இசை வாழ்க்கை 68 : பறவைக்கு சிறகு இசையானால் – எஸ் வி வேணுகோபாலன்
பறவைக்கு சிறகு இசையானால்….
எஸ் வி வேணுகோபாலன்
மார்ச் 8 பெண்கள் தினத்தன்று ஆந்திர பிரதேசத்தில் விசாகப் பட்டினத்தில் அந்தச் சிறப்பு நிகழ்வு நடந்தது, அண்மையில் தமிழகத்திலும் அது சிறப்பாக நடந்துள்ளது. தேன்குரல் இசையரசி பி.சுசீலா அவர்களுக்காக இந்திய அஞ்சல் துறை சிறப்பு உறை வெளியிட்டது. தொழில் நுட்ப உதவியோடு பதிப்பிக்கப்பட்ட
க்யூ ஆர் பிம்பத்தில் நான்கு மொழிகளில் அவரது சிறப்பான பாடல்களையும் கொண்டு வந்திருந்தனர்.
சுந்தரத் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டிருக்கும் சுசீலா அவர்களுக்குத்தான், திரைப்படப் பின்னணி பாடகிகளுக்கான முதல் தேசிய விருது வழங்கப்பட்டது – உயர்ந்த மனிதன் படத்தில் இடம் பெற்ற நாளை இந்த…..பாடலுக்காக ! அதன் பின்னரும் வெவ்வேறு ஆண்டுகளில் அந்த விருது பெற்றவர் அவர். பல்லாயிரக் கணக்கான தேனிசைப் பாடல்கள் பல்வேறு மொழிகளில் ரசிகர்களுக்கு வழங்கியிருக்கும் அசாத்தியக் குரல் அவரது! 2016ம் ஆண்டில் கின்னஸ் விருது, 12 மொழிகளில் 17,695 பாடல்கள் இசைத்தவர் என்ற குறிப்போடு வழங்கப்பட்டிருக்கிறது. ஐம்பதாயிரம் பாடல்களுக்கு மேல் பாடி இருப்பவர் என்ற குறிப்புகளும் உண்டு.
சுசீலா அவர்களது குரலினிமை மட்டுமல்ல, பாடலின் கருப்பொருளை, உணர்வுகளை அப்படியே கடத்துவதில் அவருக்கே உரித்தான தனித்துவம் அபாரமானது.
நெஞ்சில் ஓர் ஆலயத்தின், ‘சொன்னது நீ தானா…’ பாடலின் பல்லவியில், ‘சொல் சொல் சொல் என்னுயிரே’ என்ற இடமும், ‘சம்மதம் தானா?’ என்ற கேள்வியின் நீட்சியில் கேட்பவர் மனத்தைப் பிழிந்தெடுக்கும் உருக்கமும், ‘ஏன் ஏன் ஏன் என்னுயிரே’ என்று தணிந்து வந்து மேலும் சொந்தம் கொண்டாடும் இடமும் விவரிப்புக்கு அப்பாற்பட்டது.
நெஞ்சிருக்கும் வரை படத்தின் ‘எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு’ மட்டும் என்னவாம், ‘அதைத் தானே கொண்டு வந்தேன்’ என்பதில் அந்தத் ‘தானே’வில் பெருகும் துயரம் அளப்பரியது. அந்தப் பாடல் முழுவதுமே, ஒரு சீரான வேக கதியில் அடுத்தடுத்த துயர வீதிகளில் நடையாய் நடக்கும் பெண்ணின் வேதனையை பிரதியெடுக்கும் குரல் அது.
