தொடர் 23: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்
இத்தாலி – 1
நமது பயாஸ்கோப்காரனின் சினிமா பயணம் என்பது யுலிசெஸ்ஸின் கடற்பயணம் போல. பயாஸ்கோப்காரன் ஐரோப்பிய சினிமாவின் முக்கிய திரைப்படங்களைத் தந்திருக்கும் உலகின் முக்கிய திரைப்பட மேதைகளைக் கொண்ட இத்தாலியில் வந்து இறங்கியிருக்கான். இந்திய திரைப்பட மேதைகள் ஒரு சிலருக்கு உந்து சக்தியாகவும் பாதிப்பு ஏற்படுத்தியதாகவும் உள்ள உலகத் திரைப்படங்கள் சிலதை உருவாக்கிய புகழ்பெற்ற திரைப்பட மேதைகளைக் கொண்ட இத்தாலி இரண்டாம் உலகப் போரின் பாதிப்பும் தாக்கமும் பெற்ற இவர்களின் மகத்தான படைப்புகளைக் கொண்டது. போரின் அவலத்தை அப்பட்டமாயும் அங்கதமாயும் அழகியல் நயத்தோடும் சொல்லுபவை. இத்தாலிய சினிமா, உலக சினிமாவில் மிக முக்கிய பங்காற்றியதில் சில மேதைகளைக் கொண்டது. ராபர்டோ ரோசலினி, விட்டோரியா டி சிகா, லூசினோ விஸ்கோண்டி, பியர் பவாலோ பசோலினி ஃபெடரிகோ ஃபெல்லினி, கைலேஞ்சலோ அண்டோனியோனி, பெர்னார்டோ பெர்டு லுஸ்ஸி மற்றும் ஜிசிபே டோர்னடூர் என்ற இயக்குனர் பெயர் பட்டியல் முக்கியமானது. இத்தாலிய சினிமா “நியோ ரியலிஸம்” என்ற திரைப்பட கோட்பாட்டை கண்டெடுத்தது.
ராபர்டோ ரோசெல்லினி (ROBERTO ROSSELLIN) இத்தாலிய நியோரியலிஸ சினிமாவின் தந்தையாக குறிப்பிடப்படுவர். 1954-ல் ரோசெல்லினி, “நான் நியோரியலிஸத்தின் தந்தையில்லை”, என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதினார். இந்தக் கட்டுரை முன் வைத்த முரண்பாடு, ரோசெல்லினியின் கலைக்கோட்பாட்டிலிருந்து நேரடியாக எழுப்பப்பட்டதென்று கருதப்படுகிறது. நியோ ரியலிஸம் என்பது திரைப்படத்தில், “ஸ்டைலை” நிராகரித்த ஒரு புதிய ஸ்டைல்! இந்த திரைப்பட ஆக்க வகைமையை ரோசெல்லினி இரண்டாம் உலகப்போரின் உச்சகட்டத்தில் பொருளாதார நெருக்கடி எதிரிகள் ஆக்கிரமிப்பு, வேலையாட்கள் பஞ்சம் என்பனவற்றின் இடையில் கையாண்டு வெற்றி பெற்றார். ஒரு படத்தில் பங்கு பெறும் நடிகர்களும் படப்பிடிப்புக்கான இடங்களுமே, அந்தப் படத்தையும் அதன் இயக்குனரையும் அந்தப் படத்தை உருவாக்குபவையாக இருக்க வைத்தன. ஸ்டூடியோக்கள் தவிர்க்கப்பட்டு, கதை நடக்கும் நிஜமான அசல் இடத்திலேயே படம் எடுக்கப்படுவதோடு, தொழில் ரீதியான நடிகர்களோடு, அந்தந்தப் பகுதியில் வாழ்ந்து நடமாடும் மக்களையே படத்தில் நடிக்கச் செய்வது. இது நியோ ரியாலினி வகை திரைப்பட ஆக்கத்துக்கான எளிமையான விளக்கம். “WE MUST KNOW THINGS OUTSIDE OF ANY IDEOLOGY’’, என்று தன் திரைப்படக் கொள்கையைப் பிரகடனப்படுத்தினார் ரோசெல்லினி.
ரோசெல்லினி 1906-ல் ரோமில் பிறந்தவர். இன்றைக்கு நாம் சிக்கியிருக்கும், “கொரோனா”வைப் போன்ற பேரழிவுப் பெருந்தொற்று நோயாக அந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் ஐரோப்பாவில் பரவிய “ஸ்பானிஷ் ஃப்ளூ” என்ற நோயால் ரோசெல்லினி இருபது மாதங்கள் படுத்த படுக்கையாயிருந்து உயிர் பிழைத்தவர். இவரோடு இவர் சகோதரர் ரென்ஜோ ரோசெல்லினியும் [RENZO ROSSELLINI] இணைந்து நாடகங்கள் போட்டனர். ரென்ஜோ பின்னாளில் ராபர்டோவின் படங்களுக்கு இசையமைக்கும் பொறுப்பாளராகயிருந்து வந்தவர்.
