சிறுகதைச் சுருக்கம் 100 : வ.வே.சு.ஐயர் ‘குளத்தங்கரை அரசமரம்’ சிறுகதை – ராமச்சந்திர வைத்தியநாத்
தமிழின் முதல் சிறுகதை என்கையில் ஆச்சரியமளிக்கிறது. விடுதலை இயக்கத்தில் ஒரு மையமாக இருந்த ஐயர் அன்றே பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை மையமாகக் கொண்டு படைப்பை உருவாக்கியது முக்கியத்துவம் பெறுகிறது,
குளத்தங்கரை அரசமரம்
வ.வே.சு.ஐயர்
பார்க்கப்போனால் நான் மரந்தான். ஆனால் என் மனஸிலுள்ளதையெல்லாம் சொல்லுகிறதானால் இன்னைக்கெல்லாம் சொன்னாலும் தீராது. இந்த ஆயுசுக்குள் கண்ணாலே எத்தனை பார்த்திருக்கிறேன்! காதாலே எத்தனை கேட்டிருக்கிறேன்! உங்கள் பாட்டிகளுக்குப் பாட்டிகள் தவந்து விளையாடுவதை இந்த கண்ணாலே பார்த்திருக்கிறேன். சிரிக்கிறீர்கள், ஆனால் நான் சொன்னதிலே என்னவேணும் பொய்யில்லை. நான் பழைய நாளத்து மரம். உங்கள் கொள்ளு பாட்டிகளின் பாட்டிகளெல்லாம் நம்ம குளத்தங்கரைக்குத்தான் குடமுங் கையுமாக வருவார்கள். சில பேர் குழந்தைகளையுங் கூட கூட்டி வருவார்கள். பட்டு பட்டாயிருக்கும் குழந்தைகள். அதுகளை கரையில் விட்டுவிட்டுப் புடவைகளை அழுக்குப் போகத் தோய்த்து மஞ்சள் பூசிக்கொண்டு அழகாக ஸ்நானம் பண்ணுவார்கள். குழந்தைகளெல்லாம் ராஜகோபாலன் போலத் தவந்து கொண்டு மல்லிகைச் செடியண்டே போய் மல்லிகை மொக்குகளைப் பார்த்துச் சிரிக்கும்.
குளத்தங்கரையெல்லாம் கம் என்று மணம் வீசும். இப்பொழுது ஆதரிப்பாரில்லாமல் பட்டுப்போய்விட்டது. இப்போது நான் உங்களுக்கு அந்தக் காலத்துக் கதை ஒன்றும் சொல்லுவதாக இல்லை. மனசு சந்தோஷமாயிருக்கும்போது சொல்லுகிறேன். ஏழெட்டு நாளாய் எனக்கு ருக்மிணியின் ஞாபகமாகவே இருக்கிறது. பதினஞ்சு வருஷமாச்சு ஆனால் எனக்கு நேற்று போலிருக்கிறது.
பார்த்தால் சுவர்ண விக்கிரகம் போலிருப்பாள் குழந்தை. கையும் காலும் தாமரைத் தண்டுகள் மாதிரி நீளமாயிருக்கும். சரீரமோ மல்லிகைப் புஷ்பம் போல் மிருதுவாக இருக்கும். அவள் கண்களைப் பார்த்ததும் நீலோற்பலம் நிறைஞ்ச நிர்மலமான நீரோடையைப் போலிருக்கும். ஸோமவார அமாவாசைகளில் பரமாத்மாவைப் பூஷிக்கிறதற்காக என்னைப் பிரதக்ஷ்ணம் செய்வாள். அப்போது அவள் என்னைப் பார்க்கும் பார்வையிலிருக்கும் அன்பை என்னெவென்று சொல்லுவேன்! என்னுடைய காய்ந்துபோன கப்புகளுங்கூட அவளுடைய பிரேமையான பார்வை பட்டதும் துளிர்த்துவிடுமே!
