பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் – 1 | எழுத்தாளர் ம.மணிமாறன்
பெரு: ஆட்சிக் கவிழ்ப்பும் படிப்பினைகளும் கட்டுரை -அ.பாக்கியம்
தென் அமெரிக்கா நாடான பெருநாட்டில் 2021-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இடதுசாரி சிந்தனையாளரும், விவசாயிகளுடைய தலைவரும், ஆசிரியருமான பெட்ரோ காஸ்டிலோ (Pedro Castillo) ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப் பட்டு, ஜூன் மாதம் பதவியேற்றுக்கொண்டார்

தென் அமெரிக்க நாட்டில் இடதுசாரி மற்றும் முற்போக்காளர்களின் எழுச்சியின் தொடர்ச்சியாக பெருநாட்டிலும் இந்த மாற்றம் ஏற்பட்டது. மக்கள் தலைவராக, போராட்ட களத்திலி ருந்து காஸ்டிலோ வெற்றி பெற்றார். ஆனால் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்ற போதிலும் தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிட அனைத்து முயற்சி களையும் செய்தார்.
பாராளுமன்றத்தில் பெரும்பான்மையினுடைய எதிர்ப் பினை எதிர்கொண்டுதான் தனது திட்டங்களை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளை செய்தார். அவரது முயற்சிகளுக்கு பெரும்பான்மை பலத்துடன் இருந்த வலதுசாரி பாராளுமன்றம் முட்டுக்கட்டை போட்டுக் கொண்டே இருந்தது.
காஸ்டிலோ எடுத்த முயற்சிகள்
- கல்வியறிவின்மையை போக்குவதற்கு உள்நாட்டு உற்பத்தியில் 10% வரை கல்விக்கான முதலீட்டை அதிகப்படுத்தினார். இதற்கான சமூகத் திட்டங்களை அமல்படுத்தினார்
- 2.2 மில்லியன் சிறு விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தார்.
- விவசாயிகளுக்கு தொழில்நுட்ப உதவிக்கான திட்டங் களை உருவாக்கி அமல்படுத்தினார்
- 300 க்கும் மேற்பட்ட விவசாய கூட்டுறவு அமைப்புகளை உருவாக்கி கிராமப்புற கூட்டுறவு சட்டத்தின் கீழ் கொண்டு வந்தார்.
- பெரும் தொற்று நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 350 இடங்களில் 13 மில்லியன் மக்கள் பயனடையும் முறையில் 84 கோடி டாலர் ஒதுக்கி நிதி உதவி செய்தார்.
- சமையல் எரிவாயு விலையை 2.8 டாலராக குறைத்து வழங்கினார்.
- அரசியல் அமைப்பை திருத்தி அமைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டார்.
- ஜனாதிபதியை அதிகாரத்திலிருந்து அகற்றுவதற்கான அடிப்படை விதியாக அரசியல் சட்டத்தில் சேர்க்கப்பட்டிருந்த “தார்மீக இயலாமை“ என்ற வார்த்தையை நீக்குதல்,
- மக்களால் தேர்வுசெய்யப்பட்ட ஜனாதிபதியை வலது சாரிகள் பெருபான்மை என்ற பெயரால் பதவி நீக்கம் செய்யும் முறையை மாற்றிட திருத்தங்களை கொண்டுவந்தார்.
இவற்றையெல்லாம் சொத்துடைமை வர்கத்தால் சகித்துக் கொள்ள முடியுமா?
தார்மீகமற்ற தாக்குதல்
காஸ்டிலோவிற்கு பெரும்பான்மை இல்லாத சூழலை பயன்படுத்தி அடிக்கடி கவிழ்க்க முயன்றனர். அமெரிக்கா தலைமையிலான சுரங்க முதலாளிகளும், ஆலை முதலாளிகளும், ராணுவமும், ஆயுதப்படைகளும், கத்தோலிக்க தேவாலயங்களும், இடதுசாரி ஜனாதிபதி காடிலோவை நீக்குவதற்கான இம்பீச்மென்ட் அதாவது “தார்மீக இயலாமை” முறையை பாராளுமன்றத்தில் கொண்டு வந்தனர்.
பல நேரங்களில் இந்த பெரும்பான்மையை எதிர்கொள்வதற்காக தனது மந்திரிகளை மாற்ற வேண்டிய தேவை ஏற்பட்டது. தற்போது மூன்றாவது முறையாக நிரந்தர தார்மீக இயலாமை என்ற தீர்மானத்தை கொண்டு வந்து தோற்கடித்து கைது செய்து சிறையில் அடைத்துள்ளார்கள்.
அதிகார துஷ்பிரயோகம் செய்வது, சட்டம் இயற்றுபவர்களை பதவிநீக்கம் செய்வது, அரசியல் சட்டத்திற்கு விரோதமாக பாராளுமன்றத்தை கலைக்க உத்தரவிட்டது, ஊழல், கருத்து திருட்டு, கிளர்ச்சியை தூண்டி விட்டது போன்ற குற்றச்சாட்டுகளை சுமத்தி கைது (7.12.22) செய்து சிறையில் அடைத்துள்ளனர். காஸ்டிலோவை ஆதரித்த முன்னால் பிரதமர் அணிபால் டோரஸ் (Anibal Torres) இந்த குற்றச்சாட்டுக்காகவே இவரை 20 ஆண்டுகள் சிறையில் அடைக்கலாம் என்று அவர்களின் சட்டம் கூறுகிறது.
“நிரந்தர தார்மீக இயலாமை” என்பது 180 ஆண்டுகளுக்கு முன்பு பெரு நாட்டு அரசியல் சட்டத்தில் சேர்க்கப்பட்ட ஒரு விதி. இந்த விதிக்கு புறநிலை வரையறை எதுவும் இல்லை என்று நிபுணர்கள் கூறுகின்றார்கள். 19-ம் நூற்றாண்டில் இதை பைத்தியக்காரத்தனம் என்று கருதினார்கள். இப்போது இடதுசாரி ஜனாதிபதி இதை நீக்குவதற்கு எடுத்த முயற்சிகளை தடுத்து ஊழல் குற்றச்சாட்டை இதன் மூலம் சுமத்தி ஏகாதிபத்திய முதலாளிகள் ஆட்சியை கவிழ்த்து இருக்கிறார்கள்.
அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியவாதிகள் 18 மாத காலம் போட்ட சதி திட்டத்தை இப்பொழுது நிறைவேற்றி இருக்கிறார்கள். கார்டிலோ ஓ.ஏ.எஸ் (OAS-ORGANISATION OF AMERICAN STATES) என்ற அமைப்பிலும் முறையிட்டார்.
பயனில்லை.
