ஜலீலா முஸம்மில் கவிதை jalila musamin kavithai

ஜலீலா முஸம்மில் கவிதை


ஒளித்து வைக்க முடியவில்லை ஒண்டிக் குடித்தனம் பண்ணும்
உணர்வுடன் பின்னிய
உன் ஞாபங்களை!இப்போதெல்லாம்
பெருஞ்சோம்பல் எனக்குள்
சாய்ந்தே கிடக்கிறேன்
தாங்க நீயிருப்பதால்!

புள்ளிதான் வைத்தேன்
பூமாலையாக வந்து விழுகிறது
உனை நினைத்ததும் கவிதைகள்!

ஏதேனும் பேசியிருக்கலாமோ?
இரைந்து கதறுகிறது
உன் மௌனத்துக்குப் பக்கத்தில்
என் ஆன்மா!

மாபெரும்
மொழித்திறன் கொண்டு
மறுமொழி தருகிறது
ஒவ்வொரு உயிர் வலியிலும்
இந்த மௌனம்!

இதயப்பூட்டை
உடைத்து திறந்தது
உன் ஒரேயொரு
காதல் பூ

எத்தனையோ
கோட்டைகளும் கோபுரங்களும்
உருவாகி விடுகின்றன
ஒரு கணம்
உன் ஆன்மா
என்னுடன் ஊடுருவி
உரையாடுகையில்!

நூல் அறிமுகம்: தேனி சுந்தரின் சீமையில் இல்லாத புத்தகம்..! – தேனிசீருடையான்

நூல் அறிமுகம்: தேனி சுந்தரின் சீமையில் இல்லாத புத்தகம்..! – தேனிசீருடையான்




நூல் : சீமையிலே இல்லாத புத்தகம்
ஆசிரியர் : தேனி சுந்தர்
விலை : ரூ.₹100/-
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
bharathiputhakalayam@gmail.com

கனிமங்கள் நிறைந்து ததும்பும் சுரங்கம்!

சொல் அடர்த்தி இருப்பதால் இதைக் கவிதை என்று சொல்லலாம்; சந்தத்துடன் கூடிய இசைக் கோலம் இல்லாததால் கவிதை இல்லை என்றும் சொல்லலாம்.

உரையாடலுடன் கூடிய கேள்வியும் பதிலுமாய் நூறு பக்கத்துக்கும் மேல் நீள்வதால் இதைப் புதினம் என்று சொல்லலாமா? அப்படியும் சொல்ல முடியும்.

ஒவ்வொரு குழந்தையும் நோக்கமின்றி உரையாடுகின்றன. அறிவியல், உளவியல், அரசியல் என உள்ளடக்கக் கூறுகள் கலந்தும் கலைந்தும் கிடப்பதால் இது புதினம் இல்லை என்று சிலர் வாதிடுவர்.

ஆக, இது “சீமையில இல்லாத புத்தகம்” என்று உறுதியாகச் சொல்ல முடிகிறது. உலகின் வேறு எந்த மொழியிலும் இம்மாதிரியான புத்தகம் வந்திருக்கிறதா என்று தெரியவில்லை. இப்படி ஒரு புத்தகத்தை வடிவமைக்க வேண்டும் என்று நினைத்ததே ஒரு புரட்சிச் சிந்தனைதான்.

இந்த நூலின் முக்கியக் கதாபாத்திரங்கள் மூன்று; டார்வின், புகழ்மதி, கீர்த்தி. அப்பா துணைப் பாத்திரமாய் வந்து போவார்.

அண்ணல் காந்தியடிகள் தனது சுய சரிதையில் குழந்தைக் கல்விபற்றி இப்படிக் கூறுவார். “குழந்தைகளுக்கு முதலில் கோடு போடவும் புள்ளி வைக்கவும் கற்றுக் கொடுங்கள். அது ஓவியமாய் மாறி மனசில் படியும்; அதுதான் முதல் கல்வி.”

“அறுபது பக்க

புஸ்தகத்த

அஞ்சே நிமிசத்துல

படிக்க முடியுமா?

புகழ்மதி படிச்சுட்டாங்க;

ஒவ்வொரு பக்கமா

புரட்டுவாங்க;

படம் இருக்கும்;

அத மட்டும் பாப்பாங்க.”

இவை சாதாரண வரிகள்தான்; ஆனால் காந்தியடிகள் அறிவுறுத்திய குழந்தைக் கல்வி என்ற இலக்கணத்துக்கு இலக்கியம் சமைக்கின்றன.

குழந்தைகள் புறத்திருந்தும் கல்வியைச் சுயமாய்ச் சேகரிக்கின்றன. வண்டியை ஓட்டுகிறார் அப்பா. பையப் போகச் சொல்கிறாள் மகள். அந்த நேரம் புறவெளியில் கோக்கு, காகம், நீர்ப்படுகை எல்லாம் தென்படுகின்றன. அவள் சொல்கிறாள்

“கொஞ்சமாப் போப்பா;

காத்து என்னய அடிச்சுக்கிட்டே இருக்கு.

ஏ ஆத்து, ஆத்து ஆத்து.

ஏ தண்ணி தண்ணி தண்ணி.

ஏ கொக்கு கொக்கு கொக்கு;

ஏ மாடு மாடு மாடு;

ஏ காக்கா காக்கா காக்கா.”

எல்லா உயிர்ஜீவிகளும் உள்ளுக்குள் புகுந்து பாட்டுப் பாட வைக்கின்றன. இது குழந்தைப் பருவ வளர்ச்சியின் ஒரு குறியீடு என்று சொல்லலாம்.