அவள் அப்பா காமேசுவரையர் நல்ல ஸ்திதியில் இருக்கிறார். குழந்தை பேரில் அவருக்கு மிகுந்த பிரேமை. அவளுக்கச் செய்வதற்கு என்றால் அவருக்கு சலிக்கிறதே இல்லை. கடைவீதியில் பட்டுத் தினுசுகள் புதுசாக வந்திருப்பது ஏதாவது பார்த்தாலே நம்ம ருக்மிணி அணிந்து கொண்டால் அழகாக இருக்கும் என்று உடனே வாங்கி வந்துவிடுவார். முதல் தரமான வைரமும் சிவப்பும் இழைத்து அவளுக்கு நிறைய நகைகள் செய்திருந்தார்.
ஏழை வீட்டுப் பெண்ணாயிருந்தாலும் சரி பணக்காரர் வீட்டுப் பெண்ணாயிருந்தாலும் சரி அவளுக்கு எல்லா தோழிகள் பேரிலும் ஒரே பயந்தான். பிச்சைக்காரர்கள் வந்தால் கை நிறைய அரிசி கொண்டு வந்து போடுவாள். கண் பொட்டையான பிச்சைக்காரர்களைப் பார்க்கும் போது அவளை அறியாமலேயே அவள் கண்களில் தாரை தாரையாக கண்ணீர் பெருகுவதை பார்த்திருக்கிறேன்!
இவ்விதம் கண்ணுக்கு கண்ணாய் நான் பாவித்து வந்த என் அருமைக்குழந்தையின் கதி இப்படியா போகணும்! பிரம்ம தேவனுக்குக் கொஞ்சங்கூடக் கண்ணில்லாமல் போய்விட்டதே! ஆனால் பிரம்மதேவன் என்ன பண்ணுவான், மனுஷாள் செய்யும் அக்கிரமத்துக்கு?
ருக்மிணிக்கு பன்னிரண்டு வயசானதும் அவள் அப்பா அவளை நம்மூர் மணியம் ராமசுவாமி ஐயர் குமாரன் நாகராஜனுக்கு கன்னிகாதானமாகக் கொடுத்தார். கல்யாணம் வெகு விமரிசையாக நடந்தது, காமேசுவரையர் நிறைய சீரும் செனத்தியும் செய்திருந்தார். ருக்மிணியின் மாமியாருக்கும் மாமனாருக்கும் ரொம்ப திருப்தியாயிருந்தது. கல்யாணத்துக்குப் பிறகு மாமியார் ஆசையோடு அழைத்து அவளுக்கு தலை பின்னிப் பூச்சூட்டுவாள். தன்பந்துக்களைப் பார்க்கப் போகும்போது அவளை அழைச்சுக் கொண்டு போகாமல் போகவே மாட்டாள். மாப்பிள்ளை நாகராஜனும் நல்ல புத்திசாலி. அவனும் ருக்மிணியின் பேரில் மிகவும் பிரியமாய் இருப்பான்.
இப்படி மூணு வருஷகாலம் சென்றது. அந்த மூணு வருஷத்துக்குள் எத்தனை மாறுபாடுகள்! காமேசுவரையருக்குக் கையிளைச்சு போய்விட்டது. ரொக்க வேஷியையெல்லாம் ஏதோ அருபத்து நாட்டுக் கம்பெனியாம் அதில் வட்டிக்குப் போட்டிருந்தார். நம்மவர் பணம் நாலு கோடி ரூபாயையும் முழுங்கிவிட்டு அது ஏப்பம் விட்டுவிடவே, காமேசுவரையர் ஒரு நாளில் ஸர்வ ஏழையாய்ப் போய்விட்டார். ருக்மிணியின் தாயார் மீனாட்சியம்மாள் உடம்பிலிருந்து நகைகள்தான் அவருக்கு மிச்சம். பூர்வீக சொத்தான வீட்டையும் நிலங்களையும் வித்துதான் அவர் கொடுக்க வேண்டிய கடன்களைத் தீர்க்க வேண்டியதாயிருந்தது. இப்போ குப்புசாமி ஐயர் இருக்காரே வாய்க்காங்கரையோரத்திலே அந்த வீட்டில் வந்து அவர் குடியிருக்கலானார்.
