Posted inBook Review
நூல் அறிமுகம் : மாத்தி யோசி வெற்றி நிச்சயம் – குழந்தை அருள்
பக்கங்கள் 104
விலை ₹100
ஹரணி பதிப்பகம்
சென்னை 600 012
15 கட்டுரைகளைக் கொண்ட இரா. குழந்தை அருள் எழுதிய தன்னம்பிக்கை தரும் நூல் “மாத்தி யோசி வெற்றி நிச்சயம்”
பதினைந்து கட்டுரைகளிலுமே ஏதேனும் ஒரு பொருளை எடுத்துக் கொண்டு அதற்கேற்ற கதையைச் சொல்லி நம்பிக்கையூட்டும் உத்தியைக் கையாண்டுள்ளார் நூலாசிரியர்.
முதல் கட்டுரையில் உற்ற நண்பனிடம் தனது மாணிக்கக் கல்லை நம்பிக்கையாகக் கொடுத்துவிட்டு வெளியூர் சென்றவன் திரும்பி வந்து மாணிக்கக் கல்லைத் திரும்பக் கேட்டபோது ஏற்கெனவே தாம் நண்பனிடம் தந்துவிட்டதாக பொய்யுரைத்ததோடு அதை மெய்ப்பிக்க பொய் சாட்சிகளைக் கட்டமைக்கிறான். வழக்கு மரியாதை ராமனிடம் செல்ல அவன் மாத்தி யோசித்து சாதுர்யமாக உண்மையை வரவழைப்பதைக் கதையாகக் கூறி மாத்தி யோசிக்கும் உத்தியை அறிமுகப்படுத்துகிறார் நூலாசிரியர்.
1971ல் இந்திரா காந்தி அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தவுடன் சர்வாதிகாரப் போக்கும் எதேச்சதிகாரமும் மேவி 1975ல் அவசர நிலைப் பிரகடனத்தில் முடிந்தது. இக்காலத்தில் இவற்றை எதிர்த்த ஜெயப்பிரகாஷ் நாராயணன் எத்தனையோ அடக்குமுறைகளையும் சோதனைகளையும் சந்தித்த போதும் இடையறாதுப் போராடி ஜனதா கட்சி துவங்கப்பட்டு ஆட்சிமாற்றம் ஏற்பட்டதாகக் குறிப்பிட்டு நோக்கத்தை அடைய எத்தகைய இன்னல்கள் வந்தாலும் துவளாமல் துணிவுடன் எதிர்கொண்டு இலட்சியத்தை அடைய வேண்டும் என்பதைத் தமது இரண்டாவது கட்டுரையில் நிறுவுகிறார் குழந்தை அருள்.
வழக்கமாக பல எழுத்தாளர்கள் பயன்படுத்தும் தெனாலி ராமன் கதையை இவரும் விட்டுவைக்கவில்லை. துணிச்சல் மூலம் இருளடர்ந்த காட்டில் கூட வீறுநடை போட முடியும் என்பதை இளைஞனையும் ஞானியையும் வைத்துக் கூறுகிறார் நூலாசிரியர்.
சாதுர்யத்தால் எதையும் சமாளிக்க முடியும் என்பதை ஆணவம் மிக்க பண்ணையாரையும் அறிவுமிக்க இளைஞனையும் வைத்து நிறுவுகிறார் குழந்தை அருள்.
எந்த ஒரு செயலையும் அச்செயலுடன் ஒன்றிச் செய்வதன் மூலம் வெற்றி நிச்சயம் என்பதை மன்னன் மற்றும் ஓவிய ஆசிரியர் மூலம் கதையால் உணர்த்துகிறார் நூலாசிரியர்.
சகிப்புத்தன்மையும் சாமர்த்தியமும் ஒருங்கிணைந்த நிலையில் எந்தக் காரியமும் கைகூடும் என்பதை ஆசிரியர் மாணவர் மூலம் விளக்கியது சிறப்பு.
1972ஆம் ஆண்டில் தி.மு.க.விலிருந்து வெளியேற்றப்பட்ட எம்.ஜி.ஆர். துணிவுடன் தனிக்கட்சியைத் தொடங்கி இறுதிவரை வெற்றி அடைந்ததையம் எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஹிலாரி ஏறி உலக சாதனை படைத்ததையும் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டு நம்பிக்கை நங்கூரம் பாய்ச்சியுள்ளார் நூலாசிரியர்.
முதல் நோபல் பரிசு பெற்ற இந்தியர் என்ற பெருமையைப் பெற்ற இரவீந்திரநாத் தாகூரைப் பெரிதாக இந்தியா அப்போது கொண்டாடவில்லை. மேலும் அற்பக் காரணங்களைக் கூறி ஏகடியம் செய்தனர் பலர். ஆனால் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் ‘பலமாகத் தட்டுபவன் மட்டும்தான் கதவு திறந்தே கிடப்பதை அறிவான்’ என்று உறுதியாக தாகூர் சொன்னது பலர் அறியாத செய்தி. இந்தத் தகவல் ஒரு கட்டுரையில் காணக் கிடக்கிறது.
மாணவர்களைக் கனவு காணச் சொன்ன அப்துல் கலாம் கூறிய நடைமுறைக்கேற்ற கனவுகளைப் பேசுகிறது ஒரு கட்டுரை.
சமயோசித அறிவைப் பயன்படுத்தி அண்ணா, கலைஞர், டாக்டர் ராதாகிருஷ்ணன் போன்றோர் எப்படியெல்லாம் எதிர்கொண்டார்கள் என்பதை விளக்கி சாதுர்யங்களும் சாமர்த்தியங்களும் எந்த நேரமும் கைகொடுக்கும் என்று நிறுவுகிறார் குழந்தை அருள்.
அமெரிக்க அதிபர் ஆப்ரகாம் லிங்கன் பதவியேற்க வரும் வழியில் சேற்றில் சிக்கிய பன்றியைக் காப்பாற்றிவிட்டுத் தாமதமாக செனட் சபை கூட்டத்துக்கு வந்ததைக் காட்சிப்படுத்தி இத்தகைய மனித நேயமும் வெற்றிக்குதவும் என்கிறார் நூலாசிரியர்.
உயர்வு மனப்பான்மை மற்றும் தாழ்வு மனப்பான்மை விரவிக் கிடக்கும் நிலையில் இரண்டுமே தவறென்பதை ஜென்கதை மற்றும் முயல் ஆமை கதை மூலம் நிறுவுகிறார் நூலாசிரியர்.
எந்தச் செயலாக இருந்தாலும் திட்டமிடுதல் மிக முக்கியமானது என்பது அனைவரும் அறிந்ததே. சரியான திட்டமிடல் மட்டுமே ஒவ்வொருவருடைய வாழ்க்கையையும் தீர்மானிக்கிறது என இறுதிக் கட்டுரையில் விளக்குகிறார் குழந்தை அருள்.
மொத்தத்தில் பாவம், புண்ணியம், விதி என்றெல்லாம் சொல்லி சிக்கவைக்காமல் நம்பிக்கையுடன் வாழ்க்கையில் முன்னேற பல்வேறு உத்திகளையும் அவ்வுத்திகளைக் கையாள்வதற்கான வழிகளையும் விளக்கியுள்ள இந்நூல் இளைஞர்கள் படிக்க வேண்டிய நூல் எனின் மிகையன்று.
பெரணமல்லூர் சேகரன்