காதலைப் புரிந்து கொள்ளுங்கள்
**************************************
புரிந்து கொள்ளாதவர்கள்
தாமாகவே
பிரிந்து விடுவார்கள்!
புரிந்து கொண்டவர்களை
புரிந்து கொள்ளாமல்
பிரித்து வைக்க
பிரயத்தனப்படாதீர்கள்!
காதல்
ஒரு மலரின்
தேன் சுரப்பைப் போன்றது!
காதல்
காமமும்
கவர்ச்சியும்
கலந்ததுதான்!
பொய்கள்
ஊடுறுவ முடியாத
காதல் கோட்டைக்குள்
சாதி, மத, மொழி, இனச்
சாத்தான்களா?
எதனையும்
எதிர்க்கும்
வலிமை உடையதுதான்!
அவ்வளவு
எளிதாக
வசப்பட்டு விடாதது காதல்!
ஈர்ப்பு இல்லாமல்
இணைவதில்லை
இதயங்கள்.
காதலுக்கான
முக்கியமானது
சூழல்!
காதல்
வன்முறையை
ஒருபோதும் நாடாதது!
காதலுக்கு
கல்வியறிவு முக்கியமல்ல!
காதல்
தாவுகின்ற தன்மை இல்லாதது!
கலந்துவிட்ட பிறகு
குற்றவுணர்சசி கொள்வதில்லை காதல்.
தவறு செய்துவிட்டோமென்று
பின்னோக்கித் திரும்புவதில்லை
பிரியமான காதல்.
ஆயுதத்திற்கும்
அச்சப்படாதத்
தீவிரம்தான் காதல்!
நாடகக்காதல்
நடிப்புக்காதல்
என்பதெல்லாம்
வெறுப்பின் விதைகள்.
காதலை
குற்றமென்று
சொல்வதற்கு
எந்த நீதிபதியும்
சட்டம் பயிலவில்லை!
காதலில்
கருப்பு சிவப்பு என
பிரித்துச் சொல்லும்
மருத்துவம் இல்லை!
காதலுக்கு
எந்த சாயம் பூசினாலும்
ஒட்டிக் கொள்ளாது!
அது
சுயமரியாதைக் குருதி!
ஐயம்தான் ஐயனே…’!
**************************
நம்பிக்கை என்பது
அவரவர்
நம்பிக்கை!
உருவம் வைத்துப் பார்ப்பதா
உருவமற்றுப் பார்ப்பதா
உருவமென்றால்….
மலை போன்றா
மரம் போன்றா
விலங்கு போன்றா
பறவை போன்றா
மனிதன் போன்றா?
அவரவர் நம்பிக்கை….
ஆடைகளை, அணிகலன்களை
அணிவித்துப் பார்ப்பதா?
இயக்கும்
இயக்குநரை
மண், மரம்,கல், உலோக
உருவங்களுக்குள்
அடக்க முடியுமா?
அறியாமை கேள்வியென
நினைத்தாலும்…
ஆம். இல்லை.
மழுப்பலான பதில்தான்!
சரி…
உருவத்தில்
அடங்கிவிடும்
உலக இயக்குநருக்கு;
நுதலில்தான்
குறியீடுகளை
குறிக்கின்றீர்!
அதே
குறியீடுகளை
மனிதரும்
தம்தம் நுதலில்
குறித்துக் கொள்வது எப்படி?
மனிதரும்,
இயக்குநர் சிலையும் ஒன்றா?
மனிதரின் மனநிலை
சிலைக்கு உண்டா?
சிலைதான்
புனிதமென்றால்
குறியீடுகளை
சார்த்திக்கொள்ளும்
மனிதனும்
புனிதனா?
சிலை போன்றே
குறியீடுகளை
போட்டுக்கொள்ளும்
மனிதன்
ஆசையற்றவனா?
சிலைகளை வணங்கும் மக்கள்
சிலைகளைப் போன்று
குறியீடுகளை
அணிந்து கொள்ளும்
மனிதனையும்
வணங்குதல் வேண்டுமா?
உலக இயக்குநர்
சிலையிலிருந்து,
மனித உருவங்கள்
காப்பியடிக்கப்பட்டனவா?
மனிதன்
தன்னுருவத்தில்
உலக இயக்குநர் உருவத்தை
வடித்தானா?
ஏன்டா சாமி
பகுத்தறிவைக் கொடுத்தாய்?
சாமி….
நான் கேட்கும்
ஐயங்களெல்லாம்
உங்களையல்ல;
என்னைப் போன்ற
மனிதனை!
உலகின் உன்னதம் நீ
*************************
உணவுக்கும் உடுத்துதற்கும்
உழைப்பதனைக் கொடுத்தவன் நீ
உலகத்தார் வாழ்வதற்கு
ஓடாகத் தேய்ந்தவன் நீ!
நிலமுழைத்து நீர்கொடுத்து
நிம்மதியைத் தந்தவன் நீ
நிழல்கொடுக்கும் மரமதனை
நிலத்தினிலே நட்டவன் நீ!
மண்குடிலோ மாளிகையோ
மணக்கின்ற மலர்வனமோ
மாநிலத்தை வளம்செய்ய
மாசின்றி உழைப்பவன் நீ!
அலைகடலே யானாலும்
ஆகாய மானாலும்
சாலைகளே யானாலும்
சளைக்காமல் உழைப்பவன் நீ!
மலையுடைத்து மண்சுமந்து
காடுதனில் தினமுழைத்து
சுமைசுமந்து உனையிழந்து
பிறர்வாழ உழைப்பவன் நீ!
கணினியினை இயக்குபவன்
கழனியிலே இறங்குபவன்
சாக்கடையை அள்ளுபவன்
சரக்குமூட்டை தூக்குபவன்;
கனரகங்கள் இயக்குபவன்
கட்டைவண்டி ஓட்டுபவன்
கரமுழைக்கும் அனைவருமே
கடவுள்நிகர் உன்னதமே!
– பாங்கைத் தமிழன்