காமேசுவரையர் ஐவேஷியில் கொஞ்சமேனும் தேறாது என்று ஏற்பட்டதும் ராமசுவாமி ஐயருக்கு அவருடனிருந்த சினேகம் குளிர் ஆரம்பித்துவிட்டது. அவர் வருவதைக் கண்டாலே இன்னொரு பக்கம் திரும்பி வேகமாக போய்விடுவார். இப்படி செய்பவர் அவர் வீட்டுக்கு வருவதை நிறுத்தி விட்டார் என்று நான் சொல்லாமலே நீங்கள் நினைத்துக்கொண்டுவிடுவீர்கள். அவர் சம்சாரம் ஜானகியும் அதே மாதிரி மீனாட்சியம்மாளிடம் நெருங்குவதை நிறுத்திவிட்டாள். ருக்மிணி விஷத்திலுங்கூட வேத்துமை பாராட்ட ஆரம்பித்துவிட்டார்கள்.
அறுபத்துநாட்டு உடைகிறதற்கு முந்தி சில மாதங்களாக ஜானகி பிரதி வெள்ளிக்கிழமையும் சாப்பிட்டானதும் ருக்மிணியை அழைத்துக் கொண்டுவரும்படி வேலைக்காரியை அனுப்பிவிடுவாள். அன்னைக்கு அவளக்குத் தலைப்பின்னி மை சாந்திட்டு சிங்காரிச்சு அகிலாண்டேசுவரி கோவிலுக்கு கூட்டுக் கொண்டுபோய்த் தரிசனம் பண்ணிவிட்டு அடுத்தநாள் காலமேதான் அவளை அகத்துக்கு அனுப்புவாள். அவ்விதம் சொல்லியனுப்புவதையும் மீனாட்சியம்மாள் நிறுத்திவிட்டாள்.
ராமசாமி ஐயரும் ஜானகியும் ருக்மிணியை வாழாதே பண்ணிவிட்டு நாகராஜனுக்கு வேறு கல்யாணம் செய்து வைக்க நிச்சயித்து விட்டார்கள்! என் மனசு இடிஞ்சி போய்விட்டது. இனிமேல் நாகராஜனப் பற்றி ஏதாவது நம்பிக்கை வைத்தால்தான் உண்டு! அவன் பட்டணத்தில் படித்துக் கொண்டிருந்தான். மார்கழி பிறந்து விட்டது. அவன் வருகிற நாளை எண்ணிக் கொண்டே இருந்தேன். கடைசியாக வந்து சேர்ந்தான். வந்த அன்னைக்குக் காலமே அவன் முகத்தில் சிரிப்பும் விளையாட்டுமாக இருந்தது. சந்தோஷம் மாறி வேறாகிவிட்டது.
தை பிறந்தது. வெளிப்படையாகப் பேச ஆரம்பித்து விட்டார்கள். ஏதோ கிழக்கத்தி பெண்ணாம். தகப்பானருக்கு நாலு லட்ச ரூபாய்க்கு பூஸ்திதியாம். பிள்ளை கிடையாதாம். இந்த பெண்ணைத் தவிர காலக்கிரமத்தில் இன்னும் ஒரு பெண்தானாம். ராமசாமி ஐயர் குடும்பத்துக்கு இரண்டு லட்ச ரூபாய் சொத்து சேர்ந்து விடுமாம். இந்தப் பேச்சுப் புறப்பட்டது முதல் மீனாட்சி பகலில் வெளியே வருவதில்லை. சூரியோதையத்துக்கு முன்னேயே குளத்துக்கு வந்து ஸ்நானம் செய்துவிட்டு தீர்த்தம் எடுத்துக் கொண்டு போய்விடுவாள்.
