அரசும் புரட்சியும் – எஸ்.வி.ராஜதுரை
அத்தியாயம் 32: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி
கட்டுரை: உலகை உலுக்கும் தனியார் ராணுவ கூலிப்படைகள்- அ.பாக்கியம்
அத்தியாயம் 8 : பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி
நூல் அறிமுகம்: மிக்கெயில் ஜாஷ்சென்கோவின் ‘குழந்தைகளுக்கு லெனின் கதை’ தமிழில்: ஆதி வள்ளியப்பன் – அமுதன் தேவேந்திரன்
நூல் : குழந்தைகளுக்கு லெனின் கதை
ஆசிரியர் : மிக்கெயில் ஜாஷ்சென்கோ
தமிழில்: ஆதி வள்ளியப்பன்
விலை : ரூ.₹50/-
வெளியீடு : புக்ஸ் ஃபார் சில்ரன்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
bharathiputhakalayam@gmail.com
சோவியத் ரஷ்யா அளித்த மிகப்பெரிய கொடைகளில் ஒன்று தான் புத்தகங்கள் அதுவும் மொழிபெயர்ப்பு நாவல்கள் எத்தனையோ எண்பதுகளில் வந்த காலகட்டத்தில் பல புத்தகங்கள் இன்னும் கிடைக்காமல் இருப்பது நமது துரதிஷ்டவசமே..
லெனின் பற்றிய வாழ்க்கை குறிப்புகள் தத்துவங்கள் வாசித்து இருப்பினும் ஒரு சிறு புத்தகத்தின் மூலம் குழந்தைகளுக்கான அற்புதமான லெனின் காண்பிக்கிறார் இந் நூலின் ஆசிரியர் ஒரு மொழிபெயர்ப்பு நூலை வாசிப்பது போன்ற கடினமாக இல்லாமல் எளிய நடையில் மிகவும் பிரமாதமாக மொழிபெயர்த்திருக்கிறார் ஆதி வள்ளியப்பன்.
லெனின் மிகச்சிறந்த போராளி படிப்பாளி மாணவ பருவத்திலிருந்தே படிப்பில் கெட்டிக்காரராக இருந்திருப்பது அவரது அறிவுக்குர்மையை பறைசாற்றுகிறது.
புத்தகத்தில் கூறியிருப்பது போல உலகின் நலம் நாடுகிற,ஏற்றத்தாழ்வு அற்ற ஒரு சமூகத்தைக் கனவு காண்கிற அனைவரின் இதயத்திலும் என்றென்றும் நிலைபெற்றிருக்கும் மாபெரும் தலைவர் லெனின் பற்றிய சின்னஞ்சிறு நூலில் பேரதிசயங்கள் காத்திருக்கின்றன ஒரு முறை வாசித்து விடுங்கள் தோழர்களே நண்பர்களே. ..
எட்டு வயதில் நடைபெற்ற ஒரு சம்பவத்திற்கு தான் பொய் சொல்லி விட்டோமே என்று எண்ணி இரண்டு மாதங்கள் கழித்து தனது மனதை அரித்த அந்த நிகழ்ச்சியை நினைத்து மனம் எண்ணி துன்பப்பட்ட அந்த சிறுவன் நினைக்கும் போது. .. ஆச்சரியம் கொள்ள தான் செய்கிறது. ..
புரட்சி வேலைகளில் ஈடுபட்டதன் காரணமாக பள்ளிப்படிப்பை பாதிலேயே நிறுத்த முடிவு செய்த பல்கலைக்கழகத்திற்கு சவாலாக பல்கலைக்கழகத்தின் பாடங்களை நேரில் சென்று படிக்காமலேயே வீட்டில் இருந்து தனது பள்ளி படிப்பை முடித்து முதல் மாணவனாக வந்த லெனின் மிகச்சிறந்த படிப்பாளி என்பதை பல்கலைக்கழகமே பாராட்டி சான்றிதழ் கொடுத்திருப்பது அன்றைய பேராசிரியர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது…
நரியை வேட்டையாட வாய்ப்பு கிடைத்தும் நரியின் அழகையும், உயிரையும் மதித்து மனிதநேயத்துடன் நடந்து கொண்ட அந்த லெனின் எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
எத்தனையோ தலைவர்கள் சொற்பொழிவு செய்ய வரும் போது அனைவருக்கும் தெரிந்திருக்கும் இவர் தான் தலைவர் என்று ஆனால் கூட்டத்தில் ஒருவராக வந்து ஒரு தொழிலாளியின் அருகிலேயே அமர்ந்து பேசும்போது மட்டுமே தான் தலைவர் என்று தெரிந்த பின் அந்த சின்னஞ்சிறு குழந்தைக்கு பொம்மை வாங்கி கொடுத்த லெனின் குழந்தைகளின் மனதை குழந்தைக்கான உலகத்தை புரிந்து கொண்டு மாபெரும் தலைவர் என்ற மமதை கொஞ்சம் கூட இல்லாமல் ஒரு குழந்தை மனம் படைத்த அந்த லெனின் கண்டு தொழிலாளர் மட்டுமல்ல வாசிக்கும் நாமும் வியப்புக்கு உள்ளாகுவோம்.
கண அடுப்பை தயாரிக்கும் தொழிலாளரிடம் மரியாதையாக நடத்தும் பாங்கு ஒரு தோழனுக்கு உரியதாகும்.
முன்னரே பதிவிட்ட மீனவ தலைவரிடம் நடத்தப்படும் உரையாடலும் மீனவ தலைவர் கொண்டுவரும் மீனை வாங்கிக் கொள்ளாமல் மிகக் கடுமையான பஞ்சத்தில் மக்கள் வாழ்கின்ற போது தலைவனுக்கு மட்டும் உன்ன ஏன் மீன் அந்த மீனை பஞ்சத்தில் பாதிக்கப்பட்டிருக்கும் என் மக்களுக்கு கொடுங்கள் என்று சொன்ன மாமேதை தான் லெனின். ..
இவர்தான் புரட்சியின் தலைவர் லெனின் என்று தனது இறுதி கட்டுரையை முடித்துக் கொள்கிறார்.