ரோசெல்லினி “ROME OPEN CITY” [ROMA CITTA APERTA] படத்தை 1945-ல் தயாரித்து இயக்கி வெளியிட்டார். இத்தாலியை ஜெர்மன் ராணுவம் 1945-ல் சூழ்ந்து ரோம் நகரை ஆக்கிரமித்தவுடனே இவர் இப்படத்தை செய்து முடித்தார். ஜெர்மனிய ராணுவ ஆக்கிரமிப்பின் போது நிகழ்ந்த பல்வேறு நிகழ்வுகளை அவற்றில் பெங்கு பெற்ற ரோமானிய பொது மக்களின் அவலத்தை அவர்களைக் கொண்டே – கிட்டத்தட்ட ஓர் ஆவணப் படம் போல செய்திருக்கிறார். இப்படத்தின் முக்கிய மையமாயிருப்பது, ஒன்பது மாத ஜெர்மனிய ராணுவ ஆக்கிரமிப்பில், அதை எதிர்த்து ரகசியமாய் போராடிய கம்யூனிஸ்டு “எதிர்ப்பாளர்”களின் கதை.
இரண்டாம் உலகப் போரின் உச்சத்தில் ரோம் நகரம் ஜெர்மன் ராணுவ ஆக்கிரமிப்பிலிருந்த மிக நெருக்கடி மிக்க கட்டம். அன்றாட வயிற்றுப் பிழைப்புக்கு போராட்டம். கடுமையான உணவுப் பங்கீடு அமுலில் வருகையில் மக்கள் ரொட்டிக்கு வரிசையில் நிற்கும் காட்சி. நிலக்கரி லாரிகளிலிருந்து சாலையில் சிந்தும் கரியை பொறுக்கும் சிறுவர்கள். அவர்களையே, அப்படியப்படியே அந்தந்த இடங்களிலேயே இப்படம் படமாக்கப்பட்டது. இப்படம் உலகின் முதல் நியோ ரியலிஸ திரைப்படம். அதுவரை, சர்வாதிகாரி முஸோலினி காலத்து “வெள்ளை டெலிபோன் திரைப்படங்கள்” எனும் 1940களின் தொடக்க கால மோகத்தை உடைத்து, கருப்பு டெலிபோன்களை படமாக்கிய முதல் படமும் இதுதான். முஸோலினிக்கு வெள்ளை டெலிபோன் கருவிகளின் மேல் மோகமாதலால், அன்றைய திரைப்படங்களில் இடம் பெற்ற தொலைப்பேசி கருவிகளும் வெள்ளை நிறத்தாலேயே இருக்குமாறு பார்த்துக் கொள்ளப்பட்டது.
ரோமை நாஜிகள் ஆக்கிரமித்ததை, நகர ஆக்கிரமிப்பு எதிர்ப்பாளர்களுன் கம்யூனிஸ்டுகள் அதிகம். கம்யூனிஸ்ட் தலைவன் ஃபிரான்சிஸ்கோ என்பவரின் லித்தோகிராஃபிக் அச்சுக்கூடம் இடம் பெற்றிருந்த அடுக்குமாடி கட்டிடத்தில் மான்ஃபிரெடி எனும் எதிர்ப்பாளர் கம்யூனிஸ்ட் தலைவன் ஒளிந்திருக்கிறான். அதை சந்தேகித்த ஜெர்மன் ஜெஸ்டபோ போலீஸ் திடீரென போய் சோதிக்கிறது. மான்ஃபிரடி தப்பித்து வேறொரு பெண் வீட்டில் தஞ்சம் புகுகிறான். அச்சுக்கூட உரிமையாளர் ஃபிரான்சிஸ்கோவின் மனைவி பினாவும், கம்யூனிஸ்டுகள் மற்றும் ஆக்கிரமிப்பு எதிர்ப்பாளர்கள் மீது அக்கறையும் பரிவும் கொண்ட தேவாலய பாதிரியார் பின் பியட்ரோவும் புரட்சியாளருக்கு உதவி வருகின்றனர். இறுதி வெற்றி ரோம் நகருக்கு கிடைக்கும் தருணத்தில் கம்யூனிஸ்ட் மான்ஃபிரடி பிடிபட்டு மரண தண்டனை பெறுகிறான். அவனுக்கு உதவிய பினா, கர்ப்பிணி கோலத்தில் நாஜிகளால் வீதியில் சுட்டுக் கொல்லப்படுகிறாள். பாதிரியாரையும் சுட்டுக் கொல்லுகின்றனர். பினா பாத்திரத்தில் அன்னா மாக்னானியும் (ANNA MAGNANI), மான்ஃபிரடியாக மார்செல்லோ பாக்ளியரோவும் (MARCELLO PAGLIERO), பாதிரியாராக அல்டோ ஃபாப்ரிஜியும் (ALDO FABRIZI) தொழில்முறை திறனோடு நடித்திருக்கினற்னர். மற்ற பாத்திரங்களை ஏற்ற உப – உபரி நடிக நடிகைகள் யாவருமே நடிகர்களே அல்ல. இப்படம் எடுக்கப்பட்ட அவ்வந்த பகுதிகளிலுள்ள ஜனங்களே நடித்திருக்கிறார்கள். இந்த வகையான புதிய யதார்த்த வழி படமாக்கலை கடக் மற்றும் மிரினாள் சென்னும் தங்கள் சினிமாக்கு பின்பற்றியிருக்கிறார்கள். ரோம் ஓப்பன் சிடிகேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு PALME DOR விருது பெற்றது.