குழந்தைகளுக்குப் படைப்பாற்றல் என்பது கல்விக் கூடத்திலும் கல்விக்கூட அனுபவங்களில் இருந்தும் கிடைக்கிறது. இன்றைய மூத்த மனிதர்களுக்கு வகுப்பறையில் ஓர் அனுபவம் கிடைத்திருக்கும். மயிலிறகைப் பாடப்புத்தகத்தில் செருகி வைத்தால் அது குட்டிபோடும். அது உண்மையில்லை என்பதை அந்தக் குழந்தைகள் சீக்கிரமே புரிந்துகொள்வார்கள். அந்தப் புரிதல் டார்வினுக்கும் வந்துவிட்டது.

“இன்னைக்கு டார்வின்

ரெண்டுமூணு

மயிலிறகு வச்சிருந்தான்.

இத புக்ல வச்சா

நல்லாப் படிப்பு

வருமாக்கும்ப்பா?”

குட்டி போடாது என்ற உண்மை புரிந்து அப்படியானால் வேறு என்ன செய்யும் என்ற கேள்வி முன்னுக்கு வர, படிப்பு வரும் என்ற முடிவுக்கு வருகிறான். ஏற்கனவே உள்ள அனுபவத்தில் இருந்து புதிய அனுபவம் கிடைக்கும் என்பதுதான் வரலாற்றியல் பொருள்முதல்வாதம். இந்த மாபெரும் உண்மையை மிக எளிதாக வெளிக் கொண்டு வந்திருக்கிறார் ஆசிரியர்.

சில வேளைகளில் குழந்தைகள் கேட்கும் கேள்விக்குப் பெரியவர்கள் பதில் சொல்லத் திணறுவார்கள்.

“புழு பூச்சிக

வாத்தோட உணவு;

வாத்து மனுசனுக்கு உணவு;

மனுசன் செத்துப் போனா

புழுப் பூச்சிக்கு உணவு.”

புழுப்பூச்சிகள் வாத்துக்கு உணவாகிப் போன பிறகு எப்படி வந்து மனுசனைத் தின்னும்? இந்தக் கேள்வி குதர்க்கமானது அல்ல; உயிரியல் சுழற்சியைக் கேட்டு வாங்கும் உத்தி. இந்தக் கேள்விக்கு அப்பாவால் பதில் சொல்ல முடியவில்லை. “செத்துப்போன பூச்சிகளோட சொந்தக்காரவங்க இருப்பாங்க” என்று பதில் சொல்கிறார் என்றாலும் அடுத்த கேள்வி இன்னும் கூர்மையாய் வந்து விழுமோ என எண்ணி “பசிக்கிது; பேசாம வாடா” என்று முடங்குவார்.

இதே போன்றதொரு திணறல் இன்னோர் அத்தியாயத்திலும் வருகிறது. மகள் தந்தையிடம் கதையொன்று கேட்பாள். “ஒரு ஊர்ல நெறையப் புறா இருந்துச்சாம்” என்று ஆரம்பிப்பார். “அந்தப் புறாவெல்லாம் இரை தின்னப்போகுமாம்” என்று தொடர்வார். “நம்ம வடக்கடப் பக்கத்துல இருக்குமே அந்தப் புறாவா?” என்பாள் புகழ்மதி. ”இல்ல பாப்பா; இது வேற ஊர்ப் புறா” என்பார். “அப்ப நீ எப்படிப்பா பாத்த?” என்று கேட்பாள் குழந்தை. வேறு ஊரில் இருக்கும் புறாவை இங்கிருந்து எப்படி பார்க்க முடியும் என்ற லாஜிக்கான கேள்விக்கு பதில் சொல்லத் தெரியாமல் “பசிக்கிது; சாப்பிடப் போறேன்” என்று கதையை முடித்து விடுவார். (கதை என்றால் உலகில் உள்ள எல்லாப் புறாக்களும் வரும் என்று சொல்லியிருக்க முடியும்; ஆனால் இந்தப் படைப்பைப் பொருத்தமட்டும் அது மிகை யதார்த்தம் என்பதால் விட்டுவிட்டார் போலும்.)

கேள்விகள்தான் கல்வியின் அஸ்திவாரம். “மரத்தில் தொங்கும் ஆப்பிள் வானம் நோக்கி மேலேறாமல் தரைநோக்கி விழுகிறதே; எப்படி?” என்ற கேள்வி எழாமல் இருந்திருந்தால் புவியீர்ப்பு விசையைக் கண்டு பிடித்திருக்க முடியுமா? கேள்வி கேட்கத் தெரிந்ததால்தான் விலங்கிடமிருந்து விலகி மனிதனாய் உயர்வடைந்திருக்கிறோம். கேட்கத் தெரியாத விலங்குகள் இன்னும் அப்படியே இருக்கின்றன. இந்தக் கருத்தியல்தான் இந்தப்படைப்பின் மையம்.

ஒருசொல் பல பொருள்; பலசொல் ஒரு பொருள் என்று வகுப்பறையில் இலக்கணம் படித்திருக்கிறோம். அது மழலையர் வாழ்க்கைமூலம் எப்படி உருவாகிறது என்பதைக் காட்டுகிறார் ஆசிரியர். தான் மேஜிக் செய்யப்போவதாகச் சொல்லி அப்பாவின் கண்ணை மூடச் சொல்கிறான். அவர் ஏதாவது ஒருவிதத்தில் கண்ணைத் திறந்து வைத்துக் கொண்டிருக்கிறார். மகள் சொல்கிறாள்.

“கண்ண இறுக்கமா மூடுப்பா!

