Let us take the All India Strike Struggle to a new height - 2022 Article By Com Tapan Sen in tamil translated By S. Veeramani. 2022 மார்ச் 22 - அகில இந்திய வேலை நிறுத்தம் போராட்டத்தை புதிய உச்சத்திற்கு எடுத்துச் செல்வோம் - தபன் சென் | தமிழில்: ச.வீரமணி

அகில இந்திய வேலை நிறுத்தம் போராட்டத்தை புதிய உச்சத்திற்கு எடுத்துச் செல்வோம் – தபன் சென்




வீரஞ்செறிந்த விவசாயிகள் போராட்டம் தொழிலாளர் வர்க்கத்தின் உறுதியான, செயலூக்கமுள்ள ஒருமைப்பாட்டு நடவடிக்கைகளுடன் சேர்ந்து, வரலாறு படைத்து, ஓராண்டு நிறைவடைந்த பின்னர், பிடிவாதமாக இருந்து வந்த ஆர்எஸ்எஸ்/பாஜக ஆட்சியை படுபிற்போக்குத்தனமான வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வைத்துள்ள பின்னணியில், இப்போது மத்தியத் தொழிற்சங்கங்களின் கூட்டுமேடையும், சுயேச்சையான துறைவாரி சங்கங்களின் கூட்டமைப்புகளும் இணைந்து, மோடி அரசாங்கத்தின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத, நாசகரமான தேச விரோத கொள்கைகளுக்கு எதிராக, “மக்களைக் காப்பாற்றுவோம், நாட்டைக் காப்பாற்றுவோம்” என்ற முழக்கத்துடன் அனைத்து மக்களுக்கும் மார்ச் 28-29 – இரு நாள் அகில இந்தய வேலைநிறுத்தத்தை மேற்கொள்ள அறைகூவல் விடுத்திருக்கின்றன.

விவசாயிகள் போராட்டத்தின் தொடர்ச்சியாக, தொழிலாளர் வர்க்கம், விவசாய வர்க்கம் ஆகிய நாட்டின் பிரதான இரு உற்பத்தி வர்க்கங்களும் இணைந்து, இவ்வாறு அகில இந்திய பொது வேலைநிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்திருக்கிறது. இவ்வேலை நிறுத்தத்தின் நோக்கம், நாட்டை ஆட்சி செய்துவரும் மிகவும் காட்டுமிராண்டித்தனமான எதேச்சாதிகார சக்திகள் நாட்டின் பொருளாதாரத்தையே விரல்விட்டு எண்ணக்கூடிய அந்நிய மற்றும் உள்நாட்டு கார்ப்பரேட்டுகளுக்கு ஏலம் விடும் நாசகர, தேச விரோதக் கொள்கைக்கு எதிராகவும், ஆட்சியாளர்களே, நாட்டின் கஜானாவையும் மக்களின் சொத்துக்களையும் கொள்ளையடித்துக்கொண்டிருப்பதற்கு எதிராகவும் இவ்வேலைநிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்திருக்கிறது. இவர்களின் ஆட்சியில் உழைக்கும் மக்களின் பெரும்பகுதியினர் வறிய நிலைக்குத் தள்ளப்பட்டு, அல்லாடிக்கொண்டிருக்கின்றனர். இதற்கு எதிராகவும், இதற்கு முற்றுப்புள்ளி வைத்திடவும் இந்த வேலைநிறுத்தத்திற்கு அறைகூவல் விடுக்கப்பட்டிருக்கிறது.

விரிவடைந்து கொண்டிருக்கும் ஒன்றுபட்ட மேடை
இப்போது நடைபெறவிருக்கும் அகில இந்திய வேலைநிறுத்தமானது, நாட்டில், படுபிற்போக்கான நவீன தாராளமயக் கொள்கை 1991இல் அதிகாரபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டபின், இக்கொள்கைக்கு எதிராக நடைபெறும் 21ஆவது வேலை நிறுத்தமாகும்.

கடந்த முப்பதாண்டுகளாக நடைபெற்றுவந்த போராட்டங்களின்போது, ஒவ்வொரு வேலை நிறுத்தத்தின்போதும் ஸ்தாபனரீதியாக அணிதிரட்டப்பட்ட தொழிலாளர்களும், அவ்வாறு அணிதிரட்டப்படாத முறைசாராத் தொழிலாளர்களும் முந்தைய வேலைநிறுத்தத்தைவிட அடுத்த வேலைநிறுத்தத்தில் கூடுதலாகப் பங்கேற்று வருகின்றனர். மத்தியத் தொழிற்சங்கங்களின் கூட்டுமேடை விரிவடைந்து, வலுப்பட்டு, இறுதியாக அனைத்து பெரிய மத்தியத் தொழிற்சங்கங்களையும் 2009இல் ஒரே மேடையின்கீழ் கொண்டு வந்திருக்கிறது. ஒன்றிய அரசாங்கத்தில் பாஜக ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பின்பு, அதன் அங்கமாக இருந்துவந்த தொழிற்சங்கமான பிஎம்எஸ், மத்தியத் தொழிற்சங்கங்களின் கூட்டுமேடையிலிருந்து விலகிக் கொண்ட போதிலும், அது எவ்விதத் தாக்கத்தையும் ஏற்படுத்திடவில்லை. மாறாக, பாதுகாப்புத்துறை (Defence Sector) போன்று துறைவாரி சங்கங்களின் ஒன்றுபட்ட நடவடிக்கைகளின்போது,. அவற்றில் அங்கம் வகித்திடும் பிஎம்எஸ் சங்கங்களும் பங்கேற்பது தொடர்கிறது.

மத்தியத் தொழிற்சங்கங்களின் ஒன்றுபட்ட மேடை விரிவடைந்துகொண்டிருப்பது மற்றுமொரு முக்கிய அம்சத்தையும் வெளிப்படுத்தியிருக்கிறது. மத்தியத் தொழிற்சங்கங்களின் கூட்டு மேடை என்பது மத்தியத் தொழிற்சங்கங்களை மட்டும் உள்ளடக்கியில்லை. மாறாக அது மேலும் மேலும் அநேகமாக அகில இந்திய அளவில் சுயேச்சையாக செயல்பட்டு வரும் நிறுவனங்களான அகில இந்திய அரசு ஊழியர்களின் சம்மேளனங்கள், கூட்டமைப்புகள், சங்கங்களையும் தழுவிக் கொண்டுள்ளது. ஒன்றிய அரசு ஊழியர்கள், அனைத்து மாநில அரசு ஊழியர்கள், வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள், டெலிகாம், பாதுகாப்பு முதலான அனைத்துத்தரப்பு ஊழியர்களும் இச்சங்கங்களில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர்.