நாம் லெனினை பற்றிய பல புத்தகங்கள் வாசித்திருப்பினும் நவம்பர் புரட்சி நூற்றாண்டை ஒட்டி சிறார் நூல் வரிசையில் ‘குழந்தைகளுக்கு லெனின் கதை’ சிறுவர் நூல் வரிசையில் இருப்பினும் அனைத்து பெரியவர்களும் வாசிக்க வேண்டிய மிக அற்புதமான படைப்புதான் இந்த புத்தகம் மிகச்சிறந்த முறையில் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் ஆதி வள்ளியப்பன் மற்றும் விக்டர் கிரிலோவின் ஓவியங்கள் வெகு சிறப்பாக இருக்கின்றன.
இதைப்போன்ற படத்துடன் கூடிய புத்தகங்களை வாசிக்கும் போது நம் மனநிலை ரஷ்யாவுக்கே செல்வதை போல இருக்கிறது.
மிக்கெயில் ஜாஷ்சென்கோ எளிய நடையில் அனைத்து தரப்பு மக்களுக்கும் லெனினின் வாழ்க்கை வரலாறு சென்றடைய அருமையாக கதைகளைப் போன்று வரலாற்றை படைத்திருக்கிறார்.
புத்தகம் கொண்டு வர உதவிய அனைவருக்கும் வாழ்த்துகள். சிறுவர்களுக்கான இலக்கியம் தமிழில் மிகக் குறைவு அதை புக்ஸ் ஃபார் சில்ட்ரன் கடந்த ஆண்டுகளில் மிகச் சிறப்பாக அந்த இடத்தை பூர்த்தி செய்து வருகிறது.
குழந்தைகளுக்கான இலக்கியம் தமிழில் நிறைய மலரட்டும்.
அமுதன் தேவேந்திரன்
சமகால நடப்புகளில் மார்க்சியம் தொடர் 2 – என்.குணசேகரன்
மார்க்சியம் “மறைந்து போன” தத்துவமா?
என்.குணசேகரன்
“மார்க்சியம் காலாவதியாகி விட்டது; அது தோல்வியடைந்த தத்துவம்” என்றெல்லாம் மார்க்சிய எதிரிகள் பேசுவது வழக்கமானதுதான்.
அநீதிகளின் மொத்த உருவமாக இருக்கும் ஒரு சமூகத்தை ‘சகித்துக்கொண்டு வாழுங்கள்’ என்று மார்க்சியம் போதிக்கவில்லை; சில ஒழுக்க போதனைகளை மேலோட்டமாக சொல்லி விட்டுப் போகிற தத்துவமாகவும் அது இருந்ததில்லை; மாறாக, அநீதியான, சுரண்டல் சமூகத்தை அடியோடு மாற்றும் கடமையை மார்க்சியம் பேசுகிறது.
இதனால், இதர தத்துவங்களை விட மாற்றத்திற்கான தத்துவமான மார்க்சியத்தின் மீது கடும் எதிர்ப்பு, காட்டாற்று வெள்ளமாக இருந்து வருகிறது. ஆளும், மேல்தட்டு வர்க்கங்களின் இந்த எதிர்ப்பாற்றில் எதிர்நீச்சலடித்து மார்க்சியம் முன்னேறி வருகிறது.
தமிழக ஆளுநர் மார்க்சியம் மடிந்து போன தத்துவம் (“dead “) என்று பேசினார். அது மட்டுமல்ல; மார்க்சியம் மறைந்து போன (“gone”) தத்துவம் என்றும் புறக்கணிக்கப்பட்ட தத்துவம் (“abandoned “) என்றும் தாக்குதல்களை தனது உரையில் அடுக்கிக் கொண்டே சென்றார்.
வேடிக்கை என்னவென்றால் ‘இறந்து போனது’ என்று அவர் கருதுகிற தத்துவத்தை அவர் வலிந்து வலிந்து மறுத்துப் பேசியதுதான்.
மார்க்ஸ் இந்தியாவைப் பற்றி நியூயார்க் டெய்லி ட்ரிபியூன் இதழில் எழுதிய கட்டுரைகளைக் குறிப்பிட்டு அவர் ‘விளக்கங்கள்’ அளித்தார். மார்க்சிசம் மடிந்து போன தத்துவம் என்று கருதுகிற ஆளுநர் “மடிந்து போன, மறைந்து போன” தத்துவத்தின் ஆசிரியர் எழுதிய எழுத்துக்களைப் பற்றி எதற்காக இவ்வளவு பேச வேண்டும்? மார்க்சின் எழுத்துக்களை சிரமப்பட்டு வரிக்கு வரி விளக்கி மறுக்க வேண்டிய அவசியம் என்ன?
இதற்கு ஒரே காரணம்தான் இருக்க முடியும்; மார்க்சியம் இன்றும் உயிர்ப்புடன் இருக்கிறது. இன்னமும் மக்கள் சிந்தனையை கவ்விப் பிடிக்கும் தத்துவமாக அது விளங்குகிறது. இந்த உண்மை காரணமாகவே, தமிழக ஆளுநர் போன்ற மார்க்சிய எதிர்ப்பாளர்கள் மார்க்சின் எழுத்துக்களை மேலோட்டமாக வாசித்து, அவதூறு செய்கின்றனர்.
மார்க்சிசம் தழைத்த நாடுகளிலேயே அதனை மக்கள் புறக்கணித்து விட்டதாகவும் அங்கெல்லாம் மார்க்சிஸ்ட்கள் என்று யாருமில்லை என்றும் போகிற போக்கில் ஆளுநர் கூறுகின்றார். சோவியத் யூனியனில் சோசலிசத்திற்கு ஏற்பட்ட பின்னடைவை மையமாக வைத்துத்தான் இந்தக் கருத்தை அவர் கூறுகிறார். ஆக, அவரது உரையின் நோக்கம் மார்க்சிய தத்துவம் புறக்கணிக்க வேண்டிய தத்துவம் என்ற கருத்தை பிரச்சாரம் செய்வதுதான்.
இதேபோன்று, தேர்தல்களில் கம்யூனிஸ்டுகள் தோல்வியடைகிற போதெல்லாம் மார்க்சியத்திற்கு எதிர்காலம் இல்லை என்று பலர் பேசுவதுண்டு. மேற்கு வங்காளம், திரிபுரா மாநிலங்களில் மார்க்சிஸ்ட் கட்சி ஆட்சியை இழந்ததை முன்வைத்து மார்க்சியம் இந்தியாவில் நிராகரிக்கப்பட்டது என்று பலர் பேசி வருகின்றனர்.
