சாதி எனச்சொல்லி மோதி அழிந்திட
வீதியில் நிற்காதே!-உயிர்
வேதனையில் மிக்க சோதனையில் நாளும்
வெந்து இறக்காதே!
நாட்டு மதப்பேயை ஓட்டு நலம்பெறக்
காட்டு அறிவினையே!-உன்
பாட்டுப் புதுநெறி ஊட்டும் நிலையினை
நாட்டுச் செறிவினையே!
நொந்து உழைப்பவர் வெந்து வதைபட
குந்தித் தின்பாரோ?- இது
நிந்தை உடனெழு வந்து களம்புகு
விந்தை புரிபவரே!
சொந்தமாய் மக்களைச் சொல்லியே நாளும்
சொந்த நலம்பெறுவார்!-அவர்
சூழ்ச்சியில் வீழாமல் சூதினைக் கண்டெடு
வாழ்வில் நலம்பெறவே!
சாதியும் மதமும் சாத்திரக் குப்பையும்
வீதியில் புதைத்திடு!-அவை
பாதியில் வந்தவைப் பாழைத் தந்தவை
ஆதியில் நிலைத்திடு!
நாளும் புகழ்பெற நாநிலம் மகிழ்வுற
தோள்கள் உயர்த்தியே- இனி
மாளும் அவரது கோலத்தைப் போக்கிடு
ஞாலம் பிறந்தவனே!