மத்தியத் தொழிற்சங்கங்களின் கூட்டு மேடை விரிவடைந்துகொண்டிருப்பது தொடர்கிற அதே சமயத்தில், ஒவ்வொரு துறையிலும் மற்றும் பணிபுரியும் மட்டத்தில் இயங்கும் சங்கங்களுக்கிடையேயும் ஒன்றுபட்ட மேடைகள் உருவாகி, நடவடிக்கைகளில் இறங்குவது என்பதும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இவற்றில் இதுநாள்வரை எந்த சங்கத்திலும் இணையாத தொழிலாளர்களும் பெரிய அளவில் பங்கேற்பது அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இவ்வாறு தொழிலாளர் வர்க்க இயக்கம் அடித்தட்டு உழைக்கும் மக்களையும் விரிவாகவும் ஆழமாகவும் ஒன்றுபடுத்தி, தலைமை தாங்கிக் கொண்டிருக்கிறது.

தொழிலாளர்களின் உணர்வுமட்டம் உயர்ந்துகொண்டிருக்கிறது, இயக்கம் விரிவடைந்து கொண்டிருக்கிறது
இன்றைய வரலாற்றுப் பின்னணியில், மற்றுமொரு பிரச்சனையையும் ஆழமானமுறையில் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகும். நாட்டில் நவீன தாராளமயக் கொள்கைகளை ஆட்சியாளர்கள் பின்பற்றத் தொடங்கியதிலிருந்தே அதற்கு எதிரான போராட்டங்களை, குறிப்பாக, செங்கொடியின்கீழ் இயங்கிடும் இயக்கங்கள் வேலை நிறுத்தம் உட்பட பல்வேறு கிளர்ச்சி நடவடிக்கைகளிலும் போராட்டங்களிலும் ஈடுபட்டு வந்தன. நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு எதிராக ஆவேசத்துடன் தொழிலாளர்கள் பங்கேற்பது என்பதும் அதிக அளவில் இருந்தது. செங்கொடி இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், படுபிற்போக்கான நவீன தாராளமயக் கொள்கைகளின் விளைவுகளையும் அதன் அரசியலையும் தொழிலாளர்கள் மத்தியில் விளக்கி வந்தபோதிலும், ஆரம்ப காலங்களில் தொழிலாளர்களின் எதிர்ப்பு என்பது இதனை அமல்படுத்திடும் ஆட்சியாளர்களுக்கு எதிராகத் திருப்புவதில் தொழிற்சங்க இயக்கம் அவ்வளவாக முன்னேறியதாகக் கூறுவதற்கில்லை. தொழிலாளர்கள் தற்போது அவதிக்குள்ளாகி இருப்பதற்கான மூலகாரணமே இந்நவீன தாராளமயக் கொள்கைதான் என்பதைத் தொழிலாளர்கள் மத்தியில் புரிய வைப்பதில் பெரிய அளவிற்கு முன்னேற்றம் ஏற்படவில்லை.

ஆனால், கடந்த முப்பதாண்டு காலமாகத் தொடர்ந்து வேலை நிறுத்தப் போராட்டங்களை நடத்தி வந்தபின்பு, துறைவாரியாகவும், தேசிய அளவிலும் எண்ணற்றக் கூட்டுப் போராட்டங்களை நடத்தி வந்தபின்பு, இவற்றின் விளைவுகள் வீண் போகவில்லை என்பது இப்போது நிரூபணமாகி இருக்கிறது. ஆட்சியாளர்களின் கொள்கைகளுக்கு எதிராகவும், இத்தகைய அரசியலைப் பின்பற்றும் கயவர்களுக்கு எதிராகவும் தொழிலாளர்களின் உணர்வு மட்டத்தை உயர்த்துவது என்பது ஒரு தொடர் நடவடிக்கையாகும்.

முதலாளித்துவம் நெருக்கடி தீவிரமடைந்துள்ள பின்னணியில், அதன் கடும் பாதிப்புகள் உழைக்கும் மக்களின் அனைத்துப் பிரிவினரின் வாழ்க்கையையும், அவர்களின் வாழ்வாதாரங்களையும் கடுமையாகப் பாதித்துள்ள பின்னணியில், தொழிலாளர் வர்க்கத்தின் உறுதியான தலையீடுகள் படிப்படியாக சமூகத்தின் இதர பிரிவினரையும் போராட்டப் பாதைக்கு இழுத்து வர உதவியிருக்கிறது, அவர்களும் தங்கள் குரலை உயர்த்தி, ஒன்றுபட்ட போராட்ட நடவடிக்கைகளுக்கு வந்து கொண்டிருக்கின்றனர்.

விவசாய நெருக்கடி கடுமையான நிலைக்குச் சென்ற பின்னணியில் விவசாயிகள் போராட்டங்களும் தொடங்கி, அவை படிப்படியாக அனைத்து விவசாய சங்கங்களையும் ஒரே குடையின்கீழ் கொண்டுவந்து, அதன்மூலம் அவை நவீன தாராளமயத்திற்கு எதிரான போராட்டமாகவும் படிப்படியாக உயர்ந்தது. இந்த செயல்முறை, மக்களின் அனைத்துத் துன்ப துயரங்களுக்கும் ஆட்சியாளர்கள் பின்பற்றும் நவீன தாராளமயக் கொள்கைகளும், அதனை நடைமுறைப்படுத்திக்கொண்டிருக்கும் அரசியல் கட்சிகளும்தான் என்பதை அடையாளம் காட்டுவதற்கான தலத்தைத் தொழிலாளர் வர்க்கத்திற்குத் தயாரித்துத் தந்துள்ளது.

ஏற்பட்டுள்ள முன்னேற்றம்
இந்த நூற்றாண்டின் இரண்டாவது பத்தாண்டு தொடங்குகையில், குறிப்பாக, இரண்டு தனித்துவமான அம்சங்கள், வெளியே தெரியத் தொடங்கி இருக்கின்றன. ஒரு பக்கத்தில், நவீன தாராளமய முதலாளித்துவத்தின் நெருக்கடி அதன் திவால்தன்மையை வெளிச்சத்திற்குக் கொண்டுவரத் தொடங்கியது. மறுபக்கத்தில், முதலாளித்துவ வர்க்கம் மக்களைப் பெரிய அளவில் துன்ப துயரங்களுக்குள் தள்ளுவதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்தி, அதன் கொடூரமான காட்டுமிராண்டித்தனமான குணத்தைத் தோலுரித்துக் காட்டியிருக்கிறது. ஒன்றியத்தில் பாஜக ஆட்சி வந்தபின்னர், குறிப்பாக அதன் இரண்டாவது ஆட்சிக் காலத்தில், மக்கள் மீதான கொடூரத் தாக்குதல்கள் உச்சத்திற்கே சென்றுள்ளது.

நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு எதிரான போராட்டம் இப்போது அதன் கொள்கைக்கும் அதனை உந்தித்தள்ளும் ஆட்சியாளர்களுக்கும் இடையேயுள்ள நச்சுப் பிணைப்பின் கோர முகத்தை மக்கள் நன்கு புரிந்துகொண்டிருக்கிற அளவுக்கு முன்பு தெரிந்து கொள்ளவில்லை.

நாடு தற்போது மக்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரங்களின் மீது எதேச்சாதிகாரத்தின் மிகவும் மோசமான தாக்குதல்கள் ஏவப்பட்டிருப்பதைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. கொரோனா வைரஸ் தொற்றுக் காலம் ஆள்வோரின் மனிதாபிமானமற்ற குரூர முகத்தை அதன் அனைத்துக் கோரப் பற்களுடனும் நகங்களுடனும் பார்த்துக்கொண்டிருக்கிறது. கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக் காலத்தில் மக்களுக்கு ஏற்பட்ட துன்ப துயரங்களையும், கையறு நிலையையும் பயன்படுத்திக்கொண்டும், தங்களுடைய பொருளாதாரக் கொள்கையின் மோசமான அம்சங்களை மறைக்க வேண்டுமென்று முயற்சிக்கக்கூட எண்ணாமல், மிகவும் வெட்கமற்ற முறையில், எதேச்சாதிகார முறையில் ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கின்றனர். படுபிற்போக்குத்தனமான வேளாண் சட்டங்கள் விவசாயிகளின் வாழ்வை ஒழித்துக்கட்டிவிட்டு, அந்த இடத்தில் கார்ப்பரேட் வர்க்கத்தின் லாப வெறியின் முழுக்கட்டுப்பாட்டுக்குள் விவசாயத்தைக் கொண்டுவருவதற்காகக் கொண்டுவரப்பட்டது. வேளாண் சட்டங்கள் நிறைவேறியிருந்தால் அவை உணவுப் பாதுகாப்புக்கு மேலும் ஆபத்தைக் கொண்டுவந்து, ஏற்கனவே பசி-பட்டினிக்கு ஆளாகியிருக்கும் மக்களையும் நாட்டின தற்சார்பையும் கடுமையாகப் பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கும்.

தொழிலாளர் சட்டங்கள் (Labour Codes) என்ற பெயரில், நாட்டிலிருந்த தொழிலாளர் நலச்சட்டங்களை அனைத்தையும் ரத்து செய்துவிட்டு, நான்கே நான்கு சட்டங்கள் மூலமாக தொழிலாளர் விரோதச் சட்டங்களாக, முதலாளிகள் நலச் சட்டங்களாகக் கொண்டு வந்திருக்கின்றனர். இவை தொழிலாளர் வர்க்கத்தை அடிமை நிலைக்குத் தள்ளக்கூடிய நிபந்தனைகளைத் திணித்திருக்கின்றன. முதலாளித்துவ வர்க்கத்தின் எப்போதுமே திருப்தியடையாத லாபப் பசிக்குத் தீனி போடுவதற்காக தொழிலாளர்களின் சம்பளம் மற்றும் சலுகைகளைக் குறைத்திட இப்புதிய சட்டங்களில் வழிவகைகள் செய்யப்பட்டுள்ளன. பொருளாதார நெருக்கடி தொடர்ந்து இருந்து வரும் நிலையில் வேலையின்மை மிகவும் மோசமாக அதிகரித்துள்ள நிலையில், மக்கள் வருமான இழப்புக்கு ஆளாகியுள்ள நிலையில், வேலை வாய்ப்பு உறவுகளும் மிகவும் மோசமான நிலைக்குச் சென்றுள்ளன. நாட்டின் பொருளாதார நிலைமை தொடர்ந்து இருள் சூழ்ந்ததாக இருக்கிறது. பணவீக்கம், மக்கள் உயிர்வாழ்வதற்குத் தேவையான உணவுப் பண்டங்கள், எரிபொருள், மின்சாரம், மருந்துகள் மற்றும் அனைத்து அத்தியாவசியப் பொருள்களின் விலைகளையும் உச்சத்திற்குக் கொண்டு சென்றிருக்கிறது. சாமானிய மக்களின் சராசரி வருமானம் பாதாளத்திற்குச் சென்றுள்ளது.

அத்தியாவசிப் பொருள்களின் விலைகள் தாமாக ஒன்றும் ஏற்பட்டுவிடவில்லை. கார்ப்பரேட்டுகளும் பெரும் வர்த்தகப் புள்ளிகளும் சூறையாடி, மக்களைக் கசக்கிப்பிழிவதற்கு உதவும் விதத்திலேயே இவ்வாறு செய்யப்பட்டிருக்கிறது.

வேலையில்லாத் திண்டாட்டம் மிக மோசமான நிலைக்குச் சென்றிருக்கிறது. வேலையிழப்புகளும், கல்வித்தகுதிக்கேற்ற வேலை கிடைக்காதிருப்பதும், கிடைத்தாலும் அற்ப ஊதியம் அளிக்கப்படுவதும் தொடர்கின்றன. இவை பெரிய அளவில் வறுமை, ஆதரவின்மை மற்றும் பசி-பட்டினிக் கொடுமைக்கு இட்டுச்சென்றுள்ளன. இத்தகைய திமிர்பிடித்த கொள்கைத் தொடர்ந்து கடைப்பிடிக்கப்படும் என்பதைத்தான் 2022-23 பட்ஜெட் வெளிப்படுத்தி இருக்கிறது.

பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயம் என்பது ஒட்டுமொத்த நவீன தாராளமயக் கொள்கையின் ஒருங்கிணைந்த பகுதியாகவே எப்போதும் இருந்து வந்திருக்கிறது. கடந்த முப்பது ஆண்டுகளாகவே இதற்கான மார்க்கங்களைக் கண்டறிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. கடைசியில், தேசிய பணமாக்கல் திட்டத்தின் (National Monetisation Pipeline) மூலம் அநேகமாக புதிய கூட்டுக்களவாணி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கார்ப்பரேட்டுகளிடம் நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களை ஒப்படைக்க வழியேற்படுத்திக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் இவ்வாறு பொதுத்துறை நிறுவனங்களைக் கபளீகரம் செய்வதற்கு, முதலீடு எதுவும் போடத் தேவையில்லை, அநேகமாக இனாமாகவே தரக்கூடிய விதத்தில் நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