தொடரும் வரலாறும், மார்க்சியமும்
மானுட வரலாற்றில் முற்போக்கு மாற்றங்களை கொண்டு வந்த பல புரட்சிகள் தோல்வியில் முடிந்துள்ளன. 1789-இல் நிகழ்ந்த பிரெஞ்சு புரட்சி, இதற்கு ஒரு எடுத்துக்காட்டு. அது, நிலப்பிரபுக்கள், மன்னர்கள் ஆதிக்கம் செலுத்திய அன்றைய பிரான்சில் எழுந்த மாபெரும் புரட்சி.
அந்தப் புரட்சியின் போது “அனைத்து மக்களும் சமம்” என்று சமத்துவ இலட்சியத்தை மக்கள் முழங்கினர். “சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்” என்ற முழக்கங்களை முன்வைத்து மக்கள் புரட்சிகரமான முறையில் ஆளுகிற கூட்டத்தை வீழ்த்தினர்.
அடிமைத்தனமும், மூடத்தனமும், அநீதிகளும் நிலவிய அன்றைய சமூகத்தில் “சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்” என்ற இலட்சிய முழக்கங்கள் மிகப் பெரிய முன்னேற்றமாக திகழ்ந்தன. ஆனால், பிரெஞ்சு புரட்சி முறியடிக்கப்பட்டு தோல்வியில் முடிந்தது.
அதன் காரணமாக, அந்தப் புரட்சி முன்வைத்த ஜனநாயக முழக்கங்களை அனைவரும் புறக்கணிக்க வேண்டும் என்று கூறுவது சரியானதா? தமிழக ஆளுநர் வெளிப்படையாக அவ்வாறு சொல்வாரா?
இன்று உலக நாடுகளில் ஜனநாயக உணர்வும் ஜனநாயக உரிமைகளுக்கான இயக்கங்களும் வளர்ந்துள்ளன. வாக்குரிமை, கருத்துரிமை உள்ளிட்ட உரிமைகளை உறுதிப்படுத்தும் அரசியல் சட்ட அமைப்புகள், ஜனநாயகத்தை அடிப்படையாக கொண்டு இயங்குகின்றன. ஜனநாயக சட்டங்கள் அரசாங்கங்களை வழிநடத்தும் நெறிமுறைகளாக மாறியுள்ளன. ஜனநாயக மீறல்கள் பல நடக்கிற போது மக்களின் எதிர்ப்பியக்கங்களும் நடக்கின்றன.
இதற்கெல்லாம் அடித்தளமிட்டது பிரெஞ்சு புரட்சியும், 18,19-ஆம் நூற்றாண்டுகளில் உலகின் பல பகுதிகளில் நடந்த மக்கள் புரட்சிகளும்தான். பிரெஞ்சு புரட்சி முறியடிக்கப்பட்டு தோல்வியில் முடிந்தாலும், மானுட வரலாற்றை சமத்துவ, ஜனநாயக இலக்குகளை நோக்கி செல்வதற்கான உந்துதலை பிரெஞ்சு புரட்சி அளித்துள்ளது.
ஆனால், வரலாற்றின் இயக்கம் அத்துடன் முடிவடையவில்லை. பிரெஞ்சு புரட்சி எட்டாத இலக்குகளை அடைய வேண்டிய தேவை நீடிக்கிறது. லெனின் எழுதினார். “பிரெஞ்சு புரட்சி ஒடுக்கப்பட்ட போதிலும், வரலாற்றை நுணுகிப் பயிலும் ஒவ்வொருவரும் அதை வெற்றிகரமான புரட்சி என்று ஏற்றுக் கொள்வார்கள். இந்த பிரெஞ்சு புரட்சி முதலாளித்துவ ஜனநாயகம் மற்றும் முதலாளித்துவ சுதந்திரத்திற்கு அடித்தளமிட்டது.”
நிலப்பிரப்புக்கள், மன்னர்களின் ஆட்சியை பிரஞ்சு புரட்சி முடிவுக்கு கொண்டு வந்தது. எனினும் முதலாளித்துவம் அதிகாரத்தில் அரங்கேறும் நிலை ஏற்பட்டது. பெரும் சொத்து படைத்த சிறு கூட்டம் பெரும்பான்மை உழைக்கும் மக்களை சுரண்டுகிற சமூக அமைப்பு உலகில் நிறுவப்பட்டது. எனவே பிரெஞ்சு புரட்சியின் சமத்துவ இலக்குகளை எட்டுகிற மாற்றங்கள் மானுடத் தேவையாக நீடிக்கின்றன. இதற்கு மார்க்சியம் சரியான தத்துவமாக பயன்படுகிறது.
பிரெஞ்சு புரட்சியின் போது, 1791-ல் குடிமக்களின் உரிமைப் பிரகடனம் என்ற பிரசித்தி பெற்ற ஜனநாயக அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதே போன்று ஒரு பிரகடனத்தை வியட்நாம் புரட்சியாளர்கள் ஹோசி மின் தலைமையில் காலனிய ஆட்சிக்கு எதிராக போராடிய போது 1945-ல் வியட்நாம் விடுதலை பிரகடனத்தை வெளியிட்டனர். இது வியட்நாமில் கம்யூனிஸ்ட்கள் சோசலிச வெற்றியை சாதிக்க இட்டுச் சென்றது. மனித உரிமைகள், ஜனநாயக உரிமைகள் அனைத்தையும் 1917-ல் நடந்த ரஷிய சோசலிசப் புரட்சி சாதித்தது. இவ்வாறு வரலாறு தொடர்வதை விளக்கிக் கொண்டே போகலாம்.
சமத்துவ இலட்சியங்களை ஜீரணிக்க முடியாதவர்கள், வரலாற்றைத் திரித்து மாற்றங்களுக்கான பெரு முயற்சிகளுக்கு ஏற்பட்ட தோல்விகளை கொண்டாடுவார்கள். உலக வரலாற்றையும், மார்க்சிய தத்துவ வரலாற்றையும் ஒரு சேர ஆய்வு செய்கிறவர்கள், மார்க்சியம் தொடர்ந்து வெற்றிப் பாதையில் முன்னேறி வருகிறது என்பதையும், இடையில் ஏற்படுவதெல்லாம் தற்காலிக சறுக்கல்கள் என்பதையும் அறிவார்கள்.
