எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன் படைப்புலகம்
பதிமூணில் ஒண்ணு – நூல் அறிமுகம்
நூல் அறிமுகம்: லஷ்மி பாலகிருஷ்ணனின் ‘மானசா’ – இரா. விஜயன்
நூல் : மானசா
ஆசிரியர் : லக்ஷ்மி பாலகிருஷ்ணன்
விலை : ரூ.₹130
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
bharathiputhakalayam@gmail.com
நீங்கள் உங்கள் முஷ்டியை இறுக்கினால் யாரும் உங்கள் கையில் எதையும் திணிக்க முடியாது – அலெக்ஸ் ஹெய்லி.
“சுநீதி நல்லவளாக வாழ்வது மட்டுமே போதும் என்றெண்ணியிருந்தாள். அதனால் நல்லவளாக காட்டிக் கொள்ள வேண்டியதன் அவசியம் அவளுக்கு துளியும் புரிந்திருக்கவில்லை.” மிக நெடுங்காலமாக பெண் என்பவளின் மேல் ஏற்றப்பட்டுள்ள சுமை என்பது அன்பு,தாய்மை ,தியாகம், கற்பு இன்னும் பல்வகை புராணிகத்தின் வழி நைச்சியமாக திணிக்கப்பட்டு பொது வெளியிலிருந்து முற்றிலும் குடும்பம் என்னும் எந்திரத்திற்குள்ளாக சிக்க வைக்கப்பட்டு கண்காணிப்பின் கீழ் தள்ளப்பட்டிருக்கிறாள்.
லக்ஷ்மி பாலகிருஷ்ணனின் முந்தைய நாவலான ஆனந்தவல்லியிலும் சரி இந்த நாவலான மானசாவிலும் ஒர் எளிய அன்றாடத்தின் வழியாக அறிமுகமாகும் கதையின் மையப் பாத்திரம் பெரும் காட்டில் விழுந்த அக்னி கங்காக அவர்களின் அகமும் அகச்சூழலும் கனன்று கனன்று எரிந்து விஸ்வரூபமாக விரிகிறது. ஆனந்தவல்லியைப் போலவே ஜகத்காருவும் மானசாவாக தன் ஞானத்தின் பெருவெளியில் தன்னை விரிக்கிறாள்.
மீள்புனைவு என்பது மரபின் பிடியிலிருந்து
தன்னை விடுவித்துக் கொண்டு பெரும் பிரவாகமாக புரண்டு புதுபனலாக நுரைத்து சகலத்தையும் புரட்டி போட்டும் ஒரு எத்தனிப்பு. மூலப் பிரதியை கட்டுடைப்பதன்னூடாக வகைதொகை இல்லா காலமாக மூலப்பிரதிக்குள் கட்டுண்டு கிடந்த ஒரு பத்திரத்திற்கு கட்டற்ற விடுதலையை வழங்குகிறது.
மானசா யுகந்திராமா பகைமையுள்ளும் சாபத்தின் கேடினுள்ளும் புதைந்து கொண்டிருக்கும் நாகர்களை காக்கவும் கரை சேர்க்கவும் ஒரு கருவை சுமக்கும் ஒரு கருப்பை அவ்வளவு தான் அதற்கப்பால் அவள் ஒன்றுமில்லை.
“முனிவரான ஜரத்காருவிற்கும் சரி, தன் தமையனுக்கும் சரி, தன் உடல் சமையலுக்கான மண் கலம் போன்றது.அதனுள் வேகும் அப்பமான மைந்தன் மட்டுமே அவர்களின் தேவையே தவிர, தன் உடலோ மனமோ அவர்களுக்கு ஒரு பொருட்டே இல்லை.”என்று கூறும் போழுது கோடானகோடி மானசாக்கள் நம்முள் ஒரு கணம் எழுந்து மறைகிறார்கள்.
