கற்றல் என்பது யாதெனில் – கல்வி 4.o
ஆயுஷா இரா. நடராசன்,
பாரதி புத்தாலயம்
விலை: ரூ. 270.00
புத்தகம் வாங்க கிளிக் செய்க: கற்றல் என்பது யாதெனில் – கல்வி 4.0
சமூகச் செயல்பாட்டாளர்கள் & ஆசிரியர் சமூகத்திற்கு வரும் நூற்றாண்டிற்கான செயல்திட்டம்
“நான்காம் தொழிற்புரட்சியின் விளிம்பில் நாம் நிற்கிறோம்” இந்த செய்தி எத்தனை பேர் கவனத்தில் வந்து சேர்ந்தது. சேர்ந்தாலும் அதற்கு நம்மை, நமது சமூகத்தை தயார்படுத்த என்ன செய்யப் போகிறோம் என்பதை யோசிக்க வைத்துள்ளது என்பதுதான் கேள்வி..
இந்த நான்காம் தொழிற்புரட்சி கடந்த மூன்று தொழிற்புரட்சி போலல்லாமல் பல மாற்றங்களை பெரிய அளவில் பெரிய வீச்சில் அமையும் என்கிறார்கள் அறிஞர்கள்.
கல்வி பற்றி பேச வந்துவிட்டு தொழிற்புரட்சிப் பற்றி ஏன் நாம் பேச வேண்டும்? இன்று கல்விப் பற்றி பேசும் பலர் தொழிற்புரட்சிக்கும் கல்வி முறைக்குமான தொடர்பை விவாதிப்பதே இல்லை. சமூகத்திலிருந்தும் உலகத்திடமிருந்தும் பிரிக்க முடியாத செயல்பாடு கல்வி என்பதை முழுமையாக விவாதிப்பதே இந்தப் புத்தகம்.
“நமது கல்வி கடந்து வந்த பாதையை நாம் அறிதல் எந்த அளவிற்கு அவசியமோ அதே அளவிற்கு – கல்வி எதை நோக்கி பயணிக்கிறது என்பதை அறிவதும் அதற்காக நம் சமூகத்தை தயார்படுதுவதும் அவசியம். உண்மையான ஆசிரியன் உலகத்தை உற்று நோக்குவதை நிறுத்துவதே இல்லை.” – கியூபா அதிபர் மிகுயேல் டையாஸ் – கேனல்
அனைவருக்கும் தரமான, சமமான அடிப்படைக் கல்விக்காக நாம் செயலாற்றிக் கொண்டிருக்கும் போது டிஜிட்டல் உலகில் செயற்கை நுண்ணறிவுடன் (( Artificial Intelligence) நடைபெறும் இந்த மாற்றத்திற்கு தயார்படுத்த வேண்டியதுதான் கல்வி- 4.o இன்றைய கல்வி முறையினை முழுமையாக புரிந்து கொள்ளவும் கல்வி- 4.o உருவாக்கிடவும் அழைக்கிறது. இந்தப் புத்தகம்.
ஒரு புத்தகத்தைப் படிக்கும் போது பல புதிய எண்ணங்கள் பளிச்சிட வேண்டும், நமது வாழ்வை புதிய பாதையில் பயணிக்க வெளிச்சமிட வேண்டும். ஆனால், இந்தப் புத்தகம் நமக்கானது மட்டுமல்ல நமது அடுத்த தலை முறையினருக்கும் அடுத்த யுகத்திற்குமானது. கற்பனைக்கு எட்டா மாற்றங்களை எதிர்கொள்ள அழைக்கிறது இந்தப் புத்தகம்.
பெரும்தரவுகளையும் (Big data’s) செயற்கை நுண்ணறிவையும் கொண்டு இயக்கும் திறம் கொண்ட இயற்கை நுண்ணறிவைப் பெற மக்களைத் தகவமைக்க வேண்டும். இது வகுப்பறையில் முறைசார் கல்விக்கு அப்பால் கற்றல் தொடர வேண்டியதை வலியுறுத்துகிறது. முறைசாரா கல்விக்குக்கும் முன்மொழிகிறது.