ரெண்டாவது தடவை

கண்ணை நல்லா மூடுப்பா!

மூணாவது முறை

கண்ணக் கெட்டியா மூடுப்பா!

ஒரு பொருள் தரும் பல சொற்கள்.”

”இறுக்கமா மூடு. நல்லா மூடு. கெட்டியா மூடு. மூன்றும் ஒரே பொருள் உடையவைதான். குழந்தைகள் தங்களுக்குத் தெரியாமலே இலக்கணக் கூறுகளை வெளிப் படுத்துகிறார்கள் என்றால் அது ஒரு முக்கியமான கல்வியியல் கண்டுபிடிப்பு.

கேள்வி கேட்பதுமட்டுமல்ல; பதிலுரைக்கத் தெரிவதும் மழலைத் தேடலின் முக்கியமான அம்சம்.

“எங்க பாப்பா
இன்னக்கி
நெலாவக் காணம்?

தேடிப் பாத்துட்டுப்
புகழ்மதி சொல்றாங்க;
அந்தா ஒளிஞ்சிருக்குப்பா நெலா.

அட ஆமா;
எதுக்கு பாப்பா
இப்படி ஒளிஞ்சிருக்கு?

நேத்து
நானும் கீர்த்தியும்
நெலாவப் பாத்துப் பாத்து
சிரிச்சம்ல
அதுக்குத்தான்
வெக்கப்பட்டு ஒளிஞ்சிருக்கு.”

நேர்த்தியான நேர்மையான யதார்த்தம் சிதையாத இப்படியான பதில்கள் குழந்தைகளின் கற்பனைத் திறனை வளர்க்கும். கேள்வியும் பதிலும் சேர்ந்தே மழலையரின் அறிவாற்றலை வளர்க்கின்றன.

”நாம் கண்ணை மூடிக்கொண்டால் நமக்கு முன் இருப்பவை எல்லாம் நிஜமற்றவை; அவை அங்கு இருக்கிறதா இல்லையா என்பதைக் கண் திறந்து பார்க்கும்போதுதான் தெரிகிறது; ஆகவே, உன் இருப்பு தவிர மற்றெல்லாம் மாயமானவை” என்கிறது கருத்து முதல்வாதம்.

“நீ விழித்திருந்தாலும் உறங்கிக் கொண்டிருந்தாலும் பிரபஞ்சத்தின் ஒவ்வொரு பொருளும் அதனதன் இடத்தில் நின்று இயங்கிக் கொண்டிருக்கிறது” என்பது பொருள்முதல்வாதம். இந்த மகத்தான தத்துவத்தை ஓர் எளிமயான உதாரணத்தின் மூலம் கேள்விக்கான பதிலுரையாய் விளக்குகிறார் ஆசிரியர். மழை வரும்போது நட்சத்திரம் வருவதில்லையே ஏன் என்கிறான் டார்வின். அப்பா தன் தோளில் கிடந்த துண்டை எடுத்து மேனியை மறைத்துக்கொண்டு “இப்ப நான் தெரியிறனா?” என்பார். ”இல்ல என்பான் மகன்.

“அப்ப இங்க
இருக்கனா இல்லியா?

இருக்க;
அதுதான் விஷயம்.

வானத்தை மறைக்கும் துண்டு மழைமேகம் எனப் புரிந்துகொள்கிறான். எது மறைத்தாலும் நட்சத்திரம் இல்லையென்றாகி விடாது. இதுதான் பொருள்முதல்வாதம்.

நேர்மையான கேள்வியும் ஆழமான பதிலும் குழந்தைகளின் தேடலை மேம்படுத்தும்.

ஒவ்வோர் அத்தியாயமும் அற்புதமான கனிமங்களை உள்ளடக்கி வைத்திருக்கிற தனித்தனிச் சுரங்கங்கள். வாசித்து அனுபவிக்க வேண்டும்; உள்வாங்கிக் கனிமங்களைச் சேகரித்துக் குழந்தைகளுக்கு வழங்கினால் அதை வாங்கி மேலும் பட்டைதீட்டி உலகை ஒளிரச் செய்வார்கள்.

நமது குழந்தைகள் புழங்கும் மொழியைக் கொண்டே கல்விமுறை நியாயங்களையும் மகத்தான தத்துவங்களையும் விளக்குகிற “சீமையில் இல்லாத புத்தக”த்தைத் தமிழ்க் கல்விப் புலத்துக்கு வழங்கிய தேனிசுந்தர் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். நூலாசிரியர் அவர்களுக்கு வாழ்த்துகள்.

– தோழமையுடன்
தேனிசீருடையான்.

பிச்சுமணியின் கவிதைகள்

பிச்சுமணியின் கவிதைகள்




குழந்தை மனசென்பது
வேறொன்றுமில்லை
தான் விரும்பிய
எல்லாவற்றிற்கும்
உயிர் தருவதுதான்.
—-
உதிரும் இலைகள்
காற்றின் மீது கோபப்படுவதே
இல்லை..
அது அழைக்கும் இடங்களுங்கெல்லாம்
கூடவே செல்கின்றன.
—-
மொழியின் எழுத்துக்களை
முதன் முதலில் அறியும்
குழந்தையிடம்
“பார்க்காமல் எழுது” என்றால்
கண்களை மூடிக் கொண்டு எழுதுவது
இலக்கணப் பிழை இல்லைதானே.‌.