நூல் பதிப்புரை: வேட்டை எஸ்.கண்ணனின் ’சொத்தின் வரலாறு ஆதிகாலத்திலிருந்து நாகரிக காலம் வரை’ – ந.முத்துமோகன்
பால் லஃபார்க் – பூர்வீகம் ஹாய்த்தி நாட்டைச் சேர்ந்தவர். கியூபாவில் பிறந்தவர். “பிறப்பிலேயே நான் சர்வதேசவாதி” என்று இவர் தன்னைப் பற்றிக் குறிப்பிடுவார். கறுப்பினம், ஜமாய்க்கா இந்தியர், பிரெஞ்சு கிறித்தவர், யூதர் என்ற நான்கு இனங்களும் இவர் மீது உரிமை கொண்டாட முடியும். 1842 ல் பிறந்த இவர் 1911 வரை வாழ்ந்தார். பிரெஞ்சு கம்யூனிச இயக்கத்தின் தோற்றுவர்களில் ஒருவர். அதற்கு முன்னோடியாக பிரெஞ்சு சோசலிசக் கட்சியை நிறுவியவர். கியூபர்களும் கறுப்பின மக்களும் சர்வதேச கம்யூனிச இயக்கத்திற்கு தத்தமது பங்களிப்பாக இவரைக் குறிப்பிடுவார்கள்.
லண்டனில் கார்ல் மார்க்சின் நேரடிச் சீடர்களில் ஒருவராக இருந்தவர் பால் லஃபார்க். மாலை நேரங்களில் இருவரும் நடைப் பயணம் செல்லும்போது மார்க்ஸ் இவருக்குத் தனது “மூலதனம்” நூலின் கருத்துக்களை எடுத்துரைப்பார். மார்க்சுக்கு “மூலதனம்” நூலின் தயாரிப்பில் அவரது இரண்டாவது மகள் லாரா உதவியாளராக இருந்தார். எனது பெண்மக்கள் மூவரில் லாராவே மிகப்பெரிய அழகி என்று அம்மா ஜென்னி குறிப்பிடுவார். பால் லஃபார்க்கும் லாராவும் காதலித்து 1868ல் திருமணம் புரிந்து கொண்டனர். லாராவும் லஃபார்கும் இணைந்து பிரெஞ்சு மொழிக்கு மார்க்ஸ் – எங்கெல்சின் கம்யூனிஸ்ட் அறிக்கையை மொழிபெயர்த்தனர்.
லஃபார்க் பிரான்சில் மருத்துவக் கல்வியைத் தொடங்கினார். அரசியல் காரணங்களுக்காக நாட்டை விட்டு வெளியேறினார். இலண்டனில் கல்வியை முடித்தார். நேர்க்காட்சிவாத விஞ்ஞானங்களில் அவருக்கு ஆர்வம் உண்டு, இளம் வயதில் பிரெஞ்சு அராஜகவாதியான புரௌதனின் செல்வாக்கினைப் பெற்றவராகவும் விளங்கினார். “கடவுளுக்கு எதிரான யுத்தம்! அதுவே முன்னோக்கிய நகர்வு!” என்ற கோஷத்துடன் அவர் பங்கேற்ற இளைஞர் அணி செயல்பட்டது. விரைவில் மார்க்சியராகப் பரிணமித்தார். பின்னாட்களிலும் கூட லஃபார்கின் மீது அராஜக செல்வாக்கு மிச்சம் இருந்தது என்று குறிப்பிடுவார்கள். இருப்பினும், பிரான்சில் கம்யூனிஸ்ட் கட்சியின் உருவாக்கம், பிரான்சிலும் ஸ்பெயினிலும் அராஜகவாதிகளின் செல்வாக்கை ஒடுக்கியது போன்ற பணிகளைச் செய்ததில் லஃபார்கின் பங்களிப்பு கணிசமானது என்று வரலாற்று ஆசிரியர்கள் மதிப்பிடுகிறார்கள். லெஸ்லி டெஃப்லர் (Leslie Defler) என்னும் வரலாற்று அறிஞர், பால் லஃபார்கும் பிரான்சில் கம்யூனிஸ்டு இயக்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றி இரண்டு நூல்களை எழுதியுள்ளார்.
லஃபார்க் சிறந்த பேச்சாளர், நகரப் பகுதிகள், கிராமங்கள், ஆலைகள், வயல்வெளிகள் என உழைக்கும் மக்களைத் தேடி அலைவார். ஃபிரான்சில் மார்க்சியத்தைப் பரப்பியதில் லஃபார்குக்கு முக்கியப் பங்கு உண்டு என இவர் பாராட்டப்படுவார். பிரெஞ்சு சட்டசபையில் இடம் பெற்ற முதல் சோசலிசப் பிரதிநிதிகளில் இவரும் ஒருவர். 1871ல் பாரிஸ் கம்யூனுக்குப் பிறகு அரசுப் படைகளால் அதிகம் தேடப்பட்டவர் களில் லஃபார்கும் லாராவும் உண்டு . லாராவும் லஃபார்கும் ஸ்பெயினுக்கு தப்பித்துச் சென்றனர்.
ஜியார்ஜ் சோரல், பெனடிட்டோ குரோச்சே போன்ற சமகாலத்து அறிஞர்கள் லஃபார்கை “மாமனார் வழிபாட்டாளர்” என்று விமர்சித்தது உண்டு .
கீழ்க்கண்ட நூல்கள் பால் லஃபார்கின் எழுத்துக்களில் முக்கியமானவை. “உழைப்பிலிருந்து விடுதலை (Right to be Lazy)”, “சொத்தின் வரலாறு (Evolution of Property)”, “மூலதன மதம் (The Religion of Capital)” போன்றவை முக்கியமான நூல்கள். உழைப்பிலிருந்து விடுதலை என்ற நூல் முதலாளிய உழைப்பு அறம் தொழிலாளி வர்க்கத்தை முதலாளியத்திற்கு அடிமைப்படுத்தும் மிகப்பெரும் ஆயுதம் என விவாதிக்கிறது. எனவே உழைப்பு எனும் முதலாளிய ஒழுங்கிலிருந்து தொழிலாளர்கள் முதலில் உளவியல்ரீதியாக விடுபட வேண்டும் என வாதிடுகிறது. புரட்சிக்காரர்கள் முதலில் தம்மிடமுள்ள உடமை வர்க்க குணாதிசயங்களிலிருந்து விடுதலை பெறவேண்டும் என்பது லஃபார்கின் பொதுவான நிலைப்பாடாகும். மார்க்சியக் கலாசாரத்திற்கு நாம் நம்மைத் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறுவார். வர்க்கப் போராட்டத்தின் வடிவங்களில் கருத்தியல் வடிவங்களுக்கு அவர் முன்னுரிமை வழங்குவார். வஃபார்கை அந்தோனியோ கிராம்சியுடன் சிலர் ஒப்பிடுகின்றனர். மூலதனத்தையே (பணத்தையே) கடவுளாக வழிபடும் நவீன முதலாளிய வாழ்வைக் கேலிக்குள்ளாக்கும் ஒரு சித்தரிப்பு அவரது மற்றொரு படைப்பான “மூலதன மதம்” என்ற நூலில் உள்ளது.