மக்கள் மத்தியில் ஏற்றத்தாழ்வுகளும், துன்ப துயரங்களும் விரிவாகிக் கொண்டே இருக்கின்றன
ஆட்சியாளர்கள், இந்தியாவில் “வர்த்தகத்தை எளிமைப்படுத்துகிறோம்” (“ease of doing business”) என்ற பெயரில் கார்ப்பரேட்டுகள் நாட்டு மக்களையும் நாட்டின் சொத்துக்களையும் சூறையாடுவதற்கு வசதி செய்து கொடுத்தனர். இதன் காரணமாக உலக பசி-பட்டினி அட்டவணையில் இந்தியா படுபாதாளத்திற்குச் சென்றுவிட்டது. சாமானிய மக்களின் வாழ்க்கைத்தரமும் சீர்குலைந்துவிட்டது. நாகரிக சமுதாயம் எதிலும் அனுமதிக்கமுடியாத அளவிற்கு மக்களிடையே ஏற்றத்தாழ்வுகள் மிக அசிங்கமான அளவிற்கு அதிகரித்திருக்கிறது. “இந்தியாவில் உயர் 1 சதவீதத்தினர், நாட்டின் செல்வத்தில் மூன்றில் ஒரு பங்கை சொந்தமாக்கிக்கொண்டுள்ள அதே சமயத்தில், மக்கள் தொகையில் பாதியளவிற்கு உள்ள ஏழைகள் 6 சதவீதத்திற்கும் குறைவாகவே பெற்றிருக்கின்றனர். 2020 வாக்கில் நாட்டின் உயர் 10 சதவீதத்தினரின் வருமானப் பங்கு என்பது, 57 சதவீதத்தை எட்டியிருக்கிற அதே சமயத்தில், கீழ்நிலையில் உள்ள பாதி மக்களின் நிலை 13 சதவீத அளவிற்கு வீழ்ச்சியடைந்திருக்கிறது. உயர் 1 சதவீதத்தினர் மட்டும் நாட்டின் வருமானத்தில் 22 சதவீதத்தைப் பறித்துக்கொண்டுள்ளனர்,” என்று அதிகாரபூர்வமான ஆய்வுகள் பல தெரிவித்துள்ளன.

இந்த ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP), எதிர்மறை வளர்ச்சியைப் பதிவு செய்திருக்கிறது. இதன் பொருள், பொருளாதாரத்தின் செல்வத்தை உற்பத்தி செய்வதற்கான மதிப்பு முற்றிலுமாக வீழ்ச்சியடைந்திருக்கிறது என்பதாகும். கார்ப்பரேட் வர்க்கத்திலேயே விரல் விட்டு எண்ணக்கூடிய உயர் பில்லியனர்கள் (ஒரு பில்லியனர் என்றால் நூறு கோடி ரூபாய்க்கு மேல் வைத்திருப்பவர்), சராசரியாக 40 சதவீதத்திற்கும் அதிகமான செல்வத்தை அதிகரிக்க முடிந்திருக்கிறது. இதர கார்ப்பரேட்டுகளும் எட்டு முதல் பத்து மடங்கு அதிகரித்துக் கொண்டுள்ளனர். செல்வ வளத்தில் இவ்வாறு இவர்கள் விண்ணை எட்டும் அளவிற்கு அதிகரித்துக் கொண்டிருப்பதென்பது, உண்மையில் நாட்டின் செல்வத்தைப் பெருக்கியோ அதன் மதிப்பை அதிகப்படுத்தியோ, அதனால் தங்களை வளப்படுத்திக்கொள்ளவில்லை. மாறாக, அரசாங்கத்தின் பல்வேறு திட்டங்களின் மூலமாக நாட்டு மக்களைச் சூறையாடியும், நாட்டின் கஜானாவைச் சூறையாடியும் நாட்டின் சொத்துக்களைச் சூறையாடியுமே தங்களை இவ்வாறு வளப்படுத்திக் கொண்டுள்ளனர். கூட்டுக்களவாணி முதலாளித்துவம் என்பது, மோடியின் ஆட்சியின் கீழ் நாட்டையும், நாட்டு மக்களையும் எல்லையில்லா அளவிற்குச் சூறையாடிக் கொண்டிருக்கிறது.

போராட்டங்களும் எழுச்சியடைந்து கொண்டிருக்கின்றன, விரிவடைந்துகொண்டிருக்கின்றன.
ஒரு பக்கம் ஆட்சியாளர்கள் இவ்வாறு கூட்டுக்களவாணி கார்ப்பரேட்டுகளுக்கு நாட்டையும் நாட்டு மக்களையும் சூறையாட வழியேற்படுத்திக்கொண்டிருக்கக்கூடிய அதே சமயத்தில், இதற்கு எதிராக அனைத்துப் பிரிவு மக்களின் போராட்டங்களும் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு எழுச்சியுடன் விரிவடைந்து கொண்டிருப்பதையும் பார்க்க முடிகிறது. இந்தக் காலகட்டத்தில் தொழிலாளர் வர்க்கத்தால் மிகப் பெரிய அளவிற்கு 20ஆவது அகில இந்திய வேலை நிறுத்தம் நாடு தழுவிய அளவில் நடந்துள்ளது. 1991க்குப்பின்னர் நடைபெற்ற வேலைநிறுத்தங்களிலேயே 2020 நவம்பர் 20 அன்று நடைபெற்ற அகில இந்திய வேலை நிறுத்தம் மிகவும் பிரம்மாண்டமானதாகும். 2020 மார்ச்சின் இறுதியிலிருந்து கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்று காரணமாகவும், அதனையொட்டி சமூக முடக்கம் பிறப்பிக்கப்பட்ட நிலையிலும் நாட்டின் அனைத்து இயக்கங்களும் முழுமையாக ஸ்தம்பித்து நின்றதைப் பார்த்தோம். பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் தங்கள் மேல் ஏவப்பட்ட அனைத்துவிதமான தடைகளையும் தகர்த்தெறிந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். ஸ்தாபனரீதியாகத் திரட்டப்பட்ட ஊழியர்கள் மட்டுமல்லாது முறைசாராத் தொழிலாளர்களும் பெருமளவில் இவ்வேலைநிறுத்தத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். காலம் தங்களுக்கு அளித்துள்ள சவாலை உணர்வுபூர்வமாக எதிர்கொண்டு, வேலைநிறுத்தத்தை வெற்றியாக்கினர்.

வேலை நிறுத்தம் தொடங்கிய நாளிலிருந்தே, வரலாறு படைத்திட்ட ஓராண்டு காலம் நடந்த விவசாயிகள் போராட்டமும் படுபிற்போக்குத்தனமான வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாட்டின் தலைநகர் எல்லையில் தொடங்கியது. இந்தப் போராட்டமும் தொடங்கிய நாளன்று இருந்த அதே உணர்வுடன் தொடர்ந்தது. அதுமட்டுமல்லாமல் நாடு முழுதும் விரிவடைந்தது. விவசாயிகளின் போராட்டத்திற்கு தொழிலாளர் வர்க்கமும், அனைத்துத் தொழிற்சங்கங்களும் நேரடியாகக் களத்திற்கே வந்து ஒருமைப்பாட்டைத் தெரிவித்தனர். தலைநகரின் எல்லையில் மட்டுமல்லாமல் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலும் போராட்டங்கள் நடைபெற்றதைப் பார்த்தோம்.