– பிச்சுமணி

பாங்கைத் தமிழனின் கவிதைகள்

பாங்கைத் தமிழனின் கவிதைகள்




பெண்தான் பேருலகம்
****************************
தேனின் சுவை பெரிதாம்
தெரியாமல் பிதற்று கின்றார்;
கரும்பின் சுவை இனிதாம்
கண்மூடி உளறு கின்றார்;
கனியின் சுவை யதுவோ
இனிமை நிறைந் ததுவாம்;
அமிழ்தை காணா தோர்
அதை சுவைதா னென்கின்றார்!

தென்றல் தீண்டு சுவை
தேகமெலாம் குளிரு மென்பார்
பனியின் தண்மை யது
பரவசமாம் சொல்லு கின்றார்
பூதான் மென்மை யென
பொய்யாகச் சொல்லு கின்றார்
சந்தனமே மண மென்று
சாதனையாய் புலம்பு கின்றார்!

நிலவு அழ கென்று
நியாயமற்றுச் சொல்லு கின்றார்
மயில்தான் மயக்கு மென
மனம் பிறழ்ந்து கூறுகின்றார்
மானை அழ கென்று
மயக்கத்திலே புலம்பு கின்றார்;
மங்கை பிறப்பினை தான்
மதியாலே உண ராதோர்!

எல்லாம் இவளி டமே
இரவல் பெற்ற தென
ஏனோ அறி யாமல்
இயம்புகிறார் கவிஞ ரென!
பெண்ணே பேர ழகு
பெண்ணே பெருஞ் சுவைதான்
பெண்ணே எல்லா மும்
பேருலகே அவள் தானே!

‘என்னம்மா…? ‘
****************
என்னம்மா சின்னப் பெண்ணே
இன்னுமா புரிய வில்லை?
மக்களின் சேவைக் காக
மாதாவாய் மன முருகி
செய்திட துடித்த போதும்
செய்திட முடியா வண்ணம்
சிறைதனைப் போடு கின்ற
சிறியவர் மதிதான் விந்தை!

மக்களால் தேர்வும் ஆகி
மதிப்பான பொருப்பும் ஆகி
பெயருக்கு நீதான் என்றால்
பெருமைக்கு ஆணே ஆனான்!
அதிகார ஒப்பம் நீயே
அதிலொன்றும் அய்யம் இல்லை;
அதனாலே பெருமை தன்னை
ஆக்கினான் ஆணே தன்னை!

பெருமைக்கு சிலைபோல் உன்னை
பேசாமல் பார்த்துக் கொள்வான்
தலைவியாம் சொல்வார் உம்மை;
தடுத்துமே தலைவன் தானே
சொல்லியே பெருமை பேசும்
சுயநலம் ஆணே என்பேன்!
சூழ்ச்சியைப் புரிந்துகொள் நண்பா!

கல்வியால் பதவித் தேட
கற்கணும் பெண்ணே கண்ணே;
கல்வியால் கலெக்டர் என்றால்
கணவனோ உரிமை இல்லை!
ஆசானாய் பொருப்பே யென்றால்
அதிலேது ஆணுக் குரிமை?
அதிகாரி யானால் நீதான்
அனைத்துமே நீதான் ஆவாய்!

கல்வியைத் தேடுத் தேடு
கல்வியை நாடு நாடு
கல்வியை உயிராய் என்றும்
கருத்தினுள் கொள்வாய் பெண்ணே;
கல்விதான் கண்கள் உண்மை
கல்விதான் கரையை சேர்க்கும்
கல்வியால் உயர்வாய் கண்ணே
கனிவோடு வாழ்த்து கின்றேன்!

செம்மொழி எம்மொழி
*******************************
அருவியில் குளிக்கும் போதும்
ஆகாயம் பறக்கும் போதும்
இனிமையை நுகரும் போதும்
ஈகையில் மகிழும் போதும்
உறவினைத் தழுவும் போதும்
ஊடல்தான் முடியும் போதும்
எண்ணங்கள் மலரும் போதும்
ஏற்றங்கள் வந்த போதும்
ஐநிலம் தவழ்ந்த யெங்கள்
ஒண்தமிழ்த் தாயே உந்தன்
ஓசையில் உலகம் உய்யும்
ஔடதம் நீயே அம்மா!
ஆயுதம்(ஃ) நீயே அம்மா!!

கனிநிகர் தமிழே நீதான்-தமிழ்க்
காவினில் பழுத்தாய் நன்கு
கிளியெனத் தமிழ ரெல்லாம்
கீறியே ருசித்தோம் உம்மை
குளிர்ந்ததே உள்ள மெல்லாம்
கூவினோம் குயில்கள் போலே!
கெடுமதி நினைப்போர் யாரும்
கேடுற்றே நிலத்தில் வீழ்வார்;
கையறு நிலையில் தாழ்ந்தே
கொடுமதி கொண்டு மாய்வார்!
கோவென எம்மை ஆளும்
செம்மொழித் தாயே வாழி!

கல்வி ஒளி ஏற்றுங்கள்
***************************
முப்பாட்டன் முது கொடிந்து
மூர்ச்சடைத்து நின்ற தினால்
எம்பாட்டன் எழுந் திருக்க
இயலாமல் விழுந்து போனான்!

எம்பாட்டன் எழுந்திருக்க
இயலாமல் போனதாலே
எங்கப்பன் முயலவில்லை
என் வாழ்க்கை அழிந்தது போச்சே!

யார்மீது குற்ற மென்று
இயம்புவேன் இந்த நாட்டில்?
தப்பான ஆட்களெல்லாம்
தாம் வாழ்வார் ஊரின் மேட்டில்!