வாஷிங்டனுக்கு ஒரு நிலையற்ற உலகம் இருந்தால் தான் தனது மேலாதிக்கத்தை செலுத்த முடியும். பெருநாட்டில் 2016 ம் ஆண்டுகளிலிருந்து அடுத்தடுத்து 5 ஜனாதிபதிகள் மாற்றப்பட்டு கொண்டே இருந்தநிலை அமெரிக்காவிற்கு சாதகமாக இருந்தது. காஸ்டிலோ பதவிக்கு வந்த பிறகு எங்கே ஒரு நிலைத்தன்மை உருவாகி விடுமோ என்ற அச்சத்தில் பெரு நாட்டை நிலையற்ற தன்மைக்கு மீண்டும் கொண்டுவர வேண்டும் என்ற சுயநலத்தால் அமெரிக்க தூதரகம் அனைத்து உதவிகளும் செய்து ஆட்சியை கவிழ்த்தது.
துணை அதிபராக இருந்த திருமதி டினா போலுவார்டெ (Dina Boluarte) உடனடியாக அதிபராக பதவிஏற்க சொல்லி அவரை அங்கீகரித்து காஸ்டிலோவின் பதவி நீக்கத்தை ஆதரித்தது.
டினா போலுவார்ட்டின் நியமனத்தை பெரு அரசாங்கம் கொண்டாடுகிறது என்று அமெரிக்க வெளியூர் துறை செய்தி தொடர்பாளர் கூறுகிறார். ஜனநாயக ஸ்திர தன்மையை உறுதி செய்ததற்காக பெரு நாட்டின் சிவில் நிறுவனங்களையும், அதிகாரிகளையும், வெள்ளை மாளிகை பாராட்டியது என்றால் அவர்களை தவிர இந்த ஆட்சி கவிழ்ப்புக்கு வேறு யாரு அடித்தளமாக இருந்திருக்க முடியும்.?
உலகம் எதுவும் சொல்லாது அனைவரும் அமைதியாக இருப்பார்கள் என்று நினைக்கிறார்கள். இது அமெரிக்காவால் தூண்டப்பட்ட மற்றொரு சதி. இந்த ஆட்சிக் கவிழ்ப்பு லத்தீன் அமெரிக்காவின், இடது சக்திகளின் முன்னேற்றத்திற்கு எதிராக நடத்தப்பட்ட அதிகாரப்பூர்வ தாக்குதல். இந்த தாக்குதல், தந்திரங்கள், பொய்கள் நிறைந்த, ஒரு உண்மையான போரின் துவக்கமாகும் என்று வெனிசுலாவின் தேசிய அரசியல் அமைப்பு சபையின் தலைவர் டியோஸ்டாடா கப்பல்லோ கூறினார்.
மெக்சிக்கோ நாட்டு ஜனாதிபதி ஆண்ட்ரஸ் மேனுவல் லோபஸ் ஓப்ராடோர் பொருளாதார மற்றும் அரசியல் உயர் அடுக்கு பிரிவினர் திட்டமிட்டு காஸ்டிலோவை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்யவைத்துள்ளனர் என்று குற்றம் சாட்டியதோடு மட்டுமல்லாமல், காஸ்டிலோவுக்கு மெக்சிகோ அரசியல் புகலிடம் வழங்க தயாராக இருப்பதாக அறிவித்தார்.
பொலிவியா நாட்டு ஜனாதிபதி லூயிஸ் ஆர்சின், காஸ்டிலோவின் பதவி நீக்கத்தை ஏற்கவில்லை என்றும், இது போன்று பொலியாவில் இரண்டு முறை முயற்சித்ததையும் ஓ. ஏ.எஸ் அமைப்பு மீண்டும் தவறான மதிப்பீடு செய்து, பெரு நாட்டின் ஆட்சிக் கவிழ்ப்புக்கு துணை போயிருக்கிறது என்று கண்டித்தார்.

பெருவின் தலைநகரில் மிகப்பெரும் போராட்டங்கள் காஸ்டிலோவிற்கு ஆதரவாக நடைபெற்று வருகிறது. லத்தீன் அமெரிக்க நாடுகளில் இடதுசாரிகளும், முற்போக்காளர்களும் அதிகாரத்திற்கு வருவதும், அவற்றை அமெரிக்க ஏகாதிபத்திய தலைமையிலான பெரும் முதலாளிகள் ஆட்சியை கவிழ்ப்பதும் 1971-ம் ஆண்டு சிலி நாட்டில் தொடங்கி இன்று வரை நடைபெற்று வருகிறது. இருப்பினும் ஏகாதிபத்திய முதலாளித்த சுரண்டலுக்கு எதிராக மீண்டும் மீண்டும் மக்கள் எழுச்சி ஏற்பட்டு கொண்டு இருக்கிறது.
பெரு நாட்டிலும் காஸ்டிலோ சில நேரங்களில் சமரசம் செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டது. அவர் சார்ந்திருந்த கட்சி பெரு லிப்ரே(Free Peru) பல நே
ரங்களில் அவருடன் இணைந்து இருக்கவில்லை. 130 பாராளுமன்ற பிரதிநிதிகளில் 101 பேர் காஸ்டிலோ எதிராக வாக்களித்தனர். பெரு லிப்ரா கட்சியின் உறுப்பினர்கள் 37 பேர்களும், ராஜினாமா செய்த அமைச்சர்களும் இவருக்கு எதிராக வாக்களித்து உள்ளனர்.
இவற்றை காஸ்டிலோ அறிந்த போதிலும் வலதுசாரிகளின் கையில் அகப்பட்டு இருக்கக்கூடிய பாராளுமன்றத்தை கலைத்தால் மக்கள் ஆதரவு அளிப்பார்கள் என்று நம்பிக்கையில் முன் முயற்சி எடுத்தார்.
தொழிலாளர்களும் விவசாயிகளும் ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கலாம், ஆனால் நாட்டை ஆள்பவர்கள் பொருளாதார பலம் கொண்டவர்கள், ஊடகங்கள் மற்றும் அரசு எந்திரத்தை கட்டுப்படுத்துபவர்கள். அரசாங்கத்தை மாற்றினால் மட்டும் போதாது, அமைப்பின் அடிப்படை மாற்றத்திற்காக நாம் போராட வேண்டும். ஆனால் அங்கு செல்வதற்கு ஒடுக்கப்பட்ட மக்களின் அமைப்பும், அணி திரட்டலும், நாம் கட்டியெழுப்ப வேண்டிய ஒரு புரட்சிகர தலைமையும் தேவை என்பதை இன்றைய சூழல் கோருகிறது.
பெரும்பான்மை ஆதரவு இல்லை என்று தெரிந்தும் காஸ்டிலோ மக்களை தெருக்களில் இறக்குவதற்கான முயற்சிகளை ஆட்சிக்கு வந்ததிலிருந்து தொடர்ந்து எடுத்திருக்க வேண்டும் என்ற கருத்து முன் வைக்கப்படுவதில் நியாயம் இருக்கிறது.
பல நேரங்களில் பெரும்பான்மை இல்லை என்ற நிலைமையில் சமரசப் போக்கில் நடத்துவதற்கு முயற்சி செய்தாலும், முதலாளித்துவ வர்க்கம், தங்கள் வகுப்பைச் சேராத ஒருவரை, சாதாரண மக்களிடமிருந்து வந்த ஒருவரை, தொடர்ந்து அதிகாரத்தில் இருப்பதற்கு அனுமதிக்காது என்ற வரலாற்று அனுபவம் மீண்டும் நிலை நிறுத்தப்பட்டு இருக்கிறது.