விவசாயிகள் போராட்டத்திற்கு நாடு முழுதும் மத்தியத் தொழிற்சங்கங்கள் அளித்திட்ட ஒருமைப்பாட்டு நடவடிக்கைகள், அதனை சம்யுக்த கிசான் மோர்ச்சாவுடன் ஒரு கெட்டியான பாலத்தை ஏற்படுத்தவும் வளர்த்தெடுத்தது. அனைத்து ஒன்றுபட்ட மேடைகளும் பரஸ்பரம் ஒருவர் கோரிக்கையை மற்றவர்கள் மனமுவந்து ஆதரிக்கும் நிலைக்கு உயர்த்தியது. இறுதியாக இவை, கார்ப்பரேட்டுகள் மற்றும் காட்டுமிராண்டித்தனமான ஆட்சியாளர்களின் கள்ளப்பிணைப்பு மக்களைச் சூறையாடுவதற்கு எதிராகத் தீர்மானகரமான முறையில் எதிர்த்திட வேண்டும் என்ற கவனத்திற்கு இட்டுச் சென்றது. தொழிலாளர் வர்க்கம் மற்றும் விவசாயிகளின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு இவ்வாறு செயல்பாடுகளினூடே வளர்ந்திருப்பது ஒரு புதிய பரிமாணத்திற்குச் சென்றிருக்கிறது. அதாவது, படுபிற்போக்குத்தனமான கொள்கைகளைக் கடைப்பிடித்துக்கொண்டிருக்கும் ஆட்சியால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் பாதிப்புகளுக்கு எதிரான போராட்டங்களும், ஆட்சியில் உள்ளவர்களுக்கு எதிரான போராட்டமாகவும் வியத்தகு விதத்தில் படிப்படியாக வளர்ந்திருக்கிறது.

ஒருங்கிணைந்த போராட்டங்கன் உச்சம்
இவ்வாறு, தொழிலாளர் வர்க்கம் மற்றும் விவசாயிகளின் ஆதரவுடன் அவரவர் சம்பந்தப்பட்ட கோரிக்கைகளுக்காக ஒர பொதுவான புள்ளியில் ஒருங்கிணைந்த போராட்டமாக நடைபெறவிருக்கும் அகில இந்திய வேலை நிறுத்தம் உச்சத்தை எட்டியுள்ளது. பெரும் கார்ப்பரேட்டுகள் தலைமையிலான ஆட்சி தங்கள் மீது ஏவிய தாக்குதல்களை, தங்கள் பொது எதிரியை, தொழிலாளர் வர்க்கமும் விவசாயிகளும் அடையாளம் கண்டுகொண்டுவிட்டனர். அவர்களின் ஒன்றுபட்ட நடவடிக்கைதான், தொழிலாளர்களுக்கு எதிராக, மக்களுக்கு எதிராக, தேச விரோத நாசகரக் கொள்கைகளுடன் ஆட்சியை நடத்திக் கொண்டிருப்பவர்களுக்கு எதிரான போராட்டமாக, 2022 மார்ச் 28-29 தேதிகளில் நடைபெறவுள்ள நாடு தழுவிய அகில இந்திய வேலை நிறுத்தம் அமைந்துள்ளது.

இதன் போர்க்குரல், நாட்டின் சொத்துக்களையும், மக்களின் வாழ்வாதாரங்களையும், உரிமைகளையும் கொள்ளையடித்திடும் கார்ப்பரேட்டுகளுக்கு எதிரானதாக இருக்கிறது. தொழிலாளர் வர்க்கத்தின் வேலை நிறுத்த நடவடிக்கை, “மக்களைக் காப்போம், நாட்டைக் காப்போம்” என்கிற அரசியல் கவனத்துடன் அமைந்துள்ளது. இவ்வேலை நிறுத்தப் போராட்டமானது மக்களின் உரிமைகள் மற்றும் வாழ்வாதாரங்களுக்கானது மட்டுமல்ல, நாட்டைக் கொஞ்சம் கொஞ்சமாக அழித்துக் கொண்டிருக்கும் ஆட்சியாளர்களுக்கு எதிராக, நாட்டைக் காத்திடுவதற்காகவும் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

நடைபெறவிருக்கும் 2022 மார்ச் 28-29 அகில இந்திய வேலை நிறுத்தத்தை, “மக்களைக் காப்போம், நாட்டைக் காப்போம்” என்னும் முழக்கத்துடன், எதேச்சாதிகார மற்றும் நாசகர ஆட்சிக்கு எதிராக, குணாம்சரீதியாக புதிய உச்சத்திற்கு எடுத்துச் செல்வோம்.

(தமிழில்: ச.வீரமணி)

Interview with Sitaram Yechury on the victory of democracy over the abolition of agricultural laws in tamil Translated by S Veeramani. வேளாண் சட்டங்கள் ரத்து ஜனநாயகத்திற்குக் கிடைத்த வெற்றி சீத்தாராம் யெச்சூரியுடன் நேர்காணல் - தமிழில்: ச.வீரமணி

வேளாண் சட்டங்கள் ரத்து ஜனநாயகத்திற்குக் கிடைத்த வெற்றி சீத்தாராம் யெச்சூரியுடன் நேர்காணல் – தமிழில்: ச.வீரமணி




[இடதுசாரிக் கட்சிகள், அதிலும் குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, வேளாண் சட்டங்களுக்கு எதிராக உறுதியுடனும் உரக்கவும் விமர்சனம் செய்து வந்தன. இடதுசாரிக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் வேளாண் சட்டங்கள் மீதான விவாதம் நடைபெற்ற சமயத்தில் திருத்தங்கள் கொண்டு வந்தனர். அதேபோன்று, இவ்வாறான இடதுசாரிகளின் நிர்ப்பந்தத்தின் விளைவாகத்தான், 2013 நிலம் கையகப்படுத்தல் சட்டத்தில் மக்கள் ஆதரவு சட்டப்பிரிவுகள் சேர்க்கப்பட்டன. இடதுசாரிக் கட்சிகள், நவீன தாராளமய சீர்திருத்தங்களின் தாக்கம் குறித்து, குறிப்பாக விவசாயத்தின்மீது அது ஏற்படுத்திக்கொண்டிருக்கும் விளைவுகள் குறித்து, மக்களின் கவனத்திற்குக் கொண்டுவந்திருக்கின்றனர்.