கங்கை சமவெளி முழுவதும் ஆரியவர்த்தம் என்றான பின் .தெற்கில் தண்டகாரண்னியம் ஆரிய தேசாந்திரிகள் தெற்கு நேக்கி நகர பெரும் தடையாக இருக்கிறது பூர்வகுடி நாகர்களை முற்றிலும் வனங்களுக்குள் தள்ளிய பின் அவர்கள் அங்கும் நிலைகொள்ள முடியாத வண்ணம் மேலும் நேருக்கடியை ஏற்படுத்துகிறார்கள் பாண்டவர்கள்.இந்திரபிரஸ்தத்தை கட்டி எழுப்ப நாகர்களின் காண்டவ வனத்தை கண்ணனும் அர்ச்சுனனும் பல நாட்கள் தொடர்ந்து எரித்து அழிக்கிறார்கள். தப்பி வெளியேறும் நாகர்களை மீண்டும் அக்கினியில் வீசி முற்றாக அழித்தொழிக்கிறார்கள்.குலத்தின் முது மூப்பனான வாசுகி தொடரும் பகையை முடிப்பதற்கும் சாபத்திலிருந்து தட்சகனை மீட்கவும் நாகர்களுக்கும் பிராமண முனிவனுக்கும் மானசாவின் மகனான ஆஸ்த்திகன் பிறக்கிறான்.அவனை பிறப்பிக்கவே பிறந்த ஒரு பெண் மானசா அவ்வளவு தான்.
ஒரு படைப்பாளி புராணிகத்தை மீள்புனைவு செய்யும் போது அதனை எவ்வாறு அனுகுகிறார் என்பதில் தான் படைப்பின் நுட்பம் அடங்கியுள்ளது.அவ்வகையில் லஷ்மி பாலகிருஷ்ணன் மானசாவின் பாத்திரத்தை தேர்ந்துள்ளதின் மூலம் அவரின் நுண்மையற நோக்கு புலப்படுகிறது. மகாபாரதம் என்ற பிரமாண்டத்தில் மானசா போன்ற ஒரு எளிய தாயை தேர்வு செய்வதன் வழியாக பெண்களின் பாடுகளை மிக நுட்பமாக அவர் வெளிப்படுத்துகிறார். மானசா தன் சேடியிடம் தன் மகனை பற்றி இப்படி வெளிப்படுத்துகிறாள்.”இல்லையடி நேதளா.தளிரிலிருக்கும் நிறம் நிரந்தரமல்ல பைதலாக உணவுக்கும் சீராட்டலுக்கும் நம்மை அண்டியிருக்கையில் இருக்கும் அதே குணம் வளர்ந்து ,கற்று, அவை வென்று ஆணவ நிறைவு கொள்கையில் நிலைத்திருக்குமா என்று அறியேன். அதற்கென்ன செய்வது என்றும் நாம் இன்றே யோசித்தாக வேண்டுமடி” இம்மாதிரியான பல நுட்பமான உரையாடல்களின் மூலம் மூலப்பிரதிக்குள் நாம் கவனத்திலேயே வரதா ஒரு பெண்ணை புனைவுக்கான மையசரடாக மாற்றும் போதே பெண்ணின் மீதான நீண்ட கால சமூக ஒதுக்குதளை நம் முகத்திற்கு எதிரே திடூமென நிறுத்தி அதிர்ச்சிக்குள்ளாக்குகிறார்.
மேலும் ஆண்களின் மனம் எவ்வளவு வன்மாது என்று தன் சசோகதரன் வாசுகியிடம் மானசா இப்படி குமுறும் போது”நான் சொன்னது தவறு தான்.தன் குலம் செழிக்க வேண்டும்,தன் முன்னோர்களுக்கு எள்ளும் நீரும் தடையில்லாது கிடைக்க வேண்டும்,அதற்கு யாரோ ஒருத்தியின் குருதியை உறிஞ்சிக் கொள்ள வேண்டும் என்று நினனப்பதை பொறுப்பின்மை என்றல்ல குரூரம் என்றே சொல்லியிருக்க வேண்டும்.” அவர் பதிலின்றி விக்கித்து போய் நிற்கும் போது உணரமுடியும்.