பெருவின் அரசியல் நிலை நெருக்கடியாக உள்ளது. லத்தீன் அமெரிக்க நாடுகள் முழுவதும் உள்ள இடதுசாரிகளை முற்போக்காளர்களை ஒழித்துக் கட்டுவதற்கான திட்டத்தோடு அமெரிக்க ஏகாதிபத்தியம் அடுத்தடுத்த முயற்சிகளை செய்து கொண்டே இருக்கிறது. அர்ஜென்டினா, பொலிவியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளின் அனுபவம், காலம் மாறிவருவதைக் காட்டுகிறது.
அமெரிக்கசதியால் கவிழ்க்கப்பட்ட பிரபலமான அரசியல்வாதிகளை மீண்டும ஆட்சிக்கு திருப்பி அனுப்புகிறார்கள். புதிய தாராளமயப் பொருளாதாரத்தில் ஏமாற்றம் அதிகரித்து வருகிறது, அமெரிக்காவால் இதில் எதுவும் செய்ய முடியாது. வாஷிங்டன் பிராந்தியத்தின் பல்வேறு நாடுகளில் அதன் கைப்பாவை தலைவர்களை கொண்டு எடுபுடி அரசை நிறுவும் வாய்ப்பை கூடிய விரைவில் இழக்கும்.

அரசியல் போராட்டத்தின் அடுத்த கட்டமாக தொழிலாளர்களும் விவசாயிகளும் அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து போராடுவது மட்டுமல்ல, உண்மையான சக்தி தொழிலாள வர்க்கம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட, புரட்சிகர ஏழை விவசாயிகளின் அணி திரட்டலை நிரூபிக்கும் வகையில் அடித்தளத்தை அமைக்க வேண்டும்.
தென் அமெரிக்காவில் உள்ள இடதுசாரி தலைவர்கள் மக்கள் போராட்டத் தலைவர்களாக இருக்கிறார்கள். மக்களிடமிருந்து அன்னியபட்டவர்களாக இல்லை. களப்போராட்டத்திலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
அவர்களின் போராட்டம் வெல்லட்டும்.
அ.பாக்கியம்.

நூல் அறிமுகம் : அல்லி உதயனின் ’அரண்’ நாவல் – தங்கேஸ்
நூல் : அரண்
ஆசிரியர் : அல்லி உதயன்
விலை : ரூ. ₹150.
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332934
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
bharathiputhakalayam@gmail.com
தேனி மாவட்டத்தில் தமுஎகசவை கட்டி எழுப்பிய முன்னத்தி ஏர்களில் ஒருவரும் ,, நாற்பது ஆண்டு காலமாக தனது செம்மையான எழுத்துக்களால் , சமான்யர்களை கதை மாந்தர்களாக்கி இலக்கியத்தில் அவர்களை உயிர்ப்பித்துக் கொண்டிருக்கும் அரிய படைப்பாளியுமாகிய தோழர் அல்லி உதயன் அவர்கள் இந்த முறை தனது ‘’ அரண் ‘’என்ற அற்புதமான நாவலோடு வாசகர்களை சந்திக்க வந்திருக்கிறார்.
பாரதி புத்தகாலயத்தால் வெளியிடப்பட்டுள்ள இந் நாவல் மொத்தம் 159 பக்கங்கள் கொண்டது. விலை ரூ 150/. ஆகும். முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் தோழர் க. பாலபாரதி அவர்கள் இதற்கு ஒரு உணர்வு பூர்வமான உயர்தரமான முன்னுரை அளித்திருக்கிறார்.,
அந்த முன்னுரையை வாசிக்கும் போதே அவர் இந்த நாவலை எவ்வளவு தூரம் இரசித்து இரசித்து வாசித்திருக்கிறார் என்பது புரிய வருகிறது.
நாவலை வாசித்துக் கொண்டிருக்கும் போது நமது மனநிலையும் அவ்வாறு தான் உள்ளது என்பதை புரிந்து கொள்ள முடியும்.
இலக்கியம் அழகியலோடு இணைந்திருக்க வேண்டும் என்பதையெல்லாம் கட்டுடைத்து எளிமையையே உண்மையின் சாரத்தில் அழகாக்க முடியும் என்று இந்த நாவலில் நாவலாசிரியர் நிருபித்திருப்பதாக தோழர் பாலபாரதி அவர்கள் பாராட்டியிருப்பதும் மிகையல்ல என்பதை நீங்கள் இந்த நூலை வாசிக்க வாசிக்க புரிந்து கொள்ள முடியும்..
அடக்கு முறைக்கு எதிராக பஞ்சாலைத் தொழிலாளர்கள் தாங்களாகவே ஒன்று திரண்டு நடத்தும் தற்காப்பு போராட்டத்தின் வரலாறு தான். இந்த நாவலின் மையம்.ஆகு.ம்.
தங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் பொருட்டு தொழிற் சங்கம் அமைத்துக் கொள்ளவும் பல ஆண்டு காலம் வழங்கப்படாத ஊதிய உயர்வும் கோரிய தொழிலாளர்கள் முதலாளியால் அலட்சியம் செய்யப்படுகிறார்கள்.
உரத்துக் கேட்டவர்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள். அல்லது கொடூரமாகத் தாக்கப்படுகிறார்கள். அப்படி படுகொலை செய்யப்பட்டவர்களில் ஒருவன் தான் கூலித்தொழிலாளியான முத்து மாடத்தியின் கணவனான வடிவேல்
வைரவன் முதலாளியை எதிர்த்து கேள்வி கேட்டதற்காக படுகொலை செய்யப்படுகிறான்.
அவனது இரு நூறு ரூபாய் மதிப்புள்ள கைக் கடிகாரத்திற்காக அவன் கொலை செய்யப்பட்டான் என்று மக்கள் காரணம் சொல்கிறார்கள்.
ஆனால் முத்து மாடத்திக்கு மட்டும் உண்மை என்னவென்று தெரியம். முதலாளியின் அதிகாரம் தான் அவளது கணவனின் உயிரை பறித்ததென்று .
ஆனால் முதலாளித்துவத்தின் அதிகாரம் தான் தொழிலாளி வர்கத்தின் உரிமையையும் உயிரையும் எப்போதும் பறிக்கும் உயிர்க்கொல்லி என்று அவள் புரிந்து கொள்வதற்கு போதிய காலம் தேவைப்படுகின்றது
அந்தக் காலம் அவளுக்கு பல ஆண்டுகளுக்குப் பின்னர் ஊருகாலன் பொட்டலில் பஞ்சு மில் தொழிலாளர்களின் ஒன்று திரட்ட போராட்டத்திம் மூலம் கனிந்து வருகிறது. முதலாளிகள் தொழிலாளியைக் கொல்வது என்ற பார்வை அகன்று முதலாளித்துவம் தொழிலாளி வர்க்கத்தை கபளீகரம் செய்யும் சூட்சமம் அங்கே புலப்படுகிறது.. உழைப்பாழியை ஒதுக்கி விட்டு அவர்களது உழைப்பை மட்டும் ஸ்ட்ரா போட்டும் உறிஞ்சும் ஒரு மூன்றாந்தரத் சித்தாந்தம் தான் முதலாளித்துவம் என்பது புரியவருகிறது.