இன்னும் முட்ட முழுக்க ஐந்து வருஷமாகவில்லையே அவர்களிருவரும் ஜோடியாய் நம்ம குளக்கரையில் விளையாடி! கல்யாணமான பிறகுங்கூட ஒருவருக்கந் தெரியாமல் எத்தனை தடவை பார்த்துப் பழைய நாள் போல்வே அன்பும் ஆதரவுமாக நாகராஜன் அவளோடு பேசியிருக்கிறான்! அவன் கைவிடமாட்டான் என்றுதான் ருக்மிணி நினைத்திருப்பாள்.
கடைசியாக நாள் வைத்தாகிவிட்டது. பெண் அகத்துக்காரர் வந்து லக்கினப் பத்திரிக்கையையும் வாசித்துவிட்டுப் போய்விட்டார்கள். ஐயோ! அன்னைக்கு மேளச் சத்தத்தைக் கேட்க என் பஞ்சப் பிராணனும் துடித்தது. காமேஸ்வரையருக்கு எப்படியிருக்குமோ? மீனாட்சி மனசு எப்படி துடித்ததோ? ருக்மிணி எப்படி எல்லாம் சகித்தாளோ? நாகராஜனுக்குக்குகூடத் துளி இரக்கம் பச்சாத்தாபமில்லாமற் போய்விட்டது பார்த்தாயா என்ற நான் அழாத நாள் கிடையாது.
ஒரு நாள் ஸ்ரீநிவாசன் என்ற ஒரு பையன் அவன் நாகராஜனோடு கூட படித்துக் கொண்டிருந்தவன் நாகாராஜனை பார்க்கறதற்கென்று வந்தான். அவர்களுக்கெல்லாம் ரகசியமாகப் பேச இடம் வேறெங்கே? நம்ம குளத்தங்கரைதானே? நாகராஜன் பெண்ணிருக்க பெண் கல்யாணம் பண்ணிக் கொள்ளப் போகிறான் என்று யாரோ அவனுக்கு எழுதிவிட்டார்களாக்கும். உடனே தபால் வண்டி மாதிரி ஓடி வந்துவிட்டான்.
“எத்தனை லட்சந்தான் வரட்டுமே! ஒரு பெண் பாவத்தைக் கட்டிக் கொள்ளலாமா? கல்யாணப் பந்தலில் மந்தி ரூபமாகச் செய்த பிரமாணத்தையெல்லாம் அழித்துவிடலாமா?” என்று ஸ்ரீநிவாசன் நானவிதமாய்த் தர்மத்தையும் நியாயத்தையும் எடுத்துச் சொல்லி கல்லுங்கரையும்படியாக ருக்மிணிக்காக பரிஞ்சு பேசினான். நாகராஜன் அவனைப் பார்த்து “நான் காசுக்காக இவ்வளவு அற்பமாக போய்விடுவேன் என்று நினைக்கிறாயா? நான் யாருக்கும் தெரியாமல் வைத்துக் கொண்டிருக்க வேணும் என்றிருந்தேன். ஆனால் எப்போ இவ்வளவு தூரம் பேசிவிட்டோமோ இனிமேல் உனக்கு தெரியாமல் வைக்கிறதில் காரியமில்லை. இதை நீ யாருக்கும் சொல்லக்கூடாது. இவர்களெல்லாம் ஆரியத் தன்மையைவிட்டு மிலேச்சத்தனமாய் நடக்க உத்தேசித்திருக்கிறபடியால் நன்றாக அவமானம் செய்துவிட வேண்டியது என்று நிச்சயித்துவிட்டேன். திருமாங்கல்யத்தில் முடிச்சுப் போடும் சமயத்தில் கண்டிப்பாக மாட்டேனென்ற சொல்லிவிடப் போகிறேன். எல்லோரும் இஞ்சி தின்ற குரங்குபோல விழிக்கட்டும். ருக்மிணியைத் தொட்ட கையினாலே இன்னொரு பெண்ணையும் நான் தொடுவேன் என்றிருக்கிறாயா!” என்று சொல்லி முடித்தான்.