இவ்வகையான நியோ ரியலினி திரைப்பட முறை உலகெங்கும் பின்பற்றப்பட்டது. பிரமிக்க வைக்கும் ஒளிப்பதிவை காமிரா கலைஞர் உபால்டோ அராடா [UBALDO ARATA] செய்திருக்கிறார்.
ரோசெல்லின் அடுத்தடுத்து செய்த இரு படங்களும் ஓபன் சிடி போலவே நியோரியலிஸ் படங்கள். PAISA [1946] என்ற படம் யுத்தகால இத்தாலி வாழ்க்கையை ஆறு பகுதிகளில் ஆறு கதைகளில் சொல்லும் படம். ஆறாவது பகுதி அற்புதமானது. மூன்றாவது GERMANY, YEAR ZERO [1947] என்ற படம் ஒரு ஜெர்மனிய பையன் குண்டு வீச்சால் படுமோசமாய் நாசமாகி சிதிலமடைந்த பெர்லின் நகரத்துக்குள் நடமாடும் அனுபவம் பற்றியது. இம் மூன்று திரைப்படங்களும் ராபர்டோ ரோசெல்லினியின் “யுத்த கால முப்படங்கள்”, என்று அழைக்கப்படுபவை. ரோசெல்லினிக்கு உலகப் புகழ்பெற்ற சர்வதேச நடிகை ஒருவரிடமிருந்து கடிதமொன்று வந்தது.
“அன்பார்ந்த திரு ரோசெல்லினி, உங்கள் ஓபன்சிடி, பெய்சா ஆகிய திரைப்படங்களைப் பார்த்து மிகவும் மகிழ்ந்தேன். உங்களுக்கு, நன்கு ஆங்கிலம் பேசும், ஜெர்மன் மொழியை மறக்காத, ஃபிரெஞ்சு மொழியில் பேசத் திணறும் இத்தாலிய மொழியறியாத ஸ்வீடிஷ் நடிகை ஒருத்தி தேவையிருக்குமானால் சொல்லுங்கள், நான் உடனே வந்து உங்கள் திரைப்படம் ஒன்றில் நடிக்கத் தயாராயிருக்கிறேன். இப்படிக்கு, இங்கிரிட் பெர்க்மன்.” என்றிருந்தது. அடுத்து ரோசெல்லினி இன்கிரிட் பெர்க்மனை கதாநாயகியாய் வைத்து STROMBOLI. LAND OF GOD (1949) எனும் படத்தை இயக்கி வெளியிட்டார்.
இப்படத்தைத் தொடர்ந்து இன்கிரிட் பெர்க்மன் ரோசெல்லியின் இயக்கத்தில் ஐந்து படங்களில் நடித்ததோடு இருவரும் காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொண்டு மூன்று குழந்தைகளைப் பெற்றெடுத்தனர். இந்த உறவு 1956 வரை நீடித்தது. 1956-ல் இன்கிரிட் பெர்க்மன் அமெரிக்க ஹாலிவுட்டின் அழைப்பை ஏற்று அங்கு நிரந்தரமாக இடம் பெயர்ந்தார். 1956-ல் பிரம்மாண்டமான ANASTASIA [1956] என்ற படத்தை YUL BRYNER–வுடன் இணைந்து நடித்தார். ரஷ்ய புரட்சிக்குப் பின் ஜார் மன்னனின் உறவினர்கள் ஃபிரான்சுக்கு தப்பியோடி மறைந்திருந்தனர். அதில் முக்கியமான பெண் அனாஸ்தாசியா. அவர்களைத் தேடிப் பிடிப்பதில் போல்ஷெவிக்குகள் அலைகின்றனர். போல்ஷெவிக் அதிகாரியாக யூல் பிரின்னரும் அவருக்குப் போக்குக் காட்டும் அனாஸ்தாசியாவாக இன்கிரிட் பெர்க்மனும் சிறப்பாக நடித்திருப்பார்கள். இப்படத்தோடு பெர்க்மனுக்கும் ரோசெல்லினிக்குமான உறவு முடிந்து போனது. இப்படத்தில் நடித்தமைக்காக பெர்க்மன் சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருது பெற்றார். ரோசெல்லினி 1959-ல் INDIA என்ற மிக முக்கியமான ஆவணப்படம் ஒன்றை தயாரித்தளித்தார். ராபர்டோ ரோசெல்லினி 1977-ல் காலமானார். காலமாகும் தருணத்தில் ஏசு கிறிஸ்துவின் கதையை MESSIA என்ற தலைப்பில் படமாக்கினார். அவர் மறைவுக்குப் பிறகு 1978-ல் இப்படம் வெளி வந்தது.