காலம் காலமாக ஒடுக்கப்பட்ட பெண்கள் தங்களுக்கென்று கட்புலனாகாத ஒரு உலகை கட்டமைத்துக் கொள்கிறார்கள்.அது ஆணகள் நுழைய அனுமதிக்கப்படாத புதிர் அடுக்குகளாலானது. ஆண் எழுப்பி ஒவ்வொரு சுவற்றுக்கு பின்னாலும் அது ஏழுமலைகளை ஏழுகடல்களை கடந்து விரிந்துள்ளது. சாஸ்திரம் சொல்கிறது “பெண்ணாவள் தன் குழந்தை பருவத்தில் தன் தந்தைக்கும் சகோதரர்களுக்கு பின் தன் கணவனுக்கும் முதுமையில் தன் புதல்வர்களுக்கு கட்டுப்பட்டவளாய் இருக்க வேண்டும் என்று.மானசா தன் மகனிடம் கேட்கிறாள்.”தலைமுறைக்கு ஒரு அபலையைத் தேர்ந்தெடுத்து,அவள் தலையில் பொருப்பை கட்டும்போது மட்டும் உங்கள் பிரம்மச்சாரியத்தை தழர்த்தி கொள்வீர்கள். அதன் பின் மீண்டும் பொறுப்பற்ற துறவிக் கோலம், அப்படித்தானே?” என்று. பெண் என்பவள் சுகிக்கவும் ஈனவுமான சுமக்கவுமான ஒரு ஜடமாம என்று கேட்கிறாள். ஆண்கள் பெண்ணின் இருப்பை இயல்பை சுவற்றுக்கு உள்ளே வெளியே என்று இருவேறு உலகாக கட்டமைத்துள்ளான்.மானசா அதற்கு எதிரான கேள்விகளை நாவல் முழுவதும் மிக நுட்பமாக முன்வைத்து கொண்டே வருகிறாள்.
பொதுவாக மீள்புனைவில் காலமாற்றமும் பாத்திரங்களின் குணம் மாற்றமும் இயல்பாக மாறி வரும் ஆனால் மானசாவில் கதைக்களம் காண்டவ வனத்திலிருந்து சோழநாட்டின் வேணு வனத்துக்கு பெயர்த்து கொண்டுவருகிறார் ஆசிரியர். மேலும் பல்வேறு காரணங்களால் இந்திய துணை கண்டத்தில் ஏற்பட்ட இன மற்றும் பண்பாட்டு கலப்பினை கவனப்படுத்துகிற அதே வேளையில் அதன் எல்லை இன்னொரு இனத்தின் மேல் நடைபெறும் அத்துமீறலினால் அன்றி கலாச்சார பரிமாற்றதின் வழியானதாக இருக்க வேண்டியதின் அவசியத்தை முன் வைக்கிறார்.
“ததா விததா எனும் இரு மங்கையர் கருப்பும் வெள்ளையுமான நூலாகளாகி இரவையும் பகலையும் கொண்டு இடையறாது நெய்யும் துகிலே காலம் என்பர் பெரியோர்.”
“தனியாக பொறுப்புகளைச் சுமக்கும்போது நீரில் நனைந்த பஞ்சென பன்மடங்கு எடை கொண்டுவிடுகிறது.”இப்படியாக பல்வேறு இடங்களில் அவரின் கதை மொழியில் ஒரு கவித்துவமான மென்மையான ஆழ்ந்த அவருக்குறிய தனித்துமான மொழியை கையாளுகிறார்.
இறுதியாக மானசா அவளுக்கான சமூக விடுதலையையும் கடந்து தனக்கான ஆன்ம விடுதலையை உறுதியாக முன் வைத்து பெண் மேல் திணிக்கபடும் அனைத்து கட்டுகளையும் உடைத்து பூர்ணத்துமடைகிறாள். -இரா. விஜயன்
நூல் அறிமுகம்: லஷ்மி பாலகிருஷ்ணனின் ‘மானசா’ – உதயசங்கர்
ஜரத்குரு என்ற நாகினியின் ஆளுமை
மகாபாரதம் ஒரு இலக்கிய ம் என்ற அளவிலேயே முக்கியத்துவம் பெறுகிறது. மனித குலம் இதுவரை கண்ட அத்துணை விசித்திரமான கதாபாத்திரங்களையும் தன் உள்ளே சேகரித்து வைத்திருக்கிற கதைக் கடல் மகாபாரதம்.
ஆனால் மகாபாரதத்தின் சமூக விழுமியங்கள் மிகவும் பிற்போக்கானது. நிலவுடமைக்கால சமூக மதிப்பீடுகளைச் சுமந்து கொண்டிருப்பது.
இன்று வரை இரு பெரும் இதிகாசங்களின் மூலமே இந்து மத சாஸ்திரங்களும் சடங்குகளும் யாகங்களும் மனுதர்மத்தின் கோட்பாடுகளும் மக்கள் மனதில் ஆழமாக வேரூன்றி இருக்கின்றன.
கட்டுக்கதைகளையே வரலாறு என்று நம்புகிற, உண்மை என்று போற்றுகிற, மனித இனமாக ஹோமோ சேப்பியன்ஸ் என்ற இனம் வாழ்ந்து கொண்டிருக்கிறது.