நிலமுண்டு நீருமுண்டு
நித்திலமும் கிடைப்பதுண்டு
மலையுண்டு ஆறுமுண்டு
மண்வளம் மழையுமுண்டு;

மாறாதப் பழைமை ஆட்கள்
மனங்களைத் திரித்து வைத்தார்
மதமென்றுஞ் சாதியென்றும்
மக்களைப்பிரித்துவைத்தார்.

மண்ணோடுப் பிறந்தயினத்தை
மதியினை இழக்க வைத்தார்
மாமாங்கம் பலகடந்தும்
மாடெனப் பழக்கி வைத்தார்.

உறங்கிட இடமுமில்லை
உண்டிடச் சோறுமில்லை
பரங்கியர் போகவில்லை
பாரதம் மாறவில்லை.

செத்தாலும் பிணங்கள் போக
சீரான வழியுமில்லை
இத்தேசம் வாழ்வதற்கு
உத்தேசம் ஏதுமில்லை.

கல்வியில் தீட்டு என்றான்
களவுக்கு நீட்டு என்றான்
பொல்லாத வாழ்க்கையாச்சு
பொழுதெலாம் வீணாய்ப் போச்சு

நம்பியஜனங்கள் எல்லாம்
நாசமாய்ப் போனதிங்கே;
துணைவரும் கல்விஎன்று
தோழனே ஊது சங்கே!

ஒரு வேப்ப மரத்தின் சிரிப்பு
*********************************
இலை துளிர்காலம்
வசந்தகாலம்….
வனப்பில் துள்ளின
வேப்பிலை இலைகள்
பசேலென….

அந்த சாலை ஓரத்தில்
கம்பீரமாக….
மழை வரும்போதுகூட
அறியாமையில்
அண்டிச்செல்லும் மனிதர்கள்!

கோடை வெயிலென்றால்
குடும்பமே நடத்துகின்றார்!

ஒரு இலை நிழலுக்கு
ஒரு மனிதனென
சுகமென புகழும்
புகழுரைகள்!

எறும்புகளின்
எகத்தாளங்கள்
கன்று காளிகளின்
அண்டல்கள்!

சும்மா கிடைத்து விடும்
சுகபோகமென்ற
சோம்பேறிகளின்
சொர்க்கபுரியாகிறது
வேப்ப மர நிழல்!

ஓய்வை விரும்பி நின்றபோதும்
காமம் கொண்டுத் தழுவும்
காற்று;

காமக் காற்றின்
சுகம் உணரும்
சோம்பல் கூட்டம்!

உடலுக்கு நல்லதென
ஒய்யாரக்கூட்டம்;

கிளை அமர்ந்து
இல்லமாக்கும்
சின்னக் குருவிகள்!

இராக கீதமிசைத்து
எச்சமிட்டு
நாளை பறப்பதற்கான
ஆசுவாசம் கொள்ளும்
அடைக்கலம்!

சின்னக் குருவிகளின்
எச்சங்கள்
கனவுலகில் சஞ்சரிக்கும்
மரத்தடி மரண உறக்கக்காரர்களின்
திறந்த வாயில்…. !

உறக்கமற்ற சில
சோம்பேறிகளின்
காட்டுக்கூச்சல்….

எச்சமிட்ட சின்னக்குருவிகளை
வார்த்தை கல் கொண்டு
வீசி… விரட்டும் சோகம்!

முளைப்பதற்கு விதைபோடாதக் கூட்டம்;
உரிமை கொண்டாடி;
முளைப்பதற்கு விதைபோட்டக்
குருவியின் வாரிசுக்கு
அண்ட இடமின்றி
அடித்து விரட்டும் சோகம்!

உரிமைக்குக் குரல் கொடுக்கத் தெரியாத
சின்னக் குருவிகளின்
கூட்டம்!

யாரோ போட்ட விதையில்
சுகமாக குரட்டை விடும்
கூட்டம்;

சிரித்துக் கொள்வதைத் தவிர….
வேறென்ன செய்யும் மரம்?!

ஊர்தோறும் தமிழ்ச்சங்கம்
********************************
ஊர்தோறும் தமிழ்ச்சங்கம்
தோன்ற வேண்டும்;

உலகின் முதல் மொழிப்பெருமை
பேச வேண்டும்;

சங்கமது தமிழ் வளர
உழைக்க வேண்டும்

தன்மானம் தன்னினத்தை
வளர்க்க வேண்டும்;

தமிழ்நாட்டின் செல்வமெலாம் தமிழருக்கே

தடையின்றி சேருதற்கு
முயல வேண்டும்!

என் நாடு என் மக்கள்
உயர வேண்டும்;

என்ற நல்ல எண்ணமதை
வளர்க்க வேண்டும்;

பழந்தமிழர் பெருமையெலாம்
சொல்லிச் சொல்லி

பாரினிலே தமிழர் புகழ்
பரவ வேண்டும்!

ஊர்தோறும் தமிழ்சங்கம்
வளர்ந்து விட்டால்;

ஒண்ட வந்தக் கூட்டமெலாம்
ஓடிப் போகும்!

தேசபக்தி!
***************
இந்த மண்
இவர்களின் பிடியில்
சிக்கித் தவிக்க
விடுதலை என்னும்
வேடத்தைப் போட்டு விட்டனர்….

என்ன நடிப்பு!
தேச பக்தியாம்
ஒன்றுபட்ட தேசமாம்
வேற்றுமையில் ஒற்றுமையாம்;
நாம் அனைவரும்
ஒரு தாய் பிள்ளைகளாம்
அட… அட…. அடடா…..
என்னேவொருப் பித்தலாட்டம்!

