தமுஎகச சிவகாசி: கி.ரா நினைவு சிறுகதைப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற கதை *குறிஞ்சி பூ* – ஸ்மைலி செய்யது
ஏனோ, அந்த குதிரைக்கு பசிக்கவில்லை, புல்லை கொடுத்தும், திங்காமல் எங்கோ வேடிக்கை பார்த்து கொண்டிருந்தது.
ஏன் ? சாப்ட மாட்ற, இந்தா என்று மேற்கொண்டு புல்லை கொடுத்தான் ராபர்ட். அது யாரையோ சொல்வது போல், எங்கோ பார்த்தது.
சரி உனக்கு பசிக்கும் போது சாப்டு என்று சொல்லிவிட்டு வீட்டுக்குள் போனான்.
அதிக ஒலியுடன் டிவி பார்த்துக் கொண்டிருந்த மகளிடம் எப்ப பார்த்தாலும் இதே தானா, என்று ரிமோட்டை வாங்கி செய்தி சேனல் வைத்தான்.
கொரோனா பரவல் எண்ணிக்கை இன்னும் குறையாததால் மேலும் இரண்டு வாரங்களுக்கு சுற்றுலா பயணிகள் கொடைக்கானல் வர தடை என்று காதில் விழுந்தது.
அமைதியாக எழுந்து போய் வாசலில் அமர்ந்தான். ஏற்கனவே மூன்று மாதமாக வீட்டில் சும்மா தான் இருக்கிறான். ஏப்ரல், மே சீசன் சமயம் இப்படி கொரோனா வந்து வருமானத்தை சிதைத்து விட்டது. ஒரு நாள் கூட சும்மா இருக்க மாட்டான் சுறுசுறுப்பாக ஓடிகொண்டிருப்பான். காலம் இப்படி உட்கார வைத்துவிட்டது.
குதிரையை கையில் பிடித்து கொண்டு, டவுனுக்குள் சென்று வருகிறேன் என்று சொல்லி வெளியே கிளம்பினான்.
லேக் ரோடு பேரமைதியாக இருந்தது. எப்போதும் பயணிகள் அதிகமாக இருக்கும் இடம், ஏரிக்குள் படகு சவாரி, வெளியே சைக்கிள் சவாரி, சூடாக சுண்டல், மாங்காய், காளி பிளவர், காஃபி, பிரட் ஆம்லெட், சாக்லேட், என கடைகள் கல கலவென இருக்கும் சாலை இன்று இப்படி.
கண்ணுக்கு எட்டிய தூரம் வரை ஒரு ஈ, காக்கா கூட இல்லை. பெய்யும் பனி கண்கொள்ளா காட்சியாக இருந்தது. அமைதியான ஏரியின் அழகு ரசிக்க ஆள் இன்றி தவிக்கிறது.
குதிரையின் பிடியை விட்டு விட்டான். பழக்கப்பட்ட இடம் என்பதால் அது மெல்ல நடக்க ஆரம்பித்தது. வழக்கமாக குதிரைகள் வரிசையாக நிற்கும் இடத்தில் அமர்ந்து கொண்டான். எதையோ வேடிக்கை பார்த்து கொண்டே இருந்தவன் வீசும் காற்றுக்கு அப்படியே கண்ணை மூடினான். பழைய நினைவுகள் எல்லாம் ஒவ்வொன்றாக நினைவில் வர ஆரம்பித்தது.
குதிரை சவாரி அப்பா பார்த்து கொண்டிருந்த வேலை, திடீரென அப்பா இறந்து போன பிறகு இவன் பார்த்து கொள்ள வேண்டிய நிர்பந்தம் வந்தது. குதிரையும் அவனோடு பிரியமாக ஒட்டி கொண்டது.
ஒரு நாள் சவாரிக்காக காத்திருக்கும் போது, ஒரு பெண் அருகில் வந்து சவாரி போனும் என்றாள்,
வாங்க போலாம், ஏறுங்க
குதிரை மேல் ஏறினாள், தரையிலிருந்து கொஞ்சம் உயரம் என்பதால் அவனுக்கு புது அனுபமாக இருந்தது. குதிரையின் முதுகை மெதுவாக தடவினாள். பிடறி முடியை விரலுக்குள் பிடித்து சுருட்டினாள், குதிரை ஒன்னும் செய்யவில்லை.
ஏனோ, அவளை பார்த்ததும் ராபர்ட்டுக்கு ஒரு புத்துணர்ச்சி, போலாமா என்றபடி அவளை பார்த்தான்.
அவள் தலை அசைத்ததும் குதிரை மெதுவாக ஓட ஆரம்பித்தது.
