மைதிலி மொழி சிறார் மொழிபெயர்ப்புக் கதை: குள்ளநரியின் தந்திரம் – தமிழில் ச. சுப்பாராவ்
குள்ளநரியின் தந்திரம்
ஒரு குள்ளநரி காட்டில் பசியோடு இரை தேடித் திரிந்தது. அது குள்ளநரி என்பதால் பெரிய விலங்குகளை வேட்டையாட முடியாது. எனவே, முயல், அணில், எலி போன்ற சிறுபிராணிகள் ஏதேனும் சிக்குமா என்று தேடிக் கொண்டிருந்தது. ஆனால், சிறுபிராணிகள் எல்லாம் குள்ளநரியைப் பார்த்துமே ஓடி ஒளிந்து கொண்டுவிட்டன. கடைசியாக காட்டின் எல்லையில், ஊருக்கு அருகே ஒரு ஆடு மேய்ந்து கொண்டிருப்பதைப் பார்த்தது குள்ளநரி. ஆட்டைப் பார்த்ததுமே அதன் வாயில் எச்சில் ஊறியது. நல்ல கொழுத்த ஆடு. பெரிய கூர்மையான கொம்புகளும், பெரிய தாடியுமாக, பயங்கரமாக இருந்தது. அந்த ஆட்டைத் தாக்குவதற்கு குள்ளநரிக்கு பயம்.
ஆட்டின் மேல் பாய்ந்து, அது நம்மைக் கொம்பால் குத்திவிட்டால் ரணகளமாகப் போய்விடுமே என்று பயந்தது. ஆனால் அதன் தந்திரமான மூளை வேலை செய்ய ஆரம்பித்தது. மறைந்திருந்து ஆட்டைப் பின் தொடர்ந்து, அது என்ன செய்கிறது என்று பார்க்கலாம் என்று முடிவு செய்தது.
வயிறு முட்ட புல்லை மேய்ந்த ஆடு, தண்ணீர் குடிக்க அருகில் இருந்த குட்டைக்குச் சென்றது. தந்திரக்கார குள்ளநரிக்கு இப்போது ஒரு யோசனை தோன்றியது. ஆடு குட்டையின் ஓரத்தில் நின்று தண்ணீர் குடிக்கும் போது, அது திரும்பி வர வேண்டிய பாதையில் சிறுநீர் கழித்து வைத்தது குள்ளநரி.
குள்ளநரி நினைத்தபடியே, அந்த பாதை சொதசொதவென்று சகதியாகி விட்டது. குள்ளநரியின் தந்திரம் வேலை செய்தது. ஆடு கால் வழுக்கி குட்டைக்குள் விழுந்தது. ஆடு திரும்பவும் ஏறி வந்துவிடாதபடி, குட்டையின் எல்லாப் பக்கங்களிலும் சிறுநீர் கழித்து சகதியாக்கி விட்டது குள்ளநரி. ஆடு எவ்வளவு முயன்றும் குட்டையிலிருந்து மேலே ஏறி வர முடியவில்லை. குட்டையின் நீரில் மூழ்கி ஆடு இறந்தது.
ஆனால், குள்ளநரியின் வேலை இதோடு முடியவில்லை. ஆட்டை குட்டையிலிருந்து எப்படி வெளியே தூக்குவது? அதற்கு வேறொரு தந்திரம் செய்தது. பக்கத்தில் வயலில் ஆட்கள் வேலை செய்து கொண்டிருந்ததைப் பார்த்தும், அவர்கள் கவனத்தைக் கவரும் வகையில் ஊ.. ஊ… என்று ஊளையிட்டது. குள்ளநரி ஊளையிடுவதைப் பார்த்த விவசாயிகள் அதைத் துரத்தி வந்தார்கள். குள்ளநரி குட்டை வரை ஓடி வந்து ஒரு புதருக்குள் நுழைந்து விட்டது. விவசாயிகள் குட்டையில் இறந்து கிடக்கும் ஆட்டைப் பார்த்ததும், அதை வெளியே எடுத்தார்கள்.
அதைத் தங்கள் வயலுக்கு அருகில் தூக்கிச் சென்று, தீ மூட்டி வாட்ட ஆரம்பித்தார்கள். குள்ளநரிக்கு நல்ல பசி. நான் கஷ்டப்பட்டு, கொன்ற ஆட்டை நீங்கள் வாட்டித் தின்பதா? விட மாட்டேன், என்று மனதுக்குள் கறுவியபடி யோசனை செய்தது.
வழக்கம் போலவே அதன் தந்திர புத்தி நன்றாக வேலை செய்தது. அதன்படி, பாய்ந்து ஓடி வந்து, விவசாயிகள் ஆட்டை வாட்டிக் கொண்டிருந்த நெருப்பிலிருந்து ஒரு எரியும் கட்டையை வாயில் கவ்விச் சென்று வயலுக்குள் போட்டது. நன்கு விளைந்து முற்றியிருந்த கதிர்களில் தீப்பிடித்தது. விவசாயிகள் அலறி அடித்துக் கொண்டு நெருப்பை அணைக்க ஓடினார்கள்.
குள்ளநரி நன்கு பதமாக வாட்டப்பட்ட சுவையான ஆட்டிறைச்சியை வயிறாரத் தின்று மகிழ்ந்தது.