இது தனிமனித இலக்கல்ல, சமூகத்திற்கான திசைவழி.
வரும் ஆண்டுகளுக்கானதல்ல வரும் நூற்றாண்டுகளுக்கானது
ஆசிரியருக்கானது மட்டுமல்ல ஒட்டு மொத்த சமூக செயற்பாட்டாளர்களுக்கானது
இது அசைவு அல்ல …. அசல் செயல்திட்டம்.
கல்வி , அறிவியலில் மற்றும் பிற பொருட்களில் பல புத்தகங்களை படைத்தவர் இதன் ஆசிரியர் திரு இரா. நடராசன் அவர்கள். இவரது புத்தகங்களை வாசித்து பிரமித்துப் போன நமக்கு இவைகளை எல்லாம் விட ஒரு பிரமிப்பான புத்தகம் தர வேண்டும் எனும் சவாலுடன் இந்தப் புத்தகம் எழுதப்பட்டிருக்க வேண்டும். இந்தப் புத்தகம் திரு இரா. நடராசன் அவர்களின் வாழ்நாள் சாதனை. நம்மோடு வாழ்ந்து கொண்டே இவரால் மட்டும் எப்படி அடுத்த யுகத்திற்கு தாவ முடிந்தது.?
இவைகள் கற்பனைகள் அல்ல. எத்தனைப் புத்தகங்களில் தேனெடுத்து இந்தத் தேன் கூட்டினை கட்டியுள்ளார். அவர் கொடுத்துள்ள தரவுகளையும் துணை நின்ற புத்தகங்களையும் ஒரு முறை புரட்டுவதற்கே நமது வாழ்நாள் கடந்துவிடும். அவரது சீரிய முயற்சிக்கு இந்த சமூகம் அவருக்கு மிகவும் கடமைபட்டுள்ளது. தலை வணங்குகிறது.
அவரது முயற்சியினை பாராட்டும் ஒவ்வொருவரும் இந்த புத்தகத்தை முழுமையாக கற்க வேண்டும். வாய்ப்புள்ளவர்கள் அவர் குறிப்பிடும் புத்தகங்களையும் தரவுகளையும் தேடிப் பிடித்து படிக்க வேண்டும். இந்தப் புத்தகமும் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து படித்து படித்து நமது புரிதல் நிலையினை மேம்படுத்த வேண்டிய தேவையுள்ளது.
இந்தப் புத்தகம் அனைத்து ஆசிரியரிடமும், சமூக செயல்பாட்டாளர்களிடமும் இருக்க வேண்டும். அவர்களின் கடமைகளை மறுவரைவு செய்ய உதவிடும்.
புத்தகம் முழுவதும் ஏராளமான எண்ணச் சிதறல்கள்.. அனைத்தினையும் உள்வாங்கி அசைபோட வேண்டியது அவசியம். அவரது விதைப்புகள் சிலவற்றை இனி பார்ப்போம்.
“அவர்கள் நிலா பார்த்து சாப்பிடவில்லை
அம்மா செல் பார்த்து சாப்பிட்டு வளர்ந்த்தார்கள்”
இப்படி வளர்ந்தவர்களுக்கான டிஜிட்டல் வகுப்பிற்கு இன்றைய கல்விமுறை மாறவேண்டும். ஆசிரியர்களும் அதற்கு தயாராக வேண்டும். இருபத்தி ஓராம் நூற்றாண்டில் கல்வி எப்படி இருக்க வேண்டும். அதன் நோக்கம் என்னவாக இருக்க வேண்டும் என்ற “ கற்றல்: உள்ளார்ந்த புதையல்” எனும் ஜாக்குஸ் டீலர் அறிக்கையில் நான்கு தூண்களைச் சுட்டுகிறது.