சாலையை ஒரு பக்கமும் அவளை ஒரு பக்கமும் பார்த்து கொண்டே வந்தான்.
இவன் பார்ப்பதை அவள் பார்த்து விட்டாள், என்ன அடிக்கடி என்னையே பாக்குறீங்க என்றாள், பனிக்கு வாயில் இருந்து புகை வந்தது.
இல்ல, சும்மா தான் பார்த்தேன், உங்க பேரு என்ன ?
லிடியா.
எந்த ஊரு நீங்க ?
இங்க தான் கீழ “பண்ணைக்காடு”
அப்படியா, இந்த ஊரு தானா.
ஆமா !!
பின்னால் வந்த ஒரு குதிரை இவர்களை முந்தி சென்றது.
என்ன உங்க குதிர இவ்ளோ மெதுவா போகுது.
தெரியலையே, ஒரு வேள அதுக்கு உங்கள பிரிய மனசு இல்ல போல, உங்க கூட ரொம்ப நேரம் இருக்கணும்னு நெனைக்குது.
நிஜமாவே குதிரைக்கு மனசு இல்லையா ? இல்ல உங்களுக்கு மனசு இல்லையா ?? சிரித்து கொண்டே கேட்டாள்.
சிரிப்பை பதிலாக தந்து விட்டு நடக்க ஆரம்பித்தான்.
எல்லை வந்து விட்டது. மெதுவாக இறங்கினாள், காசை கையில் கொடுத்தாள்,
வேண்டாம், இருக்கட்டும்
எதுக்கு வேணாம்னு சொல்றிங்க, பிடிங்க என்று கோவமாய் கொடுத்தாள், வாங்கி கொண்டான்.
அடிக்கடி மேல வாங்க,
எதுக்கு ??
இல்ல, குதிரைக்கு உங்கள ரொம்ப பிடிச்சு போச்சு, அதான்.
ஓ !! அப்படியா, குதிரைக்கு மட்டும் தான் பிடிச்சிருக்கா, சரி அதுக்காக வரேன், சொல்லிவிட்டு மறைந்து விட்டாள்.
அப்பறம் அடிக்கடி சவாரி வர, நட்பாகி, காதலாகி, கல்யாணமாகி காதலுக்கு அடையாளமாக குழந்தையும் வந்து விட்டது.
குதிரை அருகில் வந்து கணைக்க மெல்ல கண்ணை திறந்தான். மனசு கொஞ்சம் அமைதியாக இருந்தது. மனதில் இருந்த குழப்பம், வறுமை, பயம் எல்லாம் கொஞ்சம் தள்ளி போனது.
விறு விறுவென வீட்டிற்க்கு நடந்தான்.
லிடியாவிடம், வேகமா கிளம்பு நாம வெளிய போறோம்.
எங்க போக ? வெளிய என்ன இருக்கு ? எல்லாம் பூட்டி கிடக்கு..
ஏதும் கேள்வி கேக்காத, சொல்றத செய்.
மகளை கையில் பிடித்து கொண்டு, அவளையும் கூட்டிக்கொண்டு, குதிரை நின்ற இடத்திற்கு வந்தான்.
ம்ம், ஏறுங்க ரெண்டு பேரும், மகளை தூக்கி குதிரையில் உட்கார வைத்து விட்டு, அவளையும் ஏத்தி விட்டு மெதுவாக நடக்க ஆரம்பித்தான்.
மகளுக்கு அளவில்லா ஆனந்தம், சிரித்து கொண்டே வேடிக்கை பார்த்தாள்.
அவன் லிடியாவை பார்த்து சிரித்தான், முதல் தடவை இதே குதிரையில் பார்த்த பரவசம் அவளுக்கும், மெல்ல சிரித்தாள். குளிர் நடுங்க வைத்தது.
ஆளில்லாத அமைதியான சொர்க்கம் போன்ற இடத்தில் மனைவி மகளுடன் ஒரு உலா, அவனுக்கு அதிக இன்பத்தை கொடுத்தது. வயதை குறைத்தது. கவலை எல்லாம் காணாமல் போனது, அவளை பார்த்து கொண்டே வந்தான்.
கல்யாணத்தப்போ இப்படி குதிரைல வந்தது. அப்பறம் இப்ப தான் 12 வருஷம் கழிச்சு குறிஞ்சி பூ பூத்த மாதிரி, இந்த கொரோனா வந்து இப்படி போக வச்சிருக்கு என்றாள், குதிரை வெட்கத்தில் நெளிந்தது.
மேற்கண்ட கதையானது தமுஎகச சிவகாசி கிளை சார்பில் நடத்தப்பட்ட கி.ரா நினைவு சிறுகதைப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற கதையாகும்.