சித்தாந்தத்தால் சித்தாந்தத்தை எதிர்த்து வெற்றி பெறுவது எப்படி என்று தொழிற் சங்கத் தோழர்கள் பாடம் கற்பிக்கிறார்கள். மிகக் குறைந்த காலத்திலேயே முத்து மாடத்தி தீரமிக்க போராளியாக உருவெடுக்கிறாள். அதாவது வேலை நிறுத்தம் செய்யும் தொழிலாளர்களுக்கு தலைமை ஏற்று வழி நடத்தும் அளவிற்கு.
முன்னூறு பேர்களுக்கும் குறையாத கூட்டத்திற்கு தினமும் உணவு சமைத்துப் போடும் வேலையை போராட்டத்தின் வடிவமாகமும் கைக்கொள்ளுகிறாள்.
அதன் தொடர்ச்சியாக பல தலைவைர்களைச் சந்திக்கும் வாய்ப்பும் சுயமாக சிந்திக்கும் ஆற்றலும் சித்திக்க ஆகச் சிறந்த பெண் தலைமையாக முத்து மாடத்தி தன்னை வளர்துக் கொள்கிறாள்.
நான்கு பேர்களுக்கு முன்னால் நன்றி சொல்வதற்கே நடு நடுங்கியவள் இப்போது பெரிய பெரிய தலைவர்கள் அமர்ந்திருக்கும் மேடையில் இரண்டாயிரம் தொழிலாளர்களுக்கு மத்தியில் மைக்கில் தங்கு தடையின்றி தொழிற்சங்க உரையாற்றுகிறாள்.
எல்லாம் கனவு போல இருக்கிறது ஆனால் கற்றுக் கொள்பவர்களுக்கு காலம் கற்றுக் கொடுத்துக்கொண்டேயிருக்கிறது.என்பது தான் எத்தனை உண்மை..
தொழிலாளர்கள் அனைவரும் ஓரணியில் திரண்ட பின் மில் நிர்வாகம் தன் பிடிவாதத்தை விட்டு கீழே இறங்கி வருகிறது. அவர்களின் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ள சம்மதிக்கிறது.
போராட்டம் வெற்றி பெற்ற பின் தொழிலாளர்கள் முத்து மாடத்தியின் மகள் தனத்திற்கும் முத்துக்கண்ணணுக்கும் திருமணத்தை தாங்களே முன்னின்று நடத்துகிறார்கள்..
மதுரையிலிருந்து தலைவர் ஜோதி ராமுடன் பெருந்தலைவர் வாசுதேவனும் வந்து வாழ்த்துகிறார்.
‘’ அட்சய பாத்திரம் நவீன மணிமேகலைஎங்கள் அன்னை எங்கள் பசி தீர்த்து எங்களைக் காத்து போராட்டத்தை வென்றெடுத்த எங்கள் குலதெயவ்ம் தோழர் முத்து மாடத்தி வாழ்க வாழ்கவென்று கூட்டம் உணர்ச்சி சுழிப்பில் உற்சாகமாய கத்துகிறது..
முத்து மாடத்தி வெற்றி பெற்ற பெண் தோழராக மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்து கொள்கிறார்.
நாவலாசிரியரின் நோக்கமும் அது தான் என்று புரிகிறது.
நாவலாசிரியரை நாம் பாராட்டுவதற்கு பல காரணங்கள் இந்த நாவலில் காணக்கிடைக்கின்றன. அதில் மிகவும் முக்கியமானவைகள் என்றால்
பெண்களை வையத் தலைமை கொள்ள வைக்கும் பாரதியின் கனவை இதில் நனவாக்கியிருப்பது. தான் முக்கியமானதாகும். இந்த நாவல் முழுவதையும் நாம் வாசிக்கும் போது மனதில் நிறைவாக நிற்பவர்கள் பெண்கள் தான். முத்து மாடத்தி நாகவல்லி சுப்பக்காள் என்ற பாத்திரங்கள் ஆளுமை கொண்டவைகளாக இருக்கின்றன.
அடுத்ததாக சமான்யர்களின் சரித்திரத்தை பேசும் நாவல் என்று கூட இதைச் சொல்லலாம். கூலித் தொழிலாளிகள் பஞ்சாலைத்தொழிலாளிகள் விவசாயக்கூலிகள் லோடுமேன்கள் என எங்கு பார்த்தாலும் எளிய மனிதர்களே இந்த நாவலில் காணக்கிடைக்கிறார்கள்.. அவர்களின் கோபமும் தாபமும் நேசமும் மனிதாபிமானமும் வர்க்கப்புரிதல்களும் பேச்சுக்களும் ஏடாசிகளும் மண்மணத்தோடு வாசிப்பாளர்களை திகைக்க வைக்கின்றன.
ரெங்கண்ணன் , அறிவண்ணன் , மொக்க ராசு ,நாகவள்ளி ,சுப்பக்கா முத்துக்கண்ணன், செண்பக பாண்டியன், ராசம்மா , வேலுத்தம்பி மலைச்சாமி ,ராவுத்தரம்மா ,சின்னச்சாமி ,முத்துச்சாமி, கேரளபுத்திரன் என்று இந்தப்பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.
எளிய மொழி நடை இந்த நாவலின் இன்னொரு சிறப்பம்சமாகும்
கதை மாந்தர்கள் தேனி மாவட்டத்தின் வட்டார வழக்கான எளிய மொழியையே எங்கேயும் பேசுசிறார்கள். நாவலாசிரியர் மொழியை எளிய பாத்திரங்களின் வழியாக பேசவைக்கும் போது கூடுதல் அடர்த்தியும் மண்வாசமும் உடன் வந்து இணைந்து கொள்கின்றன.
‘’எம் பொண்ணு மக்கா உங்க பசியமர்த்துறதுதே எங் கொடுப்பினை .ஒங்க பாட்டுக்குச் சீசுவான்னு பார்க்குறதைப் பாருங்க சாமிகளா ‘’ என்று முத்து மாடத்தி ஆரம்பித்து வைக்கும் வட்டார வழக்கு மொழி நாவல் முழுவதும் தங்கு தடையின்றி பயணிக்கிறது.
** இது லேசில்ல முத்து மாடத்தி தலைமை ஆபிஸிலிருந்து வந்திருந்த ஆங்கர் சொன்னார்
‘’ தொழிற் சங்க போராட்டங்கள்ளல இதெல்லாம் பழகிப்போச்சு
அல்லாரும் மதியக்கஞசிய அலுமினியம் ஈயம்னு தூக்குச்சட்டியில தான் கொண்டாருவாங்க ….அதப்பிடிச்சிக்கிட்டு சாயந்திருங்கள்ல ஊர்வலமாப் போனாக …அப்ப நிதே இதுக்குத் தலமயான்னு வழிமறிச்சு தாக்குனாய்ங்க..’’