பால் வஃபார்கும் அவரது துணைவியார் லாராவும் 1911 ஆம் ஆண்டு இணைந்து ஒரே நேரத்தில் தற்கொலையைத் தழுவிக் கொண்டனர். மிகவும் துக்கமான இந்நிகழ்வை அவரது தோழர்கள் ஆதரிக்கவில்லை . ஆயின் முதிர்ந்த வயதை நெருங்கும் போது, பிறருக்குச் சுமையாகாமல் நமது சாவை நாமே முடிவு செய்து கொள்ளுவதே அறிவு பூர்வமானது (Rational Suicide) என்று அது நியாயப்படுத்தப் படுகிறது.
தனது மரணம் குறித்த சுய அறிக்கையில் லஃபார்க் கீழ்க்கண்டவாறு எழுதியிருந்தார்: “எழுபது வயதுக்குமேல் வாழ நான் விரும்பவில்லை . உடலும் மனமும் தளர்ந்து எனக்கும் பிறருக்கும் பாரமாக வாழுவதைத் தவிர்க்க விரும்புகிறேன். கடந்த 45 ஆண்டுகளில் எந்த லட்சியத்திற்காக வாழ்ந்தேனோ, அந்த லட்சியம் விரைவில் வெற்றியடையும் என நான் உறுதியாக நம்புகிறேன். கம்யூனிசம் வாழ்க! இரண்டாவது அகிலம் வாழ்க!” லஃபார்க், லாரா ஆகியோரின் இறுதி ஊர்வலத்தில் 20,000 பேர் கலந்து கொண்டனர். லஃபார்க், லாராவின் இறுதிச் சடங்கில் லெனின் கலந்து கொண்டார்.
“சொத்தின் வரலாறு: நாடோடிக் காலத்திலிருந்து நாகரீகக் காலம் வரை” என்ற லஃபார்கின் நூல் வரலாற்றுப் பொருள்முதல்வாதம், மார்க்சிய அரசியல் பொருளாதாரம், மானுடவியல் போன்ற துறைகளுக்குக் கோட்பாட்டுப் பங்களிப்பை வழங்கும் நூலாகும். “மானுடவியலின் உண்மையான விவிலியம்” என்று இந்நூலை ஒரு விமர்சகர் பாராட்டுகிறார்.
1840 ஆம் ஆண்டில் பிரெஞ்சு அராஜக சிந்தனையாளரான பியர் ஜோசெஃப் புரௌதன் “சொத்து என்றால் என்ன?” என்ற ஒரு நூலை எழுதி வெளியிட்டார். அந்நூல், அந்நாட்களில் காத்திரமான அரசியல் பொருளாதாரச் சிந்தனையாளர்களுக்கிடையில் வலுவான சலனங்களை ஏற்படுத்தியது. “சொத்து என்பது திருட்டு” என்ற கருத்தை அந்நூலில் புரௌதன் முன்வைத்தார். இளம் மார்க்சுக்கு புரௌதனின் சொத்து குறித்த கருத்து அரசியல் பொருளாதார ஆய்வுகளில் ஒரு திருப்புமுனை யாகத் தென்பட்டது. மார்க்ஸ் புரௌதனுடன் கடிதத் தொடர்பு வைத்துக் கொண்டார். சிறிது காலத்துக்குப் பிறகு பாரீசில் அவர்கள் இருவரும் சந்தித்துக் கொண்டனர். பின்னாட்களில் பிறிதொரு நூல் குறித்து இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இருப்பினும் சொத்து குறித்த புரௌதனின் நூலை மார்க்ஸ் முக்கியமானதாகக் கருதி எப்போதுமே பாராட்டி வந்தார்.
லஃபார்கின் “சொத்தின் வரலாறு” என்ற நூல் ஒருவகையில் புரௌதனின் நூலைத் தொடர்கிறது. இருப்பினும், சொத்து எனும் விடயத்தை லஃபார்கின் நூல் வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தின் மையப் பிரச்சினைகளில் ஒன்றாக மாற்றுகிறது. மார்க்சினுடைய “மூலதனம்” நூலின் பல இடங்களில் பேசப்பட்டுள்ள கருத்துக்கள் இந்நூலில் எடுத்தாளப்பட்டுள்ளன என்று ராபர்ட் பில்ஸ் என்ற இந்நூலின் 1890 ஆம் ஆண்டின் பதிப்பாசிரியர் குறிப்பிடுகிறார். 1884 ல் ஏங்கெல்ஸ் எழுதி வெளியிட்ட “குடும்பம், தனிச் சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்” என்ற நூலின் பிரச்சினைகளை லஃபார்கின் நூல் தொடருகிறது என்றும் சொல்லலாம்.
மார்க்ஸ், எங்கெல்ஸ் ஆகிய இருவராலும் பெரிதும் பாராட்டப் பட்ட ஹென்றி லேவிஸ் மார்கன் என்ற மானுடவியலாளர் இந்நூல் குறித்து கீழ்க்கண்டவாறு எழுதுகிறார். இந்நூல் “சொத்து குறித்த கருத்தின் பரிமாண அறிவிற்குத் தீர்க்கமான உருக்கொடுத்தது. சில அம்சங்களில் பார்த்தால், மனித இனத்தின் மன வரலாற்றில் மிகவும் முக்கியமான பகுதியாக இது விளங்குகிறது”.