“ஆனால் நீ விவாகத்துக்கென்று போகுங்காலத்தில் ருக்மிணி அவள் அப்பா அம்மா மனதெல்லாம் எப்படியிருக்கும் என்று யோசித்துப் பார்த்தாயா?” என்று ஸ்ரீநிவாசன் கேட்டான். அதற்கு நாகராஜன் யோசித்தேன் “ஆனால் எல்லாம் போய்விட்டதென்று அவர்கள் நிராசையாய்த் தவித்துக் கொண்டிருக்கும் சமயத்தில் திடீரென நான் ஓடி வந்தது மாமியார் மாமனாரை வணங்கி துயரப்படாதீர்கள்! என் ருக்மிணியை நான் ஒரு நாளும் கைவிடமாட்டேன்! பணத்தாசை பிடித்தவர்களையெல்லாம் மணப்பந்தலில் மானபங்கம் செய்துவிட்டு இங்கே வந்துவிட்டேன் என்று நான் சொல்லுங்காலத்தில் அவர்களக்கு எத்தனை ஆனந்தமாக இருக்கும்! அதைப்பார்த்து அனுபவிக்க விரும்புகிறேன்” என்றான்.
நாகராஜன் பிடிவாதக்காரன். சொன்னபடியே செய்துவிடுவான். ருக்மிணிக்கு இனிமேல் ஒரு குறைச்சலுமில்லை என்று பூரித்துக் போய்விட்டேன்.
ஞாயிற்றுக்கிழமை, இவர்களெல்லாம் புறப்படுகிறார்களென்று ஊரெல்லாம் அல்லோலகல்லோலப்பட்டது. ராமஸ்வாமி ஐயரையும் ஜானகியையும் வையாதவர்கள் கிடையாது. காமேசுவரையரும் மீனாட்சியும் சனிக்கிழமை மத்தியானமே புறப்பட்டு மணப்பாறைக்கு போய்விட்டார்கள். அகத்தில் ருக்மிணிக்கு அவள் அத்தை சுப்புலட்சுமி அம்மாள்தான் துணை. சனிக்கிழமை ராத்திரி ஒன்பது ஒன்பதரை இருக்கும். நாகராஜன் தனியாக குளத்தங்கரைக்கு வந்தான், வேப்பமரத்தடியில் உட்கார்ந்து கொண்டு ஏதோ யோசித்துக் கொண்டிருந்தான். சில நாழிக்கெல்லாம் தூரத்தில் ஒரு பெண் உருவம் தென்பட்டது, அது ருக்மிணி என்று நான் அறிந்து கொண்டேன். நாகராஜன் திடுக்கிட்டுப் போய்விட்டான்.