அதனால் தான் இந்தியாவின் அத்தனை மூலை முடுக்குகளிலும் ராமாயணமும் மகாபாரதமும் நடந்ததாக மக்கள் நம்புகிறார்கள்.
மகாபாரதம் அடிப்படையில் வெற்றி பெற்றவர்களின் கதை .ஆனால் அந்த வெற்றிக்கு எத்தனை பழங்குடியினர், எத்தனை அப்பாவிகள்,எத்தனை சாமானிய மக்கள், ஏதும் அறியாத விலங்குகள் பறவைகள் பாம்புகள் பலியாகி இருக்கிறார்கள் என்பதை வெற்றியின் புகழ் மறைத்து விடுகிறது.
மகாபாரதம் முழுவதும் பலியானவர்களின் பாதிக்கப்பட்டவர்களின் மரண ஓலம் கேட்டுக் கொண்டே இருக்கிறது.
அவர்கள் தான் இந்த மண்ணின் பூர்வ குடிகள். அவர்கள்தான் இயற்கையின் புத்திரர்கள். அவர்கள்தான் இயற்கையை வழிபடுகிறவர்கள். இயற்கையோடு இணைந்து வாழ்பவர்கள். ஆனால் அவர்களை காட்டுமிராண்டிகளாக, நாகரீகமற்றவர்களாக சித்தரித்தது தான் மகாபாரதம் மாதிரியான இலக்கியங்களின் தந்திரம்.
மகாபாரத மறுவாசிப்பு என்பது ஏற்கனவே எழுதப்பட்ட பிரதியை மீண்டும் ஊதிப் பெருக்குவது அல்ல.
இதுவரை யாரும் கேட்டிராத, கவனித்திராத, பாதிக்கப்பட்ட வாழ்வையிழந்த கதாபாத்திரங்களின் வழியே மறுவாசிப்பு செய்யப்பட வேண்டும்.
அந்த வகையில் மகாபாரதத்தில் உள்ள ஒரு கதாபாத்திரத்தை மறுவாசிப்பு செய்து எழுதியிருக்கிறார் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் .
ஆதி இந்தியர்களான நாகர்கள் எப்படி சில ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் இந்தியாவிற்குள் நுழைந்த ஆரியர்களால் அழிக்கப்பட்டார்கள், அடிமைப்படுத்தப் பட்டார்கள் என்பதையும் இந்த நாவலின் வழியே நம்மால் உணர முடிகிறது.
மானசா என்ற பெண்ணின் ஆளுமையை விவரித்து போற்றுகிற நாவலாக வெளிவந்திருக்கிறது எத்தகைய சூழ்நிலையிலும் தன்னுடைய சுயத்தை இழக்காத தனக்கான தேடலை எப்போதும் அடைகாத்து வைத்திருக்கிற ஒரு அபூர்வமான பெண்ணாக மானசா இந்த நாவலில் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்.
அழகான மொழி நடையில் மகாபாரதத்தின் கிளைக்கதையை அதன் கலை அமைதி கெடாமல் புதிய வெளிச்சத்தை காட்டி இருக்கிறது மானசா.
இப்படிப்பட்ட பிரதிகளே மகாபாரதத்தின் மறுவாசிப்பாக அமைய வேண்டும் என்று நம்புகிறேன்.
மானசாவை தமிழுக்குத் தந்த லக்ஷ்மி பாலகிருஷ்ணனை மனமார வாழ்த்துகிறேன்.