சொத்தின் வரலாறும் மனித மனத்தின் வரலாறும் பரஸ்பரத் தொடர்பும் ஒப்புமையும் கொண்டவை என்ற மார்கனின் கருத்து நமது கவனத்தைக் கவருகிறது. குறிப்பாக இந்தியத் தத்துவங்களில் வாசிப்பினைக் கொண்டவர்களுக்கு இக்கருத்து சில தெளிவுகளை ஏற்படுத்துகிறது. இந்தியத் தத்துவங்களில் பல, குறிப்பாக அற இலக்கியங்கள், மனித மனத்தில் விளையும் பற்று, பந்தம், பாசம், தளை, ஆசை, ஆணவம், அகங்காரம் போன்ற பல விடயங்களைப் பற்றி விரிவாகப் பேசுகின்றன. மனித மனத்தின் இவ்வகைப்பட்ட “அழுக்குகளை” அப்புறப்படுத்தினால் மனிதன் உயிர்த் தூய்மை அடைந்து “வீடு” பேற்றை எட்டமுடியும் என்று அவை கூறுகின்றன. மனித மனத்தின் இவ்வகை “அழுக்குகள்” எல்லாம் உண்மையில் தனி உடமைச் சொத்தின் உளவியல் விளைவுகள் என்பதை இங்கு நாம் புரிந்து கொள்ள முடிகிறது. இந்த அர்த்தத்தில் தனி உடமைச் சொத்து என்பது நமது தத்துவங்களில் அதிகம் பேசப்படும் நிலையாமைக் கொள்கைக்கு அடிப்படையாக விளங்குகிறது என்பதையும் நாம் உணர்கிறோம். அற இலக்கியங்களில் பேசப்படும் நிலையாமைக் கொட்பாடு தனி உடமைச் சொத்து குறித்த உளவியல் விமர்சனத்தையும் அழுத்தின் வழி அதனை தாண்டிச் செல்வதற்கான எத்தனிப்பையும் கொண்டுள்ளது என்பதையும் காண்கிறோம். இவ்வகைப் பிரச்சினைகள் தொடர்ந்த ஆய்வுகளைக் கோருகின்றன.
நூலின் அமைப்பை இனி உற்று நோக்குவோம்: இருவகைப் பொதுச் சொத்துக்களையும் மூவகை தனிச் சொத்துக்களையும் நூலாசிரியர் வகைப்படுத்துகிறார்.
சொத்து உருவானபோது அதனுடன் குற்றங்கள், தண்டனைகள், சிறைச்சாலைகள், சட்டம் இன்ன பிற உண்டாகின்றன என்பதையும் காணுகிறோம்.
நிலவுடமைக் காலத்தில் நிலப் பிரபுகள் (நிலக்கோமான்கள்), அரசர்கள், பேரரசர்கள் உருவாகி விட்டார்கள். அவர்கள் காவிய நாயகர் களாகவும் கடவுளராகவும் சித்தரிக்கப்பட்டனர். பண்ணை அடிமைகள் விசுவாசம், கீழ்ப்படிதல், பணிவு, நேர்மை, கடமைகள், நன்றியுணர்வு ஆகியவற்றுக்குப் பழக்கப்படுத்தப் பட்டார்கள். சட்ட வல்லுநர்கள் அரசு நிலங்களை, பொது நிலங்களைக் கோமான்களின் நிலங்களாக ஆக்கிக் கொடுத்தார்கள். கடவுளின் பெயரால் போர்கள், கொள்ளைகள் நிகழ்த்தப்பட்டன. எல்லைகளில் வாழ்ந்த இனக்குழுக்களைக் கடவுளற்றவர்கள் எனக்கூறிப் படையெடுத்து அழித்தனர். அரச அதிகாரம், திருச்சபை அதிகாரம் என்ற இரட்டை ஆட்சி நடைபெற்றது. மடாலயங்களுக்கான கட்டாய நன்கொடைகள் பெருகின.
14, 15 ஆம் நூற்றாண்டுகளில் விவசாயிகள் நிலத்தை விட்டு விரட்டப்பட்டார்கள். இது குறித்து மார்க்சும் எழுதியிருக்கிறார். விவசாயிகளை ஒத்த பல தொல்குடிகள் கடற்கரைகளில் மீனவர்களாக மாற்றப்பட்டனர். விவசாயிகள் பல வேளைகளில் பிச்சைக்காரர்களாக ஆக்கப்பட்டனர். அதே வேளைகளில் பிச்சை எடுப்பது சட்டத்தால் தடை செய்யப்பட்டது. காடுகளின் பரப்புகள் படிப்படியாகக் குறைந்தன. விவசாயிகளுக்குக் கடன்கள் வழங்கப்பட்டு அவர்களது நிலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் ஊடாக நவீன முதலாளியச் சொத்து உருவாயிற்று.
முதலாளியச் சொத்து உருவாக்கத்திற்கு வணிகமும் எந்திரக் கருவிகளும் மிகப்பெரிய உந்து சக்திகளாக அமைந்தன. நாடெங்கும் உருவான சந்தைகள் முதலாளியச் சொத்துடமையை முன்னெப்போதும் இல்லாத வேகத்துடன் புரட்டிப் போட்டன. தொழில் உற்பத்திக்கான கச்சாப் பொருட்களும் உற்பத்திக் கருவிகளான எந்திரங்களும் சரக்கு களாக மாற்றம் பெற்றபோது, அவற்றுக்கு இணையாகத் தொழிலாளர் களின் உழைப்புச் சக்தியும் சரக்காக மாறியது. முதலாளிய உற்பத்தி வட்டம் முழுமையடைந்தது. இப்போது அனைத்துமே சரக்குமயமாகி விட்டன. முதலாளியத் தொழில் உற்பத்திக்கு எந்த அளவுக்குத் தேவையோ அந்த அளவே கல்வியும் உடல் ஆரோக்கியமும் இயற்கையும் பாதுகாக்கப்பட்டன. நிதி நிறுவனங்கள், வங்கிகள் மக்களின் சேமிப்புகளை தொழில் அதிபர்களின் சேமிப்புகளாக மாற்றிக் கொடுத்தன. அரசு நிறுவனம் உலகமெங்கும் தமது முதலாளிகளுக்கான சந்தைகளைத் தேடிக் கண்டு பிடித்துக் கொடுக்கும் முகவர்களாகத் தொழில்பட்டன.
சொத்து என்பது ஒரு பொருளோ, உற்பத்திக் கருவிகளோ, வாழ்க்கைக்கான வசதியோ அல்ல. அது சமூகப் பொருளாதார உறவுகளின் சுருக்கமான ஆனால் முனைப்பான வடிவம் என்பது இந்நூலில் விரிவாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. வரலாறு நெடுக சொத்தின் பரிணாமம் தேடிக் கண்டடையப்பட்டுள்ளது. ஒவ்வொரு வரும் அவரவர் நாட்டின் சொத்தின் சொந்த வடிவங்களை நினைவுக்குக் கொண்டு வரும்போது இந்நூலில் சொல்லப்பட்டுள்ள விடயங்களை எளிதில் புரிந்து கொள்ள முடியும்.