ராபர்டோ ரோசெல்லினி தன் முதல் காதல் மனைவியிலிருந்து கடைசி மனைவி வரை எல்லோரோடும் இறுதி வரை தொடர்பிலிருந்தே வந்திருப்பவர். அவரது மரணத்தின் போது நல்லடக்கம் நடக்கையில் இறுதி மரியாதை செலுத்த அந்த எல்லா காதலிகளும் மனைவிகளும் வந்திருந்து மலர் வைத்துச் சென்ற நிகழ்வு மிக அரிதானது. இந்த நிகழ்வையே ஆரம்பக் காட்சியாக கொண்ட ஒரு ஃபிரெஞ்சு புதிய அலை படத்தை தயாரித்து இயக்கியவர் ஃபிரான்ஸ்வா த்ரூஃபா [FRANCOIS TRUFFAUT] படம் “THE MAN WHO LOVED WOMEN”.
நியோரியலிஸ திரைப்படங்களில் மற்றொரு மைல்கல் விட்டோரியா டிசிகா இயக்கிய மிக மிக புகழ் பெற்றதும் உலகத்தின் கவனத்தை பெரிதும் ஈர்த்ததுமான படம் “THE BICYLE THIEVES” விட்டோரியா டி சிகாவின் [VITTORIO DE SICA] புகழ்பாடும் இப்படத்தை பயாஸ்கோப்காரன் மிகவும் காலம் கடந்தே பார்க்க நேரிட்டது. இதற்கு முன்பாக டி சிகாவை நடிகராக சில படங்களில் பார்த்த அனுபவமுண்டு. பிறகு அவர் இயக்கிய பல்வேறு சிறப்பான படங்களைப் பார்த்த பிறகுதான் “சைக்கிள் திருடர்கள்” படத்தையும் அவரது பிற இத்தாலி படங்களையும் பார்க்க நேரிட்டது. சேலம் நியூ சினிமாவில் வெளியான “A FAREWELL TO ARMS” (1957) வண்ணப் படம் அவற்றில் ஒன்று. இந்த புகழ்பெற்ற அமெரிக்க நாவல் அமெரிக்க எழுத்தாளரான ஹெமிங்வே எழுதியது. 1932-ல் கேரி கூப்பர் நடித்த கருப்பு வெள்ளைப் படம் ஒன்றிருக்கிறது.
1957-ன் படத்தில் ராக் ஹட்சன் நடித்திருப்பார் A FAREWELL TO ARMS – நாவல், முதல் உலகப் போர் பின்னணியில் இராணுவ செஞ்சிலுவை வண்டியின் ஓட்டுனருக்கும் இராணுவ நர்ஸ் ஒருத்திக்குமான சோக முடிவைக் கொண்ட காதல். போர் காட்சிகள், தியாகம் எல்லாம் உள்ளிட்டது. கதையில் ஓர் இராணுவ அறுவை சிகிச்சை மருத்துவரின் பாகம், பாத்திரம் மிக முக்கியமானது. அவரை எதிரிகள் குற்றவாளியாக்கி சுட்டுக் கொன்று விடுவார்கள். அந்த உணர்ச்சி மிக்க பாத்திரத்தை ஏற்று அதி சிறப்பாக நடித்தவர் விட்டோரியா டி சிகா. டி சிகாவை நமது பயாஸ்கோப்காரன் மேலும் சில படங்களில் குணசித்திர பாத்திரங்களில் நடித்திருப்பதை பார்க்க நேரிட்டது. [SHOES OF THE FISHERMAN]. இச்சமயம் அவரது அற்புத இயக்கத்தில் உருவான இத்தாலிய படம் “LA CIOCIARA – (1960)” [TWO WOMEN] ஓடியன் திரையரங்கில் இரண்டாவது ஓட்டமாய் திரையிடப்பட்டது. இரண்டாம் உலகப்போர் பின்னணியில் புகழ்பெற்ற இத்தாலிய நாவலாசிரியர் ஆல்பர்டோ மொரேவியா [ALBERTO MORAVIO] எழுதிய நாவலைக் கொண்டு
டி சிகா செய்த உயரிய படம். லா சியோசியாரா போரின் அவலம், மனித உறவுகள், தாய் – மகள் பாசம் என்பனவற்றைக் கொண்டது. இது ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்யப்பட்டு “TWO WOMEN” என்று வெளியானது.