தனக்கென ஒரு தனி சாதி
தனக்கென ஒரு தனி சமயம்
தனக்கென தனியாக சொத்து
தனக்கென உறவு!

எப்படி
நாமெல்லாம் ஒன்று?

இந்தியத் திருநாட்டை
ஏமாற்றுபவனெல்லாம்
எப்படி
தேசபக்தன்?

சாதியைப் பார்ப்பவன்
எப்படி
தேசபக்தன்?

ஒரு சமயத்தை
நேசிப்பவன்
எப்படி தேசபக்தன்?

நீ
ஒரு சாதியைச் சேர்ந்தவன்
என்று
உணருகின்றபோதே
பிற சாதிகளின்
எதிரியாகின்றாய்!

நீ
ஒரு சமயத்தை
தூக்கித் தாங்கிப் பிடிக்கும்போதே
மனித குலத்திற்கு
எதிரியாகின்றாய்!

ஏமாற்றும் பேர்வழிகள்,
பொய் வியாபாரம் செய்பவன்,
உழைத்து வியர்வை
சிந்தாதவன்,
சமய வேடமிட்டுச்
சாதி பார்ப்பவன்,
ஏழை பாழைகளை
அப்படியே இருக்க வைத்து
அவர்களின்
அறியாமையில்
குளிர் காய்பவன்,
எப்படித் தேசபக்தன்?

தேசம் என்றால்
என்னத் தெரியுமா?

உன் முப்பாட்டன்
உன் பாட்டன்
உங்கப்பன்
நீ
வியர்வையை
குருதியை
பிறர் வாழ
சிந்தியிருந்தால்
அவன்
தேச பக்தன்;
அதற்குப் பெயர்தான்
தேசபக்தி!

– பாங்கைத் தமிழன்

சக்தியின் கவிதைகள்

சக்தியின் கவிதைகள்




நிழல்கள்….!!!!
சில
நேரங்களில் நம்
நிழல்கள் கூட
நிஜங்களாகின்றன
மகனைப்
பின்தொடரும்
அப்பாவின் நிழல்கள்களால் ,

காதல் …..!!!!!
பேருந்தில்
ஜன்னல் ஓர
இருக்கை கிடைத்தவுடன்
பக்கத்திலேயே
அமர்ந்து பயணத்தை
தொடங்க ஆரம்பித்து விடுகிறது
அவனோடு எப்பொழுதோ
பயணமாகிய
பழைய நினைவுகள் ,

வெளிச்சம் …..!!!!!
இருட்டைப் பார்த்து
நீங்கள் ஏன் பயப்படுகிறீர்கள்
உங்கள்
கண்களில் தானே
அந்த இருட்டுக்கான ஒளி ஒளிந்திருக்கிறது,

அப்பா ……!!!!!
வரப்பு மோட்டில்
நின்று கொண்டு
பள்ளத்தில் தெரியும்
தன் நிழலை
உற்றுப் பார்க்கிறேன்
அப்பாவின் சாயலை ஒத்திருக்கிறது அந்த நிழல்

எதிர்கால கனவு…!!!!
கால் வீங்க
நின்று கொண்டு
பூக்களோடு பேசிக்கொண்டிருக்கும்
அப்பாவின் பாதங்களில் வடுவெனப்
பூத்திருக்கிறது
மகனின் எதிர்காலம் ,

வானம்…..!!!!
வானம்
எவ்வகை
வடிவமென்று கூறியவாறே வீட்டின்
ஜன்னல் வழியாக
எட்டிப் பார்க்கும்
சிறுமியின் கண்களுக்கு
வானம் செவ்வக வடிவமாக காட்சியளிக்கிறது,

தாய்மை மொழி ….!!!!!
தன் குழந்தைக்கு
நிலாவைக்காட்டி
சோறு ஊட்டிக்கொண்டிருக்கும்
தாயின் விரல்களில் பூத்திருக்கிறது
அன்பெனும் வாடாத தாய்மை பூ ,

கல்வி அறிவு…..!!!!
விடுமுறைக்காக
பூட்டப்பட்ட
பள்ளிக்கூடத்தின் ஜன்னல் கதவுகளை
அவ்வப்போது திறந்து பாருங்களேன்
பல கனவுகளோடு
மாணவர்களுக்காகவே காத்திருக்கும்
கரும்பலகையும் சுண்ணாம்புக் கட்டியும்,

குருவிக்கூடு ….!!!!
நீல வானத்தில்
பறந்து கொண்டிருக்கும் சிட்டுக்குருவிக்கு
அடைக்கலம் கொடுக்க
கட்டடச் சுவரில்
கூட்டை வரைந்து
கொண்டிருக்கும்
அப்பாவின் பாக்கெட்டில் சிறகில்லாமல்
வானத்தைத் தாண்டிப் பறந்து கொண்டிருக்கிறது
செல்போன் சிக்னல் தெரியும்,

மரியாதை…!!!!
வெத்தல
பாக்கு போட்டு
சிவந்த வாயுடன்
எப்பொழுதும்
வாயடித்துச் சண்டையிடும்
எங்க ஊரு அஞ்சல பாட்டி
புருஷன் பெயரை
மட்டும் சொல்லவே சொல்லாது
இம்முறையும்
கறைபல்லைக் காண்பித்தவாறே
இமைகளால் கண்களை மூடியவாறே
எனது ஆவலைப் பொய்யாக்கி
விட்டே சென்றுவிட்டாள் ..