என்று முக்கியமான பாத்திரங்கள் பேசுவதாகட்டும் .தேனி வட்டார வழக்கு மொழி மிகச் செழுமையாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
எதார்த்த வாதம் இதன் மகுடம் என்று சொல்லலாம்
எந்த இடத்திலும் ஆசிரியர் எதார்த்தத்திற்கு புறம்பான பகட்டான மொழியையோ மனிதர்களையோ படைத்துக்காட்டவேயில்லை. ஆரம்பத்திலிருந்து இறுதி வரை சோ வென்று பெய்யும் அடைமழையைப்போல கதை நிகழ்வதும் பாத்திரங்கள் பேசுவதும் நாமும் இந்தக் கதை மாந்தர்களோடே வாழ்ந்து கொண்டிருக்கும் உணர்வைத் தருகிறது.
போராட்டத்தின் வடிவமும் உண்மையான தோழர்களின் பங்கேற்பும்
இந்த நாவலை உண்மையாக கண்முன் நிறுத்துகின்றன.
நியாயமான கோரிக்கைகளுக்காக அனுபவமிக்க அர்ப்பணிப்புள்ள தொழிற்சங்க தலைவர்களின் சீரிய தலைமையின் கீழ் தொழிலாளத் தோழர்கள் முன்னெடுக்கும் நியாயமனான போராட்டங்கள் இறுதியில் வெற்றி பெறுகின்றன.
முதலாளித்துவம் தனது அத்தனை மூர்க்கத்தையும் முயன்று பார்த்து விட்டு கடைசியில் தன் தோல்வியை ஒப்புக்கொண்டு சமரசத்திற்கு இறங்கி வருவது..ஒரு புறம் இருக்க மறுபுறம் இந்த வர்க்கப் போராட்டம் மகத்தான தலைவர்களையும் மகத்தான தோழர்களையும் இந்த மண்ணில் உருவாக்கி விட்டே மறைந்து போகிறது.
வாழ்ந்த தோழர்கள் நிஜப் பாத்திரங்களாகவே இந்நாவலில் பங்கெடுத்திருப்பது இதன் கூடுதல் சிறப்பு. .இந்த உத்தியை சிறப்பாக கைக்கொண்டதற்காக நாம் ஆசிரியரைப் பாராட்ட வேண்டும்.
மறைந்த மதுரைத் தோழர் ஜோதிராம் மற்றும் ராஜப்பா வெங்கடேசன் , ரேபேக்கா ,கோமதி மற்றும் பெருந்தலைவர் வாசுதேவன் ஆகியோர் இப்பாத்திரங்களில் நிஜமாகவே நம் கண்முன்னால் நடமாடுவது நமக்கு அற்புதமான அனுபவத்தை தருகிறது.
தேனி மாவட்டத்தின் கடைவீதிகளும் ஊருகாலன் பொட்டலும் கொட்டக்குடி ஆறும் சந்தையும் வாழ்க்கையை குறை சொல்லாமல் வாழ்ந்து பார்க்கும் எளிய மனிதர்களும் நாவலை வேறு ஒரு உயர்ந்த தளத்திற்கு உயர்த்திச் செல்கின்றனர். என்பது உண்மை.
திரைப்படமாக எடுப்பதற்கு உகந்த நாவல் இது.
இந்த நாவல் திரைக்கதை அமைப்பதற்கும் திரைப்படமாக எடுக்கப்படுவதற்கும் உரிய அத்தனை கூறுகளோடும் உள்ளது. .நல்ல திரைக்கலைஞர்கள் இந்த நாவலை வாசித்தால் நிச்சயமாக இந்தப்படைப்பை திரையாக்கம் செய்ய முடியும் என்பதே என் கணிப்பு.
சுடு மண்ணில் விழுந்த மழைத்துளி நம் கண்முன்னரே ஆவியாகி மேலே செல்வதைப்போல அவர்களின் வாழ்க்கை நம் கண்முன்னர் நகர்ந்து சென்று கொண்டிருக்கிறது.
இந்த அனுபவங்கள் எல்லாம் இன்று நாவல் எழுத வரும் இளம் படைப்பாளிகளுக்கு மகத்தான பாடங்களாகும்
மகத்தான படைப்புகளின் சாரம் வாழ்க்கையின் அனுபவம் தான் என்பது நம் கண்முன்னர் விரிந்து கொண்டே செல்கிறது. இப்படி ஆழ்ந்து அனுபவிக்க அதிசயிக்க எத்தனையோ சிறப்பம்சங்கள் இதில் இருந்தாலும் போதுமான நியாயமான விமர்சனங்களை இந்த நாவலின் மீது வைப்பது வாசகர்களாகிய நமது கடைமையாக இருக்கிறது.
முதலாவதாக முத்து மாடத்தியை தவிர மற்ற அனைத்து பாத்திரங்களும் நம் மனதில் அழுத்தமாகப் பதியவில்லை என்பது தான் கொஞ்சம் கசப்பான உண்மை
முத்து மாடத்திக்கு அடுத்து ஒரளவாவது நம் மனதில் அழுத்தம் திருத்தமாக பதிவது சுப்பக்காள் பாத்திரம்தான். ஏனையோர்கள் செய்தி சொல்வோர்களாக கதையை நகர்த்திச் செல்வோர்களாக மட்டுமே நம் கண்ணுக்குத் தெரிகிறார்கள். என்று சொல்ல வேண்டும்
மிகப் பிரமாண்டமான சமூக நாவலாக வளர்ந்திருக்க வேண்டிய இந்த நாவல் சமூக பொருளாதார வரலாற்றுக் காலகட்டங்களை ஆலமரமாக கிளை பரப்பி பேசாமல் முத்து மாடத்தியை மட்டுமே சுற்றியே பின்னப்பட்டு பயணிப்பதால் ஒரு நெடுங்கதை போலத் தோற்றம் தருகிறது.
போராட்டத்தின் ஆரம்பமே பஞ்சு மில்லில் சங்கம் வைக்க அனுமதியும் ஊதிய உயர்வு கோருதலும் தான் என்றால் அதற்கான காரணங்கள் அழுத்தம் திருத்தமாக உள்ளே கூறப்படவில்லை.
ஒரு நியாயமான போராட்டத்திற்கு அத்தனை இடர்களையும் தாண்டி ஒரு ஊரே ஒத்துழைப்பு தருகிறது என்பதை அழகாக சித்தரித்துச் செல்கிறது நாவல். இந்த நாவலை வாசிக்கும் நாமும் இந்தப் போராட்டதில் மறைமுகமாக பங்கு பெறுகிறோம். .போராட்டம் இறுதியில் வெற்றி பெற வேண்டுமென்று மனதார ஆசைப்படுகிறோம். அது படைப்பாளியின் படைப்பின் மேன்மையை பறை சாற்றுவதாக உள்ளது.