- அறிந்து கொள்ளக் கற்றல் ( Learning to Know )
- செயல்படக் கற்றல் (Learning to do )
- இணைந்து வாழக் கற்றல் (Learning to live together )
- உய்வித்திருக்கக் கற்றல் (Learning to be)
கல்வியின் நோக்கம் செயல் என்பதைச் சாதித்ததுதான் தொழிற்புரட்சி. எனவே, தொழிற்புரட்சி மையக் கல்வி பற்றி நாம் அறியும் தருணம் வந்து விட்டது. கல்வி- 4.o இன் ஆன்மாவும் அதில்தான் உள்ளது.
“ ஒவ்வொரு தொழிற்புரட்சியும் தன் கூடவே ஒரு கற்றல் புரட்சியையும் கொண்டதாக இருக்கிறது.” ஸ்பேனிய கல்வியாளர் அலெக்சாந்தர் டி கிரேட்
“அறிவியல்- தொழில் நுட்பத்தின் பார்வையில் கற்றல் என்றால் – ஒரு ஒட்டுமொத்த சமூகத்தையே ஒரு பெரிய கருவியாக மாற்றுதல் ஆகும். ஒவ்வொருவரும் ஒரு உதிரிப் பாகமாக அதன் இயக்கத்தில் பங்கு பெறுதல்” ஜோய், இட்டோ, இயக்குனர், எம்.ஐ.டி ஆய்வகம்
அறிவியல் பார்வையில் இன்றைய கல்வி முறையினை முழுமையாக அலசுகிறது. மூளைக் கல்வி அறிவை எய்திட எய்திட அவரின் நடத்தை அணுகு முறை அனைத்தும் மாறுகிறது.
நடப்பது மூளை வளர்ச்சியா? அல்லது மூளைச் சலவையா?
கல்வி என்பதே ஆளும் வர்க்கம் தனக்கு சாதகமான பிரஜைகளை வடிவமைக்க நடத்தும் நாடகம் தானே?
எல்லையற்ற கற்றல், சுவர்களற்ற வகுப்பறை, உலகம் திறந்து கிடக்கிறது, கதவுகளைத் திறந்து வெளியே வாருங்கள். நமக்கான கற்றல் உலகம் காத்திருக்கிறது. உங்களுக்கு விடுதலை. இதுதான முறைசாராக் கல்வி.
உணர்தல், புலனுணர்வு, தொடர்பு படுத்தல், நினைவாற்றல், கற்பனைத் திறன், பாகுபடுத்தல், சீர்தூக்கிப் பார்த்தல் இவற்றோடு பகுத்தறிவும் இணைதலே நுண்ணறிவு ஆற்றல் எனப்படுகிறது.
நுண்ணறிவு பெரும்பாலும் சுயதேடல், தன்வயப்படும் விருப்ப வேலைகள் மூலமே வளர்ச்சிப் பெறுகிறது.
கல்வியில் இன்றைக்கு முறையாக போதிக்கப்படும் பாடங்கள் பல முறைசாரா கல்வி ஜாம்பாவான்கள் வழங்கியது.தான். சீரான கல்வி சாதிக்காத்தை சுயசிந்தனை தேடல் மூலம் அவர்கள் சாதித்தனர்.
ஆன்டனி ஷெல்டன்
The contemporary History –Hand Book
“எனக்குத்தான் தெரியும் பள்ளிகூடம் போனேன். ஆனால், யாருக்குமே நான் மாணவியாக இருந்த்து கிடையாது” அகதா கிருஸ்டி, நாவலாசிரியை
நமது மண்ணின் அறிவுத்திறனின் அடையாள மாந்தர்களது முறைசாரா வகுப்பறையில் நுழைந்து நுண்ணறிவு வளர்க்கப்பட்டதை அறிந்து கொள்ளலாம்.
முறைசாரா கல்வி மூலம் உச்சம் தொட்டவர்கள் சுந்தர்பிச்சை, விஸ்வநாதன் ஆனந்த்,சகுந்தலா தேவி, நோபல் அறிஞர் அமிர்தியா சென், ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரகுமான், ஜி.டி.நாயுடு இவர்களின் நுண்ணறிவுப் பெற்ற வரலாறு நினவுக் கூறத்தக்கது. இவர்கள் முறையான வகுப்பறைக் கல்வியைப் பெற்றத்தில்லை அல்லது கற்ற கல்வியில் இவர்களின் நிபுணத்துவம் அடையவில்லை.