நூல் : மானசா
ஆசிரியர் : லக்ஷ்மி பாலகிருஷ்ணன்
விலை : ரூ.₹130
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
bharathiputhakalayam@gmail.com
– உதயசங்கர்
நூல் அறிமுகம்: லக்ஷ்மி பாலகிருஷ்ணனின் ஆனந்தவல்லி – மாலன்
ஜீவன் உள்ள எழுத்து
நூல்: ஆனந்தவல்லி
ஆசிரியர்: லக்ஷ்மி பாலகிருஷ்ணன்
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
தொலைபேசி: 044-24332424
விலை: ரூ 230
புத்தகம் வாங்க இங்கே க்ளிக் செய்யவும்: thamizhbooks.com
வரலாற்று சாட்சியம்-1
“ ஒரு கிருகஸ்தன் சாப்பாட்டை முடித்துக் கொண்டு ஆபீசுக்குப் போயிருக்கிறான். அவன் சம்சாரம் வேலைகளை முடித்துவிட்டுக் குழந்தையுடன் உட்கார்ந்திருக்கிறாள்.அக்கம் பக்கம் யாருமில்லை. ஓர் ஆள் வந்து சீட்டு ஒன்றைக் கொடுத்தானாம். அதில், ’உன் புருஷன் சாகுந் தறுவாயில் இருக்கிறான். உடனே வா!” என்றிருக்கிறது. இவள் வீட்டைப் பூட்டிக் கொண்டு முன் பின் யோசனை இல்லாமல் புறப்பட்டாள் அந்த நீசன் ஒரு மணிக்குப் புறப்படும் கப்பல் துறைமுகத்திற்கு அவளை அழைத்துச் சென்றான்.
“கப்பலுக்கு எதற்கு வந்தார்?” என்று கேட்டாளாம். “ஆபீஸ் அதிகாரி கப்பல் தலைவனுக்கு ஒரு காகிதம் கொடுத்தனுப்பினார். கப்பலுக்கு வந்து கம்பிப்படிகளில் ஏறும் போது தலைசுற்றி விழுந்து மண்டை உடைந்தது என்றானாம் அவன். அந்தப் பெண் அதையும் நம்பிக் கப்பலில் ஏறினாளாம். மேல் மாடிக்குப் போவதற்குள் கப்பல் புறப்பட்டு விட்டது. அங்கே இவளைப் போல அநேகம் பெண்கள் இருந்தார்களாம். எல்லோரும் கப்பல் நகர்ந்தவுடன் அழுதார்களாம். ஏன் என்று இந்தப் பெண் கேட்க, “நாம் அடிமைகள்!.பிஜித்தீவில் இருக்கும் அடிமைகளுடைய சுகத்திற்காக நாம் நாசம் செய்யப்பட்டோம்!” என்று கதறினார்களாம். இப்படி எவ்வளவு குடும்பங்கள் நாசம் செய்யப்பட்டனவோ!”
– பாரதி சொன்னதாக யதுகிரி – (யதுகிரி அம்மாள், பாரதி நினைவுகள், சந்தியா பதிப்பகம், சென்னை பக்.34)
வரலாற்று சாட்சியம் -2
1662ல் மதுரையிலிருந்து நாகப்பட்டினத்திற்கு வேலை தேடி வந்த ஒரு தமிழனின் கதை டச்சுக்காரர்களின் ஆவணங்களில் விவரிக்கப்படுகிறது. மதுரையில் மனைவி மக்களை விட்டுவிட்டு நாகப்பட்டினம் வந்த அவன் வேலை கிடைத்ததும், ஒரு மாதம் கழித்து. அவர்களை அழைத்துவர மதுரைக்கு வந்தான். வந்தவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவனது பக்கத்து வீட்டுக்காரன், பணத்திற்கு ஆசைப்பட்டு, அந்த மனைவியையும் குழந்தைகளையும், டச்சுக்காரர்களிடம் விற்று விட்டான். மதுரைத் தமிழன் பதறி அடித்துக் கொண்டு தரங்கம்பாடிக்கு ஓடினான். அதற்குள் அதிக விலை வைத்து அந்த அடிமைகளை டச்சுக்காரர்கள் போத்துக்கீசியருக்கு விற்று விட்டார்கள். எனவே இவன் அவர்களைத் தன்னுடன் அனுப்பக் கோரிய போது போர்த்துக்கீசிய பாதிரி மறுத்துவிட்டதோடு அல்லாமல், இவனையும் பிடித்து வைத்துக் கொண்டார். அவன் பெரும் போராட்டத்திற்குப் பின் தன்னை விடுவித்துக் கொண்டு மயிலாப்பூர் பிஷப்பிடம் தன் மனைவி மக்களை விடுவிக்குமாறு மனுக் கொடுத்தான்.