வாழ்க்கைப் படகு படத்தின் ‘உன்னைத்தான் நானறிவேன் மன்னவரை யார் அறிவார்’ பாடல் சமதளத்தில் தொடங்கும், ‘மன்னவரை’ என்ற இடத்தில் மெல்ல சங்கதிகள் கொஞ்சும், ஆனால், அடுத்த அடியில், ‘என் உள்ளம் என்னும் மாளிகையில் உன்னையன்றி யார் வருவார்’ என்கிற போது அடுத்த தளத்திற்குக் கொண்டுபோவார் ரசிகர் நெஞ்சங்களை! ‘யாரிடத்தில் கேட்டு வந்தோம் யார் சொல்லிக் காதல் கொண்டோம்..’ என்று தொடங்கும் சரணத்தில் சொற்களை அவர் கொண்டாடி அழகுபடுத்தல் ஒரு விதமெனில், ‘காதலித்தல் பாவம் என்றால் கண்களும் பாவமன்றோ கண்களே பாவமென்றால் பெண்மையே பாவமன்றோ’ என்ற சரணம் முற்றிலும் வேறொரு தளத்தில் கொண்டு நிறுத்தி, ‘பெண்மையே பாவமென்றால்… மன்னவனின் தாய் யாரோ’ என்பதில் உச்சம் தொடும்!
வசந்த மாளிகை திரைப்படத்தில், சிவாஜி கணேசன் பாத்திரத்திற்கு உருவகமாக வீணையை முன்னிறுத்தி அசாத்திய குறியீட்டில் கண்ணதாசன் படைத்த ‘கலைமகள் கைப்பொருளே’ பாடலில், கே.வி மகாதேவன் அவர்களது கற்பனை மிக்க இசைக்கோவையில் பி.சுசீலாவின் முத்திரைகள் பல்லவியில் தொடங்கி சரணங்கள் வரை நிரம்பித் ததும்பும். ‘விலையில்லா மாளிகையில்’ என்ற அடியில் அவர் கொடுக்கும் பாவங்கள் பாடல் நெடுகத் திரும்பத் திரும்ப ஒலிக்கும் இடங்களில் இதயத்தை நனைக்கும்.
தனிக்குரலிலும், வேறு பெண் அல்லது ஆண் குரலோடு இணைந்தும் இசைத்த எந்தப் பாடலானாலும், சுசீலாவின் இசைக்கான அர்ப்பணிப்பு அதில் மின்னுவதைக் காணமுடியும். பாடலில் சொல்லும் சங்கதியும், பாடலுக்குள் அவர் எடுக்கும் சங்கதிகளும் ஒவ்வொரு பாடலிலும் கேட்டுக் கொண்டே இருக்க வைக்கும்.
பி.சுசீலா எல்.ஆர் ஈஸ்வரி இணை குரலில் ஒலிக்கும் பாடல்கள் காலத்தால் அழியாதவை.
பாத காணிக்கையின் ‘உனது மலர் கொடியிலே எனது மலர் மடியிலே’ பாடலில் அப்பப்பா எத்தனை எத்தனை சங்கதிகள்…. சோகமான ஹம்மிங் கொடுத்துப் பல்லவியை எடுப்பார் சுசீலா. அவரது பல்லவி வரிகளில் மாற்றங்களோடு கொண்டாட்டமான ஹம்மிங்கில் தொடங்குவார் ஈஸ்வரி. கண்ணதாசனின் மிக எளிமையான சொற்களில் ஒலிக்கும் ஒரே காதலுக்கான இரு வேறு உள்ளங்களின் எதிரெதிர் மனநிலையை ஒரே மெட்டில் வார்த்த மெல்லிசை மன்னர்களின் இசை எண்ணியெண்ணி வியக்க வைப்பது.
‘கண் மயங்கிப் பயணம் போகும் உனது தோணி கடலிலே’ என்ற ஈஸ்வரியின் வீச்சுக்கு, ‘காலம் பார்த்து வந்துசேரும் எனது தோணி கரையிலே’ என்ற சுசீலாவின் பதில் வீச்சு அத்தனை நெருக்கமாக உணர்வில் கலக்க வைக்கும். ‘காற்றினாலும் மழையினாலும் எந்த சொந்தம் மாறுமா?’ என்ற கேள்வி அபாரமாக ஒலிக்கும் ஈஸ்வரியின் கேள்விக்கு, ‘காயுமா …….. கனியுமா …………. கையில் வந்து சேருமா, கையில் வந்து சேருமா’ என ஒரு பெருஞ்சோகத்தை அந்த அடியின் ஒவ்வொரு சொல்லிலும் இழை இழையாக நெய்து அல்லவா கொடுத்திருப்பார் சுசீலா!
