Shalva Amonashvili Kulanthaigalai Kondaduvom Children's Book Review By Uma Maheswari. குழந்தைகளைக் கொண்டாடுவோம் – ஜ. அமனஷ்வீலி

நூல் அறிமுகம்: குழந்தைகளைக் கொண்டாடுவோம் – உமா மகேஸ்வரி



நூல் : குழந்தைகளைக் கொண்டாடுவோம்
ஆசிரியர் : ஷ. அமனஷ்வீலி
தமிழில் : டாக்டர் இரா. பாஸ்கரன்
பதிப்பகம் . பாரதி புத்தகாலயம்
விலை : ரூ 120
பக்கங்கள்: 158
புத்தகம் வாங்க கிளிக் செய்க: https://thamizhbooks.com/

குழந்தைகளை கொண்டாடுவோம் கல்விச் சிந்தனைகளைத் தரக்கூடிய இந்த புத்தகம், ஆசிரியர்களுக்கான மிகச் சிறந்த ஒரு கையேடு என்று கூறலாம். ஆசிரியர்கள், பெற்றோர்கள்,கல்வியாளர்கள, கல்வி அதிகாரிகள் என்று பலரும் வாசிக்கக் கூடிய ஒரு புத்தகம். முக்கியமாக தலைமையாசிரியர்கள் இதனை வாசிக்க வேண்டும். அப்போதுதான் அனைத்து ஆசிரியர்களையும் கற்பித்தலின் பரிமாணங்கள் குறித்து மிகச் சிறப்பாக வழிநடத்த இயலும்.

பகல் கனவு நூலை நாம் அனைவரும் வாசித்த்திருப்போம் அதே போன்று, ஆனால் அதைவிட சற்று கூடுதலான மேம்படுத்தலுடன் எழுதப்பட்டிருக்கும் இந்த புத்தகம் ஒரு ஆசிரியரின் வகுப்பறை அனுபவங்களின் நாட்குறிப்பைப் போல மிகவும் சுவாரஸ்யமானதாக இருக்கிறது என்பேன். ஏனெனில் பகல் கனவு நூல் நான்காம் வகுப்பு குழந்தைகளை மையப்படுத்தியது, இதுவோ 6 வயது குழந்தைகளுக்குத் தரப்படும் கல்வி குறித்தானது.

ஆறுவயது குழந்தைகளுக்கு எவ்வாறெல்லாம் கற்பித்தலை எடுத்துச் செல்வது என்று ஷா. அமனஷ்வீலி என்ற சோவியத் நாட்டின் கல்வியியல் அறிஞர் நமக்கு அழகாகத் தொகுத்துக் கொடுத்துள்ளார். 6 வயது குழந்தைகளுக்கு, பள்ளிக்கு வரும் முன்பே அல்லது பள்ளிக்குள் அவர்கள் வந்தபிறகு எவ்வாறெல்லாம் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுப்பது என்பதுதான் இந்த புத்தகத்தின் சாராம்சம்.

இவர் குழந்தை வளர்ப்பு கல்வி இயலில் தனக்கான 15 ஆண்டுகள் கல்வி அனுபவப் பின்புலத்துடன் , ஓராண்டு காலத்தில் பதிவுசெய்து 800 பக்கங்கள் கொண்ட நாட்குறிப்பின் அடிப்படையில் முன் தயாரிப்பு வகுப்புகளைத் திட்டமிடுகிறார். அவற்றில் 5 முக்கிய நாட்களில் அவர் செய்த செயல்பாடுகளின் பதிவுகளை நம்மோடு பகிர்ந்து கொள்வது தான் குழந்தைகளைக் கொண்டாடுவோம் புத்தகம்.

முதல் நாள், 20-ஆம் நாள் , 84 ஆம் நாள் 122-வது நாள் கடைசியாக 170 ஆவது நாள் இப்படியான கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளை தொகுத்து இந்த புத்தகத்தில் நமக்கு கொடுத்துள்ளார் அமனஷ்வீலி. இந்த ஐந்து நாட்களின் அனுபவங்களே நமக்கு ஓர் ஆண்டு காலக் கல்வியை, குழந்தைகள் பெறும் முறைகளைக் கண்முன் கொண்டு வருகின்றது.

Shalva Amonashvili Kulanthaigalai Kondaduvom Children's Book Review By Uma Maheswari. குழந்தைகளைக் கொண்டாடுவோம் – ஜ. அமனஷ்வீலி
அமனஷ்வீலி (Shalva Amonashvili)

ஆரம்பப்பள்ளியில் தயாரிப்பு வகுப்பில் உள்ள 6 வயது குழந்தைகளுடன் ஆசிரியர் எப்படிக் கலந்து பழக வேண்டும் என்பதற்கான உதாரண நூல் தான் இது. நவீன வாழ்க்கை மற்றும் சமுதாய வளர்ச்சி ஆகியவற்றை கவனத்தில் கொண்டு ஆரம்பப்பள்ளியில் உள்ளடக்கத்தையும் முறையும் மாற்றி அமைக்க வேண்டும் என்ற கருத்து உருவாக வேண்டும் என்பதை இந்த நூலாசிரியர் முன்வைக்கிறார்.

