மினாரி (Minari) வேற்று மண்ணில் விளையும் மூலிகை – இரா. இரமணன்
2020ஆம் ஆண்டு அமெரிக்க திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட கொரிய படம். 2021இல் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. லீ ஐசக் சுங் இயக்கத்தில் ஸ்டீவன் யென், ஹான் யேரி, ஆலன் கிம், நோயெல் கேட் சோ, யூன்யூ ஜங், வில் பேட்டன் ஆகியோர் நடித்துள்ளனர். இயக்குனரின் சுய சரிதையை சிறிது தழுவி எடுக்கப்பட்டுள்ளதாம்.
அமெரிக்காவில் குடியேறியுள்ள கொரியக் குடும்பம் ஒன்று. கணவன், மனைவி, 10-12 வயதில் ஒரு பெண் குழந்தை, 5-6 வயதில் ஒரு பையன். கணவன் மனைவி இருவரும் கலிபோர்னியாவில் கோழிக்குஞ்சு பொரிக்கும் ஆலை ஒன்றில் பணி புரிகிறார்கள். கணவன் ஜேகப்பிற்கு நிலம் வாங்கி விவசாயம் செய்ய வேண்டும் என்று பெரும் கனவு. அதனால் அரக்கான்சாஸ் மாநிலத்திற்கு குடிபெயர்ந்து அத்துவானக் காட்டில் நிலம் வாங்குகிறான். சக்கரங்கள் மேல் நிற்கும் தற்காலிக வீட்டில் வசிக்க வேண்டியதிருக்கிறது. அந்த இடம், வீடு என எதுவுமே மனைவி மோனிக்காவிற்கு பிடிக்கவில்லை. மகன் டேவிடிற்கு இருதய நோய். மருத்துவமனை வெகு தூரம். அந்தப் பகுதியில் சர்ச் எதுவும் இல்லை. புயலடித்தால் வீடு பறந்துவிடும் என்று ஜேகப் கூறுவதிலிருந்து அவர்கள் இடையே சண்டை அதிகமாகிறது.
நீரோட்டம் பார்ப்பவர் 200டாலர் கேட்பதால் தானே தனியாக கிணறு தோண்டி விவசாயம் செய்கிறான். வேலைக்கு மட்டும் பால் என்பவரை வைத்துக் கொள்கிறான். அவர் இறை நம்பிக்கை மிக்கவர். ஜேகப் வழிபாட்டில் ஈடுபாடு இல்லாதவன். ஆனால் மோனிக்கா நம்பிக்கை உள்ளவள். இரவில் பிரார்த்தனை செய்தால் சொர்க்கத்தைப் பார்க்கலாம் என்று மகனுக்கு நம்பிக்கை ஊட்டி வளர்க்கிறாள்.
இதற்கிடையில் டேவிட்டைக் கவனித்துக்கொள்ள கொரியாவிலிருந்து தாய்வழிப் பாட்டியை வரவழைக்கிறார்கள். தன்னுடைய படுக்கை அறையை பாட்டியுடன் பகிர்ந்து கொள்ள விரும்பாத டேவிட் அவளை வெறுப்புடன் அணுகுகிறான் ஜேகப் சிரமப்பட்டு பயிர் செய்த காய்கறிகளை வாங்கிக்கொள்கிறேன் என்று சொன்ன நகர வியாபாரி வேண்டாமென்று சொல்லிவிடுகிறார். நஷ்டம் ஏற்பட்டுவிட்டதால் கணவன் மனைவிக்குள் சண்டை வலுக்கிறது. பிறகு சமாதானம் ஆகிறார்கள். கடன் வாங்கி மீண்டும் பயிர் செய்கிறான். இந்த முறை கிணற்றில் தண்ணீர் வற்றிவிடுகிறது. வீட்டிலும் தண்ணீருக்கு கட்டிய பணம் முடிந்துவிட்டதால் தண்ணீர் நின்றுவிடுகிறது..சிறுவன் டேவிட்டும் பாட்டியும் சேர்ந்து வெளியிலிருந்து தண்ணீர் கொண்டுவந்து நிரப்புகிறார்கள். பாட்டிக்கு பக்கவாதம் வந்துவிடுகிறது. குழந்தைகளை நண்பர் வீட்டில் விட்டு பாட்டியை மருத்துவமனையில் சேர்த்து கவனித்துக் கொள்கிறாள். ஒருவாறு பாட்டி குணமாகி திரும்புகிறாள்.