திரு வேட்டை கண்ணன் அவர்கள் இந்நூலை மிகவும் முயன்று தமிழுக்கு மொழிபெயர்த்து வழங்கியுள்ளார். இந்நூல் இந்தியச் சூழல்களில் சொத்தின் வரலாறு குறித்த விவாதங்களுக்கும் புரிதல் களுக்கும் நம்மை இட்டுச் செல்லும்.
“மார்க்சிய செவ்வியல் நூல் வரிசை” என்ற புதிய வெளியீட்டுத் திட்டத்தின் கீழ் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் இந்நூலை வெளிக் கொணருகிறது. இயக்குனர் குழுவின் வழிகாட்டுதலின்படி நியூ செஞ்சுரியின் மேலாண் இயக்குநர் நண்பர் சண்முகம் சரவணன் மிகுந்த அக்கறையுடன் இந்நூல் வரிசையைத் திட்டமிட்டுள்ளார். பிராங்பர்ட் நகரில் ஆண்டு தோறும் நடைபெறும் உலகப் புத்தகப் பெருவிழாவில் நேரடியாகக் கலந்து கொண்டு, புத்தகங்கள் தேர்வு செய்யப்பட்டு, உரிமைகள் பெறப் பட்டு, மொழியாக்கம் செய்யப்படுகின்றன. நூலாக்கத்தில் தோழர் தி. ரத்தினசபாபதி மற்றும் திருமதி துர்கா தேவி, நண்பர் ஜெயராஜ் ஆகியோர் உடன் நின்று பணியாற்றியுள்ளனர். இந்நூல் வரிசையில் பல நூல்கள் விரிவான வாசிப்பையும் விவாதங்களையும் வேண்டுவன. அவை தமிழ்ச் சூழல்களில் மார்க்சியத்தின் பரப்பை விரிவாக்கும் என நம்புகிறோம். மதுரை
அன்புடன்
ந. முத்துமோகன்
நூல் : சொத்தின் வரலாறு ஆதிகாலத்திலிருந்து நாகரிக காலம் வரை
ஆசிரியர் : தமிழில்: வேட்டை எஸ். கண்ணன்
விலை : ரூ.₹250
வெளியீடு :NCBH
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
தோழர் பகத்சிங் – சிவவர்மா | தமிழில்: ச. வீரமணி
(பகத்சிங்குடன் இணைந்து போராட்டங்களில் ஈடுபட்ட தோழர் சிவவர்மா, ‘நாட்டில் புரட்சி இயக்கத்தின் தத்துவார்த்த வளர்ச்சி – சபேகார் முதல் பகத்சிங் வரை’ என்னும் தன்னுடைய நூலில், மாபெரும் நவம்பர் புரட்சி எந்த அளவிற்கு தோழர் பகத்சிங்கையும், தங்கள் இயக்கத்தையும் உருக்குபோன்று மாற்றி அமைத்தது என்பதையும் விளக்குகிறார்.)
“மக்களிடம் செல்லுங்கள், தொழிலாளர்கள் – விவசாயிகள் – படித்த மத்திய தர இளைஞர்கள் இடையே செயல்படுங்கள், அவர்களை அரசியல்ரீதியாகப் பயிற்றுவியுங்கள், அவர்களை வர்க்க உணர்வுள்ளவர்களாக மாற்றி, வர்க்க அடிப்படையிலான சங்கங்களின் கீழ் அவர்களை அணிதிரட்டுங்கள்” என்று அறிவுறுத்தினார்.
நவம்பர் சோசலிஸ்ட் புரட்சியானது மனிதகுல வரலாற்றில் மாபெரும் திருப்புமுனையாகும். அது ரஷ்யாவிலிருந்த ஏகாதிபத்திய ஆட்சியை முற்றிலுமாக அழித்து ஒழித்ததோடு மட்டுமல்லாது, உலகம் முழுவதும் இருந்த அனைத்து ஏகாதிபத்திய சக்திகளையும் திகிலூட்டி அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மனிதனை மனிதன், ஒரு நாட்டை மற்றொரு நாடு சுரண்டும் முறைக்கு நவம்பர் புரட்சி முற்றுப்புள்ளி வைத்தது.
சோவியத் மக்கள் தங்கள் விதியை தாங்களே நிர்ணயித்துக்கொள்ளும் எஜமானர்களாக மாறினார்கள். அது உலகில் அடிமைப்படுத்தப்பட்டுக் கிடந்த பல்வேறு நாட்டின் விடுதலைப் போராளிகளுக்கும் உத்வேகத்தைக் கொடுத்தது, தங்களுடைய லட்சியப் போராட்டமும் வெல்லும் என்கிற நம்பிக்கையை விளைவித்தது. உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் நடைபெற்று வந்த விடுதலைப் போராட்டங்களுக்கு புதிய பரிமாணத்தை அளித்தது. இந்தியாவில் விடுதலைக்கான போராட்டமும், உலகத்தில் நடைபெற்று வந்த ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களின் ஒரு பகுதி என்ற அடிப்படையில், பாதிக்கப்படாமலிருக்க முடியவில்லை.
இந்துஸ்தான் சோசலிஸ்ட் குடியரசு சங்கம் உதயம்
பொதுவாக 1920களிலும், குறிப்பாக 1928 – 1930களிலும் இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் மிகவும் குறிப்பிடத்தக்கவைகளாகும். இந்தக் காலகட்டத்தில்தான், இடதுசாரி சக்திகள் அமைப்புரீதியாக வலுவான சக்தியாக உருவாகத் தொடங்கியிருந்தன. பெரிய அளவில் வீரஞ்செறிந்த தொழிலாளி வர்க்கத்தின் வேலைநிறுத்தங்கள் நாடு முழுவதும் நடைபெற்றன.
அமைப்புரீதியான தொழிற்சங்க நடவடிக்கைகள் மூலமாக தொழிலாளர்கள் சிறந்த வேலை நிலைமைகளுக்காகவும், கூடுதல் ஊதியத்திற்காகவும் வலுவான போராட்டங்களில் ஈடுபடுவது அதிகரிக்கத் தொடங்கியது. தொழிலாளர்கள், இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில் கம்யூனிசத்தின் மீதான ஈர்ப்பு வெகு வேகமாக வளர்ந்து கொண்டிருந்தது. முதன்முறையாக, அமைப்புரீதியாக விரிவான முறையில் இடதுசாரி அரசியல் இயக்கம் நாட்டில் உருவாகிக் கொண்டிருந்தது.