“இந்த வேளையில் நாம் இங்கே இருப்பது தெரிந்தால் ஊரில் ஏதாவது சொல்லுவார்கள், வா அகத்துக்குப் போய்விடலாம்” என்றான். “நீங்கள் என்னைக் கைவிட மாட்டீர்கள் என்று நம்பியிருந்தேன். ஆனால் நீங்களும் என்னைக் கைவிட்டுவிட்டால் அபுறம் எதை நம்பிக் கொண்டு நான் வாழ்வேன் வேலியே பயிரை அழித்துவிட ஆரம்பித்தால் பயிரின் கதி என்னவாகும்?” ருக்மிணியின் கண்களில் ஜலம் வந்துவிட்டது, அத்தோடு நின்று விட்டாள். சில நாழிக்குப் பின் “நாளைக்குப் பயணம் வைத்திருக்காப் போலிருக்கிறதே? நீங்கள் கோபத்தானே போகிறீர்கள்?” என்று கேட்டாள். “ஆமாம் போகலாம் என்றுதான் இருக்கிறேன்” என்றான். ருக்மிணிக்கு நெஞ்சை அடைத்துக் கொண்டு துக்கம் வந்துவிட்டது.அதையெல்லாம் வெளியே காட்டிக் கொள்ளாமல் “அப்படியானால் என்னை கைவிட்டு விட்டீர்கள்தானே?” என்று கேட்டாள். அதற்கு நாகராஜன் “உன்னை நான் விடுவேனா ருக்மிணி? ஒரு நாளும் விடமாட்டேன், ஆனால் அம்மா அப்பாவைத் திருப்தி பண்ணி வைக்க வேண்டியதும் கடமைதானே ? ஆனால் நீ கவலைப்படாதே, உன்னை ஒரு நாளும் தள்ளிவிட மாட்டேன்” என்றான், “நீங்கள் மறுவிவாகம் பண்ணிக் கொண்டு விடுகிறது. நான் கவலைப்படாமல் இருக்கிறது. என் கதி இத்தனைதானாக்கும்” என்று சொல்லிக் கொண்டு அப்படி உட்கார்ந்துவிட்டாள்.
கல்யாணத்தை நிறுத்திவிடுகிறேன் என்கிற ஒரே வார்த்தையைத் தவிர வேறே எந்த வார்த்தையை சொன்னால் தான் ருக்மிணியின் மனதைத் தேற்றலாம்? அந்த வார்த்தை இப்போது சொல்லவோ அவனுக்கு சம்மதமில்லை. ஆகையால் அவன் வாயால் ஒண்ணும் பேசாமல் தன் மனதிலுள்ள அன்பையும் ஆதரவையும் சமிக்கினையால் மாத்திரம் காட்டினான். அவள் கையைத் தன்னடைய கைகளால் வாரி எடுத்து மடியில் வைத்துக் கொண்டு மிருதாய்ப் பிடித்தான். “நாமிருந்த அன்னியோனயத்தை மறந்துவிடடேன் என்று கனவில்கூட நீ நினையாதே வா போகலாம் நாழிகையாகிவிட்டது. இனிமேல் நாம் இங்கே இருக்கக்கூடாது” என்று சொல்லி முடித்தான்,
“மன்னார் கோவிலுக்குப் போகிறதில்லை என்கிற வார்த்தையை நீங்கள் எனக்கு சொல்ல மாட்டேன் என்கிறீர்கள். இன்றோது என் தலைவிதி முடிந்தது. இனிமேல் ருக்மிணி என்று ஒருத்தி இருந்தாள், அவள் நம்பேரில் எல்லையில்லாத அன்பு வைத்திருந்தாள், பிராணனை விடுகிறபோதுகூட நம்மையே நினைத்துக் கொண்டுதான் பிராணனை விட்டாளென்ற எப்பொழுதாவது நினைத்துக் கொள்ளுங்கள்” என்று சொல்லிக் கொண்டு நாகராஜன் காலில் விழுந்து தேம்பி தேம்பி அழுதாள்.
நாகராஜன் உடனே அவனை தரையிலிருந்து தூக்கியெடுத்து “பைத்யிமே அப்படி ஒன்றும் பண்ணிவிடாதே நீ போய்விட்டால் என் ஆவியே போய்விடும் அப்புறம் யார் யாரை நினைக்கிறது வா அகத்துக்குப் போகலாம்” என்று அவள் கையைப் பிடித்துக் கொண்டு ரெண்டடி எடுத்து வைத்தான் ஆகாயத்தையே பிளந்துவிடும்போல இடிஇடிக்கும் காற்று ஒன்று சண்டமாருதம்போல அடித்துக் கொண்டிருந்தது, ஒரு மின்னல் மின்னும்போது ருக்மிணி வீட்டுக்கு போக மனமில்லாமல் பின்வாங்குவதும் ஆனால் நகாராஜன் தடுத்து முன்னால் அழைத்துச் செல்வதும் கண்ணுக்கு தென்பட்டது.