1901-ல் இத்தாலியில் நேப்பிள்ஸ் நகரில் பிறந்த டி சிகா தன் வறிய குடும்பத்தைக் காப்பாற்ற ஆபீஸ் பையனாக வேலை பார்த்தவர். 17-வது வயதிலேயே சினிமாவில் நடித்தவர். அவரது வசீகர தோற்றம் விரைவில் புகழ் பெற்ற கதாநாயக நட்சத்திரமாக ஜொலிக்க வைத்தது. அவருக்கும் திரைப்பட எழுத்தாளர் சிசேர் ஸவாட்டினிக்குமான
[CESARE ZAVATTINI] நெருங்கிய உறவு டி சிகாவை உயர்ந்த திரைப்பட இயக்குனராக்கியது. ஸவாட்டினியுடன் இணைந்து 1946-ல் “ஷு ஷைன்” [SHOE SHINE] [ BICYCLE THIEVES] 1948 இரு படங்களையும் செய்தார். சைக்கிள் திருடர்களின் நியோ ரியலினி அதிசயம். இந்தியாவில் ஒரு சத்யஜித் ரே தோன்றுவதற்கும் வழி காட்டியாயிற்று. இவ்விரு படங்களும் இரண்டாம் உலக யுத்த கொடுமையையடுத்து இத்தாலியை வாட்டிய வறுமையைச் செல்லுபவை. பைசைகிள் தீவ்ஸ் படம், சிறப்பு ஆஸ்கார் விருதைப் பெற்றது.
யுத்தத்துக்குப் பிந்தைய ரோமில் வேலையற்று உழலும் அன்டோனியோ ரிக்குக்கு [ANTONIO RICCI] சினிமா சுவரொட்டி ஒட்டும் வேலை கிடைக்கிறது. அதற்கு சைக்கிள் அவசியம். சைக்கிள் இருந்தால் தான் வேலை தருவோம் என்கிறார்கள். மனைவி வீட்டு பெட்ஷீட்டுகளை அடகு வைத்து பழைய சைக்கிள் ஒன்றை வாங்கித் தருகிறாள். முதல் நாள் போஸ்டர் ஒட்டும் காட்சியே டி சிகாவின் கலை மேன்மையோடு அரசியல் – சமூக எதிர்கால சிந்தனையும் உள்ளிட்டதாயிருக்கும். அது பெரிய சுவரொட்டி. சுவரின் பெரும்பகுதியை ஆக்கிரமித்து ஒட்டப்படும் அச்சுவரொட்டி ஒரு அமெரிக்க ஹாலிவுட் படத்துக்கானது. சுவரொட்டி முழுக்க கவர்ச்சியான நிலையில் ரீடா ஹேவர்த்தின் படம் கொண்டது. இத்தாலியை ஹாலிவுட் சினிமா ஆக்கிரமித்திருப்பதை டி சிகா இந்தக் காட்சி வழியே தெரிவிக்கிறார். முதல் நாள் போஸ்டரை ஏணியில் ஏறி ஒட்டி விட்டு இறங்கிக் கீழே வந்து பார்த்தால் சைக்கிள் காணோம். அண்டோனியோவின் சைக்கிளை யாரோ திருடிச் சென்று விடுகிறார்கள். தனது மகன் – சிறுவன் ப்ரூனோவுடன் [BRUND] திருடுபோன தன் சைக்கிளைத் தேடி அண்டோனியோ ஊரெங்கும் அலைகிறான். பழைய பொருட்கள் – திருட்டு சாமான்களை வாங்கி விற்கும் குஜிலி, அடகுக் கடைகள் எங்கும் பார்த்தாகி விட்டது. பார்க்கும் பழைய சைக்கிள்கள் எல்லாமே களவு போன தன் சைக்கிள் போலவே இருக்கிறது. அப்படியான உணர்வை நமக்கு ஏற்படுத்தும் வகையில் டி சிகா, ஆகா! என்னமாய் காட்சிகளை அடுத்தடுத்து கோர்த்திருக்கிறார். ஒரு சைக்கிள் இவர்களுடையது போலவேயிருக்கிறதால், “இதுதான் நம் சைக்கிள்” என்று ப்ரூனோ கூறவும் அதை எடுக்க முயற்சித்து மாட்டிக் கொள்ளும் காட்சி நமது இரக்கத்தைப் பெறுகிறது.