இரண்டாம் சரணத்திலும் தொடரும் உரையாடலில் எத்தனையெத்தனை உணர்வுகள், உணர்வுகளின் சொற்களுக்கான சங்கதிகள்! பாடலுக்கேற்ற பாவங்களை அற்புதமாக வெளிப்படுத்தும் சாவித்திரியின் உடல்மொழியும், கண்களும், விஜயகுமாரியின் நடிப்பும் பாடல் ஒலிக்கும்போதே மனக்கண்களில் தோன்றிவிடும்.
பி.சுசீலா – எல்.ஆர் ஈஸ்வரி இணை குரலில் ஒலிக்கும் ‘மலருக்குத் தென்றல் பகையானால்…’ பாடல், ஆலங்குடி சோமு எழுதியது.
‘வானகமே வையகமே வளர்ந்து வரும் தாயினமே ஆணுலக மேடையிலே ஆசை நடை போடாதே’ என்ற தொகையறா, அந்தப் பாடலுக்கான பி சுசீலாவின் குரல் வீச்சை வெளிப்படுத்தி விடும். அது மட்டுமா, பல்லவியை எடுக்கையில், ‘மலருக்குத் தென்றல்’ என்ற சொற்களில் தெறிக்கும் உணர்வுகள், தென்றல் என்ற சொல்லின் அந்த ‘ல்’ எழுத்துக்குக் கிடைக்கும் அசாத்திய ஒலி நீட்சி …ஆஹா…ஆஹா.
மெல்லிசை மன்னர்கள் வயலின்களின் வழி சேர்க்கும் சோகச் சுவையும், புல்லாங்குழல் வழி கசியவிடும் இதமான வருடல்களும், பதமாக இணையும் தாளக்கட்டுகளுமாக அந்தப் பாடல் ஒரு மகத்தான படைப்பு.
https://youtu.be/IHKPgbPUNOo
‘மலருக்குத் தென்றல் பகையானால் அது மலர்ந்திடக் கதிரவன் துணையுண்டு’ என்று பல்லவியின் முதல் பகுதியை சுசீலா இசைத்ததும், அந்த ஏக்கக் குரலை வயலின்கள் தானா…தானா. தானா….தானா..என்ற இழைப்பில் பெற்றுக் கொள்வதைப் பின்னர் கடைசி சரணத்தின் நிறைவிலும் பயன்படுத்தி இருப்பார்கள்.
‘நிலவுக்கு வானம் பகையானால் அது நடந்திட வேறே வழியேது’ என்பது துயரத்தை மேலும் கூட்டும் வண்ணம் குழைத்திருப்பார் சுசீலா. ‘பகையானால்’ என்ற சொல் பாடலில் திரும்பத் திரும்ப இடம் பெறும், ஆனால், ஒவ்வொரு முறையும் ஒவ்வோர் அழகில் பொலிவு பெறும். எல் ஆர் ஈஸ்வரியின் குரலில் ஒயிலாக ஒலிக்கும்.
பல்லவியை அடுத்து முதல் சரணத்தை நோக்கிய திசையில் துயர உளவியலை வலுவாக முன்னெடுக்கும் வயலின் இசையும், அதை மெல்ல மெல்லத் தணித்து இழைக்கும் குழலோசையும் நிரப்ப, ‘பறவைக்குச் சிறகு பகையானால் …’ என்று தொடங்கும் முதல் சரணம் எல் ஆர் ஈஸ்வரி உருக்கமாக எடுக்கிறார். உருக்கமாக நிறைக்கிறார் உணர்வுகளை! வல்லின உச்சரிப்புகள் (பறவை, சிறகு) ஈஸ்வரியின் தனித்துவம் எப்போதும்.