இந்த முறை ஜேகப் நீரோட்டம் பார்ப்பவரின் உதவியோடு மீண்டும் கிணறு தோண்டுகிறான். பயிராகி வந்துள்ள காய்கறிகளை மாதிரி பார்த்துவிட்டு வியாபாரி ஒருவர் அடுத்த வாரத்திலிருந்து வாங்கிக் கொள்கிறேன் என்கிறார். பாட்டியின் ஆறுதலான,தைரியமூட்டும் வார்த்தையாலோ அல்லது இயற்கையாகவோ டேவிட்டிற்கு இருதய நோய் சற்று குணமாகிறது. ஆனால் மோனிக்கா கலிபோர்னியா திரும்பி சென்றுவிடலாம்;இங்கு கடன் அதிகமாகிறது.குழந்தைகளைக் கவனித்துக் கொள்ள முடியவில்லை என்கிறாள். ஜேகப் நிலத்தைவிட்டு வர முடியாது என்கிறான். இருவரும் பிரிவது என்று முடிவு செய்கிறார்கள். வீட்டில் தனியாக இருக்கும் பாட்டி குப்பைகளை எரிக்கும்போது காய்கறி சேமித்து வைத்திருந்த கிடங்கு தீப்பற்றி எரிந்துவிடுகிறது. கணவன் மனைவி இருவரும் சேர்ந்து காய்கறிகளை முடிந்த மட்டும் காப்பாற்றுகிறார்கள். தன்னால் இவ்வளவு பெரிய விபத்து ஏற்பட்டுவிட்டதே என்று வருந்தி பாட்டி வீட்டைவிட்டு வெளியேறுகிறாள். ஆனால் டேவிட்டும் அக்கா ஆனியும் அவளை திரும்ப அழைத்து வருகிறார்கள். ஓடைக்கரையில் பாட்டி விதைத்த மினாரி எனும் கீரை வகை செழித்து வளர்ந்திருக்கிறது. அதை ஜேகப் அறுவடை செய்வதோடு படம் முடிகிறது.
படம் எந்தவித மிகை உணர்ச்சியும் இல்லாமல் இயல்பாக அதே சமயம் நம்மை நெகிழ்விக்கவும் சிரிக்கவும் கதையோடு ஒன்றவும் செய்விக்கிறது. கணவன், மனைவி இருவரில் யார் பக்கம் நியாயம் என்று நம்மால் முடிவு செய்ய முடியவில்லை. மோனிகா ஒரு குடும்பத் தலைவிக்கே உரித்தான எச்சரிக்கை உணர்வு, பிள்ளைகளை வளர்க்க வேண்டும் என்கிற கவலை, அகலக் கால் வைக்காமல் வருகின்ற வருவாயை வைத்து குடும்பத்தை நடத்த வேண்டும் என்கிற உணர்வுகளோடு வாழ்கிறாள். எந்த நேரமும் கோழிக்குஞ்சுகளின் பின்புறத்தையே பார்த்துக்கொண்டு இருக்கும் தொழிலை விட்டு, ஐம்பது ஏக்கர் பரப்பளவில் கொரிய காய்கறிகள், பழங்களை விளைவித்து ஒரு கவுரவமான வாழ்க்கை வாழ வேண்டும் என்கிற ஜேகப்பின் கனவையும் குறை சொல்ல முடியாது. கொரிய கிராமிய வாழ்க்கைமுறைகளையும் பேரனிடம் பாசத்தையும் வைத்திருக்கும் பாட்டியும் அமெரிக்க முறையில் வாழும் பேரன் டேவிட்டுக்கு பாட்டியின் பால் ஏற்படும் ஒவ்வாமையும் ரசிக்க வைக்கிறது. கணவன்-மனைவி சண்டை போட்டுக்கொண்டாலும் முக்கிய தருணங்களில் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருப்பது இரு நேர்மையான உள்ளங்களைக் காட்டுவதாக உள்ளது.
பதினாறு பாடல்கள் என்று இணையதள விவரங்கள் கூறுகின்றன. ஆனால் ஒவ்வொன்றும் ஒரு நிமிடம் இரு நிமிடம் அவ்வளவுதான். சர்ச் என்பது சமூக உறவுகளுக்கான இடம் என்பதும் அங்கும் முதலில் இன, அந்தஸ்து வேறுபாடுகளில் தொடங்கும் தொடர்புகள் பின்னர் சிறுவர்களுக்கிடையே நட்பாக மாறுவது என யதார்த்தமாக காட்டியிருக்கிறார். இறை நம்பிக்கை அதிகம் உடைய பாலுக்கும், இறை நம்பிக்கை குறித்து ஒரு அலட்சிய போக்கு கொண்ட ஜேகப்பிற்கும் இடையே நிலவும் உறவும் சுவாரசியமானது.
அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு குறும்புகள் செய்யும் டேவிட்டாக நடிக்கும் சிறுவனை நாம் நிச்சயம் ரசிப்போம். அவனுடைய அக்கா ஆனியின் பாத்திரம் சிறிதளவே இருந்தாலும் அந்தப் பெண்ணும் கச்சிதமாக செய்திருக்கிறார்.
முதலில் ஜனவரி 2020இல் சன்டேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு இரண்டு விருதுகள் பெற்றது. 93ஆவது ஆஸ்கார்(அகடெமி) விருதுகளுக்கு ஆறு பிரிவுகளில் நியமனம் செய்யப்பட்டு பாட்டியாக நடித்த யுவான் யூ ஜங்கிற்கு (75வயது) சிறந்த துணை நடிகை விருது கிடைத்துள்ளது. இவர்தான் ஆஸ்கார் விருது பெரும் முதல் கொரியன் நடிகர். 1947இல் பிறந்த இவர் கொரிய திரைப்படங்கள், தொலைக்கட்சிகளில் 50 வருடங்களுக்கு மேல் நடித்துக் கொண்டிருக்கிறார். பிரிட்டிஷ் அகெடமி விருது போன்ற பல்வேறு விருதுகள் பெற்றிருக்கிறார். இந்தப் படத்திற்கு கோல்டன் குளோப் விருது போன்ற வேறு பல விருதுகளும் கிடைத்திருக்கின்றன. விமர்சகர்களாலும் பாராட்டப்படுகிறது.