மனு நிராகரிக்கப்பட்டது. சரி என் மனைவியை நான் மறுபடி மணம் செய்து கொள்கிறேன், அனுமதியுங்கள் என்று கோரிக்கை வைத்தான். பாதிரி விலைகொடுத்து வாங்கிவிட்டதால் மனைவியும் மக்களும் அவரது உடமை. அவர் சம்மதிக்காமல் அவர்கள் திருமணம் செய்து கொள்ள முடியாது. ஆனால் தன் மனைவியையே மறுபடி மணக்க விரும்பிய அவன் கோரிக்கையும் தள்ளுபடி செய்யப்பட்டது. அவன் தீவிரமாக இருப்பதைக் கண்ட பாதிரி, அந்த அடிமைகளைக் கூடுதலாக விலை வைத்து ஒரு இந்து வியாபாரியிடம் விற்றுவிட்டார். அவன் மறுபடியும் இந்து மதத்திற்குத் திரும்பினான்.19
– Nicolao Manucci, Storio de Mogur Vol III Page 128-129 ( எஸ்-ஜெய்சீல ஸ்டீபன் எழுதியுள்ள காலனியத் தொடக்கக் காலம் என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்)
வரலாற்று சாட்சியம் -3
17ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதிவரை டச்சுக்காரர்களின் அடிமை வியாபாரம் கொடிகட்டிப்பறந்தது. கிருஷ்ணப்ப நாயக்கரது மறைவுக்குப் பின் விஜயநகர அரசின் பெரும்பகுதி மராத்தியர் கைக்கு வந்தது. தேவனாம்பட்டினம், கடலூர், பரங்கிப்பேட்டை, தரங்கம்பாடி, பழவேற்காடு ஆகிய இடங்களிலிருந்து செயல்பட்டு வந்த டச்சுக்காரர்களின் அடிமை வியாபாரத்தை சிவாஜி தடை செய்தார். டச்சுக் கிழக்கிந்திய கம்பெனியை மூடச் செய்தார். அவர்கள் கடையைக் கட்டிக் கொண்டு மசூலிப்பட்டினத்திற்கு நகர்ந்தார்கள்
– K.A. Nilakanda Sastri, Shivaji’s Charters to the Dutch on the Coromandel Coast, Proceedings of the Indian History Congress Calcutta, 1936
ஐரோப்பியக் காலனியத்தால் கடலுக்கு அப்பால் அனுப்பப்பட்ட நம் பெண்களின் துயர்களைச் சூட்டுக் கோலால் நம் இதயத்தில் எழுதியவர் பாரதி. ” பெண்டிரை மிலேச்சர் பிரித்திடல் பொறாது செத்திடும் செய்தி”யை வாசிக்கும் ஒருவர் உள்ளம் நொறுங்கி ஒரு நிமிடமாவது உறைந்து போகாமல் இருக்க முடியாது (வாசித்தால்தானே?)
அயலகத்திற்கு அனுப்பப்பட்ட அடிமைப் பெண்களைப் பற்றி பாரதியாவது எழுதினார்.
ஆனால் உள்ளூர் அடிமைகளின் துன்பங்கள் பற்றி தமிழில் எழுதியவர் அதிகம் இல்லை. பன்னெடுங்காலமாக, சங்ககாலத்திலிருந்தே, தமிழ்நாட்டில் பெண்களை அடிமைப்படுத்தும் வழக்கம் இருந்து வந்திருப்பதால் அதைக் குறித்த சிந்தனை அற்றுப் போயிருக்கலாம் சங்க காலத்தில் வாணிபம் செழித்து வளர்ந்த நெய்தல் பகுதிகளிலும், உணவு உற்பத்தி செய்து வந்த மருத நிலப்பகுதிகளிலும் அடிமை முறை வழக்கிலிருந்தது. போரில் வெற்றி பெற்ற மன்னர்கள் தோற்ற மன்னர்களின் மனைவியரையும், பிற பெண்டிரையும் சிறை பிடித்து வந்ததைச் சங்கநூல்கள் குறிப்பிடுகின்றன. இவ்வாறு சிறை .பிடித்துக்கொண்டு வரப்பட்ட பெண்கள் காவிரிபூம்பட்டினத்திலுள்ள அம்பலங்களில் விளக்கேற்றி நிற்பதை “கொண்டி மகளிர் என்று ‘பட்டினப் பாலை’ குறிப்பிடுகிறது. ( இது குறித்து விரிவாகப் பேச இங்கு இடமில்லை.புலம் பெயர்தலும் இலக்கியமும் என்று சாகித்ய அகாதெமியில் ஒரு முறை விரிவாக உரையாற்றினேன். அந்தக் கட்டுரையை வாசிக்க விரும்புகிறவர்கள் தகவல் பெட்டிக்கு செய்தி அனுப்புங்கள்)