அடுத்த சரணத்தை மென்மையான இசைக்கருவிகளின் துடிப்பிலேயே சிக்கலான மனக்குழப்பங்களை வெளிப்படுத்தும் சோகம் இழையோடச் செய்கின்றனர் மெல்லிசை மன்னர்கள். ‘படகுக்குத் துடுப்பு பகையானால்…’ என்று சுசீலா எடுக்கும் சரணத்தில், ‘அங்கு பாய்மரத்தாலே உதவியுண்டு’ என்பதில், ‘பாய்மரத்தில்’ பாய்ந்து இறங்கும் சங்கதிகள்…. ‘கடலுக்கு நீரே பகையானால்’ என்பதில் அந்த ‘நீரே’ என்பதில் எத்தனை நகாசு வேலைகள் செய்திருப்பார்! ‘ அங்கு கதை சொல்லும் அலைகளுக்கிடமேது’ என்ற அடியில், அலைகளைப் போல் நெளிந்துவரும் இசையமைப்பாளர்கள் கற்பனைக்கு உயிர் கொடுத்திருப்பார்.
மூன்றாம் சரணத்தில், ‘கண்ணுக்குப் பார்வை பகையானால் அதைக் கருத்தால் உணர்த்திட வழியுண்டு’ என்ற அடியை ஈஸ்வரி உள்ளத்திற்கு நெருக்கமாக எடுத்து வைக்க, ‘பெண்ணுக்குத் துணைவன் பகையானால் அந்தப் பேதையின் வாழ்வில் ஒளியேது’ என்று அதை அசாத்திய சோகத்தை நிரப்பி நிறைவு செய்கிறார் சுசீலா.
பாடலின் இறுதிப்பகுதியில் பல்லவியை இரண்டு பாடகியரும் ஒருசேர இசைக்க, பிரியாத சோகத்திற்கு வயலின் இழைப்பில் ஒரு முற்றுப் புள்ளி வைத்திருப்பார்கள் மெல்லிசை மன்னர்கள். சரோஜாதேவியின் கண்ணீர் பளபளக்கும் முகமும், ரத்னாவின் ஏக்கம் ததும்பும் விழிகளும் சொல்லும் கதைகளினூடே எங்க வீட்டுப் பிள்ளை படத்தில் இந்தப் பாடலை மிகவும் அமர்க்களமாகக் காட்சிப்படுத்தி இருப்பார்கள்.
குவிகம் இலக்கிய பத்திரிகையின் மே மின்னிதழில் கமலா முரளி என்பவர் ‘சித்திரை’ என்ற சொல்லை வைத்து எழுதப்பட்டிருக்கும் பாடல்கள் சிலவற்றைத் தொட்டு ஒரு கட்டுரை எழுதி இருப்பதில், முதல் பாடலைப் பார்த்ததுமே அத்தனை கொண்டாட்டமாக இருந்தது.
‘சித்திரை மாதம் பவுர்ணமி நேரம் முத்து ரதங்கள் ஊர்வலம் போகும்….ம்….ம்…’ என்ற பாடல் அது. ரயிலின் வேகத்திற்கு மெல்லிசை மன்னர் இசையமைத்திருந்த பாடலின் பல்லவியில் ரயில் எடுக்கும் வேகம் அபாரம். சந்தங்கள் அதற்கேற்ப அதிரும்.
