ஐ. தர்மசிங் கவிதைகள்
1.மனதின் அருகாமையையும்
மனதின் விலகலையும்
வெளிப்படுத்த
மனங்கள் கையாளும்
மௌன மொழி
” ஸ்பரிசம் “…
2.வசப்படும் பொழுதெல்லாம்
சிக்கனமில்லாமல்
சிந்தி விடு
நீ வெளிப்படுத்த
நினைக்கும் போதெல்லாம்
எளிதில் வசப்படாது
” புன்னகை “…
3.ஒற்றை வடுவின் சுவடோடு
முடிவுக்கு வரும்
நாவினால் சுட்டுவிட்டால்…
” பூக்களை
மென்மையாகத் தூவுமா?
கன்னத்தில்
ஓங்கி அறையுமா?”
விடை தெரியும் முன்
புலனாகாத உயிரோடல்லவா
பூப்பந்து விளையாடி விடுகிறது
“மௌனம் “…
4.சிலரின் உயிர்கள்
ஒரு நாள் வாழ்ந்து விடுகிறது
ஒரு கோப்பை
தேநீரில்…
5.குரங்கின் கையில் பூமாலையை
கை நீட்டி கொடுத்து விட்டு
கதறி அழுவது அறிவீனம்
கடைசிப் பூவையும்
பிரித்து வீசுவதில்தான் அது
புளகாங்கிதம் அடையும்
புதிய நாரெடுத்து
பூத்தொடுக்கத் துவங்குவது தான்
புத்திசாலித்தனம்…
6.பார்த்தவுடன் கைகளை
விரித்தபடியே ஓடோடி வந்து
ஆரத்தழுவ வேண்டும் எனும்
ஆசை துளியும் இல்லை
என் முகம் நோக்கி
உதடுகள் வெளிப்படுத்தும்
ஒரு புன்னகையில் கூட
பொய் ஒளிந்திருக்காத அளவுக்கு
நான் மாற வேண்டும் எனும்
கனவு நனவாகும்
வாழ்வை மிக நேசிக்கிறேன்…