.ஊருகாலப் பொட்டலிலும் பந்தல் மேடைகளிலும் தேனியின் வீதிகளிலும் கதை மாந்தர்களோடு உடன் பயணிக்கிறோம். இவை அனைத்தும் நாவலாசிரியரின் கருத்தாழமிக்க கை வண்ணத்திற்கு கிடைத்த வெற்றியாகும்
கட்டுக்கடங்காத காட்டாறு என்பது கங்கு கரை காணாது பொங்கும் புதுப்புனலோடு எண்ணற்ற உயிர்களோடும் உயிரற்றவைகளோடும் பொருட்களோடும் கடலை நோக்கிய செல்லும் ஒரு அதிசயப் பயணம் என்றால் ஒரு அற்புதமான நாவலும் அவ்விதமே. என்று சொல்ல வேண்டும்.
வாழ்க்கை என்பது கூட ஒரு காட்டாறு தான். இந்தச் சமூகத்தின் அத்தனை கூறுகளையும் தன்னுள் பொதித்துக் கொண்டு காலமென்னும் கடலில் முன்னேறிச் செல்லும் காட்டாறு தான் அது.
எண்ணற்ற கிளை நதிகள் அதற்குள் வந்து கலக்க வேண்டும். நொங்கும் நுரையோடும் .படித்துறை தோறும் பயணித்து பலப் பல பெயர்களோடு ம்அது கடலில் போய் கலக்கும் போது ஒரு நிறைவு ஏற்படுகிறது.
இந்த நாவலும் கூட அப்படி ஒரு பயணத்தை தான் துவக்கியிருக்கிறது. அது கடலைச் சென்றடைவதற்கு இன்னும் பலகாத தூரம் பயணிக்க வேண்டுமென்றாலும் அது அதன் பயணத்தை துவக்கி விட்டது என்பதை அறிந்து மனதார வாழ்த்தி வரவேற்போம்.
அல்லி உதயன் தோழருக்கு
அன்புடன்
தங்கேஸ்
தமுஎகச
தேனிமாவட்டம்
நூல் அறிமுகம் : அல்லி உதயனின் ’அரண்’ நாவல் – ஜனநேசன்
நூல் : அரண்
ஆசிரியர் : அல்லி உதயன்
விலை : ரூ. ₹150.
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332934
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
bharathiputhakalayam@gmail.com
நவீன மணிமேகலையை நவிலும் “அரண்” நாவல்
தென்மேற்கு பருவக்காற்றில் மிதந்து உலாவும் வாய்ப்பு பெற்ற தேனியைச் சேர்ந்த சிறுகதை எழுத்தாளர் அல்லி உதயன் அரண் என்ற நாவல் மூலம் நாவலாசிரியராக அடி எடுத்து வைத்திருக்கிறார்.
வயிற்றுப்பசி தான் உலகின் பற்பல மாற்றங்களின் ஊற்று என்பதை சீத்தலை சாத்தனார், இராமலிங்க வள்ளலார் தொட்டு மாமேதைகள் மார்க்ஸ் ஏங்கல்ஸ் வரை தம் படைப்புகளில் பதிவு செய்து மானிட சமூக முன்னேற்றத்திற்கான வழிகளை உலகிற்குத் தந்துள்ளனர். தாதுவருஷ பஞ்ச காலத்தில் மதுரை மண்ணின் மாண்பினை உணர்த்திய மனுஷி அம்மணி அம்மாள் தன் சொத்துகளை விற்று மக்களின் வயிற்றுத்தீயை அணைத்த வரலாறு அறிவோம்.
இதேபோல் தேனி அருகில் கிராமத்தில் ஒரு பஞ்சாலையில் நடந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளிகளுக்கு வயிற்றுப்பசி தீர்த்து அரணாக இருந்து அவர்களது போராட்டத்தை வெற்றிபெற உதவிய ஒரு பெண்ணின் கதைஇந்த நாவல். வைராக்கிய பெண் முத்துமாடத்தியின் போரட்டபாடுகளை, உதவிய ஊர்மக்களின் கருணைமிகு இயல்பினை, வழிகாட்டிய இயக்கங்களின் காத்திரமான பங்களிப்பை அல்லி உதயன் நாவலாக்க முயன்றுள்ளார். இம்முயற்சிக்கு , தேனி மாவட்ட மக்களின் இயல்பான மொழியை சிக்கல் சிடுக்கு இல்லா எளிமையான நடையில் சொல்லும் அல்லி உதயனின் எழுத்தாற்றல் கைகொடுக்கிறது.இது நாவலைச் சரளமாக வாசிக்கவைக்கிறது.
மனங்களைப் பிளவு படுத்தும் மத அறிவும், அரசு அதிகாரமும், மக்களைப் பாதுகாக்காது. மக்களின் உறுபசி தீர்த்து, கருணையோடு நடத்துவது தான் உயர்பண்பு. உண்டி கொடுத்தோரே உயிர் கொடுத்தோர் என்று உலகிற்கு பிரகடனப்பபடுத்திய மணிமேகலை பாத்திரத்தை முன்மாதிரி படுத்தி முத்துமாடத்தி எனும் பாத்திரத்தை உருவாக்கி இருக்கிறார் அல்லி உதயன். முத்துமாடத்தியைக்கொண்டு தொழிலாளர் பசி தீர்த்து தொழிலாளர் போராட்டத்தை நீர்த்துவிடாமல் வெற்றிபெறச் செய்கிறார்.
சரளமான வாசிப்பு நடையுள்ள “அரண்” என்னும் இந்நாவல் புதியதாக எழுதவருபவர்களுக்கும், எழுதிக் கொண்டிருப்பவருக்கும் பகிர் நிறையக் கூறுகளை கொண்டிருக்கிறது. வாங்கி வாசித்துணரலாம்.
நூல் அறிமுகம் : ம.மணிமாறனின் ’போருக்கும் அப்பால்’ – சு.பொ.அகத்தியலிங்கம்
நூல் : போருக்கும் அப்பால்
ஆசிரியர் : ம.மணிமாறன்
விலை : ரூ. 210/-
பக்கங்கள் : 216
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
தொடர்புக்கு :044 – 24332424 /24330024/ விற்பனை 24332934
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
bharathiputhakalayam@gmail.com
புரையோடிய புண்களின் படப்பிடிப்பு ….
“ வாழ்க்கையும் ஒரே கோணத்தில் இல்லை. வலிகளும் ஒரே கோணத்தில் இல்லை… ”
இது நாவல் அல்ல. சிறுகதை தொகுப்பும் அல்ல. பல நூல்களை அறிமுகம் செய்வதின் வாயிலாக, இலங்கையில் வாழும் பல்வேறு தமிழர்கள் குறித்த ஓர் பன்மைத்துவ சிந்தனைப் பார்வையை நம்முள் விதைக்கும் அரிய முயற்சி. ஆசிரியரின் பரந்த வாசிப்பும் கூரிய அவதானிப்பும் நம்மை வியக்க வைக்கிறது .
கட்டுரைத் தொகுப்புகள் வெளிவருவது அண்மையில் அதிகரித்துள்ளன. பொதுவாய் அவை அவ்வப்போது பல்வேறு நிகழ்வுகளை ஒட்டி அல்லது தேவையை சார்ந்து அல்லது போகிற போக்கில் எழுதப்பட்டவற்றின் தொகுப்பாய் அமைகின்றன. அவற்றுள் சில பேசப்பட வேண்டியவையே. நானும் சிலதைப் பேசியுள்ளேன்.