இந்த நெடும் மரபிலிருந்து விலகியவராக, லக்ஷ்மி பாலகிருஷ்ணன், பெற்ற தகப்பனாலேயே அரசுக்கு அடிமையாக விற்கப்பட்ட இளம் பெண்ணைப் பற்றி எழுதியிருக்கும் நாவல்தான் ஆனந்தவல்லி.அதிலும் டச்சுக்காரர்களின் அடிமை வணிகத்தைத் தடை செய்த சிவாஜியின் வழித்தோன்றல்களாலேயே வாங்கப்பட்ட ஒரு பெண்ணின் கதையைச் சொல்கிறார்.’உண்மைச் சமபவத்தின் மீது எழுந்து நிற்க்ம் புனைவு’ என்று அவர் குறிப்பிடுவதாலும் அது தொடர்பான ஆவணங்களைப் பார்வையிட்டிருப்பதாகக் கூறுவதாலும் எனக்கு அதைக் குறித்த சந்தேகங்கள் இல்லை. இன்னும் சொல்லப்போனால் இந்தப் புனைவின் பாத்திரமான கும்பகோணம் சபாபதிப் பிள்ளையினுடைய போராட்டம் மேலே வரலாற்று சாட்சியம்-2 ல் குறிப்பிட்டுள்ள மதுரைத் தமிழனின் வாழ்க்கை போலவே இருப்பது எனக்கு வியப்பும் மகிழ்சியும் அளித்தது. வியப்பு அவற்றிற்கிடையே உள்ள ஒற்றுமை. மகிழ்ச்சி புனைவு வாழ்க்கைக்கு நெருக்கமாக இருப்பதால்.
உண்மையில் இது ஆனந்தவல்லியின் கதையல்ல. அந்த சபாபதியின் கதைதான். நாவலின் பிற்பகுதி வரை அதிகம் விவரிக்கப்படவில்லை என்றாலும் வியக்க வைக்கும் பாத்திரமது. ஏமாற்றி, அவனது ஜாதிக்கு வெளியே, ஐந்து வயதுக் குழந்தைக்கு மணம் செய்வித்து வைக்கப்படும் அவன், அவள் பூப்பெய்தும் முன்னரே பிரிந்து விடும் அவன், அவளோடு ஒரு முறை கூட உடலுறவு கொண்டிராத அவன், மறுமணம் செய்து கொள்ளும் யோசனைகளைப் புறந்தள்ளி, அவளை மீட்பதற்காக அதிகாரங்களோடு நயந்தும் மோதியும் போராட்டங்கள் மேற்கொள்ளும் ஆண் மகன் அவன். அவனை செலுத்துவது எது? ‘அவள் என் சொத்து’ என்கிறான் ஓரிடத்தில்.அது மாத்திரம் காரணமாக இருந்திட முடியாது. ஏனெனில் அது ஈடு செய்யமுடியாத சொத்து அல்ல.
அந்த உந்து சக்தியைப் பற்றி லக்ஷ்மி விளம்பப் பேசவில்லை. அவனுடைய பாடுகளை சித்தரிக்கும் அவர் ஓரிடத்தில் கூட ஆனந்தவல்லி அவள் விலை போய்விட்ட பின்னரோ, அதன் முன்னரோ, அவனைப் பற்றி சிறு கீற்றுப் போலக் கூட நினைப்பதாகக் காட்டவில்லை
அவரின் நோக்கங்களில் ஒன்று உடன்கட்டை ஏறுவதைப் பற்றிய சிந்தனைகளை உசுப்புவது. குடிப்பெருமையை நிலைநாட்ட உயர்குடிப் பெண்களிடம் கணவனின் சிதைக்குள் தீப்பாயும் மனநிலை கட்டமைக்கப்பட்டதாகவும், பொருளாதாரத்தில் அடிநிலையில் இருக்கும் பெண்கள் அத்தகைய அழுத்தங்களுக்கு உள்ளாவதில்லை என்பதைப் பாத்திரங்களின் வழி நிலைநாட்டுவதில் வெற்றி கண்டுள்ளார். சதி குறித்தும் தமிழில் அதிகம் எழுதப்பட்டதில்லை. பிரபல மராத்தி எழுத்தாளர் ரஞ்சித் தேசாய் மராட்டியத்தில் பிரபலமான ரமாபாய் (மாதவராவ் பேஷ்வாவின் மனைவி) பற்றி எழுதிய ‘ஸ்வாமி’ எண்பதுகளின் பிற்பகுதியில் பிரபலமடைந்ததைப் போல இதுவும் புகழ் பெறட்டும் என வாசிக்கும் போது வாழ்த்தினேன்