நாங்கள் சோசலிச சிந்தனையை நோக்கி அடிமேல் அடியெடுத்து வைத்து முன்னேறிக் கொண்டிருந்தோம். நாங்கள் கைது செய்யப்பட்ட பின்னர்தான், எங்களுக்கு நிறைய நேரமும், புத்தகங்களும் கிடைத்தன. அவற்றைப் படித்தோம், விவாதித்தோம், கடந்த காலங்களில் நாங்கள் செய்தவற்றைத் தீர ஆய்வுசெய்து, சரியான முடிவுகளுக்கு வந்தோம். முதலாவதாக, நாங்கள் கம்யூனிசத்தை ஏற்றுக்கொண்டிருந்தாலும், நாங்கள் மார்க்சியத்தை முறையாக ஆழ்ந்து கற்றதன் அடிப்படையில் அமைந்திடவில்லை.
நம் நாட்டில் அன்றைக்கு மேலோங்கியிருந்த சமூகச் சூழ்நிலைமையில், மார்க்சியத்தைக் கசடறக் கற்பது என்பது அப்படியொன்றும் அவ்வளவு எளிதல்ல.இந்துஸ்தான் சோசலிஸ்ட் குடியரசு சங்கம் முன்னெடுத்துச் சென்ற நடவடிக்கைகளில் மார்க்சியத்தை அதன் தத்துவமாகவும், சோசலித்தை அதன் இறுதி லட்சியமாகவும் ஏற்றுக்கொண்டதை மிகப்பெரிய முதல் நடவடிக்கை என்று கூற முடியும்.
விஞ்ஞானப்பூர்வமான சோசலிசத்தை நோக்கி …
பகத்சிங் இளம் அரசியல் ஊழியர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தார். மார்க்சையும் லெனினையும் கற்க வேண்டும் என்றும், அவர்கள் போதனைகளை செயலுக்கான வழிகாட்டியாகக் கொள்ள வேண்டும் என்றும், மக்களிடம் செல்லுங்கள், தொழிலாளர்கள் – விவசாயிகள் – படித்த மத்திய தர இளைஞர்கள் இடையே செயல்படுங்கள், அவர்களை அரசியல்ரீதியாகப் பயிற்றுவியுங்கள், அவர்களை வர்க்க உணர்வுள்ளவர்களாக மாற்றி, வர்க்க அடிப்படையிலான சங்கங்களின் கீழ் அவர்களை அணிதிரட்டுங்கள் என்று அறிவுறுத்தினார். மக்களின் கட்சி ஒன்று இல்லாமல் அது அனைத்தும் சாத்தியமல்ல என்றும் அவர் மேலும் கூறினார். கட்சி குறித்த அவரது சிந்தனையை மேலும் விளக்கும் வகையில் அவர் கீழ்க்கண்டவாறு எழுதினார்.
‘‘தோழர் லெனின் மிகவும் பிரியத்துடன் பயன்படுத்திய வார்த்தைகளில் சொல்வதானால் ‘புரட்சியைத் தொழிலாகக் கொண்டவர்களே’ நமக்குத் தேவை. புரட்சியைத் தவிர வேறெந்த ஆசாபாசங்களும் வேலையும் இல்லாத முழுநேர ஊழியர்களே நமக்குத் தேவை. எந்த அளவிற்கு அத்தகைய ஊழியர்கள் ஒரு புரட்சிக் கட்சிக்குக் கிடைக்கிறார்களோ அந்த அளவிற்கு அதன் வெற்றிக்கான வாய்ப்புகள் அதிகமாகும்.’’ அவர் மேலும், ‘திட்டமிட்டமுறையில் செயலாற்றுவதற்கு உங்களுக்குத் தேவை, மேலே விவரித்ததுபோன்று மிகவும் தெளிவான சிந்தனைகளுடன் கூரிய அறிவும், முன்முயற்சி எடுப்பதற்கான திறமையும், விரைந்து செயல்படும் ஆற்றலும் கொண்டவர்கள் நிறைந்த ஒரு கட்சியாகும். கட்சி உருக்கு போன்ற கட்டுப்பாட்டைப் பெற்றிருக்க வேண்டும்.
அதற்காக அது ஒன்றும் தலைமறைவுக் கட்சியாகச் செயல்பட வேண்டும் என்று அவசியம் இல்லை, அதற்கு மாறான நிலையில் கூட இருக்கலாம். … கட்சி வெகுஜனப் பிரச்சாரப் பணியுடன் தொடங்கப்பட வேண்டும். … விவசாயிகள் – தொழிலாளர்களை ஸ்தாபனப்படுத்துவதும் அவர்கள் நம்பிக்கையைப் பெறுவதும் அவசியமாகும். கட்சியின் பெயரை கம்யூனிஸ்ட் கட்சி என்று வைத்திடலாம். மிகவும் கட்டுப்பாட்டுடன் கூடிய அரசியல் ஊழியர்களைக் கொண்ட இக்கட்சியானது, அதன்கீழ் உள்ள அனைத்து இயக்கங்களையும் வழிநடத்த வேண்டும், இவ்வாறு பகத்சிங், மார்க்சிசத்திற்காகவும், கம்யூனிசத்திற்காகவும் ஒரு கம்யூனிஸ்ட் கட்சிக்காகவும் வெளிப்படையாகவே வந்து விட்டார்.
பகத் சிங் பற்றிய புத்தகங்கள்:
‘பகத்சிங் சிறைக்குறிப்புகள்’ – இப்புத்தகம் வாங்க இங்கே க்ளிக் செய்க: thamizhbooks.com
‘பகத்சிங்’ – இப்புத்தகம் வாங்க இங்கே க்ளிக் செய்க: thamizhbooks.com
‘விடுதலை பாதையில் பகத்சிங்: கட்டுரைகள், கடிதங்கள், ஆவணங்கள்’ – இப்புத்தகம் வாங்க இங்கே க்ளிக் செய்க: thamizhbooks.com
‘பகத்சிங்-விடுதலை வானில் ஜொலிக்கும் தாரகை’ – இப்புத்தகம் வாங்க இங்கே க்ளிக் செய்க: thamizhbooks.com
‘நான் ஏன் நாத்திகன்?’ – இப்புத்தகம் வாங்க இங்கே க்ளிக் செய்க: thamizhbooks.com