அடுத்த நாள் காலமே விடிந்தது, மழை நின்று விட்டது, ஆனால் ஆகாயத்திலே தெளிவு வரவில்லை. மேகங்களின் கருக்கல் வாங்கவில்லை. என்னடா இது என்னைக்கும் இல்லாத துக்கம் இன்னைக்கு மனசில் அடைத்துக் கொண்டு வருகிறது? காரணம் ஒண்ணும் தெரியவில்லையே என்று நான் எனக்குள் யோசித்துக் கொண்டேயிருக்கும்போது மீனா என்னடியம்மா இங்கே ஒரு புடவை மிதக்கிறது என்று கத்தினாள், அந்த பக்கம் திரும்பினேன். ருக்மிணிதான் மறுபடியும் வந்து குளத்திலே விழுந்து விட்டாள் என்று நினைத்தேன்.
குளத்தங்கரையெல்லாம் கும்பலாய்க்கூடிப் போய்விட்டது. கீழே அந்த மல்லிகைக் கொடி ஓரத்திலேதான் அவளை விட்டிருந்தார்கள். எத்தனை தடவை அந்த மல்லிகை மொக்குகளைப் பறித்திருக்கிறாள் அந்த பொன்னான கையாலே!
“நாகராஜன் வறான் வறான்” என்ற ஆரவாரம் கூட்டத்தில் பிறந்தது. கும்பலில் இருந்த தாயார் தகப்பனாரையாது கவனிக்காமல் “ருக்மிணி, என்ன பண்ணி விட்டாய் ருக்மிணி” என்ற கதறிக்கொண்டு கீழே மரம்போல் சாய்ந்து விட்டான். ராமசாமி ஐயர் பயந்து போய்அவன் முகத்திலே ஜலத்தை தெளித்து விசிறினார். கடைசியாக பிரக்கினை வந்தது,
கதறினான். “ருக்மிணி நான் உன்னிடம் ரகஸ்யம் முழுவதையும் சொல்லியிருந்தால் இந்த கதி நமக்கு இன்று வந்திருக்காதே நீயோ அவசரப்பட்டு என்னை விட்டுவிட்டுப் போய்விட்டாய். எனக்கு இனிமேல் சம்சார வாழ்க்கை வேண்டாம், இதோ சன்னியாசம் வாங்கிக் கொள்கிறேன்” என்று சொல்லி உடுத்தியிருந்த வேஷ்டியையும் உத்திரீயத்தையும் அப்படியே நாராய் கிழித்து விட்டான். ஒருவரும் வாய் பேசவில்லை. அவர்கள் சுதாரித்துக் கொள்கிறதற்குள்ளே அவர்கள் காலில் சாஷ்டாங்கமாய் விழுந்து நமஸ்காரம் பண்ணிவிட்டு புறப்பட்டான். இப்படி முடிந்தது என் ருக்மிணியின் கதை! பெண்கள் மனசு நோகும்படி ஏதாவது செய்யத் தோணும்போது இனிமேல் இந்தக் கதையை நினைத்துப் பார்த்துக் கொள்ளுங்கள். விளையாட்டுக்காகக்கூட பெண்ணாய்ப் பிறந்தவர்களின் மனதைக் கசக்க வேண்டாம்.
பின் குறிப்பு:
தமிழ்ச் சிறுகதையின் வேறுபட்ட போக்குகளை வெளிப்படுத்தும்வகையில் பல்வேறு எழுத்தாளர்களின் சிறுகதைகள் சுருக்கப்பட்டு தரப்படுகிறது, அந்தந்த எழுத்தாளர்களின் படைப்புலகில் பிரவேசிக்க இது வாசகர்களுக்கு ஒரு நுழைவாயிலாக அமையும் என்ற கருத்தின் பேரில் இச்சுருக்கம் வெளியிடப்படுகிறது.