மரணத்தின் கடைசி கனவு,
அதிகாலையில்
ஒரு கனவு
கனவில்
களவாடப்பட்டிருந்தது
அன்றைக்கான கடைசி நினைவு  ,

நிழலில்லாத
தன் உடலோடு
பிறர் உடலின் நிழலை
பொருத்திப்
பார்த்துக் கொண்டிருக்கிறது மனம்,

மனம் முழுவதும்
பெரும்
நாற்றமெடுக்க
வெளியில்
வீச தொடங்கியது
துர்நாற்றம்
மரணம் வாசலில் நிற்க ,

நீண்ட
நேரமாக வாசலில்
நின்றுகொண்டிருக்கும்
மரணத்தை
உள்ளே வரவழைத்து
பாயைப் போட்டுப்
படுக்கையை
விரித்துக் கொண்டிருந்தது  உடல்,

உடல்
முழுவதும் மழைத்துளியாக வியர்வைத்துளி
நேற்று
மண்வெட்டியோடு
கூலி வேலைக்குப் போன
கனவு நிழலாடிக்கொண்டிருக்க
வாசலில் கிடக்கிறது
அறுபட்ட ஒரு கால் செருப்பு ,

யாரோ
வரைந்த கனவுக்குள்
ஒளிந்துக்கொள்ள முற்படுகிறது உடல்
உடல் முழுவதும்
சல்லடையாக ஓட்டைகள்
ஓட்டையின் வழியாக ஒழுகும் உதிரம்,

கனவுகளைத்
திறந்து விட்டு
அவ்வப்போது திறந்து
திறந்து மூடிக் கொள்கிறது இமை மூடிய கண்கள்,

அந்தப் பருத்த கண்கள்
முழுவதும் நிறைய கனவுகள்
கனவுக்குள்
ஒளிந்துக்கொள்ள
மறுக்கிறது மனம்,

எல்லோரிடமும்
மணிக்கணக்கில் பேசிய
மனமெனும் வாய்
ஊமையாகவே ஊஞ்சலில்
ஆடிக் கொண்டிருக்கிறது
தள்ளி விட்டு
வேடிக்கை
பார்த்துக் கொண்டிருக்கிறது
மரணத்தின் நிழல்,

தன் நிழலையே
மரணத்தின் நிழலென்று
பார்த்துப் பயந்து போய் நிற்கிறது உடல்
கடைசி நினைவின் கனவோடு……..!!!!!

– கவிஞர் ச.சக்தி,
அழகு பெருமாள் குப்பம்,
பண்ருட்டி,
9791642986,

Thu Pa Parameshwari Poems 8 து.பா.பரமேஸ்வரியின் கவிதைகள் 8

து.பா.பரமேஸ்வரியின் கவிதைகள்




மனிதம் அற்ற மனிதா..
******************************
துயரத்திலும் துவண்டு போகாது
வாழ்க்கையை வெறுத்தொதுக்காது
வறுமையிலும் முகம்சுளிக்காது
ஏழ்மையிலும் தாழ்வுறாது

மனபாரத்திலும் புன்சிரிப்பு மாறாது
கயவர் மத்தியிலும் கடமை தவறாது
பெரும் தோல்வியிலும் மனம்தளராது
புகழ்ச்சிப் பெருக்கிலும் தன்நிலை மாறாது

துரோகியிடமும் காழ்ப்புணர்வு பாராது
துளைக்கும் முட்களிடத்தும் அகமலர்ச்சி இழக்காது
வெறுப்பவரிடத்தும் முகம் பூக்க மறவாது
கோபத்திலும் வன்சொல் வீசாது

வதைத்தவனிடத்தும் வன்மம் பாராது
மானபங்கத்திலும் கண்ணியம் தவறாது
வசவுகளையும் வரவேற்கத் தவறாது
சுடுசொல்லிலும் துளி நீர் சிந்தாது

பகைவரிடத்தும் நேசிக்க மறவாது
பட்டினியிலும் பசிமுகம் காண பொறுக்காது
வாழ்வின் விளிம்பிலும் மரணத்தை நோக்காது
போட்டியிலும் பொறாமை பாராது

கொடுஞ்சுழலிலும் பிரிதுயிர் வாட பொறுக்காது
எச்சூழலிலும் பிறர் மனம் புண்படுத்தாது…
….வாழும் மனிதமே மனிதம்..

மனிதம் என்பது ..
தமக்குட்பட்ட
தமக்கேற்ற
தமக்கானவாறு
தம்மனத்திற்கான
தம்சூழல்பாதிப்பற்ற போக்கில்
கடந்தும் கடமையல்ல..

பிறர் நோக தம் உயிர்நொந்திடும்
நிலையே மனிதம்..

மனிதம்..
மனிதமனத்தின்மீதமல்ல
மனிதவாழ்வின் மார்க்கம்..

மனிதம் கொண்ட மனிதனாய்
வாழ்கிறோமா..
விடைதெரியா மானுடமாய்
நிற்கிறோம்
வெறும் மனிதம் கண்ட
இதழ் சுமக்கும் மரமாய்..

உடைந்து போகாதே..
***************************
இது இலையுதிர் காலம்…
இயற்கையின் சோதனை..
பெரும் வேதனை

காய்ந்தும் சுருண்டும்
நொடிந்தும் ஒடிந்தும்
ஊடாடும் விருட்சம்..

பசுமை தொலைத்த கிளைகள்
காய்ந்து சருகாகிய இலைகள்..
காலத்தின் கைங்கயர்யம்
பருவத்தின் பகிர்ந்தளிப்பு..

ஆட்டமும் பாட்டமும்
மேய்தலும் மெருகேறலும்
நிலையற்றது சுழற்சியில்..