ஃப்ரண்ட்லைன் இதழுக்கு அளித்துள்ள நேர்காணலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர், சீத்தாராம் யெச்சூரி, வேளாண் சட்டங்கள் தொடர்பாக அரசாங்கம் தலைகீழ் மாற்றத்திற்கான காரணம் என்ன என்பது குறித்தும், அது ஓர் அரசியல் சந்தர்ப்பவாதமே என்றும் விவரித்திருக்கிறார். அவரது நேர்காணலின் சாராம்சம் வருமாறு:]

கேள்வி: வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டிருப்பது சம்பந்தமாக பிரதமரின் அறிவிப்பை எவ்வாறு பார்க்கிறீர்கள்?

சீத்தாராம் யெச்சூரி: தொடர்ந்து ஓராண்டு காலமாக வரலாறு படைத்திடும் விதத்தில் அமைதியாகப் போராடிவந்த நம் விவசாயிகளுக்கு இது ஒரு மகத்தான வெற்றியாகும். மிகவும் வீறாப்புடன் இருந்து வந்த மோடி அரசாங்கம் தன் வீறாப்புத்தனத்தை விட்டுக்கொடுத்து இறங்கிவரக் கட்டாயப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தப் போராட்டம் ஒன்றிய அரசாங்கத்தாலும், மாநிலங்களில் உள்ள பாஜக-வின் அரசாங்கங்களாலும், விவசாயிகள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட அனைத்துவிதமான அடக்குமுறைகளையும், ஒடுக்குமுறைகளையும், தடைகளையும் தகர்த்தெறிந்து வெற்றி பெற்றிருக்கிறது. தில்லியின் கடுங்குளிரிலும் போராட்டம் நடத்தி வந்த விவசாயிகளுக்கு எதிராக ஆட்சியாளர்கள் “வாட்டர் கேனன்கள்” மூலமாகத் தண்ணீரைப் பீய்ச்சி அடித்தனர். விவசாயிகள் போராடுவதற்காக தில்லியை நோக்கி வருவதைத் தடுப்பதற்காக, தேசிய நெடுஞ்சாலைகளில் பள்ளங்களை ஏற்படுத்தினார்கள். பல இடங்களில் போராடும் விவசாயிகள் குண்டாந்தடிகளால் அடித்து நொறுக்கப்பட்டனர். அவர்களைத் தில்லிக்குள் வரவிடாதவாறு கைது செய்தனர். போராடும் விவசாயிகளை, காலிஸ்தானிகள் என்றும், தேச விரோத பயங்கரவாதிகள் என்றும், பிரிவினை வாதிகள் கும்பல் என்று பொருள்படும் துக்டே துக்டே கும்பல் என்றும் முத்திரை குத்தினர். மோடி மிகவும் கீழ்த்தரமான முறையில் “போராட்டத்தால் ஜீவிப்பவர்கள்” (“Andolan Jeevis”) என்று கிண்டலடித்தார். இவ்வாறு இவர்கள் எடுத்த நடவடிக்கைள் அனைத்தையும் முறியடித்து, தில்லியின் எல்லையில் போராடிய விவசாயிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே இருந்தது. அனைத்துத்தரப்பு மக்களின் ஆதரவும் நாளுக்குநாள் அதிகரித்தது. இவ்வாறான மக்களின் ஆதரவு நாடு முழுதும் எதிரொலித்தது. மாநிலங்களிலும், மாவட்டங்களிலும் நடைபெற்ற கிளர்ச்சிப் போராட்டங்களிலும் இது எதிரொலித்தது.

பாஜக-வினர் வரவிருக்கும் தேர்தலைச் சந்திக்க வேண்டிய கட்டாயமும் இவ்வாறு வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற்றதற்கான ஒரு காரணிதான். உண்மையில், அரசாங்கத்தின் இந்நடவடிக்கையை நேர்மையற்ற ஒன்றாகவும், முழுமையான தேர்தல் சந்தர்ப்பவாதம் என்றும்தான் பார்க்க வேண்டும். ஆயினும், இவ்வாறு பாஜக மேற்கொண்ட முடிவானது அக்கட்சிக்கு ஆதாயம் அளிக்குமா என்பது சந்தேகமே. விவசாயிகளின் அமைதியான போராட்டம் நாளுக்கு நாள் வீர்யம் அடைந்துகொண்டிருந்ததும், விவசாயிகளின் உறுதியும்தான் அரசாங்கத்தைப் பணிய வைத்து, வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற ஒப்புக்கொள்ள நிர்ப்பந்தித்திருக்கிறது. இந்த வெற்றி, ஜனநாயகத்திற்கான வெற்றி, ஜனநாயக உரிமைகளுக்கான வெற்றி, குடிமை உரிமைகளுக்கான வெற்றியாகும். அமைதியாகப் போராடுபவர்கள் மீது ஆட்சியாளர்களின் எதேச்சாதிகாரத் தாக்குதல்களும், பாசிஸ்ட் தாக்குதல்களும் அதிவேகமாக அதிகரித்துக் கொண்டிருக்கக்கூடிய நிலையிலும், அரசமைப்புச்சட்டத்தில் உத்தரவாதமளிக்கப்பட்ட ஜனநாயக உரிமைகள் மீது தாக்குதல்கள் தொடுக்கப்பட்டுள்ள நிலையிலும் இது நடந்திருக்கிறது என்பது மிகவும் குறிப்பிடத்தக்கதாகும்.

கேள்வி: வேளாண் சட்டங்கள், கார்ப்பரேட்டுகளின் நலன்களுக்காகவும், கார்ப்பரேட்டுகளின் ஏகபோகங்களுக்காகவும் கொண்டுவரப்பட்டன என்று நம்பப்படுகிறது. நாட்டின் சொத்துக்கள் தனியார் கார்ப்பரேட்டுகளிடமும், தனியார் ஏகபோகங்களிடமும் தாரைவார்ப்பதற்கு எதிராக இடதுசாரிக்கட்சிகள் எண்ணற்ற போராட்டங்களை நடத்தி இருக்கிறார்கள். அவை எதற்கும் அசைந்துகொடுக்காத அரசாங்கம், இப்போது விவசாயிகளின் நீண்ட நெடிய போராட்டத்தினை அடுத்து, வளைந்து கொடுத்திருக்கிறது. விவசாயிகளின் நீண்ட நெடிய போராட்டம், ஜனநாயக இயக்கங்களுக்கு நம்பிக்கையை அளித்திருப்பதாக நீங்கள் பார்க்கிறீர்களா?

சீத்தாராம் யெச்சூரி: நிச்சயமாக. மோடி அரசாங்கம் பின்வாங்கியிருப்பது, ஜனநாயக இயக்கங்களை மேலும் வலுப்படுத்திட வேண்டும் என்பதற்கான சமிக்ஞையேயாகும். இது, இதர ஜனநாயகப் போராட்டங்கள் மீதும் தாக்கத்தை ஏற்படுத்திடும்.