ந.பெரியசாமியின் “ மொழியின் நிழல்” நூல் அறிமுகங்களின் தொகுப்பாய் அமைந்து, இன்னும் நான் வாசிக்க வேண்டிய பரப்பை என்னுள் உணர்த்திச் சென்றது. அய்ஜாஸ் அஹமதுவுடன் விஜய் பிரசாத் உரையாடித் தொகுத்த “மானுடத்துக்கு உரியதெதுவும் எனக்கு அந்நியமானதல்ல” எனும் நூல் இங்கு நாம் கற்றது கைமண் அளவு கற்க வேண்டியது கடலளவு என இடித்துச் சொன்ன நூல் .
இந்நூல் வாச்சியம் எனப்படும் நூல் பற்றிய விமர்சனக் கட்டுரைகளின் தொகுப்பு. ஆயின் பொதுவாய் வாசித்ததின் தொகுப்பல்ல. ஒரு கூர்த்த பார்வையோடு தமிழீழப் போருக்கு முன்னும் பின்னுமாய் பயணித்து; பொது புத்தியில் இன்னும் போய்ச் சேராத சமூக வாழ்வை காட்சிப் படுத்தும் கடுமையான முயற்சி.
நான் இலங்கைத் தமிழ் இலக்கியத்தோடு எழுபதின் இறுதிகளிலேயே அறிமுகம் ஆனவன். இந்நூலில் முதலில் பேசப்படும் டேனியலின் பஞ்சமரை அப்போதே வாசித்தவன். கவிதை, நாவல் சிறுகதை இலக்கியத் திறனாய்வு என இலங்கைத் தமிழ் பரப்பில் ஆர்வம் கொண்டிருந்தவன். ஒரு கட்சியின் திட்டத்தையே நாவலாக்கி “லங்கா ராணி” என உலவவிட்ட ஈழத்தமிழர் குறித்து பெருமை பொங்க பேசித் திரிந்த காலம் அது.
முள்ளிவாய்க்காலுக்குப் பின் வெளிவந்த நூல்கள் ஆதரித்து / எதிர்த்து என இரண்டே கோணங்களில் அனைத்தையும் பார்ப்பதாக என்னுள் ஒரு சோர்வு தட்டியது. நூலாசிரியரும் அதனைச் சுட்டுகிறார். அதன் பின் இலங்கைத் தமிழ் எழுத்துகளின் மீதான நாட்டம் குறைந்தது. “ சுகந்தி என்கிற ஆண்டாள் தேவநாயகி” என்கிற ட்டி. ராமகிருஷ்ணனின் மலையாள நாவலை குறிஞ்சிவேலன் மொழியாக்கத்தில் படித்ததுதான் நான் கடைசியாகப் படித்த ஈழத்தமிழ்ர் சார்ந்த நாவல் .
“ சகமனிதர்னைத் தொடவோ கட்டித் தழுவவோ கைகுலுக்கிக் கொள்ளவோ முடியாத வாழ்க்கையை ஏன்தான் வாழவேண்டும்? மானுட விழுமியத்தையும் அறத்தையும் முற்றாகப் புறந்தள்ளிவிட்டு வாழும் நாட்கள் எப்படி அர்த்தபூர்வமானதாக இருக்க முடியும்? புறவெளியில் இயங்கும் தோய்த்தொற்றைக் குறித்தல்ல நான் கூறுவது. அகத்துக்குள் வஞ்சக விசமாய்த் தோய்ந்திருக்கிற பெருந்தொற்றைக் குறித்தே நான் பேச விரும்புகிறேன்.” சுகன் தொகுத்த “தீண்டத்தகாதவன்” சிறுகதைத் தொகுப்புக்கு எழுதிய வாச்சியத்தை இப்படித்தான் துவங்குகிறார் ம.மணிமாறன் . இந்நூலுக்கு மதிப்புரை எழுதிய கவிஞர் கருணாகரனும் இவ்வரிகளை மேற்கோள் காட்டியே தொடங்குகிறார் .
அப்படி எனில் இந்நூல் தீண்டாமை எனும் மைய அச்சில் சுழல்கிறதா? ஆம் என்றோ இல்லை என்றோ சொல்லிவிட முடியாது. போரும் புரட்சியும் புலம்பெயர்தலும் எதுவும் கரைத்துவிடாத சாதிய ஆதிக்க மனக் கசடுகளை இந்நூல் வழி மணிமாறன் படம் பிடிக்கிறார். முதல் கட்டுரை பஞ்சமர் தொடங்கி கடைசிவரை ஊடும் பாவுமாய் இந்நூலில் நிறைந்துள்ளது.
அதற்கும் மேல் தோட்டத் தொழிலாளர் வாழ்வு, தேயிலை காப்பித் தோட்டங்களில் செடியின் தூரில் உறைந்திருக்கும் கண்ணீரின் வெப்பமும் அடர்த்தியும், இலங்கை முஸ்லீம்களில் கையறு வாழ்க்கை அவலம், பெண்களின் இரட்டைத் துயரம், போர் சப்பிப்போட்ட வாழ்வின் முடிவற்ற துயரம் என பன்முக சமூக அவலங்களையும் புரையோடிப்போன புண்களையும் பேசிய பல இலக்கியங்களை முன்வைத்து கதை, நாவல் வழி சமூக வரலாற்றைச் தீட்ட முயல்கிறார் மணிமாறன் .
மலையகத் தமிழ்ர், யாழ்ப்பாணத்தமிழ்ர், முஸ்லீம் தமிழர் என பலவாறு பிரிந்தும் ஒட்டியும் வாழ்கிற மொத்தத் தமிழ்ர்களையும் ஈழத்தமிழ்ர் என்ற சொல்லில் அடக்க முடியுமா? அங்கே நிலவும் அரசியல், சமூகச் சூழல் அதற்கேற்ப உள்ளதா? இலங்கைத் தமிழர் எனும் பொதுச் சொல்லில் அழைப்பதிலும் சிக்கல் உண்டு. வேறு சொல்லும் இன்னும் பரிந்துரைக்கப்பட வில்லை.
யாழ்ப்பாண தமிழர் அதிலும் சைவநெறி நின்ற மேல்தட்டு தமிழர் வழியும் வலியும் மட்டுமே இலங்கைத் தமிழர் பிரச்சனையின் முதலும் முடிவுமல்ல என்கிற செய்தி அழுத்தமாய் மணிமாறனால் இந்நூலில் சொல்லப்பட்டுள்ளது. “ போர் சிதைத்த நிலத்தின் கதை “ என மின்னிதழில் தொடராக வந்தவையே இப்போது “ போருக்கும் அப்பால்” என்கிற பெயரில் நம் கையில் தவழ்கிறது. புதிய தலைப்பு கவிஞர் கருணாகரன் உபயம். போருக்கு பின்னால் என்று சொல்லாமல் போருக்கும் பின்னால் என ஒரு உம் சேர்த்ததே நுட்பமானதுதாம்.