சைக்கிள் போனதால் கிடைத்த வேலையும் கோவிந்தா! இந்த அலைச்சலில் ரோமானிய சமூகத்தின் பல போருக்குப் பிந்தைய அவலங்களை புரையோடின வகுப்பு பேதங்களை சந்திக்கிறான் அண்டோனியோ. இந்த மகத்தான இத்தாலிய நியோரியலிஸ் படம் விட்டோரியா டி சிகாவை புகழின் சிகரத்துக்கு இட்டுச் சென்றது. தந்தைக்கும் மகனுக்குமுள்ள மாபெரும் பரஸ்பர பரிவை. அன்புறவை, பாசத்தை இப்படம் அபரிதமாகச் சொல்லுகிறது. இப்படத்தில் மிருதுவாய் இழையோடும் அங்கதம் மற்றும் எள்ளல் கூடிய சமூக நகைச்சுவையில் சாப்ளினையும் பார்க்க முடிகிறது. டி சிகாவின் உயரிய இயக்கத்தில் பக்க பலமாய் இணைந்திருப்பது அண்டோனியோவா நடிக்கும் லாம்பர்டோ மாக்கியோரானி [LAMBERTO MAGGFORANI] மற்றும் சிறுவன் ப்ரூனோவாக நடிக்கும் என்ஸோ ஸ்மீலாலா [ENZO STALOLA]. என்ஸோ ஸ்டலோபுலா நடிகனல்ல. அங்கிருந்த பையன். இருவரின் அதி உயர்ந்த நடிப்பும், அலெஸ்ஸாண்ட்ரோவின் இசையும், கார்லோ மாண்டுவோரியின் [CARLO MONTUORI] பிரமாத ஒளிப்பதிவும் மிகச் சிறந்த அயல் மொழிக்கான ஆஸ்கர் விருதைப் பெற்றுத் தந்தன.
இடையில் வேறு படங்களைச் செய்து விட்டு விட்டோ ரியா டிசிகா 1960-ல் “LA CIOCIARA” [TWO WOMEN] என்ற மீண்டும் நியோரியலிஸ பாணியில் ஒரு படத்தை இயக்கினார். இரண்டாம் உலகப் போர் முடியுந்தருவாயில் ஜெர்மனிய படையின் தாக்குதல் ஒருபுறம், நேச நாட்டுப் படைகளின் எதிர் தாக்குதல் மறுபுறம் என்றிருக்கையில் முஸோலியின் கைதுக்குப் பின் இத்தாலிய ராணுவம் சீர் குலைகிறது. இந்த சூழலில் செஸ்ரா எனும் இளம் விதவை கணவனின் கடையைக் கவனித்துக் கொண்டு தன் பதிமூன்று வயது மகள் ரோ செட்டாவுடன் வாழ்கிறாள். குண்டு மாரி பொழியும் நிலையில் கடை மூடப்படுவதும் திறப்பதுமாய். ரோமை விட்டு வெளியேறி மலைப்பகுதியிலிருக்கும், சொந்த ஊருக்கு மகளோடு போய் விட முடிவு செய்கிறாள் செஸீரா. தன் கடையை பார்த்துக் கொள்ளுமாறு கணவனின் நண்பன் ஜியோவன்னியிடம் கேட்டுக் கொள்ள, அதற்கு பிரதியுபகாரமாய் அவன் அவளையே கேட்கிறான். அவனது விருப்பத்துக்கு இணங்கிவிட்டு செஸீரா, ரோசெட்டாவுடன் ரயிலில் புறப்படுகிறாள். வழியில் குண்டு வீச்சுக்கு ரயில் இருப்புப் பாதை சேதமடைந்ததால் ரயில் நின்று விடுகிறது. இறங்கி நடந்தே போய் விடலாமென இரு பெண்களும் தங்கள் மூட்டை முடிச்சுகளைத் தலையிலும் இடுப்பிலும் சுமந்து நடந்து விடுதியொன்றில் தங்குகின்றனர். அங்கும் இத்தாலிய சிப்பாய்கள் பாலியல் ரீதியான தொந்தரவை ஆரம்பிக்கின்றனர். அந்தப் பகுதியில் பாசிஸ்டுகள், ராணுவத்தை விட்டு விட்டு ஓடி வந்து ஒளிந்திருப்பவர்கள், கடத்தல் வியாபாரிகள் நிறைந்திருக்கின்றனர்.