இந்த வேளாண் சட்டங்கள் கார்ப்பரேட்டுகள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கார்ப்பரேட்டுகளின் நலன்களுக்காகவும், உலக அளவில் வேளாண் வணிகத்தில் ஈடுபட்டிருக்கும் நபர்களுக்காகவும் கொண்டுவரப்பட்டதுதான். இந்தியாவின் பொருளாதார இறையாண்மையை சரண் செய்யும் விதத்தில் மோடி அரக்கத்தனமாகப் பின்பற்றும் நவீன தாராளமய சீர்திருத்தக் கொள்கைகளின் ஒரு பகுதியேயாகும். இந்தச் சட்டங்களின் நோக்கம், வேளாண் விளைபொருள்களை சந்தைப்படுத்துதலும், கார்ப்பரேட்மயப்படுத்துதலுமேயாகும். அத்தியாவசியப் பொருள்கள் சட்டத்தை ஒழித்துக்கட்டியதற்குக் காரணம், வேளாண் விளைபொருள்களை பதுக்கல் பேர்வழிகள் பதுக்கிவைத்து, செயற்கைமுறையில் பற்றாக்குறை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவேயாகும். பணவீக்கத்தை ஏற்படுத்தி, கொள்ளை லாபம் ஈட்டுவதற்கு வகை செய்வதென்பது, நிச்சயமாக மக்களைப் பட்டினிக் கொடுமைக்குத் தள்ளிவிடும் சூழ்நிலைக்குக் கொண்டுசெல்லும். இவற்றின் விளைவாக இந்தியாவின் உணவுப் பாதுகாப்பு மற்றும் மக்களைக் பட்டினிச் சாவுகளிலிருந்து பாதுகாப்பது போன்ற நிலைமைகள் ஆபத்திற்கு உள்ளாகும். ஏற்கனவே, இந்தியா, உலக பசி-பட்டினி அட்டவணையில் தொடர்ந்து சரிந்துகொண்டிருக்கிறது. நிச்சயமாக இந்நிலைமை மேலும் மோசமாகும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இடதுசாரிக் கட்சிகளும் பொதுத்துறை நிறுவனங்களையும், கனிம வளங்களையும், நாட்டின் செல்வாதாரங்களையும் தனியாரிடம் தாரை வார்ப்பதற்கு எதிராக எண்ணற்றப் போராட்டங்களுக்குத் தலைமை தாங்குவது தொடர்கின்றன. துறைவாரியாக பெரிய அளவிலான வேலை நிறுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்திட மத்தியத் தொழிற்சங்கங்களின் மகாசம்மேளனம் அறைகூவல்கள் விடுத்திருக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இதர இடதுசாரிக் கட்சிகளும் இத்தகைய தொழிற்சங்களின் நடவடிக்கைகளுக்கு எப்போதும் ஆதரவும் ஒருமைப்பாடும் அளித்து வருகின்றன. இத்தகைய போராட்டங்கள், இனிவருங் காலங்களில் மேலும் மேலும் வலுப்பெறும்.

விவசாயிகள் போராட்டத்தின் மிக முக்கியமான அம்சம் என்னவெனில், இப்போராட்டங்களில் தொழிலாளர் வர்க்கமும், விவசாயத் தொழிலாளர்களும் முன்னெப்போதும் இல்லாத அளவிற்குத் தங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்தி யமையாகும். போராட்டங்களின்போது விவசாயிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் காட்டிய ஒற்றுமை, மதச்சார்பின்மை ஜனநாயகம் மற்றும் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டங்களை வலுப்படுத்துவதற்கு ஒரு நெம்புகோளாகவும் திகழும்.

கேள்வி: வேளாண் சட்டங்களை ரத்து செய்ததற்கான காரணம், பஞ்சாப் மற்றும் ஹர்யானா மாநிலங்களில் உள்ள பணக்கார விவசாயிகளின் கோபத்தைத் தணிப்பதற்காகத்தான் என்று நாட்டில் ஒரு பிரிவினர் நம்புகிறார்களே. இது தொடர்பாக உங்கள் புரிதல் என்ன?

சீத்தாராம் யெச்சூரி: இது ஒரு கற்பனையான நம்பிக்கை. உண்மையில் வேண்டுமென்றே கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள துஷ்பிரச்சாரம். சந்தைப்படுத்தலும், கார்ப்பரேட்மயப்படுத்தலும் ஒட்டுமொத்த விவசாயிகளையும், விவசாயத்தையும் கடுமையாகப் பாதித்திருக்கின்றன. நாட்டிலுள்ள விவசாயிகளில் 85 சதவீதத்தினர், இரண்டு ஏக்கர் நிலத்திற்கும் கீழே உள்ள விவசாயிகள்தான். இவர்கள் சிறுகுறு விவசாயிகளாவர். மோடி அரசாங்கம் கொண்டு வந்த வேளாண் சட்டங்கள் இவர்களின் நிலங்களைக் கார்ப்பரேட்டுகள் விழுங்குவதற்கு வகை செய்தது. விளைவாக சிறுகுறு விவசாயிகள் தங்கள் நிலங்களை இழந்து, தாங்கள் இதுகாறும் அனுபவித்துவந்த தங்கள் சொந்த நிலங்களிலேயே விவசாயத் தொழிலாளர்களாக வேலை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தார்கள்.

இன்றைய தினம் குறைந்தபட்ச ஆதார விலை ஒருசில மாநிலங்களில் மட்டுமே வலுவாக அமல்படுத்தப்படுகிறது. அதுவும் ஒருசில விளைபொருள்களுக்கு மட்டுமேயாகும். குறைந்தபட்ச ஆதார விலையில் அனைத்து விளைபொருள்களையும் விற்பதற்கு சட்ட உத்தரவாதம் வேண்டும் என்கிற கோரிக்கை அனைத்து விவசாயிகளுக்கும் பயனளிக்கக்கூடியதாகும். அதனால்தான் இந்தக்கோரிக்கையை பணக்கார விவசாயிகள், சிறுகுறு விவசாயிகள், தலித்துகள், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், உயர்சாதி விவசாயிகள், இந்து-முஸ்லீம் விவசாயிகள் என அனைவரும் ஒன்றுபட்டு ஆதரித்து, வரலாறு படைத்திட்ட போராட்டத்தை நடத்தினார்கள். கார்ப்பரேட்டுகள் இந்திய விவசாயத்தையும் அதன் உற்பத்தியையும் கையகப்படுத்திட மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு எதிராக இவ்வாறு விவசாயிகள் வர்க்கத்தின் அனைத்துப் பிரிவினரும் ஒன்றுபட்டு நின்று, போராடி, வெற்றிபெற்றுள்ளார்கள்.