இந்த புத்தகத்தில் , ஆசிரியர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய செய்திகள் ஏராளமாக இருக்கின்றன , அதோடு அந்த செய்திகளைத் தங்கள் அனுபவங்களாக மாற்றியமைக்கக்கூடிய ஒரு முயற்சியும் தேவைப்படுகிறது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

இப்புத்தகத்தை வாசிக்கும் போது இன்றைய காலச் சூழலில் ஒரு பெற்றோரோ அல்லது ஆசிரியரோ வியப்புக்கு தங்களை ஆட்படுத்திக் கொள்ளக் கூடும். ஏனென்றால் இந்த புத்தகத்தில் , இன்றைய தமிழகத்தில் இருக்கக்கூடிய பள்ளிச் சூழலும் கல்விச் சூழலும் ஒரு இடத்தில் கூட இடம் பெறவில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். ஆமாம் இங்கு தான் ஆசிரியர் பணி அதிகாரிகளுக்கான ஆணைகளுக்கான பணியாக மாறிவிட்டதே.

ஆசிரியர் பணி என்ன என்பதனை அழகாக ஆசிரியரியலாக மிகவும் அற்புதமாக கொடுக்கப்பட்டுள்ள ஒரு புத்தகம். நமக்குத் தெரியாத எந்த விஷயமும் இந்த புத்தகத்தில் இல்லை . நமக்குத் தெரிந்தவை என்றாலும் நாம் பின்பற்றாத வகுப்பறைகள் குறித்து தான் இங்கு பேசப்பட்டுள்ளது.

நம்முடைய வகுப்பறையை எப்படி இயல்பாகக் கட்டமைப்பது இயல்பாகத் திட்டமிடுவது, குழந்தைகளுக்கான வகுப்பறையாக எப்படி மாற்றுவது என்ற
அழுத்தமான புரிதலை ஆசிரியர்களுக்குத் தருகிறது இந்நூல்.

ஆசிரியர்களுக்கும் குழந்தைகளுக்கும் இடையேயான அணுகுமுறையும் உறவு முறையும் கற்பித்தல் முறையும் இங்கு மனம் திறந்து பேசப்படுகின்றன.
குழந்தைகள் தான் என் ஆசிரியர்கள் என்று கூறுகிறார் இந்த நூலாசிரியர், குழந்தைகளை முதல் நாள் பள்ளிக்கு வரும் பொழுது எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதற்காக சில இரவுகள் தூங்காமல் அவர் தயாரிக்கும் முன் தயாரிப்பு மிகவும் சுவாரசியமாக இருக்கிறது எல்லா குழந்தைகளுக்கும் கடிதம் எழுதி அனுப்புகிறார் . அந்த கடிதத்தைப் படிக்கக் கூடிய குழந்தைகள் இந்த ஆசிரியரைப்பற்றி மிகப்பெரிய கனவுகளுடன் இருக்கிறார்கள். முதல் நாள் பள்ளிக்கு வரும் பொழுது ஒவ்வொரு குழந்தையையும் (அவர்களது படங்களை ஏற்கனவே சேகரித்து வைத்திருந்ததனால்) பெயர் சொல்லி அழைக்கிறார் ஆசிரியர். ஒவ்வொரு குழந்தையும் ஆச்சரியமாக பார்க்கிறார்கள் .அதிசயக்கின்றனர் பெற்றோர்கள் , இப்படியான ஒரு ஆசிரியரா என்று. இவையெல்லாம் நடைமுறை யதார்த்தங்களைத் தாண்டி இருந்தாலும் இப்படி நடக்குமானால் அந்தக் கல்விமுறையில் கற்றல் கற்பித்தல் வெகு சிறப்பாக இருக்கும் என்பதே இங்கு நமக்கு சொல்லும் செய்தியாக எடுத்துக் கொள்ளலாம்.

குழந்தைகளிடையே, அவர்களது உணர்வுபூர்வமான வாழ்க்கையில் மென்மை, இரக்கம், கவனம், அனுதாபம், அன்பு, இன்ப துன்பங்களை பகிர்ந்து கொள்ளுதல் ஆகியவற்றை வளர்க்கக் கூடிய ஒரு மிகச் சிறந்த தளம் பள்ளியின் வகுப்பறைகளே, குறிப்பாக, தொடக்கப் பள்ளிகள். அச்செயலில் ஈடுபட்டு பணியாற்றும் மிக முக்கியக் கருவி ஆசிரியர் தான் என்பதை மையமாகக் கொண்டு உரையாடுகிறார் இந்த நூலாசிரியர் பல்வேறு உதாரணங்களுடன்.