கல்வி 4.o என்பது என்ன?
மனிதர்களும் கணினிகளும் சேர்ந்து ஒத்துழைக்கும் ஒரு செயல்பாடாக கல்வி மாறிவிடும் என்றே தோன்றுகிறது. நம் காலத்தில் காகிதம் நோட்டு பேனா எல்லாமே கணினியாக இருக்கப் போகிறது.
டேவிட் வார்லிக் , கணினி கல்வி அறிஞர்
செயற்கை நுண்ணறிவு கல்விப் புராட்சியைத் தான் கல்வி 4.0 என அழைக்கிறார்கள். நான்காம் தொழிற்புரட்சி கால வேலை ப்பணி இடங்களில் வேலை கிடைத்து சேர்ந்த்திட என்னென்ன திறன்கள் தேவையோ அவற்றை வழங்கிட தகுந்த கல்விக்குத்தான் 4.0 என்ற பொதுப் பெயர் தரப்பட்டுள்ளது. அவை, படைப்பாற்றல், சமூகவியல் நுண்ணறிவு , இயல்திறன், தொகுப்பு நுண்ணறிவு மற்றும் ஏனைய நுண் அளவீடுகள் எனலாம்.
கல்வி 4.0 வும் தொழில்நுட்பமும்
சமூகத்தை தொழில்நுட்ப மயம் ஆக்காமல் நாம் நான்காம் தொழிற்புரட்சியை கொண்டு செல்ல இயலாது. அதற்கு நாம் சமூகத்தையே கற்றல் நடவடிக்கையில் ஈடுபடுத்த வேண்டி இருக்கிறது.
ராபர்ட் ஜெ.ஷிலர், யேல் பல்கலைக்கழகம்
ஆன்லைன் கல்வி கோட்பாடுகள்:
சாதாரண வகுப்பரை கற்றலின் அதே அம்சங்கள் பாடப் பொருள், பாட அச்சாக்கம் அப்ப்படியே இணைய வழி நடத்துவதற்கு பெயர் கல்வி 4.0 அல்ல.
இணையத்தில் கிடைக்கும் செயற்கை நுண்ணறிவு , டிஜிட்டல் மயமானப் பாடப்பொருள் இவை பயன்படுத்தப்பட்டு பாடங்கள் நடப்பவைதான் இணையக் கல்வி என்று அழைக்கமுடியும்.
பிலிப் ரெஜ்யர், டீன் ஏ.எஸ். யு ஆன் லைன்
ஒரு மாணவர் கல்வி கற்க தூண்டுதலாகிருப்பவை என உளவியலாளர்கள் குறிப்பிடுவது :
மாணாவரின் கற்றல் சூழல்
மாணவரின் ஆர்வம் மற்றும் உணர்வுகள்
சமூக சக்திகள்
உடலியல் ஒத்துழைப்பு
உளவியல் ஆரோக்கியம்
இவைகள் கல்வி 4.0 க்கும் பொருந்தும்.
“இ” கற்றல் கோட்பாடுகளை உற்று கவனித்து ஆய்வு செய்பவர்கள் கற்றல் தொழில்நுடப வாதிகள் (Education technologist).
இவர்கள் கற்றல் செயல்பாடுகளை உற்று நோக்கி ,பதிவு செய்து பகுத்தாய்வு செய்து, தகவமைத்து உருவாக்கி,அமல்படுத்தி, மேம்படுத்துவர்.
சமத்துவக் கல்விக்கு மாற்றாக இந்த கல்வி 4.0 அமையுமா?
உலக அளவில் டிஜிடல் ஆசிரியர் பயிற்சி எப்படி இருக்கிறது? நம் இந்தியா அதை எப்படி எதிர்கொள்ளப் போகிறது ? இதுவே நம் முன் மிச்சமிருக்கும் கேள்வி.
கல்வி 4.o வும் டிஜிடல் பள்ளியும்
கல்வி 4.o வும் இந்தியக் கல்வியும்
கல்வி 4.o வும் குழந்தைகள் நலனும்
என்ற தலைப்புகளில் முழுமையாக மூழ்க வைகிறார்.