அவ்வூரில் படித்த பணக்கார இளைஞன் ஒருவனுக்கும் செஸீராவுக்கும் காதலுறவு ஏற்படுகிறது. இளைஞன் பாசிஸத்தை எதிர்ப்பவன். ஒருநாள் அங்கு வரும் ஜெர்மானிய இராணுவம் மலைப் பகுதியில் வழிகாட்டியாக பிக்கோலை – இளைஞனை அழைத்துச் செல்லுகின்றனர். அவன் திரும்பல்லை. கிராமத்திலிருக்க பயந்த குடும்பங்கள் வெவ்வேறு திசையில் தப்பிச் செல்லுகையில், செஸீராவும் அவள் பெண்ணும் ஒரு பக்கம் செல்லும் வழியில் குண்டு வீச்சில் சிதிலமடைந்த தேவாலயத்தில் இராவு தங்குகின்றனர். அங்கு வரும் நேச நாட்டு படையைச் சேர்ந்த சிப்பாய்கள் வெறி கொண்டு தாயையும் மகளையும் ஒருவர் முன்னால் இன்னொருவரை, இருவரும் ஒருவரையொருவர் பார்க்கப் பார்க்க கெடுத்து நாசமாக்கி வல்லுலுறவு கொண்டு விட்டு போய் விடுகின்றனர். இந்த நிகழ்வு நடைபெறும் காட்சி மயிர் கூச்செறிய வைக்கும். ஒருகணம் ஆடிப்போய் விடுகிறோம். தாய் செஸீராவாக நடிக்கும் பிரபல இத்தாலி நடிகை சோஃபியா லாரன்ஸ் உலகப் புகழ்பெற்ற நடிகை. இந்த காட்சியிலும், அடுத்து ஒரு லாரியில் அமர்ந்து கண்ணீர் மல்க குடிகார லாரி டிரைவரின் ஆபாச பாட்டை சகித்தவாறு போகும் காட்சியிலும் சோஃபியா நடிப்பின் சிகரத்துக்குப் போய் விடுகிறார். ஓர் எளிய பெண்ணின் அனுபவ ரீதியாக இத்தாலியின் யுத்த வரலாற்றை டி சிகா மிக அழுத்தமாய் – அற்புதமாய் படமாக்கியிருக்கிறார். பல சர்வதேச விருதுகளைப் பெற்ற “இரு பெண்கள்” படத்தில் செஸீராவாக நடித்தமைக்கு சோஃபியா லாரன்ஸ் சிறந்த நடிகை விருது பெற்றவர்.
டி சிகா 1963-ல் “THE CONDEMNED OF ALTONA” என்ற அரிய படத்தை இயக்கினார். “ஜெர்மனி யுத்தம் ஓய்ந்த பின்” – என்றும் இதைப் பெயரிடலாம். ஹிட்லர் காலத்தில் அவர் அமைத்திருந்த இரண்டு கொடூரமான அமைப்புகள்: ஜெஸ்டபோ மற்றும் எஸ்.எஸ். [SHUDTS STAFFEL] இந்த எஸ்.எஸ். அமைப்பு ஜெர்மனிய ராணுவத்தை விட கொடூரமானது. இதைச் சேர்ந்த நாஜிகள்தான் யூதர்களை விஷவாயு நிரம்பிய அறைகளில் தள்ளிக் கொன்றவர்கள். ஹிட்லர் மரணமுற்றபின், பாதிக்கப்பட்ட யூதர்களின் தலைவராக வைசந்தால் என்றவர் தலைமையில், அர்ஜெண்டினாவுக்கும் பிற இடங்களுக்கும் தப்பியோடி தலைமறைவான எஸ்.எஸ். தலைவர்களில் பிறகு பிடிபட்டு மரண தண்டனையளிக்கப்பட்டவர்களில் அடால்ஃப் இஷ்மன் [ADALF EACHMAN] எடுவார்டு ரோஷ்மன் [EDUVARD ROSHMAN] ஆகியோர் முக்கியமானவர்கள். அவ்வாறு தேடப்பட்டு வந்த ஒருவன் புத்திபேதலித்துப் போகிறான். அவனது தந்தை பெரிய தொழிலதிபராகிறார் – மேற்கு ஜெர்மனியில் மகனைக் காப்பாற்ற ஒரு பாதாள அறைகட்டி அதற்குள் வைத்திருக்கிறார். அவன் சதா பிதற்றியபடி கிழிந்துபோன எஸ்.எஸ். சீருடையில், பெரிய கரும்பலகையில் கிறுக்கல் கோட்டோவியங்கள் கிறுக்கி ஜெர்மனி நேச நாடுகளால் அழிந்து போய் அதன் இளைஞர்கள் ரவுடிகளாய், கூட்டிக் கொடுப்பவர்களாய் அலைகிறார்கள் என படம் கிறுக்கி தனக்குத் தானே பேசுவான். ஜெர்மன் இளம்பெண்கள் எல்லாம் சோரம் போய் வேசிகளாகி விட்டனர் என்கிறான்.