Shalva Amonashvili Kulanthaigalai Kondaduvom Children's Book Review By Uma Maheswari. குழந்தைகளைக் கொண்டாடுவோம் – ஜ. அமனஷ்வீலி
அமனஷ்வீலி (Shalva Amonashvili)

மதிப்பெண்கள் என்பவை கால் உடைந்த போதனா முறையின் ஊன்றுகோல் ,ஆசிரியரின் அதிகாரத்தை நிலைநாட்டும் தடி, தடியையும் மதிப்பெண்களையும் விட்டுப் பிரிவது ஆசிரியர்களுக்கு எளிதல்ல ஏனெனில் எந்த ஒரு கல்வி போதனை மற்றும் குழந்தை வளர்ப்பு முறைக்கு ஆசிரியர் மிகவும் பழக்கப்பட்ட விட்டாரோ அந்தக் கல்வி முறையை மாற்றி அமைப்பது எளிதல்ல. ஆசிரியர் தன்னையும் தன் கண்ணோட்டங்களையும் கருத்துக்களையும் தன் அனுபவத்தையும் மாற்றியமைக்க வேண்டும் என்பதுதான் பொருள்.

குடும்பத்திலும் பள்ளியிலும் குழந்தை வளர்ப்புத் தன்மைகள் ஒன்றுக்கொன்று முரணாக இருக்கக்கூடாது குழந்தை வளர்ப்பிலும் அவர்களுக்கு கல்வி போதிப்பதில் பள்ளிதான் மையமாக விளங்கவேண்டும் குடும்ப வளர்ப்பின் விஷயத்தில் குறிப்பிட்ட கோரிக்கைகளை பெற்றோர்கள் முன்வைக்க பள்ளிக்கு உரிமையுண்டு என்று பெற்றோர் கூட்டத்தில் வெளிப்படுத்துகிறார் அமனஷ்வீலி.

கல்வி கற்பிப்பது என்பது எளிய நிகழ்ச்சிப் போக்கல்ல, குழந்தையின் சக்தியையும் திறனையும் வளர்க்கும் பொருட்டு கடினமாகத் தான் இருக்க வேண்டும், புதிய விஷயங்களை தெரிந்து கொள்வதில் உள்ள இடர்பாடுகளைக் கண்டு குழந்தை அஞ்சாவிட்டாலும், பல காரணங்களினால் முக்கியமாக தனது கடமையைச் செய்யும்படி அக்குழந்தையை நிர்ப்பந்திப்பதன் காரணத்தினால் அவர்களிடம் ஏற்படும் படிக்கும் ஆர்வம் மறைகிறது . குன்றாத கல்வி ஆர்வத்தை குழந்தையிடம் எப்படி ஊக்குவிப்பது எப்படி வளர்ப்பது சுய கல்வி பாதையில், அக்குழந்தை நடைபோட உதவ நாம் உதவலாம் என்பதனை வரிக்குவரி மிக அழகாக இந்த நூலில் ஆசிரியர் விரிவாக ஆய்வை போல தொகுத்துக் கூறியுள்ளார்.

குழந்தையின் மீது மனிதாபிமான உறவைக் கொள்ள வேண்டுமெனில் ஒவ்வொரு குழந்தையின் எல்லையற்ற உள்ளாற்றலை நம்பவேண்டும். ஒரு ஆசிரியருக்கு உரித்தான பெரும் பொறுமை வேண்டும் குழந்தை மீது இரக்கம் காட்ட வேண்டும் குழந்தையின் மனதை ஆழமாக புரிந்து கொள்ள வேண்டும் இவற்றையெல்லாம் நாம் சிந்தித்தால், இன்றைய கல்வி முறையில் இவை இருக்கின்றதா என்பதை நாம் பரிசோதனை செய்து பார்க்க வேண்டும் என்று தோன்றினால் அதுவே இப்புத்தகத்தின் சாதனையாகக் கூடும்.

குழந்தைகளைக் கொண்டாடுவோம் என்ற இந்த நூலை எந்த ஒரு வரியையும் விட்டு விடாமல் மிகக் கவனமாக நாம் வாசிக்க வேண்டிய புத்தகமாகப் பார்க்க முடிகிறது.ஒவ்வொரு மனிதருக்கும் பைபிளை போல திருக்குர்ஆனை போல பகவத்கீதையை போல மிக முக்கியமாக ஆசிரியர்களின் வேத நூலாகக் கூட இதை கருதலாம். ஏனென்றால் ஆசிரியர் எவ்வாறு குழந்தைகளை அணுகுவது கற்பிப்பது அவர்களை சமூகத்தின் மிகச் சிறந்த மனிதர்களாக உருவாக்குவது என்று பண்பட்ட ஒரு கல்வி முறையை நமக்கு மிகவும் அற்புதமாக வழங்கியுள்ளது இந்த நூல் ஆகவேதான். இவ்வாறு நான் கூறுகிறேன் மிக முக்கியமான புத்தகம்

1982 ஆம் ஆண்டில் மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகத்தில் தமிழ் மொழிபெயர்ப்பாக – குழந்தைகள் வாழ்க என்ற பெயரில் வெளிவந்த இந்த நூலை, இப்போது இந்திய மாணவர் சங்கத்துடன் இணைந்து பாரதி புத்தகாலயம் குழந்தைகளைக் கொண்டாடுவோம் என்ற பெயரில் வெளியிட்டுள்ளது.