அனைவருக்கும் ஒரே சீரான தரமான பொதுப் பள்ளிகள் என்பது நமது நீண்டநாள் கனவு. இந்தக் கனவினை எட்ட விடாமல் இந்தியக் கல்வி முறண்கள் உள்ளன.
- 1. விலைக்கு கல்வி Vs விலையில்லாக் கல்வி
2. பள்ளிக் கல்வி Vs நுழைவுத் தேர்வு பயிற்சி
3. மதிப்பெண்கள் Vs திறன்கள்
4. உள்ளூர் அறிவு Vs உலக அறிவு
5. கும்பலாக்க் கற்றல் Vs தனிக்கவனக் கற்றல்
6. மாநிலக் கல்வி Vs சர்வதேசக் கல்வி
7. மனப்பாடல்கல்வி Vs புரிந்து படிக்கும் கல்வி
8. வயது அடிப்படைகல்வி Vs சுதந்திரக் கற்றல்
9. அனைத்துப்பாட தேர்ச்சி Vs ஒரு துறை நிபுணத்துவம்
10. பாடப் புத்தகம் Vs பொது வாசிப்பு
நான்காம் தொழிற்புரட்சியின் அங்கமாகக் கருதப்படும் கல்வி 4.0 என்பது பள்ளிக் கூடமோ ஆசிரியர்களோ தேவைபடாத வகைக் கல்வி அல்ல .ஆனால், கல்வி முறையின் முக்கிய அடித்தளமாக இணைய தொழிற்நுட்பத்தையும் செயற்கை நுண்ணறிவையும் இணைக்கும் கல்வியின் புதிய அவதாரம் ஆகும். டிஜ்டல் சந்ததியின் நாளைய சாதனைகளுக்கு ஏற்றார் போல அவர்களை செதுக்கிட உதவும் சூழல்களைக் கொண்ட நவீன என்பதே கல்வி 4.0.
இணைய வழி கற்றல் – கணினிமயக் கற்றல் என்பதை கல்வி 4.0 இந்தப் பள்ளிகளுக்குள் நடக்கும் உலகக் கல்வியாகவே முன் மொழிகிறது. அது,
தமிழக, இந்திய அரசின் மக்கள் நலக் கல்வியாக அனைத்து வகை குழந்தைகளையும் சென்றடைய அவர்கள் யாவருக்கும் விலையின்றி அதற்கான உபகரணங்களை வழங்கி இணைய வசதியோடு 21 ஆம் நூற்றாண்டு கல்விச் சேவையாக அறிமுகமாக வேண்டும் என்பதே நமது நிலபாடு. அதை, அவசரமாக, அரசு கையில் எடுக்கவில்லையெனில் பெரிய கார்பரேட்டுகளின் மூலதனமாகி கல்வி வர்த்தக வலையில் வீழ்ந்து விடும்.
நவீன யுகத்தை நோக்கிய கல்வியாக, நான்காவது தொழிற்புரட்சி சார்ந்த கல்வி 4.0 சிறப்பாகச் செயல்பட நாம் மூன்று விஷயங்களை விட்டுக் கொடுக்கவே முடியாது.
- 1. கல்வி எப்போதும் மாநிலப் பட்டியலில்தான் இருக்க வேண்டும்
2. அனைவருக்கும் விலையில்லா இ-கற்றல் எனும் புதிய அரசு – கல்விக் கொள்கை எட்டப் பட வேண்டும்
3. உலகக் கல்வித் தேவை. அது தாய் மொழியில் உருவாக்கிட வேண்டும்.
இவைகளை சாத்தியப்படுத்திட இந்தச் சமூகமே திரண்டெழ வேண்டும். சமூகச் செயல்பாட்டாளர்களும் ஆசிரியர் சமூகமும் ஒன்றிணைந்து அந்தச் செயல்திட்டத்தை உருவக்கியே தீர வேண்டும். அதற்கு இந்தப் புத்தகம் வழிகாட்டி நூலாக உதவிடும்.