அக்காலத்திய மக்களுக்கு ரயில் என்றால் கரி எஞ்சின் தான். அதன் கம்பீர உருவமும், குரலோசையும், அதன் ஓட்டுநர் துணி சுற்றிய தலையோடு எட்டியெட்டிப் பார்ப்பதும், சங்கிலியைப் பற்றி இழுக்கையில் குப்பென்று பெருகும் புகையும், கூவென்ற இசையும் மறக்க முடியாதது. ரயில் பயணங்களை விரும்பாத பிள்ளைகள் உண்டா…
பெரிய தொழில்நுட்பம் இல்லாத காலத்தில் ஏற்கெனவே ரயிலோசையை இசையில் கொணர்ந்திருந்தவர்தான் என்றாலும், மெல்லிசை மன்னர் இந்தப் பாடலில் இசைப்படுத்திய ரயிலோசை அபாரம். கல்லூரிக் காலத்தில், சிவகாமியின் செல்வன் படத்தில் வரும் உள்ளம் ரெண்டும் ஒன்றை ஒன்று பாடலை, உப்பு காகிதத்தைத் தேய்த்து இசையெழுப்பிப் பாடுவார் நண்பர் ஒருவர். சித்திரை மாதம் பாடலுக்கு உண்மையில் உப்புக் காகிதம், குழலோசை, டிரம்ஸ் இசைக்கருவி வைத்துத் தான் இந்தக் கலக்கு கலக்கி இருப்பார் எம் எஸ் வி என்பதை, எம் எஸ் வி டைம்ஸ் இணையதளத்தில் ராம்கி எழுதி இருப்பார்.
இசையமைப்பாளர் எந்த அளவுக்கு உழைப்பைச் செலுத்தினாரோ அதை மிகுந்த பொறுப்புணர்வோடு திரையில் கொணர்ந்திருப்பார்கள். கரி எஞ்சினின் அழகு, அதன் சக்கரங்களுக்கிடையே இருக்கும் நெருக்கமான உறவு. இளவயதில் ஒரு கையை முகத்திற்குக் குறுக்கே வைத்து கூ என்று கூவலிட்டு அப்புறம் இரண்டு கைகளையும் இணையாக நிறுத்திச் சக்கரங்கள் போல் இயக்கியபடி வீதியில் ரயிலாகவே ஓடாத இளமைப்பருவம் உண்டா…
இசைக்கேற்பச் சக்கரங்கள் வேகமெடுக்கவும், பி.சுசீலா தொடங்குகிறார் பல்லவியை, ‘சித்திரை மாதம் பவுர்ணமி நேரம், முத்து ரதங்கள் ஊர்வலம் போகும்’ என்று தத்தகாரத்திற்கு ஏற்ப வேக சந்தங்கள்….ஆனால், போகும் என்று நிறுத்தினால் எப்படி ரயில் போகும்? போகும் என்று முடிக்காமல், அந்த ‘ம்’ எழுத்தில் ஒரு நீட்சியாக சுசீலாவை ஹம்மிங் எடுக்க வைக்கிறார் எம் எஸ் வி! உடனே ரயிலோடும் இசையைக் கலக்கிறார் எம் எஸ் வி. அப்புறம், ‘தேரில் வந்த ராஜராஜன் என் பக்கம்….’ என்ற வரியில் காதலை எடுத்துவைக்கிறார் சுசீலா. ‘தேனுலாவும் தேனிலாவும் உன் பக்கம்…’ என்று தொடரும் அடியில் மேலும் சுகம் பரவ வைக்கிறார்.
அடுத்த அடியில், ரயிலின் கூவுதலுக்கேற்ப சங்கதியை மெல்லிசை மன்னர் வைக்கிறார், சொர்க்கமோ என்ற சொல்லில், அந்த ‘மோ’வை என்னமாக எடுக்கிறார் சுசீலா! ‘நீயும், நானும், போகுமிடம்….’ என்ற பல்லவியின் கடைசி அடியில் ஒவ்வொரு சொல்லுக்கும் எத்தனை எத்தனை சங்கதிகள்…அப்புறமென்ன உப்புக் காகித உரசலில் பறக்கும் ரயில். அதையடுத்துப் புல்லாங்குழல் எடுத்துக் கூவி வெளியே பரப்புகிறது காதலை !
சரணங்கள் இரண்டுமே எத்தனை அம்சமான ரயில் பயணக் கொண்டாட்டத்தை மனத்திற்கு மாற்றித் தருகின்றன! ‘அந்நாளிலே நீ கண்ட கனவு’ என்று புறப்படும் சுசீலா ரயில், ‘என் நெஞ்சிலே’ என்ற இடத்தில் அந்த ‘லே’வில் இழைக்கும் சந்தம்…..அப்பப்பா!