வருந்தியும் வாடியும்
வருத்தியும் வதங்கியும்
உயிர் மட்டும்
ஒட்டியிருக்கும் பட்டமரம்..

வாழ்க்கையெனும் இந்த ஓடம்
வழங்கும் அனுகணமும் பாடம்.

மேலிருப்பதைக் கீழும்
கீழுள்ளதை மேலும்
நொந்தவரைத் தூக்கியும்
உயர்ந்தவரை நொடித்தும்
திருப்பிப் போடும்
திருப்புமுனை.

மரத்தின் பெருமாண்பும்
மனிதனின் பேரிறுமாப்பும்
வேறுபடும் துன்ப காலங்களில்

பசுமையில் பல் இளிக்காது
பெருவறட்சியிலும் பரிதவிக்காது
மன சமநிலைக் குன்றாது
மகத்துவத்தை‌ உணர்த்தும் மரம்
அமைதியின் மேன்மைக்கான பாடம்

வாழ்க்கைப் போர்க்களத்தை
எதிர்கொள்ளும் ‌குணமே
சோதனையிலும் வேதனையிலும்
சோர்ந்து போகா மனமே..
சாதனையை நோக்கி நடைபோடும் தினமே..

பெருங்காற்றாய்‌ நீ
**********************
பெருங்காற்றாய் உன் மொழி
சிறு பறவையாய் என்‌செவி
சில நேரம் ஏற்கிறேன்
பல நேரம் தவிக்கிறேன்..
உன் விழி எனையாள
குளிர்கிறேன்..
உன்‌மொழி
எனைக் கொல்ல
மாள்கிறேன்..
உன்…
மொழியோ விழியோ
மௌனித்தே கிடக்கும்
பல சமயங்களில்..
என்..
உடலோ மனமோ
புரியாமல் பிதற்றும்
அநேகவிடங்களில்..
இவ்விரண்டிற்கும் மத்தியில்
நமது பெரும் பனிப்போர்..

வானமகளின் பரிணாமம்
*******************************
அந்திப்பொழுதின்
பொன்னிற மேனியவள்..
அடர் மஞ்சள் சேலையுடுத்தி
வெளிர் நீல ரவிக்கைச் சுற்றி
கண்கூசும் மின்னல் கீற்றிழுக்க
கற்றை கற்றையாய்
சுருண்டு விழுந்த
கார்மேகக் கூந்தல்
மார்பை அணைத்திட
தென்றல் வீச
கரமேந்திய  முந்தி
கவிதை பேச
சட்டென…
பறவைகளின் எச்சம் பட ..
சேலை சிவக்க
சிவந்த சேலையின் சாயம்
மங்கை முகம்  படர்ந்தொளிர
தகிக்கிறாள் பாவை
ரோஜா கூட்டமாய்

சற்றே தாமதம்
எட்ட நின்ற
நட்சத்திரங்களைத் தட்டிப் பறித்து
வான் விட்டம் மின்னிய
விண்மீன்களைப் பற்றியிழுத்து
இருபுறமும் ஒருபுறமாய்
மேலிழுத்தும்
கீழிழுத்தும்
இடமென்றும்
வலமென்றும்
முன்னொன்றும்
பின்னொன்றுமாய்
விரவியமைத்தவள்..
வண்ணமலர்களாய்..

சுற்றியே பார்க்க..
சற்றே திரும்பியவள்
சுத்தியே நின்றாள்
கருவண்ண காரிகையாய்..

அப்போதே வந்த
பால் வண்ண‌ வேந்தன்
இருகரம் ஏந்தி
இறுமாப்பாய் நிற்க..

அண்ணலும் நோக்க
அவளும் நோக்கினாள்..
அன்ன நடைபயில
தென்றலிடை தவழ
இருள் கொண்டு
விழியுண்டு
மருவினாள் கருவாச்சி..

விண்ணவனும் வானவளும்
கைகூடி கரம் பற்ற
தடாகத்தினின்று ஏங்கியேத்
வெளிரிப் போனாள் அல்லி மகள்..

கர்வம் கூடி தலைக்கனம் பூண
மதி மீது மதி மயங்கினாள்
கரு மங்கையவள்….

விழியின் மொழி
***********************
என் விழிகள்
எனைக் காட்டிலும்
உனக்கு அதீத பரிச்சயம்.

என் விழிகள்
எனைக் காட்டிலும்
உனக்கு‌‌ அதிக பிடித்தம்.

என் விழிகள்
எனைச் சுற்றிலும்
உனைச் சுற்றின பெரும்பாலும்

என் விழிகள்
எனைக் காட்டிலும்
உனை நோக்கின எப்போதும்

என் விழிகள்
எனைக் காட்டிலும்
உனைத் தேடின முப்போதும்

என் விழிகள்
எனைக் காட்டிலும்
உனைக் கொண்டன அவ்வப்போது

என்‌ விழிகள்
எனைக் காட்டிலும்
உனை உண்டன முப்பொழுதிலும்

இத்தனையும்‌ பருகத் தந்த
பேரன்பின் நிமித்தம்..
எனதழகிய விழிகள்..
எப்போதும் நீ….
வெறுமை
கண்ணீர்
ரணம்
ஏக்கம்
ஏமாற்றம்
மட்டுமே ‌பருகத் தருகிறாய்..

விழியில் விழந்தெழுந்த நீ
சென்று விடுகிறாய் வெகு இயல்பாய்.
பரிசாக கணத்தை ‌விட்டு‌விட்டு

பாவம்
செய்வதறியாது..
ஒன்றுமற்றுக் கிடக்கின்றன விழிகள்..