“போரால் நிலைகுலைந்து கலங்கிக் கிடக்கும் கதையை வரிசைப் படுத்திதான் எழுத வேண்டுமா என்ன? ஆகவே காலத்தைக் கலைத்து முன்பின்னாக எழுதலாம் என நினைக்கிறேன்.” என்கிற மணிமாறன் அப்படித்தான் செய்திருக்கிறார். எப்போது பேசினும் சில வலிகளும் வாழ்க்கையும் முடிவற்றதாய் தொடருதே ! குற்ற உணர்ச்சி குத்திக் குடையுதே ! மணிமாறன் நோக்கத்தில் வென்றுவிட்டார்.
“ சொற்கள் யாவும் ஒரு பொருளுடையவை அல்ல .இயக்கம் என்றால் அது மக்கள் நலன் சார்ந்ததாக இருக்க வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை. நம் காலத்தில் வலது கருத்தியலைப் பின்பற்றுபவர்கள்கூட தங்களை இயக்கக்காரர்கள் என்று அழைத்துக் கொள்ளவே விரும்புகிறார்கள். இப்படித்தான் புரட்சி ,போர்க்குணம், நவீனம், ஏன் பின் நவீனம் என யாவற்றின் மீதும் பன்மைத்துவ உரையாடல் நிகழ்த்த வேண்டும் என்பது காலத்தின் கோரிக்கையாக நம்முன் நிற்கிறது “ என ஜீவகுமாரின் “கடவுச்சீட்டு” நாவலுக்கு எழுதிய வாச்சியத்தில் மணிமாறன் சொல்கிறார். இந்நுல் நெடுக அவ்வாறு முயன்றும் உள்ளார்.
“போரின் சூழலுக்குள்ளேயே இருந்தவர்களின் ஆழ்மனதின் தடித்த சுவர்களுக்குள் பதுங்கிக் கிடந்த கதைகள் மெதுவாய் வெளியேறுகின்றன.’ என மெடூசாவின் கண்களின் முன் நிறுத்தப்பட்ட காலம்.” கதைத் தொகுப்பிற்கு வாச்சியம் எழுதும் போது மணிமாறன் சொல்லும் வரிகள் மெய்யென்பதை அறிய முடிகிறது.
“இங்கிருக்கும் ஒவ்வொரு மனிதனும் மனுஷியும் நடமாடும் ஆவணங்களாக இருப்பதை …” மலையக வாய்மொழி இலக்கியத்திற்கு வாச்சியம் எழுதுகிற போது மணிமாறன் நினைத்துப் பார்க்கிறார்; நம்மையும் அந்த நாட்களுக்குள் இழுத்துவிடுகிறார்.
சொந்த மண்ணின் அகதிகள் கதையை, கூலித் தமிழர்களின் கதையை, போர் சிதைத்த இஸ்லாமிய வாழ்க்கைப் பாடுகளை, இஸ்லாமிய பெண்களின் உள்ளத்து போராட்டக்குரலை என இவர் தொட்டுக்காட்டும் பரப்பும் வீச்சும் மிகப் பெரிது. காலங்காலமாய் சுமக்கும் கொடும் வலிகளுடன் யுத்தம் திணித்த பேரவலம் இரண்டையும் நினைத்தாலே தூக்கம் தொலைந்துவிடும்; அழுகை நிற்காது. அதற்குள் நம்மை இலகுவாக தள்ளிவிட்டுவிடுகிறார் மணிமாறன் .
ஈழத்தமிழ் இலக்கியம் குறித்த நம்முள் இருந்த ஒடுங்கிய பார்வை இந்நூலை வாசித்தபின் நிச்சயம் நெகிழும் .மாறும். வாழ்க்கையும் ஒரே கோணத்தில் இல்லை. வலிகளும் ஒரே கோணத்தில் இல்லை. நீங்கள் வாசிக்க வேண்டிய நூல்களின் பட்டியல் நீளும்.
தொடராக எழுதும் போது தினசரி வாசகர் பரப்பு மாறும் அதற்கொப்ப கொஞ்சம் முன்னுரையாக சிலவற்றை சொல்லுவது தவிர்க்க இயலாது . நூலாக்கும் போது கொஞ்சம் கத்திரி போட்டிருக்கலாமோ?
– சு.பொ.அகத்தியலிங்கம்
28/6/2022.
மே தினக் கவிதை எஸ்.வி.வேணுகோபாலன்
ஆகவே தோழர்களே!
உதிரச் சிவப்பு
உதிரா சிரிப்பு
உரத்த முழக்கத்தில் விடிகிறது இந்த நாள்
பதட்டத்தில் விழித்துப் பார்க்கிறான் முதலாளி
பாட்டாளி வர்க்கத்தின் பெருநாள்
அவன் பரம்பரைக்கே சாபத் திருநாள்
எந்த ஊரில் போய் நின்று கேட்டாலும்
சிகாகோ என்றே ஒலிக்கிறது
எந்தக் கம்பத்தை நோக்கினாலும்
செங்கொடி வீசிப் பறக்கிறது
வெறி பிடித்த உத்திரபிரதேசத்து அதிகாரி எவனோ
கூடையோடு போய்க்கொண்டிருக்கும்
மூதாட்டியை நிறுத்திப் பெயரைக் கேட்கிறான்:
பெலகேயா நீலவ்னா
என்று முகத்தில் அறைந்தாற்போல் சொல்லிவிட்டுப்
போய்க்கொண்டே இருக்கிறாள் அந்தத் தாய்.
இலத்தீன் அமெரிக்காவில்
கொடியேற்றிக் கொண்டிருக்கும் இளைஞனோ
திருத்தமாக உச்சரிக்கிறான்
தனது பெயர் சிங்காரவேலர் என்று!
நெய்வேலி நிலக்கரி சுரங்கத் தொழிலாளி
உற்றுப் பார்க்கிறான்
கடந்து போகும் மனிதர்
பாப்லோ நெருடாவோ என்று
மார்க்சின் முகச்சாயலில்
ஏங்கெல்சின் உடையில்
லெனின் குரலில்
அரங்கத்தின் கைத்தட்டலுக்கிடையே
பேசிக்கொண்டிருக்கிறான்
சிற்றூர் மாணவன் ஒருவன்
மெரீனா கடற்கரையில்
அன்றாடம் வந்து கேட்டுப் போகின்றன அலைகள்
பதில் கிடைக்காமல்
சுனாமியாகவும் எழுந்து கேட்டுப் போயின
முதல் மே தின கொண்டாட்டத்தின்
நூற்றாண்டு என்றைக்கு என
செஞ்சூரியன் வந்து
கடலில் பற்ற வைக்கும்
நெருப்புச் சுடரில் இருந்து
தீ பற்றவைத்துக் கொண்டு
கால எந்திரத்திலேறி
ஓடுகிறாள் தொழிலாளி ஒருத்தி
ஹே மார்க்கெட் சதுக்கம் நோக்கி
‘ஆகவே தோழர்களே …..’
என்று
அகஸ்டஸ் ஸ்பைஸ் நிகழ்த்தும் உரை
அவள் நிமித்தம்
உரத்துக் கேட்கிறது
ஊரெங்கும்
உலகெங்கும்
நன்றாகப் புலர்ந்துவிட்டது மே தினம்!