இந்த நாவலின் சத்தான அம்சங்கள் பல. மூன்றை மட்டும் குறிப்பிட விரும்புகிறேன். பாத்திரப் படைப்புகள் நாச்சியார்கோயில் வெண்கல வார்ப்புப் போலிருக்கின்றன. அத்தனை அழுத்தம். நயம். நுட்பம். (நாச்சியார் கோயில் வார்ப்பைப் பார்க்க வேண்டுமானால் வீட்டிற்கு வாருங்கள்.ஏதோ வேலையாகக் கும்பகோணம் போன போது நாச்சியார் கோயிலிருந்து ஒரு குழலூதும் கிருஷ்ணன் வாங்கி வந்தேன். ஒரு காலை ஒயிலாக மடித்துக் கொண்டு வேய்குழல் வாசிக்கும் வேணு தன் வாசிப்பில் தானே கிறங்கி நிற்பதை ரசித்து அனுபவித்து வார்த்திருந்தார் சிற்பி. நானும் கிறங்கிப் போய்த்தான் வாங்கினேன். ஊதுகிற கிருஷ்ணனை வீட்டில் வைத்துக் கொள்ளக் கூடாது என்றார்கள் அடப் போங்கய்யா என்று அழைத்துக் கொண்டு வந்துவிட்டேன்)
இரண்டாவது செறிவான மொழி. “தைலத்த தேச்சு தலையெழுத்தை அழிக்க முடியுமா?’ ‘சமயக் கட்ட மாடு கன்னு போட்ட எடமாட்டம் ஆக்கி வைச்சிருப்பா’ ஆசிரியர் விரிவாக வாசிக்கும் வழக்கமுள்ள படிப்பாளி என்பதையும் ஊகிக்க அவரது நடை இடமளிக்க்கிறது.’ கண்டனன் கற்பினுக்கு அணியை என்பதைப் போல அரசருக்கு ஆசுவாசமளித்தார்’ ‘சிருங்கார மாளிகையில் இருந்தாலும் சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ எனும்படிக்கு கெட்ட பெயரெதுவும் எடுக்காமல்’ தஞ்சை வழக்கு தாரளமாகப் புழங்குகிறது. என்றாலும் சில சொற்கள் (எ-டு: தோஷோரோபம்,தேசஸ்த பிராமணர், ராஜகோரி, தர்ஜமா) இளந்தலைமுறைக்கு அந்நியமாக இருக்கும். அவற்றின் தலையில் நட்சத்திரமிட்டு, காலடிக் குறிப்பில் அவற்றை விளக்கியிருக்கலாம்
மூன்றாவது கதை சொல்லும் விதம். பெண்கள் ஜடை பின்னிக்கொள்ளும் வழக்கமிருந்த காலத்தில் கூந்தலை மூன்றாக வகிர்ந்து கொண்டு ஒவ்வொரு காலையும் மற்றொன்றின் மீது மாற்றி மாற்றிப் போட்டு சரசரவென்று பின்னலை வளர்த்தெடுப்பார்கள். லக்ஷ்மியும் கால இழைகளை முன்னும் பின்னும் மாற்றிப் போட்டு வந்தாலும் வாசிப்பவனுக்கு குழப்பமில்லாமல் இட்டுச் செல்கிறார்
நிறைய வாசித்திருப்பார், நிறைய உழைத்திருக்கிறார். தி.ஜானகிராமனுடன் பேசிக் கொண்டிருந்த ஒரு சமயம் நல்ல சங்கீதம் பற்றிப் பேச்சு வந்தது. “பாட்டில ஜீவன் தெரியணும். சிரமம் தெரியக் கூடாது” என்றார் அவர். பின் ஒரு சின்ன இடைவெளிக்குப் பின் “எழுத்திலும்தான்” என்றார் புன்னகைத்தபடி.
“சிரமம் இல்லாவிட்டால் ஜீவன் இல்லை” என்றேன். அதற்கு வார்த்தையாக பதில் ஏதும் சொல்லவில்லை. ஆனால் அதைப் புன்னகையால் அங்கீகரித்தார்.
இது ஜீவன் தெரியும் எழுத்து.