கேள்வி: வேளாண் சட்டங்களை ரத்து செய்தது, பொருளாதார வளர்ச்சிக்குப் பின்னடைவு என்று ஒரு வாதம் வைக்கப்படுகிறதே, இந்த வாதத்தில் ஏதேனும் தகுநிலை (merit) இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா?

சீத்தாராம் யெச்சூரி: இந்த வாதத்தில் நிச்சயமாக எவ்விதமான தகுநிலை(merit)யும் கிடையாது. இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சி அடைந்திருப்பதற்கு முக்கிய காரணம், பெரும்பான்மையான மக்களின் கைகளில் வாங்கும் சக்தி வீழ்ச்சி அடைந்திருப்பதேயாகும். இது பொருளாதாரத்தின் உள்நாட்டுத் தேவையை மந்தமாக்குகிறது. இதன் காரணமாக பல தொழிற்சாலைகள் தங்கள் உற்பத்தியைக் குறைத்துள்ளன, பல மூடப்பட்டும் விட்டன. ஏனெனில் இவை உற்பத்தி செய்த பொருள்களை வாங்குபவர்கள் இல்லை.

கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றுக் காலத்தின்போது, இந்தப் பிரச்சனை, மேலும் மோசமாகியது. இந்த நிலையில் ஒன்றிய அரசாங்கம், பணக்காரர்களுக்கும் கார்ப்பரேட்டுகளுக்கும் வரிச் சலுகைகளை வாரி வழங்கிய அதே சமயத்தில், சாமானிய மக்களை விலைவாசி உயர்வின் மூலமாகவும், குறிப்பாக பெட்ரோலியப் பொருட்களை நாள்தோறும் உயர்த்துவதன் மூலமாகவும், ஒட்டுமொத்த பணவீக்கத்தை ஏற்படுத்தியது. இது, மக்களின் வாங்கும் சக்தியை மேலும் மோசமாக்கியது. தாங்கள் ஜீவித்திருப்பதற்குத் தேவையான பொருள்களைத் தவிர வேறெதையும் வாங்கிட அவர்களால் இயலவில்லை.

ஆட்சியாளர்கள் கொண்டுவந்த வேளாண் சட்டங்கள் பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்புகளை மேலும் மோசமாக்கின. ஏனெனில், நாம் முன்பே விவாதித்ததுபோன்று, விவசாயிகளின் வருமானம் மேலும் மோசமாகி, அவர்கள் நுகர்பொருள்கள் வாங்குவதற்கான சக்தியற்று இருந்திடுவார்கள். நாட்டில் பெரிய அளவிற்கு சந்தை என்பது கிராமப்புற இந்தியாவில்தான் இருக்கிறது. அங்கே வாழும் மக்கள், பணக்கார விவசாயியிலிருந்து சிறுகுறு விவசாயிகள் வரை, பட்டினிக் கொடுஞ்சிறைக்குள் பரிதவித்துக்கொண்டிருக்கும் நிலையில், நம் பொருளாதாரத்தில் மக்களின் தேவை என்பது மேலும் சுருங்கிவிடும். இது நடப்பு பொருளாதார மந்தத்தை மேலும் ஆழப்படுத்திடும்.

ஏதேனும் நடக்கும் என்றால் அது, வேளாண் சட்டங்களை ரத்து செய்ததன் மூலம், மக்களின் வாங்கும் சக்தி மேலும் வீழ்ச்சியடைவது தடுத்து நிறுத்தப்பட்டு, அதன்மூலம் உள்நாட்டுத் தேவை வீழ்ச்சியடைவது ஒரு குறிப்பிட்ட அளவிற்குக் கட்டுப்படுத்தப்படும் என்பதேயாகும்.

கேள்வி: விவசாயிகள் இயக்கத்தில் எண்ணற்ற விவசாய சங்கங்கள் ஒருங்கிணைந்து வந்துகொண்டிருப்பதைப் பார்த்தோம். இத்தகைய ஒருமைப்பாடு நீடிக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? இது மேலும் ஒன்றுபடுவதற்கும் நீடிப்பதற்கும் இடதுசாரிகளின் பங்கு எவ்விதத்தில் இருக்க வேண்டும் என்று நீங்கள் பார்க்கிறீர்கள்?

சீத்தாராம் யெச்சூரி: வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன் மேலும் பல பொதுவான மற்றும் நியாயமான கோரிக்கைகளின் அடிப்படையில் போராட்டங்களில் பல்வேறு விவசாய சங்கங்களின் ஒற்றுமையும், ஒருமைப்பாடும் ஏற்பட்டன. நவம்பர் 22 அன்று லக்னோவில் நடைபெற்ற விவசாயிகள் மகா பஞ்சாயத்தைப் பார்க்கும்போது, விவசாயிகளின் மத்தியில் இத்தகைய ஒற்றுமை மேலும் மேலும் வலுப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது என்றே தெரிகிறது.

நான் முன்பே கூறியதுபோல, விவசாய சங்கங்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாயத் தொழிலாளர் சங்கங்களுக்கிடையே போராட்டங்களில் காட்டிய ஒற்றுமையின் பலம், எதிர்வருங்காலங்களில் தொழிலாளர் சட்டங்கள் (Labour Codes) என்ற பெயரில் தொழிலாளர் நலச்சட்டங்கள் தொழிலாளர் விரோதச் சட்டங்களாக மாற்றப்பட்டிருப்பதை எதிர்த்தும், நாட்டின் சொத்துக்கள் தனியார்மயம் மூலமாகச் சூறையாடப்படுவதை எதிர்த்தும் நடைபெறும் போராட்டங்களுடன் ஒரு பொதுவான போராட்டத்திற்கு இட்டுச்செல்லும். நடைபெற்ற போராட்டத்தில் 700க்கும் மேற்பட்ட விவசாயிகள் தியாகிகளாகியிருக்கிறார்கள் என்பதே போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளின் வலுவினை உயர்த்திப்பிடிக்கிறது.

விவசாயிகள் இறந்ததற்கு வருத்தம்கூட தெரிவிக்க மோடி முன்வராத நிலையில், அவர்களுக்காக எவ்விதமான இழப்பீடும் வழங்குவார் என நாம் எதிர்பார்க்க முடியாது. இந்த அரசாங்கத்தின் மக்கள் விரோதக் கொள்கைகளின் குணாம்சம் வரவிருக்கும் காலங்களில் போராடும் மக்கள் மத்தியில் மேலும் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் வலுப்படுத்திடும்.

நேர்காணல் கண்டவர்: டி.கே.ராஜலக்ஷ்மி,
தமிழில்: ச.வீரமணி
நன்றி: ஃப்ரண்ட்லைன்