றும்
இரும்புத் தொழிற்சாலை போதும்.
வயல்வெளி அதற்கொரு கிழிந்த ரூபாய் நோட்டு.
கடவுளின் கைத்தொழிலில்
சாத்தான்களின் நிர்வாகம்
ஜனநாயகம் ஒரு ஷோ கேஸ் பொம்மை
அதிகாரம்
வெளுத்துப்போன கர்ப்பப் பையில்தான்
வளரத் தொடங்கியது
அதன் நிழலே அதனை
மெல்ல மெல்லத் தின்னத் தொடங்குவதால்
காணாமல் போய்விடுகிறது
விசித்திரம் என்னவெனில்
அதிகாரத்தின் இறுதி ஊர்வலம்
பட்டாபிஷேகம் போல் பளபளக்கும்!
கவிதை – நா.வே.அருள்
ஓவியம் – கார்த்திகேயன்