அப்படியெல்லாம் இல்லை, ஜெர்மனி தொழில்வளத்தில், கடல் வாணிபத்தில் கல்வியில் எவ்வளவு முன்னேறியுள்ளது என்று அவனுக்கு அவன் தொழில் அதிபரான தந்தை சொல்லியும் பயனில்லை. ஒருநாள் அவனைக் காரில் வைத்து மழை பெய்யும் சமயம் துறைமுகத்துக்கு அழைத்துச் செல்லுகிறார் தந்தை. உயரமான இடத்துக்கு இட்டுச் சென்று துறைமுகத்தில் நங்கூரமடித்து நிற்கும் வணிகக் கப்பல்களைக் காட்டுகிறார். தொழிற்கூடங்களைக் காட்டுகிறார். மகன் சிரித்துக் கொண்டே தன் தந்தையைப் பிடித்துத் தூக்கி வெகு உயரத்திலிருந்து தள்ளிவிடுகிறான். மழை வலுக்கிறது. பைத்தியக்காரனின் தொழிலதிபத் தந்தையின் பிணம் மழையில் கிடக்கிறது. இப்படம் 1964-ல் சென்னை க்ளோப் திரையரங்கில் வெளியானது. இப்படத்தின் கதை-வசனத்தை டி சிகாவின் விருப்பப்படி அமைத்து எழுதியவர் உலகப் புகழ்பெற்ற ஃபிரெஞ்சு எக்சிஸ்டென்ஷியலிஸ தத்துவ மேதை ழோன் பல் சார்தர். கரும்பலகைக் கிறுக்கல் கோட்டோவியங்களை வரைந்தவர் போலந்து ஓவியரும் ஜார்ஜ் பெர்னார்டு ஷாவின் நண்பருமான ஃபெலிக்ஸ் டோபால்ஸ்கி.
[FELIX TOPALSKI]. புத்திபேதலித்த மகனாக சிறப்பாக நடித்தவர் ஆஸ்திரிய நடிகர் மாக்ஸிமில்லியன் ஷெல் [MAXIMILLON SCHELL]. தந்தையாக நடித்தவர் ஃபிரெடரிக் மார்ச்
[FREDERIC MARCH]. டி சிகாவின் சிறந்த படங்களுள் இதுவும் ஒன்று.
டி சிகாவின் மற்றொரு யுத்த பின்னணியிலான படம் “SUN FLOWER”. இப்படம்
1969-ல் தயாரித்து இயக்கி வெளியானது. இத்தாலி ஃபிரான்ஸ் கூட்டுத் தயாரிப்பு. இத்தாலிய ராணுவ சிப்பாய் ஒருவன் இரண்டாம் உலகப்போரின் போது ரஷ்ய எல்லைக்கு அனுப்பப்படுகிறான். ரஷ்யாவில் கைதாகி போர் ஓய்ந்த பிறகு பொது மன்னிப்பு வழங்கப்பட்டு அங்கேயே சூரியகாந்திச் செடிகளை பயிரிட்டு சாகுபடி செய்து கொண்டு வாழ்க்கை நடத்துகிறான். தாய்நாடான இத்தாலிக்குத் திரும்புவதே இல்லை. அவனது இத்தாலிய மனைவி அவனைத் தேடிக் கொண்டு ரஷ்யாவுக்கு வருகிறாள். ஒருவழியாக இராணுவ விவரங்களைக் கொடுத்தபின் அவனை கண்டடைகிறாள். இப்போது அவன் பொது மன்னிப்பு பெற்று, ரஷ்ய குடிமகனாகி, ரஷ்ய பெண்ணை மணந்து ஒரு குழந்தைக்கும் தந்தையாக சுகமாய் வாழ்கிறதைப் பார்த்துவிட்டு இத்தாலிய மனைவி, ஊர் திரும்புகிறாள். இந்தப் படத்தில் ரஷ்ய இயற்கைக் காட்சிகளை ஏராளமாக வழங்கியிருக்கிறார் டி சிகா. இத்தாலி மனைவியாக சோஃபியா லாரன்ஸும், அவளது கணவனாக மார்செல்லோ மாஸ்டிராயினியும் நடிக்கிறார்கள். ரஷ்ய மனைவியாக லூட்மிலா சவேலியெவா [LUDMILA SAVELYEVA] மற்றும் கலினா ஆண்ட்ரீவா [GALINA ANDREEVA] எனும் ரஷ்ய நடிகையும் நடிக்கிறார்கள். சென்னையில் சஃபையர் திரையரங்கில் திரையிடப்பட்ட SUN FLOWER விட்டோரியா டி சிகாவின் சிறந்த படங்களில் ஒன்றாக கொள்ளப்படாதது.
உலக சினிமாவில் மனித நேயத்தை முன்னெடுத்துச் சென்ற திரைப்பட மேதைகளில் டி சிகா ஒருவர். இவர் 1974-ல் காலமானார்.
(வளரும்)
முந்தைய தொடர்களை வாசிக்க:
தொடர் 19: பயாஸ்கோப்காரன்(கிழக்குமுகமாய் 2) – விட்டல்ராவ்
தொடர் 20: பயாஸ்கோப்காரன்(கிழக்கு முகமாய் 3) – விட்டல்ராவ்
தொடர் 21: பயாஸ்கோப்காரன்(மத்திய கிழக்கில் ஈரான் துருக்கி) – விட்டல்ராவ்
தொடர் 22: பயாஸ்கோப்காரன்(மேற்கு ஐரோப்பிய சினிமா) – விட்டல்ராவ்