‘மின்னல் இளமேனி ஆசை தீர மெல்ல மெல்லத் தேறாதோ, பொன்னழகுக் கன்னம் காதல் தேவன் பூஜையில் மலராதோ’ என்ற அடியின் சொற்கள் ஒவ்வொன்றும் ஒரு பூக்கூடை போல் அத்தனை சங்கதிகளால் மணக்கும்! ‘சேராதோ’, ‘மலராதோ’ என்ற இடங்களில் எத்தனை கிறக்கம்… ‘பூஜையில்’ என்பதில் எத்தனை அலங்காரச் செதுக்கல்!
பல்லவியைத் தொடுகிறார் சுசீலா மீண்டும், ‘தேரில் வந்த ராஜராஜன் என் பக்கம்’ என்றதும் மேலும் கரியெடுத்துப் போட்ட வேகம் எடுக்கும் ரயிலின் கூவலில் பிறக்கும் குழலிசை சுவாரசியமான ஆலாபனை செய்து முடிக்க, சுசீலா, ‘பூமாலைகள்…’ என்று தொடங்கும் சரணத்திலும் ஒவ்வொரு சொல்லுக்கும் அற்புதமான சங்கதிகள் போட்டு நீட்டி ஒலித்து ரசமான அனுபவத்தில் நிறைவு செய்கிறார்.
‘பங்கு கொள்ள வந்தேன் கண்ணா உந்தன் சங்கம் வரக் கூடாதோ’ என்ற இடம் சுவையான சுவையாக ஒலிக்கும். அதிலும், ‘கண்ணா’, ‘கூடாதோ’ என்பதில் எத்தனை எத்தனை வேலைப்பாடுகள்! ஒரு முறை கேட்டால், திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டே இருக்க வைக்கும் பாடல்களில் ஒன்று இது. நடிகர் திலகத்தின் காதல் ததும்பும் பார்வையும், குழலிசைக்கான நடிப்பும், புன்னகை அரசியின் பாவங்களும் பாடலை வசப்படுத்தும்.
மே 22, 2022 அன்று மாலை வள்ளுவர் மன்றத்தின் இணையவழி நிகழ்ச்சியில், ‘இன்பத்திற்கும் இசை என்று பேர்’ என்ற தலைப்பில் பேசும் வாய்ப்பு கிடைத்தது. நரம்பியல் சிறப்பு மருத்துவரும், தமிழ் பற்றாளருமான சுப.திருப்பதி, இராமநாதன், ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி பாரி ஆகியோர் கலந்துகொண்ட அந்த நிகழ்ச்சியின் நிறைவில், திருப்பதி குறிப்பிட்டார், ‘எல்லோரும் சமூகத்திற்கு ஏதோ ஒரு வகையில் நல்ல விஷயங்களைக் கையளித்துக் கொண்டிருக்கிறோம், அது நாம் செய்யும் நன்றிக்கடன்’ என்று!
எண்ணற்ற ரசிகர்களுக்கு அவர்கள் வாழ்க்கையின் முக்கியமான தருணங்கள் ஒவ்வொன்றின் போதும் ஒலிக்கும் இசை பின்னெப்போது கேட்கும்போதும் நினைவலைகளைக் கிளர்த்தும் சிலிர்ப்பு மேலிட வைக்கிறது. அதற்குக் காரணமாக அமையும் இசைக்கலைஞர்களில், பி.சுசீலா அவர்களது இசை மகத்தானது. அஞ்சல் துறை அவருக்கு வழங்கியுள்ள பெருமைக்குரிய சிறப்பு பாராட்டுக்குரியது.
(இசைத்தட்டு சுழலும் ……)
கட்டுரையாளர் அலைபேசி எண் 9445259691
மின்னஞ்சல் முகவரி: [email protected]